002 -- அப்போஸ்தலர் 01:01-02

அப்போஸ்தலர் 1:1-2

1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப்
பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு,

2 அவர்
எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின
எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.

அநேக மனிதர்கள் அநேக நூல்களை
எழுதியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் ஒன்றாக அடுக்கி வைத்தால் மிகவும்
பெரிய உயர்ந்த மலைபோல அவை குவிந்துவிடும். ஒரு நாளில் அவை அனைத்தும்
இறைவனுடைய கோபத்தின் சுவாலையினால் சுட்டெரிக்கப்படும், ஏனெனில்
மனிதர்களுடைய வார்த்தைகள்
மதிப்பற்றவைகளும், பெருமையுள்ளவைகளும், வெறுமையானவைகளு
மாகவே இருக்கின்றன.

ஆனால் மருத்துவனாகிய லூக்கா எழுதிய இரண்டு நூல்களும் நியாயத்தீர்ப்பு
நாளில் சூரியனைவிட அதிகமாக ஒளிரும். அவைகள் ஒருபோதும் அழிந்து போகாமல்
இறைவனுடைய சிம்மாசனத்திற்கு முன்பாக எழுந்தருளும்.

நற்செய்தியாளனாகிய லூக்கா தன்னுடைய நற்செய்தி நூலில் கிறிஸ்துவின்
வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்கியிருக்கிறார்.

கிறிஸ்துவின் வார்த்தைகளை எழுதுவதற்கு முன்பாகவே லூக்கா அவருடைய
செயல்களைப் பற்றி எழுதியிருக்கிறார். காரணம் கிறிஸ்து போதகராக மட்டும்
இவ்வுலகத்திற்கு வராமல் இந்த முழு உலகத்தின் இரட்சகராகவும் வந்தார்.

நற்செய்தியாளன் அவரை மகிமைப்படுத்த விரும்பினார். இயேசுவின் முன்பு
பாவிகள் எவ்வாறு தங்கள் பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டு, கர்த்தருடைய
கிருபையின் மேல் உள்ள விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டார்கள் என்பதை
அவர் காண்பித்திருக்கிறார்.

கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட அந்தத் திருடனும் அவரோடு
பரதீசுக்குச் சென்றபோது இதையே அனுபவித்தார்.

லூக்காவின் நற்செய்தி நூல் மாபெரும் மகிழ்ச்சியின் நூலாகும். மாட்டுத்
தொழுவத்தில் கிறிஸ்து குழந்தையாகப் பிறந்தபோது, இந்த மகிழ்ச்சியான
செய்தியை ஒரு வானதூதன் வந்து அறிவித்தான்.

இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும் கர்த்தர் தாமே மனுவுருவில்
தோன்றினார். லூக்காவினுடைய இந்த நற்செய்தியினால் அநேக மக்கள் விடுதலையைப்
பெற்றிருக்கிறார்கள் என்று நாம் இன்று இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நற்செய்தி நூலின் எழுத்துக்களிலிருந்து விசுவாசிகளுடைய
சிந்தைக்குள்ளும் இருதயத்திற்குள்ளும் முடிவற்ற வாழ்வின் வல்லமை
பாய்ந்தோடுகிறது.

ரோம அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகிய தியோப்பிலு கிறிஸ்து தரும் இந்த
விடுதலையின் அனுபவத்தைப் பெற்றிருந்தார். அதனால்தான் அவர் நாசரேத்து
இயேசுவினுடைய வாழ்வைக் குறித்த விவரங்களைச் சேகரித்து ரோமப் பேரரசின்
காலத்தில் நடைபெற்ற விடுதலையின் நற்செய்தியைக் குறித்த துல்லியமான
வரலாற்றை எழுதும்படி தன்னுடைய நண்பரும் மருத்துவருமாகிய
லூக்காவினிடத்தில் பணித்தார்.

அந்த ரோம ஆளுநர் வெறும் உணர்வுபூர்வமான காரியங்களோடு திருப்தியடையாமல்
தன்னுடைய உயிருள்ள விசுவாசத்தின் வரலாற்று ஆதாரத்தை அறிந்துகொள்ள
விரும்பினார். அந்த அதிகாரி தன்னுடைய ஆன்மீக வாழ்வில் நிலைபெற்று, ரோமப்
பேரரசின் ஒரு முக்கியமான சேவகனாக இருக்கும் அவர் ஒரு விசுவாசியாக
நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கல்வி அறிவுடையவராயிருந்த லூக்கா இந்த
இரண்டு நூல்களையும் அவருக்கு எழுதுகிறார்.

பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நம்முடைய உலகத்திற்கு
உயிருள்ளவராகிய இயேசு கிறிஸ்துவாலே அன்றி வேறெங்கும் நம்பிக்கை இல்லை
என்று லூக்கா அவருக்குச் சாட்சி கொடுத்தார்.

நம்முடைய உலகத்தில் இருக்கும் நாடுகள் அனைத்தும் அழிந்து போகும். தங்கள்
அறிவைக் குறித்த ஆதாரங்களை
முன்வைத்தாலும் அனைத்துத் தத்துவ ஞானிகளும் பயனற்றவர்களே.

மாபெரும்
சிந்தனையாளர்களுடைய அறிவையோ, பெரும் பலம் கொண்ட இராணுவத்தையோ நம்பி
இறைவன் தம்முடைய அரசைக் கட்டாமல் சாதாரண மனிதர்களாக இருந்த கல்வி அறிவற்ற
மீனவர்களை அப்போஸ்தலராக அழைத்து, அவர்கள் மூலம் தம்முடைய அரசை
நிறுவினார்.

எளிமையானவர்களையும் சமூகத்தில் தாழ்வான நிலையில் உள்ளவர்களையும்
தெரிந்துகொண்டதன் மூலம் இவ்வுலகத்தில் மேன்மையானவர்களையும்,
பெலமுள்ளவர்களையும், புத்திமான்களையும் இறைவன் புறக்கணிக்கிறார்.

பெருமையுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்.
தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபை அளிக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.