நீதிமொழிகள்
முன்னுரை
பரிசுத்த ஆவியானவரின்ஏவுதலினால் சாலொமோன் நீதிமொழிகள் புஸ்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புஸ்தகத்தின் மூலமாய் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சிந்தையை நமக்கு வெளிப்படுத்துகிறார். நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய மூன்று புஸ்தகங்களுக்கும் சாலொமோன் ராஜாவே ஆசிரியர். பிரசங்கியின் புஸ்தகம் பிரசங்கச் செய்தியைப்போல எழுதப்பட்டிருக்கிறது. உன்னதப்பாட்டு புஸ்தகம் பாடல் நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
சாலொமோன் ராஜா தன்னுடைய வாலிபவயதில் ""உன்னதப்பாட்டு'' புஸ்தகத்தை எழுதினார் என்றும், ""நீதிமொழிகள்'' புஸ்தகத்தை அவருடைய ஜீவியத்தின் மத்திய வயதில் எழுதினார் என்றும், ""பிரசங்கி'' புஸ்தகத்தை சாலொமோன் ராஜா தன்னுடைய முதிர்வயதில் எழுதினார் என்றும் வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
சாலொமோன் ராஜா சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாகயிருந்தார். அவர் தாவீது ராஜாவின் குமாரன். வேதாகமத்திலுள்ள புஸ்தகங்களில் பலவற்றை எழுதிய ஆசிரியர்கள் எல்லோருமே சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலிருந்தவர்கள். தேசத்தில் அதிகாரமுள்ளவர்கள். மோசே, யோசுவா, சாமுவேல், தாவீது, சாலொமோன் ஆகியோர் தங்கள் காலத்தில் பிரபலமானவர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருந்தார்கள்.
இவர்களுக்குப் பின்பு சமுதாயத்தில் சாதாரண அந்தஸ்துள்ளவர்களும் வேதாகம புஸ்தகங்களை எழுதியிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகள் ராஜாக்களைப்போல செல்வாக்குள்ளவர்களல்ல. ராஜ்யத்தில் தீர்க்கதரிசிகளுக்கு ராஜாக்களைப்போல அதிகாரமுமில்லை. தீர்க்கதரிசிகளில் அநேகர் தரித்திரராகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். கர்த்தர் சாதாரண ஜனங்களையும் தம்முடைய சத்தியத்தை எழுதுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.
""ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும் இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்'' (1கொரி 1:27-29) என்று அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார்.
சாலொமோன் ஐசுவரியமுள்ள ஒரு ராஜா. சாலொமோனின் ராஜ்யம் மிகவும் விஸ்தாரமாக பரவியிருந்தது. அவர் சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாயிருந்தார். சாலொமோன் ராஜா தாவீது ராஜாவின் குமாரன். சாலொமோன் ராஜாவாகயிருந்தாலும், அவர் ஒரு தீர்க்கதரிசியாகவும், தீர்க்கதரிசியின் குமாரனாகவும் இருந்தார். கர்த்தர் சாலொமோன் மூலமாய் தம்முடைய ஞானத்தையும், அறிவையும் மனுஷருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். சாலொமோன் ராஜா சிங்காசனத்தில் அமர்ந்து, சமஸ்த இஸ்ரவேலையும் ஆட்சிசெய்வதற்கு முன்பாக, கர்த்தரை நோக்கி இவ்வாறு ஜெபம்பண்ணினார்.
""இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம்விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும்'' (1இராஜா 3:7-9) என்று சாலொமோன் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினார். சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
""ஆகையினால் தேவன் சாலொமோனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமின்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன்'' ((1இராஜா 3:11-14) என்று கர்த்தர் சாலொமோனின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார்.
கர்த்தர் சொன்ன பிரகாரம் சாலொமோன் ஐசுவரியம் மிகுந்தவராகவும், ஞானமுள்ளவராகவும் இருந்தார். ஆனாலும் சாலொமோனின் ஜீவியத்திலும் ஒரு சில தவறுகள் காணப்பட்டது. சாலொமோன் ஆரம்பத்தில் கர்த்தருடைய வழியை விட்டு விலகாமல், கர்த்தருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவித்தார். கர்த்தரை பயபக்தியாய் சேவித்தார். அதன் பின்பு சாலொமோன் அநேக அந்நிய ஸ்திரீகளை விவாகம்பண்ணினார். அவர்கள் சாலொமோன் ராஜாவை கர்த்தரைவிட்டு வழிவிலகிப்போகச்செய்துவிட்டார்கள். சாலொமோன் தன்னுடைய முதிர்வயதில் கர்த்தரை உண்மையாய் சேவிக்காமல், அந்நிய தெய்வங்களுக்கும் தூபங்காட்டி, விக்கிரகாராதனையில் பங்குபெற்றார்.
சாலொமோனின் சரித்திரம் நமக்கு ஆலோசனையாகவும், எச்சரிப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது. சாலொமோனைப்போல ஐசுவரியமுள்ளவர்களாகவும், ஞானமுள்ளவர்களாகவும் இருக்கிறவர்கள் தங்கள் இருதயத்தில் பெருமையோடிருக்கக்கூடாது. கர்த்தருடைய ஆலோசனைகளை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு கீழ்ப்படியவேண்டும்.
சாலொமோன் தான் மற்றவர்களுக்குச் சொன்ன தன்னுடைய ஆலோசனையின் பிரகாரமாக ஜீவிக்கவில்லை. ஆனாலும் அவர் சொன்ன ஆலோசனைகள் எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கும். ஆலோசனை சொன்னவர் தவறு செய்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய ஆலோசனைகளை நாம் புறக்கணித்துவிடக்கூடாது. கர்த்தர் சாலொமோன் மூலமாய் நமக்குப் போதிக்கிற செய்திகளுக்கு செவிகொடுக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும்.
வேதாகமத்திலுள்ள மற்ற புஸ்தகங்களின் மொழிநடைக்கும், நீதிமொழிகள் புஸ்தகத்தின் மொழிநடைக்கும் வித்தியாசமுள்ளது. இந்தப் புஸ்தகத்தின் வாக்கியங்கள் நீளமாயிராமல் சுருக்கமாயிருக்கும். ஒவ்வொரு வசனமும் தேவனுடைய சத்தியத்தை தெளிவாக எடுத்துச் சொல்லும். சில சமயங்களில் ஒரு வசனத்திற்கும், மற்ற வசனத்திற்கும் தொடர்பு இருக்காது. இவையெல்லாமே பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த விரும்புகிற தெய்வீக உபதேசங்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் பஞ்சாகமம் புஸ்தகம் இருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் தேவனுடைய பிரமாணம் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. சரித்திர ஆகமங்களில் இஸ்ரவேல் தேசத்தின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. பாடலாகமத்தில் கர்த்தரைத் தியானித்து, அவரைப் போற்றி பாடப்படும் பயபக்தியான கீதங்கள் எழுதப்பட்டிருக்கிறது. நீதிமொழிகள் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற நீதிமொழிகளெல்லாம் பரிசுத்தமானவை.
வேதாகமத்திலுள்ள ஆகமங்கள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு வித்தியாசமான மொழிநடையில் எழுதுவதற்கு பரிசுத்த ஆவியானவர் ஏவியிருக்கிறார். இவற்றின் மூலமாய் தேவனுடைய அனந்த ஞானம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை, நாம் வாசித்து, தியானித்து, முதலாவதாக அதை நமக்கு நாமே போதித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்பு நாம் மற்றவர்களுக்கும் சத்தியத்தை உபதேசம்பண்ணவேண்டும்.
பூர்வகாலம் முதலே, நீதிமொழிகள் மூலமாய் உபதேசம்பண்ணும் பழக்கம் இருந்தது. கிரேக்கர்கள் மத்தியில் நீதிமொழிகளைப் பயன்படுத்தி உபதேசம்பண்ணுவது மிகவும் பிரபல்யமானது. நீதிமொழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிற வாக்கியங்கள் தெளிவானவை, எளிமையானவை. இவற்றை உபதேசத்திற்கு எளிமையாகப் பயன்படுத்தலாம். நீதிமொழிகளின் வசனங்கள் சுருக்கமாகயிருந்தாலும், அதில் அதிகமான கருத்துக்கள் இருக்கும். ஒரு சிறிய வரைபடத்தில் ஒரு தேசம் முழுவதையும் விவரிப்பதுபோல,நீதிமொழிகள் புஸ்தகத்திலுள்ள வசனங்கள் விஸ்தாரமான சத்தியங்களை சுருக்கமாகச் சொல்லுகிறது. எளிதாகப் புரிந்துகொள்வதற்கு இது உதவியாயிருக்கிறது.
சத்தியத்தை உபதேசிப்பதற்கு பலவிதமான முறைகள் உள்ளன. அவற்றுள் நீதிமொழிகள் மூலமாய் உபதேசம்பண்ணுவது மிகவும் சிறப்பானது. ""முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்தில் ஆகாமியம் பிறக்கும்'' (1சாமு 24:13) என்று தாவீது சொல்லுகிறார். நீதிமொழிக்கு, ""முதியோர் மொழி'' என்றும், ""பழமொழி'' என்றும் பல பெயர்கள் உள்ளன. நீதிமொழிகளிலுள்ள வாக்கியங்கள் பூர்வகாலமுதல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றாட உரையாடலுக்கும், விவாதங்களுக்கும், விவாதங்களுக்குத் தீர்ப்பு சொல்லுவதற்கும் முதியோர்கள் நீதிமொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தப் பிரபஞ்சத்தில், எல்லா தேசங்களிலுமே முதியோர்களின் மொழிகள் உள்ளன. அவற்றில் பல நன்மையானவை. வேறு சில தீங்குவிளைவிக்கக்கூடியவை. பிசாசும் பழமொழிகளைப் பயன்படுத்துகிறான். ஒரு தேசத்தில் எப்படிப்பட்ட பழமொழிகள் வழக்கத்திலிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து, அந்தத் தேசத்தாரின் குணாதிசயத்தைப் புரிந்துகொள்ள முடியும். மோசமான பழமொழிகள் மனுஷரை தவறான பாதையில் வழிநடத்தும். அது அவர்களுடைய இருதயத்தையும் வஞ்சித்துவிடும்.
பரிசுத்த வேதாகமத்தில், கர்த்தர் நீதிமொழிகள் மூலமாய் நம்மோடு பேசுகிறார். சாத்தான் தேவனைப்போல மாய்மாலம் பண்ணுகிறவன். அவனும் அவிசுவாசிகள் மத்தியிலே தன்னுடைய பழமொழிகளை பிரபல்யப்படுத்துகிறான். இந்த உலகத்தாருக்கென்று விசேஷித்த பழமொழிகள் உண்டு. மாம்சப்பிரகாரமான ஜீவியத்தை ஆதரிக்கிற பழமொழிகளும் உண்டு. இவற்றைப் படிப்பதினால் நமக்கு பக்திவிருத்தி உண்டாகாது.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில், தேவனாகிய கர்த்தர் தப்பிதமான பழமொழிகளைக் குறித்து எச்சரித்துச் சொல்லுகிறார். ""பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன? ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவே-லே இந்தப் பழமொழியைச் சொல்- வராதபடிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு. இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும். நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்'' (எசே 12:21-25).
சாலொமோன் நீதிமொழிகள் புஸ்தகத்தை எழுதிய காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் முதியோரின் மொழிகள் ஏராளமாயிருந்தது. சாலொமோன் அவற்றையெல்லாம் தொகுத்து இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். ஆனாலும் இந்தக் கருத்தை ஒரு சிலர் மறுக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் சாலொமோன் ராஜாவுடைய இருதயத்தில் ஏவிய வார்த்தைகள் மாத்திரமே, இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் அநேகர் சொல்லுகிறார்கள். நீதிமொழிகள் புஸ்தகத்திலுள்ள வசனங்கள் சாலொமோனுடைய சுயகற்பனையல்ல. இவை மனுஷருடைய வாக்கியங்களுமல்ல. இவையெல்லாமே பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள். தேவன் தம்முடைய சிந்தையை நீதிமொழிகள் புஸ்கதத்தின் மூலமாக நமக்கு வெளிப்படுத்துகிறார்.
சாலொமோன் ராஜா இந்தப் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் ""கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்'' (நீதி 1:7) என்று சொல்லுகிறார். இந்தவாக்கியம், கர்த்தர் பூர்வகாலத்தில் மனுஷருக்குச் சொன்ன வாக்கியத்தோடு ஒத்திருக்கிறது. ""இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்'' (யோபு 28:28) என்று யோபுவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
சாலொமோன் இஸ்ரவேல் தேசத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றவர். அவர் எல்லோருக்கும் அறிமுகமானவர். நீதிமொழிகள் புஸ்தகத்தை நாம் வாசிக்கும்போது, நாம் சாலொமோனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. ஏனெனில் ""சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்'' (மத் 12:42) என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.
நீதிமொழிகள் புஸ்தகத்தில் சாலொமோன் நம்மோடு பேசவில்லை. தேவனாகிய கர்த்தரே, சாலொமோன் மூலமாய், நம்மோடு பேசுகிறார். நீதிமொழிகள் புஸ்தகத்தின் முதல் ஒன்பது அதிகாரங்கள், இந்தப் புஸ்தகத்திற்கு ஒரு முன்னுரையாக எழுதப்பட்டிருக்கிறது. இதன் பின்பு நீதிமொழிகளின் முதலாவது பாகம் 10-24 ஆகிய அதிகாரங்களிலும், இரண்டாவது பாகம் 25-29 ஆகிய அதிகாரங்களிலும் தொகுக்கப்பட்டிருக்கிறது. 30-ஆவது அதிகாரம் ஆகூரின் நீதிமொழிகளாகும். 31-ஆவது அதிகாரம் லேமுவேலின் நீதிமொழிகளாகும்.
நீதிமொழிகள் புஸ்தகம் கி.மு. 1000 ஆம் வருஷத்தில் எழுதப்பட்டது. நீதிமொழிகள் 30-31 ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் சாலொமோன் பேசினார். நீதி 1-24 ஆகியவற்றை சாலொமோன் ஒரு புஸ்தகத்தில் எழுதியிருந்திருக்கிறார். இந்த முதல் புஸ்தகத்தோடு நீதி 25-29 ஆகியவற்றை எசேக்கியா கி.மு. 730 ஆவது வருஷத்தில் சேர்த்தார். இதன் பின்பு நீதி 30-31 ஆகியவை இந்தப் புஸ்தகத்தோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. சேர்க்கப்பட்ட காலம் தெளிவாகத் தெரியவில்லை.
சாலொமோன் முதல் 29 அதிகாரங்களை எழுதினார். சாலொமோன் கூறிய 3,000 நீதிமொழிகளில் இவை மட்டுமே கிடைத்திருக்கிறது. (1இராஜா 4:32) பிறருடைய நீதிமொழிகளைச் சாலொமோன் ராஜா பயன்படுத்தியிருப்பதற்கும் வாய்ப்பில்லை. சாலொமோனின் காலத்திற்குப் பின்பே பலர் தங்களுடைய சொந்த ஞானவார்த்தைகளை எழுதினார்கள். அவை பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டவையல்ல. நீதிமொழிகள் புஸ்தகத்தில் கடைசி இரண்டு அதிகாரங்களையும், பெயர் தெரியாத ஒரு புருஷனும் ஒரு ஸ்திரீயும் எழுதியிருக்கிறார்கள். சாலொமோனின் நீதிமொழிகளோடு இவ்விரண்டு அதிகாரங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை எசேக்கியா இதைச் சேர்த்திருக்கலாம். (நீதி 25:1).
தேவனுடைய ஜனங்களுக்குப் பிரயோஜனமான நீதிநெறிக் கருத்துக்களும், ஆவிக்குரிய சத்தியமும் நீதிமொழிகளாக இந்தப் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. (2தீமோ 3:15-17).
பொருளடக்கம்
ஒ. முன்னுரை
1. புஸ்தகத்தின் பொருள் (1:1)
2. ஞானத்தின் பத்து அம்ச நோக்கம் (1:2-6)
3. ஞானத்தின் ஆரம்பம் (1:7)
ஒஒ. புத்திமதியும் போதகமும்
1. உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியுங்கள் - காரணம் (1:8-9)
2. பாவிகளின் நயங்காட்டுதலுக்கு சம்மதிக்கக்கூடாது (1:10-14)
3. என் மகனே
(1) பாவிகளோடே வழி நடக்கக்கூடாது - ஏழு காரணங்கள் (1:15-19)
(2) ஞானத்தை அழைக்க வேண்டும் (1:20-33)
4. என் மகனே
(1) எட்டு கட்டளைகள் (2:1-4)
(2) எட்டு ஆசீர்வாதங்கள் (2:5-8)
(3) எட்டு ஆசீர்வாதங்கள் (2:9-11)
(4) துன்மார்க்கனுக்கு நீ தப்புவிக்கப் படுவாய் - அவனுடைய ஏழு பாவங்கள் (2:12-15)
(5) பரஸ்திரீக்கு நீ தப்புவிக்கப்படுவாய் - அவளுடைய ஏழு பாவங்கள் (2:16-19)
(6) ஆறு ஆசீர்வாதங்கள் (2:20-22)
5. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - மூன்று ஆசீர்வாதங்கள் (3:1-2)
(2) மூன்று கட்டளைகள் - இரண்டு ஆசீர்வாதங்கள் (3:3-4)
(3) மூன்று கட்டளைகள் - ஒரு ஆசீர்வாதம் (3:5-6)
(4) மூன்று கட்டளைகள் - இரண்டு ஆசீர்வாதங்கள் (3:7-8)
(5) இரண்டு கட்டளைகள் - இரண்டு ஆசீர்வாதங்கள் (3:9-10)
6. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - ஒரு ஆசீர்வாதம் (3:11-12)
(2) மெய் சந்தோஷத்தை நாடு - இதன் பத்து அம்ச முக்கியத்துவம் (3:13-18)
(3) ஞானத்தின் கிரியைகள் - அறிவு (3:19-20)
7. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - பாதுகாப்பின் ஆறு ஆசீர்வாதங்கள் (3:21-24)
(2) இரண்டு கட்டளைகள் - இரண்டு ஆசீர்வாதங்கள் (3:25-26)
(3) ஆறு கட்டளைகள் - நான்கு ஆசீர்வாதங்கள் (3:27-35)
8. பிள்ளைகளே - பதினான்கு கட்டளைகளும் பதினான்கு ஆசீர்வாதங்களும் (4:1-9)
9. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - ஐந்து ஆசீர்வாதங்கள் (4:10-12)
(2) ஒன்பது கட்டளைகள் - ஒன்பது ஆசீர்வாதங்கள் (4:13-19)
10. என் மகனே
(1) நான்கு கட்டளைகள் - நான்கு ஆசீர்வாதங்கள் (4:20-22)
(2) பத்து கட்டளைகள் - பத்து ஆசீர்வாதங்கள் (4:23-27)
11. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - இரண்டு ஆசீர்வாதங்கள் (5:1-2)
(2) பரஸ்திரீயின் எட்டு குணங்கள் (5:3-6)
12. பிள்ளைகளே
(1) நான்கு கட்டளைகள் - பரஸ்திரீயிடம் ஜீவனை ஒப்புக்கொடுத்ததினால் ஏற்படும் பத்து தீய விளைவுகள் (5:7-14)
(2) பத்து கட்டளைகளும் சன்மார்க்க ஜீவியத்தின் ஆசீர்வாதங்களும் (5:15-19)
13. என் மகனே - பரஸ்திரீயிடத்தில் மயங்காதே - ஆறு காரணங்கள் (5:20-23)
14. என் மகனே - நீ சிக்குண்டாயானால் (6:1-2)
15. என் மகனே
(1) உன்னை விடுவித்துக் கொள்வதற்கு இதைச் செய் - நான்கு கட்டளைகள் (6:3-5)
(2) எறும்பும் சோம்பேறியும் - மூன்று கட்டளைகள் (6:6-11)
(3) துன்மார்க்கனின் ஏழு பாவங்களும் அவனுடைய முடிவும் (6:12-15)
(4) தேவன் வெறுக்கும் ஏழு காரியங்கள் (6:16-19)
16. என் மகனே
(1) நான்கு கட்டளைகள் - ஆறு ஆசீர்வாதங்கள் (6:20-23)
(2) பரஸ்திரீயிடமிருந்து உன்னை விடுவித்துக் கொள்ள இரண்டு கட்டளைகள் - பரஸ்திரீயின் ஆறு சுபாவங்கள் (6:24-26)
(3) விபசாரத்தின் தீய விளைவுகள் (6:27-29)
(4) திருடனைப் பற்றிய கட்டளை (6:30-31)
(5) விபசாரத்தின் தீய விளைவுகள் (6:32-35)
17. என் மகனே
(1) எட்டு கட்டளைகள் (7:1-4)
(2) காரணம் - உன்னை பரஸ்திரீயிடமிருந்து விடுவிப்பதற்கு - அவளுடைய வழியின் நாற்பது அம்ச விளக்கம் (7:5-23)
18. பிள்ளைகளே - நான்கு கட்டளைகள் - விபச்சாரத்தின் தீய விளைவுகள் (7:24-27)
ஒஒஒ. ஞானத்தைப் பற்றிய சம்பாஷணை
1. அவளுடைய அழைப்பு (8:1-3)
2. இரண்டு கட்டளைகள் - நான்கு வகுப்பாரும் அழைக்கப்படுகிறார்கள் (8:4-5)
3. அவளுடைய எட்டு அம்ச குணங்கள் (8:6-9)
4. இரண்டு கட்டளைகள் - ஆறு அம்ச சுயமேன்மை (8:10-12)
5. அவளுடைய பத்து குணங்கள் (8:13-14)
6. அவளுடைய தோழர்களும் நேசர்களும் (8:15-16)
7. எப்போது அவளைக் காணலாம் (8:17)
8. அவளுடைய பத்து ஆசீர்வாதங்கள் (8:18-21)
9. ஞானத்தின் ஆளுருவாக்கம் - 25 அம்சங்கள் (8:22-31)
10. ஞானத்தின் அழைப்பு - ஞானத்தின் நான்கு கட்டளைகளும் அவளுக்கு செவிகொடுப்பதினால் ஏற்படும் விளைவுகளும் (8:32-36)
11. ஞானத்தின் ஏழு அம்ச தொழில் (9:1-3)
12. அவளுடைய அழைப்பின் ஆறு அம்சங்கள் (9:4-6)
13. அவளுடைய கட்டளையின் பன்னிரெண்டு அம்சங்கள் (9:7-12)
14. பரஸ்திரீ - மதியற்ற ஸ்திரீ (9:13-18)
ஒய. இருநூற்று எண்பத்தெட்டு நீதிமொழிகள்
1. வேற்றுமையான நபர்களும் காரியங்களும்
(1) இரண்டு வகையான குமாரர்கள் (10:1)
(2) தெய்வீக பராமரிப்பு (10:2)
(3) நீதிமானும் சோம்பேறியும் (10:3-5)
(4) நீதிமானும் அநீதிமானும் (10:6-7)
(5) இரண்டு மனப்பாங்குகள் (10:8)
(6) இரண்டு நடைகள் (10:9)
(7) நாவின் வெவ்வேறு பயன்பாடு (10:10-14)
(8) ஐசுவரியவானும் ஏழையும் (10:15)
(9) ஜீவனுக்கும் மரணத்திற்கும் காரணங்கள் (10:16-17)
(10) நாவின் வெவ்வேறு பயன்பாடு (10:18-21)
(11) தேவனுடைய ஆசீர்வாதம் (10:22)
(12) இரண்டு விதமான விளையாட்டு (10:23)
(13) பயம், விசுவாசம் ஆகியவற்றின் விளைவுகள் (10:24)
(14) இரண்டு ஒப்புமைகள் (10:25-26)
(15) நான்கு வெவ்வேறு முடிவுகள் (10:27-30)
(16) நாவின் வெவ்வேறு பயன்பாடு (10:31-32)
2. பிறரைக் குறித்த நீதிமொழிகள்
(1) கள்ளத்தராசு (11:1)
(2) பெருமை, தாழ்மை ஆகியவற்றின் முடிவு (11:2)
(3) வாழ்வின் இரண்டு வழிகள் (11:3)
(4) ஐசுவரியம் உதவாது (11:4)
(5) வழிநடத்துதலின் உண்மையான ஆதாரம் (11:5)
(6) மீட்பின் உண்மையான ஆதாரம் (11:6)
(7) துன்மார்க்கனின் முடிவு (11:7)
(8) நீதிமானுக்கு இரண்டு விடுதலைகள் (11:8-9)
(9) பட்டணத்தின் இரண்டு ஆசீர்வாதங்கள் (11:10-11)
(10) இரண்டு விதமான பிறர்கள் (11:12-13)
(11) பாதுகாப்பின் உண்மையான ஆதாரம் (11:14)
(12) எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது (11:15)
(13) பொதுவான ஆறு வகுப்புகள் (11:16-18)
(14) இரண்டு முடிவுகள் (11:19)
(15) தேவன் வெறுக்கும் விரும்பும் நான்கு காரியங்கள் (11:20-21)
(16) அழகு (11:22)
(17) வேறுபட்ட ஆசைகள் (11:23)
(18) ஆறு மாறாத பிரமாணங்கள் (11:24-26)
(19) விதைப்பது அறுப்பது ஆகியவற்றின் பிரமாணம் (11:27-31)
3. குடும்ப உறவுகள், சமுதாய உறவுகள் ஆகியவை பற்றிய நீதிமொழிகள்
(1) பொதுவான எட்டு வகுப்புகள் (12:1-5)
(2) பிறருடைய வழிகளும் வார்த்தைகளும் (12:6)
(3) பொதுவான ஆறு வகுப்புகள் (12:7-9)
(4) வேறுபட்ட செயல்கள் (12:10)
(5) வேறுபட்ட வளவாழ்வு (12:11)
(6) நீதிமானும் துன்மார்க்கனுமான பிறர்கள் (12:12-14)
(7) மதியீனனும் ஞானியும் (12:15-16)
(8) நாவை பயன்படுத்துவதில் வேறுபாடுகள் (12:17-19)
(9) வேறுபட்ட இருதயங்கள் (12:20)
(10) பொதுவான பன்னிரெண்டு வகுப்புகள் (12:21-28)
4. தற்கால நன்மை, நித்திய நன்மை ஆகியவை பற்றிய நீதிமொழிகள்
(1) இரண்டு வகையான குமாரர்கள் (13:1)
(2) ஜீவியத்தின் இரகசியம் (13:2-3)
(3) பொதுவான ஆறு வகுப்புகள் (13:4-6)
(4) மெய்யான வளவாழ்வின் பிரமாணம் (13:7)
(5) ஐசுவரியத்தால் என்ன செய்யமுடியும் (13:8)
(6) துன்மார்க்கனின் முடிவு (13:9)
(7) வாதின் ஆதாரம் (13:10)
(8) இரண்டு மாறாத பிரமாணங்கள் (13:11)
(9) நம்பிக்கையின் இரண்டு விளைவுகள் (13:12-13)
(10) ஜீவ ஊற்று (13:14)
(11) வேறுபட்ட ஏழு விளைவுகள் (13:15-21)
(12) சுதந்தரங்களைப் பற்றியது (13:22)
(13) ஏழையின் ஆசீர்வாதம் (13:23)
(14) பிள்ளைகளைச் சிட்சித்தல் (13:24)
(15) நீதிமானும் துன்மார்க்கனும் (13:25)
5. பல்வேறு வகுப்புகளைப் பற்றிய நீதிமொழிகள்
(1) வேறுபட்ட ஆறு வகுப்புகள் (14:1-3)
(2) எருதின் ஆசீர்வாதங்கள் (14:4)
(3) வேறுபட்ட நான்கு வகுப்புகள் (14:5-6)
(4) நல்ல ஆலோசனை (14:7)
(5) வேறுபட்ட நான்கு பிரிவுகள் (14:8-9)
(6) இரண்டு காரியங்கள் உடந்தையாக இராது (14:10)
(7) வேறுபட்ட வீடுகள் (14:11)
(8) தவறான பாதையின் முடிவு (14:12)
(9) நகைப்பு, துக்கம் ஆகியவற்றின் முடிவு (14:13)
(10) வேறுபட்ட பதினாறு வகுப்புகள் (14:14-21)
(11) இரண்டு விதமான திட்டங்கள் (14:22)
(12) ஏழ்மையின் பிரமாணம் (14:23)
(13) வேறுபட்ட நான்கு வகுப்புகள் (14:24-25)
(14) பயத்தின் நான்கு ஆசீர்வாதங்கள் (14:26-27)
(15) இராஜாவுக்கு மகிமை (14:28)
(16) நீடிய சாந்தமும், முற்கோபமும் (14:29)
(17) ஆரோக்கியத்தின் இரகசியம் (14:30)
(18) நன்கு தெரிந்த மூன்று சத்தியங்கள் (14:31-33)
(19) பாவம், பரிசுத்தம் ஆகியவற்றின் விளைவுகள் (14:34)
(20) வேலைக்காரர்களுக்கு ஆலோசனை (14:35)
6. சமுதாயம் மார்க்கம் ஆகியவை பற்றிய நீதிமொழிகள்
(1) எவ்வாறு கோபத்தை தணிப்பது (15:1-2)
(2) தேவனுடைய சர்வவியாபகம் (15:3)
(3) வேறோரு ஜீவவிருட்சம் (15:4)
(4) இரண்டு விதமான குமாரர்கள் (15:5)
(5) வேறுபட்ட நான்கு வகுப்புகள் (15:6-8)
(6) தேவன், மனுஷன் ஆகியோரின் நான்கு வேறுபட்ட காரியங்கள் (15:9-10)
(7) தேவன், மனுஷன் ஆகியோரைப் பற்றி நன்கு தெரிந்த நான்கு உண்மைகள் (15:11-12)
(8) நல்ல இருதயமும் துன்மார்க்க இருதயமும் (15:13-15)
(9) சில நல்ல காரியங்கள் (15:16-17)
(10) வேறுபட்ட எட்டு வகுப்புகள் (15:18-21)
(11) எவ்வாறு வெற்றி பெறுவது (15:22)
(12) வார்த்தைகள் எப்போது மதுரமாக இருக்கும் (15:23)
(13) ஜீவமார்க்கம் (15:24)
(14) தேவனுடைய இரண்டு பொதுவான கிரியைகள் (15:25)
(15) வேறுபட்ட ஆறு வகுப்புகள் (15:26-28)
(16) ஒன்பது எச்சரிப்புக்களும் நிச்சயங்களும் (15:29-33)
7. நம்பிக்கை பற்றிய நீதிமொழிகள்
(1) தேவனுடைய கிரியைகளில் நம்பிக்கை வைப்பதன் பத்து அம்சங்கள் (16:1-7)
(2) வேறொரு நல்ல காரியம் (16:8)
(3) தேவனிடத்தில் நம்பிக்கையாக இருப்பதன் ஐந்து அம்சங்கள் (16:9-11)
(4) இராஜாவிடத்தில் நம்பிக்கை வைப்பதன் ஏழு அம்சங்கள் (16:12-15)
(5) வேறோரு நல்ல காரியம் (16:16)
(6) ஆத்துமாவை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் (16:17)
(7) அகந்தை, மனமேட்டிமை ஆகியவற்றின் விளைவு (16:18)
(8) வேறோரு நல்ல காரியம் (16:19)
(9) சரியான தத்துவங்களில் நம்பிக்கை வைப்பதன் பத்து அம்சங்கள் (16:20-24)
(10) தவறான பாதையின் முடிவு (16:25)
(11) பொதுவான ஆறு வகுப்புகள் (16:26-31)
(12) வேறொரு நல்ல காரியம் (16:32)
(13) தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருத்தல் (16:33)
8. போதுமென்ற திருப்தியான மனம் சமாதானம் ஆகியவை பற்றிய நீதிமொழிகள்
(1) வேறொரு நல்ல காரியம் (17:1)
(2) வேலையாட்களுக்கு ஆலோசனை (17:2)
(3) இரண்டு விதமான புடமிடும் முறைகள் (17:3)
(4) நான்கு பெரிய பாவங்கள் (17:4-5)
(5) இரண்டு விதமான கிரீடங்கள் (17:6)
(6) இரண்டு தகாத காரியங்கள் (17:7)
(7) வெகுமதிகளின் வல்லமை (17:8)
(8) நண்பர்களை சம்பாதிக்கும் வழிகளும், விரோதிகளை ஏற்படுத்தும் வழிகளும் (17:9)
(9) ஒரு சில மனுஷரை எவ்வாறு பாகுபடுத்தி பிரிப்பது (17:10-11)
(10) எல்லோருக்கும் நல்ல ஆலோசனை (17:12-14)
(11) தேவன் அருவருக்கும் இரண்டு காரியங்கள் (17:15)
(12) சிலர் ஏன் புத்தியீனராகவே இருக்கிறார்கள் (17:16)
(13) உண்மையான நண்பர்களை எப்படி கண்டுபிடிப்பது (17:17)
(14) வருத்தத்திற்கு காரணமான ஏழு காரியங்கள் (17:18-21)
(15) நல்ல ஒளஷதம் (17:22)
(16) நீதியை எவ்வாறு புரட்டுவது (17:23)
(17) ஞானியும் மூடனும் (17:24-25)
(18) நல்லதல்லாத இரண்டு காரியங்கள் (17:26)
(19) இரண்டு நல்ல செயல்கள் (17:27-28)
9. சமுதாய வாழ்வில் ஜனங்களுடைய ஒழுக்கத்தைப் பற்றிய நீதிமொழிகள்
(1) மூடர்களையும் துன்மார்க்கனையும் பற்றியது (18:1-7)
(2) கோள்காரனும் சோம்பேறியும் (18:8-9)
(3) மெய்யானஅடைக்கலமும் பொய்யான அடைக்கலமும் (18:10)
(4) மறுக்கமுடியாத இரண்டு உண்மைகள் (18:11-12)
(5) பொதுவான தவறு (18:13)
(6) பலமுள்ள ஆவியின் பலன் (18:14)
(7) அறிவை எப்படி பெற்றுக் கொள்வது (18:15)
(8) சமுதாயத்தில் எப்படி முன்னேறுவது (18:16)
(9) சமுதாயத்தில் எப்படி கீழே விழுந்து போவது (18:17)
(10) சீட்டுப்போடுதல் (18:18)
(11) கடினமான வேலை (18:19)
(12) எல்லா மனுஷருக்கும் உரியது (18:20)
(13) ஜீவன் மரணம் ஆகியவற்றின் ஆதாரம் (18:21)
(14) ஆசீர்வாதத்தின் இரண்டு அம்சங்கள் (18:22)
(15) பணத்தின் வலிமை (18:23)
(16) நண்பர்களை எவ்வாறு சம்பாதிப்பது (18:24)
10. ஒருவருடைய சுபாவங்களைப் பற்றிய நீதிமொழிகள்
(1) இன்னும் மூன்று நல்ல காரியங்கள் (19:1)
(2) இரண்டு அபாயகரமான செயல்கள் (19:2-3)
(3) செல்வத்தின் வலிமை (19:4)
(4) பொய்ச்சாட்சிக்காரனுக்கு தண்டனை (19:5)
(5) மெய்யான மனுஷ சுபாவம் (19:6-7)
(6) அறிவும் ஞானமும் (19:8)
(7) பொய்ச்சாட்சிக்காரனுக்கு தண்டனை (19:9)
(8) இரண்டு விநோதமான செயல்கள் (19:10)
(9) இரண்டு நல்ல தகுதிகள் (19:11)
(10) வேறுபட்ட இரண்டு விளைவுகள் (19:12)
(11) தாங்கமுடியாத இரண்டு காரியங்கள் (19:13)
(12) மனுஷனின் இரண்டு ஆசீர்வாதங்கள் (19:14)
(13) சோம்பலின் இரண்டு முடிவுகள் (19:15)
(14) ஜீவன், மரணம் ஆகியவற்றின் வழிகள் (19:16)
(15) கர்த்தருக்கு எவ்வாறு கடன்கொடுப்பது (19:17)
(16) பழங்கால செயல் (19:18)
(17) மூடனுடைய திட்டம் (19:19)
ய. குமாரர்களுக்கு புத்திமதிகளும், போதனைகளும்
1. என் மகனே - ஆலோசனையைக் கேள் - ஆறு நீதிமொழிகள்
(1) புத்திமதியின் முடிவு (19:20)
(2) மனுஷ இருதயம் (19:21)
(3) பொய்யனைப் பார்க்கிலும் வாசி (19:22)
(4) பயத்தின் மூன்று ஆசீர்வாதங்கள் (19:23)
(5) பொதுவான மூன்று வகுப்புகள் (19:24-25)
(6) பிரயோஜனமில்லாத குமாரன் (19:26)
2. என் மகனே - 79 நீதிமொழிகள்
(1) தவறான போதகங்களைக் கேளாதே (19:27)
(2) துன்மார்க்கனைக் கண்டுபிடிப்பது எப்படி (19:28)
(3) ஆயத்தமாக இருக்கும் இரண்டு காரியங்கள் (19:29)
(4) மூன்று பெரிய உண்மைகள் (20:1)
(5) பயத்தின் இரண்டு காரியங்கள் (20:2)
(6) மெய்யான மகிமையும் அவமானமும் (20:3)
(7) சிலர் ஏன் பிச்சை கேட்கிறார்கள் (20:4)
(8) வேறுபடுத்தப்பட்ட துரவுகள் (20:5)
(9) அரிதான காரியங்கள் (20:6)
(10) பிரயோஜமான நடத்தை (20:7)
(11) நன்மைக்கு ஊழியம் செய்பவர் (20:8)
(12) பெரிய கேள்வி (20:9)
(13) இரண்டு அருவருப்பான காரியங்கள் (20:10)
(14) பொதுவான அறிவு (20:11)
(15) இரண்டு சிருஷ்டிக்கப்பட்ட காரியங்கள் (20:12)
(16) தரித்திரத்திலிருந்து தப்பிக்கும் வழி (20:13)
(17) பொதுவான செயல் (20:14)
(18) ஐசுவரியத்தை விட நன்மையானது (20:15)
(19) இரட்டிப்பான பாதுகாப்பு (20:16)
(20) விதைப்பும் அறுப்பும் (20:17)
(21) தெளிவான ஆலோசனை (20:18-19)
(22) மாறாத மூன்று பிரமாணங்கள் (20:20-22)
(23) இரண்டு அருவருப்பான காரியங்கள் (20:23)
(24) தேவனுடைய பராமரிப்பு (20:24)
(25) மார்க்கத்தில் இரண்டு தீமைகள் (20:25)
(26) நன்மைக்காக ஊழியம் செய்கிறவன் (20:26)
(27) மனுஷனின் ஒளி (20:27)
(28) இராஜாவைக் காக்கும் காரியம் (20:28)
(29) வேறுபட்ட மகிமை (20:29)
(30) இரண்டுவிதமான சுகமாதல் (20:30)
(31) மனுஷனை உண்மையாக ஆளுபவன் (21:1)
(32) கவனிக்க வேண்டிய காரியம் (21:2)
(33) பலிகளைவிட மேன்மையானது (21:3)
(34) மூன்று பொதுவான பாவங்கள் (21:4)
(35) மனுஷனின் ஏழு வழிகள் (21:5-8)
(36) வேறொரு நல்ல காரியம் (21:9)
(37) ஆறு பொதுவான வகுப்புகள் (21:10-12)
(38) விதைப்பும் அறுப்பும் (21:13)
(39) கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி (21:14)
(40) இரண்டுவிதமான சந்தோஷங்கள் (21:15)
(41) செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பது (21:16)
(42) எவ்வாறு தரித்திரனாய் இருப்பது (21:17)
(43) மனுஷனைக் காக்கும் இரகசியம் (21:18)
(44) வேறொரு நல்ல காரியம் (21:19)
(45) திரவியத்தை எவ்வாறு காத்துக் கொள்வது (21:20)
(46) நீதியாக வாழ்வதினால் மூன்று ஆசீர்வாதங்கள் (21:21)
(47) பெலத்தைவிட ஞானம் பெரியது (21:22)
(48) பாதுகாப்பின் இரகசியம் (21:23)
(49) ஆறு பொதுவான வகுப்புகள் (21:24-29)
(50) தேவன் தீமைக்கு செவிசாய்க்க மாட்டார் (21:30)
(51) மெய்யான பாதுகாப்பு (21:31)
(52) இரண்டு நல்ல தெரிந்தெடுப்புகள் (22:1)
(53) எல்லோரையும் சிருஷ்டித்தவர் (22:2)
(54) காண்பதன் ஆசீர்வாதம் (22:3)
(55) ஆசீர்வாதங்களின் இரண்டு ஆதாரங்கள் (22:4)
(56) கண்ணிகளிலிருந்து எவ்வாறு தப்பிப்பது (22:5)
(57) மாறாத பிரமாணம் (22:6)
(58) இரண்டு விதமான ஆளுநர்கள் (22:7)
(59) இரண்டு மாறாத பிரமாணங்கள் (22:8-9)
(60) எவ்வாறு சமாதானத்தை உண்டாக்குவது (22:10)
(61) எவ்வாறு நண்பர்களை ஆதாயப் படுத்துவது (22:11)
(62) தேவனுடைய இரண்டு கிரியைகள் (22:12)
(63) சோம்பேறி (22:13)
(64) மூடனின் படுகுழி (22:14)
(65) மதியீனத்திற்கு மாற்று மருந்து (22:15)
(66) குறைச்சல் உண்டாவதற்கு இரண்டு காரணங்கள் (22:16)
3. என் மகனே - இருபத்தைந்து கட்டளைகள்
(1) மூன்று கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (22:17-19)
(2) நான் எழுதியிருக்கிறேன் - இரண்டு காரணங்கள் (22:20-21)
(3) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (22:22-23)
(4) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (22:24-25)
(5) இரண்டு கட்டளைகள் - காரணம் (22:26-27)
(6) ஒரு கட்டளை (22:28)
(7) ஜாக்கிரதையாக இருப்பதற்கு இரண்டு ஆசீர்வாதங்கள் (22:29)
(8) ஐந்து கட்டளைகள் - நான்கு காரணங்கள் (23:1-5)
(9) இரண்டு கட்டளைகள் - நான்கு காரணங்கள் (23:6-8)
(10) ஆறு கட்டளைகள் - ஆறு காரணங்கள் (23:9-14)
4. என் மகனே
(1) பெற்றோரை எவ்வாறு சந்தோஷப்படுத்துவது (23:15-16)
(2) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (23:17-18)
5. என் மகனே
(1) நான்கு கட்டளைகள் - நான்கு காரணங்கள் (23:19-21)
(2) நான்கு கட்டளைகள் (23:22-23)
(3) பெற்றோரை எவ்வாறு சந்தோஷப்படுத்துவது (23:24-25)
6. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - காரணம் (23:26-28)
(2) ஏழு பெரிய கேள்விகள் - விடைகள் (23:29-30)
(3) மதுபானத்திற்கு எதிரான கட்டளை - காரணத்தின் பத்து அம்சங்கள் (23:31-35)
(4) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (24:1-2)
(5) ஞானம், அறிவு ஆகியவற்றின் ஆசீர்வாதத்தின் எட்டு அம்சங்கள் (24:3-6)
(6) மதியீனனுடைய விளக்கத்தின் ஐந்து அம்சம் (24:7-9)
(7) குமாரர்கள் செய்யக்கூடாத மூன்று காரியங்கள் (24:10-12)
7. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (24:13-14)
(2) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (24:15-16)
(3) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (24:17-18)
(4) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (24:19-20)
8. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - இரண்டு காரணங்கள் (24:21-22)
(2) ஐந்து அம்ச ஆலோசனை (24:23-26)
(3) ஆறு கட்டளைகள் (24:27-29)
(4) சோம்பேறி (24:30-34)
யஒ. ஐம்பத்தொன்று நீதிமொழிகள்
1. ஆசிரியர் (25:1)
2. தேவனுக்கும் இராஜாக்களும் இடையேயுள்ள வேற்றுமைகள் (25:2)
3. ஆராயமுடியாத மூன்று காரியங்கள் (25:3)
4. நல்ல ஒப்புமை (25:4-5)
5. தாழ்மையின் பிரமாணம் (25:6-7)
6. அயலாருக்கு நல்ல ஆலோசனை (25:8-10)
7. பொற்பழம் (25:11)
8. கடிந்து கொள்வதன் ஆசீர்வாதம் (25:12)
9. நல்ல செய்திகளின் விளைவு (25:13)
10. பெரிய ஏமாற்றம் (25:14)
11. ஞானத்தின் இரண்டு கிரியைகள் (25:15)
12. தெளிவான ஆலோசனை (25:16)
13. நண்பர்களை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது (25:17)
14. பொய்ச்சாட்சிக்காரரின் மூன்று அடையாளங்கள் (25:18)
15. தவறாக வைக்கப்படும் நம்பிக்கை (25:19)
16. ஆறுதல்படுத்தும் தவறான வழி (25:20)
17. தாக்குதலின் பிரமாணம் (25:21-22)
18. புறங்கூறுவதை எவ்வாறு சமாளிப்பது (25:23)
19. வேறொரு நல்ல காரியம் (25:24)
20. நல்ல செய்திகளின் விளைவு (25:25)
21. கெட்டுப்போன செயல் (25:26)
22. இரண்டு காரியங்கள் நல்லதல்ல (25:27)
23. இரண்டு விதமான பாழ் (25:28)
24. மூன்று விநோத காரியங்கள் (26:1)
25. காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது (26:2)
26. மூன்று நேர்த்தியான காரியங்கள் (26:3)
27. மூடனுக்கு எவ்வாறு உத்தரவு கொடுப்பது (26:4-5)
28. மூடனின் செயல் (26:6)
29. மூடரும் உவமைகளும் (26:7)
30. மூடனுக்கு கனத்தை கொடுக்கிறவன் (26:8)
31. மூடரும் உவமைகளும் (26:9)
32. தேவன் மூடரையும் பாவிகளையும் வேலை கொள்கிறார் (26:10)
33. இரண்டு செயல்கள் (26:11)
34. ஞானியும் மூடரும் (26:12)
35. சோம்பேறியின் நான்கு செயல்கள் (26:13-16)
36. தீய பழக்கம் (26:17)
37. இரண்டுவிதமான பைத்தியக்காரர்கள் (26:18-19)
38. இரண்டு விதமான எரிப்புகள் (26:20-21)
39. கோள் சொல்வதினால் ஏற்படும் விளைவு (26:22)
40. மாய்மாலம் (26:23)
41. பகைஞனின் ஐந்து பாவங்கள் (26:24-26)
42. பழிவாங்குவதன் பிரமாணம் (26:27)
43. பகையை எவ்வாறு அளப்பது (26:28)
யஒஒ. குமாரருக்கு புத்திமதிகளும் போதனைகளும்
1. என் மகனே
(1) மூன்று கட்டளைகள் - காரணம் (27:1-2)
(2) மூன்று பாரமான காரியங்கள் (27:3)
(3) மூன்று கொடுமையான காரியங்கள் (27:4)
(4) மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் நலமானது (27:5)
(5) முத்தங்களை விட அடிகள் நல்லவை (27:6)
(6) வேறுபட்ட பதார்த்தங்கள் (27:7)
(7) இரண்டு அலையும் சிருஷ்டிகள் (27:8)
(8) நட்புக்கு ஆலோசனை (27:9-10)
2. என் மகனே
(1) இரண்டு கட்டளைகள் - காரணம் (27:11)
(2) காண்பதன் ஆசீர்வாதம் (27:12)
(3) இரட்டிப்பான பாதுகாப்பு (27:13)
(4) சந்தேகத்திற்கு காரணம் (27:14)
(5) ஒன்றுபோல் இருக்கும் இரண்டு காரியங்கள் (27:15-16)
(6) இரண்டு கூர்மையான காரியங்கள் (27:17)
(7) சேவைக்கு வெகுமதி (27:18)
(8) இரண்டு விதமான கண்ணாடிகள் (27:19)
(9) திருப்தியடையாத மூன்று காரியங்கள் (27:20)
(10) புடமிடப்பட்ட மூன்று காரியங்கள் (27:21)
(11) செய்ய முடியாத வேலை (27:22)
(12) இரண்டு கட்டளைகள் - பத்து அம்ச காரணம் (27:23-27)
யஒஒஒ. ஐம்பத்தைந்து நீதிமொழிகள்
1. எட்டு வேறுபட்ட வகுப்புகள் (28:1-5)
2. வேறொரு நல்ல காரியம் (28:6)
3. இரண்டு விதமான குமாரர்கள் (28:7)
4. ஐசுவரியம் தற்காலிகமானது (28:8)
5. ஏன் சில ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை (28:9)
6. பழிவாங்குதலின் பிரமாணம் (28:10)
7. மாறுபட்ட நான்கு வகுப்புகள் (28:11-12)
8. வளவாழ்வின் இரகசியம் (28:13-14)
9. இரக்கமில்லா மூன்று காரியங்கள் (28:15)
10. பொதுவான பத்து வகுப்புகள் (28:16-22)
11. நாவின் இரண்டுவித பயன்பாடுகள் (28:23)
12. தவறான பயிற்சியின் விளைவு (28:24)
13. மாறுபட்ட எட்டு வகுப்புகள் (28:25-28)
14. கலகக்காரரின் சடிதியான முடிவு (29:1)
15. இரண்டுவிதமான அரசாங்கம் (29:2)
16. இரண்டு விதமான குமாரர்கள் (29:3)
17. நிலையான, நிலையற்ற ஆட்சிகளுக்கு காரணங்கள் (29:4)
18. சந்தேகத்தின் காரணம் (29:5)
19. பத்து பொதுவான வகுப்புகள் (29:6-11)
20. பாவத்தைப் பெருக்கும் விதம் (29:12)
21. தரித்திரனும் கடன்காரனும் (29:13)
22. பாவத்தைக் குறைக்கும் விதம் (29:14)
23. பிள்ளையைக் கெடுக்கும் விதம் (29:15)
24. சமுதாயம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது (29:16)
25. சிட்சிக்கப்படுவதற்கு வெகுமதிகள் (29:17)
26. தரிசனத்தின் முக்கியத்துவம் (29:18)
27. உண்மையில்லா ஊழியக்காரன் (29:19)
28. மூடனும் வார்த்தைகளில் பதறுகிறவனும் (29:20)
29. உண்மையுள்ளவனுக்கு வெகுமதி (29:21)
30. ஒரே மாதிரியான இரண்டு காரியங்கள் (29:22)
31. பெருமை, தாழ்மை ஆகியவற்றின் முடிவு (29:23)
32. துன்மார்க்கத்தில் பங்காளிகள் (29:24)
33. பயம், நம்பிக்கை ஆகியவற்றின் முடிவுகள் (29:25)
34. இரண்டுவிதமான நியாயத்தீர்ப்புகள் (29:26)
35. வேறுபட்ட நான்கு வகுப்புகள் (29:27)
ஒல. ஆகூரின் வாக்கியங்கள்
1. மனுஷருக்கு ஆகூரின் உபதேசம் (30:1-3)
2. தேவனைப் பற்றிய உபதேசம் (30:4-6)
3. தேவனிடம் ஜெபம் (30:7-9)
4. மனுஷருக்கு புத்திமதி (30:10)
5. இரண்டு கணக்கீடுகளின் நான்கு அம்சங்கள்
(1) நான்கு சந்ததிகள் (30:11-14)
(2) இரண்டு பிச்சைக்காரர்களும் திருப்தியடையாத நான்கு காரியங்களும் (30:15-16)
6. பெற்றோரை பரியாசம் பண்ணுவது சாபம் (30:17)
7. நான்கு அம்ச கணக்கீடுகள்
(1) புத்திக்கெட்டாத நான்கு காரியங்கள் (30:18-20)
(2) தாங்கமாட்டாத நான்கு காரியங்கள் (30:21-23)
(3) சிறியவைகளாக இருந்தும் ஞானமுள்ள நான்கு காரியங்கள் (30:24-28)
(4) விநோத நடையுள்ள நான்கு காரியங்கள் (30:29-31)
8. மனுஷருக்கு புத்திமதிகள் (30:32-33)
ல. இராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்
1. எச்சரிப்புக்கள் - திராட்சை ரசமும் ஸ்திரீகளும் (31:1-7)
2. நீதிக்கு புத்திமதிகள் (31:8-9)
3. குணசாலியான ஸ்திரீ - முப்பத்தைந்து விளக்கம்
(1) அவளுடைய சுபாவம் (31:10)
(2) அவளுடைய புருஷனின் நம்பிக்கை (31:11-12)
(3) ஓயாமல் அவள் வேலை செய்வாள் (31:13-19)
(4) சிறுமையானவர்களுக்கு உதவி புரிவாள் (31:20)
(5) அவளுடைய வீட்டார் (31:21)
(6) அவளுடைய தோற்றம் (31:22)
(7) அவளுடைய புருஷன் பேர்பெற்றவனாய் இருப்பான் (31:23)
(8) அவளுடைய தொழில் (31:24)
(9) அவளுடைய பண்பு (31:25-26)
(10) அவளுடைய சுறுசுறுப்பும் வேலையும் (31:27)
(11) அவளுடைய புகழ்ச்சியும் கர்த்தருக்கு பயப்படுகிற பயமும் (31:28-31)
1 அதிகாரம்
சங்கீதப்புஸ்தகத்தில் தேவனாகிய கர்த்தருடைய மகிமை விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் நம்முடைய துதிகளுக்குப் பாத்திரராயிருக்கிறார் என்றும், நாம் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டுமென்றும் சங்கீதப்புஸ்தகத்தில் நமக்கு ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. சங்கீதப்புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற வாக்கியங்களெல்லாம் சபையின் பக்திவிருத்திக்காக எழுதப்பட்டவை. சபை உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தவான்களின் ஐக்கியமாக பாவிக்கப்பட்டு, சங்கீதப்புஸ்தகம் கோர்க்கப்பட்டிருக்கிறது. மனுஷருடைய பிரபஞ்ச ஜீவியத்திற்கும், சங்கீதப்புஸ்தகத்திற்கும் அதிகமான சம்பந்தம் இருக்காது. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மாத்திரமே சங்கீதத்தில் அதிகக்கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.
நாம் இந்தப் பூமியில் ஜீவிக்கிற காலம் வரையிலும், இந்த உலகத்தைவிட்டு விலகிப்போய்விடமுடியாது. உலகத்து மனுஷர்களைவிட்டு தனியாக ஒதுங்கிப்போய்விடவும் முடியாது. நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற காலம் வரையிலும், நம்முடைய மாம்ச சரீரத்தில்தான் ஜீவிக்கவேண்டும். நம்மிடத்தில் உலகசிநேகம் இருக்கக்கூடாது. ஆனாலும் நம்மால் இந்த உலகத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டு, தனியாகப் போய்விடவும் முடியாது. நாம் இந்த உலகத்தில் ஆவிக்குரிய ஜீவியம் ஜீவிக்கவேண்டும்.
நாம் இந்த உலகத்திலிருந்தாலும், இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது. நாம் இந்த உலகத்திலிருந்தாலும், நாம் உலகத்திற்குரியவர்களல்ல. நம்முடைய நித்திய குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது. அதுவரையிலும் நாம் இந்த உலகத்தில்தான் ஜீவிக்கவேண்டும். நம்முடைய மாம்ச சரீரத்தில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்கவேண்டும்.
ஆகையினால் நமக்கு ஆவிக்குரிய உபதேசமும் தேவைப்படுகிறது. அதோடு சேர்ந்து, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எப்படி ஜீவிக்கவேண்டு என்னும் உபதேசமும், இம்மையில் கர்த்தரை எப்படி மகிமைப்படுத்த வேண்டும் என்னும் உபதேசமும் நமக்குத் தேவைப்படுகிறது. சங்கீதப்புஸ்தகத்தில் நமக்குத் தேவையான ஆவிக்குரிய உபதேசங்கள் ஏராளமாயுள்ளன. நீதிமொழிகள் புஸ்தகத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் கர்த்தருக்குப் பயந்து, பரிசுத்தமாகவும், பயபக்தியோடும் எப்படி ஜீவிப்பது என்பதற்கான உபதேசங்கள் தாரளமாயுள்ளன.
நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்கும்போது கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். கர்த்தரே நம்முடைய ஜீவியத்தை ஆளுகை செய்யவேண்டும். நாம் நம்மிடத்தில் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்புகூரவேண்டும். நம்முடைய ஜீவியம் கர்த்தருக்கு பிரியமுள்ளதாகவும், பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கவேண்டும். நம்முடைய முகத்தில் தேவனுடைய மகிமைப்பிரகாசம் காணப்படவேண்டும். நாம் கர்த்தருக்கு சாட்சியாய் ஜீவிக்கவேண்டும். மனுஷர் மத்தியிலே நாம் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும், உண்மையுள்ளவர்களாவும் ஜீவிக்கவேண்டும். நம்முடைய பேச்சிலும் செயலிலும் பரிசுத்தம் இருக்கவேண்டும்.
நம்முடைய மாம்சப்பிரகாரமான சரீரம் இந்தப் பிரபஞ்சத்தில் நடமாடிக்கொண்டிருந்தாலும், நம்முடைய இருதயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளும், அவருடைய உபதேசமும் நிரம்பியிருக்கவேண்டும். கர்த்தரைத் துதிக்கும் துதி நம்முடைய வாயிலிருந்து எப்போதும் புறப்பட்டு வரவேண்டும்.
நீதிமொழிகள் புஸ்தகத்தின் பொதுவான நோக்கமும், அதன் திட்டமும் விவரிக்கப்பட்டிருக்கிறது (நீதி 1:1-6). நம்முடைய ஜீவியத்தில் நாம் அதிகக்கவனம் செலுத்தவேண்டிய மிகவும் முக்கியமான காரியங்கள் (நீதி 1:7-9). நாம் பாவிகளோடு ஐக்கியமாயிருக்கக்கூடாது (நீதி 1:10-19). நாம் ஞானமுள்ள உபதேசத்திற்கு செவிகொடுக்கவேண்டும் (நீதி 1:20-33).
நீதிமொழிகள்
நீதி 1:1
நீதி 1:1. தாவீதின் குமாரனும் இஸ்ரவே-ன் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
நீதிமொழிகள் புஸ்தகத்தின் முன்னுரை பகுதியை எஸ்றா தொகுத்து எழுதியிருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். ஆனாலும் அவர்களில் அநேகர், இந்தப் புஸ்தகத்தின் முன்னுரை பகுதியை சாலொமோன் ராஜாவே எழுதினார் என்றே நம்புகிறார்கள். சாலொமோன் இந்தப் புஸ்தகத்தின் ஆரம்பத்தில், தான் இதை எழுதுவதற்கான நோக்கத்தையும், திட்டத்தையும் தெளிவுபடுத்துகிறார்.
நீதிமொழிகள் எல்லாமே ஞானமுள்ள வாக்கியங்கள். இவை சாலொமோனின் நீதிமொழிகள். சாலொமோன் என்னும் பெயருக்கு ""சமாதானம்'' என்று பொருள். சாலொமோனின் ஆவியிலும், அவருடைய ஆட்சியிலும் சாமாதானம் நிரம்பியிருந்தது. தாவீதின் ஆட்சிக்காலத்தில் அநேக யுத்தங்கள் நடைபெற்றன. ஜனங்கள் மத்தியில் இரத்தம் சிந்துதலும் அதிகமாயிருந்தது. தாவீதின் கரங்களும் இரத்தத்தினால் கறைபட்டிருந்தது.
தாவீது ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியில் ஜீவித்தார். அவருக்கு பாடுகளும் வேதனைகளும் அதிகமாய் உண்டாயிற்று. இவையெல்லாவற்றிற்கும் மத்தியில் தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்தார். கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணி, கர்த்தரை நம்பி ஜீவித்தார். இந்த சூழ்நிலையில் தாவீது கர்த்தரைத் துதித்துப் பாடும் துதியின் கீதங்களை எழுதினார். ""உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன், ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்'' (யாக் 5:13) என்று அப்போஸ்தலர் யாக்கோபு சொல்லுகிறார்.
சாலொமோன் அமைதியான காலத்தில் ஜீவித்தார். தேசத்தில் அமைதி நிலவிற்று. இந்தக்காலத்தில் ஜனங்களுக்கு உபதேசம்பண்ணுவதற்காக சாலொமோன் நீதிமொழிகள் புஸ்தகத்தை எழுதியிருக்கிறார். ஜனங்கள் அமைதியாயிருக்கும்போது, அவர்களுக்கு உபதேசம்பண்ணவேண்டும். சாமாதானக்காலத்தில் நாம் கர்த்தருடைய வசனங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கும் உபதேசம்பண்ணவேண்டும். அப்போதுதான் நமக்கு கஷ்டகாலம் வரும்போது, நாம் கற்றுக்கொண்ட உபதேசங்களை, நம்முடைய ஜீவியத்தில் அப்பியாசம்பண்ணுவதற்கு ஏதுவாயிருக்கும்.
சாலொமோன் தாவீதின் குமாரன். தாவீது சாலொமோனுக்காக கர்த்தருடைய சமுகத்தில் அநேகந்தரம் ஜெபித்திருக்கிறார். ""தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புக்களையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்'' (சங் 72:1) என்பது தாவீதின் ஜெபம். கர்த்தர் தாவீதின் ஜெபத்தைக் கேட்டு, அவருடைய குமாரன் சாலொமோனை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தர் சாலொமோனுக்கு ஏராளமான ஞானத்தைக் கொடுத்திருக்கிறார்.
சாலொமோன் இஸ்ரவேலின் ராஜா. அவர் சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக ஆட்சிபுரிந்தார். பூமியின் எல்லா தேசங்களிலிருந்தும் சாலொமோனின் ஞானத்தைக் கேட்பதற்காக ஏராளமான ஜனங்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது (1இராஜா 4:29,30). சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முக தரிசனத்தைத் தேடினார்கள் (1இராஜா 10:24). பரிசுத்த ஆவியானவர் சாலொமோனின் இருதயத்தை ஏவினார். சாலொமோன் நீதிமொழிகள் புஸ்தகத்தை எழுதினார்.
வேதாகமத்திலுள்ள புஸ்தகங்களில் நீதிமொழிகளின் புஸ்தகமே முதன் முறையாக ஆசிரியரின் பெயரோடு கூறப்பட்டிருக்கிறது. ""சாலொமோனின் நீதிமொழிகள்'' என்பதே இந்தப் புஸ்தகத்தின் முழுமையான தலைப்பாகும். (நீதி 1:1; நீதி 10:1; நீதி 25:1; நீதி 30:1; நீதி 31:1).
""நீதிமொழி'' என்பதற்கான எபிரெய வார்த்தை ""மஷல்'' என்பதாகும். இதற்கு ஆளுகை செய்தல் என்று பொருள். நீதிமொழிகள் புஸ்தகம் மனுஷருடைய ஞானவார்த்தைகளல்ல. இது தேவனுடைய சட்டதிட்டங்களாகும். மனுஷருடைய நடத்தைகளை ஆளுகை செய்வதற்குப் பரிசுத்த ஆவியானவர் கூறியிருக்கும் கட்டளைகள். மனுஷன் தன்னுடைய குடும்ப வாழ்வு, ஆவிக்குரிய வாழ்வு, வியாபாரம், தொழில், சமுதாய வாழ்வு ஆகியவற்றில் இந்த நீதிமொழிகளைப் பயன்படுத்தி ஜீவிக்க வேண்டும்.
நீதிமொழிகள் பலவிதமாகப் பயன்படுத்தப் படுகிறது. இது ஒரு உருவகமாகவும் (எசே 17:2);, சம்பாஷணையாகவும் (எண் 23:7-8); ஜெயக் கீதமாகவும் (ஏசா 14:4); விவாதமாகவும் (யோபு 29:1); பழமொழியாகவும் (சங் 44:14); புலம்பலாகவும் (மீகா 2:4); மூதுரையாகவும் (நீதி 1:1; 1இராஜா 4:32; 2நாளா 7:20; சங் 69:11; எரே 24:9); உவமையாகவும் (எசே 20:49) பயன்படுத்தப்படுகிறது.
நீதிமொழிகளைக் கேட்ட புத்திமான்கள்
1. கந்தாகேயின் மந்திரி (அப் 8:27,39)
2. செர்கியு பவுல் (அப் 13:7)
3. பெரோயா பட்டணத்தார் (அப் 17:11-12)
4. அப்பொல்லோ (அப் 18:24-28)
5. இயேசு கிறிஸ்து (ஏசா 50:4-6)
உபதேசம்
நீதி 1 : 2,3
நீதி 1:2. இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,
நீதி 1:3. விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
எல்லோருக்கும் பயன்படுமாறும், பிரயோஜனம் உண்டாகுமாறும் நீதிமொழிகள் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்திலுள்ள வாக்கியங்கள் நமக்கு எவ்வாறு உதவியாயிருக்கும் என்பது பற்றியும், சாலொமோன் இந்தப் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் முன்னுரையாகச் சொல்லுகிறார். அவையாவன :
1. நாம் ஒவ்வொரு காரியத்தைப்பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய மனதில் நமக்கு ஒவ்வொரு காரியத்தையும் சரியாகப் பகுத்தறியத் தெரியவேண்டும். ஞானமாக எப்படி பேசுவது, ஞானமாக எப்படி கிரியை நடப்பிப்பது என்பதெல்லாம் நமக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டும். நீதிமொழிகள் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற உபதேசங்கள் இவற்றை சீராக செய்வதற்கு நமக்கு உதவியாயிருக்கும்.
2. நமக்கு நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியவேண்டும். நாம் சத்தியத்திற்கும் பொய்க்கும் வித்தியாசம் அறிந்திருக்கவேண்டும். நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிற உபதேசங்களை கற்றுக்கொள்ளும்போது, நாம் விவேகம், நீதி, நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்துகொள்ளலாம். புத்திமதிகளை உணர்ந்துகொள்ளலாம்.
நாம் பிறரோடு பேசும்போது ஞானமுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டும். நம்முடைய பேச்சில் சுத்தமும் தெளிவும் இருக்கவேண்டும். நீதிமொழிகள் புஸ்தகத்தைத் தியானிக்கும்போது நமக்கு ஞானமுள்ள வார்த்தைகள் கிடைக்கும். நம்முடைய புத்தி தெளிவடையும். நாம் தேவனுக்குரிய மகிமையை தேவனுக்கு செலுத்தவேண்டும். தேவனுக்குரிய மகிமை எது என்பதை அறிந்துகொள்வதற்கு நீதிமொழிகள் புஸ்தகம் நமக்கு உதவியாயிருக்கும். தேவனுக்குரிய மகிமையை நாம் தேவனுக்கு செலுத்தும்போது, நாம் மனுஷருக்குரிய கனத்தையும், மரியாதையையும் அவர்களுக்கும் செலுத்தவேண்டும். இதற்கும் நீதிமொழிகள் புஸ்கதம் நமக்கு உதவியாயிருக்கும்.
நீதிமொழிகள் எழுதப்பட்டிருப்பதன் நோக்கம்
1. ஞானத்தை அறிய (நீதி 1:2)
2. போதகத்தை அறிய
3. புத்திமதிகளை உணர
4. விவேகத்தைப் பற்றிய உபதேசத்தை அடைய (நீதி 1:3)
5. நீதியைப் பற்றிய உபதேசத்தை அடைய
6. நியாயத்தைப் பற்றிய உபதேசத்தை அடைய
7. நிதானத்தைப் பற்றிய உபதேசத்தை அடைய
8. பேதைகளுக்கு வினாவைக் கொடுக்க (நீதி 1:4)
9. வா-பருக்கு அறிவைக் கொடுக்க
10. வா-பருக்கு விவேகத்தைக் கொடுக்க.
11. புத்திமான் இவைகளைக் கேட்க. (நீதி 1:5)
12. அறிவில் தேற
13. விவேகி நல்லாலோசனைகளை அடைய
14. ஞானிகளின் வாக்கியங்களை நீதிமொழிகளால் வெளிப்படுத்த (நீதி 1:6)
15. ஞானிகள் உரைத்த புதை பொருள்களையும் அறிந்துகொள்ள.
பேதைகளும், வாலிபரும், புத்திமான்களும்
நீதி 1 : 4-6
நீதி 1:4. இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வா-பருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
நீதி 1:5. புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
நீதி 1:6. நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.
நீதிமொழிகள் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற உபதேசங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாயிருக்கும். அதிலும் விசேஷமாய் பேதைகளுக்கும், வாலிபருக்கும், புத்திமான்களுக்கும் இவை மிகுந்த பிரயோஜனத்தைக் கொடுக்கும். நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிற உபதேசங்கள் மிகவும் தெளிவானவை. இவை பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும், விவேகத்தையும் கொடுக்கும் (நீதி 1:4).
நீதிமொழிகள் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற உபதேசங்களை நாம் கேட்கும்போது, நம்முடைய அறியாமையும், நம்முடைய பேதமையும் நமக்குத் தெரியவரும். நமக்கு எல்லாம் தெரியாது என்பதையும், நமக்கு உபதேசம் தேவை என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். இந்த உபதேசங்களைக் கேட்கிறவர்கள் ஒருவேளை பேதைகளாகயிருக்கலாம். ஆனாலும் இவற்றைக் கேட்கும்போது அவர்களுடைய உள்ளத்திலும் வினா உண்டாகும். தாங்கள் விலகவேண்டிய பாவங்களையும், தாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் நீதிமொழிகள் புஸ்தகம் அவர்களுக்குப் போதிக்கும்.
வாலிபருக்கு அறிவும் விவேகமும் தேவைப்படுகிறது. வாலிபவயது கற்றுக்கொள்கிற வயது. வாலிபருக்கு நாம் போதிக்கும்போது, நம்முடைய போதனைகள் அவர்களுடைய உள்ளத்தில் அப்படியே பதிந்துவிடும். வாலிபர்கள் தாங்கள் பெற்றுக்கொள்வதை, தங்கள் இருதயத்தில் முற்றிலுமாகச் சேர்த்துக்கொள்வார்கள். அவற்றைத் தங்களுக்குள் பதியவைத்துக்கொள்வார்கள்.
வாலிபப்பிராயம் துடுக்கும் வேகமும் நிரம்பிய பிராயம். அவர்கள் எல்லா காரியங்களிலும் முன்னால் நிற்பார்கள். பின்விளைவுகளை அதிகமாய்ச் சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள். காட்டுக்கழுதை ஒன்றுக்குக் கீழ்ப்படியாது. அதை நமக்குப் பயன்படுத்தவேண்டுமென்றால், காட்டுக்கழுதையை பழக்கவேண்டும். அதற்கு அநேக கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். அதைச் சரியாக பராமரிக்கவேண்டும். அப்போதுதான் காட்டுக்கழுதை நாட்டுக்கழுதையாக மாறும்.
மனுஷன் பிறக்கும்போதே, அவனிடத்தில் பாவசுபாவம் இருக்கிறது. பாவசுபாவமுள்ள மனிதன் எதற்கும், யாருக்கும் கீழ்ப்படியமாட்டான். அப்படிப்பட்டவர்களை நாம் பயன்படுத்தவேண்டுமென்றால், அவர்களை நல்வழியில் பழக்கப்படுத்தவேண்டும். அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். சரியான பாதையில் அவர்களைக் கரம்பிடித்து வழிநடத்தவேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களுக்கும், பிறருக்கும் பிரயோஜனமுள்ளவர்களாயிருப்பார்கள்.
நம்மிடத்திலுள்ள வாலிபர்களுக்கு அறிவும் விவேகமும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு சரியான பயிற்சி கொடுத்தால், அவர்கள் மற்ற எல்லா வயதினரையும்விட, அதிக பிரயோஜனமுள்ளவர்களாயிருப்பார்கள். வாலிபரிடத்தில் சரீர பெலனும், தெம்பும், வேகமும் அதிகமாயிருக்கும். வாலிபர்களைப் பயன்படுத்தவேண்டுமென்றால் , அவர்களுக்கு ஞானமுள்ள உபதேசத்தைக் கொடுக்கவேண்டும்.
சாலொமோன் நீதிமொழிகள் புஸ்கத்தை எழுதும்போது தன்னுடைய பின்சந்ததியாரையும் நோக்கிப் பார்க்கிறார். வாலிபர்கள் அறிவும் விவேகமும் பெற்றிருக்கவேண்டும் என்று விரும்புகிறார். தனக்கு அடுத்து வருகிற சந்ததியார் ஞானம் நிரம்பியவர்களாயிருக்க வேண்டும் என்று சாலொமோன் எதிர்பார்க்கிறார். வாலிபர்களுக்கு விசேஷித்த உபதேசத்தைக் கொடுக்கும் வகையில், சாலொமோன் அவர்களுக்கு அநேக புத்திமதிகளைச் சொல்லுகிறார். சாலெமோனுடைய நீதிமொழிகளில் வாலிபருக்கும் உபதேசம் இருக்கிறது. பேதைகளுக்கும் உபதேசம் இருக்கிறது.
வாலிபருக்கும், பேதைகளுக்கும் உபதேசம் பண்ணினால் மாத்திரம் போதாது. புத்திமான்களுக்கும், விவேகிகளுக்கும், ஞானிகளுக்கும் உபதேசம்பண்ணவேண்டும். அவர்களும் சத்தியத்தைக் கேட்கவேண்டும். தங்களுக்கு எல்லாம் தெரியுமென்று அவர்கள் ஆணவமாயிருக்கக்கூடாது. அவர்களிடத்திலும் கற்றுக்கொள்ளும் ஆவியிருக்கவேண்டும். ஞானி அதிகமாய்க் கற்றுக்கொள்ளும்போது, அவர் அநேகருக்குப் பிரயோஜனமுள்ளவராயிருப்பார்.
புத்திமான் நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிற உபதேசங்களைக் கேட்கும்போது, அவன் அறிவில் தேறுவான். விவேகி நல்ல ஆலோசனைகளை அடைவான். இவர்களால் தங்களுக்கும், பிறருக்கும் நல்ல ஆலோசனைகளைச் சொல்ல முடியும். இவர்கள் நியாயசனத்தில் அமர்ந்திருக்கும்போது, வழக்குகளை நியாயமாய் விசாரித்து, தீர்ப்புக்களை நீதியாகவும், ஞானமாகவும் சொல்லுவார்கள்.
கர்த்தர் நம்மை ஞானத்தினால் ஆசீர்வதித்திருக்கும்போது, இந்த ஞானத்தை நமக்கும், மற்றவர்களுக்கும் எப்படி பிரயோஜனப்படுத்துவது என்பதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். பிரபுக்களுக்கு ஆலோசனை சொல்லுவது மிகுந்த கனத்திற்குரியது. இதனால் ஆலோசனை சொல்லுகிறவர்களுக்கு மேன்மை உண்டாகும். தரித்திரருக்கு ஆலோசனை சொல்லும்போது, தரித்திரருக்கு பிரயோஜனமுண்டாகும். ஞானிகள் தங்களுடைய பிரயோஜனத்தை மாத்திரம் தேடாமல், பிறருடைய பிரயோஜனத்தையும் தேடவேண்டும்.
நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிற உபதேசங்களைக் கேட்கும்போது, விவேகி நல்ல ஆலோசனைகளை அடைவார். அவர் நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியத்தையும், அவர்கள் உரைத்த புதைப்பொருள்களையும் அறிந்துகொள்வார். சாலொமோன் ஞானத்தில் சிறந்தவர். அவர் ஞானிகளின் வாக்கியத்தில் புதைந்திருக்கிற புதைப்பொருள்களை அறிந்திருக்கிறவர். ஞானத்தில் சிறந்த சாலொமோன், தனக்குத் தெரிந்திருக்கிற ஞானத்தை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்துகிறார்.
சாலொமோன் ராஜ்யபாரம் பண்ணியபோது, பல தேசங்களின் ராஜாக்களும் பிரபுக்களும், அவரிடத்தில் வந்து ஞானஉபதேசம் பெற்றுக்கொண்டார்கள். கர்த்தர் தனக்குக் கொடுத்த ஞானத்தை, சாலொமோன் ராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும் வெளிப்படுத்தினார். இப்போதோ அதே ஞானஉபதேசங்களை, சாதாரண ஜனங்களுக்கும், இந்தப் புஸ்தகத்தின் மூலமாய் வெளிப்படுத்துகிறார். ஒரு காலத்தில் ராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும் மாத்திரம் கிடைத்த சிலாக்கியம், இப்போது நமக்கும் கிடைத்திருக்கிறது. சாலொமோனின் நீதிமொழிகளால், நாமும் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்துகொள்ளலாம். புத்திமதிகளை உணர்ந்துகொள்ளலாம். ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் நாம் அறிந்துகொள்ளலாம். நீதிமொழியையும் அதன் அர்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
நீதிமொழியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்றால், நீதிமொழிகளால் நமக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது.சத்தியம் ஒரு புதைபொருளைப்போல இருக்கிறது. நாம் அதைத் தேடிக்கண்டுபிடித்து, தோண்டியெடுக்கவேண்டும். ஞானவார்த்தைகள் அடையாளங்களாகவும், உவமைகளாகவும், உருவகங்களாகவும், பழமொழிகளாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றின் மெய்யான அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அவற்றின் புதைபொருளை அறிந்துகொள்ளவேண்டும். நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிற புத்திமதிகளை நம்முடைய ஜீவியத்தில் நாம் பயன்படுத்தவேண்டும். நாம் புரிந்துகொண்ட நீதிமொழிகளை மற்றவர்களுக்கும் போதிக்கவேண்டும்.
ஞானமும் போதகமும்
நீதி 1 : 7-9
நீதி 1:7. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
நீதி 1:8. என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதி 1:9. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
சாலொமோன் வாலிபருக்கு அறிவையும், விவேகத்தையும் கொடுக்கும் வண்ணமாய்ப் போதிக்கிறார். இதற்காக அவர் வாலிபருக்கு இரண்டு நியதிகளைச் சொல்லுகிறார். அவையாவன : 1. கர்த்தருக்குப் பயப்படவேண்டும். 2. பெற்றோரைக் கனம்பண்ணவேண்டும்.
கர்த்தருக்குப் பயப்படுதலே மிகவும் உன்னதமானது. இதுவே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் முதலாவது பிரதான பகுதி. நமக்கு எவ்வளவுதான் உபதேசம்பண்ணினாலும், நம்மிடத்தில் கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லையென்றால், நமக்குக் கொடுக்கப்பட்ட உபதேசத்தினால் ஒரு பிரயோஜனமுமில்லை. நாம் பெற்றுக்கொண்ட உபதேசங்களெல்லாவற்றையும் கர்த்தருக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவற்றை பிரயோஜனப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒருவர் எவ்வளவுதான் உலகஞானத்தைப் பெற்றிருந்தாலும், அவரிடத்தில் கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லையென்றால், அவரிடத்தில் மெய்யான ஞானம் ஒன்றுமில்லை.
மூடர் ஞானத்தையும், போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். ""தேவன் இல்லை'' யென்று மூடர்கள் சொல்லுகிறார்கள். மூடர்கள் கர்த்தருக்குப் பயப்படமாட்டார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியமாட்டார்கள். அவர்கள் தங்களிடத்தில் ஞானமுள்ளதுபோல சாதுரிய வார்த்தைகளைப் பேசினாலும், அவர்கள் மூடர்களைப்போல அலப்புகிறவர்களாகவே இருக்கிறார்கள். கர்த்தருக்குப் பயப்படாதவர்கள் மெய்யான ஞானத்திற்கு அந்நியராகவும், சத்துருக்களாகவும் இருக்கிறார்கள்.
நம்முடைய பெற்றோரை நாம் கனம்பண்ணவேண்டும். இதுபற்றி சாலொமோன் சொல்லும்போது, ""என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்'' என்று சொல்லுகிறார். தன்னுடைய சொந்த பிள்ளைகள் தன்னுடைய புத்தியையும், தன்னுடைய மனைவியின் போதகத்தையும் கேட்கவேண்டுமென்று சாலொமோன் ஆலோசனை சொல்லுகிறார். அதே வேளையில், தன்னுடைய பாடசாலையில், பாடம் படிக்க வந்திருக்கிற மாணாக்கர்களும், தன்னை தங்களுடைய தகப்பன்போலவும், தாய்போலவும் பாவித்து, தன்னுடைய புத்தியையும், போதகத்தையும் கேட்கவேண்டும் என்று சாலொமோன் அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
படிக்கிற மாணவர்கள் தங்களுடைய ஆசியர்களையும் கனம்பண்ணவேண்டும். தங்களுடைய பெற்றோரையும் கனம்பண்ணவேண்டும். பிள்ளைகள் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றவேண்டும். பெற்றோரும், தங்களிடத்திலுள்ள ஞானத்தை, தங்களுடைய பிள்ளைகளுக்கு உபதேசமாகப் போதிக்கவேண்டும். கர்த்தர் பெற்றோருக்கு அநேக கடமைகளையும் பொறுப்புக்களையும் கொடுத்திருக்கிறார். பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள்மீது அதிகாரமுள்ளது. பிள்ளைகளின் நன்மைக்காக அவர்களை சிட்சிகும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு. பிள்ளைகளை நல்ல வழியில் வளர்ப்பதற்காக, பெற்றோர் அவர்களுக்கு உபதேசம் செய்து, தேவைப்பட்டால், அவர்களை சிட்சித்து, திருத்தவேண்டும்.
கர்த்தர் பிள்ளைகளுக்கும் ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் ஞானத்தை உபதேசம்பண்ணும்போது, அவர்களுடைய இருதயத்தில் பலவிதமான கேள்விகள் எழும்பும். அவர்கள் பல காரியங்களுக்கு காரணம் கேட்பார்கள். பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கும், காரணங்களுக்கும், பெற்றோர்கள் பதில் சொல்லவேண்டும். பிள்ளைகளிடத்தில் கற்றுக்கொள்ளும் சுபாவம் அதிகமாயிருக்கும். ஆகையினால் பெற்றோர்கள் அவர்களுக்கு எதை கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் வாலிபப்பிராயத்திலிருக்கும்போதே, அவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையையும், அவருடைய சத்திய வழியையும் உபதேசம்பண்ணவேண்டும்.
சாலொமோன் பிள்ளைகளுக்கும் ஆலோசனை சொல்லுகிறார். அவர்கள் தங்கள் தகப்பனாருடைய புத்தியையும், தாயாருடைய போதகத்தையும் கேட்கவேண்டும் என்றும், அவற்றை தங்கள் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆலோசனை சொல்லுகிறார். பெற்றோர் கொடுக்கும் புத்திமதிக்காகவும், போதகத்திற்காகவும் பிள்ளைகள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கவேண்டும். அவர்களுடைய புத்திமதியையும் போதகத்தையும் தள்ளிவிடக்கூடாது. தங்களுக்கு எல்லாம் தெரியுமென்றும், தங்களுக்கு யாரும் உபதேசம்பண்ணத் தேவையில்லை என்றும் பிள்ளைகள் நினைக்கக்கூடாது.
பிள்ளைகள் பெற்றோரிடத்தில் எப்போதும் கற்றுக்கொள்ளவேண்டும். தங்களுக்கு வயதாகிவிட்டது என்றும், இனிமேல் தங்களுக்கு யாரும் போதகம்பண்ண வேண்டியதில்லை என்றும் நினைத்து, பெற்றோரின் புத்திமதிகளையும், போதகத்தையும் பிள்ளைகள் தள்ளிவிடக்கூடாது. பெற்றோரின் பிரமாணமும், தேவனுடைய பிரமாணமும் ஒத்திருக்கவேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் தேவனுடைய பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், பெற்றோராகிய நமக்கு தேவனுடைய பிரமாணம் தெரிந்திருக்கவேண்டும்.
சாலொமோன் பெற்றோரின் உபதேசத்தைப்பற்றிச் சொல்லும்போது, தகப்பனாருடைய உபதேசத்தையும், தாயாருடைய உபதேசத்தையும் சேர்த்து சொல்லுகிறார். பெர்சியருடைய காலாச்சாரத்திலும், ரோமப்பேரரசாருடைய கலாச்சாரத்திலும், அவர்கள் தகப்பனாருக்கு மாத்திரமே மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தாயாருக்கு புத்திசொல்லுகிற அதிகாரமோ, போதகம்பண்ணுகிற அதிகாரமோ அந்தக் கலாச்சாரங்களில் இல்லை. பெற்றோர் தங்கள் தகப்பனாரின் புத்திமதிக்கும், போதகத்திற்கும் மாத்திரம் செவிகொடுத்தால் போதும் என்று அந்தக் கலாச்சாரங்களில் சொன்னார்கள்.
சாலொமோனின் உபதேசமோ, தேவனுடைய பிரமாணத்திற்கு ஏற்றதாயிருக்கிறது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாருக்கு தம்முடைய பத்து கற்பனைகளைக் கொடுத்தபோது, ""உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக'' (யாத் 20:12) என்று சொன்னார். தகப்பனை கனம்பண்ணிவிட்டு, தாயை கனம்பண்ண தேவையில்லை என்று சொல்லுவது கர்த்தருடைய உபதேசமல்ல. தாயையும் கனம்பண்ணவேண்டும். தகப்பனையும் கனம்பண்ணவேண்டும்.
இதுவே கர்த்தருடைய பிரமாணம். சாலொமோன் கர்த்தருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து உபதேசம்பண்ணுகிறார்.
பிள்ளைகள் தங்கள் தகப்பனாருடைய புத்தியைக்கேட்டு, தங்கள் தாயாருடைய போதகத்தைத் தள்ளாமலிருக்கும்போது, பிள்ளைகளுக்கு மிகுந்த ஆசீர்வாதமுண்டாகும். பெற்றோரின் புத்தியும் போதகமும் பிள்ளைகளுடைய சிரசிற்கு அலங்காரமான முடியும் அவர்களுடைய கழுத்திற்கு சரப்பணியுமாயிருக்கும். பெற்றோருக்குக் கீழ்ப்படிவதே பிள்ளைகளுக்கு மெய்யான அலங்காரம்.
""மூடர்'' என்பதற்கான எபிரெய வார்த்தைகள்
1. ""எவில்''
2. கெசில்
3. நாபால்
ஞானத்தை அசட்டை பண்ணியவர்கள்
1. காயீன் (ஆதி 4:6-8)
2. ஓப்னியும், பினெகாசும் (1சாமு 2:12,25)
3. நாபால் (1சாமு 25:25)
4. ரெகொபெயாம் (1இராஜா 12:13)
5. அத்தேனே பட்டணத்தார் (அப் 17:18,32)
புத்தியைக் கேட்டவர்கள்
1. ரேகாபியர் (எரே 35:18-19)
2. சாமுவேல் (1சாமு 1:28; 1சாமு 2:18; 1சாமு 3:19-21)
3. இயேசு கிறிஸ்து (லூக்கா 2:51)
4. பவுல் (அப் 9; அப் 26:19)
5. தீமோத்தேயு (2தீமோ 1:5; 2தீமோ 3:15; அப் 16:1)
பொன்னாபரணங்கள் அரசியல் அந்தஸ்தைக் குறிக்கும். (ஆதி 41:42; தானி 5:7,16,29) பெற்றோருக்குக் கீழ்ப்படிபவர்கள் மனுஷர் மத்தியில் மேன்மையுடையவர்களாகலாம். (நீதி 1:8-9).
பாவிகளின் நயங்காட்டுதல்
நீதி 1 : 10-14
நீதி 1:10. என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
நீதி 1:11. எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;
நீதி 1:12. பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
நீதி 1:13. விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
நீதி 1:14. எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்;
சாலொமோன் வாலிபருக்கு மற்றும் ஒரு ஆலோசனையைச் சொல்லுகிறார். வாலிபர்கள் துன்மார்க்கரோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளக்கூடாது. தீயவர்களுடைய சகவாசம் நமக்கு ஒரு கண்ணியைப்போல இருக்கும். அவற்றைவிட்டு எப்போதும் விலகியே இருக்கவேண்டும். சாலொமோன் வாலிபரிடம் பேசும்போது, ""என் மகனே'' என்று அன்போடு சொல்லுகிறார். சாலொமோன் வாலிபர்மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். அவர்களிடத்தில் கரிசனையோடிருக்கிறார். ""என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே'' (நீதி 1:10) என்று சொல்லுகிறார்.
பாவிகள் பாவத்தோடு ஐக்கியமாயிருப்பார்கள். பாவிகள் தனியாகயிருப்பதைப்பார்க்கிலும், மற்ற பாவிகளோடு சேர்ந்திருப்பதையே விரும்புவார்கள். தேவனுடைய பரிசுத்த சமுகத்திலிருந்து விழுந்துபோன தூதர்கள், உடனே பாவிகளானார்கள். அவர்களெல்லோரும் பிசாசின் கூட்டமானார்கள். பாவிகளால் தனியாகயிருக்கமுடியாது. அவர்கள் மற்ற பாவிகளோடு சேர்ந்து கூட்டாகப் பாவம் செய்வார்கள். இப்படிப்பட்ட பாவிகள் நல்லவர்களையும் தங்கள் வஞ்சகவலையில் சிக்கவைத்து, அவர்களையும் கெடுத்துவிடுவார்கள்.
பாவிகள் மற்றவர்களோடு விவாதம்பண்ணமாட்டார்கள். மற்றவர்களோடு சண்டைபோடமாட்டார்கள். அவர்களை பயமுறுத்தமாட்டார்கள். ஆனால் தங்கள் வலையில் மற்றவர்களை சிக்க வைப்பதற்காக அவர்களுக்கு நயம் காட்டுவார்கள். நயமான வார்த்தைகளைப் பேசுவார்கள். சாதுரிய வார்த்தைகளைப்பேசி அவர்களை மயக்குவார்கள். இப்படிப்பட்ட பாவிகளைக் குறித்து சாலொமோன் எச்சரித்துச் சொல்லுகிறார். ""என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே'' என்று சாலொமோன் வாலிபருக்கு ஆலோசனை சொல்லுகிறார். பாவிகள் நம்மை கட்டாயப்படுத்தாவிட்டாலும், பலவந்தம்பண்ணாவிட்டாலும், நாம் அவர்களைக் குறித்து எச்சரிப்பாயிருக்கவேண்டும். அவர்களோடு ஐக்கியமாயிருக்கக்கூடாது. சாலொமோனின் எச்சரிக்கும் வார்த்தை நம்முடைய இருதயத்தில் எப்போதும் பதிந்திருக்கவேண்டும்.
பாவிகள் எப்படியெல்லாம் நயங்காட்டுவார்கள் என்று சாலொமோன் வாலிபரிடம் புத்திமதியாகச் சொல்லுகிறார். அவர்கள் நிலையில்லாத ஆத்துமாக்களை வஞ்சித்துவிடுவார்கள். பாவிகள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைப்போல சுற்றி அலைந்துகொண்டிருக்கிறார்கள். தங்களுடைய கொள்ளைக்கூட்டத்தில் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்வதற்கு, முயற்சி செய்கிறார்கள். அதற்காக நயமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அவர்கள் பேசுகிற ஒரு சில வார்த்தைகளை சாலொமோன் இங்கு குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.
""எங்களோடே வா'' என்று பாவிகள் நம்மிடத்தில் சொல்லுவார்கள். இந்த வார்த்தைக்கு, ""எங்களுக்கு உன்னுடைய ஐக்கியம் தேவை, உன்னுடைய சகவாசத்தை நாங்கள் விரும்புகிறோம்'' என்பது பொருள். பாவிகள் ஆரம்பத்தில் அதிகமாய்ப் பேசமாட்டார்கள். நம்மிடத்திலிருந்து அதிகமாய் ஒன்றும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆரம்பத்தில் அவர்களுடைய பாவசுபாவம்கூட நமக்குத் தெரியாது. காலம் செல்ல செல்லத்தான், அவர்களுடைய மெய்யான பாவசுபாவம் நமக்குத் தெரியவரும்.
பாவிகள் நம்மிடத்தில் சாதாரண வார்த்தைகளை ஆரம்ப வார்த்தைகளாகப் பேசுவார்கள். ""எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்'' (நீதி 1:11-13) என்பதுபோல பாவிகள் சொல்லுவார்கள். இதன்பின்புதான் அவர்கள் தங்கள் உண்மையான சுபாவத்தை நமக்கு வெளிப்படுத்துவார்கள்.
நாம் பாவிகளுடைய பேச்சை கொஞ்சம் கவனித்து கேட்டால் போதும். அவர்கள் நம்மிடத்தில் தொடர்ந்து ஆசை வார்த்தைகளைப் பேசுவார்கள். ""எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும்'' (நீதி 1:14) என்று நம்மிடத்தில் சொல்லுவார்கள். நாம் சேர்ந்து வாழலாம் என்றும், சேர்ந்து மரிக்கலாம் என்றும் ஆசையாய்ப் பேசுவார்கள். சேர்ந்து சம்பாதித்ததை, சேர்ந்து செலவு பண்ணலாம் என்றும் சொல்லுவார்கள். பாவிகளோடு பங்காளிகளாயிருப்பது நமக்கு எப்போதுமே ஆபத்து.
பாவிகள் நமக்கு நயங்காட்டும்போது, நாம் எப்படி எச்சரிப்பாயிருக்கவேண்டும் என்றும் சாலொமோன் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார். ""என் மகனே, நீ அவர்களோடே வழி நடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக'' (நீதி 1:15) என்று நம்மை எச்சரிக்கிறார். சாலொமோன் பாவிகளின் தீயசுபாவத்தைப்பற்றியும் விவரிக்கிறார். ""அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது'' (நீதி 1:16).
பாவிகள் இரத்த வெறிப்பிடித்தவர்கள். நல்லவர்களையும், ஒன்றும் அறியாத பேதைகளையும் அவர்கள் வெறுக்கிறார்கள். நல்லவர்களிடத்தில் உண்மையும், உத்தமமும், கண்ணியமும் இருக்கிறது. பாவிகளுக்கு இப்படிப்பட்ட நல்ல சுபாவங்கள் எதுவும் பிடிக்காது. ஆகையினால் பாவிகள் நீதிமான்களை விரோதிக்கிறார்கள். வேலை செய்யாமல், பிறரை வஞ்சித்து பிழைக்கவேண்டும் என்பதுதான் பாவிகளுடைய கொள்கை.
பாவிகள் பிறருக்கு இரத்தம் சிந்தும்படி பதிவிருக்கிறார்கள். குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றி பிடிக்கும்படி ஒளிந்திருக்கிறார்கள். சாலைகளில் பிரயாணம்பண்ணுகிறவர்கள் பாதுகாப்பில்லாமலும், முன்னெச்சரிப்பு எதுவுமில்லாமலும், சாதாரணமாக பிரயாணம்பண்ணுவார்கள். இப்படிப்பட்டவர்களை கொள்ளைக்காரர்கள் சூழ்ந்துகொண்டு, அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தி, அவர்களுடைய பொருட்களை அபகரித்துக்கொள்வார்கள். ஜனங்களும் இவர்களோடு எதிர்த்து நிற்கமுடியாமல், தங்களுடைய பொருட்களை பறிகொடுத்து நிற்பார்கள்.
பாவிகள் வாலிபரிடத்திலே, ""பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம், குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்'' என்று நயங்காட்டி பேசுவார்கள். அவர்களுடைய விலையுயர்ந்த சகலவித பொருட்களையும் கொள்ளையடிக்கவேண்டும் என்பதும், கொள்ளைப்பொருளினால் தங்களுடைய வீடுகளை நிரப்பவேண்டும் என்பதும் அவர்களுடைய ஆசை. கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடித்தால், கொள்ளைக்காரருடைய வீடுகள் கொள்ளைப்பொருளினால் நிரம்பும். இதற்காக அவர்கள் அதிகப்பிரயாசம் ஒன்றும் எடுக்கவில்லை. பறிகொடுத்தவர்களுக்குத்தான், தங்கள் பொருட்களுடைய மதிப்பு தெரியும். அவை மெய்யாகவே அவர்களுக்கு விலையுயர்ந்த பொருட்களாகவே இருக்கும்.
கொள்ளைக்காரரோ எந்தவித உழைப்புமில்லாமல் மற்றவர்களுடைய பொருட்களை கொள்ளையடித்திருக்கிறார்கள். கொள்ளைக்காரருக்கு, கொள்ளைக்கயடிக்கப்பட்ட பொருளின் உண்மையான மதிப்பு தெரியாது. உழைப்பவர்களுக்குத்தான், ஊதியத்தின் மேன்மை தெரியும். திருடர்களுக்கு திருட்டுப்பொருளின் மெய்யான மதிப்பு தெரியாது. பாவிகள் நல்லவர்களை நயங்காட்டும்போது, அவர்களும் நல்லவர்களைப்போலவே பேசுகிறார்கள். நல்லவர்களுடைய மனதிலிருக்கும் சிந்தைக்கேற்ற பிரகாரம் பேசி மாய்மாலம்பண்ணுகிறார்கள்.
கொள்ளைக்காரர்கள், தாங்கள் திருடிய பொருட்களை, ""விலையுயர்ந்த சகலவித பொருட்கள்'' என்று சொல்லுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவை அவர்களுக்கு விலையுயர்ந்த பொருட்களுமல்ல, சாதாரண பொருட்களுமல்ல. அவையெல்லாமே மாயை. அவை பொருட்களின் நிழலாகவே இருக்கிறது. ""கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஜசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்'' (சங் 62:10) என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார்.
பாவம் செய்ய சம்மதியாதவர்கள்
1. யோசேப்பு (ஆதி 39:9-10)
2. பெயர் அறியப்படாத தீர்க்கதரிசி (1இராஜா 13:8-9)
3. யோசபாத் (1இராஜா 22:49)
4. யோவாஸ் (2நாளா 24:2)
5. இயேசு கிறிஸ்து (எபி 4:14-16)
பாவிகளின் பாதைக்கு விலகு
நீதி 1 : 15-19
நீதி 1:15. என் மகனே, நீ அவர்களோடே வழி நடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
நீதி 1:16. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
நீதி 1:17. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
நீதி 1:18. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள்.
நீதி 1:19. பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
பாவிகளின் பாதை அழிவின் பாதை. அது அழிவுக்கு நேராக அவர்களை அழைத்துச் செல்லும். பாவிகளின் கால்கள் தீங்கு செய்ய ஓடி இரத்தம் சிந்த தீவிரிக்கிறது. சாலொமோன் வாலிபருக்கு ஆலோசனை சொல்லும்போது, ""என் மகனே, நீ அவர்களோடே வழி நடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக'' என்று சொல்லுகிறார். நாம் பாவிகளைப்போல சிந்திக்கவும்கூடாது. அவர்களைப்போல கிரியை செய்யவும் கூடாது. அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றவும்கூடாது.
பாவிகளுடைய வழிகள் தேவனுக்கு அருவருப்பானவை. அவை மனுஷருக்கு தீங்கு செய்யும். அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்த தீவிரிக்கிறது. பாவிகளுடைய வழி பாவம் நிரம்பியது. அது மலை உச்சியிலிருந்து, மலைச்சரிவில் கீழே இறங்கும் பாதைக்கு ஒப்பானது. மலைச்சரிவில் இறங்குகிறவர்கள் வேகமாக இறங்குவார்கள். அவர்களால் தங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மேலேயிருந்து கீழே இறங்குவதை அவர்களால் நிறுத்தவும் முடியாது. மலைச்சரிவு எவ்வளவு செங்குத்தாகயிருக்கிறதோ, அவ்வளவு சீக்கிரமாக அவர்கள் கீழே இறங்கிக்கொண்டிருப்பார்கள். தீவிரமாக இறங்குவார்கள்.
மலைச்சரிவில் தீவிரமாய் இறங்குகிறவர்களைப்போலவே, பாவிகளுடைய கால்களும் தீங்குசெய்ய ஓடுகிறது. பிறருடைய இரத்தத்தை சிந்த தீவிரிக்கிறது. அவர்களுடைய வேகத்தை அவர்களால் குறைக்கவும் முடியாது. அவர்களால் நிறுத்தவும் முடியாது. அவர்கள் மற்றவர்களுடைய இரத்தத்திற்கு தீவிரித்து ஓடினாலும், முடிவில் அவர்கள் தங்கள் இரத்தத்தையே சிந்துவார்கள் பாவிகள் பிறருடைய இரத்தத்தை சிந்துவதற்கு பதிவிருந்தாலும், அவர்கள் தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள். அவர்கள் குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றி பிடிக்கும்படி ஒழிந்திருந்தாலும், தங்கள் பிராணனுக்கே ஒளித்திருக்கிறார்கள். தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதற்கே அவர்கள் ஒளித்திருக்கிறார்கள்.
துன்மார்க்கர் தங்களுடைய அழிவுக்கு நேராகவே ஓடுகிறார்கள். தங்களுடைய பாதையின் முடிவு தங்களுக்கு அழிவைத் தரும் என்பது அவர்களுக்குத் தெரியும். தெரிந்தாலும், தங்களுடைய பாதையில் தொடர்ந்து போகாமல், தங்களுடைய நடையை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. மலைச்சரிவின் உச்சியிலிருந்து வேகமாக இறங்குகிறவர்களால், தங்களுடைய நடையின் வேகத்தை குறைக்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மலைப்பாதை சரிவாகயிருப்பதினால், வேகமாக கீழே இறங்குவார்கள். அதுபோலவே, பாவிகளும் பாதாளத்தில், வேகமாக இறங்குவார்கள்.
துன்மார்க்கர் மதியீனமான பறவையைப்போன்றவர்கள். வலைகள் விரிக்கப்பட்டிருப்பதை இந்தப் பறவைகள் பார்த்தாலும், அவற்றால் தங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்கும். வலையின்மீது போடப்பட்டிருக்கிற தானியத்தின்மீது ஆசைப்பட்டு, இந்தப் பறவைகள் வலையில் சிக்கிக்கொள்ளும். அதன்பின்பு இந்தப் பறவையால் வலையின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. துன்மார்க்கரும் இதுபோலவே துன்மார்க்கத்தில் பிடிக்கப்பட்டு அழிந்துபோகிறார்கள்.
துன்மார்க்கர் எல்லோருமே பொருளாசைக்காரர்கள். பொருள் தங்களுக்கு ஜீவனைக்கொடுக்கும் என்று நினைத்து, இவர்கள் பிறருடைய பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள். மற்றவர்களுடைய பொருள்மீது ஆசைப்படுகிறார்கள். அநியாயமாக சம்பாதிக்கிற ஐசுவரியம் அவர்களுக்கு நிலைத்திருக்காது. அது அவர்களுக்கு பிரயோஜனமாயிருக்காது. துன்மார்க்கத்தினால் வந்த ஐசுவரியம் துன்மார்க்கரை அழித்துப்போடும்.
பொருளையுள்ளவர்கள் தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள். தங்கள் ஜீவனுக்கே ஒளித்திருக்கிறார்கள். பொருளாசை தன்னை உடையவர்களின் உயிரை வாங்கிப்போடும். இவர்களுடைய ஜீவியகாலம் குறுகிப்போகும். இவர்களுடைய சரீரத்தில் ஆரோக்கியம் இருக்காது. இவர்களுடைய பேராசை இவர்களை அழித்துவிடும். இவர்கள் அதிகமாகப் பொருள் சேர்த்து, நீண்டநாள் சம்பிரமமாய் ஜீவிக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் இவர்களுக்கு பூரண ஆயுசு கிடைக்காது. இவர்களுடைய ஆயுசுகாலத்தின் பாதியிலேயே இவர்கள் செத்துப்போவார்கள்.
துன்மார்க்கர் புத்தியில்லாதவர்கள். இவர்கள் பிறரை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தங்களுடைய துன்மார்க்கத்தினால் தாங்களே அழிந்துபோகிறார்கள். சாலொமோன் ராஜா துன்மார்க்கருடைய புத்தியீனத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா'' (நீதி 1:17) என்று சொல்லுகிறார்.
பாவிகள் மற்றவர்களுடைய இரத்தத்தை சிந்துவதற்கு பதிவிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுடைய இரத்தத்தையே சிந்துகிறார்கள். இவர்கள் பிறருடைய பிராணனை எடுப்பதற்காக ஒளிந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களோ தங்கள் பிராணனுக்கே ஒளிந்திருக்கிறார்கள். தாங்கள் விரித்த கண்ணி, தங்களையே பிடிக்கும் என்று தெரியாமல், கண்ணிகளை விரிக்கிறார்கள்.
சாலொமோன் கொள்ளைக்காரருடைய பாவத்தை இங்கு பொதுவாகச் சொல்லுகிறார். கொள்ளைக்காரரைப்போலவே இன்னும் அநேகர் பாவிகளாகயிருக்கிறார்கள். துன்மார்க்கமான அநேக காரியங்களை துணிகரமாய்ச் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நாம் எச்சரிப்பாயிருக்கவேண்டும். அவர்களுடைய பாவங்களைவிட்டு விலகி ஜீவிக்கவேண்டும். மதுபானப்பிரியரும், அசுத்தர்களும் துணிகரமாய்ப் பாவம் செய்கிறவர்கள். அவர்களுடைய பாவமான வழிகளில் நாம் சென்றுவிடாதவாறு, மிகவும் எச்சரிப்போடு ஜீவிக்கவேண்டும்.
நீதி 1:10-14 ஆகிய வசனங்களில் வாலிபரைத் துன்மார்க்கர் ஏமாற்றும் வாக்கியங்கள் கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களோடு வாலிபர்கள் சேர்ந்து கொள்ளக்கூடாது என்பதற்கு ஏழு காரணங்கள் நீதி 1:15-19 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது.
துன்மார்க்கர் தங்களுடைய இரத்தத்திற்கோ அல்லது தங்கள் பிராணனுக்கோ கேடாக ஒன்றும் செய்வதில்லை. இவர்கள் மற்றவர்களுக்குத்தான் தீங்கிழைப்பார்கள். மூலபாஷைச் சுவடிகளில் ""தங்கள்'' என்னும் வார்த்தை காணப்படவில்லை. (நீதி 1:11,18-19).
ஞானமானது கூப்பிடுகிறது
நீதி 1 : 20,21
நீதி 1:20. ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
நீதி 1:21. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒ-முகவாச-லும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:
சாத்தானுடைய இச்சகமான பேச்சுக்களுக்கு செவிகொடுப்பது மிகவும் ஆபத்தானது. அதே சமயத்தில் தேவன் நம்மோடு பேசும்போது, அதற்கு செவிகொடுக்க மறுப்பதும், நமக்கு மிகப்பெரிய ஆபத்தாகயிருக்கும். தேவன் நம்மோடு பேசுகிறார். அவர் ஞானத்தின் மூலமாய்ப் பேசுகிறார். ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது. ""ஞானம்'' என்னும் வார்த்தை, மூலஎபிரெய பாஷையில், ""ஞானங்கள்'' என்று பன்மையில் எழுதப்பட்டிருக்கிறது. தேவனிடத்தில் அனந்த ஞானம் இருக்கிறது. அவரே சர்வஞானமுள்ளவர்.
""தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, இயேசுகிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது'' (எபே 3:9-11) என்று அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார்.
தேவன் மனுபுத்திரரோடு, தம்முடைய எல்லாவிதமான ஞானத்தின் மூலமாயும் பேசுகிறார். மனுஷனிடத்தில் புரிந்துகொள்ளும் தன்மையிருக்கிறது. இதுவே மனுஷருடைய ஞானம். மனுஷன் இயற்கையின் பிரமாணத்தையும், இயற்கையான வெளிச்சத்தையும் அறிந்திருக்கிறான். மனுஷனுக்கு காரண காரியங்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறது. மனுஷனுடைய மனச்சாட்சி அவனுடைய ஞானத்தை வெளிப்படுத்துகிறது. ""அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?'' (யோபு 38:36) என்று கர்த்தர் யோபுவிடம் கேட்கிறார். கர்த்தரே மனுஷருக்குள்ளே ஞானத்தை வைத்திருக்கிறார்.
ஒரு தேசத்தில் நடைபெறுகிற ஆளுகையும் தேவன்கொடுத்திருக்கிற ஞானமாகும். வழக்குகளை விசாரிக்கிற நியாயாதிபதிகள், தேவனுடைய பிரதிநிதிகளாக ஊழியம் செய்கிறார்கள்.
தேவனுடைய தெய்வீக வெளிப்பாடும், மனுஷருக்கு ஞானமாகயிருக்கிறது. தேவன் தம்மைப்பற்றியும், தம்முடைய பிரமாணங்களைப்பற்றியும் மனுஷருக்கு வெளிப்படுத்துகிறார். தேவனுடைய சித்தமும் விருப்பமும் வார்த்தைகளாக எழுதப்பட்டிருக்கிறது. வேதாகமத்திலுள்ள புஸ்தகங்களை எழுதிய ஆசிரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் தேவன் தம்முடைய விசேஷித்த ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். வேதாகம ஆசிரியர்கள் தேவனுடைய சிந்தையை மனுஷருக்கு வார்த்தை வடிவில் வெளிப்படுத்துகிறார்கள்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஞானமாகயிருக்கிறார். அவரே எல்லா ஞானத்திற்கு ஆதரமாக இருக்கிறவர். இயேசுகிறிஸ்துவுக்குள் ஞானம், அறிவு ஆகியவற்றின் பொக்கிஷங்களெல்லாம் மறைந்திருக்கிறது. தேவனுடைய எல்லா வெளிப்பாடுகளுக்கும் இயேசுகிறிஸ்துவே மையமாகயிருக்கிறார். கிறிஸ்துவுக்குள் நமக்குத் தேவையான எல்லா ஞானமும் இருக்கிறது. அவரே நித்திய வார்த்தையாகயிருக்கிறார். கிறிஸ்துவின் மூலமாகவே தேவன் நம்மோடு பேசுகிறார். அவர் மூலமாக எல்லா நியாயங்களையும் விசாரித்து, நமக்கு நீதியான தீர்ப்புகளைச் சொல்லுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றிச் சொல்லும்போது, ""ஞானமானது அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளது என்று ஒப்புக்கொள்ளப்படும்'' (லூக் 7:35) என்று சொல்லுகிறார்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடு பேசுகிறார். அவர் வெளிப்படையாகவும் பேசுகிறார். சத்தமாகவும் பேசுகிறார். தெளிவாகவும் பேசுகிறார். தேவன் பேசுகிற வார்த்தைகளை, காதுள்ளவர்கள் எல்லோருமே கேட்கவேண்டும். தேவனுடைய ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது. அது வீதிகளில் சத்தமிடுகிறது. தேவனுடைய வார்த்தைகள் வேதபாடசாலைகளில் வெளிப்படுத்தப்படுவதோடு, ஜனங்கள் கூடியிருக்கிற பொது இடங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது.
தேவனுடைய வார்த்தை ராஜாக்களின் அரண்மனையில் வெளிப்படுத்தப்படுவதுபோல, சாதாரண ஜனங்கள் கூடியிருக்கும் பொது இடங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது. ஞானமானது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிடுகிறது. ஞானமானது தன் வார்த்தைகளை பட்டணத்தில் வசனித்துச் சொல்லுகிறது.
தேவன் நம்மோடு பேசும்போது, நமக்கு புரியும் விதமாக சத்தமாகவும், தெளிவாகவும் பேசுகிறார். தம்முடைய ஞானமுள்ள வார்த்தைகளை வீதிகளில் சத்தமிட்டுச் சொல்லுகிறார். தேவன் நம்மோடு பேசும்போது, அவர் அன்பாகவும் பேசுகிறார், சத்தமாகவும் பேசுகிறார். நாம் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கவேண்டும் என்பதே அவருடைய விருப்பம். நாம் எங்கேயிருந்தாலும் தேவனுடைய ஞானமுள்ள வார்த்தை நம்மைத் தேடி வருகிறது. கர்த்தர் நம்மை தேடி வந்து விசாரிக்கிறவர். நாம் இருக்கிற இடங்களில், கர்த்தர் நம்மைத் தேடிவந்து, தம்முடைய ஞானமுள்ள வார்த்தைகளை நம்மோடு பேசுகிறார்.
ஞானம் பிரசங்கம் பண்ணப்படும் இடம்
1. வெளி
2. வீதிகள்
3. சந்தடியுள்ள தெருக்களின் சந்தி
4. ஒலிமுகவாசல்
5. பட்டணம்
பேதைகளே
நீதி 1:22
நீதி 1:22. பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எது வரைக்கும் இருக்கும்.
தேவன் ஒரு தெய்வீக நோக்கத்தோடுதான் நம்மோடு பேசுகிறார். அவர் காரணமில்லாமல், பொழுதுபோவதற்காக, வெறும் பேச்சு பேசுகிறவரல்ல. தேவன் நம்மோடு பேசுவதற்கான காரணங்கள் உள்ளன. அவையாவன : 1. தேவன் பாவிகளை அவர்களுடைய பாவத்தினிமித்தமாய் கடிந்துகொள்கிறார். 2. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தேவன் அவர்களை அழைக்கிறார். 3. பாவிகள் மனந்திரும்பாமல், பாவத்தில் நிலைத்திருந்தால் அவர்களுக்கு அழிவு உண்டாகும் என்று எச்சரிக்கிறார். 4. தேவனுடைய சத்தத்திற்கு நாம் செவிகொடுக்கும்போது, நாம் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்துக்குப் பயப்படாமல் அமைதியாயிருக்கலாம்.
பாவிகள் பொதுவாக பேதைகளாகயிருக்கிறார்கள். அவர்கள் பேதமையை விரும்புகிறார்கள். அவர்களிடத்தில் ஞானமில்லை. மதியீனமாய்ச் சிந்திக்கிறார்கள், மதியீனமாய்ப் பேசுகிறார்கள், மதியீனமாய்க் கிரியைசெய்கிறார்கள். தங்களுடைய பாவத்தினாலும், துன்மார்க்கத்தினாலும் அவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொள்கிறார்கள்.
பாவிகள் நிந்தனைக்காரராயிருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களையும் நிந்திக்கிறார்கள். தங்களையும் நிந்திக்கிறார்கள். அவர்கள் நிந்தனையில் பிரியப்படுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் நடைபெறுகிற எல்லா காரியங்களையும் நிந்திக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் ஜீவியத்தில் நடைபெறுகிற ஒவ்வொரு காரியமும் ஏன் நடைபெறுகிறது என்பதை சிந்தித்துப் பார்ப்பதில்லை. சிந்திப்பதற்கு முன்பாகவே, அதை நிந்தித்து, சோர்ந்துபோகிறார்கள். தெளிந்த புத்தியும் ஞானமுமுள்ளவர்கள், எல்லாவற்றையும் நிதானித்து அறிவார்கள். அவற்றிற்கான காரணங்களையும் காரியங்களையும் புரிந்துகொள்ள முயற்சிபண்ணுவார்கள்.
பாவிகள் ஞானத்தை வெறுக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையையும், அவருடைய உபதேசத்தையும் வெறுக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை வெறுகிறவர்கள் அதை ஒருபோதும் சரியாகப் புரிந்துகொள்ளமாட்டார்கள். நம்மிடத்தில் கற்றுக்கொள்ளும் ஆவியிருக்கவேண்டும். உபதேசத்தையும், போதகத்தையும் வெறுக்கிறவன் மிகப்பெரிய மதிகேடனாகயிருக்கிறான்.
பரலோகத்தின் தேவன் நம்மோடு பேசவேண்டுமென்று விரும்புகிறார். நம்முடைய பாவங்களை நமக்கு உணர்த்தவேண்டுமென்று விரும்புகிறார். நாம் அழிந்துபோகவேண்டுமென்பது தேவனுடைய விருப்பமல்ல. நம்முடைய அழிவுக்காக தேவன் நமக்குப் போதிக்கவில்லை. தேவன் நம்மீது கிருபையும் இரக்கமுமுள்ளவர். நாம் ஜீவனைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதும், அந்த ஜீவன் நமக்கு நித்திய ஜீவனாயிருக்கவேண்டும் என்பதும் தேவனுடைய விருப்பம்.
தேவன் நம்முடைய பாவத்தைக் குறித்து நமக்கு உணர்த்திய பின்பு, நாம் மனந்திரும்பவேண்டுமென்று, தேவன் பொறுமையோடு காத்திருக்கிறார். நாம் மனந்திரும்பவதில் காலதாமதம் பண்ணும்போது, தேவன் நம்மோடு, ""மதியீனரே, நீங்கள் பேதமையை விரும்புவதும், நிந்தனையில் பிரியப்படுவதும், ஞானத்தை வெறுப்பதும் எதுவரைக்கும் இருக்கும்'' என்று கேட்கிறார். தேவன் நம்மோடு பேசும்போது நாம் அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு சீக்கிரத்தில் பிரதியுத்தரம் சொல்லவேண்டும்.
ஞானத்தினுடைய செய்தியின் அம்சம்
1. பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவது எதுவரைக்கும் இருக்கும்.
2. நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவது எதுவரைக்கும் இருக்கும்.
3. மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பது எது வரைக்கும் இருக்கும்.
4. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள். (நீதி 1:23)
5. என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்.
6. என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
ஞானத்தை யாருக்குப் பிரசங்கம் பண்ண வேண்டும்
1. பேதை (நீதி 1:4)
2. நிந்தனைக்காரர் (சங் 1:1)
3. மதியீனர்
தேவனுடைய கடிந்துகொள்ளுதல்
நீதி 1:23
நீதி 1:23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
பாவிகள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பவேண்டும். அவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதுவே தேவனுடைய விருப்பம். இதற்காகவே தேவன் பேதைகளோடும், நிந்தனைக்காரரோடும், மதியீனரோடும் பேசுகிறார். அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு உணர்த்திக் காண்பிக்கிறார். நம்முடைய பாவங்கள் நமக்கு உணர்த்தப்படும்போது, நாம் மனந்திரும்பவேண்டும். தேவன் கொடுக்கிற ஞானத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தர் நம்மோடு, ""என் கடிந்துகொள்ளுதலுக்கு திரும்புங்கள்'' என்று சொல்லுகிறார்.
நம்முடைய மனதில் தெளிந்த சிந்தனையிருக்கவேண்டும். சரியான வழியில் சிந்திக்கவேண்டும். இதுவரையிலும் நாம் பேதமையை விரும்பினாலும், இனிமேல் அதை விரும்பாமல், தேவனுடைய ஞானத்தை விரும்பவேண்டும். நாம் இதுவரையிலும் நிந்தனையில் பிரியப்பட்டாலும், இனிமேல் அதன்மீது பிரியப்படாமல், தேவனுடைய ஞானத்தின்மீது பிரியப்படவேண்டும். நாம் இதுவரையிலும் ஞானத்தை வெறுத்தாலும், இனிமேல் அதை வெறுக்காமல், அதை விரும்பவேண்டும்.
தேவனுடைய ஞானத்தை நாம் பெற்றுக்கொள்ளும்போது நம்முடைய மனதில் தெளிந்த சிந்தனை உண்டாகும். அப்போது நாம் தேவனிடத்திற்குத் திரும்பவேண்டும். நாம் செய்யவேண்டிய காரியங்களை செய்வதற்கு ஆயத்தமாகவேண்டும். மரணத்தின் பாதையில் போய்க்கொண்டிருந்த நாம், இனிமேலும் அதில் தொடர்ந்து போகாமல், ஜீவனுள்ள பாதைக்குத் திரும்பிவரவேண்டும். தேவன் நமக்குக் கொடுக்கும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நம்மிடத்தில் தாழ்மையிருக்கவேண்டும். ஆனால் தாழ்வுமனப்பான்மை இருக்கக்கூடாது. ஒரு சிலர் எளிமையை விரும்புவார்கள். அதன்பின்பு அவர்கள் எளிமைக்கு அடிமைகளாகிவிடுவார்கள். முடிவில், தாழ்மை அவர்களை ஆளுகை செய்வதற்குப் பதிலாக, தாழ்வு மனப்பான்மை அவர்களை ஆளுகை செய்யும். இப்படிப்பட்டவர்களிடத்தில் தன்னம்பிக்கையும் இராது. தேவனிடத்திலும் நம்பிக்கை இராது. இவர்கள் நிர்விசாரமாய் ஜீவிப்பார்கள். வாழ்க்கையில் எந்தவிதமான நம்பிக்கையுமில்லாமல், பிடிப்புமில்லாமல், பரிதாபமாகயிருப்பார்கள்.
நம்முடைய சுயபிரயாசத்தின்மீதும், சுயமுயற்சியின்மீதும், சுயபெலத்தின்மீதும் நாம் நம்பிக்கை வைக்கக்கூடாது. நம்முடைய சொந்த பெலத்தினால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்று நினைக்கவேண்டும். அதே சமயத்தில் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று விசுவாசித்து, நம்மை தேவனுடைய சமுகத்தில் அர்ப்பணிக்கவேண்டும். அப்போது தேவன் நமக்குள்ளே கிரியை நடப்பிப்பார். நம்மை தேவனுடைய சமுகத்தில் பூரணமாய் ஒப்புக்கொடுக்கும்போது, ""இதோ என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்'' என்று நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குச் சொல்லுகிறார்.
நாம் தேவனுடைய கிருபையினால், நம்மால் செய்ய முடிகிறவற்றை செய்யவேண்டும். தேவன்மீது விசுவாசமாயிருக்கவேண்டும். அப்போது தேவனுடைய கிருபை நமக்குள்ளே கிரியை நடப்பிக்கும். பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பெலப்படுத்துவார். தேவனுடைய கிருபையினால் நன்மையான காரியங்களை செய்யும் சிலாக்கியங்களை கர்த்தர் நமக்குக் கொடுப்பார். தேவனுடைய கிருபையில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. நமக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவியும், ஒத்தாசையும், ஊழியமும், அபிஷேகமும் தேவை.
கர்த்தர் நம்மீது கிருபையுள்ளவராக, தம்முடைய ஆவியை நமக்கு அருளுகிறார். கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை நமக்குத் தெரிவிக்கிறார். தேவன் தம்முடைய வார்த்தைகளை நமக்கு சொல்லுவது மாத்திரமல்ல, அதை நாம் புரிந்துகொள்வதற்கு தம்முடைய கிருபையையும் நமக்குக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு சகல சத்தியங்களையும் போதிக்கிறார். அவரே நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார்.
மூடரின் நிர்விசாரம்
நீதி 1 : 24-32
நீதி 1:24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
நீதி 1:25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
நீதி 1:26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்.
நீதி 1:27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளி போல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
நீதி 1:28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
நீதி 1:29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
நீதி 1:30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
நீதி 1:31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
நீதி 1:32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
கர்த்தர் நம்மோடு பேசும்போது அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்கவேண்டும். கர்த்தர் கூப்பிட்டும், நாம் கேட்காமலிருந்தால் நமக்கு அழிவு உண்டாகும். தேவனுடைய ƒகிருபையை அசட்டைபண்ணினால் நமக்கு ஆபத்து வரும். தேவன் தம்முடைய ஆவியை நமக்கு அருளி, தம்முடைய வார்த்தைகளை நமக்குத் தெரிவிப்பது தேவனுடைய கிருபை. நாம் தேவனுடைய கிருபைகளைப் புறக்கணித்துவிடாமல், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தேவன் நம்மோடு பலவழிகளில் பேசுகிறார். தம்முடைய கிருபைகளை நமக்கு பலவழிகளில் வெளிப்படுத்துகிறார். இவையெல்லாவற்றிற்கும் நாம் எதிர்த்து நின்றால், நமக்கு நிச்சயம் அழிவு உண்டு.
இயேசுகிறிஸ்துவையும், அவருடைய கிருபையையும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிப்பது மிகப்பெரிய பாவம். தேவனுடைய வார்த்தைக்கும், அவருடைய பிரமாணங்களுக்கும், அவருடைய சுவிசேஷத்திற்கும் நாம் கீழ்ப்படியவில்லையென்றால், நமக்கு இரட்சிப்பு இல்லை. நமக்கு தேவனுடைய பிரமாணத்தினால் வரும் சாபத்திலிருந்து விடுதலை தேவைப்படுகிறது. பாவத்தின் பிரமாணம் நம்மை ஆளுகை செய்யாமல், அதிலிருந்து தப்பிப்பதற்கு நமக்கு தேவனுடைய கிருபை தேவைப்படுகிறது. தேவன் தம்முடைய கரத்தை நீட்டி, நம்மை அழைக்கிறார். தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நமக்குக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் பாவிகளோ தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்காமல், தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்கள். கர்த்தர் அவர்களைப் பார்த்து, ""நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனுமில்லை'' (நீதி 1:24) என்று வேதனையோடு சொல்லுகிறார்.
பாவிகள் தெளிவில்லாமல் குழப்பத்திலிருக்கிறார்கள். கர்த்தரோ அவர்களுக்கு தம்முடைய கிருபையினால் புத்திமதிகளைச் சொல்லுகிறார். அவர்களுடைய நன்மைக்கேதுவான ஆலோசனைகளைச் சொல்லுகிறார். ஞானத்தைப் பெற்றுக்கொள்ள வருமாறு அவர்களை அழைக்கிறார். கர்த்தர் கூப்பிட்டும், பாவிகள் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
தேவன் யாரை நேசிக்கிறாரோ, அவர்களை மாத்திரமே சிட்சிக்கிறார். தேவனுடைய சிட்சையும், அவருடைய போதனையும், அவருடைய அன்புக்கும், அவர் நமக்குக் கொடுக்க விரும்பும் ஆதரவுக்கும் அடையாளம். ஆனால் பாவிகளோ தேவனுடைய ஆலோசனையையெல்லாம் தள்ளிவிடுகிறார்கள். கர்த்தருடைய கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறார்கள் (நீதி 1:25). இதே வாக்கியம் மறுபடியுமாக சொல்லப்பட்டிருக்கிறது. ""என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்'' (நீதி 1:30).
பாவிகள் தேவனுடைய ஆலோசனையை கேட்கக்கூடாது என்று தீர்மானம்பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய கிருபைக்கு எதிரான தங்கள் தீர்மானத்தில் உறுதியாயிருக்கிறார்கள். கர்த்தருடைய கடிந்துகொள்ளுதலை நிந்திக்கிறார்கள். கர்த்தர் தங்களுடைய நன்மைக்கே தங்களைக் கடிந்துகொள்கிறார் என்பது பாவிகளுக்குப் புரியவில்லை. தேவனுடைய கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவர்கள், அவருடைய அறிவை வெறுக்கிறார்கள். தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிடுகிறவர்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை தெரிந்துகொள்ளாமல் போகிறார்கள் (நீதி 1:29).
தேவனுடைய ஆலோசனையும், அவருடைய ஞானமும் பாவிகளுக்கு வரும்போது, அவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளெல்லாம் வெளியரங்கமாயிருக்கும். பாவிகள் தங்கள் பாவத்தை மறைக்க விரும்புகிறார்கள். பாவத்தை மறைக்கிறவர்கள் வாழ்வடையமாட்டார்கள். அவற்றை அறிக்கை செய்துவிட்டுவிடுகிறவர்களோ தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இது தேவனுடைய ஆலோசனை. ஆனால் பாவிகளோ தங்களுடைய பாவங்கள் வெளியரங்கமாகும் என்று பயந்து, அவர்கள் தேவனுடைய ஆலோசனையையெல்லாம் தள்ளிவிடுகிறார்கள். அவருடைய ஆலோசனையை விரும்பாதிருக்கிறார்கள். தேவன் அவர்களுடைய நன்மைக்காக, அவர்களைக் கடிந்துகொண்டாலும், அவர்கள் தேவனுடைய கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறார்கள். கர்த்தர் தங்களை கடிந்துகொள்ளுவதை அசட்டைபண்ணுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் துணிகரமாய்ப் பாவம் செய்கிறவர்கள். இவர்களுடைய இருதயம் கடினமாயிருக்கிறது. பாவமே இவர்களை ஆளுகை செய்கிறது. இவர்களிடத்தில் கர்த்தருக்குப் பயப்படும் பயமில்லை. தேவனுடைய பிரமாணம் இவர்களை ஆளுகை செய்யவில்லை. பாவிகள் தங்களுடைய கண்களின் இச்சைக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார்கள். இவர்களுடைய இருதயத்தில் துன்மார்க்க சிந்தனை நிரம்பியிருக்கிறது. இவர்கள் துன்மார்க்கமான வழிகளில் நடக்கிறார்கள். தேவனுடைய கிருபையும் இரக்கமும் இவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்போது, அதைப் பெற்றுக்கொண்டு, அதன் பலனை அனுபவிக்க மறுக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு ஆவிக்குரிய நன்மை எதுவும் உண்டாவதில்லை. இப்படிப்பட்டவர்கள்மீது தேவனுடைய கோபமும் அவருடைய தண்டனையும் வரும். அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும், தன் பிடரியை கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடுதியில் நாசமடைவான் (நீதி 29:1).
தேவனுடைய ஆலோசனையைத் தள்ளி, அவருடைய கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவர்களுக்கு ஆபத்து வரும். அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்யமாட்டார். ""நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்'' (நீதி 1:26) என்று கர்த்தர் சொல்லுகிறார். துன்மார்க்கர்மீதும், அவர்களுடைய ஆஸ்திகள்மீதும் ஆபத்துவரும். அவர்களுடைய சிந்தையிலும், செயலிலும் ஆபத்து வரும். இந்த ஆபத்து அவர்களுடைய மதியீனத்தினால் உண்டாயிற்று. அவர்கள் தேவனை விட்டு தூரவிலகிப்போனதினால் ஆபத்தில் சிக்கிக்கொண்டார்கள். தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டதினாலும், அவருடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்ததினாலும் இவர்களுக்கு ஆபத்து உண்டாயிற்று. இவர்களுடைய ஆபத்துக்காலத்தில் கர்த்தருடைய உதவியும், ஒத்தாசையும் இவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று.
துணிகரமாய்ப் பாவம் செய்கிறவர்கள் சமாதானமாய் ஜீவிக்கமாட்டார்கள். அவர்களுடைய இருதயத்தில் பயம் ஆளுகை செய்யும். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் செழித்திருப்பார்கள். பயத்துக்கு விலகி, விக்கினமின்றி ஜீவிப்பார்கள். பாவிகளோ எல்லாவற்றிற்கும் பயப்படுவார்கள். அவர்கள் பயப்படும் காரியம் புசல்போல் அவர்களுக்கு வரும். ஆபத்து சூறாவளிபோல் அவர்களுக்கு நேரிடும். நெருக்கமும் இடுக்கணும் அவர்கள்மேல் வரும் அப்போது கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்யாமல், அவர்களை ஆகடியம்பண்ணுவார்.
துன்மார்க்கருக்கு எந்தவிதமான முன்னெச்சரிப்புமில்லாமல், திடீரென்று, சூறாவளி காற்றைப்போல் ஆபத்து வரும். அது வேகமாகவும், பெலமாகவும் வரும். சூறாவளி காற்றில் எல்லா பதறும் காற்றில் பறப்பதுபோல, பாவிகளும் நெருக்கத்திலும், இடுக்கணிலும் சிக்கி தவிப்பார்கள். தங்களுக்கு வரும் ஆபத்திலிருந்து பாவிகளால் தப்பிக்கவே முடியாது. இவர்களுடைய சுயபுத்தியும், சுயபெலனும், சுயபிரயாசமும் இவர்களுக்கு உதவிசெய்யாது. தங்கள் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு வழியில்லாமல், பாவிகள் அழிந்துபோவார்கள்.
கர்த்தர் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளைச் சொன்னார். ஆனால் அவர்களோ கர்த்தருடைய ஆலோசனைகளை விரும்பவில்லை. அவற்றைத் தள்ளிவிட்டார்கள். அவர்களுடைய மதியீனத்தினால் இப்போது அவர்களுக்கு ஆபத்து வந்திருக்கிறது. கர்த்தரோ இப்போது அவர்களுக்கு உதவிபுரியாமல், அவர்களைப் பார்த்து ஆகடியம்பண்ணுகிறார். பாவிகளுடைய மதியீனத்தைப் பார்த்து கர்த்தர் அவர்களைப் பரியாசம்பண்ணுகிறார்.
கர்த்தருடைய வார்த்தையையும் அவருடைய உபதேசத்தையும் பரியாசம்பண்ணுகிறவர்களைப் பார்த்து, இந்த உலகமே பரியாசம்பண்ணும். அவர்கள் இந்த முழுஉலகத்திற்கு முன்பாகவும் பரியாசத்திற்கேதுவானவர்களாயிருப்பார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் தங்களுக்கு வரும் வேதனையும், ஆபத்தும், நிந்தையும், பரியாசமும் தாங்கமுடியாமல் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள். ஆனால் கர்த்தரோ அவர்களுக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார் (நீதி 1:28).
ஆரம்பத்தில் கர்த்தர் பாவிகளை நோக்கிக் கூப்பிட்டார். ஆனால் அவர்களோ கர்த்தர் கூப்பிட்டும், கேட்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். கர்த்தர் தம்முடைய கிருபையும் இரக்கமுமுள்ள கரத்தை அவர்களுக்கு நீட்டினார். ஆனால் அவர்களோ கர்த்தருடைய கரத்தை கவனிக்க மறுத்துவிட்டார்கள் (நீதி 1:24). இப்போது பாவிகள் தங்கள் ஆபத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு உத்தரவு கொடுக்க மறுத்துவிடுகிறார். அவர்கள் அதிகாலையில் கர்த்தரைத் தேடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தரைக் காணமாட்டார்கள். பாவிகளுடைய கூப்பிடுதல் வீணாய்ப்போயிற்று. தேவனுடைய சமுகத்தில் கிருபையின் வாசல் அடைக்கப்பட்டிருக்கிறது.
பாவிகள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டிய காலத்தில், கர்த்தரை அசட்டை செய்துவிட்டார்கள். ஆனால் இப்போதோ, அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டும், அவர்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லாமல் போயிற்று. கர்த்தர்அவர்களுடைய கூப்பிடுதலுக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை. அவர்கள் அறிவை வெறுத்தார்கள். கர்த்தருக்குப் பயப்படுதலை தெரிந்துகொள்ளாமல் போனார்கள்(நீதி 1:29).
நமக்குள் ஜீவன் இருக்கும்போதே, நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடவேண்டும். கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவேண்டும். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கவேண்டும்.அப்போதுதான் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் மரித்துப்போன பின்பு, நம்மால் தேவனை நோக்கிக் கூப்பிட முடியாது. கிருபையின் காலத்தில் மாத்திரமே கிருபையைப் பெற்றுக்கொள்ள முடியும். நியாயத்தீர்ப்பின் காலத்தில் கிருபை வெளிப்படாது. அப்போது தேவனுடைய நீதி மாத்திரமே வெளிப்படும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளின்போது, நமக்கு நன்மை உண்டாகவேண்டுமென்றால், கிருபையின் காலத்தைப் புறக்கணியாமல், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணவேண்டும்.
துன்மார்க்கர் கர்த்தருடைய ஆலோசனையை விரும்புவதில்லை. கர்த்தர் தங்களை கடிந்துகொள்ளும் போதெல்லாம், அதை அவர்கள் அசட்டைபண்ணினார்கள். ஆகையினால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள். அவர்களுடைய கிரியைக்குத்தக்க பலன் அவர்களுக்குக் கொடுக்கப்படும். பாவத்தின் சம்பளம் மரணம். தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பாமலும், பாவத்திலேயே பிடிவாதமாகயிருக்கிறவர்கள், நித்திய மரணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். பாவிகள் உலகத்தை சிநேகித்தார்கள். மாம்ச இச்சைக்கு இடங்கொடுத்து, பாவமான வழிகளில் தங்கள் மாம்ச இச்சைகளை திருப்திப்படுத்தினார்கள். தங்களுடைய அழிவை தாங்களே தேடிக்கொண்டார்கள்.
பாவிகள் தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். தங்களுடைய உலக ஐசுவரியம் தங்களுக்குப் பாதுகாப்பாகயிருக்கும் என்று நினைத்து, ஐசுவரியத்தை நம்புவார்கள். தங்களுடைய ஆஸ்திகளை நம்புவார்கள். இவையெல்லாம் மறுமையிலே அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் தராது. பேதைகளின் மறுபாடு அவர்களைக்கொல்லும். மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும் (நீதி 1:32).
பாவிகள் ஒருவேளை இந்தப் பிரபஞ்சத்தில் ஐசுவரியவான்களாக செழித்திருக்கலாம். அவர்கள் தங்கள் ஐசுவரியத்தையும், உலகப்பிரகாரமான பாதுகாப்பையும் நினைத்து பெருமைப்படலாம். தங்களுடைய ஐசுவரியத்தைப் பயன்படுத்தி, தங்களுடைய மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். பாவிகளுடைய ஐசுவரியம் அவர்களுக்கு ஜீவனைத் தராது. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொன்றுபோடும்.
பாவிகள் எந்த அளவுக்கு தங்கள் ஐசுவரியத்தின்மீது நம்பிக்கை வைக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு சீக்கிரத்தில் அழிவு வரும். மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். பேதைகளும் மூடரும் இந்த உலகத்தின்மீது பிரியம் வைத்து ஜீவிக்கிறார்கள். இவர்களுடைய இருதயம் இந்தப் பிரபஞ்சத்தோடு ஐக்கியமாயிருக்கிறது. பிரபஞ்சத்தின் ஆசைகள் அவர்களை ஆளுகை செய்கிறது. இதனால் அவர்களுடைய இருதயம் கடினமாகிறது.
மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுவதே இவர்களுடைய பிரதான நோக்கம். இதனால் துன்மார்க்கமான வழிகளில் இவர்கள் துணிகரமாய் நடக்கிறார்கள். இவர்களுடைய மாறுபாடு இவர்களைக் கொன்றுபோடுகிறது. இவர்களுடைய நிர்விசாரம் இவர்களை அழித்துப்போடுகிறது. இவர்களுடைய பாவமே இவர்களுடைய அழிவுக்குக் காரணம். பாவிகள் தங்களுக்கு அழிவு உண்டாக பாவம் செய்கிறார்கள்.
ஒருவன் அழிந்துபோவதற்குக் காரணம்
1. ஞானம் கூப்பிட்டும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். (நீதி 1:24)
2. ஞானம் தன் கையை நீட்டியும் கவனிக்கிறதில்லை.
3. ஞானத்தின் ஆலோசனையையெல்லாம் தள்ளுகிறார்கள். (நீதி 1:25)
4. ஞானத்தின் கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறார்கள்.
5. அவர்கள் அறிவை வெறுக்கிறார்கள். (நீதி 1:29)
6. கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போகிறார்கள்.
7. ஞானத்தின் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை. (நீதி 1:30)
8. ஞானத்தின் கடிந்து கொள்ளுதலை யெல்லாம் அசட்டை பண்ணினார்கள்.
9. அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள் (நீதி 1:31)
10. தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
11. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும். (நீதி 1:32)
12. மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
ஞானம் இங்கு ஒரு நபராகக் கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனுஷனும் நன்மை தீமையை அறிந்து கர்த்தருக்குப் பிரியமானவற்றைத் தீர்மானம் பண்ண வேண்டும். (யோவான் 1:9; ரோமர் 2:12-16). தேவன் மனுஷனுக்குச் சுயாதீன சித்தத்தைக் கொடுத்திருக்கிறார். (சங் 1)
துன்மார்க்கரின் முடிவு
1. ஆபத்துக்காலத்தில் நகைக்கப்படுவார்கள். (நீதி 1:26)
2. பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணப்படுவார்கள்.
3. பயப்படுங்காரியம் புசல்போல் வரும் (நீதி 1:27)
4. ஆபத்து சூறாவளி போல் நேரிடும்.
5. நெருக்கம் அவர்கள்மேல் வரும்.
6. இடுக்கண் அவர்கள்மேல் வரும்.
7. அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள். கர்த்தர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார். (நீதி 1:28)
8. அவர்கள் அதிகாலையிலே கர்த்தரைத் தேடுவார்கள், ஆனால் கர்த்தரைத் காணமாட்டார்கள்.
9. அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள். (நீதி 1:31)
10. தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
கர்த்தருக்கு செவிகொடுக்கிறவன்
நீதி 1:33
நீதி 1:33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
கர்த்தருடைய ஆலோசனைக்கு செவிகொடுக்கிறவர்களுக்கு, பாதுகாப்பும் சந்தோஷமும் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தருக்குப் பயப்படுதலை தெரிந்துகொள்ளாமல் போகிறவர்கள் மூடர்கள். இவர்கள் கர்த்தருடைய ஆலோசனையை விரும்பமாட்டார்கள். அவருடைய அறிவை வெறுப்பார்கள். இவர்களுக்கு அழிவு வரும்.
கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறவர்களுக்கு ஆசீர்வாதமுண்டாகும். கர்த்தர் தம்முடைய வார்த்தையினால் அவர்களை ஆளுகை செய்வார். கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறவர்கள் பரலோகத்தின் விசேஷித்த பாதுகாப்பில் ஜீவிப்பார்கள். அவர்களுக்கு ஒரு சேதமும் ஒரு நாசமும் உண்டாகாது. அவர்கள் விக்கினமின்றி வாசம்பண்ணுவார்கள். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் ஆபத்துக்குப் பயப்படாமல் அமைதியாகயிருப்பார்கள். விசுவாசிகள் ஆபத்துக்கு விலகி பாதுகாப்பாக இருப்பார்கள். ஆபத்தைக் குறித்த பயமும் அவர்களிடத்தில் இருக்காது.
அழிந்துபோனவை
1. இஸ்ரவேல் (உபா 32:15-25;ஓசி 13:6-8)
2. பாபிலோன் (ஏசா 47:7-9)
3. மோவாப் (எரே 48:11-15)
4. சோதோம் (ஆதி 19; எசே 16:49)
5. தீரு (எசே 28:2-7)
நீதிமானின் முடிவு
1. அவன் விக்கினமின்றி வாசம் பண்ணுவான்.
2. ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
விக்கினமின்றி வாசம்பண்ணியவர்கள்
1. நோவாவும், அவருடைய குடும்பத்தாரும் (ஆதி 6-8)
2. மூன்று எபிரெய வாலிபர் (தானி 3)
3. தானியேல் (தானி 6)
4. கிறிஸ்துவின் ஆடுகள் (யோவான் 10:28-29)
5. தாவீது (சங் 23)
