இயேசுவின் பணியோடு தொடர்புடைய தனித்தனி இடங்கள் பாகம் 1

அ) கலிலேயா பிரதேசம்:-

1) அயினோன்:-

இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடமாக "அயினோன்" குறிக்கப்படுகிறது (யோவான்
3:23). "யோவானும் சாலேம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில்
ஞானஸ்தானம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது" என்கிறது யோவான் நற்செய்தி.
அங்குதான் இயேசு யோவான் ஸ்நானன் கைகளால் ஞானஸ்நானம் பெற்றார்.

2) பெத்சய்தா:-

"பெத்சய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்" என்று மாற்கு 8:22-26 பகுதி
எடுத்துரைக்கிறது.

3) கானா:-

யோவான் நற்செய்தி 2:1-11 பகுதியில் "கானாவில் திருமணம்"
விவரிக்கப்படுகிறது. இங்கேதான் இயேசு முதல் அற்புதம் ("அரும் அடையாளம்")
நிகழ்த்தியதாக யோவான் குறிப்பிடுகிறார்.

4) கப்பர்நாகும்:-

இயேசு ஞானஸ்நானம் பெற்றபின் கப்பர்நாகும் ஊரிலுள்ள ஜெப ஆலயம் சென்று
போதித்தது அவருடைய பணிக் காலத்தின் தொடக்கமாக அமைகிறது (காண்க: மாற்கு
1:21-28).

நற்செய்தி நூல்களில் கப்பர்நாகும் ஊர் 17 தடவை குறிக்கப்படுகிறது. அங்கு
இயேசு புரிந்த அற்புதங்களாகவும் போதனைகளாகவும் குறிக்கப்படுபவை:

இயேசு "மனம் திரும்புங்கள். ஏனெனில் பரலோகராஜ்ஜியம் நெருங்கி
வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கியது (மத்தேயு 4:12-17),

இயேசு அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதருக்கு விடுதலை அளித்தது (மாற்கு 1:21-28),

இயேசு சீமோன் பேதுருவின் மாமியாருக்குக் குணமளித்தது (மாற்கு 1:29-31),

நூற்றுவர் தலைவரின் பணியாளருக்கு இயேசு குணம் நல்கியது (லூக்கா 7),

இயேசு "ஜீவ அப்பம் நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இருக்காது"
(யோவான் 6:35) என்று போதனை வழங்கியது போன்றவை.

5) கொராசின்:-

இயேசுவின் போதனையை ஏற்று மனம் திருந்தாத நகரங்களுள் ஒன்றாக "கொராசின்"
குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 11:23; லூக்கா 10:13-15).

6) கெனசரேத்து:-

கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்பட்ட
நீர்த்தேக்கத்திற்கு வடமேற்காக அமைந்திருந்த ஊர் கெனசரேத்து ஆகும். அந்த
ஊர் இன்று அழிந்துபோயிற்று. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று
ஆசிரியரான பிளாவியசு யோசேபஸ் என்பவர் கூற்றுப்படி, கெனசரேத்து மிகவும்
வளமான நிலப்பகுதியாக இருந்தது.

இந்நகர் கப்பர்நாகும் நகருக்கும் மகதலா நகருக்கும் இடையே சம தூரத்தில்
இருந்திருக்கலாம். இயேசு கெனசரேத்து பகுதியில் மக்களுக்குக் குணமளித்த
நிகழ்ச்சி மத்தேயு 14:34-36, மாற்கு 6:53-36 பகுதிகளில்
குறிப்பிடப்படுகிறது.

7) இயேசுவின் மறுரூப மலை:-

இம்மலை எந்த இடத்தில் இருந்தது என்பதைத் தெளிவாக அடையாளம்
காணமுடியவில்லை. இது "தாபோர்" மலையாக இருந்திருக்கலாம் என்று பல அறிஞர்
கருதுகின்றனர்.

8) நயீன்:-

நயீன் ஊரைச் சேர்ந்த ஒரு கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்துபோனார்.
இறந்தவருக்கு உயிரளித்தார் இயேசு. இந்நிகழ்ச்சி லூக்கா 7:11-17 பகுதியில்
உள்ளது.

இறந்தோருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சிகள் நற்செய்திகளில் மூன்று
இடங்களில் வருகின்றன. அவற்றுள் முதல் நிகழ்ச்சி இது.

9) நாசரேத்து:-

இயேசுவின் பெற்றோரான யோசேப்பும் மரியாவும், குழந்தை இயேசுவை ஏரோது
கொல்லத் தேடியதை அறிந்து அவரைப் பாதுகாக்கும் வண்ணம் எகிப்துக்கு
ஓடிப்போனார்கள். சில ஆண்டுகளுக்குப் பின்னர் கலிலேயாப் பகுதிக்குத்
திரும்பிவந்து அங்கே நாசரேத்து என்ற ஊரில் குடியேறினார்கள் (மத்தேயு
2:16-23).

இயேசு தம் இளமைப் பருவத்தை நாசரேத்து என்னும் ஊரில் கழித்தார். அங்கு
வாழ்ந்த போதுதான் இயேசு எருசலேம் ஆலயத்திற்க்கு விழாக் கொண்டாடப் போன
இடத்தில் தம் பெற்றோரான யோசேப்பையும் மரியாவையும் விட்டு ஆலயத்திலிலேயே
தங்கிவிட்டார். மகனைக் காணாத பெற்றோர் பின்னர் ஆலயத்தில் அவரைக்
கண்டுபிடித்தார்கள். இந்நிகழ்ச்சியை லூக்கா 2:41-52 விவரிக்கிறது.

10) கலிலேயக் கடல்:-

கலிலேயக் கடல் அல்லது கெனசரேத்து ஏரி என்னும் பெரிய நீர்த்தேக்கம் புதிய
ஏற்பாட்டில் இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை
பலமுறை குறிக்கப்படுகிறது.

இயேசு தம் முதல் சீடர்களை அழைத்தது இந்த ஏரிக் கரையில்தான். இந்நிகழ்ச்சி
மாற்கு 1:16-20; மத்தேயு 4:18-22, லூக்கா 5:1-11 ஆகிய பகுதிகளில்
குறிக்கப்பட்டுள்ளது.

இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின் தம் சீடர்களுக்கு இந்த
ஏரிக்கரையில் தோன்றிய நிகழ்ச்சியை யோவான் பதிவுசெய்துள்ளார் (யோவான்
21:1-14).

முந்தைய பதிப்புகளுக்கு
http://bibletreasure.wapka.mobi

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.