கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

ஆதிக் கிறிஸ்தவர்களோ, அப்போஸ்தலரோ கிறிஸ்துமஸ் கொண்டாடியதில்லை. அக்காலத்தில் இவ்வழக்கம் இல்லை. கிறிஸ்துமஸ், லெந்து நாட்கள், ஈஸ்டர் இவை யாவும் பாபிலோனிய பழக்கவழக்கங் களை தழுவிவந்த பண்டிகைகளாகும்.

ஆதிக் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின்

மரணத்தை நினைவு கூர்ந்தார்கள். ஆனால் அவர் பிறப்பை பண்டிகையாக கொண்டாடவில்லை. இயேசுகிறிஸ்து டிசம்பர் 25ம்தேதிதான் பிறந்தார். என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.

1939 ஜனவரி மாதம் வெளிவந்த 'சயின்ஸ் டைஜஸ்ட்' என்ற பத்திரிக்கை இவ்விதம் எழுதியது. "பண்டைக்கால பழங்குடி மக்கள் மத்திய குளிர்கால பண்டிகையை டிசம்பர் 25ல் கொண்டாடினர். ஏனெனில் சூரியன் அந்த நாளிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும். கிறிஸ்தவர்கள் இந்த பண்டிகை நாளை கிறிஸ்து பிறந்த நாளாக மாற்றிவிட்டனர். கிறிஸ்து பிறந்த மூன்று நூற்றாண்டுகளான பின்புதான் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் பண்டிகை அறிமுகப்படுத்தப்பட்டது."

"புறஜாதிகள் கொண்டாடின குளிர்கால பண்டிகை களின் முதல்நாள் டிசம்பர் 25. இதுவே சிறிஸ்துவின் பிறப்பின் நாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாட ஆரம்பித் தனர்” கேம்ப்டன் கலைக்களஞ்சியம் - தொகுப்பு 11,

பக்கம் 758ல் இவ்விதம் கூறப்பட்டுள்ளது.

இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாளைப் பற்றிய திட்டமான குறிப்பு வேதத்தில் இல்லை. யோவான் ஸ்நானகனின் பிறப்பைப் பற்றிய குறிப்பிலிருந்து சில காரியங்களை அறிய முடியும். யூத ஆசாரியர் யாவரும் யூதர்களின் மூன்று முக்கிய பண்டிகை நாட்களில் எருசலேம் தேவாலயத்தில் பணிவிடை செய்தனர். மற்ற நாட்களில் ஆலய பணிவிடை நாட்கள் வாரங்களாக பிரிக்கப்பட்டிருந்தன (2 இரா. 11:7; 2 நாளா.23:8).

யோவான்ஸ்நானகனின் தகப்பன் சகரியா எட்டாவது வாரமான 'அபியா' என்ற நாட்களில் ஆலயத்தில் பணிவிடை செய்து சொண்டிருந்தான் (லூக்.1:5,8,23). யூத வருடம் பஸ்கா பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆபீப் மாதத்தில் ஆரம்பமாகிறது. இது ஏப்ரல் 1ம் தேதியை ஒட்டி வரும் (யாத்.12:2). எனவே சகரியா தேவாலயத்தில் ஊழியம் செய்து வந்த எட்டாவது வாரம் (அபியா) ஜுன் மாதம் ஆரம்பத்தில் இருந்திருக்க வேண்டும். எனவே யோவான்ஸ்நானகன் எலிசபெத் வயிற்றில் உருவானது ஜுன் மாதமாகும் (லூக்.1:23-25).

எலிசபெத் ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த போது, மரியாள் தேவதரிசனம் பெற்று இயேசுவின் பிறப்பின் நற்செய்தியை அறிந்தாள் (லூக்.1:26,36). எனவே இயேசு மரியாளின் வயிற்றில் உருவான மாதம் டிசம்பர் எனக் கணிக்கப்படுகிறது. அப்படி யானால் இயேசுகிறிஸ்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் பிறந்திருக்க வேண்டும். டிசம்பர் 25ல் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் எப்படி வந்தது?

டிசம்பர் 25ல் சூரியன் திசை திரும்பும் நாளாக கொண்டாடப்பட்டது. 'முற்றிலும் ஜெயங்கொள்ளு கிறவன்' என்று நிம்ரோத் பெயர் பெற்றான். அவன் நினைவாகவும் இந்த நாளில் பண்டிகை கொண்டாடப் பட்டது. இதையே கிறிஸ்தவ சபை 'இயேசுவே முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்' என்று டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்துவின் பிறந்த நாளாக கூறி கொண்டாட ஆரம்பித்தனர். மூன்றாம் நூற்றாண்டிற்குப்பின் அதுவரை கொண்டாடி வந்த பாபிலோனிய பண்டிகைகளெல்லாம் கிறிஸ்தவ பண்டிகைகளாக மாற்றப்பட்டன.

என் கருத்து

இதை வாசிக்கும் நீங்கள் கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையைக் குறித்து குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்தார் என்பதற்கு ஆதாரமில்லை. ஆனால் இயேசுகிறிஸ்து 1998 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாய் அவதரித்தார். என்பதில் கடுகளவு சந்தேகம்கூட இல்லை. உலக சரித்திரமே கி.மு. - கி.பி. என்றுதான் பிரிக்கப் பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின் என்ற நிலையிலேயே சகலமும் குறிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்து பிறந்தது உண்மை. அதை எந்த நாளில் கொண்டாடினாலும் தவறில்லை என்பதே என் வாதம்.

கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?

இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் பாவிகளை இரட்சிக்க. மனிதனை பாவத்தி லிருந்து விடுதலை செய்யவே அவர் பிறந்தார். எனவே பாவ மன்னிப்பைப் பெற்ற அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட தகுதியானவர்கள். பாவ மன்னிப்பின் நிச்சயமற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் வெறும் பண்டிகையே.

எப்படி கொண்டாடுகிறோம்? குடித்து வெறித்து கும்மாளமிட்டால் அது இயேசுகிறிஸ்துவை பரிகாசம் பண்ணுவதற்கு சமமானது. கிறிஸ்துமஸ் கொண்டா டுவது சரியல்ல. அந்த நாளில் உபவாசம்பண்ணி ஜெபிப்பது நல்லது என்று சில கிறிஸ்தவர்கள் போதித்து செயல்படுகின்றனர். குறிப்பாக கேரளா விலுள்ள ஆவிக்குரிய சபைப் பிரிவினர் அநேகர் இப்படியே செய்கின்றனர்.

கிறிஸ்துமஸ் நாளில் என்ன செய்கின்றோம்? புத்தாடை அணிந்து, அதிகாலையில் ஆலயத்திற்குச் சென்று கிறிஸ்துவின் பிறப்பை தியானிக்கின்றோம். நல்ல உணவை உண்டு நண்பர்களுக்கும், மற்றவர் களுக்கும் பரிசுகளைக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் ஆராதனையிலும் நான் பிரசங்கித்து, அழைப்புக் கொடுக்கும்போது அநேகர் இரட்சிக்கப் படுகின்றனர். இது புறஜாதிய மக்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் ஒரு சாட்சியான நாளாக அமைகிறது. எனவே என்னைப் பொறுத்தவரை தேவ பிள்ளைகள் கிறிஸ்துமஸ்ஸின் பொருளை உணர்ந்து அதை கொண்டாடுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் வெறும் வியாபார நாளாக, பொருளற்ற விழாவாக, அரசாங்க விடுமுறையாக மட்டுமே அநேகருக்குக் காணப் படுகிறது. இது சரியல்ல. தேவ பிள்ளைகளே! பாவமன்னிப்பைப் பெற்ற சகோதர சகோதரிகளே! நீங்கள் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்.

கிறிஸ்துமஸ் மரம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 'பரதீசின் மரம்' என்று பெயரிட்டு அதை விளக்குகளாலும் மற்றப் பொருட்களாலும் அலங்கரிக்கும் வழக்கம் ஜெர்மானியருக்குள் இருந்துவந்தது. 17ம் நூற்றாண் டில் முதன்முதலாக பிரான்ஸ் தேசத்தில் இதை 'கிறிஸ்துமஸ் மரம்' என்று பெயரிட்டனர். இது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவிற்று.

கிரேட் பிரிட்டன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை மிக அழகாக அலங்கரிக்க ஆரம்பித்தனர். பின்பு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறினவர்கள் இந்தப் பழக்கத்தை அமெரிக்கா விற்கும் கொண்டுசென்றனர்.

சான்டகிளாஸ்

டச்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 6ம் தேதியை 'நிக்கொலாஸ் திருநாள்' என்று அறிமுகப் படுத்திக் கொண்டாடினர். இந்த நாட்களில் சிறு பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்குவது அறிமுகப் படுத்தப்பட்டது. இங்கிலாந்து நாட்டு கிறிஸ்தவர்கள் இதையும் கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் இணைத்துக் கொண்டனர். 'திரு. நிக்கொலஸ்' என்ற வார்த்தைக்கு டச்சு மொழியில் 'சின்டர் கிளாஸ்' (SINTER KLASS) என்று வருகிறது. இதுவே 'சான்டகிளாஸ்' (SANTA CLAUS) ஆக மாறியது. சிகப்பு உடையணிந்த 'சான்ட கிளாஸ்' கிறிஸ்துமஸ்ஸுக்கு முந்தின நாள் இரவில் வீட்டு புகைக்கூண்டு வழியே வந்து, நல்ல பிள்ளைகளுக்கு பரிசுகளைத் தருவார் என்பது பாரம்பரியக் கதையானது.

ஒவ்வொரு வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அதன் அடியில் ஒவ்வொருவருக்கும் வந்த பரிசுப் பொட்டலங்களை அடுக்கி வைப்பார்கள். கிறிஸ்துமஸ் அன்று காலையில் வீட்டார் யாவரும் கூடி தங்கள் பெயரிடப்பட்ட பரிகப் பொட்டலங்களை பிரித்து தங்கள் பரிசுகளை எடுத்துக் கொள்வார்கள். பரிசுகளைப் பெறுவதிலும், வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதிலும், சிறந்த உணவுகளை தயாரித்து உண்பதிலும் கவனம் செலுத்தினாலும் கிறிஸ்துமஸ் நாளில் ஆலயத்தில் ஆராதனை இல்லாத நாடுகள் பல உண்டு.

அந்த வகையில் தமது நாடு எவ்வளவோ பரவாயில்லை. கிறிஸ்துமஸ் அன்று புது ஆடைகளை அணிந்து அதிகாலையில் ஆராதனைக்குச் சென்று கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்துப்பாடி, செய்தியைக் கேட்பது நல்ல பழக்கமே. கிறிஸ்துமஸ் நாளில் நல்ல உணவை உண்பதும், மகிழ்ச்சியாக இருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும் நல்ல காரியமே. இதிலே மிஞ்சின பரிசுத்தம் பேசி வேறுவிதமாய் நடந்துகொள்வது வரவேற்கத்தக்கதல்ல.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.