Type Here to Get Search Results !

சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா? பாகம் - 2

"புறஜாதியார்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள்
அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்,
புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில்
எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்:
யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும்
போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக்
கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.

பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி
அல்ல. யூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு அதைப் புரிந்துகொண்டு
அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு
அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும்
தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி:
"நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல,
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்."
புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல்
இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும்.

எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும்
கிரியைகளைக்கொண்டே
நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும்
அல்ல" என்று சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.

ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தையோடு சென்றேன், அங்கே செல்ல பேருந்து
கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும். அப்போது மிகவும்
இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?"
என்றேன். "எனக்கு அவங்க வீடு தெரியாது, கடைக்காரரிடம் கேளுங்கள்
அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர்
வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே
கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன்.
"தப்புதான்" என்றார். "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்"
என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம்
தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது. ஆனால்
இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.

புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக்
கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத
ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான். ஆனால்
புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?
யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக:

அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல்
முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்...அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்
மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும்
ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம்
செய்யாதவர் இயேசு மட்டுமே!இல்லையென்றால் அவரும்
சென்றிருக்கவேண்டும்)
இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு
அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும்,தீங்குள்ளதொன்றும் அதற்குள்
(பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.

I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும்
பாவியும் எங்கே நிற்பான்?
இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள்.

Post a Comment

0 Comments