யாரைச் சேவிப்பீர்கள்? (சிறு கதை)

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை
யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். -யோசுவா-24:15.

ஒரு வாலிபன் தான் படித்து முடித்தவுடன் ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் இருந்தான்.

அவனுக்கு ஆயிரம் கனவுகள் இருந்தன. ஆயிரம் தேவைகள் இருந்தன. அந்த கனவுகளை
எப்படி நனவாக்குவது என்று அறியாமல் தன் வருங்காலத்தை எப்படி உருவாக்குவது
என்று சிந்தித்து கொண்டிருந்தான். சிறுவயது முதல் வேதத்தை வாசித்து
வந்திருந்தான்.

அவனிடம் இரண்டு பேர் வந்தார்கள். ஒருவன் அவனிடம் 'என்னோடு வா. உனக்கு
நிறைய பணம் தருகிறேன், நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள், உனக்கு பேர் புகழ்
உண்டாக செய்கிறேன்' என்று ஆசை வார்த்தைகளை கூறினான். அதை கேட்டபோது
அவனுக்கு ஆசையாக இருந்தது. அவனோடு போய் விடலாம் என்று. தான் விரும்பும்
அத்தனையும் கிடைப்பது போல இருந்தது. தன் கனவுகள் நிறைவேறும் நாட்கள்
அருகில் இருப்பது போல தோன்றிற்று.

மற்றவரோ அவனிடம் பொறுமையாக, ' என்னோடு வந்தால் உனக்கு பொன்னும் பொருளும்
ஒருவேளை இருக்காது. நீ நிறைய தியாகம் செய்ய வேண்டி வரும். என்
நாமத்தினிமித்தம் வேதனைகளையும் பாடுகளையும் அனுபவிக்க வேண்டி வரும்.
ஆனால் உன்னுடைய தியாகத்திற்கும் வேதனைகளுக்கும் ஏற்ற பலன் என்னிடம்
உண்டு. என்னோடு வருவாயா?' என்றுக் கேட்டார்.

அந்த வாலிபன் இரண்டு பேரின் கண்களையும் பார்த்தான். முதலாவது நபரின்
கண்களில் குரூரம் தெரிந்தது. மற்றவரின் கண்களில் கனிவும் பரிவும்
தெரிந்தன. இரண்டாவது நபரையே அவன் தெரிந்துக் கொண்டு அவருடன் சென்றான்.

அவன் வாழ்வில் அவரின் மூலம் நிறைய கற்று கொண்டான். அவரையே தன் வாழ்வில்
தலைவராக கொண்டு செயல்பட்டான். அவன் வாழ்வு மலர்ந்தது. அவர் சொன்னார், 'நீ
என்னோடு பாடுபட்டால் நீ என்னோடு கூட ஆளுகையும் செய்வாய்' என்று.

ஒரு வேளை அவன் மற்றவனை தெரிந்து கொண்டிருந்தால், இந்த உலகத்தில் அவனுக்கு
பெயர் புகழ் கிடைத்திருக்கும், ஏராளமான நண்பர்கள் கிடைத்திருப்பார்கள்.
ஆனால் அவனை வழிவிலக செய்திருப்பார்கள். நித்திய நரகத்திற்கு ஏதுவாக அவன்
வாழ்ந்திருப்பான்.

இந்த உலகத்தில் காண்கிற உலக புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று
பெயர் பெற்றவர்களின் முடிவு எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை நாம்
அறிந்திருக்கிறோம். எவ்வளவோ பணம் உண்டு, புகழ் உண்டு, கேட்டதெல்லாம்
உடனுக்குடன் கிடைத்ததுண்டு. எல்லாம் இருந்தும் அவர்கள் வாழ்வில் எல்லாமே
வெறுமைதான். எல்லாம் இருந்தும் கிறிஸ்து அவர்கள் வாழ்வில் இல்லாததால்
அவர்கள் வேண்டுகிற சமாதானம் இல்லை. அதனால்தான் தற்கொலை செய்து
சாகிறார்கள். உதாரணத்திற்கு ராபின் வில்லியம்ஸ். அவருக்கு புகழ்
இருந்தது. பணம் இருந்தது. எல்லாரையும் சிரிக்க வைத்தார். ஆனால் அவர்
அப்படிப்பட்ட தவறான தற்கொலை முடிவை எடுப்பார் என்று யாருமே
சிந்தித்ததில்லை.அந்த மனிதர் கிறிஸ்துவை அறிந்திருந்தாரானால் எத்தனை
நலமாயிருந்திருக்கும்!

ஆனால் கர்த்தரை பின்பற்றுகிறவர்களுக்கோ, பொன்னும் பொருளும்
இல்லையென்றாலும், கர்த்தர் கொடுக்கிற சமாதானம் அவர்கள் இருதயத்தில்
ஆளுகிறபடியால் அவர்கள் இப்படிப்பட்ட தவறான முடிவிற்கு ஒருபோதும் வர
மாட்டார்கள். கர்த்தர் அவர்களோடு இருப்பதால் இந்த உலகத்தின் காரியங்களில்
அவர்களுக்கு வெற்றி உண்டு என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் அவர்களுக்கு
நித்திய நம்பிக்கை உண்டு.

இந்த நாளில் நாம் யாரை தெரிந்துக் கொள்வோம்? பணம், புகழ், நண்பர்கள்
என்று உலகத்தின் மேன்மைகளை காட்டி நம்மை தன் பக்கம் இழுக்கும்
சாத்தானையா?

தம் தியாகத்தினால், தம் சொந்த இரத்தத்தையே சிந்தி நம்மை கிரயமாக கொண்ட
கிறிஸ்துவையா? ஒருவேளை கிறிஸ்தவ வாழ்க்கை ரோஜாப்பூ படுக்கை அல்ல
என்றாலும், கிறிஸ்து நம்மோடு இருப்பதால் இவ்வுலக பாடுகள் நம்மை எதுவும்
செய்ய முடியாது என்பதையும், உலகம் தரக்கூடாத சமாதானத்தினால் அவர் நம்மை
நிரப்பி நடத்துகிறார் என்பதையும் மறுக்க முடியாதல்லவா? பாடுகள் வேதனைகள்
மத்தியில் அவற்றிலிருந்து நமக்கு விடுதலை தரும் தேவன் நம் பக்கம் உண்டு.
நம் கண்ணீரை காண்கிற தேவன் ஒருவர் உண்டு, வேதனை அறிகிறவர், கதறலை
கேட்கிறவர் உண்டு. அதற்கு பதிலை கொடுத்து ஆற்றி தேற்றுகிறவர் உண்டு
என்பதை நாம் மறுக்க முடியாது.

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை
யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா!

கர்த்தரையே சேவிப்பது
ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாயென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா நீயும் சேவிப்பாயா?
ஆமென்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.