தீர்க்கதரிசியும்
தீர்க்கதரிசனமும்
(Prophe t & Prophecy)
தீர்க்கதரிசனம் சொல்பவன் தீர்க்கதரிசி. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மெய்யான தீர்க்கதரிசிகள் தேவனிடமிருந்து வார்த்தையைப் பெற்று அதை மக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகள். எதிர்காலத்தைப் பற்றிய வெறும் அறிவிப்பாளர்கள் அல்ல.
பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்படும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டின் யூதத் தீர்க்கதரிசிகளே. இவர்கள் இரண்டு சிறப்பான பணிகளை ஆற்றினர்.
1. யூதர்கள் தொடர்ந்து தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்படியாமல் வாழ்ந்ததை இடித்துரைத்தனர்.
2. இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் வருகையை முன்னறிவித்தனர்.
வேதவசனத்தில் பொதுவாக தீர்க்கதரிசனம் என்று வரும் வார்த்தை, தேவனிடமிருந்து நேரடியாக வருகின்ற, மனிதரால் பேசப்படுகின்ற வார்த்தை என்றே பொருள்படும். இவ்விதமாக தேவனுடைய வார்த்தையைப் பேசும் மனிதர்கள் 'தீர்க்கதரிசிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.
தீர்க்கதரிசனம் என்பது தீர்க்கதரிசன வரத்தையும் குறிக்கும். அதாவது, தேவனுடைய வார்த்தைகளைப் பேசும் வரம்.
(1கொரிந்தியர்: 12:10).
தீர்க்கதரிசனம் என்பது பலவிதங்களில் வரக்கூடும். அவை எதிர்காலத்தில் வரப்போவதை முன்னறிவிக்கலாம். அவை தேவன் அருளும் எச்சரிப்புகளாகவும் இருக்கலாம். தேவன் நமக்கு போதிக்க விரும்பும் முக்கியமான
போதனைகளாகவும் இருக்கலாம். ஆனால், அது எப்படியிருப்பினும் மனிதரிடமிருந்து வருவதல்ல. உண்மையான தீர்க்கதரிசனம் தேவனிடமிருந்தே வரும்.
தேவனிடமிருந்து வராத கள்ளத்தீர்க்கதரிசனங்களும் இருக்கவே செய்கின்றன. இப்படிப்பட்ட
தீர்க்கதரிசனங்களைக் கூறுபவர்கள் 'கள்ளத் தீர்க்கதரிசிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். நாம் அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி கட்டளை பெற்றுள்ளோம். (மத்தேயு: 7:15;
1யோவான்: 4:1).இவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும், பணத்திற்காகவும், இழிவான ஆதாயத்திற்காகவும் இச்சித்து, சாத்தானிடமிருந்து செய்தியைக் கேட்டு மக்களுக்கு சொன்னார்கள்.
வித்தியாசம்:
1. நல்ல தீர்க்கதரிசிகள் ஆண்டவரிடத்தில் கேட்டு அறிவித்தார்கள்.
கள்ளத்தீர்க்கதரிசிகளோ தங்களின் மனதின் ஏவுதலையே அறிவித்தனர்.
2. நல்ல தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனம் நிறைவேறின.
கள்ளத்தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை.
உபாகமம்: 18:20,21 - ல் வாசித்தறியலாம்.
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள்யூதர்களை அவர்களது
கீழ்ப்படியாமைக்காகக் கடிந்து கொள்ளவும், தேவசித்தத்தை அவர்களுக்கு நினைப்பூட்டவும் தேவனால் அனுப்பப்பட்டனர். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் வருகை பற்றியும் அநேக தீர்க்கதரிசனங்கள் உரைத்தனர்.
புதிய ஏற்பாட்டிலும் தீர்க்கதரிசிகள் உண்டு. தீர்க்கதரிசன வரம் புதிய ஏற்பாட்டு திருச்சபையில் மிக முக்கியத்தவம் வாய்ந்ததாய் இருந்தது. (1கொரிந்தியர்: 12:28; 14:1; எபேசியர்: 4:11). புதிய ஏற்பாட்டில் உள்ள வெளிப்படுத்தின விசேஷம் முழுவதும் உலக முடிவைப் பற்றிய தீர்க்கதரிசனம் என கூறலாம்.