யோசேப்பு ஏலியின் குமாரன் (3:23) என லூக்கா கூறுகின்றார். ஆனால் மத்தேயுவோ அவர் யாக்கோபின் குமாரன் என குறிப்பிட்டுள்ளார். (1:16)இதனால் யோசேப்புக்கு இரண்டு தகப்பன்கள் இருந்தார்களா எனும் கேள்வி நம்முள்ளத்தில் எழுந்து, எதை நம்புவது எனும் குழப்பத்தை ஏற்படுததி விடுகிறது.எனினும் ஹென்ரி ஜே. கைப்பரினால் தொகுக்கப்பட்ட, அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்ட பிரசங்கங்களுள், ஜோன் பொலின் கர்க் என்பாருடைய கன்னிப் பிறப்பைப் பற்றிய பிரசங்கம் இச்சந்தேகததை நீக்கி,“யோசேப்பின் தகப்பன் யாக்கோபு. ஏலி அவனுடைய மாமனார் அதாவது மரியாளின் தகப்பன்“ என அறியத் தந்துள்ளது. மத்தேயுவைப் போல (1:6-16) லூக்கா யோசேப்பின் பரம்பரையைப் பற்றி எழுதாமல், மரியாளுடைய வம்ச வரலாற்றை அவளுடைய தகப்பனான ஏலியில் ஆரம்பித்து நாத்தானினூடாக தாவீதுடன் தொடர்புபடுத்தியுள்ளார். (3:23, 31) வம்ச வரலாறு வித்தியாசமாயுள்ளதற்கு இதுவே காரணமாகும். யோசேப்பைப் போலவே மரியாளும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
மரியாள் தாவீதினுடைய பரம்பரையில் வந்தவள் என்பதை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்னவென நாம் வினவலாம். உண்மையில்மரியாளின் மூலமாகவவே இயேசு தாவீதின் சிங்காசனத்திற்கு உரியவரானார். அவர் யோசேப்பின் குமாரனாயிருந்திருந்தால் தாவீதினுடைய சிங்காசனததிற்கு உரிமை பாராட்டியிருக்க முடியாது, கிறிஸ்தவ மார்க்கத்தின் நம்பகமான தன்மைக்கு பல ஆதாரங்களை திரட்டியுள்ள ஜோன் மெக்டோவெல் இதைப் பற்றி விளக்கும்போது “தாவீதின் வம்சத்தில் வந்த எகொனியாவின் பரம்பரையைச் சேர்ந்தவனாக யோசேப்பு இருந்தமையால்,இயேசு இவனது மகனாக இருந்திருந்தால் தாவீதின் சிங்காகனத்திற்கு உரியவராக இருந்திருக்க மாட்டார்.காரணம் எரேமியாவின் தீர்க்கத்தரிசனப் புத்தகத்தில், இவனுடைய வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். (22:28-30) எகொனியா என மத்தேயு 1:11 இல் குறிப்பிடப்பட்டவனும் கோனியா என எரேமியா 22:28 இல் குறிப்பிடப்பட்டவனும் ஒருவனே. இவனுடைய பரம்பரையில் வந்தவனே யோசேப்பு (மத். 1:11-16) என சுட்டிக் காட்டியுள்ளார். ஆர்.ஐ. ஹம்பர்ட் எனபார், “யோசேப்பின் பிள்ளைகள் மீதும் இச்சாபம் இருந்தது. இயேசு யோசேப்புக்கு பிறந்திருந்தால் அவரும் இச்சாபத்திற்கு உட்பட்டிருப்பார்“ என தெரிவித்துள்ளார்.
யோசேப்பின் பரம்பரையின் மீதிருந்த தேவசாபத்தை கருத்திற் கொள்கையில், இயேசு யோசேப்பின் மகனாக இருந்திருந்தால், காபிரியேல் எனும் தூதன் மரியாளிடம் கூறியது போல “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது“ லூக்கா 1:32-33) என கூறியிருக்க முடியாது. எனவே, ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக் காட்டியதுபோல “மரியாளின் பரம்பரை சபிக்கப்பட்ட எகொனியாவினுடைய வம்சமாய் இல்லாமலிருப்பதனாலும்,“ ஜேம்ஸ் ஓர் தெரிவித்ததுபோல “மரியாளும் தாவீதின் வம்சத்தில் வந்தவள்“ என்பதனாலும்ஈ ஜோன் பொவென்கர்க் விளக்கியது போல, “மரியாளின் தகப்பனான ஏலியினுடைய வம்சம் நாத்தான் மூலமாக தாவீதுடன் சேர்வதனாலும், “மரியாளின் மூலமாகவே இயேசு தாவீதின் குமாரனாக, தாவீதின் அரியணைக்குரிய தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை மட்டுமல்ல மத்தேயுவும் லூக்காவும் இயேசு யோசேப்பின் குமாரன் அல்ல என்பதை சுட்டிக் காட்டத் தவறவில்லை. (மத். 1:16, 20, 25 லூக்கா 3:23) என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் இவையனைத்தும் கன்னிப்பிறப்பிற்கான ஆதாரங்களாக உள்ளன.
இயேசு யோசேப்பின் பிள்ளை அல்ல; அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்த தேவனுடைய குமாரன் என மத்தேயுவும் லூக்காவும் தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளபோதும், மத். 13:55 இல், இயேசு “தச்சனுடைய குமாரன்“ என்றும் யோவான் 6:42 இலும் 1:45 இலும் “யோசேப்பின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இயேசு யோசேப்பின் குமாரன் என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா இவை என வாதிடுவோரும் நம் மத்தியில் உள்ளனர். எனினும் இவ்வசனங்களை ஆராய்ந்து பார்க்கும்போது இவை மக்களுடைய கருத்தேயின்றி, யோசேப்பின் குமாரன் இயேசு என்பதற்கான சான்றுகள் அல்ல என்பதை அறிந்திடலாம். அதாவது மக்கள் இயேசுவைப் பற்றி கருதியதையே வேதாகம நூலாசிரியர்கள் இவ்விடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இயேசு வளர்ந்த ஊரைச் சேர்ந்தவர்களே அவரை “தச்சனுடைய குமாரன் அல்லவா“ என கூறியதாக மத்தேயு 13:54-55 இல் காணலாம். அதேபோல் யோவான் 6:42 இலும் இயேசுவின் பிரச்ஙகத்தைக் கேட்டவர்களே “இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா... அப்படியிருக்க நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேனென்று இவன் எப்படி சொல்கிறான். யோவான் 1:45 இல் பிலிப்பே இயேசுவை யோசேப்பின் குமாரன் என கூறுகின்றான். இதற்குக் காரணம் மரியாள் யோசேப்பின் சட்டரீதியான மனைவியாயிருந்தமையினால் மரியாளுடைய குமாரனாகிய இயேசுவின் சட்ட ரீதியான தகப்பனாக யோசேப்பு கருதப்பட்டான். இதனாலேயே “அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். என 3:23 இல் லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
“கர்ப்பவதியாயிருந்த மரியாளை தன் மனைவியாக யோசேப்பு ஏற்றுக் கொண்டமையினாலேயே இயேசுவை அவனுடைய குமாரனாக மக்கள் கருதினார்கள்.
