கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை

'மதம்' மனிதனால் படைக்கப்பட்ட வாழ்க்கை நெறி, வேதங்கள் எல்லாம்
கட்டுகதைகள், காலப்போக்கில் எழுந்த கற்பனைகள் என்ற எண்ணம் சிறிது நிலவி
வருகிறது. மதங்கள் எல்லாம் இப்படி தான் தோன்றின, நம்பிக்கைகள் உண்டான
இடம் அது, மனிதன் வழிபட்ட முதற்கடவுள் சூரியன், இயற்கை வழிபாட்டு முறை
இவைகள் எல்லாம் சிறிது சிறிதாக மதங்கள் என்ற பெயரில் பிரிந்து
உருவெடுத்தென என்று தன் மூளைக்கு எட்டியவரை மனிதன் கோட்பாடுகளை வகுக்க
முயற்சிக்கிறான். ஆனால் இந்த கோட்பாடுகள் எல்லாம் கிறிஸ்தவத்திற்கும்
பொருந்துமா? கிறிஸ்தவமும் பிற வழிகளை போன்று காலபோக்கில் எழுந்த மூட
நம்பிக்கையா? கிறிஸ்தவம் படைப்பு முதலே மனிதர்களுக்கும் இறைவனுக்கும்
உள்ள உறவா அல்லது பிற வழிகளை போன்ற ஒரு சராசரி மதமா? இந்த வினாக்களை
ஆராய்ந்து கண்ட முடிவுகள் இந்த பதிவில் பதிக்கப்பட்டுள்ளன.

1) கிறிஸ்தவம் பிற வழிகளை போல எழுந்த நம்பிக்கையா?

மனிதனின் கோட்பாடு பண்டைய மதங்கள் பலவற்றிற்கு பொருந்தினாலும் கிறிஸ்தவம்
இந்த வட்டதிற்குள் அடைபடுவதில்லை. சூரிய நமஸ்காரம், இயற்கை வழிபாடு,
ஜோசியம், ராசிபலன்கள், குறி சொல்லுதல், ஜாதகங்கள், சிலை வழிபாடு,
முன்னோர் வழிபாடு ஆகியவை உயர்ந்து விளங்கிய கால கட்டதில் சமூகத்தில் தோரா
- பைபிள் (கி.மு 3500?) தனித்து நிற்கிறது.
அ) சூரிய நமஸ்காரத்திற்கு மரணதண்டனை!

"நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வான
சேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அது உன்
செவி கேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்
கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது
நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது
ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டு போய், அப்படிப்பட்டவர்கள்
சாகும்படி கல்லெறியக் கடவாய்"
- உபாகமம் 17:3-5

சூரிய நமஸ்காரம் அருவருக்கப்பட்ட செயலாக பைபிளில் காணப்படுகிறது. சூரிய
நமஸ்காரம் செய்கின்ற இஸ்ரவேலர்கள் மீது சாகும் வரை கல்லெறிய வேண்டும்
என்பது தோராவின் போதனையாகும். அக்கால நம்பிக்கைகளுள் யூதமே சூரிய
நமஸ்காரத்திற்கு தன்னை விலக்கி கொள்கிறது. இஸ்ரவேலை தவிர்த்து எகிப்து,
மசிடொனியா, இந்தியா, அரேபியா, சீனா, பெர்சியா, இத்தாலி என இறை
நம்பிக்கைகள் விளங்கிய பிற அனைத்து தேசங்களும் சூரிய நமஸ்காரத்தை
ஏற்றுள்ளதை காணலாம், ஆனால் இஸ்ரேலில் மட்டுமே சூரிய நமஸ்காரம் கொலை
குற்றமாக கருதப்படுகிறது.

ஆ) ஜோசியம், ராசிபலன், மாயவித்தை, குறி சொல்லுதல் - மரணதண்டனை!

"தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவனும், குறி
சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும்,
சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாய வித்தைக்காரனும்,
செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம்.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு
அருவருப்பானவன்"
- உபாகமம் 18:10-12

"கர்த்தராகிய நான் பரிசுத்தராய்
இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய்
இருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும் படிக்கு, உங்களை மற்ற
ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன். அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி
சொல்லுகிறவர்களுமாய் இருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலை
செய்யப்பட வேண்டும்; அவர்கள் மேல்
கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக் கடவது என்று
சொல் என்றார்" - லேவியராகமம் 20:26,27

ஜோசியம், ராசி பலன், குறி சொல்லுதல் போன்ற செயல்கள் தோராவில்
அருவருக்கப்படுகின்றன. அந்நாட்களில் இத்தாலி முதல் இந்தியா வரை அனைத்து
மக்களும் அஞ்சனம் (ஜோசியம்) பார்க்கிறவர்களாக காணப்பட்டனர். ஆனால்
இத்தகைய மூட நம்பிக்கைகள் இல்லாத சமூகமாக இஸ்ரவேலர்களே காணப்படுகின்றனர்.
இந்த செயல்களில் ஈடுபடும் இஸ்ரவேலர்களை கொலை செய்யுமாறு தோரா
போதிக்கிறது.

இ) சிலை வழிபாடு - தடை!

"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும்
உண்டாய் இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை
நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராய் இருக்கிற
நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப்
பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை
மட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன்"
-யாத்திராகமம் 20:4,5

சிலை வழிபாட்டை யூதம் அறவே வெறுக்கிறது. யேகோவா இறைவனே ஆனாலும் சிலைகளை
உண்டாக்கி வழிபட தோரா தடை விதிக்கிறது. இஸ்ரேலை அன்றி பிற தேசங்கள்
எல்லாம் சிலைகளையே அர்சித்து வந்தன. சிலை வழிபாட்டிலும் தன்னை விலக்கி
கொண்ட பண்டைய மக்களாக இஸ்ரவேலர்களே உள்ளனர். இதன் காரணமாகவே பண்டைய
காலத்தில் போற்றப்பட்ட தெய்வங்கள் பலவற்றின் சிலைகள் அகழ்வு
ஆராய்ச்சிகளில் மிகுதியாக கண்டெடுக்கப்பட்டாலும் யேகோவா தேவனுக்கு என
சிலைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. கிட்டியுள்ள ஓரிரு சிலைகளும்
புறக்கணிக்கப் பட்டவைகளாகவே உள்ளன.

ஈ) இறந்தோர் வழிபாடு - தடை!

பழங்கால நாகரீகங்களுள் சீன நாகரீகமும் பெருமைக்குரியது. இறந்த
முன்னோர்களை வழிபடும் மக்களாக பண்டைய சீனர்கள் வாழ்ந்தனர். இறந்தோர்
வழிபாட்டிற்கும் தோரா தடைவிதிக்கிறது. இஸ்ரவேலர்கள் இறந்த மக்களை வழிபட
தோரா அனுமதிப்பதில்லை.

"செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக் கொள்ளாமலும், அடையாளமான
எழுத்துக்களை உங்கள் மேல் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான்
கர்த்தர்" - லேவியராகமம் 19:28

"...செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க
வேண்டாம்" - உபாகமம் 18:11

'
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (2)

<b>உ) இயற்கை வழிபாடு - தடை!</b>

இயற்கை வழிபாட்டை தோரா தடை செய்கிறது. விலங்கு, பறவை, சூரியன், சந்திரன்,
நீர், நட்சத்திரம், ஆகாயம், செடி... என எந்த இயற்கை கூறுகளையும் வழிபட
தோரா அனுமதிப்பதில்லை. படைக்கப்பட்டவைகளை துதியாமல் படைத்தவரை
துதிக்குமாறு பைபிள் கட்டளையிடுகிறது.

<b>"நீங்கள் உங்களைக் கெடுத்துக் கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற
செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், பூமியிலுள்ள யாதொரு ஊரும்
பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின்
உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை
உங்களுக்கு உண்டாக்காத படிக்கும், உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து,
உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா
ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய
நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காத படிக்கும்,
உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்"
- உபாகமம் 4:16-19</b>

சூரிய நமஸ்காரம், அந்நிய தேவர்களை தொழுது கொள்ளுதல், இறந்தோர் வழிபாடு,
இயற்கை வழிபாடு, குறி சொல்லுதல், ஜோசியம், அஞ்சனம் பார்த்தல், மாயவித்தை,
ராசி பலன் கூறுதல், சிலை வழிபாடு என அனைத்து செயல்களுக்கும் தன்னை
விலக்கி கொண்ட ஒரே தேசமாக இஸ்ரேல் விளங்கியது. பிற வழிகளை போன்று
யூதத்தையும் ஒரு குறுகிய வட்டதிற்குள் அடைக்க முடியாது. இவைகளுக்கு
அப்பாற்பட்ட ஒரே பண்டைய நம்பிக்கை யூதமே (கிறிஸ்தவமே). மனிதன் கூறுவது
போல பிற வழிகள் எல்லாம் உண்டானவைகள். மனிதன் வகுத்த கோட்பாடுகளில் அவைகள்
ஒன்றி வருவதில் இருந்தே இது தெளிவாகும்.

<b>2) பைபிள் திட்டமிட்ட கட்டுகதையா?</b>

பேதுரு சொல்லுகிறது போல நாம் தந்திரமான கட்டுகதைகளை பின்பற்றுபவர்களாக
இல்லாமல் சத்தியத்தை அறிவிப்பவர்களாகவே உள்ளோம். உதாரணத்திற்கு,
யாத்திராகமம் மெசபொத்தோமியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் அக்காலத்தில்
நிலவிய பகை உணர்வையே காட்டுகிறது என்று சில மறுப்பாளர்கள் கூறுவர்.

மோசே ஒரு புராண கதாப்பாத்திரம் என்பதே அவர்களது கூற்றாக இருக்கும். ஆனால்
இது அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி வேறில்லை. மோசேயை பாரோனின் மகள்
தத்தெடுத்து வளர்த்ததாக பைபிள் கூறுகிறது.இது எந்தளவு உண்மை என்பதை
'மோசே' என்ற பெயரில் இருந்தே அறிய முடியும்.'மோசே' என்பது ஒரு எகிப்திய
பெயர், பாரோனின் குமாரத்தி அவருக்கு இட்ட பெயர்.

எபிரேய மக்களின் முதல் வேதமான 'தோரா (ஐந்தாகமங்கள்)' தன் தலையான
தீர்க்கதரிசிக்கு ஒரு எகிப்திய பெயரை கூறுகிறது. தன் முதன்மை
தீர்க்கதரிசிக்கு 'மோசே' என்ற பெயரை சூட்டாமல் ஒரு எபிரேய பெயரை சூட்டி
இருந்தால், எகிப்திய அரச பெண் தன் வளர்ப்பு மகனுக்கு எப்படி ஒரு எபிரேய
பெயரை சூட்டியிருப்பாள் என்ற கேள்வி எழும்பும், யாத்திராகமம் ஒரு
கட்டுகதையாகும். இவ்வாறு கட்டுகதைகளை எழுதும் ஆசிரியர் பெயர், இடம்,
காலம் போன்ற பல விடயங்களில் தனக்கே தெரியாமல் தவறிழைத்து விடுவார். ஆனால்
பைபிள் எகிப்திய பெயரை எடுத்து கூறி தன் உண்மையை உறுதி செய்கிறது. 'மோசே'
என்ற பெயரில் மட்டும் அல்ல, பல இடங்களில் இது போன்று சிறுசிறு விடயங்கள்
நேர்த்தியாக
காணப்படுகின்றன.

இப்பொழுது குர்ஆனை எடுத்துக்கொள்ளலாம். தோரா (பைபிள்) கூறும் அதே ஆதாம்
ஏவாள், நோவா, ஆபிரகாம், மோசே... ஆகியோரின் கதைகளை சில வேறுபாடுகளுடன்
குர்ஆன் எடுத்து கூறுகிறது. ஆனால் இறைவனே நேரடியாக வசனங்களை மொழிவது
போன்ற எழுத்து நடையே முழுபுத்தகமும் காணப்படும். தந்திரமாக எழுதும்
ஆசிரியர் பிதற்றுவார் என்பதை கீழுள்ள வசனத்தில் காணலாம்.

"அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு
முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டீர்களா?
நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்று கொடுத்த பெரியவராக
இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் இதன் விளைவைத் தெரிந்து
கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும்
சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன் எனக் கூறினான்"
- குர்ஆன் 26:49

இஸ்ரவேலர்களை வனாந்திரத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு பாரோனிடம்
(ஃபிர்அவ்ன்) மோசே (மூஸா) பல முறை எச்சரிக்கிறார். ஆனால் ஒவ்வொரு
முறையும் பாரோன் மோசேவையும் இஸ்ரவேலர்களையும் கடிந்து கொள்கிறான். பைபிள்
இந்த சம்பவங்களை எடுத்துரைப்பது போல குர்ஆனும் கூறுகிறது. ஆனால், பாரோன்
இஸ்ரவேலர்களை சிலுவையில் அறைந்து கொலை செய்வேன் என்று எச்சரித்ததாக
குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு பாரோன் சிலுவை தண்டனையை கூறி இஸ்ரவேலர்களை
அச்சமூட்டியதாக தோராவில் (பைபிளில்) செய்தி இல்லை. இங்கு குர்ஆன் பிதற்றி
இருப்பதை காணலாம். முதலில் எகிப்தில் சிலுவை தண்டனைகள் இல்லை. சொல்லப்
போனால் மோசேயின் காலத்தில் சிலுவை தண்டனையே இல்லை. மோசே இறந்து கிட்டதட்ட
1000 வருடங்களுக்கு பிறகே சிலுவை தண்டனை தோன்றியது. ரோமர்களால்
நடைமுறைபடுத்தப்பட்டது. இங்கு அல்லாவே நேரடியாக வசனங்களை எடுத்து கூறுவது
போல எடுத்துகூறி வரும் ஆசிரியர் தன்னையே அறியாமல் தவறிழைத்துள்ளதை
காணலாம்.

ஆனால் பைபிளில் அக்காலத்து மக்கள் அன்றைய தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை
எளிமையாக எழுதியுள்ளனர். கட்டுகதைகளை சிந்தித்து எழுதும் ஆசிரியரின்
வரிகளில் அனேக பிதற்றல்கள் காணப்படும். பல விடயங்களில் தவறிழைத்து தன்
கதை கட்டுகதையே என்பதை உணர்த்தி விடுவார். ஆனால் சம்பவங்களை கண்ணால் கண்ட
அல்லது பிறரால் அறிந்த ஆசிரியர் தன் வரிகளை எளிமையாக தன் மனம் அறிந்தபடி
எழுதுவார். எளிமையான எழுத்து நடையும், சிற்சில விடயங்களில் காணப்படும்
நேர்த்திகளும் ஆசிரியர் தான் கண்டதையோ, பிறரால் தான் அறிந்ததையோ
எழுதுகிறார் என்பதை விளக்கிவிடும். இந்த எழுத்து நடையும் நேர்த்திகளும்
பைபிளில் காணப்படுவதை அறியலாம்.

'தோரா (ஐந்தாகமங்கள்)' இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு தப்பி வந்த பின்பு
எழுதப்பட்டது என்பது யூதர்களிடையே நிலவி வரும் தொன்மையான மரபு.

இரண்டாவது நூலான யாத்திராகமத்தில் இருந்தே மோசேயின் வாழ்க்கையையும்
வழிநடத்துதல்களையும் தோரா எடுத்துரைக்கிறது.

முதல் நூலான ஆதியாகமமோ உலக படைப்பையும், நாகரீக தோற்றத்தையும்,
முற்பிதாக்களின் வாழ்கையையும், எகிப்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தையும்
எடுத்து கூறுகிறது. தப்பி வந்த இஸ்ரவேலர்கள் எகிப்தில் தாங்கள்
அடிமைபட்டிருந்த காலத்திற்கு முன்பு நிகழ்ந்த சங்கதிகளை ஒன்று திரட்டி
'ஆதியாகமம்' என்ற நூலாக படைத்தனர் என்று பைபிள் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். இதுவே ஆதியாகம புத்தகத்தின் பின்னணி என்பதை பல வசனங்கள்
நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

*.ஆதியாகமம் 22:14 - ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று
பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்
என்றுஇந்நாள் வரைக்கும்சொல்லப்பட்டு வருகிறது.

*.ஆதியாகமம் 35:20 அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்;
அதுவேஇந்நாள் வரைக்கும்இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

*.ஆதியாகமம் 47:26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று
யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலேஇந்நாள் வரைக்கும்நடந்து
வருகிறது;

ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல்
நீங்கலாயிருந்தது.'இந்நாள் வரைக்கும்' என்ற வார்த்தை ஆதியாகமத்தில் பல
இடங்களில் காணப்படுகிறது. யேகோவாயீரே என்ற இடத்தை பற்றி கூறும் போது அந்த
இடத்தின் பின்னணி கதையை ஆசிரியர் கூறுகிறார். அவரது கூற்றில் இருந்தே
அவர் அந்த பின்னணி சம்பவத்தை கண்ணால் கண்டவர் அல்ல என்பதும்,
அப்பகுதியில் யேகோவாயீரே இடத்தை குறித்து மக்கள் மத்தியில் நெடுங்காலமாக
நிலவி வரும் மரபுச்செய்தியை கேட்டு நம்பிக்கையின் காரணமாகவே
ஆதியாகமத்தில் எழுதியுள்ளார் என்பதும் தெளிவாகிறது. படைப்பு, ஆதாம் ஏவாள்
கதை, நோவா கதை போன்றவை தோராவிற்கு முன்பே மெசபொத்தொமிய நாகரீக பகுதியில்
விளங்கிய நம்பிக்கைகள். 'கில்மேஷ் புராணம்', 'எரிது படைப்பாகமம்' போன்ற
பழங்கால கல்வெட்டுகளில் படைப்பின் பின்னணி, ஆதாம் ஏவாள் கதை, நோவா கதை
ஆகியவை காணப்படுகின்றன.

அக்காலத்தில் நிலவி வந்த நம்பிக்கைகள், செவிவழி செய்திகள், குறிபிட்ட
இடங்களுடன் விளங்கிய மரபுச்செய்திகள், தங்கள் முன்னோர்களின் வம்ச
வரலாறுகள் என பல சம்பவங்களை திரட்டி 'ஆதியாகமம்' என்ற நூலாக ஆசிரியர்
படைத்துள்ளார்.அதன் பிறகு எகிப்தில் பட்ட துயரங்கள், மோசேயின்
வழிநடத்துதல்கள் போன்றவற்றை யாத்திராகமத்தில் இருந்து உபாகமம் வரை
எடுத்து கூறுகிறார்.

இதில் ஆசிரியரின் நோக்கம் அக்காலத்தில் தான் கண்டதை, கேட்டதை, படித்ததை,
அறிந்ததை தோராவாக படைப்பதில் தான் உள்ளது என்பதை நன்கு அறியலாம். ஒரு
கற்பனை கதையை எழுத வேண்டும் என்பதில் இல்லை. தான் என்ன சங்கதிகளை
மனப்பூர்வமாக நம்பினாரோ அதனை எளிமையாக தன் மனம்படி எழுதியுள்ளார்.

எனவே தோராவில் மோசேயின் பெயர், யேகோவாயீரே தளம், ராகேல் தூண் போன்ற
சிற்சில நேர்த்திகள் பல காணப்படுகின்றன. எளிமையான எழுத்துநடையும்
காணப்படுகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால் பண்டைய வேதங்களை இதிகாச கதைகளை ஒப்பிடும் போது
பைபிள் பல விதங்களில் தனித்து நிற்கிறது. இதன் காரணமாக தான் இறை
நம்பிக்கையாளர்கள் பலர் பைபிளை பிற வேத நூல்களை விட உண்மையாக
கருதுகின்றனர். தோரா முழுக்க முழுக்க ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகளே. ஒரு
கட்டுகதையை தீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதவில்லை, தான் என்ன
செய்திகளை நம்பினாரோ அதனை எழுதியுள்ளார்.

பைபிள் 'நம்பிக்கை' என்ற வட்டதிலேயே
எழுதப்பட்டுள்ளது.ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகள் உண்மைதான் என்று எடுத்து கூறுவதே
கிறிஸ்தவர்களுக்குள்ள பொறுப்பு.

3) ஆசிரியர் நம்பிய சங்கதிகள் உண்மை தானா?

பரிசுத்த ஆவியானவரே ஆசிரியரை எழுத்து பணியின் போது பிழைகளில் இருந்து
காத்து வழி நடத்தினார், எனவே வேத வாக்கியங்களில் எல்லாம் உண்மையானவை.
இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. இது எவ்வாறு உறுதியாகிறது?

அ) இயேசு வேத வாக்கியங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார்

முதலாவதாக, இயேசு வேத வசனங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார் (யோவான் 10:35)

ஆ) வர்ணனைகள் காணப்படுவது இல்லை

தாமரை பற்றிய கிரேக்க புராண கதை- மல்லிகை பூவிற்கும், ரோஜா பூவிற்கும்
யார் தங்களில் அழகு என்ற வாதம் ஒரு முறை பிறந்தது. பலமணி நேரம் அடித்து
கொண்ட மல்லிகையும் ரோஜாவும் இயற்கையிடம் சென்று தங்கள் வழக்கை கூறி
தீர்ப்பளிக்குமாறு வேண்டின. இயற்கை தேவதையால் தீர்மானிக்க இயலவில்லை.
எனவே, ரோஜா மலரை எடுத்து அதில் மல்லிகையின் மணத்தை ஊற்றி 'தாமரை' என்ற
அழகிய பூவை படைத்தாள். இறுதியாக தாமரையே அழகில் சிறந்தது என்று
தீர்ப்பளிக்கிறாள்.

இது போன்ற வர்ணனைகளே அக்கால வேத நூல்களில் பெருமளவு
காணப்படுகின்றன. எனினும் பைபிளில் அத்தகைய வர்ணனைகள்
காணப்படுவதில்லை.

இ) தவறுகள் சுட்டிகாட்டப்படுகின்றன

பைபிள் நம்பகத்தன்மை பெற்று விளங்குவதற்கு இன்னொரு காரணம் அதில்
காணப்படும் தீய நிகழ்வுகள். நோவா. தாவீது, லோத்து... என பலரின்
வாழ்வுகளில் நிகழ்ந்த தவறுகளையும் எடுத்துரைகிறது. ஒருவரின் வாழ்வில்
நிகழ்ந்த நன்மைகளை மட்டுமே எடுத்துக்கூறும் வகையில் பைபிள்
காணப்படுவதில்லை. உள்ளதை உள்ளதாக சொல்கிறது...

ஈ) அறிவியல் வரலாற்று சாத்தியங்கள்

பைபிள் மனித படைப்பை பற்றி கூறும் போது ஆதாம் ஏவாள் வருகின்றனர். இன்று
உலகில் வாழும் அனைத்து மக்களும் மறைந்த ஒரே ஒரு பெண்ணின் வம்சவாரிசுகளே
என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது ( இழைமணியப் பழையோள்).
இக்கண்டுபிடிப்பு பைபிள் கூறும் மனித படைப்பை
சாத்தியப்படுத்துகிறது.

அதே போல, மெசபொத்தொமிய பகுதியில் பெருவெள்ளம் நிகழ்ந்ததற்கான தடயங்கள்
மிகுதியாக காணப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நோவா
சரிதத்தை பிரதலிப்பதாக உள்ளன. யூதம் அன்றி பிற மெசபொத்தோமிய
மார்க்கங்களிலும் வெள்ளப்பெருக்கு குறித்து செய்திகள் மிகுதியாக
காணப்படுகின்றன. கருங்கடலில் ஆற்றில் மட்டுமே வாழக்கூடிய நத்தை வகைகளின்
ஓடுகள் பெருமளவு குவிந்துள்ளன. பெருவெள்ளம் நிகழ்ந்தாலே இது சாத்தியம்
என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ( FOX NEWS)

பாபேல் கோபுரம் குறித்த செய்திகள் மன்னர் நேபுகாத்நேச்சார் பொறித்த
கல்வெட்டு தடயங்களோடு பொருந்துகின்றன. நாகரீகங்கள் நதிகளை சுற்றியே
பிறந்தன என்ற வரலாற்று கணிப்பு பைபிளுடன் பொருந்துகிறது. முதலாவதாக
இதெக்கேல், ஐபிராத்து நதிகளை சுற்றி மக்கள் குடி அமர்ந்தனர்
(மெசபொத்தோமிய நாகரீகம்) என்ற வரலாற்று கணிப்பு பைபிளின் ஏதேன் தோட்ட
செய்திகளோடு ஒத்து வருகிறது. நைல் நதியை சுற்றி எகிப்திய நாகரீகம் பிறந்த
கதையையும் பைபிளில் காணலாம். வழிபாட்டுக்கு பின் விவசாயம், அதன் பின்
கால்நடை வளர்ப்பு, வணிகம், பண்டமாற்று முறை... என பைபிள் கூறும் அதே
நாகரீக வளர்ச்சி இன்றைய வரலாற்று கணிப்புகளோடு பொருந்துவதை கூட காணலாம்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு சரிதங்களில் வருகின்ற பல
சம்பவங்கள், பாரம்பரியங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆபிரகாம் 'ஊர்'
என்ற பட்டணத்தில் இருந்து ஆரான் என்ற பட்டணத்திற்கு குடிபெயர்ந்ததாக
பைபிள் கூறுகிறது. ஊரிலிருந்து ஆரானுக்கு மக்கள் பயணம் மேற்கொண்டதாக
பழங்கால மெசபொத்தொமிய கல்வெட்டுகள் பல கூறுகின்றன. பைபிளில் காணப்படும்
பல ஊர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத
நூலாக பைபிள் திகழ்கிறது.இத்தகைய சரித்திர செரிவை வேறெந்த பண்டைய
வேதங்களிலும் காணமுடியாது.

ஈ) அதிசய பிணைப்பு:

அறுபத்தி ஆறு நூல்களை உள்ளடக்கிய நூலாக பைபிள் உள்ளது. 1500 வருடங்களாக
40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் பைபிள் எழுதப்பட்டுள்ளது. ஆனால்
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேசம் வரை ஒரே கோர்வையில் செய்திகள்
அமைந்திருப்பதை காணலாம். வெளிபடுத்தின விசேசத்தில் காணப்படும் வசனம்
ஒன்றை ஆதியாகமம் விளக்கும். ஆதியாகமத்தில் உள்ள வசனத்தை பவுலின் நிருபம்
விளக்கும்.

<b>"இனி மாம்சமானவைகள் எல்லாம் ஜலப் பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவது
இல்லை என்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை என்றும்,
உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்:
எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ
ஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கு என்று நான் செய்கிற
உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது
எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாய் இருக்கும்" -
ஆதியாகமம் 9:11-13

"அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச்
சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்....அந்தச்
சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது"
- வெளி 4:2,3

ஜலத்தினால் இனி உலகம் அழிவதில்லை என்ற உடன்படிக்கையின் அடையாளமே
வானவில். இது ஒரு புறம் இருக்க வெளிபடுத்தின விசேசம் வானவில்லை இரண்டாம்
வருகையோடு இணைக்கிறது. ஏன்? இரண்டாம் வருகையின் போது உலகம் நீரால் அல்ல,
அக்கினியால் அழியும் என்று சுட்டி காட்டப்படுகிறது. சிலர் வானவில்லின்
ஏழு வண்ணங்களை கூட தரம் பிரித்து விளக்குகின்றனர்.

வானவில் நீல நிறத்தில் தொடங்கி சிவப்பு நிறத்தில் முடிவடைகிறது. நீல
நிறம் ஜலத்தினால் உலகம் அழிந்ததை நினைவுப்படுத்துவதாகவும் சிவப்பு நிறம்
தீயினால் உலகம் அழியப் போவதை நினைவுப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு பல பிணைப்புகள் வேதம் முழுவதும் காணப்படுகின்றன. இத்தகைய அதிசய
பிணைப்புகளை பைபிளில் மட்டுமே காணமுடிகிறது.
மேலும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல கதைகள் இயேசு கிறிஸ்துவை
பிரதிபலிப்பதாக உள்ளன.

உதாரணத்திற்கு நோவா பேழை இயேசு கிறிஸ்துவை பிரதிபலிப்பதாக உள்ளது. நோவா
காலத்தில் ஜலத்தினால் உலகம் அழிந்தது. இரண்டாம் வருகையில் அக்கினி உலகை
அழிக்கும். பேழையை கட்டும் போது நோவா பலரால் நிந்திக்கப்பட்டிருப்பார்,
பூமியின் மேல் வரப்போகும் அபயத்தை அவர் கூற கேட்டும் பலர் அலட்சியம்
செய்திருப்பர். அதே போல இன்று சுவிசேசம் உலகெங்கும் எடுத்து கூறப்பட்டும்
பல மக்களால் அலட்சியம் செய்யப்படுகிறது. உலக அழிவு வந்த போது நோவா
பேழையுள் பிரவேசித்து தன்னை காத்து கொண்டார், அதே போல பூமி அக்கினிக்கு
இரையாக்கப்படும் போது பாவங்களை விட்டு மனந்திரும்பிய மக்கள்
காக்கப்படுவர்.... நோவா கதையை போன்று யோனாவின் கதை இயேசு கிறிஸ்துவின்
உயிர்தெழுதலை சுட்டிகாட்டுகிறது. ஏதேன் தோட்ட ஜீவவிருட்சம் இயேசு
கிறிஸ்துவை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பல விந்தைகள் பைபிளில்
காணப்படுகின்றன.

உ) அதிசய தீர்க்கதரிசனங்கள்:

பைபிளின் தனி பெருமை என்றால் அது தீர்க்கதரிசனங்களே. பைபிளில்
முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின, நிறைவேறி
வருகின்றன, நிறைவேற போகின்றன. பைபிள் உரைத்த தீர்க்கதரிசனங்களுள் மிகவும்
வியப்பிற்குறியது தானியேல் 9:24 - 27. மேசியா எந்த ஆண்டில் பிறப்பார்,
எந்த ஆண்டில் இறப்பார் என்று இத்தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது.

அதிசயமாக, முன்னுரைக்கப்பட்ட அதே ஆண்டுகளில் இயேசு பிறக்கிறார்,
இறக்கிறார். மேசியா பிறருக்காய் இறப்பார், அவரது இறப்பின் நிமித்தமாய்
எருசலேம் அழிவுறும் என்றும் தானியேல் முன்னுரைக்கிறது. அதே போல, இயேசு
பிறருக்காய் அடிக்கப்படுகிறார், எருசலேம் சூறையாடப்படுகிறது!

இயேசுவின் வாழ்வில் 300-க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி
உள்ளன.10^17 (1 followed by 17 zeros) காசுகளை சுண்டிவிட்டு அதில் அத்தனை
காசுகளும் தலையாகவே விழுந்தன என்றால் எத்தனை வியப்போ அதே வியப்பில் தான்
இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிறைவேறின தீர்க்கதரிசனங்களும்
காணப்படுகின்றன!இறுதி கால தீர்க்கதரிசனங்களும் அதிசயமாக விளங்கி
வருகின்றன. இன்றுவரை பைபிள் தீர்க்கதரிசனங்கள் வியப்புக்குரியவைகளாக
உள்ளன. பைபிளில் 25% தீர்க்கதரிசனங்கள் மட்டுமே.

இவ்வாறு பல விதகங்களில் பைபிள் தனிப்பட்டு விளங்குகிறது. பண்டைய
இதிகாசங்கள், புராணங்கள், சாத்திரங்களை காணும் போது பைபிள் பல கோடி
மடங்கு தரத்தில் உயர்ந்து நிற்பதை தெளிவாக காணலாம்.

எந்நிலையிலும் கிறிஸ்தவத்தின் தோற்றத்தை பைபிள் கொண்டு மட்டுமே விளக்க
முடியும். கிறிஸ்தவம் மட்டுமே மனிதன் மத தோற்றத்திற்கென வகுத்த
கோட்பாடுகளுக்குள் வர தவறி தனித்து நிற்கிறது. சுருக்கமாக,
மனிதர்களுக்கும் இறைவனுக்கும் ஆதிமுதலாய் ஒரு உறவு உள்ளது, அதுவே
கிறிஸ்தவம்.அந்த உறவை விட்டு பிரிந்த சிலர் இன்றைய மனிதன் கூறுவது போல
'மதங்களை' உண்டாக்கினர். 'மதம்' என்ற வார்த்தை பிறந்தது. 'உறவு' என்னும்
சொல் வழுவிழந்தது....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.