இயேசு என்று பேரிடுவாயாக

இயேசு என்று பேரிடுவாயாக

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் (மத் 1:21).

இயேசுகிறிஸ்து உலக இரட்சகராக வெளிப்படுத்தப்படுகிறார். அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத் 1:21).

மரியாள் தன் குமாரனை பெறுவதற்கு முன்பாகவே அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக என்று கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு கூறினான். இயேசு என்னும் பெயர் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள யோசுவா என்னும் பெயராகும். யோசுவா என்னும் எபிரெய பெயர் கிரேக்க மொழியில் இயேசு என்று அழைக்கப்படுகிறது (அப் 7:45; எபி 4:8).

இயேசுகிறிஸ்து நமது இரட்சிப்பின் தேவனாக இருக்கிறார். அவர் நமது பிரதான ஆசாரியரும் இரட்சகருமாக இருக்கிறவர். யோசுவாவோ மோசேக்கு பதிலாக இஸ்ரவேல் ஜனத்தாரை கானான் தேசத்திற்கு வழிநடத்தினார். இயேசுகிறிஸ்துவோ நம்மை பரமதேசத்திற்கு வழிநடத்துகிறார்.

நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை இயேசுகிறிஸ்து நமக்காக செய்து முடித்தார். யோசுவாவின் முந்தைய பெயர் ஓசேயா என்பதாகும். இந்த பெயரோடு யெகோவா என்னும் பெயரில் முதல் எழுத்தை சேர்த்து, மோசே ஓசேயாவை யோசுவா என அழைத்தார் (எண் 8:16). மனுக்குலத்திற்கு இயேசுவின் நாமத்தினால் மாத்திரமே இரட்சிப்பு உண்டாயிருக்கிறது. மனுஷர்களை இரட்சிக்க வேறு எந்த நாமமும் கட்டளையிடப்படவில்லை. இயேசு தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.

இயேசு என்னும் பெயருக்கு ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிக்கிறவர் என்று பொருள். கிறிஸ்து ஜனங்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு இரட்சிக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணம். இயேசுகிறிஸ்து தமது மரணத்தின் மூலமாக பாவத்தின் சாபத்திலிருந்து மனுக்குலத்தை மீட்கிறார். தமது கிருபையின் ஆவியினால் பாவச்சேற்றில் விழுந்து கிடப்பவர்களை தூக்கியெடுத்து தமது இரத்தத்தினால் சுத்திகரிக்கிறார்.

ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிக்கும்போது அவர்கள் தேவனுடைய கோபத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் இரட்சிக்கப்படுகிறார்கள். இக்காலத்தில் சாபத்தின் விளைவினால் உண்டாகும் உபத்திரவங்களிலிருந்தும் இனிமேல் உண்டாகப்போகிற உபத்திரவங்களிலிருந்தும் ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாக விடுவிக்கப்படுகிறார்கள். தங்களுடைய பாவங்களை விட்டு விலகி வந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தங்களுடைய ஜீவனை அவரிடம் ஒப்புக்கொடுக்கிறவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகிறார்கள் (ரோம 11:26).

வேதாகமத்தில் 7 பேருக்கு அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்டது.

1. இஸ்மவேல் (ஆதி 16:11)

2. ஈசாக்கு (ஆதி 17:19)

3. சாலொமோன் (1நாளா 22:9)

4. யோசியா (பிறப்பதற்கு 325 வருஷங்களுக்கு முன்பாக) (1இராஜா 13:2; 2இராஜா 22:1)

5. கோரேஸ் (பிறப்பதற்கு 175 வருஷங்களுக்கு முன்பாக) (ஏசா 44:28-45:1)

6. யோவான் ஸ்நானன் (லூக் 1:13,60-63)

7. இயேசு (மத் 1:21)

புதிய ஏற்பாட்டில் இயேசு என்னும் பெயர் 983 தடவைகள் வந்திருக்கிறது. தேவகுமாரனுக்கு இந்த உலகத்தில் வழங்கப்படும் பெயர். இயேசு என்னும் பெயர் கிரேக்க மொழிச்சொல். இதற்கு இணையான எபிரெய பெயர் ""யோசுவா''. யோசுவா அல்லது இயேசு என்பதற்கு இரட்சகர் அல்லது இரட்சிப்பாக இருக்கும் தேவன் என்று பொருள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.