நேரடியாக ஜெபிப்போம்
நீங்கள் அந்நியரும்
பரதேசிகளுமாயிராமல்... எபே - 2:19
சிபாரிசுகள் மூலம் உயர் அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ அணுகி காரியங்களைச் சாதிப்பது சமுதாயத்தில் வழக்கமான விஷயம். தங்களுக்கு நேரடியாகப் போதிய பழக்கமில்லாத உயர்நிலைகளில் அவர்கள் இருப்பதால், அவர்களுக்கு நல்ல தொடர்புடையவர்களின் வழியாகக் காரியங்களைச் சாதிக்க வேண்டிய தேவை உள்ளது. இதுபோன்ற ஒரு நடைமுறை இன்றைய ஆவிக்குரிய வட்டாரங்களிலும் பின்பற்றப்படுகிறது. தேவனிடம் நேரடியாகத் தொடர்பு வைத்து, நன்மைகளைப் பெறுவதற்குப் பதிலாக, முக்கியமான தேவ ஊழியர்கள் வழியாக தேவ நன்மைகளைத் தேடுகின்ற பழக்கம் மிகுதியாக உள்ளன. ஆனால் இது ஒரு சரியான பழக்கம் அல்ல.
தேவன் ஒரு சிலரால் மட்டுமே அணுக முடிந்தவர் அல்ல. அவருக்கு சிபாரிசு தேவையில்லை. நம் ஒவ்வொருவரும் தேவனிடம் நேரடியாகத் தொடர்பு வைத்து, நம்முடைய நன்மைகளுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் அவரிடம் நேரடியாக மன்றாட முடியும். நாம் தொடர்பு கொள்ள முடியாதபடி தேவன் தம்மை நமக்குத் தூரமாக்கிக் கொள்ளவில்லை. ஆண்டவராகிய இயேசுவை நாம் ஏற்றுக்கொள்வ தின் மூலமாக தேவனுக்கு நாம் மிகவும் சமீபமாகிறோம். அவர் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்க அளவில் நமக்கு சமீபமாயிருக்கிறார். தேவனுக்கும் நமக்கும் இடையே இயேசு மட்டுமே அதிகரப்பூர்வ மத்தியஸ்தர். எனவே எதோ ஒரு மனிதரை அல்ல. நாம் இயேசுவின் மூலமாகவே நன்மைகளைத் தேட முன்வர வேண்டும். தேவ ஊழியர்கள் என்பவர்கள் தேவனை நோக்கி வழிநடத்தும் வழிகாட்டிகள் தானேயன்றி,நமக்கு ஆசீர்வாதங்களைத் தேடித் தவதற்கு முடிந்த ஒப்பந்தக்காரர்கள் அல்ல.
ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்க விருப்பமுள்ளவராகவும், நம்மோடு அப்பா -பிள்ளை என்ற உறவை வைத்துக்கொள்ள ஆயத்தமுள்ளவராகவும் இருக்கையில், அவரை நோக்கி விசுவாசத்தோடு நேரடியாக ஜெபிக்காமல், யார் மூலமாகவோ ஜெபித்தால்தான் நல்லது நடக்கும் என நினைப்பது, தேவன் நமக்காகச் செய்துள்ள ஏற்பாட்டை அலட்சியப்படுத்துவதாகும். உண்மையான மனந்திரும்புதலின் மூலம், தேவன் நம்மை நேசிக்கிற தந்தையாயிருக்கின்றார் என்ற உறுதி எற்படாத தீன் விளைவுதான், சொந்த ஜெபங்களைச் சாராமல், பிற தேவ ஊழியர்களின் ஜெபங்களை அதிகமாக நம்பி சார்ந்து போவதின் காரணமாகும்.
அறையில் இறைவனைத் தேட மனமில்லாதவன் ஆலயத்தில் தேடினாலும் காணமாட்டான்.
