"பாவத்திற்கும்
பிராய்ச்சித்தமாக மிருகபலி செலுத்தப்படும் முறை
ஆதி 3:21 இல் தேவனால் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறும் சில
வேதவியாக்கியானிகள் இரத்தப்பலி மட்டுமே தேவனால் ஏற்றுக் கொள்ளப்படும்
எனத் தர்க்கிக்கின்றனர்.
எனினும் பாவத்துக்காகச் செலுத்தப்படும் பலிமுறை அக்காலத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டது
என கூறுவதற்கு ஆதி 3.21 இல் எவ்வித ஆதாரமுமில்லை.
அவ்வசனம் ஆதாமுக்கு ஏவாளுக்கும் தேவன் தோலுடைகளைக் கொடுத்ததை பற்றியே
அறியத்தருகின்றது.
"உடைக்காக மிருகம் கொல்லப்படுவதற்கே
ஆதி 3:21 இல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பாவத்துக்காக மிருகப்பலி செலுத்தப்பட்டதைப் பற்றி அவ்வசனத்தில்
வாசிப்பதில்லை மேலும் இரத்தம் பலியுடனான காணிக்கை மட்டுமே தேவன் ஏற்றுக்
கொள்வார் எனக் கூறுவது வேதாகம சத்தியத்துக்கு முரணானது நிலத்தின்
கனிகளும் பயிர்கள் விளைபொருட்களும் தேவனுக்குக் காணிக்கையாக
செலுத்தப்படக்கூடியவை என்பதே மேசேயின் நியாயப்பிரமாணம்
அறியத் தருகிறது.
(உபா 26:1-11).
எனவே இரத்தப்பலி செலுத்தப்படாத
மையினாலேயே காயீனின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தர்கிப்பதில்
எவ்வித அர்த்தமும் இல்லை.
உண்மையில் காயீன் இரத்தப்பலி
செலுத்தப்பட்டிருந்தால் கூட அவனுடைய காணிக்கை ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்காது.
ஏனென்றால் தவறு காணிக்கைப் பொருளில் அல்ல. மாறாக காணிக்கை
செலுத்துபவனிலேயே இருந்தது.
"காயீனின் காணிக்கை பொருளை வேதாகமம் குற்றப்படுத்தவில்லை.
காயீனும் ஆபேலும் தங்கள் தொழிலில்
கிடைத்தவற்றையே தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வந்தனர்.
"நிலத்தின் கனிகள், மந்தையின் ஆடுகளை விட தாழ்வானவைகளாக இருக்கவில்லை"
ஆனால் இருவரது காணிக்கையினதும் வித்தியாசம் அவர்களது மனநிலையிலேயே இருந்தது.
ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் செழுமையானவைகளிலும் சிலவற்றைக்
கொண்டு வந்தான். (ஆதி. 4:4).
அவன் தன் மந்தையில் சிறப்பானவற்றை தேவனுக்கென்று தெரிந்தெடுத்துள்ளதை
இதன் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
ஆனால் காயீன் தன் விளைப் பொருட்களில் இவ்விதமான சிறப்பானவைகளைத்
தெரிந்தெடுத்துக் கொண்டுவரவில்லை.
ஆதி. 4:3 இல் காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு
வந்தான். என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
இதிலிருந்து தேவனுக்கு சிறப்பானவற்றையே கொடுக்க என ஆபேல் எண்ணியது போல்
காயீன் சிந்திக்கவில்லை என்பது தெளிவாகின்றது, "வெளிப்பிரகாரமாக இருவரது
செயல்களும் ஒரே மாதிரியானவையாகவே இருந்தன. தேவனால் மட்டுமே அவர்களது
மனநிலையை பார்க்க கூடியதாயிருந்தது.
அவருடைய பார்வையில் காயீனுடைய காணிக்கை ஏற்றுக் கள்ளக்
கூடியதொன்றாக தென்படவில்லை.
தேவன் தனக்குக் கொடுக்கப்படும் காணிக்கையை அல்ல
மாறாக அக்காணிக்கையை கொடுப்பவனுடைய மனநிலையையே பார்க்கின்றார்.
இதனால்தான் எருசலேம் தேவாலயத்துக் காணிக்கைப் பெட்டியில் அதிகளவு பணம்
போட்ட மக்களை விட இரண்டு காசுகள் மட்டுமே போட்ட பெண் இயேசு கிறிஸ்துவால்
புகழப்பட்டாள். இதேவிதமாக காணிக்கை செலுத்திய காயீன் ஆபேல் என்போரின்
உள்ளங்களைப் பார்த்த தேவன் (1 சாமு) ஆபேலின் உள்ளமே தனக்கு உகந்ததாக
இருக்கக்கண்டார்.
காயீனுடைய மனநிலை தேவனுக்கு ஏற்ற விதமாக இராதமையால் அவனது காணிக்கைகளை
அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வுண்மை எபி. 11:4 தெளிவாக
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
"விசுவாசத்தினாலும் ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைத்
தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்.
தேனுடைய காணிக்கைகளை குறித்து தேவன் சாட்சி கொடுத்தார் என எபிரேய நிருப
ஆசிரியர் அறியத் தருகிறார்.
விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்பதை
அறியத் தரும் எபி. 11 ஆம் அதிகாரம் (11:6) ஆபேல் விசுவாசத்தினால் காயீனை
விட மேலான காணிக்கையை செலுத்தியதாக கூறுகிறது. (எபி. 11:4) எபி. 11:4
இன்படி காயீன்
விசுவாசமற்றவனாகவே இருந்துள்ளது
தெளிவாகின்றது..
"காயீன் தன் மார்க்க கடமையை செய்யும் மனப்பங்குடனே தேவனுக்கு காணிக்கை
செலுத்தியுள்ளான். ஆனால் ஆபேலின் காணிக்கை அவனது விசுவாசத்தின்
வெளிப்பாடாய் இருந்தது.
உண்மையில் ஆபேலின் விசுவாசம் அவனது காணிக்கை காயீனுடைய காணிக்கையை விட
மேலானதாய் இருப்பதற்காக காரணமாய் உள்ளது.
(எபி. 11:4)
ஆபேலின் விசுவாசம் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கும் காயீனின்
காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டாமைக்கும் காரணம் எபி. 11:4 இல்
குறிப்பிடப்பட்டுள்ளமையால் அவ்வசனம் அறியத்தரும் விடயத்தை விட வேறு
காரணங்களை நமது ஊகத்தினடிப்படையில் உருவாக்குவது அர்த்தமற்றதும்
அவசியமற்றதுமான கற்பனை விளக்கமாகவே இருக்கும்.
காயீனுடைய காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததன் மூலம் உள்ளம் அவருக்கு
உரித்தாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்து கொள்கிறோம்.
"கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும்போது கொடுக்கும் பொருளை விட
கொடுப்பவனின் மனநிலை முக்கியமானது"
"காணிக்கை
கொண்டுவருபவனுடைய உள்ளம் தேவனுக்கு உகந்ததாய் இராதுவிட்டால் அவனது
காணிக்கை தேவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஏனென்றால் தேவன் காணிகையைப் பார்ப்பதற்கு முன்னர் காணிக்கை கொடுப்பவனையே
பார்ப்பார்."
எனவே,
காயீனின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கு அவனது காணிக்கை பொருள்
அல்ல. மாறாக அவனே காரணமாயிருக்கின்றான்.