*"உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்"* (நீதி. 3:6).
விடாமுயற்சி செய்வதற்கு, நமக்கு தன்னம்பிக்கை அவசியம். ஆனால் வெறும் தன்னம்பிக்கையிலே மட்டும், சார்ந்துவிடக் கூடாது. தேவ கிருபையும், தேவ ஒத்தாசையும் அதிகமாக நமக்கு அவசியம். உங்களுடைய முயற்சிகளில், கர்த்தரை இணைத்துக்கொள்ளுங்கள்.
யாக்கோபு தனியனாய், தன் எதிர்காலம் என்ன? என்று அறியாது, தன் மாமனாராகிய லாபான் வீட்டை நோக்கிப் புறப்படும்போது, ஒரு பொருத்தனை பண்ணினார். *"நான் தூணாக நிறுத்தின இந்தக் கல், தேவனுக்கு வீடாகும். தேவரீர், எனக்குத் தரும் எல்லாவற்றிலும், உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்"* (ஆதி. 28:22). மறைமுகமாக, கர்த்தரையும் தன்னுடைய முயற்சியிலே, ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டார். ஆகவே இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நன்றியோடு, கர்த்தரைப் பார்த்து, *"அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல. நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன். இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்"* (ஆதி. 32:10) என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்.
வெறும் முயற்சி மட்டும் போதாது. தேவனுடைய தயவும், கிருபையும், காருண்யமும் மிகவும் அவசியமாகும். இவை இருக்குமானால், நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். *நீங்கள் உயிரோடிருக்கிற நாளெல்லாம், ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை* (யோசு. 1:5). *ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் உங்களைத் தொடரும்* (சங். 23:6).
ஒரு இளம் டாக்டர் இந்தியாவிலே படித்து, மலேசியாவில் தன் மருத்துவப் பணியை தொடங்கினார். ஆனால் அதே ஊரிலே, நல்ல அனுபவமிக்க, பெரிய டாக்டர்கள் இருந்தார்கள். கைராசி டாக்டர்கள் என்று, புகழ்படைத்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் பெரிய, பெரிய ஆஸ்பத்திரிகளை கட்டி, ஆஹா! ஓஹோ! என்று பணியாற்றினார்கள். ஆனால் அனுபவமில்லாத இந்த எளிய டாக்டரோ, கர்த்தர்மேல் விசுவாசமும், அன்பும் வைத்திருந்தவர். அவர் தன் வேலையிலே, கர்த்தரை ஒரு பங்குதாரராக ஏற்படுத்தினார். "தேவனே, இந்த ஆஸ்பத்திரியை உம்முடைய மகிமையின் பிரசன்னத்தால் நிரப்பும். தினந்தோறும் எனக்கு எவ்வளவு வருமானம் வருகிறதோ, அதிலே தசமபாகம் எடுத்து வைத்து, உம்முடைய ஊழியங்களுக்கு தாராளமாய் கொடுப்பேன்" என்று பொருத்தனை செய்தார். ஆகவே, கர்த்தர் அவரோடு இணைந்து கொண்டார். கைராசி டாக்டர்களில் சிலர் மரித்தார்கள். சிலர் தீராத நோய் கொண்டு, சிகிச்சைக்காக லண்டன் போய்விட்டார்கள். இந்த கிறிஸ்தவ சகோதரனோ, அசைக்கப்படாமல், உறுதியாக நின்றார். கோடிக் கோடியாக சம்பாதித்தார். தன்னுடைய பொருத்தனையின்படியே, இன்றைக்கும், கர்த்தருடைய ஊழியத்திற்கு வாரி வாரி, வழங்கிக்கொண்டிருக்கிறார்.
தேவபிள்ளைகளே, எந்த முயற்சியெடுத்தாலும், கர்த்தரை உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள். பொருத்தனை செய்து முன்னேறுங்கள். அப்பொழுது கர்த்தருடைய கண்கள் உங்கள்மேலும், அவருடைய ஐசுவரியம் உங்கள் முயற்சி யின்மேலும் இருக்கும். *"நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்"* (உபா. 28:3,6).
நினைவிற்கு:- *"கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார். நீ கீழாகாமல் மேலாவாய்"* (உபா. 28:14).
சகோ. J. சாம் ஜெபத்துரை.
