ஆபிரகாம்
பிறப்பு :
மெசொப்பொத்தேமியா
இறப்பு :
கானான்
விவிலியத்தின் தொடக்க நூலின்படி ஆபிரகாம்
( எபிரேயம்:אַבְרָהָם listen) என பெயரிடப்பட்ட ஆபிராம் இஸ்ரயேல்
மக்களின்முதுபெரும் தந்தை ஆவார். ஆபிரகாம் என்றப் பெயருக்கு எண்ணற்ற மக்களின் தந்தை என்பது பொருள். இவர் கிறிஸ்தவம்,யூத மதங்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார். மேலும் இஸ்லாம்சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் கொள்ளப்படுகிறார். இவரது வாழ்கைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தின் தொடக்க நூல்11:26-25:18 மற்றும் திருக்குர்ஆன் என்பவற்றில் காணப்படுகிறது.
யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய்சமயங்களின் புனித நூல்களில் அபிரகாமுக்கு கொடுக்கப்ப்ட்டுள்ள முக்கியத்துவத்தினால், இவை ஆபிரகாமிய சமயங்கள் என அழைக்கப்படுகின்றன. பழைய
ஏற்பாட்டிலும்திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளபடி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீவதிக்கப்பட்டவராவார். இவருக்கு கடவுள் மகத்தானவற்றை கொடுப்பதாக
வாக்குறுதியளித்தார். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தை என அழைகிறார்கள். ஆபிராமுக்கு கேத்துராள்என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும்.
விவிலியத்தின் படி ஆபிரகாமின் காலம் கி.மு. 2000களில் கனிக்கலாம்.
விவிலிய தொடக்க நூலின் படி ஆபிரகாமின் வரலாறு:-
விவிலியத்தின் தொடக்க நூலான ஆதியாகமம்
11:26–25:10 முடிய ஆபிரகாமின் வாழ்வு விவரிக்கப்படுகின்றது.
ஆபிராமின் அழைப்பு:-
நோவாவின்பத்தாம் வழிமரபினரான தேராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவருக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான். ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தேராகிற்கு முன்பே இறந்தார். ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார். தேராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர். தேராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.
ஆண்டவர் ஆபிராமை நோக்கி அவரின் நாட்டிலிருந்தும் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு தான் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்ல கட்டளையிட்டார். அவ்வாறுசெய்தால் ஆண்டவர் அவரை பெரிய இனமாக்கவும்; அவருக்கு ஆசி வழங்கவும் வாக்களித்தார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச்
சென்றடைந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த கருவாலி மரத்தை அடைந்தார். அங்கே கானானியா் வாழ்ந்து வந்தனா். கடவுள் ஆபிராமுக்கு தோன்றி "உன் வழிமரபினா்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்" . என்றார். எனவே அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
எகிப்தில் ஆபிராம்:-
அவர்கள் வாழ்ந்துவந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படவே ஆபிராம் எகிப்து நாட்டிற்குச் சென்றார். அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், அவர் அழகானவராக இருப்பதால் எகிப்தியர் தன்னைக் கொன்று அவரைக்கவர்ந்திடாதவாறு இருக்க அவரை தன் சகோதரி எனச் சொல்லச்சொன்னார். அவர்கள் எகிப்தைச் அடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை கண்ட எகிப்திய பார்வோனின் மேலதிகாரிகள் அவரை பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ஈடாக ஆபிராமுக்குப் பார்வோன் ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான். ஆனால் ஆண்டவர் சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார். பார்வோன் ஆபிராமை அழைத்து நீ அவள் உன் மனைவி என்று ஏன் சொல்லவில்லை? நீ சகோதரி என்று சொன்னதால் தானே அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேன். இப்பொழுதே நீ நாட்டை விட்டு புறப்படு எனக்கூறிய பார்வோன் ஆபிராமையும் அவர் மனைவியையும் அவருக்குரிய
எல்லாவற்றுடனும் நாட்டைவிட்டு
அனுப்பிவிட்டான்.
ஆபிரகாம் லோத்து பிரிதல்:-
ஆபிராம் லோத்து பிரிதல்
ஆபிராம் தம் மனைவியுடன் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஆபிராமும் லோத்தும் மேலும் பூசல் வலுக்காமலிருக்க ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார்.
அமலேக்கியரின் கிளர்ச்சி:-
அம்ராபல், அரியோக்கு, கெதர்லகோமர் மற்றும் திதால் ஆகியோர் பெரா, பிர்சா, சினாபு, செமேபர், சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அதனால் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் அவர்களை முறியடித்தனர். வெற்றி பெற்றவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமில் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர். தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர். அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.
ஆபிராமும்
மெல்கிசெதேக்கும்:-
ஆபிராம்
திரும்பியபொழுது 'அரசர் பள்ளத்தாக்கு' என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச்
சோதோம் அரசன் வந்தான். அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்குஅப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி ஆசிவழங்கினார்.. அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை:-
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்றும் அவர் குடியிருக்கும் நாட்டை உரிமைச் சொத்தாக அளிக்கவும் வாக்களித்து ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர், இத்தியர், பெரிசியர், இரபாவியர், எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை ஆபிராமின் வழிமரபினர்க்கு வழங்குவதாகவும் வாக்களித்தார்.
ஆகாரும் இஸ்மயெலும்:-
ஆபிராம், சாரா மற்றும் ஆகார், 1897ஆண்டு ஓவியம்.
ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லாததால் தனது எகிப்திய பணிப்பெண் ஆகாரைத் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். இதனால் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அவர் ஆகாருக்கு ஆருதல் கூறி திரும்பிப்போகப் பணித்தார். ஆகார் தனது எண்பத்தாறாவது வயதில் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ' இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.
மூன்று மனிதர்களும் ஆபிராமும்:-
ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் வணங்கி, அவர்களுக்கு வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ட பின்பு அவரிடம் அவரின் மனைவி சாராளுக்கு ஒரு மகன் பிறக்கப்போவதை முன்னறிவித்தனர்.
ஆபிரகாமும் ஈசாக்கும்:-
கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாராய் கர்ப்பவதியாகி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாமுக்கு, சாராய் தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிட்டார்.
சிலகாலத்துக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ″உன் ஒரே மகனான ஈசாக்கை நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்″ என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து ஈசாக்கோடு கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அடைந்து அங்கே ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று அவரைத்தடுத்து "நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். ஆபிரகாம் அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.
ஆபிரகாமின் இறப்பு:-
ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து இறந்தார். அவரின் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவர் தம் மனைவி சாராயோடு அடக்கம் செய்தனர்.