குட்டையான, குண்டான உருவம், குழாய் புகைப்பான், புசுபுசுவென்ற வெண்மையான
ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட் உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு
குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி
தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா....
இதுதான் "ஸாண்ட்ட கிளாஸ்!"
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட
கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு
உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத் துவங்கிவிட்டார்!
சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள்
குதூகலித்துக் கொள்வதை நாமறிவோம்!
உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத
குழந்தைகளே இல்லை எனலாம்.
17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் (Dutch) இனத்தவர்
சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்ட கிளாசாக
வலம் வரத் துவங்கினார். டச்சு இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை
அறிமுகப்படுத்திய போது புனித நிக்கோலஸ் பிஷப் ஆக யிருந்தபோது அவர்அணிந்த
சிவப்பு அங்கி போன்ற டையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும்
அறிமுகம் செய்தனர்.
அதுவே சில மாற்றங்களுடன் பின்னர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.
அதாவது 1773ல் அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் "St. A Claus," என்று
பிரசுரிக்கப்பட்டது. ஆனால் 1809ல் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன்
இர்விங் செயிண்ட் நிக்கோலஸ் தான் சாண்ட்ட கிளாஸ் என்பதை பல்வேறு
ஆதாரங்களோடு சுட்டுகின்றார். "நியூயார்க்கின் வரலாறு என்ற அவரின்
புத்தகம் டச்சு-அமெரிக்கன் செயிண்ட் நிக் எப்படி சாண்ட்டாவாக
ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தெளிவுபடக் கூறியுள்ளார்..
Night Before Christmas ஐ எழுதிய கிளமெண்ட் க்ளார்க் மூர்தான்
ரெயிண்டீர், சண்ட்ட கிளாஸ் வர்ணணைகளைப் பற்றி எழுதினார் என்றாலும்
1860லிருந்து 1880 வரை வெளி வந்து கொண்டிருந்த ஹார்ப்பெர் வாராந்திர
சஞ்சிகையின் கிறிஸ்மஸ் சிறப்பு வெளியீட்டில் தாமஸ் நாஸ் ( Thomas Nast )
சாண்ட்ட கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பது, குழந்தைகள் விரும்பி என்பது
உட்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு எழுதினார்.
1931ல் Coca-Cola நிறுவனம் சாண்ட்ட கிளாஸ் தொடர் விளம்பரங்கள் படக்கதை
போல வெளியிட்டது.
நிக்கோலஸ் வரும் இரவு, குழந்தைகள் ஒரு சிறு புல் கட்டு அல்லது வைக்கோல்
கட்டு ஒன்றை அவரது குதிரைக்காகவும் அவர்களுடைய காலணிகளை வீட்டின் நுழைவு
வாயிலுக்கு வெளியே வைத்துவிடுவார்கள். ( இப்போதெல்லாம் தங்கள் பரிசுப்
பொருட்களை சாண்ட்டா விட்டுச் செல்ல கிறிஸ்மஸ் மரத்தில் பெரிய காலுறைகளை
தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்! )
காலையில் எழுந்து பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வைத்திருந்த
புற்கட்டு மாயமாய் மறைந்திருப்பதையும் அவர்கள் காலணியில் இனிப்புகள்,
உண்ணும் பருப்பு வகைகள், பரிசுகள் என்றிருப்பதைக் காண்பார்கள். இரவு
நிக்கோலஸ் வைத்து விட்டுச் சென்றதாக குழந்தைகள் நம்பி மகிழ்வது வழக்கம்.
நள்ளிரவில் வைக்கோலை அகற்றி அனைத்தையும் அவர்களின் பெற்றோர்கள் வைப்பது
மட்டும் பரம ரகசியமாகவே இருக்கும்!
ஜெர்மனியில் புனித.நிக்கோலஸ் ஒரு உதவியாளரோடு பரிசுப்பொருட்களை ஒரு
கோணிப்பையில் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு வினியோகிக்கும் பழக்கம்
இருந்திருக்கின்றது. நல்ல குழந்தைகளுக்கு புனித நிக்கோலஸ் பரிசுகள்
கொடுப்பதும், பெற்றோர்களுக்கு கீழ்படியாத குழந்தைகளுக்கு உடன் வரும்
உதவியாளர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் மெல்லச் சில அடிகள்
கொடுத்து எச்சரிக்கையாக இருந்தால் அடுத்த ஆண்டு நிக்கோலசின் பரிசு
கிடைக்கும் என்று சொல்வதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.
இத்தாலியில் லா பெஃபானா என்ற நல்ல சூனியக்காரி உடல் முழுக்க கறுப்பு உடை
அணிந்து சனவரி 6ம் தேதியன்று (Epiphany) குழந்தைகளுக்கு பரிசுகள்
அளிக்கும் வழக்கம் காணப்பட்டிருக்கின்றது. ஸ்பானிஷ் பேசும் நாடுகளான தென்
அமெரிக்கா, போர்ட்டோ ரிக்கோ, மெக்சிக்கோ ஆகிய நாட்டுக் குழந்தைகள் மூன்று
ராஜாக்கள் தங்களுக்கு வெகுமதிகளைக் கொண்டு தருவதற்காகக்
காத்திருப்பார்கள்.
பிரான்சில் கிறிஸ்மஸ் தந்தை அல்லது பெரி நோயல் (Pere Noe) குழந்தைகளுக்கு
பரிசுகள் கொடுப்பதும், சுவிட்சர்லாந்தில் குழந்தை யேசுவே பரிசுகள்
அளிப்பதாகவும் சில நகர்புறங்களில் தேவதைச் சிறுமி வானகத்திலிருந்து
இறங்கி வந்து பரிசுகள் கொடுப்பதாகவும் பழக்கம் உள்ளது. ஸ்காண்டிநேவியன்
நாடுகளில் யூலிநிஸ்ஸே (julenisse) என்ற மாய உருவம் பரிசுகள்
அளிப்பதாகவும், இங்கிலாந்தில் சாண்ட கிளாஸ் பரிசுகள் அளிப்பதாகவும்,
அமெரிக்காவில் எட்டு ரெயிண்டீர் இழுத்துச் செல்லும் ரதத்தில் அமர்ந்து
சாண்ட்ட கிளாஸ் பவனியாக வந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிச்
செல்வதாகவும் இன்றளவும் நிலவி வருகின்ற பழக்கமாகும்!
புனித நிக்கோலஸ் !
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்
படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்துமஸ்சும்
ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து
அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித
நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம்
என்று சொல்லவேண்டும்.
(தொடரும்....)