வீணான ஜெபம்
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்
செய்ய வேண்டாம்... எரேமியா - 7:16
மதியீனத்தினாலோ, அறியாமையினாலோ, சூழ்நிலை சந்தர்ப்பங்களின் கட்டாயத்தினாலோ அல்லது உணர்வில்லாத ஒரு வாழ்க்கையினாலோ ஒருவர் தேவனுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடலாம். அப்படிப்பட்டவருக்காக நாம் தேவனிடத்தில் வேண்டுதல் செய்யலாம். அந்த நபருடைய மனந்திருந்துதலுக்காக சுர்த்தரை நோக்கி நாம் விண்ணப்பிக்கலாம்.
அதே வேளையில் ஒருவர் கர்த்தருடைய வேதத்தின் உண்மைகளை நன்கு தெரிந்திருக்கிறார். தான் சென்று கொண்டிருக்கும் பாதை வேதத்திற்குப் புறம்பானது என்பதை அறிகின்ற அறிவு உள்ளது. ஆனால் தவறுகளைவிட்டுத் திரும்புவதற்கான வாய்ப்புகளை அவர் ஏற்காமல், தொடர்ந்து மாறுபாடான நிலையில் வாழ்கின்றார். அப்படிப்பட்டவருக்காக நாம் ஜெபிப்பது வீணானது. அந்த ஜெபம் தேவனுடைய பதிலைப்பெறாது. அங்கே ஜெபிப்பதற்குப் பதிலாக, உரிய முறையில் அந்த நபரின் தவறைச் சுட்டிக்காட்டி மனந்திரும்பத் தூண்டுவதே கர்த்தருடைய வழியாகும்.
முரட்டாட்டமாக வாழும் ஊழியர்களும், அவிசுவாசிகளும் ஏராளம் உண்டு. அவர்களின் தவறுகளைக் குறித்து பேசக்கூடாது. ஆனால் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நம்மில் பலர் கூறுவதுண்டு. அது தேவனைவிட நம்மை மிஞ்சின நீதிமானாகக் காட்டும் செயலாகும். இஸ்ரவேல் ஜனங்களுக்காக ஜெபித்த எரேமியாவை தேவன் ஜெபிக்காதே என்று கட்டளையிட்டார்? என்? அவர்கள் கர்த்தருடைய வழியை நன்கு அறிந்திருந்தும், மனக்கடினத்தால் தேவனுக்கு எதிராக முரட்டாட்டமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்காக ஜெபிப்பது வீணானது என்று தேவன் சுட்டிக் காட்டினார். எனவேதான் எசேக்கியல் தீர்க்கதரிசியிடம் தேவன் நீ இந்த ஜனங்களுக்காக வழக்காட மனதானால் அவர்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு என்றார். (எசேக் - 20:4)
ஜெபம் என்பது மிக மிக வல்லமையான ஒரு தெய்வீகக் கருவி என்பது உண்மை. அதே வேளையில் அனைத்து விஷயங்களுக்கும் அதனை மட்டுமே உபயோகிப்பது பலன் தராது. உணர்த்த வேண்டிய விஷயங்கள் உண்டு. கண்டிக்க வேண்டிய நேரங்கள் உண்டு. சுட்டிக்காட்ட வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. எச்சரிக்க வேண்டிய கட்டாயங்கள் உண்டு. அங்கே அவைகளைத்தான் உபயோகிக்க வேண்டும். தாவீதின் பொல்லாப்பான செயலைக் குறித்து நாத்தான் அவனைக் கண்டித்தான். அவன் அந்த நேரத்தில் அதைச் செய்யாமல் ஜெபம் செய்து கொண்டிருந்திருந்தால் தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்ப வழி ஏற்பட்டிருக்காது.
தவறை தவறென்று பார்க்கத் தவறும் போது, தவறற்றதை தவறென்று எண்ணித் தவறிப்போக நேரிடும்.
