அதிகாரம் 5
5 அதிகாரம்
ஆதாமின் வம்சவரலாற்றைப்பற்றியும், அவருடைய சந்ததியாரின் வம்சவரலாற்றைப்பற்றியும் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதாம் (ஆதி 5:1#5). சேத் (ஆதி 5:6#8). ஏனோஸ் (ஆதி 5:9#11). கேனான் (ஆதி 5:12#14). மகலாலெயேல் (ஆதி 5:15#17). யாரேத் (ஆதி 5:18#20). ஏனோக்கு (ஆதி 5:21#24). மெத்தூசலா (ஆதி 5:25#27). லாமேக்கும் அவனுடைய குமாரன் நோவாவும் (ஆதி 5:28#32).
ஆதாமின் வம்சவரலாறு
ஆதி 5:1#5
ஆதி 5:1. ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
ஆதி 5:2. அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
ஆதி 5:3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
ஆதி 5:4. ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:5. ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
இந்த அதிகாரத்தின் முதலாம் வசனத்தில், ""ஆதாமின் வம்சவரலாறு'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே இந்த அதிகாரத்திற்கு தலைப்பு ஆகும். வம்சவரலாறு ஆதாமிலிருந்து ஆரம்பமாகிறது.
முதல் மனுஷனாகிய ஆதாமின் வம்ச வரலாறு இந்த அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இவருடைய வம்சத்தின் மூலமாக இரண்டாம் ஆதாமாகிய ஸ்திரீயின் வித்தானவர் வரவேண்டும். ஆதி 2:4 ஆவது வசனம் வானமும், பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாற்றைக் கூறுகிறது. மத் 1:1-17, லூக்கா 3:23-38 ஆகிய வசனங்கள் இரண்டாம் ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றைக் கூறுகிறது. ஆதாமின் வரலாற்றில் அவர் இளவயதிலேயே பிள்ளைகளுக்குத் தகப்பனாகிறார். (ஆதி 4:1-6:1) ஆதாமிற்கு அடுத்தபடியாக மகலாலெயேல் 65 ஆவது வயதில் தகப்பனாவதை இந்த அதிகாரம் குறிப்பிடுகிறது. (ஆதி 5:15,21, ஆதி 46:21)
ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட சம்பவத்தைப்பற்றி ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. தேவனாகிய கர்த்தர் தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின்படியேயும் மனுஷனை உருவாக்கினார். அந்த சம்பவம் இங்கு மறுபடியும் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.
தேவன் மனுஷனை சிருஷ்டித்தார். மனுஷன் தானாக உண்டாகவில்லை.அவன் தன்னைத்தானே சிருஷ்டித்துக்கொள்ளவுமில்லை. தேவன் மனுஷனை சிருஷ்டித்ததினால், மனுஷன் தனக்கு அதிகாரியோ அல்லது ஆண்டவனோ அல்ல. தேவனே மனுஷனை சிருஷ்டித்தார். ஆகையினால் தேவனே மனுஷனுக்கு ஆண்டவராயிருக்கிறார்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை சிருஷ்டித்து அவனை ஆளுகை செய்கிறார். அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் இயக்குகிறார். தேவன் மனுஷனை ஒரு குறிப்பிட்ட நாளிலே சிருஷ்டித்தார். மனுஷன் நித்தியகாலமாக இந்தப் பூமியிலே இருக்கவில்லை. தேவன் மனுஷனை சிருஷ்டித்த நாளிலிருந்துதான், மனுஷன் இந்தப் பூமியிலிருக்கிறான். அதற்கு முன்பு மனுஷன் இந்தப் பூமியில் இல்லை.
தேவன் மனுஷனை தம்முடைய சாயலாக உண்டாக்கினார். தேவன் நீதியும் பரிசுத்தமுள்ளவர். மனுஷனும் தேவனைப்போல நீதியும் பரிசுத்தமும் உள்ளவனாயிருக்கவேண்டும். தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்டிருப்பது மனுஷனுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய மேன்மை.
தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதாரவாயும், துணையாயும் இருக்கவேண்டும் என்பதற்காகவும், தங்களுடைய சந்ததியை பலுகிப் பெருகப்பண்ணவேண்டும் என்பதற்காகவும் தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்.
தேவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டார் (ஆதி 5:3). சேத் தேவசாயலாகவும், தேவனுடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்படவில்லை. ஆதாம் சேத்தை தன் சாயலாகவும், தன் ரூபத்தின்படியேயும் பெற்றார்.
ஆதாம் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்து, தன்னிடத்தில் இருந்த மகிமையை இழந்துவிட்டார். ஆதாமிடத்தில் காணப்பட்ட தேவசாயல் மங்கிப்போயிற்று. பாவம் செய்வதற்கு முன்பு பரிசுத்தமாயிருந்த ஆதாம் இப்போது பாவம் செய்து அசுத்தமாயிருக்கிறார். ஆதாம் சேத்தைப் பெற்றார். ஆனால் சேத் தேவசாயலாகயில்லை. சேத் ஆதாமின் சாயலாகவும், ஆதாமின் ரூபத்தின்படியேயும் இருக்கிறான்.
ஆதாம் தேவனுடைய சாயலாகவும், தேவனுடைய ரூபத்தின் பிரகாரமாகவும் சிருஷ்டிக்கப்பட்டார். தேவனுடைய சாயலும், ரூபமும் பூரணமானது. ஆதாமின் சாயல் குறைவுடையது. அது மங்கியிருக்கிறது. பாவமும், மரணமும் ஆதாமிற்குள் கிரியை செய்து அவருடைய சாயலை அழித்துப்போடுகிறது. (யோபு 14:4; யோபு 25:4; சங் 14:3; சங் 51:5; ரோமர் 5:12-21; 1கொரி 15:39; எபே 2:2-3).
ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவர் மரித்தார்.
சேத்திற்குப் பிறகு ஆதாமிற்கு குமாரர்களும், குமாரத்திகளும் பிறந்தார்கள். அதுபோல காயீன், ஆபேல் ஆகியோருக்கு முன்பாகவே குமாரர்களும், குமாரத்திகளும் பிறந்திருக்க வேண்டும். யூதருடைய பரம்பரை வரலாற்றின் பிரகாரம் ஆதாமிற்கு 30 குமாரர்களும், 30 குமாரத்திகளும் இருந்தார்கள். இதே பரம்பரை வரலாற்றில் வேறுசிலர் ஆதாமிற்கு 300 குமாரர்களும், 300 குமாரத்திகளும் இருந்ததாகக் கூறுகிறார்கள்.
ஆதி 4:16-24 ஆகிய வசனங்களில் காயீனுடைய சந்ததியாரைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆதாமும் ஜீவனோடிருக்கிறார். சேத்தின் காலத்திலும், ஏனோக்கின் 308 வருஷம் வரையிலும் மெத்தூசலாவின் 243 ஆவது வருஷம் வரையிலும் ஆதாம் உயிரோடு இருந்திருக்கிறார். ஆதாமும், மெத்தூசலாவும் ஜலப்பிரளயத்திற்கு முந்திய காலத்தில் ஒன்றாக உயிரோடிருந்தவர்கள் (ஆதி 5:5,27).
ஜலப்பிரளத்திற்கு முந்தின முற்பிதாக்கள்
ஆதி 5:6#20
ஆதி 5:6. சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.
ஆதி 5:7. சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:8. சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
ஆதி 5:9. ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
ஆதி 5:10. ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:11. ஏனோசுடைய நாளெல்லாரும் தொளாயிரத்து ஐந்து வருஷம் அவன் மரித்தான்.
ஆதி 5:12. கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
ஆதி 5:13. கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:14. கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.
ஆதி 5:15. மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
ஆதி 5:16. மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:17. மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
ஆதி 5:18. யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
ஆதி 5:19. யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:20. யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
இந்தப் பூமியில் ஜலப்பிரளயம் உண்டாவதற்கு முன்பு ஐந்து முற்பிதாக்கள் இருந்தார்கள். அவர்களைப்பற்றிய விவரம் இந்தவசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரம் வருமாறு : 1. சேத் 2. ஏனோஸ் 3. கேனான் 4. மகலாலெயேல் 5. யாரேத்.
இந்த முற்பிதாக்களைப்பற்றி விசேஷமாய்ச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் அவர்கள், அவர்களுடைய காலங்களில் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரைப்பற்றிய ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்கள்.
முற்பிதாக்களைப்பற்றிச் சொல்லப்படும்போது, ஏனோக்கைத் தவிர, மற்ற எல்லோரும் மரித்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தார்கள் என்னும் விவரமும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் உயிரோடிருந்து, தங்களுடைய ஜீவியகாலம் முடிந்தபின்பு மரித்தார்கள்.
ஆதாமுக்கும், அவருடைய சந்ததியில் வருகிற எல்லோருக்கும் மரணம் வருகிறது. அவர்கள் சரீரத்தில் எவ்வளவுதான் ஆரோக்கியமாகயிருந்தாலும், அவர்கள் இந்தப் பூமியில் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாலும், அவர்கள் மரிக்கவேண்டிய நாள் வரும்போது, அவர்கள் மரித்துப்போகிறார்கள். ஒரு தரம் பிறப்பதும், ஒரு தரம் மரிப்பதும் எல்லா மனுஷருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது.
மனுஷன் ஞானியாகயிருக்கலாம். அவன் அரசியல் தலைவனாகயிருக்கலாம். அவன் விவேகியாகவும் ஐசுவரியவானாகவும் இருக்கலாம். அவர்களும் மரணத்திற்கு தப்பிக்க முடியாது. ஒருவன் சமுதாயத்தில் மிகவும் முக்கியமானவனாகயிருக்கலாம். அவன் அதிககாலம் உயிரோடிருக்கவேண்டுமென்று ஜனங்கள் விரும்பலாம். மனுஷன் எவ்வளவுதான் பிரயோஜனமுள்ளவனாயிருந்தாலும், அவனுக்கும் மரணம் வருகிறது.
பூர்வகாலத்திலே முற்பிதாக்கள் அதிக வருஷங்களுக்கு உயிரோடிருந்தார்கள். ஆதாம் உயிரோடிருந்தது தொளாயிரத்தி முப்பது வருஷம். சேத் உயிரோடிருந்தது தொளாயிரத்து பன்னிரண்டு வருஷம். ஏனோஸ் உயிரோடிருந்தது தொளாயிரத்து ஐந்து வருஷம். கேனான் உயிரோடிருந்தது தொளாயிரத்து பத்து வருஷம். மகலாலெயேல் உயிரோடிருந்தது எண்ணூற்று தொண்ணூற்றைந்து வரும். யாரேத் உயிரோடிருந்தது தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்.
பூர்வகாலத்து முற்பிதாக்கள் இதுபோல அதிக வருஷங்களுக்கு உயிரோடிருந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர்களாயிருந்தார்கள். கர்த்தர் இவர்களுடைய ஆயுசுகாலத்தை கூட்டிக்கொடுத்து, இவர்களை அதிகமாய் ஆசீர்வதித்தார்.
சேத்தின் வம்ச வரலாற்றிலிருந்து, முதலாவது பிறந்த ஆண் மகனைப் பற்றியே வம்ச வரலாற்றில் முதலாவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு முன்பாக பெண்பிள்ளைகள் பிறந்திருந்தாலும் ஆண் பிள்ளைகளின் பெயரே முதலாவதாகக் குறிப்பிடப்படுவது யூதவம்ச வரலாற்றின் வழக்கமாகும்.
ஆதாம், நோவா ஆகியோருக்கு இடையில் வரும் பெயர்களில் யாரேத்தின் பெயர் இரண்டாவது பாதியில் முதலாவதாக வருகிறது. யாரேத்தின் குமாரனாகிய ஏனோக்கின் நாளில் துன்மார்க்கர் மீதும், தேவபக்தியற்ற சந்ததியார் மீதும் ஜலப்பிரளயம் நியாயத்தீர்ப்பாக வரும் என்று கர்த்தர் முன்னறிவித்தார்.
யாரேத் என்னும் பெயர் தீர்க்கதரிசனப் பொருளுடையது. கீழே தள்ளுதல், தாழ்த்துதல் என்பது இதன் பொருள். ஜலப்பிரளயத்தினால் சந்ததியார் கீழே தள்ளப்படுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும்.
ஏனோக்கு
ஆதி 5:21#24
ஆதி 5:21. ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
ஆதி 5:22. ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
ஆதி 5:24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.
ஆதாமின் வம்சவரலாற்றில், ஐந்து முற்பிதாக்களைப்பற்றி இதுவரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களைப்பற்றி சொல்லுவதற்கு விசேஷமாக ஒன்றுமில்லை. அவர்களுடைய பெயர்களும், அவர்கள் இந்தப் பூமியில் உயிரோடிருந்த வருஷங்களும் வேறுபட்டிருக்கிறது. ஆதாமின் சந்ததியில் வந்த ஏனோக்கு விசேஷமானவர். இவர் ஆதாமிலிருந்து ஏழாவது சந்ததியைச் சேர்ந்தவர்.
ஆதாமின் சந்ததியில் வந்த ஏனோக்கைப்பற்றி இந்த வசனப்பகுதியில் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஏற்கெனவே ஒரு ஏனோக்கைப்பற்றி ஆதி 4:17#ஆவது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஏனோக்கின் பெயரால் ஒரு பட்டணம் கட்டப்பட்டது. இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஏனோக்கு அவரல்ல. இவர் யாரேத்தின் குமாரன்.
சேத்தின் வம்சவரலாற்றில் நோவாவைப்போல ஏனோக்கும் தேவபக்தியுள்ளவராக இருந்தார். (ஆதி 6:9; ஆதி 7:1). இவர் ஒரு தீர்க்கதரிசி. (யூதா 1:14) விசுவாசத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டார். (ரோமர் 10:17; எபி 11:5). ஏனோக்கின் அனுபவம் எலியாவின் அனுபவம்போல் உள்ளது. (2இராஜா 2). இருவருமே மரணத்தைக் காணாமல், தங்கள் சரீரங்களில் வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
இவ்விருவரும் நியாயத்தீர்ப்புக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினார்கள். விக்கிரகாராதனைக்கும், தேவ தூஷணத்திற்கும் எதிர்த்து நின்றார்கள். தாங்கள் எடுத்துக் கொள்ளப்படும் காலமும், நோக்கமும் இவ்விருவருக்கும் தெரிந்திருந்தது (2இராஜா 2; எபி 11:5).
இவர்கள் இருவரும் சக 4:11-14; மல் 4:4-6; வெளி 11:3-11 ஆகிய வசனங்களை நிறைவேற்றுகிறார்கள். பரலோகம் ஒரு பிரத்தியட்சமான இடம். அதில் புசிப்பதற்குப் போஜனமும், வசிப்பதற்கு பட்டணங்களும் இருக்கும். (யாத் 24:11; சங் 78:25; லூக்கா 22:16,18,30; எபி 11:10,13-16; எபி 13:14; யோவான் 6:31; யோவான்14:1-3; வெளி 2:7,17; வெளி 4:4-6; வெளி 5:3-13; வெளி 7:17; வெளி 12:12; வெளி 13:6; வெளி 18:20; வெளி 19:1-10; வெளி 22:2).
பவுலும், யோவானும் வானத்திற்குப் போனார்கள் (2கொரி 12:1-7; வெளி 4:1). உயிர்த்தெழுந்த எல்லாப் பரிசுத்தவான்களும் பரலோகத்திற்குச் சென்று பின்பு இயேசு கிறிஸ்துவோடு பூமிக்கு வந்து அவருடைய ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷம் அரசாட்சி செய்வார்கள். (1தெச 4:14-17; 1கொரி 15:51-58; வெளி 7:9-17; வெளி 19:1-21).
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முன்னூறு வருஷம் தேவனேடே சஞ்சரித்தார் (ஆதி 5:22). ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்தார் (ஆதி 5:24) என்று இரண்டு தடவை ஏனோக்கின் பக்தியுள்ள ஜீவியத்தைப்பற்றி இந்த வசனப்பகுதியில் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.
மெத்தூசலாவைப் பெறுவதற்கு முன்பு ஏனோக்கு தேவனோடு சஞ்சரிக்கவில்லை. மெத்தூசலாவைப் பெற்றபின்பு, ஏனோக்கின் ஜீவியத்தில் ஏதோ ஒரு காரியம் சம்பவித்திருக்கிறது. ஏனோக்கு தேவனிடத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறார். அதனால்தான் தன் மகனுக்கு மெத்தூசலா என்று பெயரிடுகிறார். இந்தப் பெயருக்கு ""அவன் மரிக்கும்போது அது (ஜலப்பிரளயம்) வருவதாக'' என்று பொருள். துன்மார்க்கரை அழிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், ஏனோக்கு முன்னறிவித்தார் (யூதா 1:14).
பூமியில் ஏனோக்கு வாழ்ந்த காலம் 365 வருஷமாகும். பரலோகத்திலும் ஏனோக்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறார். வெளி 11 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் இரண்டு சாட்சிகளில் ஒருவராக ஏனோக்கு திரும்பி வந்து தன்னுடைய ஜீவிய காலம் முடிந்து மரித்துப் போவார் (வெளி 11:7).
எல்லோரும் மரிக்க வேண்டுமென்பது மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. (எபி 9:27). ஆதி 5 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் வம்ச வரலாற்றில் ""அவன் மரித்தான்'' என்று எல்லோருக்கும் கூறப்பட்டிருக்கிறது. (ஆதி 5:5,8,11,14,17,20,27,31) ஆனால் ஏனோக்கு மட்டும் ""காணப்படாமற் போனார்; தேவன் அவûர் எடுத்துக்கொண்டார்'' என்று அவரைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது (ஆதி 5:24).
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்தார் என்னும் வாக்கியத்தில், அவர் தேவன்மீது வைத்திருந்த பக்தியும், அவருடைய ஜீவியத்தின் பரிசுத்தமும் வெளிப்படுகிறது. தேவனோடு சஞ்சரிப்பது பக்தியுள்ள ஜீவியம். தேவபக்தியில்லாதவர்களால் தேவனோடே சஞ்சரிக்க முடியாது. இந்த உலகத்தில் தேவன் இல்லை என்று நாஸ்திகர்கள் சொல்லுகிறார்கள். அப்பேற்பட்டவர்கள் தேவனோடு சஞ்சரிப்பதற்கு வாய்ப்பில்லை.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் அவரிடத்தில் பக்தியுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்கள் பயபக்தியோடு கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார்கள். அவர்கள் தேவனோடு ஒப்புரவாகியிருப்பார்கள். தேவனோடு ஐக்கியமில்லாமல், அவரோடு சஞ்சரிப்பது இயலாத காரியம்.
""இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?'' (ஆமோ 3:3).
தேவனோடு சஞ்சரிப்பது என்னும் வாக்கியத்திற்கு, தேவனை நமக்கு முன்பாக எப்போதும் நிறுத்தி வைத்திருப்பது என்று பொருள். தேவன் நம்மை எப்போதும் கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்னும் உணர்வோடு, தேவனோடு கூட நடந்துபோகிறவர்கள், தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாயிருப்பார்கள்.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் அவரோடு ஐக்கியமாயிருப்பார்கள். அவர்கள் தேவனுடைய நியமங்களுக்கு கீழ்ப்படிவார்கள். அவர்கள் தேவனுடைய தெய்வீக பராமரிப்புக்களைப் பெற்றுக்கொண்டு, தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள்.
நாம் தேவனோடு சஞ்சரிக்கும்போது, தேவனுடைய வார்த்தை நமக்கு ஆதரவாயிருக்கும். நம்முடைய பேச்சுக்களிலும், கிரியைகளிலும் தேவனை மகிமைப்படுத்தவேண்டும் என்பதே நம்முடைய பிரதான நோக்கமாயிருக்கும். தேவனுடைய சித்தம் நம்முடைய சித்தமாயிருக்கும். தேவனுடைய திட்டம் நம்முடைய திட்டமாகும். நாம் தேவனோடு சேர்ந்து அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பயபக்தியோடு ஊழியம் செய்வோம்.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் இந்த உலகத்திற்கும், இந்த உலகத்தின் காரியங்களுக்கும் மரித்தவர்களாயிருப்பார்கள். தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் தேவனுக்கு பின்னால் நடந்துபோகிறவர்கள் மாத்திரமல்ல, அவர்கள் தேவனோடு கூட நடந்துபோகிறவர்கள். நாம் பரலோகத்திலிருக்கும்போது தேவனோடு எப்படி சஞ்சரிப்போமோ அப்படியே பூமியிலேயேயும் சஞ்சரிப்பதுதான் தேவனோடு சஞ்சரிப்பது.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் தேவனுடைய வார்த்தைகளையும், அவரைப்பற்றிய சத்தியங்களையும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுவார்கள். அவர்கள் ஆசாரிய ஊழியம் செய்வார்கள். ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நடந்துபோகிறார்கள்.
""ஆகையால் இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்-யிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (1சாமு 2:30).
""நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்'' (1சாமு 2:35).
""சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம்விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல் காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்'' (சக 3:7).
ஏனோக்கு உன்னதமான தேவனுக்கு ஆசாரியராயிருந்தார். அவர் தேவனோடு சஞ்சரித்தார். கர்த்தருக்கு பிரியமானவர்கள் அவரோடு கூட சஞ்சரிப்பார்கள். தேவனோடு சஞ்சரிக்கவேண்டும் என்பதே ஏனோக்கின் விருப்பம். அதுவே அவருடைய ஜீவியத்தின் இலக்கு. தேவனோடு சஞ்சரிப்பது ஏனோக்குக்கு சந்தோஷமாயிருக்கிறது. அது அவருடைய ஜீவனுக்கு ஆதரவாயிருக்கிறது.
ஏனோக்கு தன்னுடைய காலத்தில் ஜீவித்த மற்ற மனுஷர்களைப்போல சாதாரண மனுஷரல்ல. ஏனோக்கு மிகவும் விசேஷித்தவர். மற்ற முற்பிதாக்கள் எல்லோரும் தங்கள் ஜீவியகாலம் முடிந்தபோது மரித்தார்கள். ஏனோக்கோ அவர்களைப்போல மரிக்கவில்லை. தேவன் ஏனோக்கை எடுத்துக்கொண்டார். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமல் போனார்.
எலியாவைப் போல ஏனோக்கும் மரிக்கவில்லை. (2இராஜா 2; எபி 11:5). தேவன் அவரை எடுத்துக்கொண்டார். ஏனோக்கின் வம்ச வரலாறு சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தாலும் ஒரே வாக்கியத்தில் அவருடைய 365 வருஷ வரலாறு கூறப்பட்டிருக்கிறது. மெத்தூசலா பிறந்த பின்பு சுமார் 300 வருஷங்கள் அவர் தேவனை விசுவாசித்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்தமாக ஜீவித்து, தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
""விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்'' (எபி 11:5).
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மரிக்கும்போது, கர்த்தர் அவர்களை தம்மிடத்தில் எடுத்துக்கொள்கிறார். ஏனோக்கு தேவனிடத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, அவர் தேவனுக்கு பிரியமானவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார். விசுவாசிகளாகிய நாம், இந்தப் பூமியில் ஜீவிக்கிற காலமெல்லாம் தேவனோடு ஐக்கியமாயிருக்கவேண்டும். அவரோடு சஞ்சரிக்கவேண்டும். அதுவே நமக்கு மெய்யான சந்தோஷம்.
மெத்தூசலா
ஆதி 5:25#27
ஆதி 5:25. மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
ஆதி 5:26. மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:27. மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
முற்பிதாக்களில் மெத்தூசலா மிகவும் முக்கியமானவர். இவரே மற்ற முற்பிதாக்களைவிட அதிகமான வருஷங்களுக்கு உயிரோடிருந்தவர். மெத்தூசலா தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் உயிரோடிருந்தார். ஆனாலும் அவர் மற்ற முற்பிதாக்களைப்போல மரித்தார். மெத்தூசலா தன் தகப்பனார் ஏனோக்கைப்போல தேவனால் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எல்லோருக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது. மரணம் சிலருக்கு சீக்கிரத்திலும், வேறு சிலருக்கு மெதுவாகவும் வருகிறது. மரணம் மனுஷருக்கு சீக்கிரத்தில் வந்தாலும் அல்லது மெதுவாக வந்தாலும், அது நிச்சயமாகவே வரும்.
மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம். அவர் பூமியில் நீண்ட காலம் உயிரோடு இருந்திருக்கிறார். இவருடைய தகப்பனாகிய ஏனோக்கு பரலோகத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறார். இரண்டு சாட்சிகளில் ஒருவராக இனிமேல் வரப்போகிற காலத்தில் இவருடைய தகப்பனாகிய ஏனோக்கு மரிப்பார். (வெளி 11:3-11) மனுஷர் பாவம் செய்யவில்லை என்றால், மனுஷருக்கு மரணம் இல்லை. அவர்கள் நித்திய காலமாக ஜீவிப்பார்கள். மனுக்குலத்திற்கு வந்த பாவத்தின் நிமித்தம் மனுஷர் அனைவரும் மரிக்க வேண்டுமென்று தேவன் நியமித்து விட்டார். புதிய பூமியில் தேவனுடைய பிள்ளைகள் எல்லோரும் நித்திய காலமாக ஜீவிப்பார்கள். (வெளி 21-22)
நோவா
ஆதி 5:28#32
ஆதி 5:28. லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
ஆதி 5:29. கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்-, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
ஆதி 5:30. லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:31. லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம் அவன் மரித்தான்.
ஆதி 5:32. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
இந்த வசனப்பகுதியில் நோவாவைப்பற்றி முதன்முறையாக சொல்லப்பட்டிருக்கிறது. நோவா என்னும் பெயருக்கு ஆறுதல் அல்லது தேறுதல் அல்லது ஓய்வு என்று பொருள். நோவா லாமேக்கின் குமாரன். லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்.
நோவா தங்களைத் தேற்றுவார் என்று நினைத்து லாமேக்கு தன் குமாரனுக்கு நோவா என்று பேரிட்டார். லாமேக்கின் காலத்தில் பூமி சபிக்கப்பட்டிருக்கிறது. மனுஷருடைய கைகளின் பிரயாசம் மிகவும் அதிகமாயிருக்கிறது. ஆனால் அதன் பலன் குறைவாய் கிடைக்கிறது. ஜனங்களுக்கு ஆறுதலோ, தேறுதலோ இல்லை. நோவாவின் மூலமாக தங்களுக்கு ஆறுதல் வரும் என்று லாமேக்கு எதிர்பார்க்கிறார்.
நோவா ஐநூறு வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெறுகிறார். இவர்களில் யாபேத்தே மூத்த குமாரன் (ஆதி 10:21). ஆனால் நோவாவின் குமாரரைப்பற்றி சொல்லப்படும்போது, இங்கு சேமின் பெயர் முதலாவதாக சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் சேமோடு உடன்படிக்கை பண்ணுகிறார். கர்த்தரைப்பற்றிச் சொல்லப்படும்போது, அவர் ""சேமுடைய தேவனாகிய கர்த்தர்'' என்று சொல்லப்படுகிறார்.
""சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்'' (ஆதி 9:26).
நோவா ஐந்நூறு வயதான போது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றார். நோவாவின் வயது மொத்தமாகக் கூட்டி கணக்கிடப்படுகிறது. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றார். ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது நோவா அறுநூறு வயதாயிருந்தார். (ஆதி 7:6) ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது அர்பக்சாத்தைப் பெற்றார். (ஆதி 11:10). இவ்வாறாக மனுஷருடைய வயது ஐந்நூறு, அறுநூறு, நூறு என்று பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறது.
யாப்பேத் நோவாவின் மூத்த குமாரனாகயிருந்தாலும், புத்திர சுவீகார ஆசீர்வாதம் சேமுக்கு கொடுக்கப்படுகிறது. சேமின் சந்ததியில் கிறிஸ்துவானவர் வருகிறார். சேம் என்னும் பெயருக்கு ""நாமம்'' அல்லது ""பெயர்'' என்று பொருள். சேமின் சந்ததியாரிடத்தில் தேவனுடைய நாமம் தங்கியிருக்கும். அவர்கள் தேவனுடைய பெயர் பிரஸ்தாபத்திற்கு சாட்சியாயிருப்பார்கள்.
சேமின் சந்ததியில், எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை உடைய, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே அவதரித்தார். ஆகையினால் இந்த வசனத்தில், நோவாவின் குமாரரைப்பற்றிச் சொல்லும்போது, ""சேம், காம், யாப்பேத்'' என்று சேமின் பெயர் முதலாவதாக சொல்லப்பட்டிருக்கிறது.
