தானியேல் 8ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி
இந்த அதிகாரம் கல்தேயருடைய பாஷையில் எழுதப்படவில்லை. இதற்கு முந்திய ஆறு அதிகாரங்களும் கல்தேயருடைய பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. கல்தேயருக்கு பிரயோஜனமாயிருக்கும் விதத்தில், அவர்களுடைய சொந்த பாஷையிலேயே அந்த அதிகாரங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரமும், இதற்கு பின்பு இந்தப் புஸ்தகத்திலுள்ள எல்லா அதிகாரங்களும் எபிரெய பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியங்கள் மூலமாய் யூதர்களுக்கு பிரயோஜனமுண்டாகவேண்டும்.
தானியேல் ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தன்னுடைய தரிசனத்திலே பார்க்கிறார். அவர் ஒரு சின்னக்கொம்பையும் தரிசிக்கிறார். சின்னக்கொம்பு தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் ஜெயம் பெறுகிறது (தானி 8:1-14).
தானியேல் கண்ட தரிசனத்தை காபிரியேல் என்னும் தேவதூதன் விளங்கப்பண்ணுகிறார். ஆட்டுக்கடா பெர்சிய ராஜ்யத்தைக் குறிக்கும். வெள்ளாட்டுக்கடா கிரேக்கு ராஜ்யத்தைக் குறிக்கும். சின்னக்கொம்பு என்பது கிரேக்க ராஜ்யத்தின் அதிபதியைக் குறிக்கும். இவனுடைய பெயர் அந்தியோகஸ் எப்பிபேனஸ் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இவன் யூதர்களைத் துன்பப்படுத்தினான் (தானி 8:15-21).
தீர்க்கதரிசிகள் யூதர்கள் மத்தியிலே, கர்த்தருடைய வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, தேவனுடைய சிந்தையை, ஜனங்களுக்கு அறிவிக்கிறார்கள். எஸ்றாவின் காலத்திற்கு பின்பு, தேவனுடைய வெளிப்பாடுகள் நின்றுபோயிற்று. சுவிசேஷத்தின் காலம் ஆரம்பமாகும் வரையிலும், யூதர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசியும் எழும்பி ஊழியம் செய்யவில்லை. அந்தக் காலத்தில் நடைபெறப்போகும் சம்பவங்களை தானியேல் இங்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்.
தானியேல் கண்ட தரிசனம் தானி 8:1-14
தானி 8:1. தானியேலாகிய எனக்கு முத-ல் காண்பிக்கப்பட்ட தரிசனத்துக்குப் பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம்பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது.
தானி 8:2. தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.
தானி 8:3. நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று.
தானி 8:4. அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது.
தானி 8:5. நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
தானி 8:6. நான் ஆற்றின் முன்பாக நிற்கக் கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.
தானி 8:7. அது ஆட்டுக்கடாவின் கிட்டச் சேரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது; அதின்முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது; அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை.
தானி 8:8. அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.
தானி 8:9. அவைகளில் ஒன்றி-ருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும் சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று.
தானி 8:10. அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது.
தானி 8:11. அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்தி-ருந்து அன்றாட ப-யை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது.
தானி 8:12. பாதகத்தினிமித்தம் அன்றாட ப-யோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.
தானி 8:13. பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரித்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட ப-யைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக் குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.
தானி 8:14. அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.
தானியேல் ஏற்கெனவே ஒரு தரிசனத்தை கண்டார். அந்த தரிசனம் அவருக்கு பெல்ஷாத்சார் ராஜ்யபாரம் பண்ணின முதலாம் வருஷத்தில் உண்டாயிற்று. இப்போது தானியேல் மறுபடியும் ஒரு தரிசனம் காண்கிறார். இந்த தரிசனம் பெல்ஷாத்சார் ராஜ்யபாரம் பண்ணின மூன்றாம் வருஷத்தில் அவருக்கு உண்டாயிற்று. இந்த வருஷமே பெல்ஷாத்சாருடைய ஆட்சிக்காலத்தின் கடைசி வருஷம் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். காலவரிசை பிரகாரமாக, இந்த அதிகாரம், ஐந்தாவது அதிகாரத்திற்கு முன்பாக கோர்க்கப்பட்டிருக்கவேண்டும்.
பாபிலோன் தேசத்திற்கு அழிவு வரப்போகிறது. பாபிலோனின் அழிவை நினைத்து தானியேல் ஆச்சரியப்படவுமில்லை. கலங்கவுமில்லை. பாபிலோன் தேசத்தைப் போலவே, மேலும் பல ராஜ்யங்கள் அழிந்துபோகும் என்று, கர்த்தர் தானியேலுக்கு தரிசனத்திலே சொல்லுகிறார்.
தானியேல் இப்போது காண்கிற தரிசனமும், அவர் ஏற்கெனவே கண்ட தரிசனமும் ஒன்றுபோலுள்ளது. இரண்டாவது தரிசனம், முதலாவது தரிசனத்தை உறுதிபண்ணுகிறது. முதலாவது தரிசனத்தில் சொல்லப்பட்ட சம்பவங்களே, இரண்டாவது தரிசனத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தானியேல் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையிலிருக்கிறார். இது பாபிலோனுக்கு அருகாமையில், பெர்சிய தேசத்திலுள்ளது. தானியேல் சரீரப்பிரகாரமாக சூசான் அரமனையில் இல்லை. அவர் பாபிலோன் தேசத்தில், ஒரு அடிமையாகயிருக்கிறார். அவர் தன்னுடைய தரிசனத்திலே, ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனைக்குப்போகிறார்.
எசேக்கியேல் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவரை இஸ்ரவேல் தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போனார். எசேக்கியேலின் சரீரம் பாபிலோனிலிருந்தது. அவருடைய ஆவியோ எருசலேமுக்குப் போயிற்று. தானியேலின் சரீரம் சிறையிருப்பிலிருந்தாலும், அவருடைய ஆத்துமாவோ விடுதலையோடிருக்கிறது. நாம் கட்டப்பட்டிருந்தாலும், கர்த்தருடைய ஆவியானவர் ஒருபோதும் கட்டப்பட்டிருக்கமாட்டார். தானியேல் ஏலாம் தேசத்தில், ஊலாய் என்னும் ஆற்றங்கரையிலிருக்கிறார்.
தானியேல் தன் கண்களை ஏறெடுத்துப்பார்க்கிறார். இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நிற்கிறது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருக்கிறது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருக்கிறது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று (தானி 8:3).
தானியேல் கண்ட ஆட்டுக்கடா இரண்டாவது ராஜ்யத்திற்கு அடையாளம். மேதியருடைய ராஜ்யமும் பெர்சியருடைய ராஜ்யமும், அந்த ஆட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளாகும். இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருக்கிறது. ஆனாலும் பிந்தின கொம்பு, முந்தின கொம்பைவிட உயர்ந்திருக்கிறது.
பெர்சிய ராஜ்யம் பிந்தி ஸ்தாபிக்கப்பட்டது. மேதிய ராஜ்யம் முந்தி ஸ்தாபிக்கப்பட்டது. பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு, மேதிய ராஜ்யத்தைவிட பிரபல்யமானவனாயிருந்தான். அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதை தானியேல் காண்கிறார்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருக்கிறது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டிருக்கிறது (தானி 8:4).
தானியேல் கண்ட ஆட்டுக்கடா மேற்கு திசையில் பாய்கிறது. அந்த திசையில் பாபிலோன், சீரியா, கிரேக்கு தேசம், சின்ன ஆசியா ஆகிய தேசங்கள் உள்ளன.
அந்த ஆட்டுக்கடா வடக்கு திசையை நோக்கி பாய்கிறது. வடக்கு திசையில் லீதியர், அர்மேனியர், சீத்தியர் ஆகிய தேசத்தார் இருக்கிறார்கள். அந்த ஆட்டுக்கடா தெற்கு திசையிலும் பாய்கிறது. தெற்கு திசையிலே அரபியா, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய தேசங்கள் உள்ளன.
பெர்சிய தேசம் தன்னுடைய ராஜ்யத்தை விஸ்தாரம்பண்ணுகிறது. மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமுள்ள தேசங்கள்மீது யுத்தம்பண்ணி, அந்த தேசங்களை ஜெயித்து, அதை தன்னுடைய ராஜ்யத்தோடு இணைத்துக்கொள்கிறது.
முடிவிலே மேதிய பெர்சிய தேசம் வல்லரசாக விளங்குகிறது. ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருக்கிறது. பெர்சிய தேசத்து ராஜாக்கள் தங்கள் இஷ்டம்போல ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள். அவர்கள் வல்லமை கொள்கிறார்கள்.
தானியேல் அதைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். அப்போது மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் செல்கிறது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே ஒரு விசேஷித்த கொம்பு இருக்கிறது (தானி 8:5).
வெள்ளாட்டுக்கடா என்பது மகா அலெக்சாந்தரைக் குறிக்கும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இவன் மக்கதொனியாவின் ராஜாவாகிய பிலப்புவின் குமாரன். இவன் மேற்கிலிருந்து வருகிறான். மேற்கு திசையில் கிரேக்கு தேசம் இருக்கிறது. அலெக்சாந்தர் கிரேக்கு தேசத்தைச் சேர்ந்தவன். அவன் உலகத்தையே ஜெயிக்கிறான்.
வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின் மீதெங்கும் செல்லுகிறது. அலெக்சாந்தரை யாரும் எதிர்க்கவில்லை. அவன் எந்த தேசத்திலும் நின்று யுத்தம் பண்ணவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆகையினால் அவன் நிலத்திலே கால் பாவாமல், எல்லா தேசங்கள் வழியாக, வேகமாய் போகிறான்.
இந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருக்கிறது. மகாஅலெக்சாந்தர் மிகுந்த பலமுள்ளவன். அவன் தன்னுடைய பலத்தை அறிந்து வைத்திருந்தான். அவன் தேசங்கள்மீது யுத்தம்பண்ணப்போகும்போது, வேகமாய்ப் பாய்ந்து போவான். அவனுக்கு சீக்கிரத்தில் வெற்றி கிடைக்கும். மகாஅலெக்சாந்தரை தடுத்து நிறுத்தவோ அல்லது அவனோடு எதிர்த்து நின்று யுத்தம்பண்ணவோ, ஒருவருக்கும் பெலமில்லை.
ஆற்றின் முன்பாக இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா நிற்கிறது. வெள்ளாட்டுக்கடாவோ, அந்த ஆட்டுக்கடாவின் இடமட்டும் வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே, அதற்கு எதிராகப் பாய்கிறது (தானி 8:6).
மகாஅலெக்சாந்தர் தன்னுடைய மகாபெரிய சேனையை சேர்த்துக்கொண்டு, பெர்சிய ராஜ்யத்தின்மீது யுத்தம்பண்ணுகிறான். அவனுடைய சேனையிலே 30,000 போர் வீரர்களும், 5,000 குதிரைகளும் இருக்கிறது. இக்காலத்தில் தரியு கோடோமன்னஸ் என்பவன் பெர்சிய தேசத்திற்கு ராஜாவாயிருக்கிறான். வெள்ளாட்டுக்கடா ஆட்டுக்கடாவின் கிட்டச் சேருகிறது.
மகாஅலெக்சாந்தர் தீவிரமாய் யுத்தம்பண்ணுவான். தானியேல் இந்த சம்பவத்தை தன்னுடைய தரிசனத்தில் காண்கிறார்.
வெள்ளாட்டுக்கடா ஆட்டுக்கடாவின் கிட்டச் சேருவதை தானியேல் காண்கிறார்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போடுகிறது; அதின்முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போடுகிறது; அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை (தானி 8:7).
மகாஅலெக்சாந்தர் தரியு ராஜாவின்மீது மூன்றுதரம் யுத்தம்பண்ணியிருக்கிறான். முதல் யுத்தம் கிரேனிக்கஸ் என்னுமிடத்திலும், இரண்டாவது யுத்தம் இஸ்சூஸ் என்னுமிடத்திலும், மூன்றாவது யுத்தம் அர்பேலா என்னுமிடத்திலும் நடைபெற்றது. இம்மூன்று யுத்தங்களிலும் மகாஅலெக்சாந்தருக்கு வெற்றி கிடைத்தது. கடைசி யுத்தத்தில் தரியு முற்றிலுமாய் அழிக்கப்பட்டான். தரியுவின் சேனையில் சுமார் ஆறு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.
மகாஅலெக்சாந்தர் பெர்சியதேசத்தை தன் வசமாக்கிக்கொள்கிறான். வெள்ளாட்டுக்கடா, ஆட்டுக்கடாவின்மேல் கோபங்கொண்டு, அதை முட்டி, அதன் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போடுகிறது. இரண்டு கொம்புகள் என்பது பெர்சிய தேசத்திற்கும், மேதிய தேசத்திற்கும் அடையாளம். மகாஅலெக்சாந்தர் இவ்விரண்டு தேசங்களையும் அழித்துப்போடுகிறான்.
அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொள்கிறது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்புகிறது (தானி 8:8).
வெள்ளாட்டுக்கடா போகும் இடங்களிலெல்லாம் அதற்கு ஜெயமுண்டாயிற்று. மகாஅலெக்சாந்தர் எல்லா தேசங்கள்மீதும் யுத்தம்பண்ணி அதை ஜெயிக்கிறான். ஆனாலும் வெள்ளாட்டுக்கடாவின் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று. மகாஅலெக்சாந்தர் தன்னுடைய யுத்தங்களை ஆரம்பிக்கும்போது அவனுக்கு இருபது வயது. தன்னுடைய வாலிப வயதிலேயே அவன் பெர்சிய பேரரசு முழுவதையும் கைப்பற்றுகிறான்.
அலெக்சாந்தருக்கு முப்பத்திரண்டு வயதாயிற்று. அவன் முழுபலத்தோடிருக்கிறான். அதிக வல்லமையோடிருக்கிறான். அப்பொழுது அவன் முறிந்துபோகிறான். மதுபானம் பருகி அவன் செத்துப்போனான் என்று சரித்திரம் சொல்லுகிறது. அவன் விஷம் அருந்தி செத்துப்போனான் என்றும் சிலர் சந்தேகமாய்ச் சொல்லுகிறார்கள். அலெக்சாந்தருக்கு பிள்ளைகள் இல்லை. வாரிசு இல்லாமலேயே அவன் செத்துப்போனான்.
அலெக்சாந்தரின் ராஜ்யம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. கிரேக்கு தேசத்திற்கு ஒரே ஒரு பெரிய கொம்பு மாத்திரமே இருந்தது. அந்தக் கொம்பு முறிந்துபோனபின்பு, அதற்கு பதிலாக, நாலு கொம்புகள் முளைத்தெழும்புகிறது. அலெக்சாந்தருடைய படையில் நான்கு பேர் தளபதிகளாகயிருந்தார்கள். இவர்கள் ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராக இருந்தார்கள். நாலு திசைகள் என்பது, சீரியா, எகிப்து, ஆசியா, கிரேக்கு ஆகிய நான்கு தேசங்களைக் குறிக்கும். நான்கு தளபதிகளில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தேசத்திற்கு அதிபதியானார்கள்.
அவைகளில் ஒன்றி-ருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும் சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று. அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதிக்கிறது (தானி 8:9,10).
சின்னக்கொம்பு கர்த்தருடைய ஜனத்தையும், அவருடைய சபையையும் துன்பப்படுத்துகிறது.
""அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான். ஆனாலும் அவனிடத்தி-ருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அன்றாடப-யை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள். உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்'' (தானி 11:30-32).
சின்னக்கொம்பு என்பது அந்தியோகஸ் எப்பிபேனசைக் குறிக்கும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இவனுடைய ஆரம்பம் அற்பமாயிருந்தது. ஆகையினால் இவன் சின்னக்கொம்பு என்று அழைக்கப்படுகிறான். இவனுக்கும் ராஜ்யத்திற்கும் நடுவில் ஏராளமான பலவான்கள் இருந்தார்கள். இவனை சிறைப்பிடித்து ரோமாபுரி சிறைச்சாலையில் அடைத்தார்கள். அந்தியோகஸ் எப்பிபேனஸ் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து, தன்னுடைய ராஜ்யத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.
அந்தியோகஸ் முதலாவதாக எகிப்தைப் பிடித்தான். அதன் பின்பு அவன் பெர்சிய தேசத்தையும், அர்மேனிய தேசத்தையும் தன் வசமாக்கிக்கொண்டான். இவன் யூதர்களுக்கு ஏராளமான தீங்குகளைச் செய்தான்.
அந்தியோகஸ் கர்த்தருடைய பரிசுத்த தேசமான இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக எழும்பினான். அவன் சிங்காரமான தேசத்திற்கு நேராக எழும்பினான் (தானி 8:9). சிங்காரமான தேசம் என்பது சீயோன் மலையைக் குறிக்கும் வார்த்தை.
""வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்'' (சங் 48:2).
கர்த்தருடைய சிங்கார தேசமான சீயோன் மலையே, அவருடைய பரிசுத்த ஸ்தலம். இங்கே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வாசம்பண்ணுகிறார். நாம் சீயோன் மலையிலே கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வோம்.
அந்தியோகஸ் எப்பிபேனஸ் வானத்தின் சேனையோடு யுத்தம்பண்ணுகிறான் (தானி 8:10). வானத்தின் சேனை என்னும் வாக்கியம் கர்த்தருடைய சேனையைக் குறிக்கிறது. அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை அவன் பூமியிலே விழப்பண்ணுகிறான். இஸ்ரவேல் தேசத்திலும், சபையிலும் பிரபல்யமான சிலரை அந்தியோகஸ் கீழே தள்ளிவிடுகிறான். இவர்கள் தங்களுடைய காலத்தில், கர்த்தருக்கு எழும்பி பிரகாசிக்கும் தீபங்களாயிருந்தார்கள்.
எப்பிபேனஸ் யூதமார்க்கத்து தலைவர்களை கொடுமைப்படுத்தினான். விக்கிரகங்களை ஆராதனை செய்யவேண்டுமென்று அவர்களை கட்டாயப்படுத்தினான். எப்பிபேனசின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது. எலெயாசார் போன்றவர்கள் பன்றியின் மாம்சத்தை புசிக்க மறுத்தார்கள். இதன் நிமித்தமாக அவர்களெல்லோரும் கொலைசெய்யப்பட்டார்கள்.
அந்தியோகஸ் எப்பிபேனஸ் தன்னை சேனையினுடைய அதிபதி பரியந்தம் உயர்த்தினான். இவனுடைய காலத்தில் ஓனியாஸ் என்பவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு பிரதான ஆசாரியனாயிருந்தான். அந்தியோகஸ் தன்னை பிரதான ஆசாரியனாகிய ஓனியாசைவிட உயர்த்தினான். ஒருவேளை இவன் தன்னை தேவனுக்கு மேலாகவும் உயர்த்தியிருக்கக்கூடும்.
அந்தியோகஸ் தேவாலயத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிப்போட்டான். தேவாலயத்திலே காலையும் மாலையும் ஆடுகளை பலியிடுவது வழக்கம். இது கர்த்தருடைய பிரமாணம். அந்தியோகசோ, தேவாலயத்தில் ஆடுகளை பலியிடுவதையே தடைபண்ணிவிட்டான்.
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது (தானி 8:11). அந்தியோகஸ் தேவாலயத்தை இடித்துப்போடவில்லை. அதை அக்கினியினால் சுட்டெரிக்கவில்லை. கர்த்தருடைய ஆலயமாயிருந்த தேவாலயத்தை, அந்தியோகஸ் ஜுப்பிட்டர் ஒலிம்பசின் ஆலயமாக மாற்றினான். ஜுப்பிட்டரின் சிலையை தேவாலயத்தில் கொண்டு வந்து நிறுவினான். அவன் சத்தியத்தை தரையிலே தள்ளிப்போட்டான். நியாயப்பிரமாண புஸ்தகத்தை கீழே போட்டு, அதை அக்கினியிலே சுட்டெரித்தான்.
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை மாத்திரமே ஆராதிக்கவேண்டும். ஆனால் அவர்களோ கர்த்தரை விட்டு விலகி அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போனார்கள். விக்கிரகங்களுக்கு தூபங்காட்டினார்கள். அவர்களுடைய பாதகங்களினிமித்தமாய் கர்த்தர் அவர்கள்மீது கோபங்கொண்டார். இஸ்ரவேல் வம்சத்தாருக்கு தீங்கு வர கர்த்தர் அனுமதி கொடுத்தார்.
யூதர்களுடைய பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடும்கூட சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது. அவர்களுடைய பாதகங்களினிமித்தம் அவர்களை தண்டிக்கும் பொறுப்பை, கர்த்தர் அந்தியோகசிடம் ஒப்புக்கொடுக்கிறார். சிறையிருப்பிலிருந்து தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்த யூதர்கள், கர்த்தருடைய பரிசுத்தமான காரியங்களைத் தீட்டுப்படுத்துகிறார்கள். தேவாலயத்திலே கர்த்தரை பரிசுத்தமாய் ஆராதனை செய்யவில்லை. கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து தேவாலத்தில் பலிகளை செலுத்தவில்லை. அவர்கள் நசலான ஆடுகளை கர்த்தருக்கு பலியாக செலுத்தினார்கள்.
""என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே. நீங்கள் கண் ஊனமானதைப் ப-யிடக்கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்'' (மல் 1:7,8).
இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமாய், கர்த்தர் அந்தியோகசை யூதர்களுக்கு விரோதமாக அனுப்புகிறார். அவன் தேவாலயத்தில் செலுத்தப்படும் அன்றாட பலியை நீக்கிப்போடுகிறான். கர்த்தருடைய பரிசுத்த ஸ்தானத்தை கீழே தள்ளிப்போடுகிறான்.
தானியேலுக்கு அருகாமையில் பரிசுத்தவான் ஒருவர் இருக்கிறார். அங்கே மேலும் ஒரு பரிசுத்தவானும் இருக்கிறார். தானியேல் பரிசுத்தவானாகிய ஒருவன் பேசுவதைக் கேட்கிறார். அப்பொழுது வேறொரு பரிசுத்தவான், பேசினவரை நோக்கி, ""அன்றாட ப-யைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக் குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும்'' என்று கேட்கிறான் (தானி 8:13).
ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மாத்திரமே உபத்திரவம் இருக்கும். எதுவரைக்கும் உபத்திரவ காலம் இருக்குமென்று எந்தத் தீர்க்கதரிசியாலும் துள்ளியமாய்ச் சொல்லமுடியவில்லை. அந்தப் பரிசுத்தவான் தானியேலிடம், ""இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்'' (தானி 8:14) என்று சொல்லுகிறான்.
2,300 நாட்கள் என்பது ஆறு வருஷமும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாட்களுமாகும். கர்த்தருடைய ஜனத்திற்கு இந்தக் குறிப்பிட்ட காலம் வரையிலும் உபத்திரவம் இருக்கும். அதன் பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்.
பெல்ஷாத்சார் ராஜ்யபாரம் பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனம் தானியேலுக்கு காண்பிக்கப்பட்டது. தானி 7 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தரிசனத்திற்கு இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, இந்தத் தரிசனம் வருகிறது. ஒருசில கேள்விகளுக்குக் கூடுதல் செய்திகள் இந்தத் தரிசனத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தரிசனமும் வெவ்வேறானவை. அதே சமயத்தில் வருங்காலத்தின் சத்தியத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு இவ்விரண்டு தரிசனங்களும் உதவிபுரியும்.
இந்தத் தரிசனம் முதன் முதலில் எபிரெய பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. இத்துடன் அரமாயிக் பாஷையில் எழுதப்பட்டுள்ள பிரிவு நிறைவு பெறுகிறது. (தானி 2:4-7:28) இந்தத் தரிசனத்தின் காலம் பெல்ஷாத்சார் ராஜாவினுடைய ராஜ்யபாரத்தின் இறுதிக் காலமாகும். தானி 5 ஆவது அதிகாரத்தில் சுவரில் எழுதப்பட்ட கையெழுத்தும், இக்காலத்தில்தான் காணப்படுகிறது. பெல்ஷாத்சார் இரண்டு வருஷங்கள் மட்டுமே ஆட்சி புரிந்தான். இதற்குள் பாபிலோனியப் பேரரசு விழுந்திருக்க வேண்டும். (தானி 8:2).
இப்போது தானியேல் சூசான் அரமனையில் இருக்கிறான். சூசான் பெர்சிய தேசத்தின் தலைநகரமாகும். பாபிலோன் பேரரசு இக்காலத்தில் வீழ்ச்சியடையாமல் இருந்திருந்தால் தானியேல் அரசாங்க வேலையாக சூசானுக்குச் சென்றிருந்திருப்பார்.
பாபிலோனுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள பிரதேசம் ஏலாம் என்று எபிரெய பாஷையில் அழைக்கப்படுகிறது. இதில் மேதிய தேசத்து மலைப்பகுதியும், பெர்சிய தேசத்து வளைகுடா பகுதியும் அமைந்துள்ளது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று வடக்கிலுள்ள ஏலாம். மற்றொன்று தெற்கிலுள்ள அன்ஷான். இவ்விரண்டும் பிற்காலத்தில் தனித்தனியே சுதந்தர நாடுகளாக விளங்கிற்று. கி.மு. 600 ஆம் வருஷத்தில் பெர்சியர் இவ்விரண்டு தேசத்தையும் கைப்பற்றினார்கள். கோரேசு ராஜா ""அன்ஷானின் பிரபு'' என்று அழைக்கப்படுகிறான். ஏலாமின் தலைநகரம் சூசான் ஆகும். ஏலாமியர் சேமின் வம்சத்திலிருந்து வந்தவர்கள். (ஆதி 10:22)
ஏலாமிற்கும், பாபிலோனிற்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. அசீரியர் இவ்விரு தேசத்தாருக்கும் பகைஞர்களாக இருந்தார்கள். அசூர்பனிபால் கி.மு. 645 ஆம் வருஷத்தில் ஏலாமையும், பாபிலோனையும் பிடித்தான். சூசானைக் கைப்பற்றினான். ஏலாமியரையும், மேலும் அநேகரையும் சமாரியாவிற்கு நாடு கடத்தினான். (எஸ்றா 4:9; 2இராஜா 17:24).
பிற்காலத்தில் நேபுகாத்நேச்சார் அசீரியப் பேரரசைக் கைப்பற்றினான். அதன் பின்பு, கி.மு. 606 -இல் மேதியர் அசீரியாவைக் கைப்பற்றினார்கள். அதன் பின்பு, அசீரியப் பேரரசு மேதியருக்கும், லீதியருக்கும், பாபிலோனியருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
கி.மு. 553 ஆம் வருஷத்தில் பெர்சிய ராஜாவாகிய கோரேசு மேதிய தேசத்திற்கு எதிராகக் கலகம் பண்ணி, மேதியரின் ராஜாவைப் பிடித்தான். பெர்சியர் லீதியாவையும், பாபிலோனையும், எகிப்தையும் பிடித்தார்கள். கி.மு. 366 ஆம் வருஷத்தில் மகா அலெக்ஸôண்டரின் ஆட்சிக் காலம் வரையிலும் பெர்சியரின் ஆட்சி ஓங்கியிருந்தது.
""இரண்டு கொம்புகள்'' என்பவர்கள் மேதிய தேசத்து ராஜாவாகிய தரியுவும், (தானி 5:31) பெர்சிய தேசத்து ராஜாவாகிய கோரேசும் ஆவார்கள் (2நாளா 36:22-23).
உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று (தானி 8:3). இது பெர்சியனாகிய கோரேசைக் குறிக்கிறது. மேதியனாகிய தரியுவிற்குப் பின்பு கோரேசு மேதியாவிற்கும், பெர்சியாவிற்கும் ராஜாவானான். இவனுடைய ஆட்சியின் கீழும், இவனுக்குப் பின்பும் பெர்சிய தேசம் வலிமை பெற்றது.
ஆட்டுக்கடாவும், வெள்ளாட்டுக்கடாவும் பற்றிய தரிசனம்
1. ஒரு ஆட்டுக்கடா ஊலாய் ஆற்றிற்கு முன்பாக நின்றது.
2. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தது.
3. அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது.
4. ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது.
5. உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று (தானி 8:3).
6. அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்ந்தது.
7. ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருந்தது.
8. அதின் கைக்கு ஒரு மிருகத்தாலும் தப்புவிக்க முடியவில்லை.
9. அது தன் இஷ்டப்படியே செய்தது.
10. வல்லமை கொண்டது. (தானி 8:4).
11. மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா தேசமெங்கும் சென்றது. (தானி 8:5).
12. நிலத்திலே கால் பாவாமல் சென்றது.
13. அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
14. இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக் கடாவினிடமட்டும் அது வந்தது. (தானி 8:6).
15. தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.
16. அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங் கொண்டது. (தானி 8:7)
17. அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது.
18. அதின்முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லை.
19. வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது.
20. அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை (தானி 8:7).
21. வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது (தானி 8:8)
22. அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று.
23. அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது. (தானி 8:8).
24. அவைகளில் ஒன்றி-ருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டது. (தானி 8:9)
25. சின்னக்கொம்பு தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும் சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று. (தானி 8:9).
26. அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்தது. (தானி 8:10)
27. அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணிற்று.
28. அவைகளை மிதித்தது. (தானி 8:10).
29. சின்னக்கொம்பு சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்திற்று. (தானி 8:11)
30. அவரிடத்தி-ருந்து அன்றாட ப-யை நீக்கிற்று.
31. அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. (தானி 8:11).
32. பாதகத்தினிமித்தம் அன்றாட ப-யோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது (தானி 8:12)
33. அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று.
34. அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது. (தானி 8:12).
35. பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரித்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட ப-யைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக் குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான். (தானி 8:13)
36. அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான். (தானி 8:14).
மேதியரும், பெர்சியரும் வடக்கே லீதியாவையும், மேற்கே பாபிலோனையும், தெற்கே எகிப்தையும் கைப்பற்றினார்கள். அவர்களைக் கைப்பற்றிய பின்பு, தங்களுக்கு இஷ்டமானதைச் செய்தார்கள். மிகுந்த வல்லமை பெற்றார்கள் (தானி 8:4).
""மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா'' (தானி 8:5) என்பது கிரேக்கு தேசத்தின் அடையாளமாகும். கிரேக்கு தேசத்தின் முதலாவது ராஜாவாகிய கரானஸ் மக்கெதோனியா தேசத்தில் புதிய வாசஸ்தலங்களைத் தேடிச் சென்றான். தன்னுடைய அரண்மனை ஜோசியரின் ஆலோசனைப் பிரகாரம் ஆட்டுக் கடாக்களைத் தனக்கு வழிகாட்டியாக நியமித்தான். ஆட்டுக்கடா போகுமிடமெல்லாம் ராஜாவும் அதைப் பின்பற்றிச் சென்றான். ஒரு புயல் காற்றிலிருந்து ஆட்டு மந்தை சிதறிப்போவதைப் பார்த்தான். அந்த மந்தையை எடேசா வரையிலும் பின்பற்றிச் சென்றான். அதன் பின்பு, இந்தப் பகுதி அவனுடைய தேசத்தின் தலைநகரமாயிற்று. இந்த இடத்தை கரானஸ் ராஜா ஏகேயா என்று அழைத்தான். இதற்கு ஆட்டுக்கடாவின் பட்டணம் என்று பொருள்.
இங்குள்ள ஜனங்கள் ஏகேடேஎன்று அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு ""ஆட்டுக்கடாவின் ஜனங்கள்'' என்று பெயர். ஏகேயா என்னும் வார்த்தை ""ஐகியோஸ்'' என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இதற்கு வெள்ளாட்டுக்கடா என்று பொருள். இவனுடைய கொடியில் வெள்ளாட்டுக்கடாவின் சின்னம் இருக்கும். மக்கெதோனியா ராஜாக்களை அடக்கம் பண்ணும் ஸ்தலமாக ஏகேயா விளங்கிற்று. அலெக்ஸôண்டர் தன்னுடைய மகனை ரோக்ஷானா அலெக்ஸôண்டர் ஏகஸ் என்று அழைத்தான். இதற்கு ""வெள்ளாட்டுக்கடாவாகிய அலெக்ஸôண்டர்'' என்று பொருள்.
""தேசத்தின்மீதெங்கும்'' (தானி 8:5) என்பது முழு தேசத்தையும் குறிக்கவில்லை. இந்தத் தரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் தேசங்களை மட்டுமே இந்த வாக்கியம் குறிப்பிடுகிறது. அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யம் பூமி முழுவதிலும் விஸ்தாரமாக இல்லை. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டும் அந்திக்கிறிஸ்து ஆளுகை செய்வான்.
""நிலத்திலே கால் பாவாமல்'' (தானி 8:5) என்னும் வாக்கியத்திற்கு ஏகமாக படையெடுத்து வருவது என்று பொருள். அலெக்ஸôண்டர் விரைவாகப் படையெடுத்து, வெற்றி பெறக்கூடியவன். (தானி 8:5-6). 13 வருஷக்காலத்தில் உலகத்தின் பெரும்பகுதியை அலெக்ஸôண்டர் ஜெயித்து கைப்பற்றினான்.
""கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு'' (தானி 8:5) என்னும் இந்த வாக்கியம் முதலாம் ராஜாவாகிய மகா அலெக்ஸôண்டரைக் குறிக்கிறது. (தானி 8:21).
கிரேக்கர்கள் மேதிய-பெர்சிய தேசத்தார்மீது கடுங்கோபமாக இருக்கிறார்கள். 144 வருஷங்களுக்கு முன்பு கோரேசு ராஜா கிரேக்கர்மீது படையெடுத்து வந்தான். இதனால் இவ்விரண்டு தேசங்களுக்கும் இடையில் பகை உணர்வு மாறாமல் அதிகரித்து வந்தது.
""அந்தப் பெரிய கொம்பு முறிந்து போயிற்று'' (தானி 8:8) மகா அலெக்ஸôண்டர் தன்னுடைய 33 ஆவது வயதில் மரித்தான்.
""ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது'' (தானி 8:8) அலெக்ஸôண்டரின் ராஜ்யத்திலிருந்து நான்கு ராஜ்யங்கள் உருவாயிற்று. அவை தற்காலத்தில் கிரேக்கு, துருக்கி, சீரியா, எகிப்து என அழைக்கப்படுகிறது.
""அவைகளில் ஒன்றி-ருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டது'' (தானி 8:9). கிரேக்கப் பேரரசு நான்கு பிரிவாகப் பிரிந்தது. இந்தப் பிரிவில் ஒன்றிலிருந்து சின்னக்கொம்பாகிய அந்திக் கிறிஸ்து புறப்பட்டு வருவான். இவன் எகிப்து, பாலஸ்தீனம் போன்ற தேசங்களில் பெரியவனாக இருப்பான். (தானி 11:40-45).
""சிங்காரமான தேசம்'' (தானி 8:9) என்பது பாலஸ்தீன தேசத்தைக் குறிக்கும் (தானி 11:16,41; எசே 20:6,15; சங் 106:24; எரே 3:19; சக 7:14).
பூமியிலுள்ள சேனைகளுக்கும், வானத்திலுள்ள சேனைகளுக்கும் சேனை என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எபிரெய வார்த்தை ""ட்சாபா'' என்பதாகும். சந்திரன், சூரியன், நட்சந்திரங்கள் ஆகியவற்றிற்கும் தேவதூதருக்கும், பிரதான ஆசாரியருக்கும், ஆசாரியருக்கும், லேவியருக்கும் (தானி 8:24-25; தானி 12:7) ""வானத்தின் சேனை'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவாலயத்தின் ஊழியக்காரர்களும் வானத்தின் சேனை என்று அழைக்கப்படுகிறார்கள். (எண் 4:23-43; எண் 8:24-25).
கர்த்தரை ஆராதிக்கிறவர்களும் ""சேனை'' என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (வெளி 11:1-2). வானத்தின் நட்சத்திரங்களுக்கும் அவர்கள் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். வானத்தின் நட்சத்திரங்களில் சில கீழே விழும் என்பது வானத்திலுள்ள நட்சத்திரங்களைக் குறிக்க வில்லை. அது பூமியிலுள்ள யூத ஜனத்தாரைக் குறிக்கிறது. (தானி 8:10,13).
""சேனையினுடைய அதிபதி'' (தானி 8:11) என்னும் வாக்கியம் பிரதான ஆசாரியரைக் குறிக்கிறது.
சின்னக்கொம்பு அல்லது அந்திக் கிறிஸ்து அன்றாட பலியை நீக்குவான் அவருடைய பரிசுத்த ஸ்தலமும் கீழே தள்ளப்படும். (2தெச 2:4; வெளி 11:1-2). தேவாலயத்தில் பலிகள் செலுத்தப்பட்ட பலிபீடம் அழிக்கப்பட்டு அகற்றப்படும். அந்த இடத்தில் மிருகத்தின் சொரூபம் ஸ்தாபிக்கப்படும். ஜனங்கள் அதை ஆராதிப்பார்கள்.
ஜனங்களுடைய பாதகம் அதிகமாக இருக்கும். ஆகையினால் அன்றாட பலிக்கு எதிராகத் திரளான ஜனங்கள் திரண்டு வருவார்கள்.
சின்னக்கொம்பு சத்தியத்தைத் தரையில் தள்ளிப்போடும். சிறிது காலத்திற்கு அது தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றும் (தானி 8:12).
தரிசனத்தின் விபரம்
1. அன்றாட பலி நீக்கப்பட்டிருக்கிறது. (தானி 8:11-14)
2. அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளப்படும். (தானி 8:11; தானி 9:27)
3. பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகம். (தானி 8:13; தானி 9:27; தானி 11:45)
4. சேனை அதன் பாதபடியில் மிதிக்கப்படும். (தானி 8:13; தானி 8:10)
""அன்றாட பலி'' (தானி 8:11) என்னும் வாக்கியம் யூதருடைய தேவாலயத்தில் செலுத்தப்படும் அன்றாட பலிகளையும், மிருகங்களின் பலிகளையும் குறிக்கிறது. இந்த வாக்கியம் நிறைவேறுவதற்கு எருசலேமில் யூதருக்கு ஓர் ஆலயம் கட்டப்பட்டு, அதில் அவர்கள் மறுபடியும் பலிகளைச் செலுத்த வேண்டும். ஆகையினால் இது கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. வருங்காலத்தில் நடைபெறப்போகும் சம்பவமாகும்.
""பரிசுத்த ஸ்தலம்'' (தானி 8:13) என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை ""கோடேஷ்'' என்பதாகும். வேதாகமத்தில் தேவாலயத்தைக் குறிப்பதற்கு ""மிக்டாஷ்'' என்னும் எபிரெய வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாழ்க்கடிப்பின் தரிசனம் இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் இருக்கும்(தானி 8:14). தானி 8:13 ஆவது வசனத்தில் ""அன்றாட ப-யைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக் குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும்'' என்னும் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு ""இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்'' என்னும் பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்திற்கு வேதபண்டிதர்கள் பலவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள்.
2,300 இராப்பகல் என்பது 1,150 மாலைப் பலிகளையும், 1,150 காலைப் பலிகளையும் குறிக்கும். (தானி 8:26) இந்தக் காலம் 3 வருஷங்கள், 2 மாதங்கள், 10 நாட்களாகும். இதன் பின்பு, பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும். (தானி 8:14).
வெளி 11:1-3 ஆகிய வசனங்களில் ""பரிசுத்த நகரத்தை புறஜாதியார்கள் 42 மாதமளவும் மிதிப்பார்கள்'' என்று கூறப்பட்டிருக்கிறது. 42 மாதங்கள் என்பது 1260 நாட்களாகும். தானியேலின் தரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் 2,300 இராப்பகல் அதாவது 1150 நாட்களுக்கும், வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கும் 1260 நாட்களுக்கும் இடையிலுள்ள காலம் 110 நாட்களாகும். இக்காலத்தில் இரண்டு சாட்சிகளும் இங்கு இருப்பார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்திற்கு ஓடிப்போவார்கள். (வெளி 12:6,14) அந்திக்கிறிஸ்துவிற்கு தேசங்களின்மீது அதிகாரம் கொடுக்கப்படும். (வெளி 13:5; தானி 7:25; தானி 9:27). இந்தச் சம்பவம் மத் 24:22 ஆவது வசனத்தில் ""தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்'' என்று எழுதப் பட்டிருக்கும் சம்பவத்தை விளக்குகிறது. 110 நாட்களுக்கு இந்தக் காலம் குறைக்கப்படும்.
இக்காலத்தில் இரண்டு சாட்சிகளின் உதவியினாலும், மற்ற உபாயங்களினாலும் யூதர்கள் மறுபடியும் தங்களுடைய தேவாலயத்தையும் எருசலேமையும் வசமாக்குவார்கள். அந்திக் கிறிஸ்து வடதிசையிலிருந்து அர்மெகதோனில் யுத்தம் பண்ண வரும்போது எருசலேம் யூதருடைய வசமாக இருக்கும். (சக 14:1-5).
தானியேல் கூறிய காலங்கள்
இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் சென்ற பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும். அதாவது 3 வருஷங்கள், 2 மாதங்கள், 10 நாட்களுக்குப்பின்பு (தானி 8:11-13,26) பரிசுத்த ஸ்தலத்திலுள்ள பாழாக்குகிற அருவருப்பு சுத்திகரிக்கப்படும். பரிசுத்த ஸ்தலத்தில் 1260 நாட்களுக்கும் பாழாக்குகிற அருவருப்பு இருக்குமென்று எந்த வேதவசனமும் கூறவில்லை. ஆகையினால் தானி 8:14 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிற பிரகாரம் பரிசுத்த ஸ்தலத்தை 2300 இராப்பகல் காலம் வரைக்கும் அதாவது 1150 நாட்கள் வரைக்கும் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அன்றாடபலி நீக்கப் பட்டிருக்கும். இந்த 1150 நாட்களுடன் 110 நாட்களைச் சேர்க்கும்போது 1260 நாட்கள் ஆகும். இது இக்காலத்தின் மொத்த அளவாகும்.
தானியேலின் தரிசனத்தில் காணப்பட்ட கால அளவுகள்
1. உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் மீது யுத்தமும், காலங்களையும், பிரமாணங்களையும் மாற்றும் அதிகாரமும் அந்திக்கிறிஸ்துவிற்கு மூன்றரை வருஷங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். (தானி 7:25).
2. பரிசுத்த ஸ்தலத்தில் அன்றாட பலி நீக்கப்படுவதும், பரிசுத்த ஸ்தலத்தில் பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகமும், 1150 நாட்களுக்கு இருக்கும். (தானி 8:14).
3. வாரத்தின் (7 வருஷங்கள்) பாதியில் அந்திக்கிறிஸ்து பலியையும், காணிக்கையையும் ஒழியப் பண்ணுவான். (தானி 9:27). தானியேலின் எழுபதாவது வாரத்தின் மத்தியில் அல்லது 1260 நாட்களின் ஆரம்பத்தில் பலிகள் ஒழிக்கப்படும்.
4. நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும். (தானி 9:27). அந்திக்கிறிஸ்து பரிசுத்த ஸ்தலத்தைப் பாழாக்குவான். இதற்காக இவன்மீது நியாயத்தீர்ப்பு வரும். அந்தத் தீர்ப்பு 1260 நாட்களுக்கு 110 நாட்கள் முன்பாகவே நிறைவேறும்.
5. மூன்றரை வருஷங்களின் முடிவில் அல்லது 1260 நாட்களின் முடிவில் இவை களெல்லாம் நிறைவேறித் தீரும். (தானி 12:7) ஆயினும், பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படுவது 110 நாட்களுக்கு முன்பு நடைபெறும். (தானி 8:14).
6. அன்றாடப- நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாட்களும் (தானி 12:11), 1335 நாட்களும் செல்லும். (தானி 12:12) இது 1260 நாட்களுக்கு 30 நாட்களும், 75 நாட்களும் கூடுதலாகும். (தானி 12:7-13). பரிசுத்த ஸ்தலத்தில் அன்றாட பலிகள் 1260 நாட்கள், 1290 நாட்கள் ஆகியவற்றின் காலத்தில் ஆரம்பத்தில் அகற்றப்படும்.
7. ""பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லி யிருக்கிறானே''. (மத் 24:15; தானி 8:14; தானி 9:27; தானி 12:7-11) நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக் கடவர்கள் (மத் 24:16-21). அவர்கள் 1260 நாட்களுக்கு ஓடிப் போவார்கள். (வெளி 12:6,14). 1260 நாட்களுடைய காலத்தின் ஆரம்பத்தில் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பலிகள் நிறுத்தப்படும். இக்காலத்தின் முடிவில் 1150 நாட்களுக்குப் பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும். (தானி 8:14).
8. ஆலயம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்படும். அவர்கள் பரிசுத்த நகரத்தை 42 மாதமளவும் மிதிப்பார்கள். (வெளி 11:1-2). இந்த 42 மாதக்காலத்தில் ஆலயம் எவ்வளவு காலத்திற்கு அருவருப்பாக இருக்கும் என்று கூறப்பட வில்லை. தானி 8:13-14 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிற பிரகாரம் பரிசுத்த ஸ்தலத்தில் 2300 இராப்பகலுக்கு அதாவது 1150 நாட்களுக்கு பாழாக்குகிற அருவருப்பு இருக்கும். 42 மாத காலங்களுக்கு எருசலேம் நகரத்தில் புறஜாதியாரின் ஆளுகை இருக்கும். இந்தக் காலத்திற்கு 110 நாட்களுக்கு முன்பாகவே யூதர்கள் இரண்டு சாட்சிகளின் உதவியோடு (வெளி 11) எருசலேமின் ஆளுகையைத் திரும்பக் கைப்பற்றுவார்கள்.
சக 14:1-5,14 ஆகிய வசனங்களின் பிரகாரம் 42 மாதங்களின் இறுதியில் யூதர்கள் எருசலேம் நகரத்திற்குத் திரும்பி வருவார்கள். இக்காலத்தில் அந்திக் கிறிஸ்து வடக்கு தேசங்களின்மீது 42 மாதங்களுக்கு யுத்தம் பண்ணிக் கொண்டிருப்பான். (தானி 11:44). இந்த யுத்தத்தில் பூமியிலுள்ள எல்லாத் தேசத்தாரின் சேனையும் அந்திக் கிறிஸ்துவிற்குத் தேவைப்படும். இதற்காக எருசலேமிலும், பாலஸ்தீனத்திலுமுள்ள புறஜாதியாரின் சேனையை அங்கிருந்து கூட்டிச் சென்று, தன்னுடைய யுத்தத்தில் பயன்படுத்துவான். இதனால் பாலஸ்தீன தேசத்தில் அந்திக்கிறிஸ்துவின் அதிகாரம் குறையும். இந்தச் சூழ்நிலையில் யூதர்கள் எருசலேமைத் திரும்பவும் கைப்பற்றுவார்கள்.
அந்திக்கிறிஸ்து கிழக்கிலும், வடக்கிலும் உள்ள தேசங்களைக் கைப்பற்றும்போது யூதர்கள் எருசலேமிற்கு வந்து விடுவார்கள். எருசலேமை மறுபடியும் கைப்பற்றுவதற்காகவும்,, யூதர்களை அழிப்பதற்காகவும், அந்திக்கிறிஸ்து தன்னுடைய திரளான சேனையைத் திரட்டிக் கொண்டு, எருசலேமின்மீது யுத்தம் பண்ண வருவான். எருசலேமின் பாதிப்பகுதியை அந்திக்கிறிஸ்து மறுபடியும் பிடித்துக் கொள்வான். அப்போது இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடு வானத்திலிருந்து இறங்கி வருவார். அர்மெகதோனில் நடைபெறும் யுத்தத்தில் புறஜாதியாரின் சேனையோடு இயேசு கிறிஸ்துவும், அவருடைய பரிசுத்தவான்களும் யுத்தம்பண்ணி, எருசலேமையும், யூதர்களையும் மீட்டுக்கொள்வார்கள். (சக 14:1-5,14; யோவே 3; வெளி 19:11-21). இந்தச் சம்பவம் 1260 நாட்கள் காலத்தில் 110 நாட்கள் குறைவு படுவதை விளக்குகிறது. (தானி 8:13-14).
9. இரண்டு சாட்சிகளும் இஸ்ரவேலைப் பாதுகாப்பதற்காகவும், தேவனிடத்தில் அவர்களை ஆதாயப்படுத்துவதற்காகவும் 1260 நாட்களாக தீர்க்கதரிசனம் உரைத்து அற்புதங்களைச் செய்வார்கள். (வெளி 11:3-11). இவர்களுடைய உதவியுடன் யூதர்கள் 1260 நாட்களுடைய காலத்தின் கடைசி 110 நாட்களில் எருசலேமை மறுபடியும் கைப்பற்றுவார்கள். எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்து, வழிநடத்தியபோது, மோசேயும், ஆரோனும் அவர்களுக்குத் தலைவர்களாக இருந்ததுபோல இவ்விரண்டு சாட்சிகளும் இஸ்ரவேல் புத்திரருக்கு இக்காலத்தில் தலைவர்களாக இருப்பார்கள். (எசே 20:33-38; மல் 4:5-6; வெளி 11).
10. இஸ்ரவேல் தேசத்தார் 1260 நாட்களுக்கு வனாந்தரத்திற்கு ஓடிப்போவார்கள். (வெளி 12:6). ஆயினும் இக்காலத்தில் தேவனுடைய கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி உடையவர்களும் வனாந்தரத்திற்கு ஓடிப் போகாமல் தேசத்தில் இருப்பார்கள். இவர்கள் ஸ்திரீயின் மீதியானவர்கள். (வெளி 12:17) அந்திக்கிறிஸ்து கிழக்கிலும், வடக்கிலும் யுத்தம் பண்ணிக் கொண்டிருக்கும்போது இக்காலத்தின் கடைசி 110 நாட்களில் வனாந்தரத்திற்குப் போன யூதர்கள் எருசலேமிற்குத் திரும்பவும் வருவார்கள். (தானி 11:44).
11. யூதர்கள் யூதேயாவிலிருந்து வனாந்தரத்திற்கு ஓடிப்போவது ஒரு காலமும் (ஒரு வருஷம்), காலங்களும் (2 வருஷங்கள்), அரைக்காலமும் (6 மாதங்கள்) இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. (தானி 7:25) இக்காலத்தில் யூதர்களுக்கு வனாந்தரத்திலுள்ள அரபியர்கள் உதவி புரிவார்கள். (வெளி 12:14). அந்திக் கிறிஸ்து வடதிசையிலிருந்து எருசலேமிற்கு எதிராக வந்து (எசே 38-39) எருசலேமை மறுபடியும் பிடித்துக் கொள்ள வரும்போது (சக 14:14), அவனுக்கு எதிராக யுத்தம் பண்ணுவதற்கு யூதா தேசத்தாரிடம் எருசலேமில் ஒரு சேனை இருக்கும்.
12. அந்திக்கிறிஸ்துவிற்கு தேசங்களின்மீது 42 மாதங்கள் அதிகாரம் கொடுக்கப்படும். (வெளி 13:5). வெளிப்படுத்தின விசேஷத்திலும், தானியேலின் தீர்க்க தரிசனத்திலும் கடைசி காலத்தில் நடைபெறப்போகும் மூன்றரை வருஷத்தைப் பற்றி அதாவது 1260 நாட்கள் அல்லது 42 மாதங்களைப் பற்றி தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தானி 8:13-14 ஆகிய வசனங்களில் இக்காலம் மூன்று வருஷங்கள், 2 மாதங்கள், 10 நாட்கள் என்று 1260 நாள் காலத்திலிருந்து 110 நாட்கள் குறைவாகக் கூறப்பட்டிருக்கிறது. 1260 நாட்களுடைய காலத்தின் முடிவுக்கு 110 நாட்களுக்கு முன்பாகவே தேவாலயம் சுத்திகரிக்கப்படும்.
தரிசனத்தின் வியாக்கியானம் தானி 8:15-27
தானி 8:15. தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான்.
தானி 8:16. அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.
தானி 8:17. அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.
தானி 8:18. அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக் கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:
தானி 8:19. இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவு காலத்துக்கு அடுத்தது.
தானி 8:20. நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்;
தானி 8:21. ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;
தானி 8:22. அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.
தானி 8:23. அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான்.
தானி 8:24. அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக் கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
தானி 8:25. அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர் விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்.
தானி 8:26. சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்து வை; அதற்கு இன்னும் அநேக நாள் செல்லும் என்றான்.
தானி 8:27. தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
தானியேல் தரிசனத்தைக் கண்டு அதின் பொருளை அறிய வகை தேடுகிறார். அப்பொழுது மனுஷசாயலான ஒருவன் தானியேலுக்கு எதிரே நிற்கிறான். இந்த மனுஷன் யார் என்பது தெரியவில்லை. இவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்று ஒரு சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள்.
மனுஷசாயலான அவன் காபிரியேலிடம் பேசுகிறான். தானியேலுக்கு தரிசனத்தை விளங்கப்பண்ணுமாறு அவன் காபிரியேலிடம் சொல்லுகிறான். இந்த சத்தம் ஊலாயின் மத்தியிலே சொல்லப்படுகிறது.
அப்பொழுது காபிரியேல், தானியேல் நின்ற இடத்துக்கு வருகிறார்; அவர் வருகையில் தானியேல் திடுக்கிட்டு முகங்குப்புற விழுகிறார்; காபிரியேல் தானியேலை நோக்கி ""மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது'' என்று சொல்லுகிறார். காபிரியேல் தானியேலோடே பேசுகையில், தானியேல் தரையில் முகங்குப்புறக் கிடந்து, அயர்ந்த நித்திரைகொள்கிறார்; அவரோ தானியேலைத் தொட்டு, தானியேல் காலூன்றி நிற்கும்படி செய்கிறார் (தானி 8:17,18).
காபிரியேல் தானியேலைத்தொட்டு பலப்படுத்துகிறார். ""மனுபுத்திரனே கவனி'' என்றும் அவர் தானியேலிடம் சொல்லுகிறார். தரிசனங்களைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் தானியேல் கவனிக்கவேண்டும். சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கு நம்முடைய மனதை சத்தியத்திற்கு நேராகத் திருப்பவேண்டும். தானியேல் கண்ட தரிசனம் முடிவு காலத்திற்கு அடுத்தது என்று காபிரியேல் தெளிவுபடுத்துகிறார்.
""இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவு காலத்துக்கு அடுத்தது'' (தானி 8:19) என்று காபிரியேல் சொல்லுகிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இப்போது உபத்திரவங்கள் இருக்கலாம். நாம் பாடுகளை அனுபவிக்கலாம். நம்முடைய உபத்திரவங்களுக்கு முடிவு உண்டு. நாம் அனுபவிக்கிற வேதனைகளுக்கும் முடிவு உண்டு. இது விசுவாசிகளாகிய நமக்கு ஒரு ஆறுதலான செய்தி. கோபம் தீர்ந்துபோகும். சினம் கடந்துபோகும். இதன் விளைவாக நன்மை உண்டாகும்.
""ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'' (ஏசா 10:25).
""என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்'' (ஏசா 26:20).
காபிரியேல் தானியேலிடம் தரிசனத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""இந்த தரிசனம் முடிவு காலத்திற்கு அடுத்தது'' (தானி 8:17) என்று சொல்லுகிறார். கோபம் முடியும்போது, இந்த தரிசனம் முழுமையாய் வெளிப்படுத்தப்படும். இதன் அர்த்தம் தெளிவாகப் புரியும்.
தானியேல் கண்ட தரிசனத்திற்கு காபிரியேல் விளக்கம் சொல்லுகிறார்.
""நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது (தானி 8:20-22).
ஆட்டுக்கடா என்பது மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்களைக் குறிக்கிறது. ரோமமுள்ள வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜாவைக் குறிக்கிறது. கிரேக்கு தேசத்தின் முதலாவது ராஜா மகாஅலெக்சாந்தர். பெரிய கொம்பு என்பது மகாஅலெக்சாந்தரைக் குறிக்கிறது. பெரிய கொம்பு முறிந்துபோகும். அதற்கு பதிலாக நாலு கொம்புகள் எழும்பும். நாலு கொம்புகள் நாலு ராஜ்யங்களாகும் (தானி 8:8).
கிரேக்க பேரரசு நான்கு ராஜ்யங்களாகப் பிரிகிறது. அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்தில், பாதகருடைய பாதகம் நிறைவேறும். அப்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக் கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான் (தானி 8:23,24).
எகிப்தின் அதிபதிகளால் அந்தியோகசுக்கு விரோதமாக எதிர்த்து நிற்கமுடியாது. அந்தியோகஸ் பரிசுத்த ஜனங்களை அழிப்பான். அவர்களுடைய பரிசுத்தம் இவனைப் பாதிக்காது.
அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணுவான், தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்துப்போடுவான். அவன் அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான் (தானி 8:25).
அந்தியோகஸ் பல ராஜாக்களோடு சமாதான உடன்படிக்கை பண்ணுவான். ஆனால் தன் உடன்படிக்கைக்கு அவன் உண்மையுள்ளவனாயிருக்கமாட்டான். அவர்களுக்கு வஞ்சகம் செய்து அவர்களை அழித்துப்போடுவான். மற்றவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி அவர்களையும் அழித்துவிடுவான். இவன் யுத்தம்பண்ணி அழித்ததைவிட, சமாதான உடன்படிக்கை பண்ணி, அவர்களை வஞ்சித்து அழித்தது மிகவும் அதிகம்.
அந்தியோகஸ் தன் இருதயத்தில் பெருமை கொள்வான். அவன் அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான். ""அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவர்'' என்னும் வாக்கியம் கர்த்தரைக் குறிக்கிறது. எப்பிபேனஸ் கர்த்தருடைய ஆலயத்தையும், அவருடைய பலிபீடத்தையும் தீட்டுப்படுத்துவான். கர்த்தரை ஆராதிக்கிற பரிசுத்தவான்களைக் கொடுமைப்படுத்துவான்.
முடிவிலே எப்பிபேனசுக்கு அழிவு உண்டாகும். அவன் கையினால் அல்ல. வேறு விதமாய் முறித்துப்போடப்படுவான் என்று காபிரியேல் சொல்லுகிறார். எப்பிபேனஸ் யுத்தத்திலே, பட்டயத்தினால் சாகமாட்டான். இவனை எந்த மனுஷனும் கொல்லமாட்டார்கள். இவன் ஜீவனுள்ள தேவனுடைய கையிலே விழுவான். கர்த்தர் அவனை சங்காரம்பண்ணுவார். மனுஷனுடைய கையினால் அல்ல. அவன் தேவனுடைய சாபத்தினால் சாவான்.
அந்தியோகஸ் எப்பிபேனஸ், யூதருடைய தேவாலயத்திலே ஜுப்பிட்டர் ஒலிம்பசுடைய சிலையைக் கொண்டு வந்து வைத்தான். யூதர்கள் அந்த சிலையை அப்புறப்படுத்திவிட்டார்கள். எப்பிபேனஸ் இந்தச் செய்தியை கேள்விப்பட்டு, யூதர்கள்மீது மிகவும் கோபப்பட்டான். எருசலேமைப் பிடித்து, அங்குள்ள யூதர்களைக் கொன்று, அவர்களை புதைக்கும் இடமாக எருசலேமை மாற்றவேண்டுமென்று அவன் தீர்மானம்பண்ணினான். இவன் மூர்க்கமுகமும், சூதான பேச்சுமுள்ளவன்.
இவன் சாமர்த்தியவான். ஆனாலும் இவனால் கர்த்தருக்கு விரோதமாய் எதிர்த்து நின்று யுத்தம்பண்ண முடியவில்லை. கர்த்தர் இவனை கொடிய வியாதியினால் வாதித்தார். இவனுக்கு உடனே மரணம் வரவில்லை. பல வருஷங்களாக வியாதியின் வேதனையை அனுபவித்தான்.
அந்தியோகஸ் எப்பிபேனசுக்கு வியாதி வந்தபோது, அவன் கர்த்தரைப்பற்றி நினைக்கவில்லை. யூதர்களைத் துன்பப்படுத்தவேண்டும் என்று தீர்மானமாயிருந்தான். அதன் பின்பு புத்தி தெளிந்தது. தான் யூதர்களைத் துன்பப்படுத்துவதும், தேவாலயத்தைத் தீட்டுப்படுத்துவதும், தன்னுடைய வியாதிக்கும் வேதனைக்கும் காரணம் என்பதை அவன் புரிந்துகொண்டான்.
அந்தியோகஸ் எப்பிபேனசுக்கு வியாதி முற்றியபோது, அவனுக்குள் மனமாற்றமுண்டாயிற்று. அவன் யூதர்களுக்கு அன்பான நிருபம் ஒன்று எழுதினான். தான் வியாதி நீங்கி குணப்பட்டால், யூதர்கள் எப்போதும் போல, எருசலேமிலுள்ள தேவாலயத்தில் கர்த்தரை ஆராதிப்பதற்கு, தான் அனுமதி கொடுக்கப்போவதாக சொன்னான். ஆனால் அவனுடைய வியாதி முற்றிப்போயிற்று. மனுஷனால் தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று யுத்தம்பண்ண முடியாது. அந்தியோகஸ் எப்பிபேனஸ் அந்நிய தேசத்திலே பரிதாபமாக மரித்துப்போனான். பாபிலோனுக்கு அருகாமையிலுள்ள, பாகாத்தா என்னும் பர்வதங்களில் அவனுடைய பிரேதம் கிடந்தது.
தானியேல் கண்ட தரிசனத்திற்கு காபிரியேல் விளக்கம் சொல்லுகிறார். அந்த விளக்கத்தை சொல்லி முடித்த பின்பு, ""சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்து வை; அதற்கு இன்னும் அநேக நாள் செல்லும்'' (தானி 8:26) என்று சொல்லுகிறார்.
தானியேல் தான் கண்ட தரிசனத்தை மறைத்து வைக்கவேண்டும். இவை உடனே நிறைவேறாது. இவை நிறைவேறுவதற்கு இன்னும் அநேக நாள் செல்லும். தானியேலுக்கு பின்வரும் சந்ததியார், அவர் கண்ட தரிசனங்களை அறிந்துகொள்ளவேண்டும். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாகவே ஒவ்வொரு காரியமும் நடைபெறுகிறது என்பதை இஸ்ரவேல் வம்சத்தார் புரிந்துகொள்ளவேண்டும்.
தானியேல் இந்த தரிசனத்தை கண்ட பின்பு, சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தார்; பின்பு அவர் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்தார். அந்தத் தரிசனத்தினால் அவர் திகைத்துக்கொண்டிருந்தார்; ஒருவரும் அதை அறியவில்லை (தானி 8:27).
தானியேல் தரிசனத்தைக் கண்டு, அதன் பொருள் தெரியாமல் திகைத்து நிற்கிறார். அப்போது அதன் வியாக்கியானத்தைத் தானியேலுக்குக் கூறுவதற்காகக் காபிரியேல் என்னும் தூதன் அனுப்பப்பட்டிருக்கிறார் (தானி 8:15).
மனுஷசாயலான ஒருவன் தானியேலுக்கு எதிரே நிற்கிறான் (தானி 8:15) தேவதூதர்கள் மனுஷசாயலாக இருக்கிறார்கள். தேவனும் மனுஷசாயலாக இருக்கிறார். (எசே 1:26-27) ஏனெனில் தேவன் தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின் பிரகாரமாகவும் மனுஷனைச் சிருஷ்டித்தார். (ஆதி 1:26-28; ஆதி 9:6; யாக் 3:9).
தேவனுடைய தூதர்களின் அதிபதிகளில் காபிரியேல் பிரதானமானவன். (தானி 9:21; லூக்கா 1:19,26). ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தை தானியேல் கேட்கிறார் (தானி 8:15) இது ஒரு விநோதமான இடம். இங்கு கேட்கப்படும் சத்தம் மனுஷனுடைய சத்தத்தைப்போல இருக்கிறது.
பரலோகத்தில் ஏனோக்கு, எலியா ஆகிய இரண்டு மனுஷர்கள் இருக்கிறார்கள். தேவன் ஒருவேளை இந்தச் சம்பவத்தைப் பேசுவதற்கு இவ்விருவரையும் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தேவனோ அல்லது ஒரு தேவதூதனோ இந்த நிகழ்ச்சியைப் பேசியிருக்கலாம். யோவானுக்குத் தம்முடைய வெளிப்பாட்டை அறிவிப்பதற்குத் தேவன் இரட்சிக்கப்பட்ட ஒரு மனுஷனைப் பயன்படுத்தினார். (வெளி 19:10; வெளி 22:8-9) தானியேலுக்கும், தேவன் இதுபோல ஒரு மனுஷர் மூலமாக செய்தியை அறிவித்திருக்கலாம்.
தானியேல் திடுக்கிட்டு முகங்குப்புற விழுகிறார் - தெய்வீக பிரசன்னத்தினாலும், தேவதூதரைக் காண்பதினாலும் மனுஷருக்கு இதுபோன்ற அனுபவம் உண்டாகிறது. (தானி 8:17-18)
இந்தத் தீர்க்கதரிசனத்தின் பெரும்பகுதி நாம் வாழும் காலத்தின் முடிவிலும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதும் அவருடைய நித்திய ஆளுகையின்போதும் நிறைவேறும். (தானி 8:19, 23-26).
அயர்ந்த நித்திரை கொண்டவர்கள்
1. ஆதாம் (ஆதி 2:21)
2. ஆபிரகாம் (ஆதி 15:12)
3. சவுலும், அவனுடைய சேனைகளும் (1சாமு 26:12)
4. இஸ்ரவேலர் (ஏசா 29:10)
5. தானியேல் (தானி 8:18; தானி 10:9)
6. ஐத்திகு (அப் 20:9)
இக்காலத்தின் முடிவில், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, இந்தத் தரிசனம் நிறைவேறும் காலம் குறிக்கப்பட்டிருக்கிறது. முடிவு காலம் தானி 8:25 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்போது சின்னக்கொம்பு அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிற இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாக எழும்புவான்.
தேவனுடைய கோபத்தின் முடிவுகாலம்
இக்காலத்தில் நடைபெறும் சம்பவங்கள்.
1. அந்திக்கிறிஸ்துவினுடைய யுத்தங்கள். (தானி 8:9; தானி 7:23-24; தானி 9:24; தானி 11:36-45; வெளி 19)
2. கர்த்தருடைய பரிசுத்தவான்களை அந்திக்கிறிஸ்து கொன்றுபோடுவது. (தானி 8:10-14,24; தானி 7:21; தானி 9:27; தானி 11:36-45; வெளி 13:11-18)
3. யூதருடைய வருங்கால பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அந்திக்கிறிஸ்து அன்றாட பலிகளை அகற்றிப்போடுவது. (தானி 8:11-14; தானி 9:27; தானி 12:7-11; மத் 24:15; வெளி 13)
4. பரிசுத்த ஸ்தலத்தில் பாழாக்குகிற அருவருப்பை அந்திக்கிறிஸ்து வைப்பது. (தானி 8:11-14; தானி 9:27; தானி 11:45; 2தெச 2:4; வெளி 11:1-2; வெளி 13)
5. பரிசுத்த ஸ்தலத்தையும், பலிபீடத்தையும் அந்திக்கிறிஸ்து தள்ளிப்போடுவது. (தானி 8:11-13)
6. தேவனுக்கு எதிராக அந்திக்கிறிஸ்து பலரைக் கலகம் பண்ண வைப்பது. (தானி 8:12; வெளி 13:11-18; வெளி 16:2, 10-11)
7. மனுஷர் மத்தியிலே அந்திக்கிறிஸ்துவின் பாவங்கள் அதிகரிப்பது. (தானி 8:12,23; 2தெச 2:8-12; வெளி 13; வெளி 16:10-11)
8. அந்திக்கிறிஸ்து சத்தியத்தைத் தரையிலே தள்ளுவது. (தானி 8:12; தானி 7:25; 2தெச 2:4,8-12)
9. சேனையை அந்திக்கிறிஸ்து தன் கால்களில் மிதிப்பது. (தானி 8:13,24-25; தானி 7:21; தானி 9:27; தானி 11:40-45; வெளி 13)
10. தேவனுக்கும், மனுஷனுக்கும் விரோதமாக அந்திக்கிறிஸ்து மூர்க்க முகமாக இருப்பது. (தானி 8:23; வெளி 13)
11. அந்திக்கிறிஸ்து தன்னைப் பிசாசுக்கு ஒப்புக்கொடுப்பது. (தானி 8:24; தானி 11:36-39; 2தெச 2:8-12; வெளி 13)
12. அந்திக்கிறிஸ்து பலவான்களையும், பரிசுத்த ஜனங்களையும் அழிப்பது. (தானி 8:24; தானி 11:36-46; வெளி 13)
13. அந்திக்கிறிஸ்துவின் வஞ்சனை. (தானி 8:25; 2தெச 2:8-12; வெளி 13; வெளி 19:20)
14. அந்திக்கிறிஸ்துவின் சுயபெருமை. (தானி 8:25; தானி 7:25; தானி 11:36-45; 2தெச 2:4; வெளி 13)
15. கிறிஸ்துவிற்கு விரோதமாக அந்திக் கிறிஸ்து எழும்புவது. (தானி 8:25; 2தெச 2:8; வெளி 19:19-21).
""இந்தத் தரிசனத்தை நீ மறைத்து வை'' என்னும் வாக்கியத்திற்கு, இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற நீண்ட காலமாகும் என்பது பொருளாகும். (தானி 8:9-14, 20-25; மத் 24:15-22; வெளி. 13).
தானியேல் ""சிலநாள் வியாதிப்பட்டிருந்ததாக சொல்லுகிறார் (தானி 8:27). தான் கண்ட தரிசனத்திற்குப் பதில் பெறுவதற்காகத் தானியேல் நீண்டகாலம் உபவாசம் செய்திருக்க வேண்டும். (தானி 9:3; தானி 10:2-3). தரிசனத்தைக் காண்பதினால் யாரும் வியாதியடைவதில்லை.
தானியேல் சூசான் அரமனையில் இருக்கிறார். பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சார் அரமனை வேலை விஷயமாகத் தானியேலை இங்கு அனுப்பியிருக்க வேண்டும். (தானி 8:1; தானி 1:21; தானி 5:29-31; தானி 6:28).
