என்னை தேடி 1

 என்னை தேடி 1

அறிமுகம்

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; எரேமியா 1:5

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர்... எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர்,… மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; அப்போஸ்தலர் 17:24-26


என்னுடைய பெயர் க.வெங்கடேஷ். சென்னையில் ஒரு இந்துப் பாரம்பரியக் குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். தற்போது நானும், தேவன் அருளிய எனது மனைவியும், தேவ கிருபையால் பெற்ற மூன்று பிள்ளைகளுடன் (சாமுவேல்-- 9வயது, யோசுவா மோசே-- 4.5வயது, எப்சிபா-- 3வயது.) அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஆல்பனியில் (NewYork, Albany) குடும்பமாக வசித்து வருகிறோம்.

திரியேக தேவனால் உலகத் தோற்றத்திற்கு முன்பதாகவே, என்னைக்குறித்து முன்தீர்மானிக்கப்பட்டபடியே, நான் பெற்ற இரட்சிப்பின் பேரின்ப சந்தோஷத்தின் அனுபவத்தை உங்களுடன் ஜீவனுள்ள சாட்சியாக பகிர்ந்துக்கொள்ள ஆசீக்கின்றேன்.

இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்குட்பட்ட அம்பத்தூர் மாநகராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கள்ளிக்குப்பம் என்ற ஒரு சிறிய ஊரில் பிறந்தேன். பெற்றோர்கள் எனக்கிட்ட பெயர் வெங்கடெஷ். தந்தையின் பெயர் திரு. கணேசன், சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்-இல் ஒரு தொழிலாளியாய் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் என்றபோதிலும் மூன்றாம் வகுப்பிற்குமேல் கல்வி பயிலவில்லை. தாயார் பெயர் திருமதி. சிங்காரி பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பை முற்றிலும் இழந்தவர். இளைய மற்றும் மூத்த சகோதிரி என இரண்டு உடன்பிறப்புகள். இருப்பினும், என்னை நன்றாக படிக்க வைத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரவேண்டுமென்ற ஆர்வத்தில், சிறுவயதிலிருந்தே ஆங்கிலவழிக் கல்வி பயிலும் வாய்ப்பை என்னுடைய பெற்றோர்கள் ஏற்படுத்தி தந்தார்கள்.

தமிழ் எழுத்தறிவேயில்லாத குடும்ப சூழ்நிலையில், ஆங்கிலவழிக் கல்வியின் வீட்டுப் பாடங்களை எப்படி தன்னுடைய பிள்ளைக்கு வீட்டில் சொல்லி தரமுடியும் என்று மனதில் அங்கலாயித்துக் கொண்டிருந்தவேலையில், என்னுடைய பெற்றோர்களின் கனவுகள் நிஜமாகும்படி, தேவன் ஒரு படித்த கிறிஸ்துவ குடும்பத்தை எங்கள் வீட்டீன் அருகாமையில் ஏற்கெனவே ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2

சின்னஞ் சிறுவயதில்
பள்ளியின் ஆரம்ப நாட்களிலிருந்தே, மாலை நேரங்களில், என்னுடைய வீட்டுப் பாடங்களை அந்த கிறிஸ்துவ வீட்டீற்கு சென்று டியுஷன் பயிலும்படி என் பெற்றோர்கள் என்னை வழிநடத்தினர். சிறுவயதிலிருந்தே நான் நன்றாக படித்து, என்ஞீனியர் ஆக வேண்டும் என்ற ஆசை என் தகப்பனாரின் மனதில் இருந்ததுண்டு. என்னுடைய தந்தை படிக்காததினால், தான் கடந்து போன பாதைகள், கஷ்டங்கள் நான் பெறக்கூடாது என்ற உணர்வில், வாய்ப்புகள் கிடைத்தால் என்னுடைய தகப்பனார் பனிபுரியும் ஐ.சி.எப்-இலேயே வேலை கிடைத்து அங்கு சூப்பர்வைசராகவோ அல்லது என்ஞீனியராகவோ வேலையில் அமர்த்தி பார்க்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை அடிக்கடி என்னிடத்தில் தெரிவித்து, என்னுடைய படிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததுமட்டுமின்றி என்னை நன்றாக படிக்குமாறு அறிவுறுத்துவார்.

சிறுவயதிலிருந்தே என்னுடைய எதிர்காலத்தைக் குறித்து எனக்கு எந்த ஒரு திட்டமும் இல்லையென்றாலும், நாளடைவில் என் தகப்பனாருடைய விருப்பமே என்னுடைய விருப்பமாய் மாறிற்று. இதுவே என்னை சென்னையில் உள்ள R.M.K பொறியியல் கல்லூரியில் சேர்ந்து B.E. Mechanical Engineering படிப்பை படிக்க தேர்ந்தெடுக்க செய்தது.

நான் பதினோரம் வகுப்பு படிக்கும் போதே, என்னுடைய தகப்பனாரின் விருப்பத்தின்படியே, எனக்கு ஐ.சி.எப்-இல் Apprentice வேலைக்கு தேர்வு எழுத விண்ணப்பம் செய்தார். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்ததும், அந்த வேலையில் போய் சேருமாரு என்னுடைய பெற்றோர்கள் வலியுறுத்தினபோதிலும், என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் (Nargis sir, John sir, Mani sir) என்னுடைய படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம் என்றும் மேல்நிலைப் படிப்பை (Highersecondary) முடித்து B.E. (பொறியியல்) படிக்குமாறு என்னை  உற்சாகப்படுத்தினார்கள். அவர்களுடைய ஆலோசனைகளின்படியே தொடர்ந்து மேல்நிலைப் படிப்பை தொடர்வதும், பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுதி, நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். எனது வீட்டாரும் அதற்கு சம்மதம் தெரிவித்து எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் என்னுடைய படிப்பிற்கு தடை வராதவண்ணம் என்னுடைய பெற்றோர்கள் காத்துக் கொண்டார்கள்.

கடினமாய் உழைத்து வந்த என்னுடைய தகப்பனார் ஒருவருடைய வருமானம், அந்தந்த மாதத்தின் வரவிற்கு ஏற்ற செலவாகி, எந்த ஒரு மீதமோ சேமிப்பு பணமுமில்லாமல், அந்தந்த மாதத்தின் சம்பளத்தை எதிர்பார்க்கும் குடும்பமாக இருந்த போதிலும், கடினமான சூழ்நிலையிலும் என்னைப் படிக்க வைக்கிறார்கள் என்ற அவர்களுடைய ஆர்வத்தையும், உணர்வையும், பணநெருக்கடிகளையும் சரியாய் புரிந்துக் கொண்டிருந்தும், எப்படியாவது நல்ல மதிப்பெண்களை எடுத்து அரசு நிர்ணியக்கும் (Govt. Free seat-இல்) நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தும், என்னுடைய முயற்சிகள் சில நேரங்களில் தோல்விப்படிகளாகவே காணப்பட்டது.

என்னுடைய வகுப்பில், நான் ஒரு Average student என்பதினால், சில சமயங்களில் சில பாடங்களில் பின்தங்கிய மாணவனாகக் காணப்படும்போது, நான் விரும்பும் பொறியியல் படிப்பு படிக்கமுடியுமா என்ற பய உணர்வு என்னைத் தாக்கியதுண்டு. இருப்பினும், என்னுடைய ஆசிரியர்களின் உற்சாகமும், அவர்களுடைய வழிநடத்துதலும், ஆலோசனைகளும், என்னுடைய பெற்றோர்களின் கண்டிப்பும், அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும் என்னை ஊக்கப்படுத்தியது. சக மாணவ நண்பர்களோடு நெருங்கி பழகினபோது, அவர்களுடைய எதிர்காலத்திட்டங்களையெல்லாம் அறிந்த நானும், அதிக ஊக்கமாய்ப் படித்தும், பண்ணிரெண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வில் நான் எடுத்த மதிப்பெண்கள் எனக்கும், என் ஆசிரியர்களுக்கும், என் குடும்பத்தாருக்கும் பெரிய அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் கொடுத்தது.

ஒரே குறிக்கோள
படித்தால் B.E. படிப்பு மட்டும் தான் படிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த நான், மற்ற எந்தக் கல்லூரியிலும் விண்ணப்பிக்காமால் துணிவாயிருந்தேன். அந்த நாட்களில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு (TNPCEE - Tamil Nadu Professional Course Entrance Examination) கட்டாயமாக எழுதவேண்டும். நுழைவுத்தேர்வில் வரும் மதிப்பெண்களும், பண்ணிரெண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வின் மதிப்பெண்களையும் வைத்து ஒரு கட்-ஆப் மார்க்கு கிடைக்கும். அந்த கட்-ஆப் மார்க்-ஐ வைத்து எந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று கவுன்சிலிங் மூலமாக நாம் தேர்வு செய்ய வேண்டும். (1996-ம் வருடத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 72 பொறியியல் கல்லூரிகள் இருந்தன). கட்-ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கல்லூரிகள் கிடைக்கும். நல்ல கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நல்ல பொறியியல் கல்லூரியில் அரசாங்கம் ஒதுக்கும் Free seat கிடைக்கும். சுமாரான கட்-ஆப் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு சாதாரண அல்லது புதிதாய் தொடங்கின கல்லூரியில் இடம் கிடைக்கும். ஒருவேலை அந்த வருடத்திற்கென நிர்ணியக்கப்படும் கட்-ஆப் மதிப்பெண்களுக்கும் குறைவாக எடுப்பவர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் Free seat கிடைக்காது.

அந்நாட்களில் அரசாங்கம் ஒதுக்கும் Free seatக்கான ஒரு வருடத்திற்குரிய Fees Rs.6,500/- Payment quotaக்கான ஒரு வருடத்திற்குரிய Fees Rs.32,500/. Free seat கிடைத்தால் மட்டும் என்னை பொறியியல் கல்லூரியில் படிக்க வைப்பார்கள் என்று நன்கு அறிந்த எனக்கு ஒரு வகையான பதற்றம். ஆர்வமும், ஆசையும் இருந்தாலும், பண்ணிரெண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வில் எடுத்த மார்க் குறைவாகிவிட்டதே, எப்படியும் TNPCEE நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. காரணம் TNPCEE நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது எளிதான காரியம் இல்லை. மிகவும் கடினம்தான்.

முதல் மாணவன் : முதல் பட்டதாரி
இந்த சூழ்நிலையில் TNPCEE நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தன. என்னுடைய வகுப்பு நண்பர்களுடன் ஆர்வத்துடன் சென்று மார்க்குப் பட்டியலைப் பார்த்த என்னகு 84.03% என்று வெளியிட்டிருந்ததை பார்த்து ஆச்சிரியமாக இருந்தது. என்னால் நம்பமுடியவில்லை. இந்த மதிப்பெண் என்னுடைய பள்ளியிலியே முதல் மாணவன் என்ற  இடத்தை பற்றிக்கொள்ளச் செய்தது. எனக்கு கிடைத்த கட்-ஆப் மதிப்பெண்படியே சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் (RMK Engineering College) படிப்பதற்கு அரசாங்கம் ஒதுக்கும் Free seat கிடைத்த செய்தி என்னுடைய குடும்பத்திற்கும் எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் அளவில்லா சந்தோஷத்தை ஏற்படுத்தியது. என்னுடைய குடும்பத்திற்கும் - குறிப்பாக என்னுடைய பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது. என்னுடைய தகப்பனாரின் விருப்பத்தின்படியேயும், அந்த நாட்களின் வேலை வாய்ப்பினையும் மனதிற்கொண்டு evergreen என்று சொல்லப்படும் Mechanical Engineering துறையை விரும்பி படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றேன்.

தேவ கிருபையே !

கல்லூரி என்ற வார்த்தையை காதில் கூட கேட்டறியாத எங்களது பாரம்பரியத்தில், அதுவும் ஆங்கில வழி மூலம் படித்து முதன்முதலாய் ஒரு பொறியியல் பட்டதாரியாய் எங்கள் தலைமுறையை தலைத்தூக்கி நிமிர்த்திவிட்டோம் என்ற பெருமை இல்லாமல் இருந்ததில்லை. தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்தது சென்னைப் பட்டணம்தான் என்றாலும், சென்னையிலுள்ள அண்ணாசாலைக்குகூட சரியாய் போக வழி தெரியாத எங்கள் பரம்பரையில், அமெரிக்கதேசம் வந்து அமர்ந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது எங்களது தலைமுறைகளிலோ, குடும்பத்திலோ யாருக்கும் கிடைக்காத அந்த பாக்கியம் எனக்கு கிடைத்ததின் நோக்கம் என்ன என்று ஆராய்ந்து பார்க்கும் வேலையில் அது தேவகிருபை என்று உறுதியாய் சாட்சியிடுவதில் என் மனம் தயங்கவில்லை. ஆம் அது தேவ கிருபையே !!! அது தேவ கிருபையே !!!

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; I சாமுவேல் 2:8

எல்லாமே தேவ கிருபைதான் என்று சாட்சியிடும் நான் அன்று (சிறுவயதில்) தேவபக்தியில்லதவனாய், தேவன் ஒருவர் உண்டு, தேவனைச் சார்ந்து வாழவேண்டும் என்ற உணர்வில்லாதவனாய் இருந்தது உண்மையே.

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். சங்கீதம் 14:1,2

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது, சங்கீதம் 19:1 என்பது வேதவார்த்தை.

இருப்பினும், நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன் என்பதினால், என்னுடைய பெற்றோர்கள், அவர்களுடைய முன்னோர்களின் பாரம்பரியமான இந்து மதத்தின் முறைமையின்படி விக்கிரகங்களையே தெய்வமாக கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜாதி, மதம் போன்றவைகளை அறிந்துக்கொள்ள அறியா பருவமாகக் காணப்பட்டாலும், அவர்களுடைய வழிபாடுகளை பின்பற்றுவதற்கு நானும் தயக்கம் காட்டவில்லை. இறைவனை இயற்கையில் தேடக்கூடாது என்றும், ஆவியாயிருக்கிற திரியேக தேவனை ஆவியிலே ஆராதிக்க வேண்டும் என்ற பகுத்தறிவு அந்நாட்களில் நான் அறிந்திருக்கவில்லை. என்னுடைய பெற்றோர், இந்து விக்கிரகதெய்வங்கள் மீது தீவிரப்பற்றுடன், அதிக பக்தி வைராக்கியம் உடையவர்களாக இருந்தார்கள். என்னுடைய தகப்பனார் அவர்கள் அனுதினமும் அதிகாலையில் எழுந்து குளித்தவுடன், நேராக எனது வீட்டிற்குள் இருக்கும் பூஜை அறைக்குள் சென்று பற்பல பூஜைகள் செய்து, அங்கு மாட்டியுள்ள படங்களை, சிலைகளை வணங்குவது, அவர்தம் அன்றாடக வழக்கமாக இருந்தது.

நான் நன்றாக படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், என் பெற்றோர்கள் என்னை சிறுவயதிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியிலும் (convent), மாலை நேரங்களில் வீட்டருகாமையிலேயே ஒரு கிறிஸ்துவ  குடும்பத்தில் என்னை டியுஷன் படிக்க அனுப்பினார்கள். அந்த கிறிஸ்துவ குடும்பத்தில் உள்ள தாத்தா எனக்கு டியுஷன் பாடங்களை சொல்லிக் கொடுப்பார். அவருடைய மறைவிற்குப் பின்னர்அந்த வீட்டிலிருந்த uncle மற்றும் aunty அவர்கள் எனக்கு டியுஷன் பாடங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.. இப்படியாக L.K.G முதல் 5-ம் வகுப்பு வரை அந்த வீட்டிலேயே டியுஷன் படித்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அவர்கள் அனைவரும் குடும்பமாக ஆலயத்திற்கு (சர்ச் - Church) சென்று ஆராதனையிலும், ஜெபத்திலும், தங்களை அற்பனித்தவர்களாய் காணப்பட்டார்கள்.

ஆயத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்துவக் குடும்பம்:

Sunday class (ஞாயிறு பள்ளி) மற்றும் ஆலயத்திற்கு சென்ற அனுபவம்:

நான் சிறுவனாக இருந்த போது இரண்டு அல்லது மூன்று முறை அந்தக் குடும்பத்தோடு சேர்ந்து அவர்கள் செல்லும் ஆலயத்திற்கு (Church) சென்றிருப்பேன். அவர்களுடைய ஆலயத்தின் ஆண்டு விழாவில் ஒருமுறை கலந்துக்கொண்டு மகிழ்ந்த அந்த சிறுவயது அனுபவங்களும், நினைவுகளும் இன்றும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. எனது பள்ளி கோடை விடுமுறை நாட்களிலும், எனக்கு டியுஷன் சொல்லித் தந்த கிறிஸ்துவ வீட்டிலேயே விளையாடுவதிலும், புதிய பாடங்களைப் படிக்க கற்றுத் தந்து என்னைப் படிக்க உற்சாகப்படுத்துவார்கள்.

விடுமுறை வேதாகமப் பள்ளி: (VBS):

அதுமட்டுமின்றி, அந்தக் கிறிஸ்துவக் குடும்பத்தில் இருந்த அங்கிள் (Deva Jothi uncle), ஆண்ட்டி (aunty) மற்றும் இரண்டு அண்ணன்களும் இணைந்து சிறுப்பிள்ளைகளுக்கான ஞாயிறு வகுப்பு ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் நடத்தினர். அவர்கள் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் சேர்ந்து பாடி மகிழ்ந்துக் கொண்டாடிக்கொண்டிருந்த ஞாயிறு வகுப்பில், என்னையும், என்னுடன் டியுஷன் படித்த மாணவர்களையும், என் வீட்டிற்கு அருகிலிருந்த சிறுவர், சிறுமிகளையும், ஞாயிறு வகுப்பில் (Sunday class)-இல் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அதுவறையில் விடுமுறை வேதாகமப் பள்ளி (VBS) பற்றிய அனுபவமில்லாத எனக்கு அவர்களுடைய அழைப்பை ஏற்று உற்சாகமாய் நானும் மற்ற சிறுப்பிள்ளைகளுடன் கலந்துக்கொண்டேன்.

இசையுடன் கலந்த பாடல்களும், கதைகளுடன் இணைந்த படங்களும் நிறைந்துக் காணப்பட்ட VBS எல்லாருக்குமே உற்சாகமாகவும், மிகவும் மகிழ்ச்சி அளிக்கத்தக்கதாகவும் காணப்பட்டதுமட்டுமல்லாமல், எல்லாருடைய மனதிலும் எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையிலும் இருந்தது. ஒரு சில பாடல்களை (இயேசு ராஜா முன்னே செல்கிறார்.. சந்தோஷம் பொங்குதே...) எங்களக்கு சொல்லிக் கொடுத்து, எங்களைப் பாடவும் வைப்பார்கள். குறிப்பாக "இந்தக் காலம் பொல்லாதது; உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த, மனதில் பதிந்த பாடல்களாகக் இருந்தபோதிலும் தேவன் என்னோடு பேசுகிறார் என்பதை உணராதவனாகவே இருந்தேன்.

தேவன் மண்ணிலிருந்து உண்டாக்கின ஆதாம், ஏவாள் முதல் ஏதேன் தோட்டத்தில் அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறினதினால் பிறந்த பாவத்தைக் குறித்தும்... நோவாவின் காலத்தில் வந்த பெரிய வெள்ளம் நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் தேவன் எப்படியாக காப்பற்றினார் என்பதையும், எலியா என்ற தேவ மனிதர் எப்படி தேவனை நோக்கி ஜெபம் செய்து வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தும், மழையை வரவழைத்தும் கர்த்தரே தேவன் என்றும் தான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ள தேவன் என்று ஜனங்களுக்கு முன்பாக சாட்சியிட்ட உண்மை சம்பவங்களையெல்லாம் அந்த சிறுவயதிலே நான் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பரிசுத்த வேதாகமத்திலிருந்து (Holy Bible) இவைகளையெல்லாம் அவர்கள் அன்று சொல்லிக் கொடுத்த நாட்களில்தான் நான் முதல்முறையாக கேள்விப்பட்டேன். எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள் மனிதக் குலத்தின் பாவத்தைப் பற்றியும், பாவத்திற்கான பரிகாரி இரட்சகர் இயேசு கிறிஸ்து மூலமாக - (அவருடைய பிறப்பு, நம்முடைய பாவதிற்காய் இயேசு கிறிஸ்து சிந்தின பரிசுத்த இரத்தம், அவருடைய சிலுவைப் பாடுகள், அவருடைய மரணம், அவருடைய உயிர்த்தெழுதல்- அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்தும்...) நமக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று எனக்கு வலியுறித்திக் கூறினார்களா என்பதை நான் அறியேன்.

அறியாமல் போனது ஏனோ?

சுமார் 7 வயது நிரம்பியிருந்த அந்தக் காலக்கட்டத்தில், பாவம் என்றால் என்ன? பாவத்திற்கு பரிகாரம் என்றால் என்ன? நாம் ஏன் பிறந்தோம்? நம்மை உண்டாக்கினவர் யார்? தேவன் யார்? இயேசு கிறிஸ்து எதற்காக இந்த உலகத்தில் பிறந்தார்? எதற்காக தன்னுடைய ஜீவனை பலியாக கொடுத்து மரித்தார்? இரட்சிப்பு என்றால் என்ன? பரலோகம் என்றால் என்ன? நியாயத்தீர்ப்பு மற்றும் நரகம் என்றால் என்ன? என்று அந்த சிறுவயதில் நான் அறியாவிட்டாலும், அறிந்துக்கொள்ள ஆர்வமும் காட்டவில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் நான் அறிவேன். அதே 7 வயதில் எனக்கு யாரும் பொய் பேசக் கற்றுத் தரவில்லை; அப்பாவிற்கு தெரியாமல் அவருடைய ஷர்ட் பாக்கெட்டிலிருந்து சில்லறைகளை எடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிட யாரும் சொல்லி தரவில்லை; கெட்ட வார்தையை இப்படிதான் பேசவேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லி தரவில்லை; கோபங்கொள்ளவும், பொறாமைப்படவும், பிறர் பொருட்களை இச்சிக்கவும் யாரும் எனக்கு கற்றுத்தரவும் இல்லை.. இதையெல்லாம் நான் என் சுயமாகவே தெரிந்துக்கொண்ட எனக்கு இவையெல்லாம் தேவன் வெறுக்கிற, தேவனுக்கு விரோதமான செயல் என்றும்; இவையெல்லாம் பாவத்திற்கான மாம்சத்தின் கிரியைகள் என்றும்; இதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் இல்லையேல் தேவக்கோபாக்கினைக்கு ஆளாகிவிடுவோம் என்றும்; நரகத்திற்கு தள்ளப்படுவோம் என்றும்; அதிலிருந்து நம்மை மீட்டு நம்மை தேவப்பிள்ளையாய் மாற்றி நித்திய ஜீவனை நமக்கு இலவசமாய் கொடுக்க இயேசு தான் ஒரே வழி என்றும் அதே 7 வயதில் என்னுடைய இருதயம் வாஞ்சிக்காமல் போனது ஏனோ என்று தெரியவில்லை. பிறர் கற்றுக்கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் விரும்பவில்லை...

எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? எரேமியா 17:9

மனிதனுடைய கையினால் செய்யப்பட்ட விக்கிரகங்களை தெய்வமாக வழிப்படும் ஒரு இந்து குடும்பதைச் சார்ந்தவர்களாக நாங்கள் இருந்தப்போதிலும், எந்தொரு பாகுபாடுமின்றி என் மீது அக்கறை செலுத்தி எனக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்றுக்கொடுத்து, என் மீதும் எங்களுடைய குடும்பத்தார் மீதும் அவர்கள் காட்டிய அன்பு உண்மையாகாவே இருந்தது…

தேவன் காட்டியப் பாதை:

சென்னை அம்பத்தூரில் உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் என்னை 6-ம் வகுப்பு சேர்க்க விரும்பிய என்னுடைய பெற்றோர், அப்பள்ளியின் நுழைவுத் தேர்வுக்கு என்னை ஆயத்தப்படுத்துவதில் என் பெற்றோர்களும், டியுஷன் சொல்லி தந்த அங்கிள்(uncle), ஆண்ட்டி(aunty) அவர்களும் ஆர்வம் காட்டினார்கள். நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதிதனால் அந்தப் பள்ளியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. தோல்வியடைந்தது நிமித்தம், அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட முடியாமற்போயிற்று. என்னுடன் சேர்ந்து தேர்வு எழுதிய நண்பர்கள் பலருக்கு இடம் கிடைத்து, எனக்கு கிடைக்காமல் போனதே என்ற வருத்தம் தாக்காமல் இருந்ததில்லை... நாம் தான் அடிக்கடி அடுத்தவர்களைப் பார்த்து பார்த்து அவர்களுக்கு கிடைத்ததே ஆனால் நமக்கு கிடைக்கவில்லையே என்று புலம்புவது வழக்கமாயிற்றே.

அதன் பிறகு, வீட்டின் அருகாமையிலேயே இருந்த இரண்டு மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் விண்ணப்பிக்க தீர்மானம் செய்தோம். இரண்டு பள்ளிகளிலும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்றதில், சென்னை அம்பத்தூர் அடுத்த புதூரில் உள்ள எபினேசர் மார்கஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்கு முடிவு செய்தோம். (நாங்கள் முடிவு செய்தோம் என்று சொல்வதைக் காட்டிலும் தேவன் இந்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று முன்குறிக்கப்பட்டு இடத்தை ஆயத்தப்படுத்தியிருந்ததால் தேவனால் வழி நடத்தப்பட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். (இதை சுமார் 17 வருடங்கள் கழித்துதான் நான் தெரிந்துக் கொண்டேன்.)

தேவ திட்டத்தை விரும்புவோம்

அநேக சமயங்களில் நாம் விரும்புகின்ற காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெற வேண்டுமென எதிர்பார்கிறோம். அவ்வாரு நடைபெற முடியமாற் போனால் அல்லது எதிர்பார்த்தது நமக்கு கிடைக்காவிட்டால் மிகுந்த ஏமாற்றத்துடன்,  மனச்சோர்வுடையவர்களாய் நாம் காணப்படுகிறோம்,  குறைக்கூறுகிறோம், முறுமுறுக்கிறோம், சபிக்கிறோம், வேண்டாத பற்பலக் கேள்விகளை நாம் நம்முடைய மனதில் எழுப்புகிறோம். ஒருவேலை நான் அந்த அரசுப் பள்ளியில் தான் சேரவேண்டும் என்று வேறு பல வழிகளில் முயற்சி செய்து சேர்ந்து படித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? காலையிலும், மாலையிலும் அந்தப் பள்ளிக்குச் செல்லும் போது என்னுடைய பழைய நண்பர்களோடு சேர்ந்து சைக்கிளிலோ அல்லது பேருந்துகளிலோ ஒன்றாக பேசிக்கொண்டோ அல்லது விளையாடிக்கொண்டோ செல்கிறோம் என்ற ஒருவகையன பூரிப்பு என் மனதில் இருந்திருக்குமே தவிர.. தேவன் என் மீது  வைத்திருந்த திட்டத்தை இழந்துப்போயிருப்பேன்.

எல்லாம் தெரிந்து செயல்படுகிற தேவனுடைய திட்டத்தையும், அவர் விருப்பத்தையும் தேடாமல், நம்முடைய சுயவிருப்பத்தையே செயல்படுத்த தீவிரம் காட்டுவதினால், நம்மைக் கொண்டு தேவன் செய்யப்போகிற மகத்தான காரியங்களையும், புரிந்துக்கொள்ளமுடியாத நிலையில் தான் இன்றும் நாம் இருக்கிறோம். நான் இதனை அனுபவப்பூர்வமாக அறிந்துக்கொள்ள அநேக ஆண்டுகள் ஆயிற்று.

சர்வவல்லமையுள்ள தேவனைப் பற்றியும், நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கிற எதிர்காலத் திட்டத்தையும் நினைவுகளையும், நாம் சரியாகப் புரிந்துக் கொள்ள சர்வவல்லமையுள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக.!!!

நான் எபினேசர் மார்கஸ் பள்ளியில் தான் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்ற என் தேவனுடைய திட்டத்தை நான் இரட்சிக்கப்பட்டப்பின்பு தான் நான் அறிந்துக் கொண்டேன். என் இரட்சகர் இயேசு கிறிஸ்து அருளும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும், இயேசுவைப் பற்றி அதிகமாய் அறிந்துக் கொள்ள ஒரு கிறிஸ்துதவ ஆசிரியரை இந்த எபினேசர் மார்கஸ் பள்ளியில் தான் ஆயத்தப்படுத்தியிருந்தார் என்று நினைக்கும்போது  தேவனுடைய வழிகளை எண்ணி துதிக்காமல் இருக்க முடியுமோ...?

1992- ம் ஆண்டு நிகழ்வுகள
1992-ம் ஆண்டு கோடைக்கால விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டிற்குள் ஆவலுடன் நுழையும் முதல் நாள் அது. வழக்கமாகவே பள்ளிக்கு சீக்கிரமாய் செல்லும் பழக்கம் இருந்ததால் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாள் அன்றும் சீக்கிரமாகவே என்னுடைய புதிய வகுப்பறைக்குச் சென்றேன். புதிய கல்வி ஆண்டில் புதிய ஆசிரியர்கள் என்னுடைய பள்ளியில் சேர்ந்தனர். அப்படியாக சேர்ந்த ஒரு புதிய ஆசிரியர் பெயரைதான் என்னுடைய வகுப்பறை கரும்பலகையில் Mr. B. Nargis Devasargunam என்று எழுதப்பட்டதைப் பார்த்து அவரே எமக்கு வகுப்பாசிரியர் என்று புரிந்துக்கொண்டோம்.

எமது வகுப்பறையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். பள்ளியின் முதல் நாளன்று புதிய வகுப்பாசிரியரான திரு. B. Nargis அவர்கள் தான் ஒரு தாவரவியல் மற்றும் விலங்கியலில் முதுகலை மற்றும் Phd பட்டம் பெற்றவர் என்றும் தன்னை வகுப்பு மாணவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, எல்லா மாணவர்களின் பெயர்களையும், எங்களுடைய எதிர்க்கால இலட்சியத்தையும் குறித்து ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார்... வகுப்பாசிரியர் என்பதால் மாணவர் வருகைப் பதிவேடு எடுக்கும் பொறுப்பும், முதல் வகுப்பு (first Period) பாடத்தை நடத்துவதும் அந்த வகுப்பாசிரியருக்கே உரியது. அன்று பள்ளியின் முதல் நாள் என்பதினாலும், அவருடைய வகுப்பின்  முதல் நாள் என்பதினாலும், பாடத்திற்குள் செல்லாமல் பொதுவானக் காரியங்களைக் குறித்து விவரிக்க ஆரம்பித்தார்...

நிலையில்லா உலகினிலே…

எமது ஆசிரியர் ஒரு கிறிஸ்துவர் என்பதினால் பயபக்தியுடன் ஜெபத்துடன் வகுப்பைத் தொடங்கினார். குறிப்பாக இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் சந்திக்கும் பொதுவான நடைமுறை சிக்கல்களையும், அதை வெல்வதற்கு மனிதர்கள் படும் போராட்டங்களையும் குறித்து விளக்கிக் காண்பிக்கும் போது எந்த ஒரு அசைவுமில்லாமல் அமைதியாகவும், ஆர்வமாகவும் அவருடைய பேச்சில் மாணவர்கள் கவனம் செலுத்தினர்.

நிரந்திரமில்லாத இந்த உலகத்தில், மனிதர்கள் எவ்வாறு சமதானத்தை இழந்து கண்ணீரோடும், வேதணையோடும், துக்கத்தோடும் வாழ்கின்றனர் என்பதையும், ஏழைப் பணக்காரன் வேற்றுமைகள், ஜாதி வேறுபாடுகள், தீண்டாமை முதலிய சமூக கொடுமைகளால் ஏற்படும் பாதிப்புகளை-யெல்லாம் அன்றே எங்கள் மனதில் நன்கு பதிவு செய்தார்.

அழகிகளைப் பின்தொடரும் ஆபத்துகளையும், மனிதர்கள் எப்படி பண ஆசையுடையவர்களாகவும், பொருளாசையுடையவர்களாயும், கோடீஸ்வரர்களும், பணத்தின் மீதும், ஆஸ்திகளின் மீதும் நம்பிக்கை வைத்து மனதில் சமாதானம் இல்லாமல், நிம்மதியை இழந்து வாழ்வதையும், பற்பல உதாரணங்களோடு மாணவர்களாகிய எமக்கு கோடிட்டுக் காட்டினார். இதனை வெல்ல மனிதர்கள் படும் போராட்டங்களையும் விளக்கிக் காண்பித்தார்.

வகுப்பிற்குள் நுழையும்போது அந்த ஆசிரியரின் முகத்தில் காணப்பட்ட புன்னகை, வகுப்பு முடியும் வரை புன்னகை குறையாமல் அனைவரயும் கவர்ந்து முதல் நாளிலேயே எங்கள் அனைவருடைய உள்ளத்திலும் இடம்பெற்றார்.

அவர் தம் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், அவருடைய அனுபவ சாட்சிகள், வாழ்க்கையில் குறிக்கிட்ட பல பதிலில்லாத கேள்விகள், அவர் தம் வாழ்க்கையில் கடந்து வந்த போராட்டங்கள் போன்றவைகளுக்கு அவர் தொழுது வரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி அற்புதஙள் செய்து அவரைக் காப்பறினார் என்று எங்களுடன் அடிக்கடிப் பகிர்ந்துக் கொள்வார்.

அப்படி அவர் பகிர்ந்துக் கொண்ட சம்பவங்கள் சிலவற்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

எமது ஆசிரியர் அவர்கள் கல்லூரி பயிலும் நாட்களில் தீராத வியாதி ஒன்று அவருடைய சரிரத்தைத் தாக்கியதாம்.. வியாதி படுக்கையில் இருந்ததால், தன்னுடைய கல்லூரிக்குக் கூட போக முடியாமல் இருந்தாராம். இனி கல்லூரிக்கு திரும்ப மாட்டார் என்று எண்ணிய அவருடைய பேராசிரியர்கள் அவருடைய பெயரைக்கூட வருகைப் பதிவேட்டிலிருந்து நீக்கிவிட்டார்களாம். உடல் மெலிந்த நிலையில், மருத்தவர்களாலும் கைவிடப்பட்ட சூழ்நிலையில், மனிதர்கள் எல்லாராலும் கைவிடப்பட்டு, ஆறுதலளிக்க யாரும் முன்வராமல், தேற்றுவதற்கு யாரும் இல்லாதவராய் தன்னுடைய நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாராம். மரணப் படுக்கையில் இருந்த போது, என்ன செய்வதென்று அறியாமல் கண்ணீரோடு தன் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவரைத் தொட்டு சுகமாக்கினாராம்.

மற்றொரு சம்பவத்தில் : ஒரு முறை வெளியூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றார். வழியில் எற்பட்ட பல தடைகளையும் மீறி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தும் அவர் பயணம் செய்ய வேண்டிய இரயில் வண்டியை தவற விட்டதினால். ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை எற்பட்டது. பிறகு தான் அவர் பயணம் செய்யவிருந்த இரயில் வண்டியில் வெடிகுண்டு வெடித்த விவரத்தை மறுநாள் செய்தித்தாள் மூலமாக தெரிந்துக்கொண்டாராம். இப்படியாக ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காப்பாற்றினார் என்று கூறினார்.

மேலும், தான் பள்ளி பயிலும் நாட்களில் அவர் படிப்பில் பின் தங்கிய மாணவராகக் காணப்படுவாராம். அதனால் அநேகர் அவரை அலட்சியப்படுத்தி கேலி செய்வார்களாம். இருப்பினும், ஆண்டவர் இவரை M.Sc., மற்றும் M.Ed., படித்து முடிக்க கிருபை செய்துள்ளார். இப்படியாக அவருடைய வாழ்க்கையில் எண்ணிமுடியாத அற்புதங்களையும், அதிசயங்களையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலமாக அவர் பெற்றுக் கொண்டதைக் குறித்து எங்களுக்கு விவரித்தார். எனக்கு உதவி செய்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, உங்களுக்கும் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் என்றும், என்னை ஆசிர்வதித்து, என்னுடைய படிப்பில் உயர்த்திய தேவன், உங்களையும் உயர்த்துவார். நீங்களும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஜெபியுங்கள். அவராலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று சொல்லி எங்களையும் அதிகமாய் உற்சாகப்படுத்துவார். இப்படி பல்வேறு சம்பவங்களை மாணவர்களாகிய எங்களுக்கு பகிர்ந்துக்கொண்டது மட்டுமல்லமால் பயபக்த்தியுடன் எங்களுக்காகவும் ஜெபிப்பார். நான் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவைக் குறித்து சிறுவயதில் டியூஷன் சொல்லிக் கொடுத்த அங்கிள் மூலமாக கேள்விப்பட்டதினால், அவருடைய ஜெபம் என்னை மேலும் ஈர்த்தது.

என் உள்ளம் இயேசுவுக்கே..

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, பயபக்தியெல்லாம் கண்டு வியப்படைந்தேன். அவர் சொல்லிய எல்லாவற்றையும் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அதுவரையில் யாரும் அப்படி பேசி பார்ததில்லை, கேட்டதுமில்லை. அவர் கட்டுக் கதை ஏதும் சொல்லவில்லை. அவர் சொல்லியதெல்லாம் உண்மை என்பதை என் உள்ளம் சாட்சியிட்டது. ஆதலால் அவருடைய வார்தைக்கு நான் ஈர்க்கப்பட்டதுமாத்திரமல்லாமல், சர்வவல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் ஒரு நம்பிக்கையும், என் உள்ளத்தில் அவருக்கு ஓர் இடம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. இந்த தேவன் எனக்கும் வேண்டும் என்று என்னுடைய உள்மனம் அங்கலாயித்தது.

என்னுடைய சிறுவயதில் நான் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஞாயிறு பள்ளியில் (Sunday class) கேள்விப்பட்டதினால் எமது ஆசிரியர் அவர்கள் கூறும்போது அது என்னுடைய இருதயத்திற்கும், செவிக்கும் ஈர்ப்பாகவே இருந்தது... அதுவே நாளடைவில் வகுப்பு ஆசிரியருடன் நெருங்கிப் பழகக்கூடிய நட்பு ஏற்பட வழிவகுத்தது மட்டுமல்லாமல், மாலை நேரங்களில் பாட வகுப்புகள் முடிந்ததும் நாங்கள் இரண்டு பேரும் தனியாக அமர்ந்து அநேகக் காரியங்களைக் குறித்து பேசுவதர்க்கு சமயம் வாய்த்தது. குறிப்பாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவருடைய வாழ்க்கையில் செய்த அற்புதங்கள் பலவற்றைக் குறித்தும், இயேசு கிறிஸ்து யார் என்பதையும், நிரந்திரமில்லாத இந்த உலகத்தில் நிரந்திரமான தேவனாகிய இயேசு கிறிஸ்து என்னுடைய வாழ்க்கையிலும் என்ன செய்யமுடியும் என்பதையும் பகிர்ந்துக்கொள்வார்.

ஆரம்ப நாட்களில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை இருந்த எங்களுடைய சந்திப்பின் நேரம், சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கூட உட்க்கார்ந்து இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்துக்கொள்ளவும், ஒரு சில பாடல்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்தது. நாங்கள் இருவரும் கூடி சந்தித்த அந்த சந்திப்பு நாளடைவில் ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டு உற்சாகத்துடன் பாடல்களைப் பாடுவதும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் ஆர்வத்துடன் கேட்ப்பதும் வழக்கமாகக் காணப்பட்டது. நம்முடைய வாழ்வில் நடக்கும் அன்றாட பிரச்சனைகளை சம்மந்தப்படுத்தி, அவைகள் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தீர்வு கிடைக்கும் என்ற அவருடைய அதிகாரமிக்க பேச்சு எங்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகத்தை அளிக்கும்.

எமது ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடல்களில் ஒரு பாடல் : "இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்" ( I have decided to follow Jesus ) என்ற பாடலை அன்றுக் கற்றுக்கொண்டது இன்றும் என்னால் மறக்க இயலாது.

அறிந்தேன் நித்திய ஜீவனை

அது ஒரு மாலை பொழுது... வகுப்புகள் முடிந்ததும் வழக்கம்போல் ஒரு சில மாணவர்களாகிய நாங்கள் எமது பள்ளியின் மூன்றாம் மாடியில் உள்ள ஒரு வகுப்பறையில் வந்து அமர்ந்திருக்கும்படி எங்களது ஆசிரியர் கேட்டுக்கொண்டார். சில மணிதுளிகள் கழித்து எமது ஆசிரியர் வந்தவுடன் அவரோடு சேர்ந்து ஒரு சில பாடல்களைப் பாடி முடித்தப் பிறகு, எமது ஆசிரியர் பேசத்தொடங்கின போதுதான் அந்த வகுப்பின் கரும்பலகையில் எழுதியிருந்த "ETERNAL LIFE" வார்தைக்கு அர்த்தம் தெரிந்துக்கொள்ள ஆவலுடன் என்னுடைய ஆசிரியரை நோக்கி கேட்டபோது அதற்கு அவர் நித்திய வாழ்வு என்றும், முடிவே இல்லாத அல்லது மரணமே இல்லாத ஒரு வாழ்க்கை என்றும், நித்திய காலமாய் மரிக்காமல் - சதாக் காலமும் உயிரோடு இருப்பது என்றும், அப்படிப்பட்ட நித்திய வாழ்வு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்களது சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டவர்களுக்கு இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கு கிடைப்பது தான் அந்த நித்திய வாழ்வு என்பதை எனக்கு விளக்கினார்.

நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாமல், மனம்போனப் போக்கில் வாழ்ந்துக்கொண்டிருந்த எனக்கு, அவருடைய விளக்கம் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருந்தது. மேலும் பரலோகம், நியாயத்தீர்ப்பு, நரகம் போன்றவைகளையும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்களது சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு பரிசுத்தமாய் வாழ்ந்து மரித்தவர்கள் எல்லாரையும் இயேசு உயிரோடு எழுப்புவார் என்றும், இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு பரிசுத்தமாய் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களையும் அவரோடு கூட பரலோகத்திற்கு கூட்டிக் கொண்டு செல்வார் எனவும் பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் எனக்கு விளக்கம் அளித்தார்.

Iதெசலோனிக்கேயர் 4:16,17 -ல் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் என்ற வசனத்திற்கு ஏற்றவாறு அவருடைய விளக்கம் இருந்தது.

கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்... என்றால் கிறிஸ்துவுக்குள் மரிக்காதவர்களும், என்னைப் போன்ற இந்து தெய்வங்களை வழிப்படுபவர்களுடைய நிலை என்ன? என்றக் கேள்வி என்னுடைய மனதில் தோன்றியது. உடனே என் மனதில் தோன்றின நினைவு என்னவென்றால், இதற்காகத் தான் கிறிஸ்தவர்கள் அனைவரையும் எரிக்காமல், பெட்டியில் வைத்து அடக்கம் பண்ணுகிறார்களோ என்று ஒருகணம் சிந்திக்கலானேன்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை உயிரோடு எழுப்புவார் என்றால்,  விபத்துக்குள்ளாகி (Accident-ல்) மரித்தவர்களையும், தீயில் எரிப்பவர்களையும், (இவ்வாறு எரியூட்டப்படுபவர்கள் - காற்றோடு காற்றாக, சாம்பலாக, மண்ணாகி ஒன்றுமில்லாமல் போனப் பின்பு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட சரிரங்களை எப்படி எழுப்புவார்? என்று நான் புத்திசாலித்தனமாக கேட்ட கேள்விக்கு அவருடைய பதில் என்னை அதிர வைத்தது.

இயேசு கிறிஸ்துவின்  வருகையின்போது
இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும்போது அவரது குரலைக் கேட்டு, பிரேதக் குழியில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள், மண்ணோடு மண்ணாகி, மக்கி ஒன்றுமில்லாமல் போயிருந்தாலும், மரித்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் வல்லமையும், சக்தியும் இயேசு கிறிஸ்துவிற்கு உண்டு என்றும், உலகத்தில் இந்த நிகழ்ச்சி நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்று எனக்கு உறுதிப்படக் கூறினார். இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் அவர் கூறிய சம்பவங்களை (கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.) அப்படியே சிந்தித்துப் பார்த்தேன். ஒருவேளை இயேசு கிறிஸ்து இப்பொழுது வருவாரென்றால் என்னுடைய நிலை என்னவாயிருக்கும் என்ற பயம் கலந்த ஒரு கேள்வி எனக்குள் எழும்பியது.

நாம் ஏன் இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று அழைப்பதற்கானக் காரணமும், அவரை சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் எற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏன் என்பதை தெளிவாக விளக்கினார். அன்று நான் கேள்விப்பட்டது எல்லாமே எனக்கு புதுமையாகவே இருந்தது. அதுவரை நான் எதுவும் கேள்விப்படாத காரியங்கள். எத்தனையோ இந்து கோயில்களுக்கு நானும், என் குடும்பத்தாரும் சென்றிருக்கிறோம், எத்தனையோ பூஜைகளை வழிப்பட்டிருக்கிறோம், எத்தனையோ சாமியார்களையும், கோயில் பூசாரிகளையும் கண்டிருக்கிறோம், ஆனால் ஒருவர் கூட இப்படிப்பட்டக் காரியங்களை சொல்லி நான் கேட்டதில்லையே...

எங்களுடைய இந்து மார்க்கத்தில் முப்பதுமுக்கோடி தேவர்கள் உண்டு என்று சொல்லுவார்களே... அத்தனை தெய்வங்கள் இருந்தும் அவைகளில் ஒன்றுக்கூட மரித்தவர்களை உயிரோடு எழுப்புவதும், மரித்தப் பிறகு நித்திய வாழ்வு உண்டு என்றும், பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கவில்லையே என்ற எண்ணம் மனதில் எழும்பியது.

எங்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும், இதைப் பற்றி அறியாதவர்களாகவும், உணர்வில்லாதவர்களாகவும் இத்தனைக் காலம் வாழ்ந்துவிட்டார்களே என்று நான் மிகவும் வருத்தமடைந்தேன். நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன் என்பதினால், என்னுடைய பெற்றோர்களுடைய வழிபாடுகளை பின்பற்றுவதற்கு நானும் தயக்கம் காட்டவில்லை. என்னுடைய பெற்றோர் இந்து விக்கிரகதெய்வங்கள் மீது தீவிரப்பற்றுடன், அதிக பக்தி வைராக்கியம் உடையவர்களாக இருந்தார்கள். என்னுடைய தகப்பனார் அவர்கள் அனுதினமும் அதிகாலையில் எழுந்து குளித்தவுடன், நேராக எனது வீட்டிற்குள் இருக்கும் பூஜை அறைக்குள் சென்று பற்பல பூஜைகள் செய்து, அங்கு மாட்டியுள்ள படங்களை, சிலைகளை வணங்குவது, அவர்தம் அன்றாடக வழக்கமாக இருந்தது.

இருப்பினும் என்னுடைய ஆத்தும இரட்சிப்பைக் குறித்தோ அல்லது நித்திய வாழ்வைக் குறித்தோ அல்லது பரலோகத்தைக் குறித்தோ, நரகத்தைக் குறித்தோ, நியாயாத்தீர்ப்பைக் குறித்தோ ஒரு முறைக்கூட எனக்கு சொன்னதில்லையே..

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க jaathakam பார்த்தேன் என்று சொன்னீர்கலே அப்போ அதில் இதெல்லாம் சொல்லவில்லையா? உங்களுக்கு இப்படிதான் நடக்கும் என்று?

    ReplyDelete