சகரியா பூணன் ன் 'இலக்கை அடையும்வரை ஓடிட வேண்டும்!

தான் மனந்திரும்பி 30 ஆண்டுகளுக்குப் பிறகும்,
தன் ஜீவியத்தின் முடிவை நெருங்கிய அந்த வேளையிலும் "இன்னமும் ஆசையாய்த்
தொடருகிறேன்" என்றே பவுல் கூறினார் (பிலிப்பியர் 3:12-14).

ஆம், அவர் 'இன்னமும்' அடைந்திடவில்லை! தன் ஜீவியத்தில் தேவனுடைய ஆவியின்
அதிகமான நிறைவையே இன்னமும் பவுல் வாஞ்சித்தார். அந்த இலக்கை எப்படியும்
அடைந்துவிடும்படி தன் ஆவிக்குரிய ஒவ்வொரு தசைநார்களையும்
பயிற்றுவித்தார்.

"நான் முற்றிலும் தேறினவன் அல்ல!"என
பிலிப்பியர் 3:12-ல் பவுல் கூறினார்.

ஆனால் 15-ம் வசனத்திலோ "நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்த
சிந்தையாயிருக்கக்கடவோம்" என நேருக்கு மாறாய் கூறுவது போல் காண்கிறோம்.

ஆவியில் நிறைந்து வாழும் வாழ்க்கை இவ்வித எதிர்மறை அர்த்தம் கொண்டதாகவே
எப்போதும் இருக்கிறது,

"தேறினேன், ஆனால். . . இன்னமும் தேறவில்லை!" இதன் நேரடி பொருள் என்னவெனில்,
"நிறைந்திருக்கிறேன், ஆனால். . . இன்னும் அதிகமாய் நிறைந்திடவே
வாஞ்சிக்கிறேன்" என்பதுதான்!

ஆவியில் நிறைந்த ஜீவியம், ஓர் வரையறை கணக்கிற்கு உட்பட்ட ஜீவியம் அல்லவே
அல்ல! ஆம், "நிறைந்த ஜீவியம்" ஒரு அளவிற்குமேல் இன்னும் அதிக அளவு
நிறைவதற்கு வாஞ்சை கொண்ட ஜீவியமாகவே இருக்கிறது!!

இதை வேதாகமம் குறிப்பிடும்போது, "பரிசுத்தாவி யானவர் நம்மை மகிமையின்மேல்
மகிமை அடையும்படி நடத்துகிறார்!" என்றே கூறுகிறது
(2 கொரி. 3:18).

ஒரு கப்பில் தண்ணீர் நிறைந்திருக்கலாம். . . அதேபோல் ஓர் பக்கெட்டிலும்
நிறைந்திருக்க முடியும். . . இன்னமும், ஒரு குளத்திலும் தண்ணீர்
நிறைந்திருக்க முடியும். . . இன்னும் அதிகமாய், ஒரு ஆற்றிலும் தண்ணீர்
நிறைந்திருக்க முடியும்! ஒரு கப் நிறைந்திருப்பதற்கும், ஒரு ஆறு
நிறைந்திருப்பதற்கும் இடையில்தான் எத்தனை பெரிய வித்தியாசம் இருக்கிறது!!

புதிதாய் மறுபடியும் பிறந்த ஒருவன், தான் குணப்பட்ட அன்றே ஆவியில்
நிறைந்திவிட முடியும்! அப்போஸ்தலனாகிய பவுலும் தன் பல்லாண்டு பரிசுத்த
ஜீவியத்தின் இறுதியில் ஆவியில் நிறைந்திருந்தாரே! அப்படியானால் என்ன?. .
.

ஆம், புதிதாய் மறுபடியும் பிறந்தவன் பெற்ற நிறைவிற்கும்,
முதிர்ச்சியடைந்த பவுல் அப்போஸ்தலன் பெற்ற நிறைவிற்கும் இடையில் ஏராளமான
வித்தியாசங்கள் இருப்பதையே இப்போது நாம் அறிந்து
கொள்ளுகிறோம்!

ஒன்று, ஒரு கப் நிறைவும். . . மற்றொன்று, ஒரு ஆற்றின்
நிறைவுமாயிருக்கிறது!! அந்த 'இலக்கை நோக்கி ஓடக்கடவோம்!!

தமிழ் வடிவம் :
டி. ரத்தினகுமார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.