5000 பேரை போஷித்த நிகழ்ச்சியில் குறைந்தது இரண்டு பாடங்களை நாம் தெளிவாக
கற்றுக்கொள்ள முடியும்.
முதலாவதாக,.
கொஞ்சமாயிருந்தாலும் அது தேவனால்
ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் நம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய
"அந்த கொஞ்சம்"
போதுமானதாயிருக்கும்!
இரண்டாவதாக,
வீணாக்கப்படுவதைதேவன் வெறுக்கிறார். அந்த அப்பத்திலும், மீனிலும் ஒன்றும்
வீணாகாதபடி மீதியான துணிக்கைகளை சேர்க்கும்படி இயேசு தன் சீஷர்களிடம்
கூறினார்.
குறைவான அப்பத்தையும், மீனையும் கொண்டு சம்பூர்ணமாய் பெருகச் செய்த தன் பிதாவின்
செயலினிமித்தம், அந்த மலையடி வாரத்தில் சிதறி விழுந்த துணிக்கைகளை ஒரு
பொருட்டாய் எண்ணாமல் வீணாக விட்டுவிடும்படியான மனப்பாங்கை இயேசு
கொண்டிருந்திருக்க முடியும்.
ஆனால், அவரோ அப்படிச் செய்யவில்லை! தேவன் நம்மை அபரிதமாய்
ஆசீர்வதித்திருக்கிறார் என்பதற்காக நம்முடைய செலவீனங்களில் கவனம் செலுத்த
தேவையில்லை என்பது பொருளாகாது!
ஒரு பொருள் லேசாக உடைந்ததினிமித்தம் அதை நீங்கள் தூக்கி எறிகிறீர்களா?
இதுவே ஐசுவரியவான்களின் மனப்பாங்காயிருக்கிறது.
ஒரு தேவபக்தி கொண்ட மனுஷனோ உடைந்த அந்த பகுதியை பழுது நீக்கி, மீண்டும்
உபயோகித்திடவே முயற்சிப்பான்.
இதுபோன்ற சிறு விஷயங்களுக்கெல்லாம் "ஆவிக்குரிய உணர்வு" தேவையில்லை என்று
நீங்கள் எண்ணுகிறீர்களா?
ஆம், இவ்வித சிறு விஷயங்களிலும் ஒருவனின் ஆவிக்குரிய தன்மை
சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகின்றது!
இயேசுவின்
சீஷர்களாயிருக்கும் நாம், நம்முடைய செலவு செய்யும் பழக்கத்தில் ஓர்
கட்டுப்பாடு கொண்டவர்களாயிருக்க வேண்டும்.
ஒரு வீட்டிற்கு கணவராய் இருப்பவரே, அந்த வீட்டிற்குரிய
பொருளாதாரத்தை கையாளுகிறவராயிருக்க வேண்டும்.
தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொள்வது அவருடைய
பொறுப்பேயாகும்! தன் மனைவி வாங்க விரும்பும் பொருட்களை "பணம் கொடுத்து
வாங்க முடியாத தன் குடும்ப சூழ்நிலையை" அவளுக்கு அவன் விவரித்துக்
கூறவேண்டும்!
கொஞ்சத்தில்
உண்மையாயிருப்பவர்கள் மாத்திரமே அதிகத்திலும் உண்மையாயிருப்பார்கள்.
தேவன் வகுத்த இந்த அடிப்படை கோட்பாட்டை சற்று கவனித்து வாசியுங்கள் :
கொஞ்சத்தில்
உண்மையாயிராவிட்டாலும், உலகப் பொருட்களில் உண்மையாயிராவிட்டாலும், தேவன்
ஒருபோதும் நமக்கு மெய்யான ஐசுவரியத்தை தரமாட்டார். . . அந்த ஐசுவரியம்
தேவனுடைய வார்த்தையில் வெளிப்பாடும், அவருடைய திவ்விய சுபாவத்தின்
ஐசுவரியங்களுமேயாகும்!!
நாம் ஆவிக்குரிய வளர்ச்சி பெறவேண்டுமென்றால், நாம் எதையும் வீணாக்காமல்
இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்!
நீங்கள் தேவனுடைய உத்தம ஊழியக்காரனாய் இருக்க விரும்பினால் தேவையில்லாத
பொருட்களை வாங்கி பணத்தை வீணாக்காதீர்கள்!
ஆடம்பர உணவிற்காகவோ அல்லது பகட்டான வாழ்விற்காகவோ பணத்தை வீணாக்காதீர்கள்!
'இன்னமும் உபயோகித்திட முடியும்' எனக் கருதும் பொருட்களை சீக்கிரத்தில்
தூக்கி எறிந்து விடாதீர்கள்.
ஒருவேளை உங்களுக்கு அது தேவையில்லாதிருந்தால் ஏழை ஜனங்களுக்காவது அதை
இலவசமாய் கொடுங்கள்!
இவ்வாறு, வீணாக்காத உத்தமமே, நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு
கைக்கொடுக்கும் அடிகோலியாய் இருக்கிறது!!