பிலாத்து இயேசுவை விசாரிக்கிறான்

பாடுகளின் வாரம் : வெள்ளிக்கிழமை நிகழ்வு 1

பிலாத்து இயேசுவை விசாரிக்கிறான்

மத்தேயு 27:2,11-14 ; மாற்கு 15:1-5 ; லூக்கா 23:1-5 ; யோவான் 18:28-38

தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்து

விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள் (மத் 27:1,2).

பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவை பிடித்து கைதுபண்ணி, யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு முன்பாக நிறுத்தி அவர் மரணத்திற்கு பாத்திரமானவர் என்று தீர்ப்பு கூறுகிறார்கள். ஆனால் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு இல்லை. மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை ரோமப்பேரரசு யூதரிடமிருந்து ஏற்கெனவே பறித்துக்கொண்டது. ஆகையினால் அவர்களால் யாருக்கும் மரண தண்டனை கொடுக்க முடியாது. இயேசுவை கொலை செய்யவேண்டுமென்று விரும்பியும் அவர்களால் அவரை கொலைபண்ண முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்பதை தீர்மானம்பண்ணுவதற்காக விடியற்காலமானபோது ஆலோசனைச்சங்கத்தார் மறுபடியும் கூடுகிறார்கள்.

இயேசுகிறிஸ்துவை தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார்கள். இயேசு மரணத்திற்கு பாத்திரவான் என்று தாங்கள் கொடுத்த தீர்ப்பை பிலாத்து அங்கீகரித்து, இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பார் என்று ஆலோசனைச்சங்கத்தார் எதிர்பார்க்கிறார்கள். இக்காலத்தில் பிலாத்துவைக் குறித்து யூதர்கள் மத்தியில் நற்பெயர் எதுவுமில்லை. அவன் ஒரு முரடனென்றும், யூதர்களை கொடுங்கோலாக ஆட்சிசெய்கிறவனென்றும் அவனுக்கு அவப்பெயர் உள்ளது. ஆகையினால் யூதர்கள் பிலாத்துவை நேசிக்கவில்லை. தங்களை அவன் ஆளுவதையும் அவர்கள் விரும்பவில்லை. பிலாத்திற்கு விரோதமாக யூதர்கள் பகையோடிருந்தாலும், இயேசுகிறிஸ்துவுக்கு மரண தண்டனை கொடுக்கும் விஷயத்தில் யூதர்கள் பிலாத்துவின் அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.

இயேசுவை அவர்கள் கட்டுகிறார்கள். அவருடைய கரங்களை முதுகிற்கு பின்பாக கட்டி, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை இழுத்துச்செல்வதுபோல, கைகளை கட்டி இயேசுவை இழுத்துச்செல்கிறார்கள். இயேசு ஏற்கெனவே மனுஷர்மீது தமது அன்பினால் கட்டப்பட்டிருக்கிறார். தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக இப்போது சிலுவையில் அறையப்படுவதற்கு இயேசுகிறிஸ்து தம்மையே ஒப்புக்கொடுத்திருக்கிறார். மனுஷர் மீதுள்ள அன்பின் கட்டினால், யூதர்கள் தம்மை கயிறுகளால் கட்டுவதை சகித்துக்கொள்கிறார். இயேசு மனுஷர்மீது அன்பினால் கட்டப்படவில்லையென்றால் அவர் அப்போதே தம்மை கட்டியிருக்கும் கயிறுகளை, சிம்சோனைப்போல அறுத்துப்போடுவார்.

ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவைக் கட்டி பிலாத்துவினிடத்தில் கொண்டுபோகிறார்கள். இயேசுவின்மீது தாங்கள் வெற்றிபெற்றதாக நினைக்கிறார்கள். அவரோ அடிக்கப்படுவதற்கு கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப்போல தமது வாயை திறவாமல், அவர்களுக்கு பின்பாக அமைதியாக போகிறார். காய்பாவின் அரண்மனையிலிருந்து பிலாத்துவின் அரண்மனை வரைக்கும் இடையிலுள்ள தூரம் சுமார் ஒரு மைல் ஆகும். அந்த ஒரு மைல் தூரத்திற்கும் எருசலேமின் வீதிகள் வழியாக ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவை கட்டி இழுத்து வருகிறார்கள். விடியற்காலை வேளையாக இருப்பதினால் ஜனங்கள் எல்லோரும் இயேசு இழுத்துச் செல்லப்படுவதை தங்கள் கண்களால் பார்க்கிறார்கள்.

தாம் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போவதை இயேசுகிறிஸ்து ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார். அதன் பிரகாரமாக யூதர்கள் இயேசுவை தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார்கள். இயேசுகிறிஸ்து யூதருக்கும் புறஜாதியாருக்கும் இரட்சகராக இருக்கிறார். ஆகையினால் யூதருக்கு முன்பாகவும் புறஜாதியாருக்கு முன்பாகவும் இயேசு நியாயம் விசாரிக்கப்படுகிறார். இயேசுவின் மரணத்தில் யூதரும் புறஜாதியாரும் பங்குபெறுகிறார்கள்.

ஒரு பயங்கரமான குற்றவாளியைக் கட்டுவது போல இயேசுவைக் கட்டினார்கள். தப்பித்து ஓட முயற்சி பண்ணும் குற்றவாளிகளைத்தான் கட்டுவார்கள். ஆனால் இயேசுவோ தாமாகவே மனம் உவந்து தம்மைக் கைது பண்ணுவதற்கு ஒப்புக் கொடுத்திருந்தார். இயேசு கிறிஸ்துவின் அனுமதியில்லாமல் அவரை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. (யோவான் 18:6)

நீ யூதருடைய ராஜாவா

இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ சொல்லுகிறபடிபதான் என்றார் (மத் 27:11).

யூதா தேசம் ரோமப்பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு சிறிய பிரதேசமாகும். ரோமப்பேரரசார் யூதா தேசத்திற்கு பிலாத்து என்பவனை தேசாதிபதியாக ƒநியமித்திருக்கிறார்கள். யூதருடைய பெரிய வழக்குகளையெல்லாம் இந்த தேசாதிபதியே விசாரிக்க வேண்டும். ஆலோசனைச்சங்கத்திற்கும் வழக்குகளை விசாரிக்க ஓரளவு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் ஒருவனுக்கு மரணதண்டனை கொடுக்கும் அதிகாரம் தேசாதிபதிக்கு மாத்திரமே உண்டு. இயேசுகிறிஸ்துவுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் அவரை தேசாதிபதிக்கு முன்பாக ஆலோசனைச்சங்கத்தார் நிறுத்துகிறார்கள்.

ஒரு நியாயாதிபதிக்கு முன்பாக சிறைக்கைதி நிற்பதுபோல இயேசு தேசாதிபதியாகிய பிலாத்துவுக்கு முன்பாக நிற்கிறார். இயேசுகிறிஸ்து நமக்காக பாவமானார். நமக்காக கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். அவர் நமக்காக மரித்து தமது இரத்தத்தை நமது மீட்பின் கிரயமாக செலுத்தவில்லையென்றால், நமது பாவத்தின் நிமித்தமாக நம்மால் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக ஒருபோதும் நிற்கமுடியாது. நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காக அவர் பாவமானார். நாம் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக அவர் கட்டப்பட்டிருக்கிறார்.

தேசாதிபதியாகிய பிலாத்து இயேசுவை நோக்கி ""நீ யூதருடைய ராஜாவா'' என்று கேட்கிறான். அக்காலத்தில் கிறிஸ்து என்பவர் யூதருடைய ராஜா என்னும் நம்பிக்கை யூதர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தது. கிறிஸ்துவாகிய அந்த ராஜா ரோமப்பேரரசின் பிடியிலிருந்து யூதர்களை விடுவித்து, யூதருக்கென்று ஒரு தனிராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று ஜனங்கள் நம்பினார்கள். அவர்கள் தேசாதிபதிக்கு முன்பாக இயேசுவை கிறிஸ்து என்று குற்றம்சாட்டி, அவர் தம்மை யூதருக்கு ராஜாவாக்க முயற்சிபண்ணுகிறார் என்று பிராது பண்ணுகிறார்கள். ஒருவர் தன்னை யூதருக்கு ராஜாவாக விளம்பரம்பண்ணும்போது அவர் ரோமப்பேரரசின் நுகத்தை எதிர்க்ககவேண்டும். யூதருக்கு ராஜா என்று கூறிக்கொள்கிறவரை ரோமப்பேரரசார் தேசத்துரோகி என்று தீர்மானம்பண்ணி அவருக்கு மரண தண்டனை கொடுத்துவிடுவார்கள்.

இயேசு தம்மை கிறிஸ்து என்று கூறுவதினால், அவர் தம்மை யூதருக்கு ராஜாவாக்க முயற்சி பண்ணுகிறார் என்று ஆலோசனைச்சங்கத்தார் தேசாதிபதியிடம் கூறுகிறார்கள். தேசாதிபதி ரோமப்பேரரசுக்கு உண்மையுள்ளவராக நடந்துகொள்ளவேண்டும். ரோமப்பேரரசின் ஆளுகைக்கு விரோதமாக எழும்பும் கலகங்களையும், சதி ஆலோசனைகளையும் கண்டுபிடித்து அழித்துப்போடவேண்டும். யூதா தேசம் ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பதும், யூதா தேசத்திற்கென்று தனியாக ஒரு ராஜா இருக்கக்கூடாது என்பதும், ரோமப்பேரரசின் ராயனே யூதாதேசத்திற்கும் ராஜாவாக இருக்கவேண்டும் என்பதும் ரோமப்பேரரசின் அரசியல் கொள்கையாகும். இயேசுகிறிஸ்து தம்மை கிறிஸ்து என்று கூறி, யூதருக்கு ராஜா என்று அறிக்கை செய்தால், அவர் ரோமப்பேரரசிற்கு எதிராக கலகம் செய்வதாக பொருள்படும். இதை உறுதிபண்ணுவதற்காகவே தேசாதிபதி இயேசுவிடம் ""நீ யூதருடைய ராஜாவா'' என்று கேட்கிறான்.

இயேசுகிறிஸ்து தேசாதிபதிக்கு பிரதியுத்தரமாக ""நீர் சொல்லுகிறபடிதான்'' என்று பதில் கூறுகிறார். தேசாதிபதி நினைப்பதுபோல இயேசுகிறிஸ்து இந்த பூமிக்குரிய ராஜா அல்ல. அவர் ராஜாதி ராஜா. கர்த்தாதி கர்த்தா. இயேசுகிறிஸ்து யூதருடைய ராஜாவாக இருப்பாரோ என்று பிலாத்து சந்தேகப்படுகிறான். தன் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காகவே ""நீ யூதருடைய ராஜாவா'' என்று இயேசுவிடம் கேட்கிறான். தேசாதிபதி நினைப்பதுபோல இயேசு யூதருடைய ராஜா அல்ல. ஆயினும் அவனுக்கு பிரதியுத்தரம் கூறும்போது ""நீர் சொல்லுகிறபடிதான்'' என்று கூறி, இயேசு தமது தெய்வீக ஆளுகையை வெளிப்படுத்துகிறார்.

பிலாத்தின் ஆச்சரியம்

பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான் (மத் 27:12-14).

பிரதான ஆசாரியரும் மூப்பரும் இயேசுவின்மீது குற்றம்சாட்டுகிறார்கள். இயேசுவின்மீது பிலாத்து ஒரு குற்றமும் காணவில்லை. இயேசுவின்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாததினால் பலவந்தத்தினாலும், பெருத்த சத்தத்தினாலும், அமளியினாலும், கூக்குரலினாலும் தங்களுடைய வழக்கை நியாயப்படுத்தவேண்டுமென்று பிரதான ஆசாரியரும் மூப்பரும் தீர்மானம்பண்ணுகிறார்கள்.

பிரதான ஆசாரியரும் மூப்பரும் இயேசுவின்மேல் குற்றம் சாட்டுகையில் அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டில் உண்மை எதுவுமில்லை என்பது இயேசுவுக்கு நன்றாக தெரியும். இயேசு உண்மையை எடுத்துக்கூறினாலும் அதை அவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். ஆகையினால் இயேசு அவர்களோடு விவாதம்பண்ணவில்லை. பிதாவின் சித்தத்திற்கு தாம் ஒப்புக்கொடுக்க வேண்டிய தம்முடைய வேளை வந்துவிட்டது என்பதை அறிந்து இயேசு ஒரு வார்த்தையும் அவர்களுக்கு மாறுத்தரமாக சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். தம்முடைய சித்தமல்ல, பிதாவின் சித்தம் நிறைவேறட்டும் என்று அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்.

இயேசு அமைதியாக இருப்பது பிலாத்துவிற்கு ஆச்சரியமாக இருக்கிறது. பிலாத்து இயேசுவை நோக்கி ""இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களை சாட்டுகிறார்களே, நீ அவைகளை கேட்கவில்லையா'' என்று கேட்கிறான். ஆனால் இயேசுவோ அப்போதும் ஒரு வார்த்தையும் மாறுத்தரமாக சொல்லவில்லை. பிலாத்துவிற்கு இயேசுவின்மேல் விரோதமோ குரோதமோயில்லை. உண்மையில் இந்த வழக்கில் எது நீதியானது, நியாயமானது என்பதை தெரிந்துகொள்ள பிலாத்து விரும்புகிறான். ஆனால் இயேசுவோ ஒரு மாறுத்தரமும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்படுகிறான். அவர் அமைதியாக இருப்பதைப்பார்த்து மிகுந்த ஆச்சரியப்படுகிறான்.

இயேசு அமைதியாக இருப்பதைப்பார்த்து பிலாத்து கோபப்படவில்லை. தான் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாக கூறாத இயேசுவின்மீது மூர்க்கவெறி கொள்ளவில்லை. கைதிகள் விசாரிக்கப்படும்போது பொதுவாக அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். தங்களுடைய நியாயத்தை முடிந்தவரையிலும் எடுத்துக்கூறுவார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பிலாத்துவின் அரண்மனையில் இதுபோன்ற விசாரணை இதற்கு முன்பு நடைபெற்றதேயில்லை. எல்லாம் புதுமையாக இருக்கிறது. இயேசு தமக்கு ஆதரவாக ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பதை பிலாத்து பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்தான்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.