தாமிரபரணியாறு பொதிகை மலையில் உற்பத்தியாகி திருச்செந்தூர் அருகில்
புன்னைக்காயல் என்ற சிற்றூரில் கடலோடு கலக்கிறது.
நெல்லை அருகே ஒரு சிற்றோடை, இந்த ஆற்றில் சங்கமமாகிறது. அதற்கு
'பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை' என்று பெயர்.
ஏனென்றால் ஒருநாள் தன் ஆண் குழந்தையை சுமந்தவாறு ஒரு தாய் இவ்வோடை பக்கம்
போய்க்கொண்டு இருந்தாள். அப்போது ஒரு பெரிய பலாப்பழம் ஓடையில் அடித்துச்
செல்வதைப் பார்த்தாள். உடனே அதைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வேகமாக
வளர்ந்தது.
உடனே பிள்ளையை கரையில் இறக்கி வைத்துவிட்டு பழத்தை எடுக்க தண்ணீரில்
இறங்கினாள். ஆனால் வெள்ளம் வேகமாக அடித்துச் சென்றதால், பழம் அவளது
கைகளுக்கு எட்டவில்லை.
கனியின் மீதுள்ள ஆசை அவளது மகனை மறக்கச் செய்தது.
நதி ஓட்டத்திலேயே நீந்தி வெகுதூரம் சென்ற பின்னரே அவளால் அந்த
பலாப்பழத்தைப் பற்ற முடிந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தையை
விட்டுவிட்டு வந்த இடத்திற்கு பலாப்பழத்துடன் ஓடோடி வந்தாள்.
அங்கே பிள்ளையை காணவில்லை. தவழும் அந்தக் குழந்தை தண்ணீரருகே சென்றதால்
வெள்ளம் இழுத்துக் கொண்டு போய்விட்டது. பிள்ளையை இழந்த தாய் கதறினாள்.
'பலாப் பழத்தின் மேல் ஆசை வைத்து கண்மணி பாலகனை இழந்தேனே, கேட்போர்
நகைப்பாரே, என கணவருக்கு என்ன சொல்வேன்' என்று பலவாறு சொல்லி
புலம்பினாள்.
நம்மில் அநேகர் உலக வேலைகளுக்காக ஓடுகின்றோம். காலையில் எழுந்தவுடன்
பல்வேறு வேலைகள். ஜெபிக்கவும் வேதத்தை தியானிக்கவும் மறந்து ஓடுகின்றோம்.
இத்தனை ஓட்டங்கள் எதற்க்காக?
உலகத்தின் நண்மைகளை சுதந்தரிக்கத்தானே. அந்த பெண் ஒரு பலாப்பழத்திற்காக
தனது செல்லப் பாலகனைப் பறிகொடுத்தாள். இயேசு கிறிஸ்து நமக்கு அழியாத
பொருளாகிய ஆத்துமாவைத் தந்திருக்கிறார்.
உலக நண்மைகளைத் தேடி ஓடி நாம் அதை நஷ்டப்படுத்தக் கூடாது.
மனுஷன் உலகம் முழுவதையும்
ஆதாயப்படுத்தி
க்கொண்டாலும்,
தன் ஜீவனை
நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக
என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16: 26).
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது
சாயலால் திருப்தியாவேன் (சங்கீதம் 17:15) என்று தாவீது அரசர்
கூறுவதிலிருந்து அவர் தேவனை எவ்வளவாய் நேசித்திருக்கின்றார் என்பதை அறிய
முடிகின்றது.
உலகத்தில் மேன்மையான நிலையில் இருந்த தாவீது அரசர் தமது ஆத்துமாவைப்
பாதுகாத்துக் கொண்டார்.
உலகத்தின் நன்மைக்காக ஓடி வேத தியானத்தை விடுத்து ஜெபிக்க மறப்பவர்கள்,
பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்த அந்த பெண்ணுக்கு ஒப்பாவார்கள்.
அவர்கள் தங்கள் மேன்மையான ஆத்துமாவை குறித்து சற்றும் கரிசனை உடையவர்களாக
இராமல் உலகத்தின் பின்னே ஓடத்துணிவதால், இயேசு கிறிஸ்து தருகின்ற மெய்யான
சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற முடிவதில்லை.
இதை வாசிக்கின்ற இயேசு கிறிஸ்துவுக்கு
பிரியமானவர்களே, ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் கர்த்தரைத் தேடுங்கள்.
இரவில் தாமதமாக படுக்கைக்கு செல்வதைக் காரணம் காட்டி அதிகாலை தேவனைத்
தேடுவதை நிறுத்தி விடாதிருங்கள்.
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர்வதாக.
ஆமேன்.
அல்லேலுயா.