கிறித்தவத் திருச்சபை (Christian Church) என்பது கிறித்துவ மதத்தில்
கிறித்துவ விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும். புதிய ஏற்பாட்டில்
இச்சொல் (ἐκκλησία) தல விசுவாசிகளையும், அகில உலக விசுவாசிகளையும்
குறிக்க பயன்படுத்தப் பட்டிருக்கின்றது.
சொல் பிறப்பு:-
திருச்சபை எனும் வார்த்தை தொன்தமிழ் வார்த்தையான 'ஓலக்கம்' என்பதின்
பொருளாகவும், கிரேக்க வார்த்தை (கிரேக்கம்:kyriakon (κυριακόν)) என்பதின்
மொழிபெயர்ப்புப் பொருளாகவும் பயன்படுத்தப் படுகின்றது.
"கடவுளுக்கு உரியது" எனும் பொருள்படும் வார்த்தை. திரு என்பது
'புனிதத்தை'யும் சபை என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு
சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது.
இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்றும்
பொருள் கொள்ளலாம்.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க
வழிமரபு) சபை மட்டுமே திருச்சபையாகும் என நைசின் விசுவாச அறிக்கை
கூறுகின்றது. இவை நான்கையும் திருச்சபையின் நான்கு அடையாளங்கள் என அது
கூறுகின்றது. ஆகவே அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை
திருச்சபைகளாக ஏற்பதில்லை. என்றாலும் அப்போஸ்தலிக்க வழிமரபு என்பது யாது
என்பதிலும் அதன் அவசியத்திலும் கிறித்தவ பிரிவுகளிடையே ஒத்த கருத்தில்லை.
கிரேக்க பதமான ἐκκλησία (ஒலிப்பு:எக்லீசியா), என்பது ஏதேனும் ஒரு
அவையினைக்குறிக்கும் சொல் ஆகும், ஆயினும் பெரும்பான்மையான விவிலிய மொழி
பெயர்ப்புகளில் இப்பதம் திருச்சபை எனவே பெயர்க்கப்பட்டுள்ளது.
இப்பதம்
2 முறை மத்தேயு நற்செய்தியிலும்,
24 முறை அப்போஸ்தலர் நடபடிகள் நூலிலும்,
58 முறை பவுலின் நிருபங்களிலும்,
2 முறை எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலும்,
ஒரு முறை யாக்கோபு நிருபத்திலும்,
3 முறை யோவானின் நிருபங்களிலும்,
19 முறை திருவெளிப்பாட்டிலும் இடம் பெறுகின்றது.
ஆக மொத்தம் புதிய ஏற்ப்பாட்டில் 114 முறை இப்பதம் இடம் பெருகின்றது.