கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார்

கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார்

அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான் (மத் 2:4).

யூதருக்கு ராஜாவாக ஒருவர் பிறந்திருக்கிறார் என்னும் செய்தியை கேட்டு ஏரோது மிகவும் கலங்கினான். அவனுடைய கலக்கம் நாளுக்குநாள் அதிகரித்தது. பிரதான ஆசாரியர், யூதஜனத்தின் வேதபாரகர் எல்லோரையும் கூடி வரச்செய்தான். கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான் (மத் 2:4-6). யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே இருக்கிறார் என்று யாராலும் தெளிவுபடுத்த முடியவில்லை. கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று யூதர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஏரோது யூதமார்க்கத்து தலைவர்களிடம் விசாரித்தான்.

""பிரதான ஆசாரியர்'' என்பவர்கள் யூதருடைய 24 பிரிவுகளுக்குத் தலைவர்கள் (1நாளா 24). சங்கத்தின் தலைவர்கள். (அப் 5:21) இந்தச் சங்கம் ஆலோசனைச் சங்கம் என்று அழைக்கப்பட்டது.

வேதாகமத்தில் 120 இடங்களில் வேதபாரகரைப் பற்றி குறிப்புள்ளது. பழங்காலத்தில் இவர்கள் ராஜாக்களுக்கு காரியதரிசிகளாகப் பணிபுரிந்தார்கள். பின்பு, வேத வாக்கியங்களைப் பிரதி எடுப்பதற்கும், வியாக்கியானம் பண்ணுவதற்கும் இவர்களைப் பயன் படுத்தினார்கள். எல்லா ஆவணங்களையும் இவர்கள் பாதுகாக்க வேண்டும். இஸ்ரவேலின் சட்டங்கள் இவர்களுக்கு நன்றாக தெரியும். இவர்கள் வழக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும் பணிபுரிந்தார்கள்.

பெத்லகேமிலே பிறப்பார்

அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: (மத் 2:5).

பெத்லகேம் ஊரிலிருந்து கிறிஸ்துவானவர் வருவார் என்று வேதவாக்கியம் கூறுகிறது (யோவா 7:42). யூதர்கள் இதை விசுவாசித்து மேசியாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று விசாரித்து கேட்டதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஏரோதுவின் நோக்கம் கொடியது. துன்மார்க்கமானது. இக்காலத்தில் சிலர் தீய நோக்கத்தோடு சில நல்ல கேள்விகளை கேட்கிறார்கள். கேள்வி நல்லதுதான். ஆனால் அவை கேட்கப்படுவதன் நோக்கம் தீயதாக உள்ளது.

பிரதான ஆசாரியரும் ஜனத்தின் வேதபாரகரும் காலதாமதம் பண்ணாமல் ஏரோதுவின் கேள்விக்கு உடனடியாக பதில் கூறுகிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் உண்டாகவில்லை. யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்று எல்லோரும் ஒன்றுபோல பதில் கூறுகிறார்கள். பெத்லகேம் தாவீதின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. பெத்லகேம் என்னும் பெயருக்கு அப்பத்தின் வீடு என்று பொருள். இயேசுகிறிஸ்து ஜீவஅப்பமாக இருக்கிறார். ஜீவஅப்பமாகிய இயேசுகிறிஸ்து மிகவும் பொருத்தமாக அப்பத்தின் வீடு என்று பொருள்படும் பெத்லகேமிலே பிறந்தார். அவரே மெய்யான மன்னா. வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பம் அவரே.

தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது

யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தி-ருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள் (மத் 2:6).

உலகத்திற்கு ஜீவனை கொடுப்பதற்காக இயேசுகிறிஸ்து தம்மையே கொடுத்தார். பெத்லகேம் மற்ற ஊர்களை போல பெரிய நகரமல்ல. இங்கு திரளான ஜனங்கள் வசிக்கவில்லை. ஆயினும் யூதாவின் பிரபுக்களில் பலர் பெத்லகேமில் பிறந்திருக்கிறார்கள். ஆகையினால் யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேம் யூதாவின் பிரபுக்களில் சிறியதல்ல. இஸ்ரவேலை ஆளும் பிரபு பெத்லகேமிலிருந்து புறப்படுவார் (மீகா 5:1,2) என்று தீர்க்கதரிசி கூறுகிறார். கர்த்தர் ஜனங்களை பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களை தொகையிடுவார். இயேசுகிறிஸ்து பெத்லகேமிலே பிறந்தார் என்று தேவன் அவரை தொகையிட்டிருக்கிறார் (சங் 87:6).

இஸ்ரவேலை ஆளும் பிரபு பெத்லகேமிலிருந்து ƒபுறப்படுவார். பெத்லகேம் தாவீதின் நகரமாகும். தாவீது பெத்லகேமின் மகிமையாக விளங்கினார். தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்து அதே பெத்லகேமில் பிறப்பதை தெரிந்தெடுத்தார். பெத்லகேமின் அலங்கத்திற்கு அருகில் பிரசித்தி பெற்ற துரவு ஒன்று உள்ளது. தாவீது இந்த துரவின் தண்ணீரை பருகவேண்டுமென்று ஆசையோடிருந்தார் (2சாமு 23:15). நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஜீவஅப்பமாக இருக்கிறார். அதே சமயத்தில் அவர் நமது ஆத்தும தாகத்தை தணிக்கும் ஜீவத்தண்ணீராகவும் இருக்கிறார்.

இயேசுகிறிஸ்து பெத்லகேமிலே பிறந்த காலத்தில் ஏரோது ராஜா வயது முதிர்ந்தவனாக இருந்தான். அவன் ஏற்கெனவே யூதேயா தேசத்தை 35 வருஷங்கள் ஆட்சிபுரிந்துவிட்டான். யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிற இயேசுகிறிஸ்துவோ இப்போதுதான் பிறந்திருக்கிறார். உலக வழக்கத்தின் பிரகாரமாக இயேசுகிறிஸ்து யூதருடைய ராஜாவாக ஆகவேண்டுமென்றால் அதற்கு பல வருஷங்கள் ஆகும்.

குழந்தையாக இருக்கும் இயேசுகிறிஸ்து வளர்ந்து பெரியவராகவேண்டும். இதனால் ஏரோதுவின் ராஜ்யபாரத்திற்கு இயேசுவின் மூலமாக உடனடியாக எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. என்றாலும் இயேசுவினுடைய பிறப்பின் செய்தியை கேட்டு ஏரோது கலங்கினான். இயேசுவின் மீது பொறாமை கொண்டான்.

ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்திருப்பவர்கள் எளிதில் தங்களுடைய பதவியை யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டார்கள். தங்களுக்கு போட்டியாக யாரையும் எழும்ப விடமாட்டார்கள். தன்னுடைய பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்று ஏரோது வஞ்சனையாக சதி பண்ணுகிறான். சிறுபிள்ளையாக இருக்கும் யூதருடைய ராஜாவை கொன்று போட்டால் தன்னுடைய பிரச்சனை தீர்ந்துவிடும் என்று ஏரோது சதி ஆலோசனை பண்ணுகிறான்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலிருந்து நித்திய காலமாக அவர் இஸ்ரவேலையும், மற்ற தேசங்களையும் ஆளுகை செய்வார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.