9. தேவ உறவின் நோக்கம்_

தேவ உறவின் நோக்கம்

உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்... லேவியராகமம் - 26:11

நண்பர் ஒருவருடைய வீடு வழக்கமாக எப்போதும் போதிய தூய்மையின்றியும், பொருட்கள் எதுவும் சரியான ஒழுங்குகளில் வைக்கப்படாமலும் தாறுமாறாகக் காட்சியளிக்கும். ஆனால் ஒருமுறை அவருடைய இல்லம் செல்ல நேர்ந்த போது, வீடு முற்றிலும் வித்தியாசமாகக் காட்சியளித்தது. எப்போதுமே காண முடியாத சுத்தமும், ஒழுங்கும் அங்கே காணப்பட்டது. எப்படி இந்த மாறுதல் ஏற்பட்டது? முக்கியமான உறவினர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்து சில வாரங்கள் தங்கியிருந்ததாலேயே அந்த மாறுதல்கள் ஏற்பட்டிருந்தது.

தேவன் பரலோகத்திலிருக்கிறவராக நமக்கு அறியப்பட்டிருந்தாலும், அவர் பூமியில் நம்முடன் தங்குவதையே விரும்புகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் லட்சக்கணக்கில் வனாந்திரத்தில் தங்கியிருந்தபோது, தேவன் அவர்கள் நடுவில் தமக்கும் ஒரு பரிசுத்தமான தங்குமிடத்தை நிறுவக் கூறினார். (யாத் - 25:8) பல இடங்களில், தேவன் நான் என் ஜனங்களின் நடுவில் உலாவி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன். என்றார். (லேவி - 26:12)

எதற்காக தேவன் பூமியில் வந்து தங்க வேண்டும்? பரலோகத்தில் இல்லாத சௌகரியங்களா பூமியில் உள்ளது? தேவன் நம் நடுவில் தங்க விரும்பும் முக்கிய மான காரணம் நாம் பரிசுத்தமாவதற்கே. பரிசுத்தராகிய அவருடைய ஐக்கியம் நமக்குக் கிடைப்பதின் மூலம் நாம் பரிசுத்தம் அடையும் வாய்ப்பு கிட்டுகிறது. தேவன் நம் நடுவில் தங்குவதற்காக, ஒரு பரிசுத்தமான சூழ்நிலை கட்டாயத் தேவையாகிறது. அதன் விளைவாக நம் வாழ்க்கை பரிசுத்தமடைய முடிகிறது.

ஆம். தேவன் நம் நடுவில் தங்குவது எதோ சில நன்மைகளைச் செய்வதற்காக மட்டுமல்ல. அவர் தங்குகின்ற இடம் பரிசுத்தமான இடமாக மாறுகிறது. அதன் மூலம் நாம் பரிசுத்தர்களாக மாறவேண்டும் என்ற தேவ நோக்கம் நிறைவேறுகிறது. நம்மை நாமே பரிசுத்தமாக்கிவிட முடியாது. நம்முடைய சுய முயற்சிகளும், சுயநீதிச் செயல்களும் தேவனுக்கு உகந்த பரிசுத்தர்களாக நம்மை மாற்றாது. தேவ உறவும், ஐக்கியமும் மட்டுமே நம்மைத் தேவனுக்கேற்ற பரிசுத்தர்களாக மாற்றும்.

எனவேதான் தேவன் நம் நடுவில் தங்கியிருக்கவும், நம் நடுவில் உலாவவும் விரும்புகிறார். அவர் எங்கே இருப்பாரோ அங்கே பரிசுத்தமும் இருக்கும். தேவன் நம்மோடிருந்தால் அவரால் பல நன்மைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தை மட்டும் கொண்டிராமல், அவருடைய உறவே நம்மைப் பரிசுத்தமாக்கும் என்ற விழிப்புணர்வோடு அதனை நாம் நாடிட கருத்தாயிருக்க வேண்டும்.

நிலத்துடன் வேர் பிணைந்தால் மரம் நிமிர்ந்து நிற்கும். இறைவனோடு இதயம் இணைந்தால் நம்பிக்கை நிலைத்து நிற்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.