50 அதிகாரம்
யாக்கோபை அடக்கம்பண்ணுவதற்கு ஆயத்த வேலைகள் நடைபெறுகிறது (ஆதி 50:1#4). யாக்கோபின் அடக்க ஆராதனை (ஆதி 50:7#14).
யாக்கோபு மரித்த பின்பு யோசேப்பும் அவருடைய சகோதரரும் தங்களுடைய சகோதர பாசத்தை மறுபடிம் உறுதிபண்ணிக்கொள்கிறார்கள் (ஆதி 50:15#21). யோசேப்பின் வயதும் அவருடைய மரணமும் (ஆதி 50:22#26).
இவ்வாறாக ஆதியாகமம் புஸ்தகம் முடிவு பெறுகிறது. இந்தப் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் வெளிச்சம், ஜீவன் ஆகியவை உண்டான விதம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தின் முடிவிலோ, இருளையும் மரணத்தையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம்.
யோசேப்பின் துக்கம்
ஆதி 50:1#6
ஆதி 50:1. அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.
ஆதி 50:2. பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்த வர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.
ஆதி 50:3. சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள்.
ஆதி 50:4. துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்,
ஆதி 50:5. என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்-, ஆணையிடுவித்துக் கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவு கொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
ஆதி 50:6. அதற்குப் பார்வோன்; உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா என்றான்.
யாக்கோபு தன்னுடைய குமாரருக்கு இனிமேல் நடைபெறப்போகிற சம்பவங்களை தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். அவர் தன்னுடைய குமாரருக்கு கட்டளையிட்டு முடிந்த பின்பு, தன் கால்களை கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போகிறார். யாக்கோபு தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுகிறார். அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவரை முத்தஞ்செய்கிறார் (ஆதி 50:1).
யோசேப்பின் தகப்பனார் மரித்துப்போனார். மரித்துப்போன அவருக்கு யோசேப்பு தன்னுடைய இறுதி மரியாதைகளை செலுத்துகிறார். மரித்தோருக்கு முன்பாக அழுவதும் முத்தம் செய்வதும் துக்கத்திற்கு அடையாளம். யாக்கோபு மரித்துப்போனதினால், யோசேப்பின் இருதயத்திலே மிகுந்த துக்கமும் வேதனையும் உண்டாயிற்று. அவர் தன்னுடைய துக்கத்தை கண்ணீராலும், முத்தத்தாலும் வெளிப்படுத்துகிறார்.
யாக்கோபின் ஆவி அவரை விட்டுப் பிரிந்துவிடுகிறது. யோசேப்பு யாக்கோபின் சரீரத்திற்கு முன்பாக எவ்வளவுதான் அழுதாலும், அவர் அந்த சரீரத்திற்கு எவ்வளவுதான் முத்தம் கொடுத்தாலும், அவருடைய கண்ணீர்களும், முத்தங்களும் யாக்கோபின் ஆத்துமாவை போய்ச்சேராது. யோசேப்பால் மரித்துப்போன தன் தகப்பனாருடைய சரீரத்திற்கு மாத்திரமே மரியாதை செலுத்த இயலும்.
நம்முடைய சரீரம் இந்தப் பூமியிலே அழிவுள்ளதாக அடக்கம்பண்ணப்படுகிறது. மரித்துப்போன நம்முடைய சரீரம், கர்த்தருடைய உயித்தெழும் வல்லமையினால், மகிமையுள்ள சரீரமாக மறுபடியும் உயிரோடு எழும்பும்.
எகிப்து தேசத்திலே மரித்துப்போனவர்களுடைய சரீரங்களுக்கு சுகந்தவர்க்கமிடுவது வழக்கம். யோசேப்பு தன் தகப்பனாருக்குச் சுகந்த வர்க்கமிடும்படி தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிடுகிறார்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிடுகிறார்கள் (ஆதி 50:2).
மரித்துப்போன சரீரத்திற்குச் சுகந்த வர்க்கமிடுவது மிகவும் கடினம். அதற்கு நாற்பது நாள் செல்லும். அதிகப் பணம் செலவாகும். மரித்த சரீரத்திலுள்ள மூளையையும், குடல்களையும் வெளியே எடுத்துவிடுவார்கள். சரீரத்தின் தலைப்பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களால் நிரப்புவார்கள் (ஆதி 50:3).
யாக்கோபின் புத்திரர் அவருடைய சரீரத்தை எகிப்து தேசத்தில் அடக்கம்பண்ணக்கூடாது. அவர்கள் அந்த சரீரத்தை கானான் தேசத்திற்கு எடுத்துக்கொண்டு போகவேண்டும். யாக்கோபின் சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிடவில்லையென்றால், நாலாம் நாளிலே, அது துர்நாற்றம் வீசும். ஆகையினால் யாக்கோபின் சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிடுகிறார்கள்.
எகிப்தியர்கள் சுகந்தவர்க்கமிடுவதை ஒரு சடங்காகவே கொண்டாடுவார்கள். அதிகமான வதியுள்ளவர்கள், அதிக பொருள் செலவு செய்து பல நாட்களுக்கு சுகந்த வர்க்கமிடுவார்கள். யாக்கோபின் சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் சென்றது. அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின பின்பு, எகிப்தியர் யாக்கோபுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடுகிறார்கள் (ஆதி 50:3).
எகிப்தியர்கள் யோசேப்பின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் யோசேப்பின் நிமித்தமாக, அவருடைய தகப்பனாராகிய யாக்கோபுக்கு மரியாதை காண்பிக்கிறார்கள். அவர்கள் யாக்கோபுக்காக எழுபது நாள் துக்கம் கொண்டாடுகிறார்கள்.
யாக்கோபின் சரீரத்தை கானான் தேசத்திலே அடக்கம்பண்ணவேண்டும். யோசேப்பு பார்வோனுடைய அனுமதியோடு கானானுக்கு போக விரும்புகிறார். எகிப்து தேசம் விஸ்திரமான தேசம். யாக்கோபு எகிப்து தேசத்திலே மரித்துப்போனதால், அவரை அந்த தேசத்திலேயே அடக்கம்பண்ணலாம் என்று பார்வோன் சொல்லுவான். ஆனாலும், தான் மரித்த பின்பு, தன்னுடைய சரீரத்தை எகிப்து தேசத்திலே அடக்கம்பண்ணாமல், வாக்குத்தத்த தேசமாகிய கானான் தேசத்திலே அடக்கம்பண்ணவேண்டுமென்று, யாக்கோபு தன் குமாரருக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.
யாக்கோபுக்காக துக்கம் கொண்டாடும் நாட்கள் முடிகிறது. அவர்கள் எழுபது நாள் துக்கம் கொண்டாடுகிறார்கள். அதன் பின்பு யோசேப்பு கானான் தேசத்திற்கு போக பார்வோனின் அனுமதியை கேட்கிறார். யோசேப்பு பார்வோனிடத்தில் நேரடியாகப் பேசாமல், அவனுடைய குடும்பத்தார் மூலமாக, தன்னுடைய விருப்பத்தை, பார்வோனுக்கு சொல்லியனுப்புகிறார்.
யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி, ""உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால், என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்-, ஆணையிடுவித்துக் கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள்'' (ஆதி 50:4,5) என்று சொல்லுகிறார்.
எகிப்து தேசத்தில் துக்க நாட்களில் புருஷர்கள் முகத்தைச் சவரம் பண்ணமாட்டார்கள். அந்நாட்களில் அவர்கள் வெளியில் யாருடனும் பேசமாட்டார்கள். அவர்களோடு பேசுவது தீட்டான செயல்.
யோசேப்பு கானான் தேசத்திற்குப்போனாலும், மறுபடியும் எகிப்து தேசத்திற்கு திரும்பி வருவதாக வாக்குப்பண்ணுகிறார். ""நான் கானானுக்குப் போய் என் தகப்பனை அடக்கம்பண்ணி விட்டு எகிப்துக்கு வருவேன்'' என்று யோசேப்பு சொல்லுகிறார். யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் எகிப்து தேசத்தில் உயர்ந்த அதிகாரியாயிருக்கிறார். யோசேப்பு தன்னுடைய தகப்பனாரை அடக்கம்பண்ணவேண்டும். அது அவருடைய கடமை. அதே வேளையில், அவர் எகிப்து தேசத்திலே தான் செய்ய வேண்டிய உத்தியோக கடமைகளையும் நிறைவேற்றவேண்டும். அதுவும் அவருடைய கடமை.
எகிப்து தேசத்தின் அதிபதியாகிய பார்வோன், யோசேப்பின்மீதும், அவருடைய குடும்பத்தார்மீதும் அன்பாயிருக்கிறான். யோசேப்பு கானான் தேசத்திற்கு போய் வர பார்வோன் அவருக்கு அனுமதி கொடுக்கிறான். பார்வோன் யோசேப்பை நோக்கி, ""உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா'' (ஆதி 50:6) என்று சொல்லுகிறான்.
மரித்தோரின் சரீரத்தை அடக்கம்பண்ணிய பின்பு நாம் வீட்டிற்கு வருகிறோம். நம்முடைய குடும்பத்தாரிடமும், சிநேகிதரிடமும், ""மரித்துப்போனவர்களை கல்லறையில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்'' என்று சொல்லுகிறோம். ஆனால் மரித்துப்போனவர்கள்தான், நம்மை இந்தப் பூமியில் விட்டுவிட்டு, பரலோகத்திற்குப் போய்விடுகிறார்கள். நாம் மரிக்கும் நாளிலே, ஏற்கெனவே மரித்துப்போன பரிசுத்தவான்களோடே சேர்க்கப்படுவோம்.
யாக்கோபின் அடக்க ஆராதனை
ஆதி 50:7#14
ஆதி 50:7. அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப்போனான். பார்வோனுடைய அரமனையி-ருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்.
ஆதி 50:8. யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப்போனார்கள்.
ஆதி 50:9. இரதங்களும் குதிரைவீரரும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.
ஆதி 50:10. அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்.
ஆதி 50:11. ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.
ஆதி 50:12. யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,
ஆதி 50:13. அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
ஆதி 50:14. யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணின பின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம் பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.
யாக்கோபு எகிப்து தேசத்திலே மரித்துப்போகிறார். அவர் மரிக்கும்போது, அங்கே அவருடைய குடும்பத்தார் எல்லோரும், அவரோடு கூடயிருக்கிறார்கள். யாக்கோபின் சரீரத்தை நாற்பது நாட்களாக சுகந்தவர்க்கமிடுகிறார்கள். அதன் பின்பு எகிப்தியர் யாக்கோபுக்காக எழுபது நாட்கள் துக்கம் கொண்டாடுகிறார்கள். யாக்கோபுக்காக துக்கம் கொண்டாடுகிற நாட்கள் முடிந்துபோயிற்று. இப்போது யாக்கோபின் சரீரத்தை அடக்கம்பண்ண வேளை வந்திருக்கிறது.
யாக்கோபு எகிப்து தேசத்தில் மரிக்கும்போது, அவருக்கு நல்ல அடக்க ஆராதனை நடைபெறுகிறது. எகிப்து தேசத்திலே, யோசேப்புக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. எகிப்தியர்கள் யோசேப்பின் நிமித்தமாக, அவருடைய தகப்பனாராகிய யாக்கோபுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள். யாக்கோபின் குடும்பத்தார், அவருடைய மரணத்திற்காக துக்கம் கொண்டாடும்போது, எகிப்தியரும் அவருக்காக எழுபது நாள் துக்கம் கொண்டாடுகிறார்கள்.
யாக்கோபின் அடக்க ஆராதனை, எகிப்து தேசத்தின் அரசாங்க மரியாதையோடு நடைபெறுகிறது. யாக்கோபின் அடக்க ஆராதனையில், அவருடைய குடும்பத்தாரோடு, எகிப்து தேசத்திலே பிரபல்யமானவர்கள் எல்லோரும் பங்குபெறுகிறார்கள்.
யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப்போகிறார். யோசேப்பின் வீட்டார் யாவரும், அவர் சகோதரரும், அவர் தகப்பன் வீட்டாரும் அவரோடேகூடப் போகிறார்கள். பார்வோனுடைய அரமனையி-ருக்கிற பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும். யோசேப்போடுகூட போகிறார்கள். இரதங்களும் குதிரைவீரரும் யோசேப்போடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருக்கிறது (ஆதி 50:7#9).
யாக்கோபின் குடும்பத்தார் மாத்திரம் யோசேப்போடுகூட யாக்கோபை அடக்கம்பண்ணப்போகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும் கோசேன் நாட்டிலே விட்டுப்போகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளில் அநேகருக்கு இதுபோன்ற மகிமையான அடக்க ஆராதனை நடைபெறுவதில்லை. விசுவாசிகளில் அநேகர் மரிக்கும்போது, அவர்களுடைய அடக்க ஆராதனையில் ஏராளமான ஜனங்கள் பங்குபெறமாட்டார்கள். நாம் இந்த உலத்திற்கு அறிமுகமில்லாதவர்களாயிருக்கிறோம். விசுவாசிகளாகிய நாம் இந்த உலகத்தாருக்கு அந்நியராயிருக்கிறோம். ஆகையினால் நம்முடைய அடக்க ஆராதனைகள், யாக்கோபின் அடக்க ஆராதனையைப்போல சிறப்பாக நடைபெறுவதில்லை. மிகவும் சாதாரணமாக, எளிமையாக நடைபெறுகிறது.
நம்முடைய அடக்க ஆராதனை எளிமையாக நடைபெற்றாலும், நாம் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. நாம் மரிக்கும்போது, நம்மை பரலோகத்திற்கு அழைத்து செல்ல, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நம்மோடு கூடயிருக்கிறார். நம்முடைய அடக்க ஆராதனையில் ஏராளமான ஜனங்கள் பங்குபெறாவிட்டாலும், நாம் ஆராதிக்கிற தேவன், தம்முடைய தூதர்களோடு சேர்ந்து பங்குபெறுவது, நமக்கு கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம்.
யாக்கோபை அடக்கம்பண்ணுவதற்காக, யோசேப்பும், யாக்கோபின் குடும்பத்தாரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும், பார்வோனின் அரண்மனையிலுள்ள சகல உத்தியோகஸ்தரும் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வருகிறார்கள். அவ்விடத்திலே அவர்கள் எல்லோரும் பெரும் புலம்பலாகப் புலம்புகிறார்கள். அங்கே யோசேப்பு தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடுகிறார் (ஆதி 50:10).
""யோர்தானுக்கு அக்கரையில்'' என்னும் வாக்கியம் யோர்தானுக்குக் கிழக்குப் பகுதி என்று பொருள்படாது. எபிரோன் எருசலேமிற்குத் தென்பகுதியில் உள்ளது. யோர்தான் அதற்கு அப்பால் உள்ளது. ""யோர்தானுக்கு அக்கரையில்'' என்பதை வாசிக்கும் பொழுது, ஆதியாகமத்தை எழுதிய மோசே இதை எழுதும்போது எந்த இடத்திலிருந்து எழுதினார் என்று கவனிக்க வேண்டும். ஆகையினால் யோர்தானுக்கு அக்கரை என்பது யோர்தானின் மேற்குப் பகுதியைக் குறிக்கும். மோசே ஆதியாகமத்தை எழுதும்போது யோர்தானின் கிழக்கு பகுதியிலிருந்து எழுதினார்.
ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் காண்கிறார்கள். அவர்கள் யாக்கோபுக்காக துக்கம் கொண்டாடுவதைப் பார்த்து, ""இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல்'' (ஆதி 50:11) என்று சொல்லுகிறார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.
எகிப்தியர்கள் மரித்தவர்களுக்காக புலம்புவதை ஒரு பெரிய சடங்காகச் செய்தார்கள். அவர்கள் துக்க நாட்களில் மது அருந்தமாட்டார்கள். வாசனைத் திரவியங்களைப் பூசமாட்டார்கள். உயர்ந்த வஸ்திரங்களை அணியமாட்டார்கள். உச்சிதமான பதார்த்தங்களைப் புசிக்கமாட்டார்கள். தலையில் சாம்பல் பூசிக்கொள்வார்கள். தலையிலுள்ள முடியையும், தாடியையும் சவரம் பண்ணாமல் விட்டுவிடுவார்கள். துக்க நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டுமுறை புலம்பல் பாடுவார்கள். ஒப்பாரி பாடுவதற்காக அதற்கென்று ஆட்களை கூலிக்கு நியமித்துக் கொள்வார்கள். (ஆதி 50:10-11)
மரித்தவர்களுக்காக துக்கங்கொண்டாடுதல் ஏழு நாட்கள் நடைபெறுகிறது. அது தீட்டான நாட்களாக இருக்கும். (எண் 19:11,19; 1சாமு 31:13). சில சமயங்களில் எபிரெயர்கள் முப்பது நாட்களுக்கு துக்கம் கொண்டாடுகிறார்கள். (எண் 20:29; உபா 34:8)
யோசேப்பு எகிப்து தேசத்தாருக்கு நன்மை செய்திருக்கிறார். யோசேப்பு தங்களுக்கு செய்த நன்மைகளை எகிப்து தேசத்தார் மறந்துவிடக்கூடாது. ஆபேல்மிஸ்ராயீம், எகிப்தியரின் பிற்கால சந்ததியாருக்கு, ஒரு நினைவுச்சின்னம்போல இருக்கிறது. அவர்கள் ஆபேல்மிஸ்ராயீமை நினைவுகூர்ந்து, யோசேப்பு தங்களுடைய முற்பிதாக்களுக்கு செய்த நன்மைகளையும் நினைவுகூரவேண்டும். ஆனால் எகிப்தியர்கள் இஸ்ரவேல் புத்திரரை பிற்காலத்தில் ஒடுக்குகிறார்கள்.
யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, அவர்கள் யாக்கோபின் சரீரத்தை கானான் தேசத்துக்குக் கொண்டுபோகிறார்கள். ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே யாக்கோபின் சரீரத்தை அடக்கம்பண்ணுகிறார்கள் (ஆதி 50:12,13).
யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணின பின்பு, அவரும் அவர் சகோதரரும், அவருடைய தகப்பனை அடக்கம் பண்ணுவதற்கு அவரோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பி வருகிறார்கள் (ஆதி 50:14). யோசேப்பு பார்வோனுக்கு சொன்னதுபோல, கானான் தேசத்திலே தன் தகப்பனை அடக்கம்பண்ணிவிட்டு, எகிப்து தேசத்திற்கு திரும்பி வருகிறார்.
யோசேப்பும் அவருடைய சகோதரரும்
ஆதி 50:15#21
ஆதி 50:15. தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான் என்று சொல்-, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,
ஆதி 50:16. உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
ஆதி 50:17. ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.
ஆதி 50:18. பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.
ஆதி 50:19. யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;
ஆதி 50:20. நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
ஆதி 50:21. ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்-, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்.
யாக்கோபு மரித்துவிட்டார். யோசேப்பும் அவருடைய சகோதரரும் தங்கள் தகப்பனார் யாக்கோபின் சரீரத்தை கானான் தேசத்திலே அடக்கம்பண்ணிவிட்டு, எகிப்து தேசத்திற்கு திரும்பி வருகிறார்கள். யோசேப்பின் சகோதரர் அவருக்கு ஏராளமான பொல்லாங்குகளை செய்திருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய மனதில் குற்றவுணர்வு உண்டாயிற்று. அவர்கள் யோசேப்பினுடைய பாசத்தின்மீதும், பராமரிப்பின்மீதும் சந்தேகப்படுகிறார்கள்.
தங்கள் தகப்பன் யாக்கோபு இதுவரையிலும் உயிரோடிருந்ததினால்தான், யோசேப்பு தங்கள்மீது அன்பாயிருந்தார் என்றும், யாக்கோபு மரணமடைந்ததினால், யோசேப்பு இனிமேல் தங்களை பகைப்பார் என்றும் அவருடைய சகோதரர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் சந்தேகத்தை யோசேப்புக்கு நேரடியாக சொல்லாமல், ஒரு ஆள் மூலமாக சொல்லியனுப்புகிறார்கள். யோசேப்பு தங்களைப் பகைப்பார் என்றும், தாங்கள் அவருக்கு செய்த எல்லா பொல்லாங்குக்காகவும் அவர் தங்களுக்கு சரிக்கு சரிக்கட்டுவார் என்றும் யோசேப்பின் சகோதரர் பயப்படுகிறார்கள்.
நம்முடைய குடும்பத்தில், குடும்பத்தலைவர் மரணமடையும்போது, குடும்பத்தில் புதிய சூழ்நிலைகள் உண்டாகும். பெற்றோர் மரித்த பின்பு, பிள்ளைகள் குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். பெற்றோரின் சுபாவமும், பிள்ளைகளின் சுபாவமும் ஒன்றுபோல் இருக்காது. ஆனாலும் குடும்பத்தின் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளவேண்டுமென்றால் குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் தங்களுக்குள்ளே அன்பின் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளவேண்டும். குடும்பத்தில் அன்பு இல்லையென்றால் அங்கே ஒற்றுமையும் இருக்காது.
யோசேப்பின் சகோதரர் அவருடைய அன்பை சந்தேகப்படுகிறார்கள். இதன் மூலமாக தங்கள் குடும்பம் இனிமேல் ஒற்றுமையாகயிருக்குமா என்பதையே சந்தேகப்படுகிறார்கள். அவர்கள் யோசேப்பின் அன்பை உறுதிபண்ண விரும்புகிறார்கள். தாங்கள் யோசேப்புக்கு செய்த பாதகத்தையும், துரோகத்தையும், அவர் தயவாய் மன்னிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.
யோசேப்பின் சகோதரர் ஒரு ஆள் மூலமாக, தங்கள் மனதின் எண்ணங்களை யோசேப்புக்கு சொல்லியனுப்புகிறார்கள். அந்தச் செய்தியில் அவர்கள் தங்கள் தகப்பனாராகிய யாக்கோபுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
யோசேப்பின் சகோதரர், ஒரு ஆள் மூலமாக, "" உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும்'' (ஆதி 50:16,17) என்று யோசேப்புக்கு செய்தி சொல்லியனுப்புகிறார்கள். அந்த ஆளும் அவர்கள் சொன்ன செய்தியை யோசேப்புக்கு சொல்லுகிறார்.
யாக்கோபு நடைபெறப்போகும் காரியங்களை ஏற்கெனவே முன்னறிந்து இவ்வாறு கட்டளையிட்டிருக்கிறார். யோசேப்பு தவறு செய்வார் என்பதற்காக அல்ல. தன்னுடைய பிள்ளைகளைத் திடப்படுத்துவதற்காகவே யாக்கோபு இவ்வாறு கூறினார். இதன் மூலமாக யோசேப்பின் சகோதரர்கள் தாங்கள் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி, தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, திருந்தி, நல்லவர்களாக ஜீவிப்பார்கள்.
தங்களுடைய தகப்பனார் உயிரோடிருந்தது வரையிலும், அவர்கள் யாக்கோபின் பாதுகாப்பிலும் நிழலிலும் இருந்தார்கள். தங்கள் குடும்பம் ஒற்றுமையாயிருக்கும் என்றும், யோசேப்பு தங்களை பாதுகாத்து பராமரிப்பார் என்றும், யோசேப்பின் சகோதரர் நிச்சயமாய் நம்பினார்கள். ஆனால் இப்போதோ அவர்களுடைய தகப்பனார் யாக்கோபு மரணமடைந்துவிட்டார். இனிமேல் யோசேப்பின் மனது மாற்றமடையவதற்கு வாய்ப்புள்ளது என்று அவருடைய சகோதரர்கள் நினைக்கிறார்கள்.
யோசேப்பின் சகோதரர் அவருக்கு ஏற்கெனவே ஏராளமான பொல்லாங்குகளை செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த துரோகங்களினிமித்தமும், பொல்லாங்குகளினிமித்தமும், அவர்களுடைய மனச்சாட்சி அவர்களைக் குற்றப்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு யோசேப்பை நினைக்கும்போது, மனதிலே பயமுண்டாகிறது. நாம் மனுஷருக்கு பயப்படாதிருக்க வேண்டுமென்றால், நம்முடைய மனச்சாட்சி குற்றமில்லாமல் சுத்தமாயிருக்கவேண்டும்.
யோசேப்பின் சகோதரர் தங்களுடைய அக்கிரமங்களையும், பாதகத்தையும் அங்கீகரிக்கிறார்கள். யோசேப்பு தங்களை தயவாய் மன்னிக்கவேண்டுமென்று அவருக்கு பணிவோடு செய்தி சொல்லியனுப்புகிறார்கள். யோசேப்பின் தகப்பனாராகிய யாக்கோபு, அவர்களுடைய பாவங்களைக் குறித்து, யோசேப்புக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இது யோசேப்புக்கும் தெரியும்.
யாக்கோபு உயிரோடிருக்கையில், அவர் யோசேப்பை நோக்கி, ""உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும்'' என்று, அவர் மரணமடையும் முன்னே, கட்டளையிட்டிருக்கிறார். தகப்பனாரின் கட்டளையை, அவருடைய குமாரர்கள், ஒரு ஆள் மூலமாக, யோசேப்புக்கு ஞாபகப்படுத்துகிறார்கள்.
யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்புக்கு முன்பாக தங்களை தாழ்த்துகிறார்கள். அவர்கள் யோசேப்பினிடத்தில் தங்களைப்பற்றிச் சொல்லும்போது, ""உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள்'' என்று சொல்லுகிறார்கள். இந்த வாக்கியத்திற்கு, ""நாங்கள் உம்முடைய ஊழியக்காரர்கள்'' என்று பொருள். யோசேப்பின் சகோதரர் யாக்கோபின் பெயரையும், யாக்கோபுடைய தேவனின் பெயரையும் இங்கு சொல்லுவதன் மூலமாக, அவர்கள் தங்களுக்கும் யாக்கோபுக்கும், யாக்கோபின் தேவனுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லுகிறார்கள்.
யோசேப்புக்கும் அவருடைய சகோதரர் எல்லோருக்கும் யாக்கோபு ஒரே தகப்பனாயிருக்கிறார். யோசேப்பின் சகோதரர் தங்களுக்குள்ளே இருக்கும் ஐக்கியத்தைப்பற்றிச் சொல்லும்போது, தாங்கள் எல்லோரும் ஒரே கர்த்தரை ஆராதிப்பதாகவும் சொல்லுகிறார்கள். யோசேப்பு எந்த தேவனை ஆராதிக்கிறாரோ, அந்த தேவனையே அவருடைய சகோதரரும் ஆராதிக்கிறார்கள். தங்களுக்குள்ளே இதுபோல ஏராளமான ஒற்றுமைகள் இருக்கிறது என்று யோசேப்பின் சகோதரர் தங்களைப்பற்றி யோசேப்புக்கு பணிவாக சொல்லுகிறார்கள்.
யோசேப்பு தன் சகோதரர் சொல்லியனுப்பின செய்திகளைக் கேட்டு, மிகவும் அழுகிறார் (ஆதி 50:17). யோசேப்பு தன் சகோதரர் மீது அன்பாயும், மனவுருக்கமாயும், கரிசனையாயும் இருக்கிறார். அவர்கள் தனக்கு செய்த பொல்லாங்குகளை யோசேப்பு ஏற்கெனவே மன்னித்து மறந்துவிட்டார். அவர் இப்போது தன்னுடைய சகோதரரோடு பகையில்லாமல் முற்றிலுமாய் ஒப்புரவாகியிருக்கிறார்.
ஆனால் யோசேப்பின் சகோதரரோ, அவருடைய அன்பை சந்தேகப்படுகிறார்கள். அவருக்கு தாங்கள் செய்த பொல்லாப்புக்காக, அவர் தங்களுக்கு சரிக்கு சரிக்கட்டுவாரோ என்று பயப்படுவார்கள். ஆனால் யோசேப்போ தன் சகோதரரின் வார்த்தைகளைக் கேட்டு அழுகிறார்.
தன்மீதும், தன்னுடைய மாயமில்லாத அன்பின்மீதும், தன்னுடைய சகோதரர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது, யோசேப்புக்கு அழுகை வருகிறது. இது வருத்தத்தின் அழுகை. அவருடைய கண்களில் துக்கத்தினால் கண்ணீர் வருகிறது. ஆனாலும் யோசேப்பின் சகோதரர், யோசேப்புக்கு முன்பாக தங்களை வெகுவாகத் தாழ்த்துகிறார்கள். அவர்களுடைய கீழ்ப்படிதலை நினைத்தும் யோசேப்பு மிகுந்த அன்பினாலும், பாசத்தினாலும் கண்ணீர் விட்டு அழுகிறார்.
யோசேப்பு அழுவதைப் பார்த்து, அவருடைய சகோதரர் அவரிடத்திற்கு அருகாமையில் போய், அவருக்கு முன்பாக தாழவிழுகிறார்கள். அவர்கள் யோசேப்பை நோக்கி, ""இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள்'' (ஆதி 50:18) என்று சொல்லுகிறார்கள்.
தன்னுடைய சகோதரர் தனக்கு செய்த துரோகத்தையும், பாதகத்தையும் மன்னிப்பதற்கு தான் பாத்திரவானல்ல என்றும், தன் சகோதரரை மன்னிக்க தனக்கு எந்த தகுதியுமில்லை என்றும் யோசேப்பு நினைக்கிறார். ஆகையினால் யோசேப்பு மிகுந்த மனத்தாழ்மையோடு, தன் சகோதரரை நோக்கி, ""நான் தேவனா'' என்று கேட்கிறார். இந்த வாக்கியத்திற்கு, ""உங்களை மன்னிப்பதற்கு நான் தேவனா'' என்று பொருள்.
யோசேப்பின் சகோதரர்கள் தேவனோடு சமாதானமாயிருக்கவேண்டும். தேவனோடு சமாதானமாயிருக்கிறவர்கள் மனுஷரோடும் சமாதானமாயிருப்பார்கள். யோசேப்பின் சகோதரர் தேவனோடு ஒப்புரவாகி, அவரோடு சமாதானமாயிருந்தால், அதன் பின்பு யோசேப்போடு சமாதானமாயிருப்பது அவர்களுக்கு இலகுவாயிருக்கும்.
யோசேப்பின் சகோதரரோ அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவர்கள் யோசேப்புக்கு முன்பாக வரும்போது, தாழவிழுந்து, இதோ நாங்கள் உமக்கு அடிமைகள்'' என்று சொல்லுகிறார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி, ""பயப்படாதிருங்கள்'' என்றும் சொல்லுகிறார்.
யோசேப்பு தன்னுடைய சகோதரர் தனக்கு செய்த துரோகத்தையும், பாதகத்தையும் அவர்களுக்கு உணர்த்துகிறார். யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, ""நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்'' (ஆதி 50:20) என்று சொல்லுகிறார்.
யோசேப்பின் சகோதரர் அவருக்கு தீங்கு செய்திருந்தாலும், கர்த்தர் அவர்கள் செய்த தீங்கை, அவர்களுக்கு நன்மையாக மாற்றுகிறார். ஆகையினால் அவர்கள் தங்களுடைய துரோகத்திற்கும் பாதகத்திற்கும் வருத்தப்படவேண்டியதில்லை என்று யோசேப்பு சொல்லுகிறார். யோசேப்பு அவர்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.
கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் ஒருபோதும் தடைபடாது. அவர் தீமையான காரியங்களிலிருந்து நன்மையான காரியங்களை உண்டுபண்ணுகிறவர். தேவனுடைய தெய்வீக திட்டங்களும், அவருடைய பராமரிப்புக்களும், அவருடைய சித்தத்தின் பிரகாரமாக நிறைவேறும். மனுஷர் பாவம் செய்தாலும், அந்தப் பாவத்தின் மூலமாக, தேவன் முடிவிலே நன்மையை உண்டுபண்ணுகிறவர். இதனால் தேவனே அந்தப் பாவத்திற்கு காரணர் என்று சொல்லக்கூடாது. தேவன் ஒருபோதும் மனுஷருடைய பாவத்திற்கு காரணரல்ல. மனுஷன் தன் சுயஇச்சையினாலே சோதிக்கப்பட்டு பாவம் செய்கிறான்.
தேவன் சர்வஞானமுள்ளவராகயிருப்பதினால், அவர் மனுஷருடைய பாவங்களையும், நன்மையான காரியங்களாக மாற்றுகிறார். யூதர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவானவரை அவமானப்படுத்தினார்கள். அவரை வேதனைப்படுத்தினார்கள். பிதாவாகிய தேவனோ, இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்தின் மூலமாக, மனுக்குலத்திற்கு இரட்சிப்பை உண்டுபண்ணினார்.
""அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது'' (அப் 2:23,24).
யாக்கோபு மரணமடைந்ததினால், யோசேப்பு இனிமேல் தங்களையும் தங்கள் குமாரரையும் போஜனம் கொடுத்து பராமரிப்பாரா என்னும் சந்தேகமும், யோசேப்பின் சகோதரருடைய மனதிலே உண்டாயிற்று. யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, ""பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்'' (ஆதி 50:21) என்று, சொல்லுகிறார். யோசேப்பு அவர்களுக்கு ஆறுதல் சொல்-, அவர்களோடே பட்சமாய்ப் பேசுகிறார்.
யோசேப்பின் மரணம்
ஆதி 50:22#26
ஆதி 50:22. யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான்.
ஆதி 50:23. யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
ஆதி 50:24. யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;
ஆதி 50:25. தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்தி-ருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்-; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.
ஆதி 50:26. யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
யோசேப்பும் அவர் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருக்கிறார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருக்கிறார் (ஆதி 50:22).
யோசேப்பின் குடும்பம் எகிப்து தேசத்திலே கட்டியெழுப்பப்படுகிறது. யோசேப்பு தன்னுடைய ஜீவிய காலத்திலே, தன்னுடைய பேரப்பிள்ளைகளையும், அவர்களுடைய பிள்ளைகளையும் பார்க்கிறார்.
யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் காண்கிறார். மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்படுகிறார்கள் (ஆதி 50:23).
யோசேப்பின் இரண்டு குமாரர்களாகிய மனாசேயும் எப்பிராயீமும், யாக்கோபின் மற்ற குமாரரைப்போல, இஸ்ரவேலின் கோத்திரப்பிதாக்களாயிருக்கிறார்கள். தன்னுடைய இரண்டு குமாரரும், தன்னுடைய சகோதரருக்கு சமமாயிருப்பதை யோசேப்பு மிகுந்த சந்தோஷத்தோடு பார்க்கிறார்.
யோசேப்பின் சகோதரரும் அவரோடேகூட எகிப்து தேசத்திலே இருக்கிறார்கள். யோசேப்பு தன்னுடைய கடைசி கால விருப்பத்தை, தன் சகோதரருக்கு சொல்லுகிறார்.
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, ""நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார்'' (ஆதி 50:24) என்று சொல்லுகிறார்.
தேவன் இஸ்ரவேல் ஜனத்தாரை எகிப்து தேசத்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்கு அழைத்துப் போவார். யாத் 13:19 - யோசு 24:32 ஆகிய வசனங்களில் இது நிறைவேறுகிறது. யோசேப்பிற்கு தீர்க்கதரிசன வரமும், வியாக்கியானம் பண்ணும் வரமும் இருக்கிறது. யோசேப்பிற்கு முன்பாகவே தேவனுடைய பிள்ளைகளில் சிலர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்தார்கள். யோசேப்பு மட்டுமே தனக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் மூலமாகப் பேசுகிறார். (ஆதி 41:38). இந்தச் செய்தியை யாக்கோபு யோசேப்பிற்குக் கூறியிருக்கிறார். (ஆதி 48:3-4,15-16,21).
யோசேப்பு எகிப்து தேசத்திலே மரணமடையப்போகிறார். ஆனாலும் தன்னுடைய எலும்புகள் எகிப்து தேசத்தில் அடக்கம்பண்ணப்படாமல், கானான் தேசத்தில் அடக்கம்பண்ணப்படவேண்டும் என்பது யோசேப்பின் விருப்பமாயிருக்கிறது. யோசேப்பு தன்னுடைய கடைசிகால விருப்பத்தை தன் சகோதரருக்கு சொல்லுகிறார்.
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, ""தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்தி-ருந்து கொண்டுபோவீர்களாக'' (ஆதி 50:25) என்று சொல்லுகிறார். யோசேப்பு தன்னுடைய கடைசிகால விருப்பத்தை, தன் சகோதரருக்கு சொன்னது மாத்திரமல்ல, இதை அவர்கள் செய்யவேண்டுமென்று, யோசேப்பு, இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொள்கிறார்.
யாக்கோபு மரித்த போது, அவருடைய சரீரத்தைக் கானான் தேசத்திற்குக் கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள். ஆனால் யோசேப்பின் சரீரத்தைக் கானான் தேசத்தில் அடக்கம் பண்ணவில்லை. யோசேப்பின் சரீரம் எகிப்து தேசத்தில் 144 வருஷங்களாக இருக்கிறது. (யாத் 13:19; யோசு 24:32).
யோசேப்பு தன் சகோதரருக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லுகிறார். அவர்களுக்கு ஆறுதலையும் ஆசீர்வாதத்தையும் சொல்ல யாக்கோபு இப்போது உயிரோடில்லை. ஆகையினால் யோசேப்பு அவர்களுடைய தகப்பனாரின் ஸ்தானத்திலிருந்து, அவர்களை நோக்கி, ""தேவன் உங்களை நிச்சயமாய் சந்திப்பார்'' என்றும், ""அவர் உங்களை கானான் தேசத்திற்கு போகப்பண்ணுவார்'' என்றும் சொல்லுகிறார்.
யோசேப்பின் சகோதரர் அவருடைய வார்த்தைகளை நம்பவேண்டும். அவர்களுடைய இருதயம் கானான் தேசத்தை நோக்கிப் பார்க்கவேண்டும். கானான் தேசமே அவர்களுக்கு வாக்குத்தத்த தேசம். எகிப்து தேசத்திலே தானியமும், ஆடம்பரமும் இருந்தாலும் இஸ்ரவேல் புத்திரருக்கு அது சொந்த தேசமல்ல.
எகிப்து தேசத்திலே விக்கிரகாராதனை நிரம்பியிருக்கிறது. தங்களுடைய பின்சந்ததியார் எகிப்தின் பாவங்களிலே மூழ்கிப்போய்விடுவார்களோ என்று நினைத்து, இஸ்ரவேல் புத்திரர் பயப்படவேண்டிய அவசியமில்லை. தேவன் அவர்களை நிச்சயமாய் சந்திப்பார். தேவன் அவர்களை இந்த தேசத்தைவிட்டு கானான் தேசத்திற்கு நிச்சயமாய்ப் போகப்பண்ணுவார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே அழிந்துபோகமாட்டார்கள். அவர்கள் கானான் தேசத்திற்கு, ஜெயத்தோடே திரும்பிப்போவார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை நம்பவேண்டும். யோசேப்பு கர்த்தருடைய வார்த்தையை நம்புகிறார். அவர் கர்த்தர் மீது தான் வைத்திருக்கும் விசுவாசத்தை உறுதிபண்ணும் வண்ணமாக, தான் மரித்த பின்பு, தன்னுடைய எலும்புகளை கானான் தேசத்திற்கு கொண்டு போகவேண்டும் என்று சொல்லுகிறார்.
யோசேப்பு எகிப்து தேசத்திலே மரித்துப்போகிறார். அவருடைய சரீரத்தை, எகிப்து தேசத்திலே ஒருபெட்டியிலே வைத்து வைக்கிறார்கள். யோசேப்பின் சரீரத்தை எகிப்துதேசத்திலே அடக்கம் பண்ணவில்லையென்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். அவருடைய சரீரம் வைக்கப்பட்ட பெட்டி, கானான் தேசத்திற்கு கொண்டுபோகப்பட்டது என்றும், யோசுவா யோசேப்பின் சரீரத்தை கானான் தேசத்திலே அடக்கம்பண்ணினார் என்றும் வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, ""தேவன் உங்களை சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக'' என்று சொல்லி இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொள்கிறார். யோசேப்பு சொல்லுகிற இந்த வாக்கியத்திற்கு, ""என்னுடைய சரீரத்தை எகிப்து தேசத்திலே அடக்கம்பண்ணக்கூடாது என்றும், அதை கானான்தேசத்திற்கு எடுத்துக்கொண்டுபோய், அங்கே அடக்கம்பண்ணவேண்டும்'' என்றும் பொருளாகும்.
யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவராக எகிப்து தேசத்திலே மரிக்கிறார். யோசேப்பின் சரீரத்திற்கு சுகந்த வர்க்கமிடுகிறார்கள். அவருடைய சரீரத்தை எகிப்து தேசத்திலே ஒரு பெட்டியிலே வைக்கிறார்கள் (ஆதி 50:26). யோசேப்பின் சரீரம் எகிப்து தேசத்திலே அடக்கம் பண்ணப்படவில்லை. இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்தை சுதந்தரிக்கும்போது, அவர்கள் யோசேப்பின் சரீரத்தை கானான் தேசத்திலே அடக்கம்பண்ணுகிறார்கள்.
யோசேப்பு மற்ற முற்பிதாக்களைப்போல அதிக வருஷம் வாழவில்லை. அவர்களைவிட வயதில் குறைவாக இருக்கும்பொழுதே யோசேப்பு மரித்துவிடுகிறார். ஆபிரகாமைவிட 65 வயது குறைவு (ஆதி 25:7); ஈசாக்கைவிட எழுபது வருஷம் குறைவு (ஆதி 35:28); யாக்கோபைவிட 37 வயது குறைவு (ஆதி 47:28); சாராளைவிட 17 வயது குறைவு (ஆதி 23:1); இஸ்மவேலைவிட 27 வயது குறைவு (ஆதி 25:17); மோசேயைவிட 10 வயது குறைவு (உபா 31:2)
""இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று'' (யோசு 24:32).
இவ்வாறாக ஆதியாகமம் புஸ்தகம் முடிவு பெறுகிறது. இந்தப் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் ஜீவனைப்பற்றியும், இந்தப் புஸ்தகத்தின் முடிவில் மரணத்தைப்பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. மனுஷருடைய பூமிக்குரிய ஜீவியம், ஜீவனில் ஆரம்பித்து மரணத்தில் முடிவு பெறுகிறது.
சவப்பெட்டியைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் முதலாவது குறிப்பும், கடைசிக் குறிப்பும் இதுதான். எகிப்து தேசத்தில் யூதர்கள் சவப்பெட்டிகளைப் பயன்படுத்தவில்லை. ஆதியாகமம் புஸ்தகம் தேவனை மையமாக வைத்து ஆரம்பிக்கிறது. மனுஷனை மையமாக வைத்து முடிவு பெறுகிறது. தேவன் ஆதியிலே வானத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆதியாகமம் கடைசியில் மனுஷனுடைய ஜீவன் எகிப்தில் ஒரு சவப்பெட்டியில் போய் முடிவடைகிறது.
பரிசுத்த வேதாகமத்தில் மனுஷருடைய மரணத்தைப்பற்றி மிகவும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் மரணம் என்பது அதன் அழிவைக் குறிக்கும். அத்துடன் அதன் ஜீவன் முடிந்து போகிறது. மனுஷனுக்கு மரணம் என்பது அவனுடைய ஜீவனின் முடிவல்ல. மனுஷன் சரீரப் பிரகாரமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். அதே வேளையில் அவன் ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஜீவிக்கிறான். ஆகையினால் மனுஷனுடைய சரீர மரணம் என்பது அவனுடைய மற்றொரு ஜீவனின் ஆரம்பமாகும்.
மரணத்தில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன: 1. சரீர மரணம், 2. ஆவிக்குரிய மரணம், 3. நித்திய மரணம் என்பனவாகும். முதலாவது சரீர மரணம் ஆபேலுக்கு உண்டாயிற்று. ஆபேலின் சகோதரன் காயீன் இவனைக் கொன்று போட்டான் (ஆதி 4:8). தேவன் தாமே சரீரமரணத்தையும் ஆவிக்குரிய மரணத்தையும் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் (ஆதி 2:17). ஆதியாகமத்தில் வீழ்ச்சி என்பது சரீர மரணத்தையும் ஆவிக்குரிய மரணத்தையும் குறிக்கும். இந்த வீழ்ச்சி பாவத்தின் விளைவினால் உண்டாயிற்று (ரோம 5:12#21).
மனுஷன் மரித்த பின்பு அவன் பாதாளத்திற்குப் போவான் என்று பழங்காலத்து எபிரெய ஜனங்கள் நம்பினார்கள். இந்த உலகத்திலுள்ள தன்னுடைய உற்றார் உறவினர் ஆகிய அனைவரையும் விட்டுவிட்டு மனுஷன் மரித்தபின்பு பாதாளத்திற்குப் போகிறான். அவன் தேவனையும் விட்டு பிரிந்து செல்கிறான். தேவன் சங்கீதக்காரர்கருக்கு ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மீட்பராகிய தேவன் பரலோகத்திலும் பாதாளத்திலும் இருக்கிறார் (சங் 139:7#8). பாதாளத்திலிருந்து அவரால் மனுஷனை வெளியே கொண்டுவர முடியும் (1சாமு 2:6).
எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களாக ஆனார்கள் (ரோம 3:23). ஆவிக்குரிய பிரகாரமாக எல்லோருமே மரித்துப் போனார்கள். ஆவிக்குரிய ஜீவனுக்கு ஆதாரமாக இருக்கும் தேவனை விட்டு பிரிந்து போனார்கள். பாவத்தின் விளைவினால் மனுஷன் வெளிச்சத்தையும் சத்தியத்தையும் பகைக்கிறான். தேவனுடைய பிரமாணத்தை மீறுகிறான். இயேசு கிறிஸ்துவினால் ரட்சிக்கப்படாதவர்கள் அனைவரும் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்துப்போயிருக்கிறார்கள் (லூக் 15:32; எபே 2:1#3; கொலோ 2:13).
வேதாகமத்தில் இரண்டாம் மரணத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது (வெளி 2:11). இது நித்திய மரணமாகும். மனுஷன் தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிந்து இரண்டாம் மரணத்தில் நரகத்திற்குப் போகிறான். இரண்டாம் மரணம் என்பது அக்கினி கடலுக்கு ஒப்பானதாகும் (வெளி 20:14). ""பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாரதா தனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கட-லே பங்கடைவார்கள்'' (வெளி 21:8).
அப்போஸ்தலர் பவுல் மரணத்தை சத்துரு என அழைக்கிறார். பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணமாகும் (1கொரி 15:26). இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த போது சரீரப் பிரகாரமான மரணத்தையும், ஆவிக்குரிய மரணத்தையும், நித்திய மரணத்தையும் ஜெயித்தார். மரணபயம் மனுஷரை அடிமைப்படுத்துகிறது (எபி 2:15). ""நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்'' (2தீமோ 1:10).
ஒரு தரம் பிறப்பதும் பின்பு ஒரேதரம் மரிப்பதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. மனுஷனுடைய மரிக்கும் காலம் யாருக்கும் தெரியாது. தேவன் வெளிப்படுத்தினால் மட்டுமே அது தெரியும். ஆனாலும் எல்லோரும் மரித்துப் போகவேண்டுமென்று மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறது. (எபி 9:27) சவுலின் மரணத்தைக் குறித்து ஒரு அசுத்தஆவி அவனுக்கு வெளிப்படுத்திற்று. (1சாமு 28:19= 1நாளா 10:13-14). ஆயினும் சில சமயங்களில் மனுஷன் மரிப்பதற்கு முன்பாகவே தேவன் அவனுடைய மரணத்தை குறித்து வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் விவரம் வருமாறு:
1. யாக்கோபு (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (ஆதி 48:1; ஆதி 49:29-33)
2. ஆரோன் (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (எண் 20:23-29)
3. மோசே (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (உபா 31:2; உபா 32:48-52; உபா 34:1-8)
4. யோசுவா (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (யோசு 23:14)
5. எசேக்கியா (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு # ஆனால் கர்த்தர் இதை 15 வருஷமாக மாற்றினார்) (2இராஜா 20:1-8; ஏசா 38)
6. எசேக்கியேலின் மனைவி (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (எசே 24:15-20)
7. ஐசுவரியமுள்ள மதியீனன். (மரிப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு) (லூக்கா 12:16)
பரிசுத்த வேதாகமத்தில் மூன்றுவிதமான மரணத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
1. சரீர மரணம் # சரீரத்திலிருந்து உள்ளான மனுஷன் பிரிக்கப்படுவது. (யாக் 2:26)
2. ஆவிக்குரிய மரணம் # பாவத்தின் நிமித்தமாக ஒரு மனுஷன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுவது. (எபே 2:1,5; ஏசா 59:2; மத் 8:22; கொலோ 2:13; 1தீமோ 5:6)
3. நித்திய மரணம் # மனுஷன் பாவத்தில் ஜீவித்து தேவனிடமிருந்து பிரிந்து வாழவேண்டுமென்று தீர்மானம் பண்ணுவதினால் தேவனிடத்திலிருந்து நித்திய காலமாகப் பிரிக்கப்படுவது. (மத் 10:28; மத் 25:41,46; வெளி 2:11; வெளி 14:9#11; வெளி 20:11#15; வெளி 21:8; வெளி 22:15; ஏசா 66:22#24) இந்த மரணம் இரண்டாம் மரணம் அல்லது தேவனிடமிருந்து இரண்டாம் முறையாகப் பிரிக்கப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. (வெளி 2:11; வெளி 20:14; வெளி 21:8)
மனுஷன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். அந்த நோக்கத்திலிருந்து பிரிக்கப்படுவதே மரணம் என்னப்படுகிறது. சரீர மரணத்தில் மனுஷனுடைய சரீரம் மரித்து மண்ணுக்குத் திரும்புகிறது. (ஆதி 3:19; யாக் 2:26) ஆவியும் ஆத்துமாவும் அழியாதவை. சரீரம் மரித்தாலும் ஆவியும், ஆத்துமாவும் பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ மரிக்காமல் உயிரோடு இருக்கும் (1பேதுரு 3:4; லூக்கா 12:5; லூக்கா 16:23).
மனுஷன் மரித்த பின்பு எங்கே போகிறான் என்பதற்கும் பரிசுத்த வேதாகமத்தில் தெளிவான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
எல்லா மனுஷருக்கும் மரணம் சம்பவிக்கும். ஒரேதரம் மரிப்பது மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. மரித்த பின்பு, மனுஷனுடைய நிலை என்ன என்பதைக் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
மரணம் என்றால் என்ன என்பதற்கும் பரிசுத்த வேதாகமத்திலே விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
தேவன் மனுஷனை ஒரு நோக்கத்தோடு சிருஷ்டித்திருக்கிறார். அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாதவாறு மனுஷன் ஒதுக்கி வைக்கப்படுவதை மரணம் என்று கூறலாம். மரணத்தில் மூன்று வகைகள் உண்டு. அவையாவன: 1. சரீர மரணம் 2. ஆவிக்குரிய மரணம் 3. இரண்டாம் மரணம்
புறம்பான மனுஷனிலிருந்து உள்ளான மனுஷன் பிரிக்கப்படுவது சரீர மரணமாகும். அதாவது சரீரத்திலிருந்து ஆவியும், ஆத்துமாவும் பிரிக்கப்படுவது. (யாக் 2:26).
மனுஷன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுவது ஆவிக்குரிய மரணமாகும். மனுஷனுடைய பாவத்தின் விளைவினால் அவன் தேவனோடு வைத்திருக்கும் ஐக்கியத்தை இழந்துபோகிறான். ஒருவன் சரீரப்பிரகாரமாக ஜீவனோடு இருந்தாலும், அவன் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவனாகவும் இருக்க முடியும். (மத் 8:22; கொலோ 2:14; 1தீமோ 5:6). ஒருவன் சரீரப் பிரகாரமாக மரித்துப்போயிருக்கலாம். ஆனாலும் நரகத்தில் ஜீவனோடு இருப்பான். அவனுடைய ஆவியும், ஆத்துமாவும் மரிப்பதில்லை. உணர்வுள்ளதாகவே இருக்கும். அதாவது உள்ளான மனுஷன் ஒருபோதும் மரிப்பதில்லை.
இதற்கு நித்திய மரணம் என்னும் மறுபெயரும் உள்ளது. தேவனிடமிருந்து இரண்டாம் முறையாக பிரிக்கப்பட்டு, நித்திய அக்கினியில் தள்ளப்படுவது. தேவனிடமிருந்து முதல் முறையாகப் பிரிக்கப்படும்போது அவனுக்கு ஆவிக்குரிய மரணம் உண்டாகிறது. தேவனிடமிருந்து இரண்டாம் முறையாகப் பிரிக்கப்படும்போது அவனுக்கு நித்திய மரணம் உண்டாகிறது. (வெளி 2:11; வெளி 20:6, 14; வெளி 21:8).
பாவத்தின் சம்பளம் நித்திய மரணம். அதாவது தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிக்கப்பட்டு, நரகத்தில் தள்ளப்படுவது. சரீர மரணம் பாவத்தின் சம்பளமாகக் கொடுக்கப்படவில்லை. ஏனெனில் சன்மார்க்கரும், துன்மார்க்கரும் சரீரப் பிரகாரமாக மரித்துப் போகிறார்கள். சரீர மரணம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அல்ல.
சரீர மரணம் மனுஷனுடைய பாவத்திற்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பாக இருக்குமென்றால் தேவனால் அவனை மறுபடியும் தண்டிக்க முடியாது. சரீர மரணம் மட்டுமே பாவிக்கு தண்டனையாக இருக்கும். சரீர மரணம் நரகத்திற்கு அல்லது பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பாக ஏற்படும் சம்பவம். சரீர மரணத்தை அனுபவிக்கிறவர்களில் சிலர் பரலோகத்திற்கும், சிலர் நரகத்திற்கும் போவார்கள். ஆகையினால் பாவத்தின் சம்பளம் சரீர மரணமல்ல. இரண்டாம் மரணமாகிய நித்திய மரணமே பாவத்தின் சம்பளமாகும்.
பாவத்தின் சம்பளம் ஆவிக்குரிய மரணமுமல்ல. ஆவிக்குரிய மரணம் என்பது மனுஷன் பாவம் செய்யும்போது அவனுக்கு உண்டாகும் நிலைமை. ஆவிக்குரிய மரணத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பினால், கர்த்தர் அவர்களை இரட்சிப்பார். இரட்சிக்கப்பட்டவர்கள் ஆவிக்குரிய மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறார்கள். எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும். எல்லோரும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது தேவனுடைய சித்தம் (ரோமர் 3:23).
பாவத்தின் சம்பளம் சரீர மரணமோ, ஆவிக்குரிய மரணமோ அல்ல. தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நித்திய மரணமே பாவத்தின் சம்பளமாகும். ஆவிக்குரிய மரணம், நித்திய மரணம் ஆகியவற்றின் விளைவினால் சரீர மரணம் உண்டாகிறது. ஆவிக்குரிய மரணத்திற்குத் தண்டனையாக நித்திய மரணம் கொடுக்கப்படுகிறது. (எபே 2:1#9).
மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைப்பற்றியும் பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
ஒருவன் பாவம் செய்கிறபோது, அவன் ஆவிக்குரிய ரீதியாக மரித்துப்போகிறான். அவன் இரட்சிக்கப்படும்போது ஆவிக்குரிய மரணத்திலிருந்து உயிர்த்தெழுகிறான். (எபே 2:1#10) அவன் மறுபடியும் பிறக்கிறான். (யோவான் 3:1#8) அவன் புதிய சிருஷ்டியாகிறான். (2கொரி 5:17#18) இயேசு கிறிஸ்து மூலமாக அவன் தேவனோடு முழுவதுமாக மறுபடியும் ஒப்புரவாகிறான். (2கொரி 5:14#21; எபே 2:12#16; கொலோ 1:20#22; கொலோ 2:6#13)
ஆத்துமா மரிப்பதில்லை. ஆவியும், ஆத்துமாவும் சேர்ந்து, உள்ளான மனுஷன் என்று அழைக்கப்படுகிறது. ஆவியும், ஆத்துமாவும் மரிப்பதில்லை. சரீரம் மரித்த பின்பும், மரித்த சரீரம் உயிர்த்தெழுந்த பின்பும், ஆவியும், ஆத்துமாவும் நித்திய காலமாக ஜீவனோடு இருக்கும். அவை ஒருபோதும் மரிப்பதில்லை.
சரீரம் மரித்துப்போகும். சரீரம் மண்ணாயிருக்கிறது. அது மண்ணுக்குத் திரும்பும். (ஆதி 3:19; பிர 3:19#21; எபி 9:27; யாக் 2:26). பாவம் ஒழிக்கப்பட்டு, மரணம் அழிக்கப்படும் வரையிலும் மனுஷருடைய சரீரம் மரித்துக் கொண்டேதான் இருக்கும் (1கொரி 15:24-28; வெளி 21:3-7; வெளி 22:3).
பரிசுத்த வேதாகமத்தில் மரித்தோரின் உயிர்தெழுதலைப்பற்றியும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
ஒருவர் மரிக்கும்போது அவருடைய சரீரம் மட்டுமே மரித்துப் போகிறது. அவருடைய ஆவியும், ஆத்துமாவும் ஒருபோதும் மரிப்பதில்லை. மரித்தோரின் உயிர்த்தெழுதல் என்பது மரித்த சரீரங்களின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும். மண்ணுக்குப்போன சரீரம் மறுபடியும் மண்ணிலிருந்து உயிர்த்தெழும். (தானி 12:2; யோவான் 5:28#29; 1கொரி 15; 1தெச 4:13#17; வெளி 20:4#6,11#15).
மரித்தோரின் சரீரம் மட்டுமே உயிர்த்தெழும். ஆவிக்குரிய உயிர்த்தெழுதலென்று ஒன்றுமே இல்லை. ஆவியும், ஆத்துமாவும் உயிர்த்தெழுவதில்லை. ஒரு மனுஷன் மரிப்பதற்கு முன்பாக அவன் ஜீவனோடு இருக்கும் காலத்தில் ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது (எபே 2:1#10; கொலோ 2:11#13)
மனுஷருடைய சரீரம் மரித்த பின்பு, அவனுடைய ஆவியும் ஆத்துமாவும் உயிரோடு இருக்கும். அவை உயிர்த்தெழுவதில்லை. இம்மையில் ஒருவன் ஆவிக்குரிய ரீதியாக உயிர்த்தெழவில்லையென்றால், மறுமையில் அவன் ஆவிக்குரிய ரீதியாக மரித்தவனாகவே இருப்பான். அவன் தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிந்திருப்பான். (எபி 9:27; எபி 22:11).
சரீரம் மரித்துப்போகும். மரித்துப்போன சரீரம் உயிர்த்தெழுந்தபின்பு, அது மறுபடியும் மரித்துப் போவதில்லை. உயிர்த்தெழுந்த சரீரம் நித்திய காலமாய் ஜீவனோடு இருக்கும்.
சரீர மரணத்திற்கும், சரீர உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட நிலமை உண்டு. அதன் விளக்கம் வருமாறு :
சரீர மரணத்தில் சரீரம் மண்ணுக்குப் போகிறது. (ஆதி 3:19; பிர 3:19#21; யாக் 2:26) உள்ளான மனுஷனாகிய ஆவியும், ஆத்துமாவும் சரீரத்திலிருந்து பிரிந்து போகிறது. உயிர்த்தெழும் நாள் வரையிலும் சரீரம் மரித்ததாகவே இருக்கும். உயிர்த்தெழும் நாளில் சரீரம் மறுபடியும் உயிரோடு எழும்புகிறது. உயிர்த்தெழுந்த சரீரம் ஒருபோதும் மரித்துப் போவதில்லை. (1கொரி 15:35#54). இந்த இடைப்பட்ட காலத்தில் ஆவியும், ஆத்துமாவும் மரித்துப் போகாமல் ஜீவனோடு இருக்கும்.
அவை பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ இருக்கலாம். சரீரம் உயிர்த்தெழும் நாள் வரையிலும் அவை அங்கிருக்கும். உயிர்த்தெழும் நாளில் சரீரம் உயிர்த்தெழும்போது அதன் ஆவியும், ஆத்துமாவும் அதன் சரீரத்தோடு சேர்ந்து கொள்ளும்.
சரீர மரணத்தின்போது ஆவியும், ஆத்துமாவும் சரீரத்தை விட்டுப் பிரிந்து போகிறது. (யாக் 2:26). ஒருவன் இரட்சிக்கப் பட்டு மரித்துப்போனால், அவன் மரணமடைந்தவுடன், அவனுடைய ஆவியும், ஆத்துமாவும், உடனடியாகப் பரலோகத்திற்குச் செல்லும். அங்கு அவை அவனுடைய சரீரத்தின் உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கும். (லூக்கா 20:38; யோவான் 11:25#26; 2கொரி 5:8; எபே 3:15; எபே 4:8#10; பிலி 1:21#24; எபி 12:22#23; வெளி 6:9#11).
ஒருவன் இரட்சிக்கப்படாமல் பாவியாக மரித்துப் போனால், அவன் மரணமடைந்தவுடன் அவனுடைய ஆவியும், ஆத்துமாவும் உடனடியாக நரகத்திற்குச் செல்லும். அங்கு அவை அவனுடைய சரீரத்தின் உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கும் (ஏசா 14:9;லூக்கா 16:19#31; 2பேதுரு 2:9; வெளி 20:11#15).
பாதாளத்தில் மரித்தோரின் ஆவிகள் இருக்கும் இடங்களைப்பற்றிய விவரம் வருமாறு:
பாதாளத்தில் மரித்தோரின் ஆவிகளுக்கு ஐந்து சிறையிருப்புக்கள் உள்ளன. அவையாவன:
1. டார்டரஸ் எனப்படும் காவல் 2. பரதீசு 3. நரகம் 4. பாதாளம் 5. அக்கினிக்கடல்
1. டார்டரஸ் எனப்படும் காவல் (1பேதுரு 3:19; 2பேதுரு 2:4; யூதா 1:6#7). ஜலப்பிரளயத்தின் காலத்திற்கு முன்பாக விழுந்துபோன தூதர்களைக் காவல் பண்ணி வைத்திருக்கும் இடம். இந்தச் சிறைச்சாலைக்கு மனுஷருடைய ஆவிகளோ, பிசாசுகளோ போவதில்லை (2பேதுரு 2:4)
2. பரதீசு (லூக்கா 16:19#31; லூக்கா 23:43). நீதிமான் மரித்த பின்பு, அவனுடைய ஆவியும், ஆத்துமாவும் தங்கியிருக்கும் இடம். நீதிமான்களின் சித்தத்திற்கு எதிராகப் பிசாசு இவர்களை இங்கு சிறை வைத்திருந்தான். கிறிஸ்து மரணத்தையும், நரகத்தையும், பாதாளத்தையும் ஜெயித்த பின்பு, அவர் பூமியின் தாழ்விடங்களுக்குச் சென்று அங்கு காவலிலிருந்த நீதிமான்களின் ஆவிகளை விடுவித்தார். இப்பொழுது இந்த பரதீசில் நீதிமானின் ஆவிகள் ஒன்றுமில்லை. இயேசு கிறிஸ்து நீதிமானின் ஆவிகளைச் சிறைபிடித்து அவர் பரமேறியபோது தம்மோடு அவர்களையும் பரலோகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இப்போது நீதிமான் மரிக்கும்போது அவனுடைய ஆவி பரதீசிற்குச் செல்லாமல் நேராக பரலோகத்திற்கே சென்றுவிடுகிறது. (லூக்கா 16:22; எபே 4:8; எபி 2:15)
3. நரகம் (மத் 16:18; லூக்கா 16:19#31). சீயோல் அல்லது பாதாளத்தில் உள்ள பகுதி. துன்மார்க்கர் மரித்துப்போகும்போது அவர்களுடைய ஆவிகள் இங்கே செல்லும். ஆயிரம் வருஷ அரசாட்சியின் முடிவு வரையிலும் துன்மார்க்கர் மரித்துப் போகும் போது அவர்களுடைய ஆவிகள் இங்குதான் போய் கொண்டிருக்கும். ஆயிரம் வருஷ அரசாட்சியின் முடிவில் துன்மார்க்கருடைய ஆவிகளும், ஆத்துமாக்களும் அவர்களுடைய உயிர்த்தெழுந்த சரீரங்களோடு சேர்க்கப்படும். அதன் பின்பு, அவர்கள் நித்திய அக்கினிக் கடலில் நித்திய காலமாகப் பாடுகளை அனுபவிக்குமாறு தள்ளப்படுவார்கள். (வெளி 20:11#15).
4. பாதாளம் (லூக்கா 8:26#31; ரோமர் 10:7; வெளி 9:1#3,11; வெளி 11:7; வெளி 17:8; வெளி 20:1#10) இது பிசாசுகளுக்கும், சில தூதர்களுக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் பகுதி. மனுஷருடைய ஆவியும், ஆத்துமாவும் இங்கு போவதில்லை. பழைய ஏற்பாட்டில் அபத்தோன் என்னும் சொல் இந்தப் பாதாளத்தையே குறிக்கிறது. (யோபு 26:6; யோபு 28:22; யோபு 31:12; சங் 88:11; நீதி 15:11; நீதி 27:20).
5. அக்கினிக்கடல் இது நித்திய நரகம். விழுந்துபோன தூதர்களும், பிசாசுகளும் துன்மார்க்கரும் இங்கு நித்திய காலமாக பாடுகளைஅனுபவிப்பதற்காகத் தள்ளப்பட்டிருப்பார்கள். (வெளி 20:6,11#15; வெளி 21:8; வெளி 22:15). கிரேக்க மொழியில் ""கெயென்னா'' என்னும் வார்த்தை இந்த அக்கினிக் கடலையே குறிக்கும். (லூக்கா 12:5) பிசாசுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இந்த அக்கினிக்கடல் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. (மத் 25:41) அக்கினிக் கடலில் தள்ளப்படுகிறவர்கள் இங்கு நித்திய காலமாக வேதனை அனுபவிக்கவேண்டும். (ஏசா 66:22#24; மத் 25:46; வெளி 14:9#14; வெளி 19:20; வெளி 20:10#15).
