ஏழைகளுக்கு எட்டாத இன்றைய இயேசு..

திருமறைக் கூறும் இயேசுவுக்கும் இன்றைய திருச்சபைகள் காட்டும் இயேசுவுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. இன்றைய திருச்சபைகள் வெளிப்படுத்தும் இயேசுவுக்கும் திருமறை வெளிப்படுத்தும் இயேசுவுக்கும் தொடர்பில்லாமல் இருப்பதை மறுத்துவிட முடியாது. இதைப்பற்றி மிகச் சுருக்கமாக ..

1. திருமறையின் இயேசு.. 
அவரின் பிறப்பு எளிமையானது, அது ஏழ்மையுடன் தொடர்புடையது. வீடு இல்லாதோருக்கும் (மேய்ப்பர்கள்) திகிலில் வாழ்ந்தோருக்கும் நம்பிக்கை அளித்த பிறப்பு அது. அவரின் பிறப்பு ஆடம்பரத்திற்கு எதிரானது வண்ண தோரணங்கள் இல்லாதது. சொல்லப்போனால் அவரின் பிறப்பு முதல் இறப்பு மட்டும் இரவல் ஆனது.

இயேசுவின் பிறப்பும் வாழ்வும் அவரின் திருப்பணியும் : அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும், சமய அடிப்படைவாதத்திற்கும் இனப்பற்றுக்கும் (இந்திய சூழலில் சாதி) எதிரானது என்பதையும், நீதியை நிலை நிறுத்துவதிலும் சமத்துவத்தை உறுதி செய்வதிலும் அடங்கியிருக்கிறது என்பதையும் திருமறையை அறிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.

ஏழையின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நிலமிழந்தோர் பேறு பெற்றோர் ( ஆசீர்வதிக்கப்பட்டோர்) என்கிறது இயேசுவின் மலைப் பொழிவு. அதாவது இறையரசு ஏழை எளிய மக்களிடத்தில் குடிகொண்டுள்ளது என்கிறார். அவர்களின் வாழ்வில் இருந்து தான் இறையரசின் மதிப்பீடுகள் தொடங்குகிறது என்பதுதான் அதன் பொருள்..

இயேசு எப்போதும் இழத்தலையும் பகிர்தலையும் மட்டுமே வலியுறுத்தினார். அதிகாரக் குவிப்பையும் சொத்துக்குவிப்பையும், செழுமைக் கோட்பாடுகளையும் கடுமையாகச் சாடியதுடன், அப்படிப்பட்ட போதனைகள் கடவுளிடம் இருந்து வந்தவைகள் அல்ல, அலகையிடம் (பிசாசிடம்) இருந்து வந்தவை என்கிறார். அத்துடன் செல்வந்தர் கடவுளின் அரசில் இடம் பெறுவது இல்லை என்கிறார். ஏனெனில் செல்வம் என்பது சுரண்டலோடு தொடர்புடையது, தன் நலன் சார்ந்தது.

இதன் அடிப்படையில் திருமறைக் காட்டும் இயேசு என்பவர், ஏழ்மையை எளிமையை மையப்படுத்தி வாழ்ந்த ஒருவராகவும், விளிம்பு நிலை மக்களோடும், துன்புறும் மக்களோடும் தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்த ஒருவராகவும் தான் புரிந்துகொள்ள வேண்டும்..

2.இன்றைய திருச்சபையின் இயேசு...
இன்றைய திருச்சபைகள் காட்டும் இயேசு மிகவும் வசதியானவராகவும் ஏழைகளால் தொட்டு உணர முடியாதவராகவும் தான் இருக்கிறார். அடிப்படையில் திருச்சபையானது தன் கோட்பாடுகளையும் கருத்தியல்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், ஏனெனில் செழுமையை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பில் திருச்சபைகள் உறுவாகி வருவது நல்லதல்ல.. குறிப்பாக கிறித்து பிறப்பில் இருந்த எளிமை இன்று திருச்சபையின் வழிபாடுகளில் கனவே இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது..

திருச்சபையின் இன்றைய வழிபாடுகள் ஆடம்பரத்தின் குறியீடாகவும் செழுமையின் அடையாளமாகவும் புரிந்துகொள்ள பட்டுள்ளன. எளிமையை பிரதிபலிக்காத வழிபாடுகள், வாழ்க்கை முறைகள் போன்றவை ஏழைகளை அங்கீகரிக்க தவறியதோடு, அவர்களை புறம் தள்ளியும் விட்டது.. இன்றைய திருச்சபைகள் இல்லாதவர்களையும் இயலாதவர்களையும் கூனிக்குறிகிப் போக செய்துள்ளது. இதனை மிகவும் ஆபத்தான செயல்பாடாகத்தான் பார்க்கவேண்டும்..

இன்றைய திருச்சபைகள் (எல்லாப்பிரிவும்) காட்டும் இயேசு செழுமையை தருபவராகவும், துன்புறுதல் இல்லாத வாழ்வை அளிப்பவராகவும் செல்வந்தரோடு அடையாளப் படுபவராகவும் மட்டுமே இருக்கிறார். அது தான் ஆண்டவர் அருளும் ஆசீர்வாதம் என்ற அருளுரைகளும் இக்கருத்தை வலுசேர்க்கின்றன.. இதில் என்ன கொடுமை என்றால் மேற்சொன்ன எந்த ஒன்றையும் ஆண்டவர் இயேசு தன் வாழ்வில் அனுபவிக்கவே இல்லை.. அப்படியானால் அவரின் வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம். அதே அபத்தம் இன்றைய திருச்சபைகளிலும் நடந்து வருவது வெட்கக்கேடு..

அலங்காரம் என்பது அழகல்ல, ஆபத்தானது. ஏனெனில் அதில் தீமை இருக்கிறது, அது பகிர்தலுக்கு எதிரானது, குவித்தலோடு தொடர்புடையது என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆடம்பரமான வாழ்க்கை முறை, விலையுயர்ந்த நுகர்வுத் தன்மை போன்றவைகள் ஏழைகளை திருச்சபைக்கு வெளியே தள்ளிவிடுகின்றன. அதாவது இன்று ஒர் ஏழை ( இல்லாதவர்) நமது திருச்சபையில் வந்து வழிபாட்டில் கலந்துகொள்ளும் போது அவர் பாதுக்காப்பு உணர்வைப் பெறாமல் தனிமையாக இருப்பதாக உணர்ந்தால் அது நமக்கான மிகப்பெரிய தோல்வியாகத்தான் இருக்கும்..

ஏழைகளை தள்ளிவிட்டு, அவர்களை மையப்படுத்தாத பண்டிகை கொண்டாட்டங்கள் , பலிகள் கடவுளுக்கு அருவருபானவைகள் என்று திருமறை கூறுகிறது.. எனவே வீணான ஆடப்பரங்களில் திளைத்து விடாமல், நாம் திருச்சபையாக உருவாக்கிய இயேசுவை அல்ல, திருமறைக் கூறும் இயேசுவை கொண்டாடுவது தான் உண்மையான கிறித்துமஸ். அது எளிமையானதும் இழத்தலோடும் தொடர்புடையது..

கிறித்துப் பிறப்பின் உண்மையான நோக்கம் நம்மில் நிறைவேறட்டும்..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.