பாடுகளின் வாரம் : வெள்ளிக்கிழமை நிகழ்வு 4
போர்ச்சேவகர் இயேசுவைப் பரியாசம்பண்ணுகிறார்கள்
மத்தேயு 27:27-30 ; மாற்கு 15:16-19
தேசாதிபதியின் அரமனையிலே
அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமணையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, (மத் 27:27).
தேசாதிபதியின் போர்ச்சேவர்கள் இயேசுகிறிஸ்துவை பிலாத்துவின் அரமனையிலேயே சித்திரவதை பண்ணுகிறார்கள். ரோமப்பேரரசாரின் பிரமாணத்தின்படி ஒருவரை சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்த பின்பு, அந்த நபருக்கு சற்று காலஅவகாசம் கொடுக்கப்படும். மரிப்பதற்கு ஆயத்தமாவதற்கு அந்த நபருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். மரணதண்டனை கொடுக்கப்பட்ட பத்துநாட்களுக்குப் பின்பே அந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது ரோமப்பேரரசின் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்திருக்கும் முடிவாகும். ஆனால் இயேசுகிறிஸ்துவுக்கோ அவர்கள் சில நிமிஷத்தைக்கூட அவகாசமாக கொடுக்கவில்லை. தேசாதிபதி இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்த உடனேயே, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவை தேசாதிபதியின் அரமனைக்கு கொண்டுபோய் சித்திரவதை பண்ணுகிறார்கள். போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அங்கு வரவழைத்து இயேசுவை கொடுமைப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது இடைவெளியில்லாமல் ஒவ்வொரு பாடாக தொடர்ந்து அவர்மீது வருகிறது.
இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தபின்பு அவரை சிலுவையில் மாத்திரம்தான் அறையவேண்டும். அது மாத்திரமே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. நியமிக்கப்பட்டிருக்கும் தண்டனைக்குமேல் வேறு எந்த தண்டனையும் அவருக்கு கொடுக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவும் தம்மை சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுக்கிறார். ஆனால் கிறிஸ்துவின் சத்துருக்களோ அவருடைய சிலுவை மரணத்தில் திருப்தியடையவில்லை. அவருக்கு மேலும் அதிக தண்டனையை கொடுக்க விரும்புகிறார்கள்.
தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன்பாக அவரை அவமானப்படுத்துகிறார்கள். அவர்மேல் துப்புகிறார்கள். அவரை ஒரு விளையாட்டுப் பொருளாக நினைத்து இயேசுவை பாடாய் படுத்துகிறார்கள். அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி அவருடைய சிரசின் மேல் வைக்கிறார்கள். இயேசுவை கொடுமைப்படுத்தும்போது தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் தங்களுடைய பொழுது போக்கிற்காக, சுய சந்தோஷத்திற்காக இயேசுவை மேலும் அதிகமாக கொடுமைப்படுத்துகிறார்கள். தங்களுக்கு இயேசுவை என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதை மனிதாபிமானமில்லாமல் இயேசுவுக்கு செய்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்யும் சம்பவமெல்லாம் தேசாதிபதியின் அரமனையிலேயே நடைபெறுகிறது. ஒடுக்கப்படுகிறவர்களுக்கும், நியாயம் மறுக்கப்பட்டவர்களுக்கும் தேசாதிபதியின் அரமனை அடைக்கல ஸ்தலமாக இருக்கவேண்டும். ஆனால் அடைக்கலமாக இருக்கவேண்டிய அரமனையோ கள்ளர்கள் வெறியாட்டம்போடும் குகையாயிற்று. தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை சரியாக கவனியாதவர்கள்மீது நியாயத்தீர்ப்பு வரும்.
அதிகாரத்திலுள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம்பண்ணினால் அவர்கள்மீதும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு வரும். அதிகாரத்திலுள்ளவர்கள் தவறு செய்யவில்லையென்றாலும், தங்களுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லையில் தவறுகள் நடப்பதை தடைபண்ணவில்லை யென்றாலும் அவர்கள்மீது தேவனுடைய கோபம் வரும். பிலாத்து தன்னுடைய அரமனையில் நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமையான காரியங்களை தடைபண்ண தவறிவிடுகிறான். இயேசுகிறிஸ்துவை ஒரு போர்ச்சேவகரோ அல்லது இரண்டு போர்ச்சேவகரோ கொடுமைப்படுத்தவில்லை. தேசாதிபதியின் போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதும் இயேசுகிறிஸ்துவை கொடுமைப்படுத்துகிறார்கள்.
அரமணையில் விசாரணை நடைபெறுகிறது. (மாற்கு 15:16; யோவான் 18:28,33; யோவான் 19:9). இது ஒரு திறந்தவெளி. இது போர்ச்சேவகர்கள் தங்கியிருக்கும் இடம். பிலாத்துவின் அரண்மனை சீயோன் மலையில் உயர்ந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தில் பிலாத்துவின் வீடும், அவனுடைய போர்ச்சேவகரும் இருந்தார்கள். (மாற்கு 15:16)
சிவப்பான மேலங்கி
அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, (மத் 27:28).
போர்ச்சேவகர்கள் இயேசுகிறிஸ்துவின் மேலங்கியை கழற்றுகிறார்கள். நிர்வாணத்தின் அவமானம் பாவத்தினால் வந்த விளைவாகும் (ஆதி 3:7). அவர்கள் இயேசுவுக்கு சிவப்பான மேலங்கியை உடுத்துகிறார்கள். ரோமபோர்ச்சேவகர்கள் சிவப்பான மேலங்கியை உடுத்துவது வழக்கம். அதை உடுத்தும்போது வீரர்கள் கம்பீரமாக தோற்றமளிப்பார்கள். அப்படிப்பட்ட சிவப்பங்கியைப்போன்ற தோற்றமுடைய ஒரு சாதாரண சிவப்பங்கியை அவர்கள் இயேசுவுக்கு உடுத்துகிறார்கள். கெம்பீரமான சிவப்பு மேலங்கிகளை ரோமப்பேரரசின் ராஜாக்களும், ராயன்மார்களும், பிரபுக்களும் உடுத்துவது வழக்கம். இயேசுகிறிஸ்துவுக்கு சிவப்பான மேலங்கியை உடுத்தி, அவரை ராஜா என்று அழைத்து பரியாசம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவோ போர்ச்சேவர்களுக்கு மத்தியில் பரிதாபமாக நிற்கிறார். இவர்களோ அவருக்கு சிவப்பு மேலங்கியை உடுத்தி, அவரை கம்பீரமானவர் போன்று காண்பித்து பரியாசம்பண்ணுகிறார்கள். இயேசுவை பெருமைப்படுத்தவேண்டுமென்பது அவர்களுடைய நோக்கமல்ல. அவரை சிறுமைப்படுத்தி அவமானப்படுத்தவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.
""சிவப்பான மேலங்கி'' என்பது ரோமருடைய இராணுவ உடையாக இருக்கலாம். யூதருக்கு ராஜாவாக இருப்பவரைப் பரியாசம் பண்ணுவதற்காக போர்ச்சேவகர்கள் இயேசுவிற்குச் சிவப்பான அங்கியை உடுத்தியிருக்கலாம்.
முள்ளுகளால் ஒரு முடி
முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, (மத் 27:29).
இயேசுகிறிஸ்துவை போர்ச்சேவகர்கள் ஒரு ராஜாவைப்போல சித்தரித்து அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். ராஜாவுக்கு கிரீடம் இருக்கும். இவர்கள் முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி இயேசுவின் சிரசின்மீது வைக்கிறார்கள். இயேசுவை அவமானப்படுத்த வேண்டுமென்றால் சாதாரண புல்லுகளாலோ, சாதாரண இலைகளினாலோ ஒரு கிரீடத்தை செய்து இயேசுவின் சிரசின்மீது வைத்திருக்கலாம். ஆனால் அவர்களோ இயேசுகிறிஸ்துவை பரியாசம்பண்ணும்போது அவருக்கு வேதனையையும் கொடுக்கிறார்கள்.
முட்கள் பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் அடையாளம். இப்படிப்பட்ட முள்ளுகளால் ஒரு முடியைபின்னி அதை இயேசுவின் சிரசின்மீது வைத்து, அவருக்கு வேதனையை உண்டுபண்ணி, அவரை அவமானப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த அவமானங்களையெல்லாம் நமக்காக தாங்கிக்கொள்கிறார். அவர் பாடுகள் மத்தியிலும் மகிமையுள்ளவராக இருக்கிறார். அவர்கள் இயேசுவை எவ்வளவுதான் வேதனைப்படுத்தினாலும், பரியாசம்பண்ணினாலும் அவருடைய மகிமையை யாராலும் குறைத்துப்போட முடியாது.
இயேசுகிறிஸ்துவுக்கு முள்முடியை சூட்டுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல என்பதை முள்முடி தெளிவுபடுத்துகிறது. இந்த உலகத்திற்குரிய ராஜாக்கள் பொன்னாலும், வைரத்தாலும் கிரீடத்தை சூட்டிக்கொள்வார்கள். இவர்களுடைய மகிமை அவர்களுடைய கிரீடத்தின் பொன்னிலும் வைரத்திலும் இருக்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் மகிமையோ அவருடைய பாடுகளிலும் வேதனைகளிலும் இருக்கிறது. இயேசுகிறிஸ்து நமக்காக பாடுகளையும் வேதனைகளையும் சகித்துக்கொண்டதன் மூலமாக அவருடைய மகிமை வெளிப்படுகிறது.
அவர்கள் இயேசுகிறிஸ்துவின் வலதுகையில் ஒரு கோலைக் கொடுக்கிறார்கள். ராஜாக்களின் கையில் செங்கோல் இருக்கும். அந்தக் கோல் மரியாதைக்குரியது. அது ராஜாவின் அதிகாரத்திற்கு அடையாளம். இயேசுகிறிஸ்துவை பரியாசம்பண்ணுவதற்காக அவருடைய கையில் ஒரு சாதாரண கம்பைக் கொடுக்கிறார்கள். ராஜாதி ராஜாவின் கையில் செங்கோலுக்குப் பதிலாக சாதாரண கம்பு கொடுக்கப்படுகிறது. பலவீனமான இந்த சாதாரண கோலைப்போல இயேசுகிறிஸ்துவும் போர்ச்சேவர்கள் மத்தியில் பலவீனமாக நிற்கிறார். சாதாரண கோலைப்போல இயேசுவும் பிரயோஜனமற்றவர் என்று போர்ச்சேவகர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நினைவு தவறு. இயேசுகிறிஸ்துவின் செங்கோல் நித்திய காலமாக நிலைத்துநிற்கும். இயேசுகிறிஸ்துவின் ஆளுகை ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை. அவர் நித்திய ஆளுகை செய்கிற நித்திய ராஜாவாக இருக்கிறார்.
போர்ச்சேவகர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக முழங்கால் படியிடுகிறார்கள். தங்கள் ராஜாவுக்கு முன்பாக முழங்கால் படியிடுவதுபோல முழங்கால் படியிட்டு அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். ராஜாவுக்கு முன்பாக முழங்கால் படியிடும்போது போர்ச்சேவகர்கள் ராஜாவை வாழ்த்துவது வழக்கம். அதுபோல இவர்களும் இயேசுவை ""யூதருடைய ராஜாவே வாழ்க'' என்று கூறி அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து சர்வ மகிமையுள்ளவர். முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும். போர்ச்சேவகர்களோ கிறிஸ்துவின் மகிமையை அறியாமல், அவரை பரியாசம்பண்ணுவதாக நினைத்துக்கொண்டு, அவருக்கு முன்பாக முழங்கால் படியிடுகிறார்கள்.
கொடூரமான முறையில் இயேசுவைப் பரியாசம் பண்ணுகிறார்கள். தம்மைப் பற்றி இயேசு கிறிஸ்து கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (மத் 20:17-19). இயேசு கிறிஸ்துவின் சிரசில் வைக்கப்பட்ட முள்முடி எந்த முள்ளால் ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் குத்தினால் இரத்தம் வரக்கூடிய கடினமான முள்ளாக இருக்க வேண்டும்.
அவர்மேல் துப்பி
அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள் (மத் 27:30).
போர்ச்சேவகர்கள் இயேசுவின்மேல் துப்புகிறார்கள். ஏற்கெனவே பிரதான ஆசாரியனுடைய அரமனையில் இயேசுகிறிஸ்து இந்த அவமானத்தை சகித்திருக்கிறார் (மத் 26:67). ராஜாவின் அதிகாரத்தை அங்கீகரிப்பதற்கு அவருடைய கரத்தை முத்தமிடுவது வழக்கம். ஆனால் இங்கோ ராஜாதி ராஜாவின் அதிகாரத்தை அங்கீகரித்து அவரை முத்தம் செய்வதற்குப் பதிலாக, அவரை அவமானம்பண்ணும் விதமாக, அவருடைய முகத்திலே துப்புகிறார்கள். மனுஷகுமாரன் மீது மனுஷர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வதும், மனுஷர்மீது மனுஷகுமாரன் இவ்வளவு பொறுமையோடிருப்பதும் இந்த வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
போர்ச்சேவகர்கள் இயேசுகிறிஸ்துவின் வலதுகையில் ஏற்கெனவே கொடுத்திருந்த அந்த கோலை, அவருடைய கரத்திலிருந்து வாங்கி அவருடைய சிரசில் அடிக்கிறார்கள். அவருடைய வலதுகரத்தில் கோலைக்கொடுத்து அவருடைய அதிகாரத்தை பரியாசம்பண்ணினார்கள். இப்போதோ அதே கோலினால் அவருடைய சிரசின்மீது அடித்து தங்களுடைய மூர்க்க குணத்தை வெளிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சிரசின்மீது ஏற்கெனவே முள்முடி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த முள்முடியின்மீது இவர்கள் கோலால் அடிக்கிறார்கள். அடிக்கும்போது முள்முடியிலுள்ள முட்களெல்லாம் இயேசுகிறிஸ்துவின் சிரசிற்குள் புகுந்திருக்கும். இயேசுகிறிஸ்துவின் வேதனை அதிகரித்திருக்கும். இயேசுகிறிஸ்து இவ்வளவு அவமானத்தையும் பாடுகளையும் தாங்கிக்கொள்கிறார். நமக்கு நித்திய ஜீவனையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் மகிமையையும் கிரயத்திற்கு வாங்குவதற்காக இயேசுகிறிஸ்து இந்த கிரயத்தை செலுத்துகிறார்.
