ஆவியினால் திருமுழுக்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்கள், பிதா அருளிச்செய்யும் பரிசுத்த ஆவியானவரைத் (லூக்.11:13) தங்களோடு என்றென்றும் வாசம்செய்து தங்களுக்குள்ளே தங்கியிருக்குமாறு (யோவா. 14:16-17) கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்வது (மத்.3:11), பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் திருமுழுக்குப் பெறுவதாகும். இதை உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும் அனுபவம் என்று கிறிஸ்து கூறினார் (யோவா.7:37-39). இதை ஆவியானவரின் அருள்மாரி, அபிஷேகம், ஆவியானவரைப் பொழிந்தருளுதல் என்றும் கூறலாம். கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் கூறிய வாக்குறுதி இதுவே (யோவே.2:28; லூக்.24:49; அப்.1:5; 2:17-21,33; ஏசா.44:3).
பழைய ஏற்பாட்டு மக்களின் அனுபவங்கள்
பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் நியாயாதிபதிகள் மூலமாகவும் ஆவியானவர் செயல்பட்டார் (ஆதி.41:38; எண்.11:25-26; 24:2; 27:18; .நியா 3:10; 6:34; 11:29; 14:6; 15:14; 1சாமு.10:10; 16:13; 1நாளா.12:18, 2 நாளா.15:1; 24:20; எசே.2:2; 3:24; தானி. 4:8; 6:3; மீகா 3:8). சிலர் ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தனர் (யாத்.31:5; மீகா.3:8; லூக்.1:15,41,67). ஆனால் இவர்கள் யாரும் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்கு பெறும் அனுபவத்தை அடையவில்லை. ஏனெனில் கிறிஸ்து மகிமையடைவதற்கு முன்பு இது யாருக்கும் வழங்கப்படவில்லை (யோவா.7:37-39). அதாவது, தேவன் தாம் நியமித்த ஒரு செயலை அல்லது செயல்களைச் செய்வதற்கு ஆவியானவரின் வல்லமையைப் பழைய ஏற்பாட்டின் பல ஊழியருக்குக் கொடுத்தார். ஆவியானவர் அவர்களில் எப்பொழுதும் தங்கியிருக்கும் அனுபவத்தைக் கொடுக்கவில்லை.
ஆவியினால் திருமுழுக்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள்
முதன்முதலில் பெந்தெகொஸ்தே நாளில் (அப்.1:13-14; 2:1-4) ஆவியினால் திருமுழுக்கு நடைபெற்றது. பின்னர் சமாரியரும் (அப்.8:14-17) சவுலும் (அப்.9:17) கொர்நேலியுவின் வீட்டாரும் (அப்.10:44-48) எபேசு பட்டணத்திலிருந்த விசுவாசிகளும் (அப்.19:1-6) இத்திருமுழுக்கைப் பெற்றனர். இந்நிகழ்ச்சிகள் தவிர கலாத்தியர் பெற்றிருந்ததை, கலா.3:2-3 இலிருந்து அறிகிறோம். 1 கொரி.14 இலிருந்து கொரிந்தியரும் இந்த அனுபவத்தை உடையவர்களாயிருந்ததை அறிகிறோம். இந்த அனுபவம் இல்லாததை ஏதோவொரு குறை இருந்ததாக ஆதித்திருச்சபையினர் கருதினர் என்பதை அப்.8:15-17; 19:1-6 இல் காண்கிறோம்.
ஆவியின் திருமுழுக்கு பெற்றதற்கான அடையாளம்
ஆவியானவரின் திருமுழுக்கு நடைபெற்ற ஐந்து நிகழ்ச்சிகள் வேதத்தில் கூறப்பட்டுள்ளன. அப்.2:1-4; 10.44-48; 19:1-6 ஆகிய மூன்று நிகழ்ச்சிகளிலும் ஆவியானவரின் திருமுழுக்கு பெற்றவர்கள் அந்நிய மொழிகளில் பேசினார்கள். அப்.9:17 இல் ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சவுல் அந்நிய மொழிகளில் தாம் பேசுவதை 1 கொரி.14:18 இல் எழுதியுள்ளார். அப்.8:15-17 இல் சமாரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மட்டும் இது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அச்சமயம் மக்கள் பெற்றுக்கொள்வது காணத்தக்கவிதமாக இருந்தது (அப்.8:18) என்பதால் அச்சமயத்திலும் அந்நிய மொழியில் பேசினார்கள் என்று அறிகிறோம். காணும்படி வேறு ஏதேனும் நடந்திருந்தால் அது அப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் அல்லவா? அப்.8:12-19 குறிப்புகள் காண்க. அந்நிய மொழிகளில் பேசுதல், கட்டுரை காண்க. பக்கம் 1814.
இன்றைய கிறிஸ்தவர்களில் 1) இரட்சிக்கப்படாதவர்கள் 2) இரட்சிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு பெறாதவர்கள் 3) இரட்சிக்கப்பட்டுப் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு பெற்றவர்கள் ஆகியோர் உண்டு. எல்லாரும் அந்நிய மொழிகளில் பேசுகிறார்களா (1 கொரி.12:30)? 'இல்லை'. ஏனெனில் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு பெறாதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அந்நிய மொழிகளைப் பேசுவதில்லை. மாற்3:17-18 குறிப்பு காண்க
இரட்சிப்பும் ஆவியின் திருமுழுக்கும் ஒன்றுதானா?
1) இரட்சிப்பு என்பது ஒரு மனிதன் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பு பெற்று, இயேசுகிறிஸ்துவைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொள்வதாகும். இதற்கு ஆவியானவர் உதவி செய்கிறார். பாவத்தைக் குறித்தும் நீதியைக்குறித்தும் நியாயத்தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்துவதுமட்டுமின்றி (யோவா.16:8) இரட்சிக்கப்படுகிறவரின் உள்ளத்தில் சாட்சி கொடுக்கிறவர் அவரே (ரோம.8:16). இவ்வாறு அந்த மனிதன் இரட்சிக்கப்படும்பொழுது சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாகிறான். இதை ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்துக்குள்ளாக திருமுழுக்கு பெறுதல் என்று 1 கொரி.12:13 கூறுகிறது. ஆவியானவர் கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு தருவதான இரட்சிப்பைக் கிறிஸ்துவுக்குள் முத்திரையிடப் படுதல் என்று எபே.1:13 கூறுகிறது.
ஆனால் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கைக் கிறிஸ்து நமக்குத் தருகிறார் (மத்.3:11). எடுத்துக்காட்டு: நற்செய்திப்பணியாளர் ஒரு ஊருக்குச் சென்றபோது அந்தச் சபையின் செயலர் அவரைப் போதகர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் போதகர் அவரைச் செயலர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இவ்விரண்டும் ஒரே நிகழ்ச்சியன்று. அவ்வாறே ஆவியானவர் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் திருமுழுக்கு தருவதும் (1 கொரி.12:13) கிறிஸ்து ஆவியானவருக்குள் திருமுழுக்கு தருவதும் (மத்.3:11) ஒன்று அல்ல.
2) அப்.8:12 இல் சமாரியர் விசுவாசித்து தண்ணீர்த் திருமுழுக்கு பெற்றனர். ஆனால் அதன் பின்னர் அவர்களைப் பேதுருவும் யோவானும் பார்க்கும்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க வில்லை (அப்.8:14-17). விசுவாசித்தபோது (இரட்சிக்கப்பட்டபோது) அல்ல, தண்ணீர்த் திருமுஇகு பெற்றபோதும் அல்ல, பேதுருவும் யோவானும் கைகளை வைத்தபோதுதான் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர் (அப்.8:18). எனவே, இரட்சிப்பு வேறு, ஆவியின் திருமுழுக்கு வேறு
3) எபேசு பட்டணத்து விசுவாசிகளைப் பவுல் சந்தித்து அவர்கள் இயேசுவின்மீது விசுவாசம் வைக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். அதைக் கேட்ட அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு தண்ணீர்த் திருமுழுக்கு பெற்றனர். அவர்கள் ஏற்றுக்கொண்டபோது அல்ல, தண்ணீர்த் திருமுழுக்கு பெற்றபோது அல்ல, அதன்பின்னர் பவுல் அவர்கள்மீது கைகளை வைத்தபோதுதான் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார் என்பதை அப்.19:1-6 இல் காண்கிறோம்.
4) ஒரே ஒரு இடத்தில் (அப். 10:44-48) இரட்சிக்கப்பட்டவுடன் மக்கள் ஆவியானவரையும் பெற்றுச் கொண்டனர். இஸ்ரவேலரல்லாத புற இனத்தவர் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று கருதியிருந்த யூதர்களுக்கு, புற இனத்தவர் இரட்சிக்கப்படுவதையும் யூதர்களைப்போன்றே ஆவியானவனரப் பெறுவதையும் காண்பிக்கும்பொருட்டு இதைக் கர்த்தர் செய்தார். அப்.11:1-18 இல் இதன் விளைவு தெளிவாக எழுதப்பட்டுள்ளது
5) எபே.1:13 இல் 'விசுவாசிகளானபோது' என்றிருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். எபே.1:13 இல் கூறப்பட்டிருப்பது கிறிஸ்துவால் ஆவியானவருக்குள் திருமுழுக்கு தரப்படுவது அல்ல, ஆவியானவரால் கிறிஸ்துவுக்குள் முத்திரையிடப்படுதலாகிய இரட்சிப்பாகும். மேலும் இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த மக்களின் (எபேசு சபையின்) முதல் விசுவாசிகள் விசுவாசித்தபோதும் தண்ணீர்ந் திருமுழுக்கு பெற்றபோதும் ஆவியானவரின் திருமுழுக்கைப் பெறவில்லை என்பதை வேதம் கூறுகிறா (அப்.19:1-6). பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோதுதான் பெற்றனர்.
மேற்கூறியவற்றிலிருந்து இரட்சிப்பு வேறு, தண்ணீர்த் திருமுழுக்கு வேறு, பரிசுத்த ஆவியானவரின் திருமுழுக்கு வேறு என்பது தெளிவாகத் தெரிகின்றது.
யாருக்குக் கிடைக்கும்?
லூக்.11:11-13 இலிருந்து இதற்கு இரு நிபந்தனைகள் உண்டென்பதைக் காண்கிறோம். 'உங்களில். தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன்...கேட்டால்' (வச.11) என்று கூறப்பட்டிருப்பதால்...
1) தகப்பன் பிள்ளை என்ற உறவுவேண்டும். அதாவது "நான் தேவனுடைய பிள்ளை' என்ற நிச்சயம் (இரட்சிப்பின் நிச்சயம்) பெற்றிருக்கவேண்டும்.
2) 'தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு' என்று வ.13 இல் எழுதப்பட்டதிலிருந்து, வேண்டிக் கொள்கிறவர்களுக்குப் பிதா நிச்சயம் அருளிச்செய்வார் என்று காண்கிறோம். இரட்சிக்கப்படும்போது அல்ல, இரட்சிக்கப்பட்டவர்கள் வாஞ்சையுடனும் விசுவாசத்துடனும் கேட்டால் கிடைக்கும்.
கவனமாகப் பேசுங்கள்
வேதத்தின்படி ஆவியானவரின் அருள்மாரியைப் பெற்ற அனுபவமில்லாதவர் யாராயினும் சரியாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்ய முடியாது. ஆவியானவரின் அருள்மாரியைப் பெறாதவர்கள் அதைக்குறித்துப் பேசுவதில் கவனம் தேவை. ஆவியானவருக்கு எதிரான பாவங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பு கிடையாது. இத்தகையோர் ஆவியானவரைக்குறித்து வாய் திறவாமலிருப்பது நல்லது.
அக்கினி அபிஷேகம்
தூய ஆவியினால் அபிஷேகம் பெறும்பொழுது மிகுந்த மகிழ்ச்சியடையும் அனுபவம், உடல் அசைவுகள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. பெந்தெகொஸ்தே நாளின்போது சீடர்களின் அனுபவத்தைக் கண்ட சிலர், சீடர்கள் குடித்து வெறித்திருக்கின்றனர் என்று கூறினர் என்பதைக் கவனிக்க (அப்.2:13). ஒருசிலர் தங்கள்மீது மிகுந்த வெப்பம் இறங்குவதுபோன்றும் உணரக்கூடும். இதை அக்கினி அபிஷேகம் என்று கூறுகின்றனர். இது ஆவியானவரின் அபிஷேகத்தில் ஒரு உணர்வேயன்றி தனியாக அக்கினி அபிஷேகம் என்று ஒரு அனுபவம் வேதத்தில் கூறப்படவில்லை. மத்.3:11; லூக்.3:16 இல் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று கிறிஸ்துவைப்பற்றி திருமுழுக்கு யோவான் அறிவித்ததை வாசிக்கிறோம். இதே நிகழ்ச்சியை மாற்கு எழுதும்பொழுது பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்றே எழுதியுள்ளார் (மாற்.1:8). எனவே அக்கினி அபிஷேகம் என்று கூறுவது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமேயன்றி வேறொரு புதிய அனுபவமல்ல.
