இயேசு ஒரு மனிதன்தானே. அவரை ஏன் தெய்வமென்று கூறுகிறீர்கள் ?

இயேசு 100% மனிதனாக இருந்தபோது 100% கடவுளாகவும் இருந்தார். இயேசு மனித
வடிவில் அவதரித்த கடவுள். இயேசுவின் தாய் மரியா ஆண் ஈடுபாடின்றி,
சர்வேஸ்வர ஆவியால் கர்ப்பமாகி இயேசுவை பெற்றார் (மத்;.1:18). ஒரு சாதாரண
மனிதன் இப்படி பிறக்கமுடியுமா? இவ்வுலகில் பிறக்கும் எவரும் ஒருநாள்
இறந்து போகிறார்கள். இறக்கிறவர்கள் உயிரோடு எழும்புவதில்லை.ஆனால், இயேசு
இவ்வுலக மக்கள் செய்த பாவங்களுக்கு தண்டனையாக, தானே மரண தண்டனையை
ஏற்றுக்கொண்டு உயிர் நீத்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
(லூக்.24:1-6). அவர் நல்லவர் என்பதை நிரூபிக்க நமக்காக இறந்தார். அவர்
வல்லவர் என்று நிரூபிக்க உயிரோடு எழுந்தார். ஒரு சாதாரண மனிதன் இறந்தபின்
தானாக உயிரோடு எழும்ப முடியுமா ?

கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த நாட்கள் முழுவதும் மனிதனாய் வாழ்ந்தாலும்,
பாவமின்றி அதாவது குற்றமற்றவராய் வாழ்ந்தார் (யோவா.8:46). இயேசுவை
கைதுசெய்து, விசாரித்த ஆட்சித் தலைவர் பிலாத்து, இயேசு குற்றமற்றவரென்று
மூன்று முறை சொன்னார் (லூக்.23:4,14,22). இயேசு குற்றமற்றவர் என்று
பிலாத்துவின் மனைவி கனவில் கடவுளால் எச்சரிக்கப்பட்டு, இயேசுவுக்கு
தீங்கிழைக்கக்கூடாது என்று பிலாத்துவை அறிவுறுத்தினார் (மத்.27:19).
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்கூட இயேசு குற்றமற்றவரென்று கூறினார்
(மத்.27:3,4). இயேசு பாவமற்றவரென்று அவரை பின்தொடர்ந்த திருத்தூதர்கள்
அறிவித்தனர் (தி.பணி.4:30, 2கொரி.5:21, 1பேது.2:22). இதுவரை
வாழ்ந்தவர்களில் அல்லது இன்று வாழ்ந்துகொண்டிருப்போரில் யாராவது தன்னைப்
பாவமற்றவரென்று கூறமுடியுமா? புகழ்பெற்ற தத்துவ அறிஞர்களோ,
மதத்தலைவர்களோ, சீர்திருத்தவாதிகளோ, சமுதாயச் சிற்பிகளோ யாராவது தங்களைப்
பாவமற்றவரென்று கூறமுடியுமா? 'ஓரு குற்றம்கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்
இயேசு மட்டும்தான் என்னும் பாடலடங்கிய "எவரும் விரும்பும் ஓர் இனிய
தெய்வம்" என்னும் ஒலித்தட்டை வாங்கிக் கேளுங்கள். (மேற்கண்ட ஒலித்தட்டு
வேண்டுமானால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்). இயேசு தன்னைப்
பகைத்தவர்களைப் பார்த்து, "நீங்கள் கீழிருந்து (பூமியிலிருந்து)
வந்தவர்கள் நான் மேலிருந்து (பரலோகத்திலிருந்து) வந்தவன். நீங்கள்
இவ்வுலகைச் சார்ந்தவர்கள்; ஆனால், நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. நான்
தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம்
செல்கிறேன்" என்றார் (யோவா.8:23, 16:28). ஒரு சாதாரண மனிதன் இப்படி
கூறமுடியுமா?

இயேசு, தரையின்மீது நடப்பதைப்போல கடலின்மீது நடந்தார் (மத்.14:25). அவர்
பூட்டப்பட்ட வீட்டிற்குள் கடந்து வந்து தன் சீடர்களை தைரியப்படுத்தினார்
(யோவா.20:19). இயேசு தொழுநோயாளிகளை தொட்டு, மருந்தில்லாமல்
சுகப்படுத்தினார் (மத்.8:2-4, மாற்.1:40-42). தன்னிடம் நம்பிக்கையோடு
வந்த எப்படிப்பட்ட நோயாளிகளையும் குணப்படுத்தினார் (மத்.4:23,24,
12:10-13). மரித்த சடலங்களை உயிரோடு எழுப்பினார் (மத்.9:24,25,
யோவா.11:1-45). குருடர்களுக்கு பார்வை கொடுத்தார் (மத்.9:27-30,
யோவா.9:1-7). ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வைத்து
ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு பசியாற்றினார் (மத்.14:15-21).
பேயினால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களை விடுவித்தார் (மாற்.1:23-28). ஒருமுறை
இயேசு அழைக்கப்பட்டிருந்த ஒரு திருமண விருந்தில் திராட்சைப் பழரசம்
தீர்ந்தவுடன், அம்மக்களின் அவமானத்துயர் துடைக்க, வெறும் தண்ணீரை தன்
தெய்வீக வலிமையால் ருசியுள்ள திராட்சைப் பழரசமாக மாற்றி குறைவை
நிறைவாக்கினார் (யோவா.2:1-11). தான் எங்கும் வியாபித்திருப்பதை
உணர்த்தும்படி இயேசு,"இரண்டு அல்லது மூன்று பேர்; என்னுடைய பெயரில் எங்கே
கூடுவீர்களோ, அங்கே நானிருக்கிறேன்" (மத்.18:20) என்றும், "இதோ உலகத்தின்
முடிவுவரை நான் உங்களோடிருக்கிறேன்" (மத்.28:20) என்றும்
அறிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் இப்படி கூறமுடியுமா? இயேசு, தனக்கு
சகல அதிகாரமும் உண்டு என்பதை விளக்கிக் காட்ட, "விண்ணுலகிலும்
மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது
(மத்.28:18); தந்தை மகன் (இயேசு) மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர்
கையில் ஒப்படைத்துள்ளார் (யோவா.3:35); என் தந்தை (கடவுள்) எல்லாவற்றையும்
என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்" (மத்.11:27) என்று அறிக்கையிட்டார்.
இப்படி ஒரு சாதாரண மனிதன் கூறமுடியுமா? மனிதனாய் வந்த இயேசுதான் இந்த
அகிலாண்டங்களைப் படைத்த விஸ்வநாதன் என்று வேதம் கற்பிக்கிறது
(யோவா.1:1-3, கொலோ.1:16). இயேசுவே கண்ணுக்கு புலனாகாத கடவுளுடைய வடிவம்
என்றும், இயேசு எல்லாவற்றுக்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள்
நிலைநிற்கிறது என்றும், மொத்த அண்டசராசரங்களும் அவரையே மையமாக வைத்து
இயங்குகிறது (கொலோ.1:15-17) என்றும் வேதம் கூறுகிறது. இயேசு பாவம் தவிர
மற்றெதையும் செய்து முடிக்கும் வரம்பற்ற வலிமையுடையவர்.

'கடவுள் மனித உருவில் வரமுடியுமா' என்று நாம் கடவுளிடம் கேள்வி கேட்க
முடியாது. ஆண்டவருடைய மனதை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர்
யார்? (1கொரி.2:16, உரோ.11:34) என்று வேதம் நம்மைப் பார்த்து கேள்வி
கேட்கிறது.கடவுள் மனித வடிவத்தில் அவதாரமாக பிறக்கமுடியாது என்று கூற
நாம் கடவுளைப் படைத்தவர்களா? தெய்வம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று
நிர்ணயிக்க நாம் தெய்வத்தின் பெற்றோரா? சர்வேஸ்வரன் தனக்கு
விருப்பமானவைகளை தன் சித்தப்படி செய்கிறர் (தி.பா.115:3). இன்று நாம்
தேதி குறிப்பிடும்போது கி.பி.2013 என்று கூறுகிறோமே. கி.பி-யின்
முழுவடிவம் கிறிஸ்துவுக்குப் பின் என்று நம்மில் பலர் அதன் அர்த்தத்தை
உணராமலேயே எழுதுகிறோம். இயேசு ஒரு சாதாரண மனிதனானால் சரித்திரம்
'கிறிஸ்துவுக்குமுன்' (கி.மு.) என்றும் 'கிறிஸ்துவுக்குபின்' (கி.பி.)
என்றும் இரண்டு பாகங்களாக பிரிந்திருக்காதே!

நன்றி...!!!
Bro. Augustine

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.