தானியேல் 9ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி
யூதர்கள் அந்நிய தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். கர்த்தர் தாமே அவர்களுடைய சிறையிருப்பிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களை தங்களுடைய சொந்த தேசத்திற்கு திரும்பவும் அழைத்து வந்து, அங்கே அவர்களை குடியேற்றவேண்டுமென்று தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார் (தானி 9:1-19).
தானியேலின் ஜெபத்திற்கு கர்த்தர் உடனே பதில் கொடுக்கிறார். ஜீதர்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து சீக்கிரத்தில் விடுவிக்கப்படுவார்கள் என்னும் நிச்சயம் அவருக்கு கொடுக்கப்படுகிறது (தானி 9:20-23). இயேசுகிறிஸ்துவின் மூலமாய் இந்த உலகம் இரட்சிக்கப்படும் என்னும் செய்தி தானியேலுக்கு அறிவிக்கப்படுகிறது (தானி 9:24-26). பழைய ஏற்பாட்டு புஸ்தகங்களிலே இங்கு மேசியாவைப்பற்றிய தீர்க்கதரிசனம் தெளிவாயிருக்கிறது.
எழுபது வருஷம் தானி 9:1-3
தானி 9:1. கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதியகுலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
தானி 9:2. தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்-ய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
தானி 9:3. நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்ப-லும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி,
ராஜாக்கள் தனக்கு கொடுத்த வேலைகளைவிட, தானியேல் இப்போது மிகவும் முக்கியமான வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவர் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் தனக்கு சொல்லும் வார்த்தைகளை தானியேல் கருத்தாய்க் கேட்கிறார். தானியேல் தனக்காக மாத்திரம் ஜெபம்பண்ணவில்லை. இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாருக்காகவும் அவர் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்.
கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானியேல் உபவாசம்பண்ணி கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார் (தானி 9:1). தரியு கல்தேயருக்கு புதிய ராஜாவாக நியமிக்கப்பட்டிருக்கிறான். அவன் பாபிலோன் தேசத்தின்மீது யுத்தம்பண்ணி அதை ஜெயித்தான். பாபிலோன் தேசத்தின்மீது தரியுவும், அவனுடைய உறவினன் அல்லது அவனுடைய பேரனாகிய கோரேசும் யுத்தம்பண்ணி, பாபிலோனைத் தங்கள் வசமாக்கிக்கொண்டார்கள்.
யூதர்கள் எழுபது வருஷங்களணுப் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். இத்துடன் அவர்களுடைய சிறையிருப்புக்காலம் முடிவு பெறுகிறது. கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசயோடே சொல்லிய வருஷங்களின் தொகையை, தானியேல் புஸ்தகங்களால் அறிந்துகொள்கிறார். எருசலேமின் பாழ்க்கடிப்புக்கள் நிறைவேற்றி தீர எழுபது வருஷம் செல்லும். எருசலேம் எழுபது வருஷங்களாய்ப் பாழாய்க்கிடக்கும். இந்த சத்தியத்தை எரேமியா தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார்.
""பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (எரே 29:10).
""இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்'' (எரே 25:11). வனாந்தரமும் பாழுமாகும் என்பதற்கான எபிரெய வார்த்தை ""கோர்பாத்'' என்பதாகும். எருசலேமின் அழிவைக் குறிப்பதற்கு, தானியேலும் இந்த எபிரெய வார்த்தையையே பயன்படுத்துகிறார்.
தானியேல் எருசலேமின் அழிவைப்பற்றி எழுதுவதற்கு முன்பாக, எரேமியா தீர்க்கதரிசி அதன் அழிவைப்பற்றி ஏற்கெனவே தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார். அந்த எழுபது வருஷகாலம் இப்போது முடிவு பெறுகிறது. இந்தக் காலத்தில் தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்.
தானியேல் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்ப-லும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட, தன்னுடைய முகத்தை கர்த்தருக்கு நேராக்குகிறார் (தானி 9:3).
அந்நிய தேசத்து சிறையிருப்பிலிருக்கிற இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. அவர்கள் தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும், சிறையிருப்பிலிருந்து விடுதலையையும் பெற்றுக்கொள்வதற்கு தங்களை ஆயத்தம்பண்ணவேண்டும். கர்த்தரே அவர்களை விடுவிக்கிறார். கர்த்தரே தமது கிருபையினால் அவர்களை சுத்தம்பண்ணவேண்டும். கர்த்தரே அவர்களை விடுதலைக்கு ஆயத்தம்பண்ணவேண்டும்.
தானியேல் தன்னுடைய முகத்தை கர்த்தருக்கு நேராக திருப்புகிறார். தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேடுகிறார். தானியேலின் சிந்தனைகள் தேவனைப்பற்றியதாகவே இருக்கிறது. கர்த்தர்மீது அவர் வைத்திருக்கிற விசுவாசம் உறுதியாயிருக்கிறது. கர்த்தர் தனக்கு கொடுத்த கடமைகளையும், ஊழியங்களையும் தானியேல் சரியாகச் செய்கிறார்.
தானியேல் தன் முகத்தை கர்த்தருக்கு நேராக்குகிறார் என்னும் வாக்கியத்திற்கு, அவர் தன்னுடைய முகத்தை எருசலேமுக்கு நேராக்குகிறார் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தானியேல் கர்த்தருக்கு முன்பாக தன்னை வெகுவாய்த் தாழ்த்துகிறார். தன்னுடைய பாவங்களுக்காகவும், இஸ்ரவேல் வம்சத்தாரின் பாவங்களுக்காகவும் தானியேல் கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். தானியேல் சாதாரணமாக ஜெபம்பண்ணாமல் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து ஜெபம்பண்ணுகிறார்.
யாப்பேத்தியர் மேதிய குலத்தைச் சேர்ந்தவர்கள். (ஆதி 10:2; 2இராஜா 17:6). தரியு அகாஸ்வேருவின் புத்திரன். இது தரியு அல்லது அஸ்திகேசைக் குறிக்கும் வார்த்தையாகும். இவன் அகாஸ்வேரு அல்லது கைகோரேஸ் என்பவனின் குமாரன். மேதிய-பெர்சிய தேசத்தின் நான்கு ராஜாக்களுக்கு அகாஸ்வேரு என்னும் பட்டப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் கிரேக்கப் பெயர் சஷ்டா என்பதாகும். கைகோரேசும், அஸ்திகேசும் அகாஸ்வேரு என்று அழைக்கப்பட்டார்கள். அகாஸ்வேரு என்பதற்கு ''வல்லவன்'' என்று பொருள். (தானி 5:31)
""தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே'' என்பது தானி 8 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தரிசனத்திற்கு ஒரு வருஷத்திற்குப் பின்பு என்பதாகும். இந்த வருஷத்தில் தானியேல் இந்தத் தரிசனத்தைக் காண்கிறார். (தானி 5:30-31= தானி 8:1).
""புஸ்தகங்கள்'' என்பது எரேமியாவின் புஸ்தகச் சுருள்களைக் குறிக்கும். (எரே 25:11, எரே 29:1,10; 2நாளா 36:21).
எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித் தீர எழுபதுவருஷம் செல்லும் (தானி 9:2). இந்த எழுபது வருஷத்தில் மூன்று காலங்கள் உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
1. யோயாக்கீமின் நாலாம் வருஷத்தில் யூதருடைய அடிமைத்தனம் ஆரம்பமாகிறது. இது நேபுகாத்நேச்சாரின் முதலாம் வருஷமாகும். இக்காலத்தில் யூதா தேசம் கல்தேயருடைய ஆட்சியின்கீழ் எழுபது வருஷங்களுக்கு ஆளுகை செய்யப்படுகிறது. (எரே 25:1; 2இராஜா 24:1-7). மேதியனாகிய தரியுவின் மூலமாகப் பாபிலோன் பேரரசு வீழ்ச்சியுற்றது. இக்காலத்துடன் இந்த எழுபது வருஷ அடிமைத்தனம் முடிவு பெறுகிறது. (தானி 5:31).
2. எகொனியாவைப் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றபோது யூதருடைய சிறையிருப்பு ஆரம்பமாயிற்று. இது நேபுகாத்நேச்சரின் எட்டாம் வருஷத்தில் நடைபெற்ற சம்பவம். யூதருடைய அடிமைத்தனம் ஆரம்பமாகிய 7 வருஷங்களுக்குப் பின்பு அவர்களுடைய சிறையிருப்புக்காலம் ஆரம்பமாகிறது. (2இராஜா 24:8-16) இக்காலம் எருசலேம் அழிக்கப்படுவதற்கு 11 வருஷங்களுக்கு முன்பு நடைபெற்றது. (எசே 40:1).
3. ""எருசலேமின் பாழ்க்கடிப்புகள்'' என்னும் வாக்கியம் எருசலேம் நகரம் முழுவதுமாக அழிக்கப்படுவதையும், சிதேக்கியாவின் 11 ஆம் ராஜ்யபாரத்தின்போது, நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தாரைச் சிறைப்பிடித்துச் சென்றதையும் குறிப்பிடும். (2இராஜா 24:17-25:2; லேவி 26:32-35) நேபுகாத்நேச்சார் எருசலேம் நகரத்தை முதன் முறையாக முற்றிக்கை போட்டு, 19 வருஷங்களுக்குப் பின்பு, எருசலேமின் பாழ்க்கடிப்புகள் ஆரம்பமாயிற்று. (2இராஜா 24:1-5) இந்தச் சம்பவம் இரண்டாம் முற்றிக்கைக்கு 11 வருஷங்களுக்குப் பின்பும் (2இராஜா 24:8-16), மூன்றாம் முற்றிக்கையின்போதும் நடைபெற்றதாகும். மூன்றாம் முற்றிக்கையே இறுதி முற்றிக்கை. (2இராஜா 24:17-25:4).
தானி 9 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தரிசனத்தின்போதும், தானியேலின் ஜெபத்தின்போதும் யூதருடைய அடிமைத்தனம் முடிவு பெற்று விட்டது. யூதாவின் சிறையிருப்பும், எருசலேமின் பாழ்க்கடிப்புகளும் விரைவில் முடிவடையப்போகிறது.
தானியேல் தன் முகத்தை கர்த்தருக்கு நேராக்குகிறார் (தானி 9:4). கர்த்தரிடத்திலிருந்து ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், தானியேல் இதுபோல உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்ப-லும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேடுவதற்கு அவருடைய முகத்தைத் தேவனுக்கு நேராக்குவது வழக்கம்.
தானியேலின் ஜெபமும் பாவஅறிக்கையும் தானி 9:4-19
தானி 9:4. என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
தானி 9:5. நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.
தானி 9:6. உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.
தானி 9:7. ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.
தானி 9:8. ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
தானி 9:9. அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.
தானி 9:10. ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
தானி 9:11. இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம். ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப்புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.
தானி 9:12. எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்-யிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.
தானி 9:13. மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.
தானி 9:14. ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.
தானி 9:15. இப்போதும் உமது ஜனத்தைப்பலத்த கையினால் எகிப்துதேசத்தி-ருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய்நடந்தோம்.
தானி 9:16. ஆண்டவரே, உம்முடைய சர்வ நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படிசெய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
தானி 9:17. இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும்கேட்டு, பாழாய்க்கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப்பிரகாசிக்கப்பண்ணும்.
தானி 9:18. என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
தானி 9:19. ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்.
தானியேல் தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுகிறார். தானியேலின் ஜெபத்தோடு பாவஅறிக்கையும் சேர்ந்திருக்கிறது. நாம் கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம்பண்ணுகிற ஒவ்வொரு வேளையிலும், நம்முடைய பாவங்களையும் அறிக்கை செய்யவேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கை செய்தால் மாத்திரம் போதாது. நாம் கர்த்தரிடத்தில் வைத்திருக்கிற விசுவாசத்தையும் அறிக்கை பண்ணவேண்டும்.
தானியேல் கர்த்தருடைய சமுகத்தில் தன்னைத் தாழ்த்துகிறார். கர்த்தரை பயபக்தியோடு மகிமைப்படுத்தி துதிக்கிறார். நாம் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக பயத்தோடும் பக்தியோடும் இருக்கவேண்டும். நம்முடைய ஆண்டவர் மகத்துவமும் பயங்கரமுமான தேவன். அவரால் பெரிய காரியங்களை செய்ய முடியும்.
சபைக்கு விரோதமாக கிரியை செய்கிறவர்களுக்கு கர்த்தர் பயங்கரமானவராயிருக்கிறார். நம்முடைய ஆண்டவர் நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரமுள்ளவராயிருக்கிறார். தம்மிடத்தில் அன்புகூர்ந்து, தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு, கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துக்கொள்கிறார்.
கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர். அவர் இரக்கமும் அன்புமுள்ளவர். கர்த்தர் தம்முடைய வார்த்தையைவிடவும், உடன்படிக்கையை விடவும், இரக்கம் மிகுந்தவர்.
தானியேல் கர்த்தருடைய கிருபைக்காகவும், அவருடைய இரக்கத்திற்காகவும் அவரை நன்றியோடு துதிக்கிறார். இஸ்ரவேல் வம்சத்தார் அந்நிய தேசத்தில் அனுபவிக்கிற பாடுகளையும், வேதனைகளையும் தானியேல் கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கையும் கிருபையும் தங்களுக்கு கிடைக்கவேண்டுமென்று பயபக்தியோடு ஜெபம்பண்ணுகிறார்.
தானியேலின் ஜெபத்தில் பாவஅறிக்கையும் சேர்ந்திருக்கிறது. தானியேல் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்துகிறார். கர்த்தர் தன்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணும்போது, அவர் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோருடைய பாவங்களையும் தயவாய் மன்னிக்க வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
""நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்'' (தானி 9:5,6) என்று தானியேல் கர்த்தரிடத்தில் பாவஅறிக்கை செய்கிறார்.
ஒரு தேசம் முழுவதற்கும் கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் கிடைக்கவேண்டுமென்று நாம் ஜெபம்பண்ணும்போது, அந்த தேசத்தின் பாவங்களுக்காக நாம் கர்த்தருடைய சமுகத்தில் பாவஅறிக்கை செய்யவேண்டும்.
இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் இரண்டு பாவங்கள் பிரதானமாயிருக்கிறது. அவையாவன: 1. அவர்கள் கர்த்தருடைய நியாயங்களைவிட்டு அகன்றுபோனார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியவில்லை. 2. கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய் சொன்ன வார்த்தைகளுக்கு இஸ்ரவேல் வம்சத்தார் செவிகொடுக்கவில்லை.
கர்த்தருடைய ஊழியக்காரர்கள், இஸ்ரவேல் வம்சத்தாரை எச்சரித்தார்கள். ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் போனார்கள். துன்மார்க்கமாய் நடந்தார்கள். கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள். கர்த்தருடைய பிரமாணங்களுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படியாமல் போனார்கள்.
தானியேல் தன்னுடைய பாவத்தையும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவத்தையும் கர்த்தருடைய சமுகத்தில் பாவஅறிக்கை செய்கிறார். அதே வேளையில் அவர் தேவனுடைய நீதியையும் அங்கீகரிக்கிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்புக்களெல்லாம் நீதியாயிருக்கிறது.
""ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது'' (தானி 9:7) என்று தானியேல் கர்த்தருடைய நீதியை அங்கீகரிக்கிறார்.
தங்களுடைய துன்பங்களுக்கும், தங்களுடைய பிரச்சனைகளுக்கும், அந்நிய தேசத்து சிறையிருப்புக்களுக்கும் தங்களுடைய பாவங்களே காரணம் என்பதை தானியேல் கர்த்தருடைய சமுகத்திலே அங்கீகரிக்கிறார். இஸ்ரவேல் தேசத்தார் அந்நிய தேசங்களிலே சிதறிப்போனார்கள். அவர்கள் பலமிழந்து பலவீனரானார்கள். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம், அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்ததே காரணம்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். அதன் நிமித்தமாக அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் பிதாக்களும் வெட்கத்திற்குரியவரானார்கள். அவர்கள் கர்த்தரை ஆராதியாமல் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போனார்கள். கர்த்தரோ அவர்களை விட்டு விலகிப்போனார். அவர்களை அந்நிய ஜனத்தார் மத்தியிலே சிதறிப்போகப்பண்ணினார். இஸ்ரவேல் வம்சத்தார் எதை விரும்பினார்களோ, அதையே, கர்த்தர் அவர்களுக்கு தண்டனையாகக் கொடுத்துவிட்டார்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள். கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளாகிய, தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு அவர்களுக்கு முன்பாக நியாயப்பிரமாணங்களை வைத்தார். அவர்கள் இந்த நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாரோ கர்த்தருடைய சத்தத்திற்கும், அவருடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுடைய சத்தத்திற்கும் செவிகொடாமல் போனார்கள் (தானி 9:9).
இஸ்ரவேலர் எல்லாரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை மீறி, அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள். ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப்புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் அவர்கள்மேல் சொரியப்பட்டன (தானி 9:11).
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினாலும், அவருடைய பிரமாணத்திற்கு செவிகொடாமலும், கீழ்ப்படியாமலும் இருந்தாலும் தங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புக்களும் உண்டு என்று சொல்லுகிறார்கள் (தானி 9:10). கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர். அதே வேளையில் அவர் நீதியும் நியாயமுமுள்ளவர்.
இந்தப் பூமியில் வாசம்பண்ணுகிற எல்லா மனுஷருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வரும். எல்லோருமே தீங்குகளை அனுபவிக்கிறார்கள். இவையெல்லாம், எல்லா மனுஷரும் அனுபவிக்கிற பொதுவான பிரச்சனைகள். இவை பொதுவான தீங்குகள். இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சனைகளோ, பொதுவான தீங்குகளோ வரவில்லை. அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவம் செய்ததினால் கர்த்தர் அவர்கள்மீது தம்முடைய கோபத்தை வரப்பண்ணுகிறார். மற்ற ஜனங்கள் அனுபவித்திராத பெரிய பிரச்சனைகளை அவர்களுக்கு கொடுக்கிறார்.
எருசலேமில் சம்பவித்ததுபோல, இப்படிப்பட்ட பெரிய தீங்கு, வானத்தின் கீழேங்கும் வேறு எந்த தேசத்திலும் சம்பவிக்கவில்லை. இது இஸ்ரவேல் வம்சத்தார்மீது கர்த்தர் வரப்பண்ணின தீங்கு. கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கும் அவர்களை நியாயந்தீர்த்த நியாயதிபதிகளுக்கும் விரோதமாக தம்முடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளைச் சொன்னார். கர்த்தர் தாம் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றினார். இஸ்ரவேல் புத்திரர்மீது பெரிய தீங்கு வந்தது (தானி 9:12).
தனக்கு வந்த தீங்கை நினைத்துப் பார்த்து எரேமியா புலம்புகிறார். தன்னுடைய வருத்தத்தைப்போல வேறு யாருக்கும் வருத்தம் வரவில்லை என்று எரேமியா வேதனையோடு சொல்லுகிறார். நம்முடைய ஜீவியத்தில் நமக்கு வேதனைகளும் வருத்தங்களும் வரும்போது, நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை நாம் ஆராந்து பார்க்கவேண்டும். நாம் கர்த்தருக்கு விரோதமாக செய்திருக்கிற பாவங்கள் எவ்வளவு பெரியது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
இஸ்ரவேல் வம்சத்தாரைப்போல வேறு எந்த தேசத்தாரும் கர்த்தருக்கு விரோதமாக இவ்வளவு பெரிய பாவங்களை செய்யவில்லை. இதனால் எருசலேமில் சம்பவித்ததுபோல இவ்வளவு பெரிய தீங்கு வேறு எந்த தேசத்திலும் சம்பவிக்கவில்லை. இஸ்ரவேல் தேசம் உயர்ந்த நிலமையிலிருந்து தாழ்ந்த நிலமைக்கு விழுந்துபோயிற்று. பாலும் தேனும் ஓடின கானான் தேசம், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமாய், பாழும் வனாந்தரமுமாயிற்று.
இஸ்ரவேல் வம்சத்தார் பாவத்திற்கு விலகி, கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து, பரிசுத்த ஜாதியாய் ஜீவித்திருப்பார்களென்றால், கர்த்தர் அவர்களை எல்லா தேசங்களிலும் பெரிய தேசமாக உயர்த்தியிருப்பார். அவர்களுக்கு அதிக கனத்தையும், உயர்ந்த நாமத்தையும், மேன்மையான கீர்த்தியையும் கொடுத்திருப்பார்.
""நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்'' (உபா 26:19).
ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாரோ கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறார்கள். அவர்களெல்லோரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை மீறி அவருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் விலகிப்போனார்கள். கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். ஆகையினால் கர்த்தருடைய கோபமும், நீதியான நியாயத்தீர்ப்பும் அவர்கள்மீது வந்தது. யூதாவின் மனுஷருக்கும், எருசலேமின் குடிகளுக்கும் நிந்தையும் அவமானமும் உண்டாயிற்று.
இஸ்ரவேல் வம்சத்தார் யோர்தான் நதிக்கரையில் அமர்ந்து கர்த்தரைத் துதிக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்களோ பாபிலோன் தேசத்து நதிக்கரையில் சோகத்தோடு உட்கார்ந்து, தங்களுடைய வேதனைகளை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்ரவேல் வம்சத்தாரால் தங்கள் சொந்த தேசத்தில் குடியிருக்க முடியவில்லை. அங்கே தங்கள் நிலத்தை பயிரிட முடியவில்லை. அவர்கள் அசீரிய தேசத்திலும், பாபிலோன் தேசத்திலும் சிறையிருப்பிலிருக்கிறார்கள்.
மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் வந்தது; ஆனாலும் அவர்கள் தங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், கர்த்தருடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், தங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை (தானி 9:13).
ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; இஸ்ரவேல் வம்சத்தாரோ கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனார்கள் (தானி 9:14).
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தாலும், கர்த்தர் தங்கள் பாவங்களை மன்னிக்கவேண்டுமென்று, அவர்கள் கர்த்தரின் முகத்தை நோக்கி கெஞ்சவில்லை. அவர்கள் கர்த்தரோடு சமாதானமாய் ஜீவிக்கவேண்டுமென்று நாடவில்லை. அவர்கள் கர்த்தரோடு ஒப்புரவாகவுமில்லை.
நாம் கர்த்தருடைய அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் கீழ்ப்படியவேண்டும். அப்போது நம்முடைய பாவமான வழிகளைவிட்டு நாம் திரும்பி, கர்த்தருடைய நீதியான வழிகளில் நடப்போம். நாம் முதலாவதாக கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஜெபம்பண்ணவேண்டும். நம்முடைய தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கி கெஞ்சவேண்டும்.
அப்போது நாம் அனுபவிக்கும் பாடுகளும் வேதனைகளும் நம்மைவிட்டு நீக்கப்படுவதற்கு முன்பாக, அது பரிசுத்தமாக்கப்படும். நம்முடைய உபத்திரவங்கள் நம்மைத் தண்டிப்பதற்குப் பதிலாக, நம்மை சுத்திகரிக்கும்.
தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது அவருடைய கிருபையும் இரக்கமும் தனக்கும், இஸ்ரவேல் வம்சத்தாருக்கும் கிடைக்கும் என்று விசுவாசிக்கிறார். ""ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு'' (தானி 9:10). கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார்.
""அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை'' (நெகே 9:17).
""துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்'' (ஏசா 55:7).
தானியேல் தன்னுடைய விசுவாசத்தை உற்காகப்படுத்துவதற்காக, இஸ்ரவேல் வம்சத்தாரின் கடந்த கால சரித்திரத்தை நினைத்துப் பார்க்கிறார். கர்த்தர் தமது ஜனத்தை பலத்த கையினால் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி கர்த்தர் தமக்கு கீர்த்தியை உண்டாக்கியிருக்கிறார் (தானி 9:15). கர்த்தருடைய கிருபையும் மாறவில்லை. அவருடைய வல்லமையும் மாறவில்லை. கர்த்தர் தம்முடைய ஜனத்தை பலத்த கையினால், புறப்படப்பண்ணினதுபோல, இப்போது பாபிலோன் தேசத்திலிருந்தும் புறப்படப்பண்ணுவார் என்று தானியேல் விசுவாசிக்கிறார்.
""ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்தி-ருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல், இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக்கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (எரே 16:14,15).
கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு நன்மை செய்தாலும், அவர்களுக்கு தமது பலத்த கையினாலே அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தாலும், இஸ்ரவேல் வம்சத்தாரோ பாவம் செய்து துன்மார்க்கராய் நடக்கிறார்கள். ஆகையினால் கர்த்தருடைய சர்வநீதியின்படியே, அவருடைய கோபமும், அவருடைய உக்கிரமும், அவருடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேமின்மீது வந்து தங்கியிருக்கிறது. எருசலேம் கர்த்தருடைய நகரம். ஆனாலும் கர்த்தருடைய கோபம் அந்த நகரத்தின்மீது இருக்கிறது. கர்த்தர் தம்முடைய கோபத்தையும் உக்கிரத்தையும், தம்முடைய நகரத்தைவிட்டு திரும்பும்படி செய்யவேண்டுமென்று தானியேல் விண்ணப்பம்பண்ணுகிறார்.
இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் பாவங்களினாலும், தங்களுடைய பிதாக்களின் அக்கிரமங்களினாலும், எருசலேமும், கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரரும், அவருடைய சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையாயிருக்கிறார்கள் (தானி 9:16).
கர்த்தருடைய ஜனத்தார் இப்போது ஆசீர்வாதமாயில்லை. அவர்கள் தலையாயில்லாமல் வாலாயிருக்கிறார்கள். அவர்கள் மேலாயிராமல் கீழாயிருக்கிறார்கள். கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் பாழாய்க்கிடக்கிறது. கர்த்தருடைய முகம் இஸ்ரவேல் வம்சத்தார்மீது கோபமாயும் உக்கிரமாயும் இருக்கிறது. எருசலேம் பரிசுத்த நகரமாயிருந்தாலும், அது பாழும் வனாந்தரமும், சுற்றுப்புறத்தாருக்கு நிந்தையாயும் இருக்கிறது.
தானியேல் கர்த்தரிடத்தில் அவருடைய இரக்கத்திற்காக பயபக்தியாய் ஜெபம்பண்ணுகிறார். ""இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும்கேட்டு, பாழாய்க்கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப்பிரகாசிக்கப்பண்ணும்'' (தானி 9:17) என்று தானியேல் விண்ணணம்பண்ணுகிறார். கர்த்தருடைய கோபம் தங்களைவிட்டு நீங்கவேண்டும். இதுவே தானியேலின் பிரதான ஜெபம்.
கர்த்தர் தங்களுடைய சிறையிருப்பை திருப்பவேண்டுமென்று தானியேல் மறுபடியுமாய் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவில்லை. அவ்வாறு ஜெபம்பண்ணுவதற்கு பதிலாக, கர்த்தருடைய கோபமும், அவருடைய உக்கிரமமும், அவருடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேமைவிட்டு திரும்பவேண்டுமென்று தானியேல் ஜெபம்பண்ணுகிறார். கர்த்தருடைய கோபம் நம்மைவிட்டு நீங்கும்போது, கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் நமக்கு கிடைக்கும். கர்த்தர் தம்முடைய பார்வைக்கு நன்மையான காரியங்களை நமக்கு செய்வார். கர்த்தருடைய கோபம் இஸ்ரவேல் வம்சத்தாரைவிட்டுத் திரும்பும்போது, கர்த்தர் நிச்சயமாகவே அவர்களுடைய சிறையிருப்பை விட்டு விடுவிப்பார்.
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் பாழாய்க்கிடக்கிறது. அந்த ஸ்தலத்தின் மேல் கர்த்தர் தம்முடைய முகத்தை பிரகாசிக்கப்பண்ண வேண்டும். பரிசுத்த ஸ்தலம் இப்போது பாழாய்க்கிடக்கிறது. அது வனாந்தரம்போல இருக்கிறது. ""அந்த ஸ்தலத்தின்மேல் கர்த்தர் தமது முகத்தை பிரகாசிக்கப்பண்ணவேண்டும்'' என்னும் வாக்கியத்திற்கு, ""கர்த்தர் பாழாய்க்கிடக்கிற தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை பழுதுபார்த்து திரும்பவும் கட்டவேண்டும்'' என்று பொருள். கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதன் அஸ்திபாரத்தின்மேல் மறுபடியும் கட்டியெழுப்பப்படும்.
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தை மறுபடியும் கட்டியெழுப்புவதற்கு, இஸ்ரவேல் வம்சத்தார் செய்யவேண்டிய முதலாவது வேலை, கர்த்தருடைய சமுகத்திலே அதற்காய் கருத்தோடு ஜெபம்பண்ணவேண்டும். தங்களுடைய பாவங்களை கர்த்தருடைய சமுகத்திலே அறிக்கை செய்யவேண்டும். கர்த்தருடைய இரக்கத்தையும் கிருபைகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும். துதி பெருகும்போது கிருபையும் பெருகும்.
தானியேல் தன்னுடைய ஜெபத்திலே, கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஏராளமான விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார். நாம் கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம்பண்ணினால் மாத்திரம் போதாது. நம்முடைய விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் கர்த்தரிடத்தில் சொல்லவேண்டும். அவருடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் மன்றாடவேண்டும்.
நம்முடைய ஜெபவார்த்தைகள் கர்த்தரை அசைக்கவேண்டும் என்னும் அவசியம் எதுவுமில்லை. நம்முடைய ஜெபம் நம்மை அசைக்கவேண்டும். தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கர்த்தர் நன்றாய் அறிந்து வைத்திருக்கிறார். நம்முடைய ஜெபம் நம்மை அசைத்து, நம்முடைய விசுவாசத்தை உற்சாகப்படுத்தவேண்டும்.
நம்முடைய சுயநீதியை நாம் ஒருபோதும் சார்ந்து நிற்கக்கூடாது. ""நாங்கள் எங்கள் நீதிகளையல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாக செலுத்துகிறோம்'' (தானி 9:18) என்று தானியேல் ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் நம்முடைய நீதியினிமித்தமாய் நமக்கு நன்மை செய்வதில்லை. கர்த்தர் தம்முடைய கிருபையின் நிமித்தமாயும், இரக்கங்களின் நிமித்தமாயும் நமக்கு நன்மை செய்கிறார்.
""உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார். உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்'' (உபா 9:4,5).
நாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது நம்மிடத்தில் வீண்பெருமையோ, சாதுரியமான வார்த்தைகளோ இருக்கக்கூடாது. நம்முடைய உண்மையான நிலமையை கர்த்தருடைய சமுகத்திலே பணிவோடு சொல்லவேண்டும்.
""என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்'' (தானி 9:18) என்று தானியேல் ஜெபம்பண்ணுகிறார்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய மிகுதியான இரக்கங்களை நம்புகிறார்கள். கர்த்தர் தங்களுக்கு கிருபை காண்பிப்பார் என்று விசுவாசிக்கிறார்கள். கர்த்தர் தங்கள் நிமித்தமாக தங்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும், அவர் தம்முடைய நிமித்தமாய், தங்களுக்கு நன்மை செய்வார் என்று இஸ்ரவேல் வம்சத்தார் நம்புகிறார்கள் (தானி 9:19).
கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் வாக்குமாறாதவர். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறவர். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது கர்த்தருக்கு பிரியமானது. கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பிரகாரமாய், இஸ்ரவேலை ஆசீர்வதிக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். கர்த்தர் தம் நிமித்தமாக, தம்முடைய சித்தத்தை நிறைவேற்றி, தங்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று, இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.
கிறிஸ்துவே ஆண்டவர். அவர் ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் இருக்கிறார். கிறிஸ்து சர்வத்திற்கும் ஆண்டவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களுக்கு நாம் மனந்திரும்பும்போது, கிறிஸ்துவின் நிமித்தமாய், கர்த்தர் நம்முடைய முகங்களைப் பிரகாசிக்கப்பண்ணுகிறார். கர்த்தரை நோக்கிப் பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போகமாட்டார்கள். அவர்களுடைய முகம் பிரகாசமாயிருக்கும். நம்முடைய சுயநீதியினால் நமது முகம் பிரகாசமாவதில்லை. கர்த்தருடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், அவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதினால், நம்முடைய முகங்கள் பிரகாசமடைகிறது.
இஸ்ரவேல் வம்சத்தார்மீது கர்த்தருடைய கோபமும், அவருடைய உக்கிரமமும் வந்திருக்கிறது. கர்த்தருடைய பரிசுத்த நகரத்தின்மீதும் அவருடைய கோபம் வந்து தங்கியிருக்கிறது. கர்த்தருடைய கோபத்திற்கு அவருடைய சர்வநீதியே காரணம். தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, தங்களுடைய நீதியை முன்வைக்காமல், கர்த்தருடைய மிகுந்த இரக்கங்களை முன்வைத்து ஜெபம்பண்ணுகிறார்.
கர்த்தர் நீதியுள்ளவர். அதே வேளையில் அவர் கிருபையும் இரக்கமுமுள்ளவர். தானியேலும், இஸ்ரவேல் வம்சத்தாரும், கர்த்தருடைய மிகுந்த இரக்கங்களை நம்பி, தங்களுடைய விண்ணப்பங்களை அவருக்கு முன்பாக ஏறெடுக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய மிகுந்த இரக்கங்களின் பிரகாரம் தங்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று தானியேல் ஜெபம்பண்ணுகிறார்.
தானியேல் தன்னுடைய ஜெபத்திலே எருசலேம் நகரத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""அது உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம்'' என்றும், ""அது உம்முடைய நகரம்'' என்றும் சொல்லுகிறார். ஆனாலும் தங்களுடைய பாவங்களினாலும் தங்களுடைய பிதாக்களின் அக்கிரமங்களினாலும், எருசலேமும், கர்த்தருடைய ஜனமாகிய தாங்களும், தங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானதாகவும் தானியேல் சொல்லுகிறார். ""நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம்'' என்று சொல்லுவதற்கு பதிலாக, ""உம்முடைய ஜனமாகிய நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம்'' என்று சொல்லுகிறார்.
ஆகையினால் தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, ""ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே'' (தானி 9:19) என்று சொல்லி பணிவோடு ஜெபிக்கிறார். ""நான் உம்முடையவன், என்னை இரட்சியும்'' (சங் 119:94).
தானியேல் பாவஅறிக்கை செய்கிறார் (தானி 9:4) இந்தப் பாவஅறிக்கையில் தானியேல் தன்னுடைய ஜனத்தாரின் பாவமான கிரியைகளை அறிக்கையிடுகிறார்.
தேவனைப் பற்றிய சத்தியங்கள்
1. மகத்துவமுள்ள தேவன். (தானி 9:4).
2. பயங்கரமான தேவன் (தானி 9:4).
3. உம்மில் அன்புகூருகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற தேவன். (தானி 9:4)
4. உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற தேவன். (தானி 9:4)
5. நீதியுள்ள தேவன். (தானி 9:7,14,16)
6. நியாயம் விசாரிக்கிற தேவன் (தானி 9:7, 13-14,16)
7. கிருபையுள்ள தேவன் (தானி 9:9)
இஸ்ரவேலின் பாவங்கள்
1. நாங்கள் பாவஞ்செய்தோம் (தானி 9:5, 11,15,16).
2. அக்கிரமக்காரராயிருந்தோம். (தானி 9:5).
3. துன்மார்க்கமாய் நடந்தோம்.
4. உம்முடைய கற்பனைகளை விட்டு அகன்றுபோனோம்.
5. உம்முடைய நியாயங்களை விட்டு அகன்றுபோனோம்.
6. உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். (தானி 9:6).
7. உமக்கு விரோதமாகத் துரோகம் செய்தோம். தானி 9:7).
8. உமக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணினோம். (தானி 9:9).
9. தேவனுடைய சத்தத்துக்குச் செவி கொடாமற்போனோம். (தானி 9:9).
10 கர்த்தருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்காமல் போனோம். (தானி 9:10).
11. உமது நியாயப்பிரமாணத்தை மீறினோம். (தானி 9:11).
12. உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் போனோம். (தானி 9:11,14).
இஸ்ரவேல் தேசத்தாரும், யூதாதேசத்தாரும் அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சிய தேசம் போன்ற தேசங்களிலும் மேலும் பல தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிறார்கள். (தானி 9:7; எஸ் 8:9-17; எஸ் 9:1-2).
தானியேல் யூதா தேசத்தாருக்காகவும், இஸ்ரவேல் தேசத்தாருக்காகவும், சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷருக்காகவும், எருசலேமின் குடிகளுக்காகவும் ஜெபிக்கிறார். யூதா சிறையிருப்புக்குப் போவதற்கு முன்பாக எப்பிராயீம் தேசத்திலுள்ள பத்துக் கோத்திரத்தாரும் 133 வருஷங்களுக்கு முன்பாகவே அசீரியருடைய சிறையிருப்புக்குப் போனார்கள். (2இராஜா 17).
தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் (தானி 9:9). இஸ்ரவேல் தேசத்தில் இருந்த தீர்க்கதரிசிகள் பல காரியங்களை முன்னறிவித்தார்கள். ஆனால் அப்போதிருந்த ஜனங்களும், ராஜாக்களும் தீர்க்கதரிசிகளையும், அவர்களுடைய செய்திகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுடைய முன்னறிவிப்புகளில் பல நிறைவேறின. இஸ்ரவேல் தேசத்தாரும் பல பாடுகள் வழியாகக் கடந்து சென்றார்கள். ஆகையினால் இப்போது தீர்க்கதரிசிகளை அவர்கள் கர்த்தருடைய ஊழியக்காரர் என்று அங்கிகரிக்கிறார்கள்.
சாபமும் ஆணையாக்கினையும் இஸ்ரவேல் ஜனத்தார்மேல் சொரியப்பட்டன (தானி 9:11). இஸ்ரவேல் தேசத்தார் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினால், அவர்கள்மீது கர்த்தருடைய சாபம் வரும் என்று தேவன் ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார்.
பெரிய தீங்கு வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிறது (தானி 9:12). கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பிரகாரம் ஆசீர்வாதத்தையும், தீங்கையும் வருவிக்கிறார். பொய்கூறுவதற்குக் கர்த்தர் ஒரு மனுஷரல்ல. இஸ்ரவேல் தேசத்தாருடைய பாவத்திற்குக் கர்த்தர் தண்டனையை அறிவித்து, அதை நிறைவேற்றுகிறார். அதேவேளையில், தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கர்த்தர் ஆசீர்வாதத்தையும் வாக்குப்பண்ணி, நிறைவேற்றுகிறார். கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். (கலா 6:7-8)
தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற நிபந்தனைகள்
1. ஜெபமும், பாவஅறிக்கையும் (தானி 9:3, 4-6,17,20)
2. அக்கிரமங்களைவிட்டுத் திரும்புவது. (தானி 9:13; ஏசா 55:7)
3. சத்தியத்தைக் கவனித்து அதற்குக் கீழ்ப்படிவது. (தானி 9:4-10,13; யோவான் 8:32-36; ரோமர் 1:16)
இஸ்ரவேல் புத்திரர்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போனாலும், புறஜாதி தேசங்களில் சிதறிப்போயிருந்தாலும், அவர்கள் கர்த்தருடைய ஜனமாகவே இருக்கிறார்கள். இஸ்ரவேல் தேசத்தார் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள். தாங்கள் செய்த பாவங்களுக்கு இஸ்ரவேல் ஜனத்தார் மனந்திருந்துவார்கள். கர்த்தருக்கு நித்தியமாகக் கீழ்ப்படிவார்கள். கர்த்தர் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்.
எருசலேம் கர்த்தருடைய நகரம் (தானி 9:16). கர்த்தர் பூமியின்மீது தம்முடைய நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது எருசலேம் நகரத்தைத் தம்முடைய தலைநகரமாகத் தெரிந்து கொள்வார்.
இஸ்ரவேல் ஜனத்தார் தங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானார்கள் (தானி 9:16) இதனால் இஸ்ரவேல் ஜனத்தார் சுற்றுப்புறத்தார் மத்தியில் பயத்தோடு இருக்கிறார்கள்.
தானியேலின் விண்ணப்பம்
1. உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படிசெய்யும் (தானி 9:16).
2. உமது அடியானுடைய விண்ணப்பத்தைக் கேளும். (தானி 9:17,18,19).
3. என்னுடைய கெஞ்சுதலைக் கேளும்.
4. உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். (தானி 9:17).
5. உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும். (தானி 9:18).
6. உம்முடைய கண்களைத் திறந்தருளும். (தானி 9:18)
7. எங்கள் பாழிடங்களைப் பார்த்தருளும். (தானி 9:18).
8. எங்களை மன்னியும். (தானி 9:19).
9. ஆண்டவரே கேளும். செய்யும். (தானி 9:19).
10. உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும் (தானி 9:19).
எழுபது வாரங்கள் தானி 9:20-27
தானி 9:20. இப்படி நான் சொல்-, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவே-ன் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.
தானி 9:21. அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்ப-யின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.
தானி 9:22. அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.
தானி 9:23. நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.
தானி 9:24. மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன்பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
தானி 9:25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கானகட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
தானி 9:26. அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
தானி 9:27. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது ப-யையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பானசெட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிறநிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
தானியேலின் ஜெபத்திற்கு கர்த்தருடைய சமுகத்திலிருந்து உடனடியாக பிரதியுத்தரம் கிடைக்கிறது. கர்த்தர் இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், சுவிசேஷத்தின் கிருபையைப்பற்றியும் தானியேலுக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். புதிய ஏற்பாடு முழுவதிலும் இந்த சத்தியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தானியேல் ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பாவத்தையும், தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய விண்ணப்பத்தை கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்திற்கு முன்பாக செலுத்திக் கொண்டிருக்கிறார்.அப்படி அவர் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே கர்த்தரிடத்திலிருந்து அவருக்கு பிரதியுத்தரம் உண்டாயிற்று.
தானியேல் இன்னும் முழங்காலிலேயே நிற்கிறார். அவர் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டிய காரியங்கள் இன்னும் ஏராளமாயிருக்கிறது. தானியேல் இன்னும் அறிக்கை செய்ய வேண்டிய பாவங்களும் இருக்கிறது. அவருடைய ஜெபம் இன்னும் முடியவில்லை. ஆனாலும் கர்த்தருடைய சமுகத்திலிருந்து அவருக்கு இப்போது பிரதியுத்தரம் வந்திருக்கிறது. கர்த்தர் ஏசாயா மூலமாக சொன்ன தீர்க்கதரிசனம் இங்கு நிறைவேறுகிறது.
""அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்'' (ஏசா 65:24).
தானியேல் கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியோடும், கருத்தோடும் ஜெபம்பண்ணுகிறார். ""என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே'' (தானி 9:18,19) என்று சொல்லி ஜெபிக்கிறார்.
தானியேல் அப்படி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே அவர் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்ப-யின் நேரமாகிய வேளையிலே அவரைத் தொடுகிறார் (தானி 9:21).
தானியேல் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே தேவதூதன் வேகமாய்ப் பறந்து வந்து, அவருக்கு பதில் சொல்ல வருகிறார். கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்கு எப்போதுமே தேவதூதன் மூலமாகவே பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவேண்டும். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்கள் மூலமாக நமக்கு பதில் கொடுப்பார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிச்சயமாய் நிறைவேறும் என்று விசுவாசித்து, அதை நம்முடைய ஜெபத்திற்கு கர்த்தருடைய பிரதியுத்தரமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். அதை நிறைவேற்றுவதற்கு அவர் வல்லமையுள்ளவர்.
தானியேலும், இஸ்ரவேல் வம்சத்தாரும் அந்நிய தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். இந்த சிறையிருப்பிலிருந்து தங்களுக்கு விடுதலைவேண்டுமென்று தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். கர்த்தரோ இந்த விடுதலையைவிட, மேன்மையான, மகிமையான, உன்னதமான மீட்பைப்பற்றி அவருக்கு விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். இனிமேல் வரப்போகிற நாட்களில், கர்த்தர் தம்முடைய சபையை இரட்சிப்பார். தம்மை நம்புகிற ஜனத்திற்கு ஆத்தும இரட்சிப்பை கட்டளையிடுவார்.
காபிரியேல் வேகமாய் பறந்து வந்து, அந்திபலியின் நேரமாகிய வேளையிலே தானியேலைத் தொடுகிறார். எருசலேமும், எருசலேமிலுள்ள தேவாலயமும் இப்போது அழிந்து கிடக்கிறது. தேவாலயத்தின் பலிபீடங்களெல்லாம் இடிந்து கிடக்கிறது. இப்போது தேவாலயத்தில் பலி எதுவும் செலுத்தப்படவில்லை. யூதர்கள் அந்நிய தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். அவர்களில் பக்தியுள்ளவர்கள், எருசலேமிலுள்ள தேவாலயத்தையும், அங்கே பலிசெலுத்தப்படும் வேளையையும் இன்னும் மறந்துவிடவில்லை. கர்த்தருடைய பலிபீடத்திலே மறுபடியும் பலிகள் செலுத்தப்படும் என்று அவர்கள் விசுவாசத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
காபிரியேல் அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே தானியேலைத் தொடுகிறார். அந்திப்பலி என்பது, தேவாலயத்தில் மாலைவேளையில் செலுத்தப்படும் பலியாகும். சிறையிருப்பிலிருக்கிற யூதர்கள் தங்களுடைய கைகளை எருசலேமுக்கு நேராக உயர்த்தி, தங்களுடைய இருதயங்களை பரலோகத்தின் தேவனுக்கு நேராக உயர்த்தி, கர்த்தரைத் துதிக்கிறார்கள். தேவாலயத்தில் அந்திப்பலி செலுத்தப்படும் மாலை வேளையிலே, சிறையிருப்பிலிருக்கிற யூதர்கள், கர்த்தருக்கு தங்களுடைய துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் அந்திப்பலியாக செலுத்துகிறார்கள்.
""என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்ப-யாகவும் இருக்கக்கடவது'' (சங் 141:2).
அந்திப்பலி மிகவும் முக்கியமான பலி. இயேசுகிறிஸ்து, மாலை வேளையிலே, இந்த உலகத்தின் பாவங்களை நீக்குவதற்காக, தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். தேவாலயத்தில் செலுத்தப்படும் அந்திப்பலியானது, மாலை வேளையிலே தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு அடையாளமாயிருக்கிறது.
தானியேல் கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம்பண்ணும்போது, ""தேவனே, உம்முடைய நிமித்தம் அதை தாமதியாமல் செய்யும்'' என்று அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய கிருபாதார பலியின் நிமித்தமாய், தானியேலின் ஜெபத்திற்கு கர்த்தர் உடனே பதில் கொடுக்கிறார். தானியேல் ஜெபம்பண்ணும்போது ""உம்முடைய நிமித்தமாக'' என்று கர்த்தரிடத்திலே சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய நிமித்தமாக, தானியேலின் ஜெபத்திற்கு உடனே பதில் கொடுக்கிறார்.
தானியேல் இப்போது சொப்பனம் காணவில்லை. அவர் தரிசனமும் காணவில்லை. அவர் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே காபிரியேல், வேகமாய் பறந்து வந்து தானியேலைத் தொடுகிறார். பரலோகத்திலிருந்து சத்தம் எதுவும் பிறக்கவில்லை. தானியேலுக்கு தரிசனம் எதுவும் உண்டாகவில்லை.
கர்த்தர் தம்முடைய தூதனாகிய காபிரியேலை, தானியேல் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும் இடத்திற்கு பிரத்தியட்சமாய் அனுப்புகிறார். தேவதூதனாகிய காபிரியேல் மனுஷரூபத்தோடு தானியேலுக்கு முன்பாக வந்து, அவரைத் தொடுகிறார். தானியேல் காபிரியேலை ஏற்கெனவே ஒரு புருஷனாக தரிசித்திருக்கிறார். அந்தப் புருஷனுக்கு பரிசுத்த வேதாகமத்தில் காபிரியேல் என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தேவதூதனாகயிருந்தாலும், ஒரு புருஷனுடைய ரூபத்திலும் இருக்கிறார்.
""அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்'' (தானி 8:16).
சகரியா தேவாலயத்திற்குள் பிரவேசித்து தூபங்காட்டிக் கொண்டிருக்கிற வேளையிலே, கர்த்தருடைய தூதன் ஒருவர் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று, சகரியாவுக்கு தரிசனமாகிறார். அவர் சகரியாவிடம் ""நான் தேவசந்நிதியிலே நிற்கிற காபிரியேல் என்பவன்'' (லூக் 1:19) என்று அந்தத் தேவதூதன் தன்னுடைய பெயரைச் சொல்லுகிறார்.
தானியேல் ஜோதிகளின் பிதாவாகிய கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் வேண்டிக்கொள்ள தொடங்கினபோதே கர்த்தரிடத்திலிருந்து கட்டளை வெளிப்பட்டிருக்கிறது. தானியேல் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவர். கர்த்தர் தானியேலின் ஜெபத்திற்கு உடனே பிரதியுத்தரம் கொடுக்கிறார். கர்த்தருடைய பிரதியுத்தரத்தை அறிவிப்பதற்காகவே காபிரியேல் வந்திருக்கிறார். ""இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக் கேட்டு தரிசனத்தை அறிந்துகொள்'' (தானி 9:23) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார்.
தானியேல் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ள தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. இந்தக் கட்டளை தேவனிடத்திலிருந்து வெளிப்பட்டது. ஒருவேளை தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணத் துவங்கினபோது, கோரேசு ராஜா எருசலேமை திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளையை வெளிப்படுத்தியிருக்கலாம் (தானி 9:25).
கோரேசு யூதர்களுக்கு விடுதலையை அறிவிக்கிறான். தானியேல் காலை வேளையிலே கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ண ஆரம்பிக்கிறார். அந்த வேளையிலேயே, கோரேசு யூதர்களை விடுவிப்பதற்கான சாசனத்திலே கையெழுத்திடுகிறான். தானியேல் ஜெபம்பண்ணுவதும், கோரேசு யூதர்களை விடுவிப்பதற்கான கட்டளையை வெளியிடுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.
காபிரியேல் வேகமாய் பறந்து வந்து தானியேலைத் தொடுகிறார். தானியேலோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் சற்று நேரம் ஜெபம்பண்ணுதை நிறுத்திவிட்டு, காபிரியேல் சொல்லுகிற வார்த்தையைக் கவனித்துக் கேட்கவேண்டும். தானியேல் தன்னுடைய ஜெபத்தை நிறுத்த வேண்டும்என்பதற்கு அடையாளமாக, காபிரியேல் அவரைத் தொடுகிறார். காபிரியேல் தானியேலை தொடுவது மாத்திரமல்ல, அவருக்கு தெளிவு உண்டாக்கி, அவரோடு பேசவும் செய்கிறார். ""தானியேலே உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டு வந்தேன்'' என்று காபிரியேல் சொல்லுகிறார்.
காபிரியேல் தானியேலிடம் மிகவும் அன்பாகப் பேசுகிறார். தானியேலைத் தொட்டுப் பேசுகிறார். இதனால் தானியேலின் இருதயத்தில் பயமுண்டாகாது. காபிரியேல் தானியேலை பயமுறுத்த வரவில்லை. அவருக்கு அறிவை உணர்த்தும்படி வந்திருக்கிறார்.
அந்தியோகசுடைய ஆட்சிக்காலத்தில் கர்த்தருடைய சபைக்கு மிகுந்த துன்பங்களும், நெருக்கங்களும் உபத்திரவங்களும் உண்டாகும். ""இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவு காலத்துக்கு அடுத்தது'' (தானி 8:19).
காபிரியேல் இப்போது இதைவிட பெரிய காரியங்களை தானியேலுக்கு வெளிப்படுத்தும்படியாக வந்திருக்கிறார். காபிரியேல் தானியேலுக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டு வந்திருக்கிறார். இனிமேல் வரப்போகிற காரியங்களை காபிரியேல் தானியேலுக்கு வெளிப்படுத்துவார். அதே வேளையில் தானியேல் அந்தக் காரியங்களை புரிந்துகொள்வதற்கு தேவைப்படும் அறிவையும் அவருக்கு உணர்த்துவார். தானியேல் இனிமேல் வரப்போகும் காரியங்களை அறிந்துகொள்வார்.
தானியேல் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவர். பரலோகத்திலிருந்து தானியேலுக்கு விசேஷித்த கிருபைகளும், சிலாக்கியங்களும் வெளிப்பட்டிருக்கிறது. தானியேல் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவராகயிருப்பதினால், அவர் வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே, அவருக்கு கட்டளை வெளிப்பட்டது. காபிரியேலும் தானியேலுக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டு வந்திருக்கிறார்.
பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை, யாருக்கெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறாரோ, அவர்கள் எல்லோருமே கர்த்தருக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களுக்கு பரலோகத்திலிருந்து விசேஷித்த கிருபைகளும், சிலாக்கியங்களும் கொடுக்கப்படும்.
காபிரியேல் தானியேலுக்கு இனிமேல் நடைபெறப்போகிற சம்பவங்களை அறிவிக்கிறார். காபிரியேல் சொன்ன செய்தி இங்கு முழுமையாய் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தச் செய்தியை அறிந்துகொள்வதற்கு கடினமாயிருக்கிறது.
தானியேல் யூதர்களுடைய சிறையிருப்பைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். தானியேலாகிய அவர் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்-ய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டார் (தானி 9:2).
காபிரியேல் இங்கு எழுபது வாரங்களைப்பற்றிச் சொல்லுகிறார். ""மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகாபரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன்பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது'' (தானி 9:24) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார்.
எழுபது வாரங்கள் என்பது ஏழு வருஷங்களை எழுபதால் பெருக்கும் தொகையாகும். அதாவது எழுபது வாரங்கள் என்பது 490 வருஷங்களாகும்.
இஸ்ரவேல் ஜனத்திற்கும், எருசலேம் நகரத்திற்கும் அநேக காரியங்கள் சம்பவிக்கப்போகிறது. இவையெல்லாம் இந்த 490 வருஷகாலத்தில் நடைபெறும். தேசம் இப்போது ஓய்வுநாட்களை அனுபவிக்கிறது. கானான் தேசம் பயிரிடப்படாமல் வனாந்தரம் போலிருக்கிறது. இது அந்த தேசத்திற்கு ஓய்வு வருஷம்.
""நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க் கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்'' (லேவி 26:34).
கர்த்தருடைய ஜனங்கள் இப்போது தங்களுடைய ஓய்வு வருஷத்தை ஏழு எழுபது வருஷங்களுக்கு அனுபவிப்பார்கள். எழுபது ஓய்வு வருஷங்கள் அவர்களுக்கு கிடைக்கும். இந்த வருஷங்களில் அவர்களுக்கு பத்து யூபிலி வருஷங்கள் உண்டாயிருக்கும்.
""எழுபது வாரங்கள்'' என்னும் வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள் வெவ்வேறு விளக்கங்களைச் சொல்லுகிறார்கள். இந்த எழுபது வாரங்கள் எப்போது ஆரம்பமாகும் என்றும், அது எப்போது முடிவு பெறும் என்றும் உறுதியாகவும் தெளிவாகவும் தெரியவில்லை.
""எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்'' (தானி 9:25) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார். ""அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்'' என்றும் காபிரியேல் சொல்லுகிறார்.
காபிரியேல் இங்கு சொல்லும் வாக்கியத்தை கோரேசு ராஜா சொன்ன அரசாணையோடு ஒப்பிட்டுப் பார்த்து, வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள்.
""எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்'' (எஸ்றா 1:1,2).
எழுபது வருஷங்கள் முடிந்தவுடன் எழுபது வாரங்கள் ஆரம்பமாகும் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். இது பெர்சிய ராஜ்யத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. கோரேசு ராஜா பாபிலோன் தேசத்தை கைப்பற்றிய நாளில் எழுபது வாரங்கள் ஆரம்பமாகிறது. அலெக்சாந்தர் தரியுவை ஜெயித்தபோது எழுபது வாரங்கள் முடிவு பெறுகிறது. கோரேசு பாபிலோனை ஆளுகை செய்ய ஆரம்பித்த காலத்திற்கும், அலெக்சாந்தர் தரியுவை ஜெயித்த காலத்திற்கும், இடைப்பட்ட காலம் 130 வருஷங்களாகும்.
வேதபண்டிதர்களில் சிலரும், சரித்திர ஆசிரியர்களும் பெர்சிய பேரரசைப்பற்றிச் சொல்லும்போது, அவர்கள் 230 வருஷங்கள் வரையிலும் ஆட்சி செய்தார்கள் என்று சொல்லுகிறார்கள். பெர்சிய ராஜ்யம் எப்போது முடிவு பெற்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பிரபுவாகிய மேசியா வருமட்டும் எழுபது வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும் என்று காபிரியேல் சொல்லுகிறார் (தானி 9:25). அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்கு பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார் என்றும் காபிரியேல் சொல்லுகிறார் (தானி 9:26). ""அந்த வாரம் பாதி சென்றபோது, பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்'' (தானி 9:26) என்றும் காபிரியேல் சொல்லுகிறார்.
முதல் ஏழு வாரங்கள் என்பது, நாற்பத்து ஒன்பது வருஷங்களைக் குறிக்கும். இந்தக் காலத்தில் எருசலேம் நகரமும், தேவாலயமும் மறுபடியும் கட்டப்படும். கடைசி வாரத்தில் கிறிஸ்துவானவர் தம்முடைய சுவிசேஷத்தை பிரசங்கம்பண்ணுவார். இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷ நகரத்திற்கும், சுவிசேஷத்தின் ஆலயத்திற்கும், கிறிஸ்துவானவர் அஸ்திபாரம் போடுவார் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.
ஆனாலும் இந்தவிளக்கங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலத்தை துள்ளியமாய்க் கணக்கிடுவது கடினமாய் உள்ளது. ஆனாலும் கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள், அந்நிய தேசத்து சிறையிருப்பிலே இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மிகப்பெரிய ஆறுதலைக் கொடுக்கிறது.
தங்களுடைய சிறையிருப்புக்காலம் முடிந்துபோகும் என்னும் நம்பிக்கை இஸ்ரவேல் புத்திரருக்கு உண்டாயிற்று. தங்கள் சொந்த தேசத்திற்கு தாங்கள் மறுபடியும் திரும்பிப்போகும் காலத்தை யூதர்கள் விசுவாசத்தோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். மேசியா இந்தப் பூமிக்கு மறுபடியும் வருவார் என்னும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் யூதர்கள் மத்தியில் உண்டாயிற்று.
இயேசுகிறிஸ்துவே மேசியா என்பதை யூதர்கள் நம்பவில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாம் சொன்ன பிரகாரமாக இந்தப் பூமிக்கு வந்தார். அவரே மேசியா. இயேசுகிறிஸ்துவை மேசியா என்று விசுவாசிக்காத யூதர்களோ, இன்னொரு மேசியா வருவார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிற தீர்க்கதரிசனமான வார்த்தைகள் தெளிவாகவும், புரிந்துகொள்வதற்கு எளிமையாகவும் இருக்கிறது. எருசலேமை திரும்ப எடுத்துப்பித்து கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படும் என்று காபிரியேல் சொல்லுகிறார். அந்நிய தேசத்து சிறையிருப்பிலிருக்கிற யூதர்கள், தங்கள் சொந்த தேசத்திற்கு சீக்கிரமாய்த் திரும்பி வருவார்கள். அவர்கள் கானான் தேசத்திலே மறுபடியுமாய்க் குடியேறுவார்கள்.
காபிரியேல் சொல்லுகிற இந்த செய்தி பக்தியுள்ள யூதர்களுக்கு ஆறுதலாயிருக்கிறது. எருசலேமை திரும்ப எடுப்பித்துக் கட்டும்போது, அதிலுள்ள தேவாலயமும் திரும்ப எடுப்பித்துக் கட்டப்படும். கர்த்தர் தம்முடைய வேலையை செய்வார். எருசலேமிலே வீதிகளும் அலங்கங்களும் மறுபடியுமாய்க் கட்டப்படும். யூதர்கள் இப்போது இடுக்கமான காலங்களிலிருக்கிறார்கள். கர்த்தருடைய ஜனத்திற்கு இது இடுக்கமான காலமாயிருந்தாலும், கர்த்தர் தாம் செய்ய வேண்டிய வேலைகளை நேர்த்தியாய்ச் செய்து முடிப்பார். கர்த்தரே எருசலேமை திரும்ப எடுப்பித்துக் கட்டுவார். எருசலேம் நகரத்தில், வீதிகளையும் அலங்கங்களையும் மறுபடியும் கட்டுவார். நகரத்தை அழகுபடுத்துவார்.
""பிரபுவாகிய மேசியா வருவார்'' (தானி 9:25) என்று காபிரியேல் தானியேலுக்குச் சொல்லுகிறார். யூதர்களிலே மாம்சப்பிரகாரமாக சிந்திக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆவிக்குரிய பிரகாரமாக சிந்திக்கிறவர்களும் இருக்கிறார்கள். யூதர்கள் ரோமப்பேரரசின் ஆளுகைக்குட்படுத்தப்படுவார்கள். ரோமபேரரசார் யூதர்கள்மீது பாரமான நுகத்தை சுமத்துவார்கள். யூதர்களை அடிமைப்படுத்துவார்கள். இந்த வேதனையிலிருந்து தங்களை விடுவிக்க, தங்களுக்கு ஒரு இரட்சகர் அல்லது மேசியா எழும்புவார் என்று யூதர்கள் மாம்சப்பிரகாரமாக சிந்திக்கிறார்கள். அந்த மேசியா யூதர்களுக்கு தற்காலிகமான, உலகப்பிரகாரமான வல்லமையையும், ஐசுவரியத்தையும் கொடுப்பார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
காபிரியேல் ""மேசியா வருவார்'' என்று சொல்லுகிறார். காபிரியேல் உலகப்பிரகாரமாகப் பேசாமல் ஆவிக்குரிய பிரகாரமாகப் பேசுகிறார். கிறிஸ்துவானவர் பாவங்களை தொலைக்கிறதற்கு வருவார். பாவத்தினால் மனுஷருக்கும் தேவனுக்கும் இடையே பிரச்சனையும் பிரிவினையும் உண்டாயிற்று. பாவம் மனுஷனை தேவனிடத்திலிருந்து பிரித்துவிட்டது. மனுஷனுடைய பாவத்தினால், தேவனுக்கு மனுஷன்மீது கோபமுண்டாயிற்று. கர்த்தருடைய கோபத்தினால் மனுக்குலத்திற்கு சாபமும் வேதனையும் வந்திருக்கிறது. கிறிஸ்துவானவர் பிசாசின் கிரியைகளை அழிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இயேசுகிறிஸ்து, மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும் இந்த உலகத்திற்கு வந்தார் (தானி 9:24). இந்த வாக்கியத்தில் ""உன்னுடைய மீறுதல்'' என்றும், ""உன்னுடைய பாவங்கள்'' என்றும் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அதற்கு பதிலாக ""மீறுதல்'' என்றும், ""பாவங்கள்'' என்றும் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது உலகத்திலுள்ள மனுக்குலத்தார் எல்லோருடைய பாவங்களையும் குறிக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகஇரட்சகராயிருக்கிறார். அவர் உலகத்தின் பாவங்களை சுமர்ந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டியாயிருக்கிறார்.
இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததற்கு ஒரு பிரதான நோக்கமுண்டு. அவர் மனுஷருடைய மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், அவர்களுடைய பாவங்களைத் தொலைக்கிறதற்கும் இந்த உலகத்திற்கு வந்தார். பாவத்தின் வல்லமையை முறிப்பதற்காக அவர் வந்தார். மனுஷருடைய இருதயங்களிலே பரிசுத்தத்தின் ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காகவும், அன்பின் ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காகவும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.
மனுஷருடைய பாவங்கள் தொலைக்கப்படவேண்டும். கிறிஸ்துவானவர் மனுஷருடைய பாவங்களை தொலைக்கிறதற்காகவும் இந்த உலகத்திற்கு வந்தார். பாவங்களை முத்திரையிட்டு மூடிவிட்டார். அந்தப் பாவங்களால் முத்திரையை உடைத்து, வெளியேறி நமக்கு விரோதமாக கிரியை நடப்பிக்க முடியாது.
நம்முடைய அக்கிரமங்கள் நிவிர்த்தி பண்ணப்படவேண்டும். நாம் கர்த்தரோடு ஒப்புரவாகவேண்டும். நம்முடைய அக்கிரமம் நிவிர்த்திபண்ணப்படுவதற்கு, கர்த்தருடைய சமுகத்திலே பாவநிவாரண பலி செலுத்தப்படவேண்டும். கிறிஸ்துவானவரே நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணுகிறவராகவும், அவரே நம்முடைய சமாதானமாகவும் இருக்கிறார்.
கிறிஸ்துவானவர் நம்முடைய பாவங்களையும், அக்கிரமங்களையும் நிவிர்த்தி பண்ணுவதற்காக, தம்மையே பாவநிவாரண பலியாக செலுத்தினார். தேவன் தம்முடைய நீதியினால், எல்லா பாவிகளையும் அழித்து, இந்த உலகத்திலே பாவங்களை தொலைத்திருக்க முடியும். கிறிஸ்துவானவரோ கர்த்தருக்கு வேறொரு உபாயத்தைச் சொல்லி, நமக்காக பரிந்து பேசுகிறார். பாவியை இரட்சித்து, பாவங்களை தொலைப்பது இயேசுகிறிஸ்துவின் திட்டம். பாவியாகயிருக்கிறவனை நீதிமானாக மாற்றி, அவனை தண்டனைக்கு தப்புவிக்கப்பண்ணுவது கிறிஸ்துவானவருடைய நோக்கம்.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி பண்ணுவதற்காகவும், நமக்கு நீதியை உண்டுபண்ணுவதற்காகவும், கிறிஸ்துவானவர் கல்வாரி சிலுவையிலே, தம்மையே நம்முடைய பாவநிவாரண பலியாக செலுத்தினார். இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் நமக்கு நீதி உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவின் நீதியை நாம் விசுவாசத்தோடு பெற்றுக்கொள்கிறோம். விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம்.
""வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூ- கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்'' (ரோம 4:3-5).
நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும் மேசியா வருவார். பழைய ஏற்பாட்டுக்காலத்திலுள்ள எல்லா தரிசனங்களிலும், தீர்க்கதரிசனங்களிலும் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. கிறிஸ்துவானவர் தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறார். அவற்றை நிறைவேற்றுகிறார்.
""பிரபுவாகிய மேசியா வருவார்'' என்று காபிரியேல் சொல்லுகிறார் (தானி 9:22,23). மேசியா என்னும் பெயர் கிறிஸ்துவைக் குறிக்கும். ""கிறிஸ்து'' என்னும் பெயருக்கு ""அபிஷேகம்பண்ணப்பட்டவர்'' என்று பொருள். கிறிஸ்துவானவர் தமக்காகவும், தம்முடையவர்கள் அனைவருக்காகவும் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறார்.
""அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்'' (யோவா 1:41).
அப்போஸ்தலர் பவுல் இயேசுகிறிஸ்துவின் மரணத்தை பிரசங்கம்பண்ணுகிறார். ""ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்-யிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுத-ல் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்'' (அப் 26:22,23).
கிறிஸ்து பாடுபடவேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசிகள் மூலமாய் சொல்லப்பட்டிருக்கிற சத்தியம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே மரித்தார். அவரிடத்தில் ஒரு பாவமும் இல்லை. அவர் நம்முடைய பாவங்களுக்காக, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி பண்ணுவதற்காக, பாவநிவாரண பலியாக மரித்தார்.
""அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல'' (தானி 9:26) என்று காபிரியேல் சொல்லுகிறார். கிறிஸ்துவானவர் சிலுவையிலே சங்கரிக்கப்பட்டு, நம்முடைய பாவங்களுக்கு நிவாரணம் செய்தார். அவர் சிலுவையில் மரித்தார். அவர் நமக்கு ஜீவனை கிரயத்திற்குப் பெற்றுத்தந்தார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய திருஇரத்தத்தையே, நம்மை மீட்கும் கிரயமாகச் செலுத்தினார்.
இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையிலே, நம் எல்லோருக்காகவும், ஒரே ஒரு தரம், தம்மையே பாவநிவாரண பலியாக செலுத்தினார். நம்மை மீட்பதற்கு வேறு பலி எதுவும் தேவையில்லை. இதன் நிமித்தமாய் மேசியா பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுகிறார் (தானி 9:27). இயேசுகிறிஸ்து சிலுவையிலே பலியாக மரித்ததினால், லேவிய முறைமையின் பிரகாரம் நியமிக்கப்பட்ட, எல்லா பலி முறைமைகளும் ஒழிந்துபோயிற்று.
எருசலேமுக்கு முடிவிலே அழிவு வரும். யூதர்களும், அவர்களுடைய யூததேசமும் அழிந்துபோகும். இந்த சம்பவம் மேசியா சங்கரிக்கப்பட்ட பின்பு நடைபெறும். ""நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது'' (தானி 9:26) என்று காபிரியேல் சொல்லுகிறார்.
யூதர்கள் கிறிஸ்துவை சிலுவையிலே அறைந்தார்கள். அவருக்கு மரணதண்டனை விதித்தார்கள். கர்த்தர் யூதர்கள்மீது தம்முடைய நீதியான தண்டனையை வரவழைக்கிறார். கிறிஸ்துவானவர் மார்க்க பிரமாணங்களையும், பாரம்பரிய பிரமாணங்களையும் அழிப்பதற்காக சிலுவையிலே மரித்தார்.
ஆனால் யூதர்கள் மார்க்க பிரமாணங்களைவிட்டு வெளியேறி வரவில்லை. அவர்கள் யூதருடைய மார்க்க பிரமாணங்களையும், பாரம்பரிய பிரமாணங்களையும் பின்பற்றினார்கள். அவற்றை விட்டு வெளியேறி வருவதற்கு அவர்களுக்கு மனதில்லை.
ஸ்தேவான் யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டான். மோசே நமக்கு கொடுத்த முறைமைகளை இயேசுகிறிஸ்து மாற்றுவார் என்று சொன்னதினிமித்தமாக, யூதருடைய ஆலோசனைச்சங்கத்தார் ஸ்தேவான்மீது கல்லெறிந்து அவனைக் கொன்றுபோட்டார்கள்.
""எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்'' (அப் 6:14).
""எருசலேம் நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்'' (தானி 9:26) என்று காபிரியேல் சொல்லுகிறார். பிரபுவின் ஜனங்கள் என்பது ரோமப்பேரரசின் சேனையைக் குறிக்கும். ரோமப்பேரரசு இனிமேல் ஸ்தாபிக்கப்படப்போகிறது. அவர்கள் யூதாதேசத்தை அழிப்பார்கள். அதிலும் விசேஷமாய், எருசலேம் நகரத்தையும் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தையும் மொத்தமாய் அழித்துப்போடுவார்கள். அதை பாழும் வனாந்தரமுமாக்குவார்கள்.
ரோமப்பேரரசின் சேனை எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ண வந்தபோது, தீத்து என்பவன் ரோமப்போர்வீரர்களுக்கு தளபதியாயிருந்தான். அவன் தேவாலயத்தை இடித்துப்போடாமல், அதைப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி பண்ணினான். ஆனால் அவனுடைய முயற்சி நிறைவேறவில்லை. ரோமப்பேரரசின் போர்வீரர்கள் எல்லோருமே யூதர்கள்மீது கோபமாயிருந்தார்கள். யூதர்களுடைய தேவாலத்தை இடித்துப்போட்டு, அதை அக்கினியினால் சுட்டெரிக்கவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். எருசலேமையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அழித்துப்போட்டார்கள். தேவாலயத்திலே பலியும் காணிக்கையும் ஒழிந்துபோயிற்று.
""அருவருப்பானசெட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிறநிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும்'' (தானி 9:27) என்று காபிரியேல் சொல்லுகிறார். இந்த வாக்கியம் ரோமப்பேரரசின் சேனையைக் குறிக்கும். இயேசுகிறிஸ்துவும் இரண்டு சம்பவங்களில் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்.
""மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்-யிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக் கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்'' (மத் 24:15,16)
""எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்'' (லூக் 21:20).
இஸ்ரவேலின் வருங்காலத்தைக் குறித்தும், கடைசி நாளில் நடைபெறப்போகும் சம்பவங்களைக் குறித்தும், தானியேலுக்கு அறிவை உணர்த்தும்படி காபிரியேல் புறப்பட்டு வந்திருக்கிறார். இம்முறை காபிரியேல் தானியேலின் தரிசனத்திற்கு வியாக்கியானம் கூறவில்லை. அதற்குப் பதிலாக தானியேலின் நாளிலிருந்து புறஜாதியார் யூதரை ஒடுக்கும் கடைசி காலம் வரையிலும் நடைபெறப்போகும் காரியங்களைக் குறித்து காபிரியேல் தீர்க்கதரிசனமாகக் கூறுகிறார்.
""உன் ஜனத்தின்மேலும் உன்பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது........'' (தானி 9:24-27) என்னும் இந்தத் தீர்க்கதரிசனத்தில் 14 முக்கியமான பகுதிகள் இடம் பெற்றுள்ளன. அவையாவன:
1. எழுபது வாரங்களின் பொருள்.
2. எழுபது வாரங்களின்பிரிவு
3. எழுபது வாரங்கள் யாருக்குக் குறிக்கப்பட்டிருக்கிறது.
4. அவை இஸ்ரவேலுக்கும், எருசலேமிற்கும் எப்போது குறிக்கப்பட்டிருக்கிறது.
5. தானியேலின் எழுபது வாரங்களில் நடைபெறப்போகும் ஆறு சம்பவங்கள்
6. எழுபது வாரம் எப்போது ஆரம்பமாகிறது
7. மேசியா சங்கரிக்கப்படுவது
8. வரப்போகிற பிரபுவின் ஜனங்கள்
9. வரப்போகிற பிரபு
10. சபைக்காலம்
11. 69 ஆவது வாரத்திற்கும், 70 ஆவது வாரத்திற்கும் இடையில் நடைபெறும் 12 முக்கியமான சம்பவங்கள்
12. அந்திக்கிறிஸ்துவிற்கும், இஸ்ரவேலுக்கும் இடையே ஏற்படும் உடன்படிக்கை
13. வாரத்தின் பாதி
14. எழுபதாவது வாரத்தின் முடிவு
எழுபது வாரங்களின் பொருள்
எழுபது வாரம் என்பதற்கு எழுபத்தியேழு என்று பொருள். எழுபது வாரம் என்பதை எழுபத்தியேழு வருஷங்கள் என்று பொருள்கூற வேண்டும். அதற்கான காரணங்கள்:
1. தானியேலின் ஜெபத்தில் நாட்களைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. வருஷத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (தானி 9:2)
2. கடைசி வாரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் மூன்றரை வருஷங்கள் உள்ளன.
3. எழுபதாவது வாரத்தின் கடைசிப் பகுதி மூன்றரை வருஷம் என்று கூறும்போது அதன் முதல் பகுதியும் மூன்றரை வருஷமாகவே இருக்கும். இதனால் தானி 9:27 ஆவது வசனத்தில் ஒரு வாரமளவும் என்பது 7 வருஷங்களைக் குறிக்கும்.
4. கடைசி வாரத்தை 7 வருஷம் என்று கூறும்போது மற்ற வாரங்களும், ஒவ்வொரு வாரமும் 7 வருஷமாகவே இருக்கும். இவ்வாறாக எழுபது வருஷம் என்பது 70 ஷ் 7 = 490 வருஷங்களாகும்.
எழுபது வாரங்களின்பிரிவு
எழுபது வாரங்கள் மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையான:
1. முதலாவது பிரிவு - 7 வாரங்கள் - எருசலேம் திரும்பக் கட்டப்படுவதற்கு 49 வருஷங்கள். (தானி 9:25)
2. இரண்டாவது பிரிபு - 62 வாரங்கள் - 49 வருஷங்களின் முடிவில் எருசலேம் கட்டி முடிக்கப்படும் காலத்திலிருந்து மேசியா சங்கரிக்கப்படும் காலம் வரையிலும் - 434 வருஷங்கள். (தானி 9:25-26)
3. மூன்றாவது பிரிவு - ஒரு வாரம் - 7 வருஷங்கள். இக்காலத்தின் கடைசி ஏழு வருஷங்கள். தானி 9:24 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஆறு நிகழ்ச்சிகளை நிறைவேற்றுவதற்குக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இக்காலத்தில் நடைபெறும்.
எழுபது வாரங்கள் யாருக்குக் குறிக்கப்பட்டிருக்கிறது
490 வருஷங்களும் தானியேலின் ஜனங்களுக்கும், தானியேலின் பரிசுத்த நகரமாகிய எருசலேமிற்கும் குறிக்கப் பட்டிருக்கிறது. தானி 9:24 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஆறு நிகழ்ச்சிகள் நிறைவேறுவதற்காக இக்காலம் குறிக்கப் பட்டிருக்கிறது. இது சபைக்காலத்தைக் குறிக்கவில்லை. தானியேலின் 69 ஆவது வாரம் வரையிலும் சபைக்காலம் ஆரம்பமாகவில்லை. தானியேலின் 70 ஆவது வாரம் ஆரம்பமாகும் முன் சபை எடுத்துக் கொள்ளப்படும். (2தெச 2:7-8; வெளி. 4:1). ""குறிக்கப்படுதல்'' என்பதற்கான எபிரெய வார்த்தை ""காதாக்'' என்பதாகும்.
அவை இஸ்ரவேலுக்கும், எருசலேமிற்கும் எப்போது குறிக்கப்பட்டிருக்கிறது
இஸ்ரவேல் தேசத்தார் தேசங்கள் மத்தியில் சிதறிப்போயிருக்கும் காலத்தில் இவை அவர்களுக்குக் குறிக்கப்படவில்லை. எருசலேமில் இஸ்ரவேல் ஒரு தேசமாக இருக்கும்போது அவர்களுக்கு 70 வாரங்கள் குறிக்கப் பட்டிருக்கிறது. கி.பி. 70-ல் இஸ்ரவேல் ஜனத்தார் சிதறிப்போனார்கள். அவர்களுடைய எருசலேம் நகரமும், தேவாலயமும் அழிக்கப் பட்டது. ஆகையினால் தானி 9:24 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஆறு நிகழ்ச்சிகள் அப்போது நிறைவேறவில்லை. 69 ஆவது வாரம் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதோடு நிறைவு பெறுகிறது. இன்னும் எழுபதாவது வாரத்து சம்பவங்கள் மட்டுமே நிறைவேற வேண்டியுள்ளது. இக்காலத்தில் தானி 9:24 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஆறு சம்பவங்களும் நிறைவேறும். இஸ்ரவேல் ஒரு தேசமாக மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்டு, எருசலேமை மறுபடியும் ஆளுகை செய்யும்போது இந்தச் சம்பவம் வருங்காலத்தில் நிறைவேறும்.
தானியேலின் எழுபது வாரங்களில் நடைபெறப்போகும் ஆறு சம்பவங்கள்
1. ""மீறுதலைத் தவிர்க்கிறதற்கு''. மீறுதல் என்பதற்கானஎபிரெய வார்த்தை ""பேஷா'' என்பதாகும். இந்த மீறுதல் எருசலேமில் இஸ்ரவேலருடைய பாவத்தைக் குறிக்கும். இஸ்ரவேலர்கள் தங்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மனந்திருந்தி, இரட்சிக்கப்பட்டு தங்களுடைய மேசியாவினிடத்தில் திரும்பி வருவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார். தேசம் ஒரே நாளில் மனந்திரும்பும். (ரோமர் 11:25-29; ஏசா 66:7-10; எசே 36:24-30).
2. ""பாவங்களைத் தொலைக்கிறதற்கு''. இவை இஸ்ரவேலருடைய பாவங்களும், எருசலேமின் பாவங்களுமாகும். இது வரையிலும் இந்தப் பாவங்கள் தொலைக்கப் படவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது இஸ்ரவேலருடைய பாவங்களும், எருசலேமின் பாவங்களும் தொலைக்கப்படும். (எசே 36:24-30; எசே 37:24-27; எசே 43:7; சக. 14). இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக மனந்திரும்புதலின் ஆவி இஸ்ரவேலர்மீது ஊற்றப்படும். அந்நாளிலே பாவத்தையும், அழுக்கையும் நீக்க தாவீதின் குடும்பத்தாருக்கும், எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஓர் ஊற்று உண்டாயிருக்கும். (சக. 2:10-13:1; ரோமர் 11:25-29).
3. ""அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கு''. நிவிர்த்தி பண்ணுதல் என்பதற்கான எபிரெய வார்த்தை ""கபார்'' என்பதாகும். கல்வாரி சிலுவையில் இஸ்ரவேலருக்கும், எல்லா ஜனத்தாருக்கும் அக்கிரமங்கள் நிவிர்த்தி பண்ணப்பட்டது. (ஏசா 53; கொலோ. 1:20; கொலோ. 2:14-17; 1பேதுரு 2:24) ஆயினும் இஸ்ரவேல் ஒரு தேசமாக இன்னும் இரட்சிக்கப் படவில்லை. அந்தத் தேசத்தாருடைய பாவங்கள் இன்னும் மன்னிக்கப்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது இஸ்ரவேல் தேசத்தார் அனைவருடைய பாவங்களும் மன்னிக்கப்படும். (ஏசா 1:18-20; ஏசா 66:7-8; சக. 12:10-13:1; மத் 23:37-39; ரோமர் 11:25-29).
4. ""நித்திய நீதியை வருவிக்கிறதற்கு''. மீறுதல் தவிர்க்கப்படும்போது, பாவங்கள் தொலைக்கப்படும்போது, அக்கிரமங்கள் நிவிர்த்தி பண்ணப்படும்போது, இஸ்ரவேலுக்கும், எருசலேமிற்கும் நித்திய நீதி உண்டாகும். (ஏசா 9:6-7; ஏசா 12:1-6; தானி 2:44-45)
5. ""தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கு''. இஸ்ரவேல், எருசலேம் ஆகியோரைப் பற்றிய தீர்க்கதரிசனமும், மேசியாவின்கீழ் அவர்கள் நித்தியமாகத் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுவதும் நிறைவேறும். இந்த வாக்கியத்தில் தீர்க்கதரிசனம் என்பது தீர்க்கதரிசிகள் என்று பொருள்படும். மேசியா வரும்போது எருசலேமிலுள்ள இஸ்ரவேல் ஜனத்தாரைக் கண்டித்து உணர்த்துவதற்கும், மேசியாவினிடத்தில் அவர்களை வழிநடத்துவதற்கும், நீதியினிடத்தில் அவர்களை வழிநடத்துவதற்கும் தீர்க்கதரிசிகள் தேவைப்பட மாட்டார்கள். ஏனெனில் அக்காலத்தில் சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். (ஏசா 11:9; ஏசா 66:7-10; எரே 31:31-40; ரோமர் 11:25-29).
6. ""மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கு''. பாழாக்குகிற அருவருப்பிலிருந்து எருசலேம் நகரத்தையும், தேவாலயத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் சுத்திகரித்தல் என்பது இந்த வாக்கியத்தின் பொருளாகும். மேலும் இந்த வாக்கியம் ஆயிரம் வருஷத்து தேவாலயம் அபிஷேகம் பண்ணப்படுவதையும் குறிக்கிறது. (எசே 40-43; சக. 6:12-13). ""மகா பரிசுத்தமுள்ளவர்'' என்னும் பெயரால் யூதர்கள் மேசியாவை அழைக்கவில்லை. அவர்கள் கர்த்தரை மேசியா என்றே பொதுவாக அழைக்கிறார்கள். மனுஷர் கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணி, முடிசூட்ட வேண்டியதில்லை. பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவை ஏற்கெனவே அபிஷேகம் பண்ணியிருக்கிறார். (லூக்கா 22:29; அப் 1:7; அப் 2:36).
எழுபது வாரம் எப்போது ஆரம்பமாகிறது
எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை தானி 9:25 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கு மூன்று கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. முதலாவது கட்டளை பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷ ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்டது. (எஸ்றா 1:1-4; எஸ்றா 3:8; ஏசா 44:28; ஏசா 45:1-4; ஏசா 46:11). கோரேசு 9 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். இவனுடைய குமாரனாகிய கம்பைசிஸ் 7 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். கம்பைசிஸின் ஆட்சிக்காலத்தில் தேவாலயத்தைத் திரும்பக் கட்டும் வேலை நின்றுபோயிற்று. (எஸ்றா 4:1-24).
2. முதலாம் தரியு 35 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். தன்னுடைய இரண்டாம் வருஷ ஆட்சிக்காலத்தில் தரியு 18 வருஷங்களுக்கு முன்பு தேவாலயத்தைக் கட்டுவது சம்பந்தமான கோரேசின் ஆணையை உறுதிபண்ணினான். இவனுடைய ஆட்சிக் காலத்தின் ஆறாம் வருஷத்தில் தேவாலயம் திரும்பக் கட்டப்படும் வேலை நிறைவு பெற்றது. ஆனாலும் எருசலேம் நகரம் இன்னும் திரும்ப எடுப்பித்துக் கட்டப்படவில்லை. சஷ்டா 21 வருஷம் ஆட்சி புரிந்தான். (தானி 11:1-3) இக்காலத்தில் எருசலேம் நகரம் இன்னும் திரும்ப எடுப்பித்துக் கட்டப்படாமலேயே இருந்தது.
3. அர்தசஷ்டா 40 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். தன்னுடைய 20 ஆவது வருஷ ஆட்சிக் காலத்தில் கி.மு. 444 ஆம் வருஷத்தில் பிரபுவாகிய மேசியாவிற்கு எருசலேமைத் திரும்பக் கட்டும் வேலைக்கு அர்தசஷ்டா நெகேமியாவிற்கு மூன்றாவது ஆணையைப் பிறப்பித்தான். (தானி 9:25-26; நெகே. 2:1-6:19) இக்காலத்திலிருந்து 70 வாரங்கள் அல்லது 490 வருஷங்கள் கணக்கிடப்படுகிறது. இக்காலத்திலிருந்து 490 வருஷங்களின் முதலாவது பிரிவு ஆரம்பமாகிறது. எருசலேமில் வீதிகளும், அலங்கங்களும் திரும்பவும் கட்டப்படும் 7 வாரங்கள் அல்லது 49 வருஷங்கள் இந்த முதலாவது காலப்பிரிவில் வருகிறது. (தானி 9:25) நெகேமியா எருசலேமிற்கு வந்து சேர்ந்தபின்பு, 52 நாட்களில் அவர் அலங்கங்களைத் திரும்பக் கட்டினார். ஆனால் இது முழுமையாகப் புதுப்பித்துக் கட்டப்படுவது ஆகாது. அடுத்த 49 வருஷங்களாக எருசலேம் மறுபடியும் கட்டப்படும் வேலை தொடர்ந்து நடைபெறும். எருசலேமை மறுபடியும் கட்டும் மூன்றாவது ஆணை கோரேசு ராஜா கொடுத்த முதலாவது ஆணைக்கு 92 வருஷங்களுக்குப் பின்பு கொடுக்கப்படுகிறது.
மேசியா சங்கரிக்கப்படுவது
இது 62 வாரங்கள் அல்லது 434 வருஷங்களுக்குப் பின்பு நடைபெற்ற சம்பவம். எருசலேம் மறுபடியும் கட்டப்பட்ட ஏழு வாரங்கள் அல்லது 49 வருஷங்களைத் தொடர்ந்து மேசியா சங்கரிக்கப்படும் சம்பவம் நடைபெற்றது. (தானி 9:25-26). இயேசு கிறிஸ்து 69 ஆவது வாரத்தின் இறுதியில் சிலுவையில் அறையப் பட்டார். 70 ஆவது வாரத்தின் நடுவில் அவர் சிலுவையில் அறையப்படவில்லை. ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட போது, 70 ஆவது வாரம் முடிவடையவில்லை. ஏனெனில் 70 ஆவது வாரத்தில் நிறைவேற வேண்டிய சம்பவங்கள் இன்னும் பல உள்ளன. சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு, வருங்காலத்தில் அந்திக்கிறிஸ்து வெளிப்படும்போது இஸ்ரவேலிலும், எருசலேமிலும் ஒருசில சம்பவங்கள் 70 ஆவது வாரத்தில் நடைபெறும். (2தெச. 2:7-8; வெளி. 4:1).
வரப்போகிற பிரபுவின் ஜனங்கள்
எருசலேம் நகரம் அழிக்கப்படுவதும், பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படுவதும் ரோமப்பேரரசு மூலமாக நிறைவேறிற்று. (தானி 9:26) இந்த நிகழ்ச்சி கி.பி. 70 ஆம் வருஷத்தில் நடைபெற்றது. (லூக்கா 19:41-44; லூக்கா 21:20).
வரப்போகிற பிரபு
இது வரப்போகிற அந்திக்கிறிஸ்துவைக் குறிக்கும் வார்த்தையாகும். கி.பி. 70 ஆம் வருஷத்தில் எருசலேமையும், தேவாலயத்தையும் அழித்த ஜனங்களிடத்திலிருந்து அந்திக்கிறிஸ்து வருவான் என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். (தானி 9:26; லூக்கா 21:20-24). பழைய ரோமப்பேரரசிற்குள் ஸ்தாபிக்கப்படப்போகும் பத்து ராஜ்யங்களிலிருந்து அந்திக்கிறிஸ்து இனிமேல் வருவான். (தானி 7:23-24).
சபைக்காலம்
இது 69 ஆவது வாரத்திற்கும், 70 ஆவது வாரத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். (தானி 9:26-27). இதைத் தீர்க்கதரிசிகள் காண வில்லை. மேசியா சிலுவையில் அறையப் படுவதற்கும், அந்திக்கிறிஸ்து கடைசி நாட்களில் இஸ்ரவேலோடு ஏழு வருஷங்கள் உடன்படிக்கை பண்ணுவதற்கும் இடையில் ஒருசில சம்பவங்கள் நடைபெறும். (தானி 9:26-27).
தானியேலின் 69 ஆவது வாரத்திற்கும், 70 ஆவது வாரத்திற்கும் இடையில் நடைபெறும் 12 முக்கியமான சம்பவங்கள்
1. 69 ஆவது வாரத்தின் முடிவில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். (தானி 9:26).
2. ரோமப்பேரரசார் எருசலேமையும், தேவாலயத்தையும் அழித்துப்போட்டார்கள். இது 69 ஆவது வாரத்தின் இறுதியில் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கும், 70 ஆவது வாரத்திற்கும் இடையில் நடைபெற்றச் சம்பவம். (தானி 9:26-27).
3. ரோமாபுரியாருக்கும், இஸ்ரவேலுக்கும் இந்த வாரங்களுக்கு நடுவில் யுத்தம் நடைபெற்றது. (தானி 9:26-27).
4. இந்த வாரங்களுக்கு நடுவில் நடைபெற்ற யுத்தத்தில் இஸ்ரவேல் தோல்வியுற்றது. இதனால் அவர்களுடைய நகரமும், தேவாலயமும் அழிக்கப்பட்டது. (தானி 9:26-27).
5. இந்த வாரங்களின் நடுவில் இஸ்ரவேல் தேசத்தார் தேசங்கள் நடுவில் சிதறிப் போனார்கள். (தானி 9:26-27; லூக்கா 21:20-24).
6. இஸ்ரவேலுக்கும், ரோமாபுரியாருக்கும் நடைபெற்ற யுத்தத்தின் நடுவில் இஸ்ரவேல் தேசமும், அவர்களுடைய நகரமும், தேவாலயமும் பாழாக்கப்பட்டது. (தானி 9:26; லூக்கா 21:20-24). அந்திக்கிறிஸ்துவிடமிருந்து இஸ்ரவேலைக் காப்பதற்காக இயேசு கிறிஸ்து வருவார். அப்போது தேவாலயமும், எருசலேமும் திரும்பக் கட்டப்படும். அழிக்கப்படமாட்டாது. (சக. 6:12-13; சக. 14:1-21; மத் 25:31-46; வெளி. 11:15; வெளி. 19:11-21).
மேலே கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் ரோமாபுரியார் மூலமாக நிறைவேறிற்று. அவர்கள் கி.பி. 31 ஆம் வருஷத்தில் கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தார்கள். கி.பி. 70 ஆம் வருஷத்தில் எருசலேமை அழித்தார்கள். இந்தச் சம்பவங்கள் 69 ஆவது வாரத்திலோ அல்லது 70 ஆவது வாரத்திலோ நடைபெறவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 39 வருஷங்களுக்குப் பின்பு எருசலேம் அழிக்கப்பட்டது. இத்துடன் 69 ஆவது வாரம் முடிவடைகிறது.
7. எருசலேம் அழிக்கப்பட்டு, பாழாக்கப்பட்ட பின்பு, ""வரப்போகிற பிரபு'' வருவான். (தானி 9:26-27). கி.பி. 70 ஆம் வருஷத்தில் யூதர்கள் தேசங்கள் மத்தியில் சிதறிப்போனார்கள். வரப்போகிற பிரபு யூதரோடு உடன்படிக்கையை உறுதிபண்ண வேண்டும். (தானி 9:27) அது இன்னும் நடைபெறவில்லை. ஆகையினால் இது வருங்காலத்தில் நிறைவேறப்போகும் சம்பவமாகும்.
8. இஸ்ரவேலின் தலைநகரமாக எருசலேம் திரும்பக் கட்டப்படும். அந்திக்கிறிஸ்து வருவதற்கு முன்பாகத் தேவாலயம் திரும்பக் கட்டப்படும். இவை கட்டப்பட்ட பின்பு, அந்திக்கிறிஸ்து அநேக யூதரோடு ஏழு வருஷ உடன்படிக்கையை உறுதி பண்ணுவான். (தானி 9:27)
9. எருசலேம் நகரமும், பரிசுத்த ஸ்தலமும் ரோமப்பேரரசால் அழிக்கப்பட்டது. (தானி 9:26) இவை இரண்டும் தானி 9:27 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் உடன்படிக்கையை உறுதிபண்ணுவதற்கு முன்பு திரும்பக் கட்டப்பட வேண்டும். ஏனெனில் ஏழு வருஷங்களின் பாதியில் தேவாலயம் மறுபடியும் பாழாக்கப்படும். ஆகையினால் கி.பி. 70 ஆம் வருஷத்திலிருந்து இன்று வரையிலும் தேவாலயமும், எருசலேமும் இன்னும் மறுபடியும் கட்டப்படவில்லை. தானி 9:27 ஆவது வசனம் வருங்காலத்தில் நிறைவேறும்.
10. இயேசுகிறிஸ்துவைச் சிலுவையில் அறையும்போது யூதர்கள் அவரை மேசியா என்று நம்பவில்லை. இதற்காக அவர்கள் தேசங்கள் மத்தியில் சிதறடிக்கப்பட்டார்கள். கடைசி காலத்திற்கு முன்பாக சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மறுபடியும் தங்கள் சொந்த தேசத்திற்குக் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக எருசலேமைப் பார்த்து, இவ்வாறு கூறுகிறார். ""எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப் பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள்'' (மத் 21:43; மத் 23:37-39; மத் 24:2; லூக்கா 21:20-24).
இஸ்ரவேல் தேசத்தார் இயேசு கிறிஸ்துவை அங்கிகரிக்கவில்லை. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரையிலும் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை அங்கிகரிக்க மாட்டார்கள். ஆகையினால் கர்த்தர் 70 ஆவது வாரத்தைத் தாம் சிலுவையில் அறையப்பட்டவுடன் நிறைவேற்றவில்லை. இந்த 70 ஆவது வாரம் தேவன் இஸ்ரவேல் தேசத்தாரோடு கிரியை நடப்பிக்கும்போது நிறைவேறுமென்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. (எசே 37). தானியேலின் 70 ஆவது வாரம் இஸ்ரவேலையும், எருசலேமையும் பற்றியது. இந்தக் காலத்தில் கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் நிறைவேறுவதற்கு இஸ்ரவேல் தேசத்தார் எருசலேமை மறுபடியும் ஆளுகை செய்ய வேண்டும். (தானி 9:24) மேலும் 70 ஆவது வாரம் நிறைவேறுவதற்கு எருசலேமில் தேவாலயமும் மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும். (தானி 9:26-27).
11. வரப்போகிற பிரபு ரோமப்பேரரசின் எல்லைக்குள்ளிருந்து வருவான். (தானி 9:27) இவன் அநேக யூதரோடு ஒரு வாரமளவும் அல்லது 7 வருஷங்கள் அளவும் உடன்படிக்கையை உறுதி பண்ணுவான். பழைய ரோமப்பேரரசில் வருங்காலத்தில் பத்து ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்படும். அதன் பின்பே, வரப்போகிற பிரபு வருவான். (தானி 7:23-24) சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, இந்தச் சம்பவம் நடைபெறும். இவ்விரண்டு சம்பவங்களுக்குப்பின்பே தானியேலின் எழுபதாவது வாரத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் நடைபெறம்.
70 ஆவது வாரம் என்பது இக்காலத்தின் கடைசி 7வருஷங்களாகும். இது சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம். (தானி 9:27) இது வருங்கால உபத்திரவக்காலத்தைக் குறிக்கும். இதன் முடிவில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும். (மத் 24-25; வெளி. 4-19; வெளி. 21; தானி 7:19-27; தானி 8:9-14, 22-25; தானி 9:27; தானி 11:36-45; தானி 12:1-17) இந்த 7 வருஷங்களில் மேலும் பல சம்பவங்கள் நிறைவேறும்.
கடைசி மூன்றரை வருஷங்களில் மகா உபத்திரவக்காலம் இருக்கும். (எரே 30:4-9; தானி 12:1; மத் 24:15-24; வெளி. 11:1-19:21). முதலாவது மூன்றரை வருஷங்களில் உபத்திரவம் குறைவாக இருக்கும். இக்காலத்தில் அந்திக் கிறிஸ்து தன்னுடைய அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதினால் இஸ்ரவேலுக்கு உபத்திரவம் குறைந்திருக்கும். (தானி 7:23-24; மத் 24:4-14; வெளி 6:1-9:21).
12. தற்காலத்து சபைக் காலம் 69 ஆவது வாரத்திற்கும், 70 ஆவது வாரத்திற்கும் நடுவில் வருகிறது. இக்காலத்தில் கர்த்தர் இஸ்ரவேலைப் புறக்கணித்து, அவர்களைத் தேசங்கள் மத்தியில் சிதறிப்போகப் பண்ணியிருக்கிறார். கர்த்தர் அவர்களைத் தமது இரண்டாம் வருகையின் போது மறுபடியும் கூட்டிச் சேர்த்து, ஒரு ராஜ்யமாக ஸ்தாபிப்பார். அதுவரையிலும் 70 ஆவது வாரம் நிறைவேறாமல் தாமதிக்கும். ""கர்த்தர் சீயோனைக்கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்'' (சங் 102:15).
அந்திக்கிறிஸ்துவிற்கும், இஸ்ரவேலுக்கும் இடையே ஏற்படும் உடன்படிக்கை
இந்த உடன்படிக்கையில் (தானி 9:27) என்னென்ன காரியங்களெல்லாம் இடம் பெற்றிருக்கும் என்று கூறப்படவில்லை. ஒருவேளை அந்திக்கிறிஸ்து யூதர்களைத் துன்புறுத்துவதில்லை என்னும் சமாதான உடன்படிக்கையும், இராணுவ உடன்படிக்கையும் ஏற்பட்டிருக்கலாம். 70 ஆவது வாரத்தின் முதல் மூன்றரை வருஷங்களில் அந்திக்கிறிஸ்து பத்து ராஜ்யங்களைக் கைப்பற்ற முயற்சி பண்ணுவான். இதற்காக அவன் தேசங்களோடு இராணுவ உடன்படிக்கை செய்து கொள்வான். இந்த முயற்சியில் அவன் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கலாம். (தானி 7:23-24; தானி 8:23-25; வெளி. 17:8-17). இஸ்ரவேல் ஒரு தேசமாக ஸ்தாபிக்கப்பட்டு, மறுபடியும் கட்டப்படும்போது அவர்களுக்கு பாதுகாப்பு உடன்படிக்கை இதில் கூறப்பட்டிருக்கலாம். தற்காலிகமாகச் சமாதானமும், இந்த உடன்படிக்கையில் உறுதிபண்ணப் பட்டிருக்கலாம். (தானி 8:25; தானி 9:27; தானி 11:36-45) இந்த உடன்படிக்கையின் காலம் 7 வருஷங்களாகும். (தானி 9:27).
வாரத்தின் பாதி
கடைசி ஏழு வருஷத்தின் முதல் மூன்றரை வருஷத்தில் அந்திக்கிறிஸ்து பத்து ராஜ்யங்களில் தன் அதிகாரத்தைக் கைப்பற்றுவான். (தானி 7:23-24; வெளி. 17:8-17). அதன் பின்பு, அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலோடு உடன்படிக்கையை முறித்துப்போடுவான். பாலஸ்தீன தேசத்திற்குள் நுழைந்து, அதைக் கைப்பற்றி, யூதருடைய தேவாலயத்தைத் தலைநகரமாக்கிக் கொள்வான். (தானி 7:21-25; தானி 8:9-14,22-25; தானி 9:27; தானி 11:36-45; மத் 24:15-24; 2தெச. 2:3-4; வெளி 13:1-18; வெளி. 17:8-17).
அதன்பின்பு, தேவாலயத்தில் செலுத்தப்படும் எல்லாப் பலிகளையும் அகற்றிப்போடுவான். அந்திக்கிறிஸ்து தேவாலயத்தில் தன்னுடைய சிலையை நிறுவி, தன்னையே தேவனாக ஆராதிக்குமாறு வலியுறுத்துவான். இது 2,300 பகல், இரவுகளுக்கு நடைபெறும். அதாவது 3 வருஷங்கள், 2 மாதங்கள், 10 நாட்களுக்கு நடைபெறும். இது 1,260 நாட்களாகும். இது தானியேலின் 70 ஆவது வாரத்தின் கடைசி மூன்றரை வருஷங்களில் நடைபெறும் சம்பவம். (தானி 8:9-14; தானி 9:27;11:45; மத் 24:15-22; 2தெச. 2:3-4; வெளி. 13:1-18).
எழுபதாவது வாரத்தின் முடிவு
70 ஆவது வாரத்தின் பாதியிலிருந்து தேவாலயத்தைப் பாழாக்குகிறவன்மேல் நிர்மூலம் சொரியும்மட்டும் மிருகத்தை ஆராதிப்பதும், பாழாக்குகிற அருவருப்பும் தேவாலயத்தில் தொடரும். (தானி 9:27). பாழாக்குகிறவன்மீது வரும் நியாயத்தீர்ப்பு இரண்டு சாட்சிகள் மூலமாக வரும் வாதைகளாகவும், (வெளி. 11:3-11) கலசத்தின் நியாயத் தீர்ப்புகளாகவும் (வெளி. 15-16) இருக்கும். அர்மெகதோன் யுத்தத்தில் அந்திக்கிறிஸ்து தோல்வியுற்று அழிக்கப்படும்போது அவன்மீது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நியாயத்தீர்ப்பு நிறைவு பெறும். (வெளி. 16:13-16; வெளி. 19:11-21; சக. 14).
இக்காலத்தை முடிவுபெறச் செய்யும் சம்பவங்கள்
1. ஏழாம் கலசம் (வெளி. 16:17-21)
2. பாபிலோனின் அழிவு. (வெளி. 16:19; வெளி. 18:1-24)
3. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. (வெளி. 19:11-21)
4. அர்மெகதோன் யுத்தம். (வெளி 19:11-21)
5. தேசங்களின்மீது நியாயத்தீர்ப்பு (மத் 25:31-46)
6. கோதுமையிலிருந்து களைகள் பிரிக்கப்படுவது. (மத் 13)
7. இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவது. (மத் 24:29-31; ஏசா 11:10-12; எசே 37)
8. இஸ்ரவேல் மனந்திருந்துதல். (ரோமர் 11:25-29)
9. எருசலேமின் விடுதலை (சக. 14)
இக்காலத்தில் நிறைவு பெறும் காரியங்கள்
1. தானியேலின் எழுபதாவது வாரம் (தானி 9:27)
2. கிரேக்கருடைய காலம் (மத் 3)
3. உபத்திரவக்காலம் (தானி 9:27; தானி 12:1; மத் 24:15-22; வெளி. 6:1-19:21)
4. ஆயிரம் வருஷ காலத்தில் பூமியின்மீது சாத்தானுடைய கிரியைகள் (வெளி. 20:1-10)
5. புறஜாதியாரின் காலங்கள்
6. தேவனுடைய கோபம் (வெளி. 6:17; வெளி. 15:1-16:21)
7. இஸ்ரவேலின் கலகம் (சக. 12:10-13:1; மத் 23:37-39; ரோமர் 11:25-29)
8. எருசலேமின் பாழ்க்கடிப்புகள் (சக 14:1-21; லூக்கா 21:20-24)
9. புறஜாதி ராஜ்யங்கள் (தானி 2:44-45; தானி 7:13-14,23-27; வெளி. 17:8-17; வெளி. 19:11-21)
10. கிறிஸ்தவர்களின் உபத்திரவம் (சக. 14:9; மத் 13:40-43; மத் 25:31-46; வெளி. 20)
11. அந்திக்கிறிஸ்துவின் ஆளுகை (வெளி. 19:19-21)
12. மிருகத்தை ஆராதிப்பது. (வெளி. 13:1-18; வெளி. 14:9-11; வெளி. 15:2-4; வெளி. 20:4-6)
13. கிரேக்கப் பேரரசு மறுபடியும் உயிர்ப்பிக்கப்படுவது. (தானி 8:22-25; தானி 11:36-45; வெளி. 13:5; வெளி. 19:19-21)
14. பிசாசுகள், விழுந்த தூதர்கள் ஆகியவற்றின் விடுதலை (ஏசா 24:21-22; வெளி. 12:7-12; வெளி. 20:1-3)
15. சாத்தானின் அற்புதங்கள் (2தெச. 2:8-12; வெளி. 13:1-5,12-17; வெளி. 16:13-14; வெளி. 19:20)
16. முதலாவது உயிர்த்தெழுதல்
17. இஸ்ரவேல் சிதறிப்போதல் (மத் 24:29-31; ஏசா 11:10-12; எசே 37)
18. இரண்டு சாட்சிகளின் ஊழியம் (வெளி. 11:7-12)
19. பூமியில் மனுஷனுடைய சுயாதீன ஆட்சி (சக. 14:9; வெளி. 5:10; வெளி. 11:15; வெளி. 20:1-10; வெளி. 22:4-5)
20. இஸ்ரவேலின் குருட்டுத்தன்மை (ரோமர் 11:25-29)
21. பூமியின்மேல் சாத்தானுடைய ஆளுகை (வெளி. 12:7-12; வெளி. 20:1-10)
22. எழுபது வாரங்கள் அல்லது 490 வருஷங்கள். (தானி 9:24)
23. காலமும், காலங்களும், அரைக்காலமும் (தானி 7:25; தானி 12:7; வெளி. 12:14)
24. நாற்பத்தி இரண்டு மாதங்கள் (வெளி. 11:2; வெளி. . 13:5)
25. ஆயிரத்து இருநூற்றி அறுபது நாட்கள். (வெளி. 11:3; வெளி. 12:6)
""அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்'' (தானி 9:22) என்னும் வாக்கியம் எருசலேம் மறுபடியும் கட்டப்படுவது நிறைவு பெறும் என்பதை விளக்குகிறது. எருசலேமில் வாசஸ்தலங்களும், அவற்றிற்குச் செல்லும் பெரும்பாதைகளும் கட்டி முடிக்கப்பட்டிருக்கும்.
""பாழாக்குகிறவன்'' என்பவன் தேவாலயத்தைப் பாழாக்குகிறவன் (தானி 9:27). எழுபதாவது வாரத்தின் முடிவு வரையிலும் நிர்மூலம் சொரியும். அந்திக் கிறிஸ்துவிற்கு அழிவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
