உயிர்த்தெழுதலின் ஏழு வரிசைகள்
அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான் (1கொரி 15:23).
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியால் (எபி 9:27), இப்பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் ஜீவித்த ஜீவியத்திற்கேற்ற நியாயத்தீர்ப்பையும், பிரதிபலனையும் பெற வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அதற்காக ஒவ்வொருவரும் தங்கள் சரீர உயிர்த்தெழுதலை பெற வேண்டியவர்களாயிருக்கிறார்கள். ஆகவே சரீர உயிர்த்தெழுதலானது தேவ ஜனங்களுக்கு ஒரு மகிமையான நம்பிக்கையாயிருக்கிறது.
ஏழு வருட உபத்திரவ முடிவில் அதாவது ஆயிர வருஷ அரசாட்சிக்கு முன்பாக எல்லா கால நியமங்களிலும் மரித்த நீதிமான்கள் அனைவரும் ஒன்றாக உயிர்த்தெழுவார்கள் என்றும் எல்லா பாவிகளும் ஆயிர வருஷ அரசாட்சிக்கு பின்பு உயிர்த்தெழுவார்கள் என்பதும் சிலரின் கூற்றாயிருக்கிறது. அது அவ்விதம் சம்பவிப்பதற்கு எந்த ஒரு வேத வசன ஆதாரமுமில்லை. மேலும், நன்மைசெய்தவர்களும், தீமைசெய்தவர்களுமாகிய பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு உயிர்த்தெழுவார்கள் (யோவான் 5:28-29) என்ற சத்தியமானது மேற்படி கூற்றுக்கு ஒத்துப்போவதில்லை.
கிறிஸ்து தமது சபைக்காக வரும்போது கிறிஸ்துவினுடையவர்கள் மாத்திரமே உயிர்ப்பிக்கப்படுவார்கள் (1 கொரி 15:23). அதாவது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மாத்திரமே உயிர்த்தெழுவார்கள் (1 தெச 4:16-17; 1 கொரி 15:51-52). சபையின் கால நியமத்தில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்குள் ஒருபோதும் மற்ற கால நியமங்களில் மரித்த நீதிமான்கள் உட்படுவதில்லை. ஆகவே கிறிஸ்து சபைக்காக வெளிப்படும்போது மற்ற கால நியமங்களில் மரித்தவர்கள் உயிர்த்தெழுவதில்லை.
உயிர்த்தெழுதலுக்கான தேவ ஒழுங்கின்படியே யாவரும் உயிர்த்தெழுவார்கள்.
முதலாம் மற்றும் பொதுவான உயிர்த்தெழுதல்
மனசாட்சியின் கால நியமம் முதல் ஆயிர வருஷ அரசாட்சியின் கால நியமம் முடியவரையுள்ள எல்லா கால நியமங்களிலும் தெரிந்து கொள்ளப்பட்ட பல்வேறு நீதிமான்களின் சரீர உயிர்த்தெழுதலானது ஒரே சமயத்தில் நடைபெறுவதில்லை. தாங்கள் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட பிரமாணத்திற்கும், அதற்கு அவர்கள் ஜீவித்த ஜீவியத்திற்கேற்றபடியும், தங்கள் தங்கள் சுதந்திர வீதத்தின் வரிசையினடிப்படையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்தெழுவார்கள். இது ஏழு . வரிசைகளில் நடைபெறுகிறது.
முதல் ஐந்து வரிசை உயிர்த்தெழுதல்கள் முதலாம் உயிர்த்தெழுதல் (வெளி 20:4-6) அல்லது மேன்மையான உயிர்த்தெழுதல் (எபி 11:35) என்று அழைக்கப்படுகிறது. கடைசி இரண்டு வரிசை உயிர்த்தெழுதல்கள் இரண்டாம் அல்லது பொதுவான உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படுகிறது.
A. முதலாம் உயிர்த்தெழுதல்
முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ள பரிசுத்தவான்கள் அனைவரும் ஆயிர வருஷ அரசாட்சிக்கு முன்பு தங்கள் தங்கள் வரிசையில் (ஐந்து வரிசைகளில்) உயிர்த்தெழுவார்கள். இவர்கள் அனைவரும் பாக்கியவான்களாயிருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் ஆயிர வருஷ அரசாட்சியில் கிறிஸ்துவோடு ஆளுகை செய்வார்கள் (வெளி 20:6).
வெளி 20:4 ல் ஆயிர வருட அரசாட்சியில் பங்கு பெறப்போகும் முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்களின் பட்டியல் கூறப்பட்டுள்ளது.
- கிறிஸ்து - தாவீதின் சிங்காசனத்தில் உட்காருபவர் (லூக் 1:32b)
- சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்தவர்கள் (பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்)
- இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்கள் (புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு இரத்த சாட்சிகள்)
- மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாதவர்கள் (உபத்திரவகால இரத்த சாட்சிகள்)
1. கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார் (1 கொரி 15:20).
...முதற்பலனானவர் கிறிஸ்து... (1 கொரி 15:23).
அவரே... மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (கொலோ 1:18).
மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். ஏனெனில் மரித்தோரிலிருந்து முதலாவது உயிர்த்தெழுந்தவர் அவரே. ஆகவே அவர் உயிர்த்தெழுதலின் முதலாவது வரிசைக்குட்பட்டவரானார். அவரை தொடர்ந்து மற்றவர்கள் தங்கள் தங்கள் வரிசையில் உயிர்த்தெழுவார்கள்
2.ஜெயங்கொண்ட புதிய ஏற்பாட்டு மணவாட்டி
சபை
...பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (Iகொரி 15:23).
...அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,.. (1தெச 4:16-17).
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம் (1 கொரி 15:52).
சபையின் காலத்தில் கிறிஸ்துவுக்குள் மரித்த பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது உயிர்த்தெழுவார்கள். அப்போதுதானே கிறிஸ்துவுக்குள் ஜீவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு இமைப்பொழுதிலே மரணமும் உயிர்த்தெழுதலும் சம்பவித்து மறுரூபமடைந்து ஆகாயத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
சபையின் சத்துருவாகிய வலுசர்ப்பமானது (சாத்தான்) சபையின் காலம் முழுவதும் வானமண்டலங்களில் காணப்படுகிறான் (எபே 6:12; வெளி 12:8). சபையின் காலத்தின் முடிவில் அவன் பூமிக்கு தள்ளப்படுவான் (வெளி 12:9).
அப்போது அவனது மிகுந்த கோபத்தினிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு கொஞ்சக்காலம் ஆபத்து (ஏழு வருட உபத்திரவம்) வரும் (வெளி 12:12). வலுசர்ப்பமானது அந்த ஆபத்தை மிருகத்தின் மூலமாக நிறைவேற்றும் (வெளி 13:1-2). வலுசர்ப்பம் பூமிக்கு தள்ளப்படுவதற்கு சற்று முன் அதாவது அந்த ஆபத்தாகிய உபத்திரவம் துவங்குவதற்கு சற்றுமுன் ஜெயங்கொண்ட சபையாகிய (வெளி 3:21; 12:11) ஆண்பிள்ளை (வெளி 12:5) தேவ சிங்காசனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இது உயிர்த்தெழுதலின் இரண்டாம் வரிசையாகும். இது ஏழு வருட உபத்திரவம் துவங்குவதற்கு சற்று முன்பு நடைபெறும்.
3.உபத்திரவகால இரத்த சாட்சிகள்
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே,... மனுஷ குமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும்... வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள் (மத்தேயு 24:29-31).
வனாந்தரத்திற்கு ஓடிப்போன ஸ்திரீயானவள் (வெளி 12:6) கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்படும் சபையாருக்கு அடையாளமாயிருக்கிறாள். கைவிடப்பட்ட சபையாரில் ஒரு பகுதியினர், அதாவது ஸ்திரீயின் சந்ததியினராகிய மற்றவர்கள் (வெளி 12:17), முதல் மூன்றரை வருட உபத்திரவகாலத்தில் (வெளி 13:5b,7a) மிருகத்தின் முத்திரையை தரிக்க மறுத்து (வெளி 15:2) உபத்திரவகால இரத்த சாட்சிகளாக கர்த்தருக்குள் மரிப்பார்கள் (வெளி 14:13).
உபத்திரவ காலத்தில் தெரிந்துகொள்ளப்படும் (மத் 24:22) இவர்களினிமித்தம் அந்நாட்களின் உபத்திரவம் ஏழுவருடத்திலிருந்து 1260 நாட்களாக (மூன்றரை வருடம்) குறைக்கப்படும் (மத் 24:22; வெளி 12:6). மூன்றரை வருடமாக குறைக்கப்பட்ட அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே (மத் 24:29) தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களை சேர்த்துக்கொள்ளும்படியாக கர்த்தராகிய இயேசு, வானத்தின் மேகங்களில் வெளிப்படுவார் (மத் 24:29-31; வெளி 14:14-16). அப்போது உபத்திரவ கால இரத்த சாட்சிகள் உயிர்த்தெழுவார்கள் (மத் 24:29-31; 25:10; வெளி 7:9-14; 14:14-16). இது உயிர்த்தெழுதலின் மூன்றாம் வரிசையாகும்.
புத்தியுள்ள கன்னிகைகள்:
சபையின் காலத்தில் கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு ஆயத்தமாகாமல் நித்திரை மயக்கமடைந்து தூங்கியதினிமித்தம் வருகையில் கைவிடப்பட்டவர்களே பத்து கன்னிகைகள் (மத் 25:1,5). இவர்களில் உபத்திரவ காலத்தில் மிருகத்தை பின்பற்ற மறுத்து இரத்த சாட்சியாய் மரிப்பவர்களே புத்தியுள்ள கன்னிகைகள் (மத் 25:4). ஏழு வருட உபத்திரவ காலத்தை ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் (யோவான் 9:4) என கர்த்தராகிய இயேசு கூறியிருக்கிறார். அந்த இராக்காலத்தின் நடுராத்திரியில் (மத் 25:6), அதாவது ஏழு வருடத்தின் நடுப்பகுதியாகிய முதல் மூன்றரை வருட முடிவில் மணவாளன் வெளிப்படும்போது உபத்திரவ கால இரத்த சாட்சிகள் உயிர்த்தெழுந்து அவரோடு கூட கலியாண வீட்டுக்குள் பிரவேசிப்பார்கள். ஏனெனில் மூன்றரை வருடங்களுக்கு முன்பு மணவாளன் தனது மணவாட்டியை எடுத்துக்கொண்டதினிமித்தம் முழு பரலோகமும் கலியாணவீடாகிப்போயிருந்தது.
4. இரண்டு சாட்சிகள் - எலியா ஏனோக்கு
அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும்... மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்.... இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்... (வெளி 11:10-12).
தங்கள் பூமிக்குரிய ஜீவிய காலத்தில் சரீர மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலியாவும் ஏனோக்கும் இரண்டாம் மூன்றரை வருட மகா உபத்திரவ காலத்தின் ஆரம்பத்தில் தேவனால் பூமிக்கு அனுப்பப்படுவார்கள். இவர்கள் இஸ்ரவேலர்கள் கிறிஸ்துவை பின்பற்றும்படி மூன்றரை வருடம் (1260 நாட்கள்) தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். தங்கள் ஊழியத்தின் முடிவிலே அந்திகிறிஸ்துவினால் கொல்லப்பட்டு மூன்றரை நாளுக்கு பின்பு உயிர்த்தெழுவார்கள் (வெளி 11:12). இது உயிர்த்தெழுதலின் நான்காம் வரிசையாகும். இது அர்மகதொன் யுத்தத்திற்கு சற்று முன்பாக நடைபெறும்.
5. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் பொதுவான இரத்த சாட்சிகளும்
நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான். (தானியேல் 12:13)
ஏழு வருட உபத்திரவ கால முடிவில் (அர்மகதோன் யுத்தம் முடிந்த பின்பு), ஆபேல் முதல் யோவான்ஸ்நானன் வரையுள்ள பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் (தானி 12:13; வெளி 11: 18-19), பொதுவான இரத்த சாட்சிகளும் (வெளி 20:4) உயிர்த்தெழுவார்கள். இது உயிர்த்தெழுதலின் ஐந்தாம் வரிசையாகும்.
i. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்
மூன்றாம் ஆபத்தாகிய (வெளி 8:13; 11:14) அர்மகதோன் யுத்தம் முடிந்தவுடன் தானே இவ்வுலகத்தின் ராஜ்யங்கள் கிறிஸ்துவின் ராஜ்யமாகும் (வெளி:11:15). அதாவது ஆயிர வருட அரசாட்சியாகும். அப்பொழுது மரித்த ஒரு கூட்டத்தார் நியாயத்தீர்ப்படைகிறதற்காக உயிர்த்தெழுவார்கள் (வெளி 11:18-19). அவர்கள் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களே. அவர்கள் தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரர் என அழைக்கப்படுகின்றனர்.
தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்கார் என்பது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையே குறிப்பதற்கு வேதாகமம் முழுவதும் ஆவியானவரால் உபயோகப்படுத்தபட்டுள்ளது. (IIஇராஜா 17:13,23; 21:10; 24:2; ஏரே 7:25 ஆமோஸ் 3:7; எசே 38:17). புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை குறிப்பதற்கு தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரர் என்ற பதம் ஒரு முறை கூட உபயோகப்படுத்தப்படவில்லை.
இவர்களுக்கு பலனளிக்கிறதற்குரிய காலம் இப்போது வந்ததால், இவர்கள் பரலோக ஆலயத்தின் உடன்படிக்கை பெட்டியிலிருக்கும் (வெளி 11:19) நியாயப்பிரமாணத்தின்படி தங்கள் பிரதிபலனை பெற்றுக்கொள்ளுவார்கள் (ரோமர் 2:12). ஒருவர் நியாயத்தீர்ப்பை அடைவதற்கும் பலனை பெற்றுக்கொள்ளுவதற்கும் சரீர உயிர்த்தெழுதலை பெற வேண்டும் என்பது அவசியமாயிருக்கிறது. ஆகவே ஏழாம் எக்காளம் ஊதப்பட்ட பின்பு ஒரு கூட்டத்தார் உயிர்த்தெழுகிறார்கள் என்பது நிச்சயம்.
சிலர் மத் 27:51,52 ஐ மேற்கோள் காட்டி கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்தபோது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் உயிர்த்தெழுந்தனர் என கூறுகின்றனர். ஆனால் அது அப்படியல்ல, ஏனென்றால், அப். பேதுரு தாவீதைக் குறித்து பேசும்போது, அவன், பரலோகத்துக்கு எழுந்துபோகவில்லையே என்கிறார் (அப்.2:34)
ii. பொதுவான இரத்த சாட்சிகள்
வெளி 6:9 ல், இன்னும் கொஞ்ச காலம் இளைப்பாறும்படி சில ஆத்துமாக்களுக்கு கட்டளையிடப்பட்டது. இவர்கள் தேவ வசனத்தினிமித்தம் கொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டு கால இரத்தசாட்சிகளும், இயேசுவினுடைய சாட்சியை உடைய புதிய ஏற்பாட்டு கால இரத்தசட்சிகளுமாவார்கள். இவர்களும் ஏழு வருட உபத்திரவ முடிவில் உயிர்த்து (வெளி 20:4) ஆயிர வருஷ அரசாட்சியில் கலந்து கொள்ளுவார்கள். இவர்கள் தங்கள் கால நியமங்களில் பெற்றுக்கொண்ட பிரமாணத்துக்குரிய இரட்சிப்பை மாத்திரம் பெற்று மேற்கொண்டு பூரணமாகாதவர்கள். இவர்கள் வசனத்தினிமித்தமும் கிறிஸ்துவினிமித்தமும் மரித்திருந்தாலும் பழிவாங்கும் சுபாவத்தோடே மரித்தவர்கள் (வெளி 6:10). ஆகவே இவர்கள் திவ்விய சுபாவங்களில் பூரணப்பட்டவரல்ல. உபத்திரவ காலத்து இரத்த சாட்சிகளிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி காண்பிக்கவே இவர்கள் பொதுவான இரத்த சாட்சிகள் என அறியப்படுகின்றனர்.
B. இரண்டாம் அல்லது பொதுவான உயிர்த்தெழுதல்
கடைசி இரண்டு வரிசை உயிர்த்தெழுதல்களும் இரண்டாம் உயிர்த்தெழுதல் என்றும் பொதுவான உயிர்த்தெழுதல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆயிரவருட அரசாட்சிக்கு பின்பு நடைபெறும். இவ்விரு வரிசையில் உயிர்த்தெழுகிறவர்கள் மரணமடைந்த மற்றவர்கள் (வெளி 20:5) என அழைக்கப்படுகின்றனர்.
6.இரட்சிக்கப்பட்டவர்கள்
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும்,...விழித்து எழுந்திருப்பார்கள்.(தானியேல் 12:2).
..பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், ... புறப்படுவார்கள் (யோவான் 5:28-29).
அந்தப்படி.... நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார் (மத் 25:46)
மனசாட்சியின் கால நியமம் முதல் ஆயிர வருஷ அரசாட்சியின் கால நியமம் முடியவரையுள்ள எல்லா கால நியமங்களிலும், அந்தந்த கால நியமங்களில் தாங்கள் பெற்றுக்கொண்ட பிரமாணங்களுக்கு ஏற்றவாறு இரட்சிப்பை மாத்திரம் பெற்று மேற்கொண்டு பூரணமாக்கப்படாமல் மரித்த நீதிமான்கள் ஆயிர வருஷ அரசாட்சி முடிந்தவுடன் உயிர்த்தெழுவார்கள். அப்போது அவர்கள் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புக்காக (வெளி 20:11-12) வலது பக்கத்தில் நிறுத்தப்பட்டு தங்கள் பிரதிபலனை பெற்றுக்கொள்ளுவார்கள் (மத் 25:34-40). இவர்கள் ஆயிர வருட அரசாட்சியில் கலந்து கொள்ளுவதில்லை. இது உயிர்த்தெழுதலின் ஆறாம் வரிசையாகும்.
7.இரட்சிக்கப்படாதவர்கள் மற்றும் துன்மார்க்கர்கள்
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் ...,சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்" (தானியேல் 12:2)
..பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது...,தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள் (யோவான் 5:28-29)
அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும்.... போவார்கள் என்றார் (மத் 25:46).
மனசாட்சியின் கால நியமம் முதல் ஆயிர வருஷ அரசாட்சியின் கால நியமம் முடியவரையுள்ள எல்லா கால நியமங்களிலுமுள்ள பாவிகளும் ஆயிரவருட அரசாட்சி முடிந்தவுடன் உயிர்த்தெழுவார்கள். அப்போது அவர்கள் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புக்காக இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டு தங்கள் பிரதிபலனை பெற்றுக்கொள்ளுவார்கள் (மத் 25:41-45). இது உயிர்த்தெழுதலின் ஏழாம் வரிசையாகும். பிந்தின நித்தியத்தின் வாசஸ்தலங்கள்
வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முடிந்த உடன் பிந்தின நித்தியம் வெளிப்படும். அப்போது கிறிஸ்துவின் மணவாட்டி புதிய எருசலேமாகவும், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் புதிய வானமாகவும், உபத்திரவகால இரத்த சாட்சிகள் அக்கினி கலந்த கண்ணாடிக்கடலாகவும், பொதுவான இரத்த சாட்சிகள் கண்ணாடிக்கடலாகவும், எல்லா கால நியமங்களிலும் இரட்சிக்கப்பட்டவர்கள் புதிய பூமியாகவும் வெளிப்படுவார்கள். பாவிகள் நித்திய அக்கினிகடலிலே தள்ளப்படுவார்கள்.
ஒருவன் தனது ஜீவிய காலத்தில் பெற்றுக்கொண்ட பிரமாணமும் அந்த பிரமாணத்திற்கேற்றவாறு அவன் ஜீவித்த ஜீவியமுமே அவனது உயிர்த்தெழுதலின் வரிசையையும், அவனது முழு நித்தியத்தின் வாசஸ்தலத்தையும் தீர்மானிக்கிறது. இது முற்றிலும் தேவ கிருபையே.
