தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ...

தேவப் பிதா எந்தன்
மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில்
அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
...................................

தென்னிந்தியச் திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டல மிஷனரிப்
பணித்தளமாக, திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சை மலை விளங்குகிறது.

இப்பணித்தளத்தின் ஊழிய தரிசனத்தை முதலாவது பெற்றவர், "கொல்லிமலை மிஷனரி"
என அழைக்கப்படும் ஆங்கிலேய மிஷனரி, ஜெசிமன் பிராண்ட் ஆவார்.

இவர் குஷ்டரோகிகளுக்கு அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த, உலகப்
பிரசித்தி பெற்ற மருத்துவ மேதையும், வேலூர் சி.எம்.சி ( C.M.C) மருத்துவ
மனையின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் பால் பிராண்டின் தந்தையாவார்.

தமிழைக் கற்று, கொல்லிமலை ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த
ஜெசிமனுக்குப் பிடித்த பாடல், தன் தாய்மொழியான ஆங்கிலத்திலல்ல. தமிழில்
உள்ள "தேவபிதா" என்ற இப்பாடலே. தனது 43- வது வயதிலேயே, அவர் கொல்லி
மலையின் விஷக்காய்ச்சலால் மரித்தபோது, அவர் அடிக்கடி விரும்பிப் பாடிய
இப்பாடலையே, அவரது அடக்க ஆராதனையில், அம்மலை மக்கள் பாடினார்கள்.

இவ்வாறு, வெளிநாட்டுத் தேவ ஊழியர்களையும் கவர்ந்த இப்பாடல், கிட்டத்தட்ட
இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

இன்றும், இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் மிஷனரிப் பணிகளில், பல
ஆதிவாசி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பாடப்படும் முதல் பாடலாக,
இப்பாடல் விளங்குகிறது.

தமிழகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகளில், மிகச்
சிறந்ததாக இப்பாடல் கணிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட புகழ்பெற்ற இப்பாடலை எழுதியவர், நெய்யூரைச் சேர்ந்த
யோசேப்புஆவார்.

தன் இளமைப் பருவத்திலேயே தன் உடன் பிறந்தோரையும், தன் தந்தையையும் இழந்த
அவர், பின்னர் தன் தாயையும் இழந்து அனாதையானார்.

இந்நிலையில், தன் பரம பிதாவையே நம்பி வாழ்ந்த யோசேப்பு, அவரை உரிமையோடு,
"தேவபிதா" என அழைத்து, இப்பாடலை எழுதியிருக்கிறார்.

இப்பாடலின் முக்கியத்துவம் என்னவெனில், இதின் அடிப்படையான 23-ம்
சங்கீதம், பலவித சூழ்நிலைகளிலும் உபயோகிக்கப்படுவது போல, இப்பாடலும்,
திருமணம் போன்ற சந்தோஷ நிகழ்ச்சிகளில், தேவ அருளைப் பெற வேண்டிப்
பாடுவதற்கும், துயருற்றுக் கலங்கிநிற்கும் வேளைகளிலும், அருமையானவர்களை
இழந்து தவிக்கும் வேளைகளிலும் ஆறுதல் பெறப் பாடுவதற்கும் ஏற்ற தகுதி
நிறைந்ததாக விளங்குகிறது.

எனவே, இப்பாடல், பலதரப்பட்ட மக்களும், பற்பல மொழிகளில், இவ்வுலக வாழ்வின்
பல்வேறு சூழ்நிலைகளிலும், நிகழ்ச்சிகளிலும், விரும்பிப் பாடும் சிறப்புப்
பாடலாகத் தனிச்சிறப்புப்
பெற்றிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.