தானியேல் 4ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

தானியேல் 4ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

நேபுகாத்நேச்சார் தன்னுடைய சொந்த வார்த்தைகளினால் இந்த அதிகாரத்தை எழுதுகிறான். கர்த்தர் ராஜாவை ஆளுகை செய்கிறார். தன்னுடைய நிருபத்தின் ஆரம்பத்தில் ராஜா கர்த்தருடைய ஆளுகையை மேன்மைப்படுத்தி எழுதுகிறான் (தானி 4:1-3). ராஜா கண்ட சொப்பனம் (தானி 4:1-18). ராஜாவின் சொப்பனத்திற்கு தானியேல் அர்த்தம் சொல்லுகிறார். ராஜாவின் வீழ்ச்சி, ராஜா மனந்திரும்பவேண்டும் என்னும் ஆலோசனை (தானி 4:19-27).

ராஜா ஏழுவருஷகாலமாக புத்தி தடுமாறி, மாடுகளைப்போல புல்லை மேய்கிறான் (தானி 4:28-36). ராஜாவுக்கு புத்தி திரும்பி வருகிறது. நேபுகாத்நேச்சார் கர்த்தரை உயர்த்தி மகிமைப்படுத்துகிறான் (தானி 4:37).

நேபுகாத்நேச்சார் எழுதுகிறது தானி 4:1-3

தானி 4:1. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

தானி 4:2. உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.

தானி 4:3. அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

ராஜா ஒரு ஆணை பிறப்பிப்பதுபோல இந்த நிருபத்தை எழுதுகிறான். ராஜாவின் நிருபம் சுருக்கமாகவும், அதிகாரம் மிகுந்ததாகவும் இருக்கும். ராஜா தன்னைப்பற்றிச் சொல்லும்போது ""ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எழுதுகிறது என்னவென்றால்'' என்று எழுதி, தன்னுடைய ராஜாசனத்தை உறுதிபண்ணுகிறான்.

ராஜாவின் நிருபம் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும், ஜாதியாருக்கும், பாஷைக்காரருக்கும் எழுதப்பட்டிருக்கிறது. ராஜா தனக்கே உரிய பாணியில் ஜனங்களை வாழ்த்துகிறான். ""உங்களுக்கு சமாதானம் பெருகக்கடவது'' என்று வாழ்த்தி தன்னுடைய நிருபத்தை எழுதுகிறான்.

உன்னதமான தேவனுடைய மகத்துவத்தை எல்லோருக்கும் பிரசித்தம்பண்ணவேண்டும். இதுவே ராஜா இந்த நிருபத்தை எழுவதற்கான நோக்கம். உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது ராஜாவுக்கு நன்மையாய்க் காணப்படுகிறது (தானி 4:2).

கர்த்தர் ராஜாவுக்கு அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்திருக்கிறார். இவற்றையெல்லாம் மற்றவர்களுக்கு பிரசித்தப்படுத்த ராஜா கடனாளியாயிருக்கிறான். ராஜா இப்போதுதான் மிகப்பெரிய அழிவிலிருந்து மீண்டு, திரும்பவும் சகச நிலமைக்கு திரும்பி வந்திருக்கிறான். கர்த்தர் தம்முடைய நீதியினால் ராஜாவைத் தாழ்த்தி, அவனை அழிக்கு விலக்கி மீட்டுக்கொண்டார். கர்த்தர் நேபுகாத்நேச்சாரை முற்றிலுமாய் அழித்துப்போடாமல், அவனைப் புதுப்பித்திருக்கிறார். இது கர்த்தருடைய பெரிதான கிருபை.

நாம் கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். கர்த்தருடைய கிருபைகளுக்காகவும், இரக்கங்களுக்காகவும் அவரை நன்றியோடு துதிக்கவேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யவேண்டும். நம்முடைய மீறுதல்களினிமித்தம் கர்த்தர் நம்மை தண்டிப்பதை அங்கீகரித்து, அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

கர்த்தர் நேபுகாத்நேச்சாரை தண்டித்தார். அவனுடைய பாவங்களை அவனுக்கு உணர்த்தினார். கர்த்தர் ராஜாவைத் திருத்தினார். அவனுடைய இருதயத்தைப் புதுப்பித்தார். நேபுகாத்நேச்சார் இதுபற்றி எழுதும்போது, உன்னதமான தேவன் தன்னிடத்தில் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்தார் என்று எழுதுகிறான்.

கர்த்தருடைய கிரியைகளெல்லாம் ராஜாவுக்கு அற்புதங்களாய்த் தெரிகிறது. அவன் அதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறான். நேபுகாத்நேச்சார் இப்போது வயது முதிர்ந்தவராயிருக்கிறான். அவன் சுமார் நாற்பது வருஷங்களாக பாபிலோன் தேசத்தை ஆளுகை செய்திருக்கிறான். அவனுக்கு உலகப்பிரகாரமான அனுபவங்கள் ஏராளமாய் உண்டாயிற்று. அவனுடைய ராஜ்யபாரத்தில் அவனுக்கு அநேக ஏற்றதாழ்வுகளும் உண்டாயிற்று. அவன் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறான். பல தேசத்தின்மீது யுத்தம் செய்திருக்கிறான்.

ஆனாலும் நேபுகாத்நேச்சார் இத்தனை வருஷங்களாக, உன்னதமான தேவனை மகிமைப்படுத்தவில்லை. கர்த்தருடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் பற்றி ராஜா இதுவரையிலும், யாரிடத்திலும், எதுவும் சொன்னதில்லை. ஆனால் இப்போதோ கர்த்தருடைய கிரியைகளெல்லாம், ராஜாவுக்கு அடையாளங்களாயும், அற்புதங்களாயும் இருக்கிறது. அவற்றை பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும், ஜாதியாருக்கும், பாஷைக்காரருக்கும் எழுதி பிரசித்தப்படுத்துவது, அவனுக்கு நன்மையாய்க் காணப்படுகிறது.

நேபுகாத்நேச்சார் பாபிலோன் சாம்ராஜ்யத்திற்கு சக்கரவர்த்தியாயிருக்கிறான். ஆனாலும் தன்னுடைய ராஜ்யம் நிலையானதல்ல என்பது நேபுகாத்நேச்சாருக்கு நன்றாய்த் தெரியும். அவன் கர்த்தருடைய ராஜ்யத்தை தியானித்துப் பார்க்கிறான். கர்த்தருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம். தேவனுடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனத்தில் தன்னுடைய ராஜ்யத்தைப்பற்றிக் கண்டான். அவனுடைய ராஜ்யம் அழிவுக்கு நேராகப் போய்க்கொண்டிருக்கிறது. பாபிலோன் ராஜ்யம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் இந்தப் பூமியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். அதன் பின்பு அது அழிந்துபோகும். அதன் அழிவின்மீது வேறொரு ராஜ்யம் கட்டியெழுப்பப்படும். ஒவ்வொரு சந்ததியாரும் ஒவ்வொரு ஆட்சியின் கீழிருப்பார்கள். ஒரு சில ராஜ்யங்கள் பல சந்ததிகளைக் கடந்து வரும். ஆனாலும் எல்லா ராஜ்யங்களுக்கும் முடிவு உண்டு. கர்த்தருடைய ராஜ்யமோ நித்திய ராஜ்யம்.

கர்த்தர் ராஜாவுக்கு அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்திருக்கிறார். கர்த்தருடைய அடையாளங்கள் மகத்துவமானவைகள். அவருடைய அற்புதங்கள் வல்லமையானவைகள். தேவனுக்கு ஒப்பானவர் ஒருவருமில்லை. ஆகையினால் ராஜா தேவனை ""உன்னதமான தேவன்'' என்று அழைக்கிறான்.

நேபுகாத்நேச்சார் கூறும் வேதாகம உபதேசங்கள்

1. கர்த்தருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம் (தானி 4:3; தானி 2:44-45)

2. கர்த்தருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும். (தானி 4:3)

ராஜா கண்ட சொப்பனம் தானி 4:4-18

தானி 4:4. நேபுகாத்நேச்சாராகிய நான் என் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து என் அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன்.

தானி 4:5. நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.

தானி 4:6. ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.

தானி 4:7. அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.

தானி 4:8. கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது.

தானி 4:9. சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.

தானி 4:10. நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.

தானி 4:11. அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

தானி 4:12. அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.

தானி 4:13. நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்தி-ருந்து இறங்கக்கண்டேன்.

தானி 4:14. அவன் உரத்த சத்தமிட்டு: இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்.

தானி 4:15. ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்-லே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.

தானி 4:16. அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்.

தானி 4:17. உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.

தானி 4:18. நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக்கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.

நேபுகாத்நேச்சார் தன் இருதயத்தில் பெருமையும், தன் மனதிலே அகந்தையும் கொண்டவன். கர்த்தர் அவனுடைய பெருமையினிமித்தம் அவனை நியாயந்தீர்த்தார். அவனைத் தாழ்த்தினார். கர்த்தருடைய கிருபை ராஜாவோடு கூடயிருந்தது. கர்த்தர் ராஜாவை முற்றிலுமாய் அழித்துப்போடாமல், அவனைத் திருத்தினார். நேபுகாத்நேச்சார் தேவனுடைய நியாயத்தீர்ப்பைப்பற்றி எழுதுவதற்கு முன்பாக, தன்னுடைய பெருமையைப்பற்றியும், கர்த்தர் தன்னை எச்சரித்தது பற்றியும் முதலாவதாக எழுதுகிறான்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்தான். அவன் தன்னுடைய அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தான் (தானி 4:4). பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், சமீபத்தில் எகிப்து தேசத்தின்மீது யுத்தம்பண்ணி, அந்த தேசத்தை ஜெயித்தான். எகிப்தின் யுத்தத்தோடு நேபுகாத்நேச்சாரின் யுத்தங்கள் முடிவுபெறுகிறது. எகிப்தின்மீது பெற்ற வெற்றியே, பாபிலோன் ராஜா பெற்ற கடைசி வெற்றி. இந்த சம்பவம் நேபுகாத்நேச்சாரின் முப்பத்து நான்கு அல்லது முப்பத்தைந்தாவது ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.

""ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூ-யாயிருக்கும்'' (எசே 29:19).

இந்தக் காலத்தில் நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனத்தைக் கண்டான். அது அவனுக்கு திகிலை உண்டாக்கிற்று. அவனுடைய படுக்கையின்மேல் அவனுக்குள் உண்டான நினைவுகளும், அவன் தலையில் தோன்றின தரிசனங்களும் அவனைக் கலங்கப்பண்ணிற்று (தானி 4:5). ராஜா கண்ட சொப்பனம் ஒரு வருஷத்திற்கு பின்பு அவனுக்கு நிறைவேறிற்று.

ராஜா ஏழுவருஷங்களாக புத்தி தெளிவில்லாமல், அநேக கஷ்டங்களை அனுபவித்தான். ராஜாவுக்கு புத்திதெளிந்தபோது, உன்னதமான தேவன் தனக்கு செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும், சகல ஜனத்தாருக்கும் பிரசித்தம்பண்ணவேண்டும் என்று தீர்மானித்து, இந்த நிருபத்தை எழுதுகிறான். ராஜா இந்த நிருபத்தை எழுதின பின்பு மேலும் இரண்டு வருஷங்கள் உயிரோடிருந்தான். அதன் பின்பு அவன் தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதில் மரித்துப்போனான்.

நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனங்கண்டு, அதனால் தனக்குண்டான பாதிப்பை, தன்னுடைய நிருபத்தில் முதலாவதாக எழுதினான். ராஜா ஒரு சொப்பனத்தைக் கண்டான்; அது அவனுக்குத் திகிலை உண்டாக்கிற்று; அவன் படுக்கையின்மேல் அவனுக்குள் உண்டான நினைவுகளும், அவன் தலையில் தோன்றின தரிசனங்களும் அவனைக் கலங்கப்பண்ணிற்று (தானி 4:5).

ராஜாவுக்கு சொப்பனத்தின் அர்த்தம் தெரியவில்லை. ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை தனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் தன்னிடத்தில் கொண்டுவரும்படி ராஜா கட்டளையிடுகிறான் (தானி 4:6).

ராஜா ஏற்கெனவே ஒரு சொப்பனம் கண்டான். அந்த சொப்பனத்தை அவன் மறந்துவிட்டான் (தானியேல் 2-ஆவது அதிகாரம்). ஆனால் இப்போதோ ராஜா தான் கண்ட சொப்பனத்தை மறக்கவில்லை. சொப்பனம் அவனுக்கு ஞாபகத்திலிருக்கிறது. சொப்பனத்தின் அர்த்தத்தை மாத்திரம் தெரிவிக்க அவனுக்கு உதவி தேவைப்படுகிறது.

ராஜாவின் கட்டளைப்படி சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் அவனிடத்திலே வருகிறார்கள்; சொப்பனத்தை ராஜா அவர்களுக்குச் சொல்லுகிறான்; ஆனாலும் அவர்கள் அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கமாட்டாமற்போகிறார்கள் (தானி 4:7).

ராஜாவுக்கு ஏமாற்றமுண்டாயிற்று. ஜோசியரும் சாஸ்திரிகளும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் தன்னுடைய சொப்பனத்தின் அர்த்தத்தைச் சொல்லுவார்கள் என்று ராஜா எதிர்பார்க்கிறான். ஆனால் அவர்களால் அதன் அர்த்தத்தைச் சொல்ல முடியவில்லை. ஜோசியர்கள் தங்களைப்பற்றி பெருமையாய்ப் பேசுகிறவர்கள்.

ஏற்கெனவே இந்த ஜோசியர்களும், சாஸ்திரிகளும், குறிசொல்லுகிறவர்களும், கல்தேயர்களும் ராஜாவினிடத்தில் வந்து, தங்களுக்கு சொப்பனத்தைச் சொன்னால், அதன் அர்த்தத்தை தங்களால் சொல்ல முடியும் என்று பெருமையாய்ப் பேசினார்கள்.

""அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள்'' (தானி 2:4).

""அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்'' (தானி 2:7).

ஏசாயா தீர்க்கதரிசி பாபிலோனைப்பற்றி சொன்ன தீர்க்கதரிசனம் இங்கு நிறைவேறுகிறது. பாபிலோன் அழியும்போது, அந்த தேசத்திலுள்ள ஜோசியக்காரரும், குறிசொல்லுகிறவர்களும் தங்களுடைய மகிமையை இழந்துபோவார்கள் என்று ஏசாயா சொன்னார். அதன் பிரகாரமாக பாபிலோன் தேசத்து ஜோசியக்காரரால், ராஜாவின் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை.

""நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம். உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்'' (ஏசா 47:12,13).

கடைசியிலே நேபுகாத்நேச்சார் தானியேல் தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறான். ராஜாவைப்போலவே இன்றும் அநேகர் கடைசியில்தான் கர்த்தரைத் தேடுகிறார்கள். தங்களால் முடிந்த எல்லா பிரயாசங்களையும் செய்து முயற்சி பண்ணி பார்க்கிறார்கள். ஒன்றும் கைகூடி வரவில்லையென்றால், கடைசியில் கர்த்தரிடத்தில் வருகிறார்கள். கர்த்தருடைய வார்த்தையில் அடைக்கலம் தேடுகிறார்கள்.

நேபுகாத்நேச்சார் முதலில் தானியேலைத் தேடவில்லை. அவன் பாபிலோன் தேசத்திலுள்ள சாஸ்திரிகளையும், ஜோசியர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தன்னிடத்தில் வரவழைக்கிறான். தன்னுடைய சொப்பனத்தைப்பற்றி அவர்களிடத்தில் விசாரிக்கிறான். ஆனால் அவர்களால் ராஜாவின் சொப்பனத்திற்கு அர்த்தத்தைச் சொல்லமுடியவில்லை.

கடைசியிலே ராஜாவின் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்ட தானியேல் ராஜாவினிடத்தில் கொண்டுவரப்படுகிறார். தானியேலை தன்னிடத்தில் அழைத்துக்கொண்டு வருமாறு ராஜா கட்டளையிடுகிறான். ராஜாவுடைய கட்டளையின் பிரகாரம், தானியேல் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுகிறார் (தானி 4:8).

ராஜா தான் கண்ட சொப்பனத்தை தானியேலினிடத்தில் விவரித்துச் சொல்லுகிறான். சொப்பனத்தைச் சொல்லுவதற்கு முன்பாக ராஜா தானியேலை அதிகமாய்ப் புகழுகிறான். ""பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள்ளிருக்கிறது'' (தானி 4:9) என்று ராஜா தானியேலினிடத்தில் சொல்லுகிறான்.

ராஜாவின் வார்த்தையில் அவனுடைய மனதின் குழப்பம் வெளிப்படுகிறது. ராஜா தன்னுடைய பாவத்திற்கு மனந்திரும்புவதற்குப் பதிலாக, தன்னுடைய பாவத்தை மறைக்கவும், அதை நியாயப்படுத்தவும் முயற்சி பண்ணுகிறான். நேபுகாத்நேச்சார் ஒரு விக்கிரகாராதனைக்காரன். அவனுடைய வார்த்தையே அவனை வஞ்சிக்கிறது.

ராஜா தானியேலிடத்தில் பேசும்போது, ""பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள்ளிலிருக்கிறது'' என்று சொல்லுகிறான். ""தேவன் ஒருவரே'' என்னும் சத்தியம் ராஜாவுக்குத் தெரியவில்லை. ராஜா பல தெய்வங்களை நம்புகிறான்.

""பரிசுத்த தேவர்களுடைய ஆவி'' என்று ராஜா சொல்லும்போது, அவனுடைய மனதில் பல தெய்வங்களைப்பற்றிய நம்பிக்கையிருக்கிறது என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். அந்த தெய்வங்களில் சில நன்மை செய்கிற தெய்வங்கள் என்றும், மற்ற தெய்வங்கள் தீமை செய்கிற தெய்வங்கள் என்றும் ராஜா நம்புகிறான். தானியேலினிடத்திலிருப்பது நன்மை செய்கிற தெய்வங்களின் ஆவி என்று நேபுகாத்நேச்சார் நினைக்கிறான்.

ராஜா தானியேலைப்பற்றிச் சொல்லும்போது ""தேவனுடைய தாசன்'' என்று சொல்லாமல், ""சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சார்'' என்று சொல்லுகிறான். சாஸ்திரிகள் என்பது ஜோசியரையும், குறிசொல்லுகிறவர்களையும் குறிக்கும் வார்த்தை. ராஜா தானியேலை ஜோசியருக்கும், குறிசொல்லுகிறவர்களுக்கும் தலைவனாக்குகிறான்.

ராஜாவின் மனதில் அவனுடைய பாவத்தைக் குறித்த உணர்வு எதுவுமில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் புகழ்ந்து பேசினால், அவர்கள் தனக்கு சாதகமான வார்த்தைகளை சொல்லுவார்கள் என்று ராஜா நினைக்கிறான். இதே எண்ணத்தில் இன்றும் ஏராளமான விசுவாசிகள் ஊழியக்காரர்களைப் புகழுகிறார்கள். நம்முடைய துதியும் ஸ்தோத்திரங்களும் கர்த்தருக்கு மாத்திரமே உரியது.

நேபுகாத்நேச்சார் சில நாளுக்கு முன்பாக, தானியேலிடம் ""மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார்'' (தானி 2:47) என்று சொன்னான். ஆனால் இப்போதோ ராஜா, தானியேலின் தேவனை மற்ற தேவர்களுக்கு சமமாக்குகிறான். ""பரிசுத்த தேவர்களில்'' தானியேலின் தேவனும் ஒருவர் என்பதுபோல பேசுகிறான்.

இஸ்ரவேலின் தேவனே மெய்யான தேவன். அவரே சர்வவல்லமையும், சர்வஆளுகையுமுள்ளவர். நேபுகாத்நேச்சாருக்கு ஆரம்பத்தில் கர்த்தரைப்பற்றிய சத்தியம் ஓரளவு வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் அவன் தன் ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேறிச் செல்லாமல், பின்னோக்கிப்போய்விடுகிறான். கர்த்தரைப்பற்றிய அறிவு ராஜாவுக்கு குறைந்துவிட்டது.

நேபுகாத்நேச்சார் கர்த்தரைப்பற்றிய மகிமையை குறைத்தாலும், தானியேலைப்பற்றி புகழ்ந்துபேசுகிறான். ராஜாவுக்கு தானியேல்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவன் தானியேலிடம், ""சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு'' (தானி 4:9) என்று உரைக்கிறான்.

நேபுகாத்நேச்சார் தான் கண்ட சொப்பனத்தை, தானியேலினிடத்தில் விவரிக்கிறான். அவனுடைய சொப்பனத்தில் பல தரிசனங்கள் உண்டாயிற்று.

நேபுகாத்நேச்சார் படுத்திருந்தபோது அவன் தலையில் தரிசனங்கள் தோன்றின. தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தை ராஜா கண்டான். அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது (தானி 4:10-12).

தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான விருட்சம் என்பது பாபிலோன் ராஜவாகிய நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது. அவன் வளர்ந்து, பலத்திருந்தான். பூமியிலே அவனுடைய மகிமை தேசத்தின் எல்லை பரியந்தம் காணப்பட்டது. அவனைப்பற்றிய மேன்மையும் புகழும் வானபரியந்தம் உயர்ந்திருந்தது.

தேசத்திலுள்ள மற்ற விருட்சங்களைவிட ராஜா கண்ட விருட்சம் மிகவும் உயரமாயிருந்தது. அதுபோலவே நேபுகாத்நேச்சாரும் மற்ற ராஜாக்களைவிட மிகவும் உயர்ந்திருந்தான். அந்த விருட்சம் பார்வைக்கு பசுமையாயிருந்தது. கண்களுக்கு இனிமையாயிருந்தது. அதில் எல்லா ஜீவனுக்கும் ஆகாரமுண்டாயிருந்தது. அதன் நிழலில் மிருகங்களும், அதன் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகளும் தாபரித்தன.

ராஜா கண்ட விருட்சத்தின் இலைகள் நேர்த்தியாயிருந்தது. நேபுகாத்நேச்சாரின் அரண்மனை அழகாயும், ஆடம்பரமாயும் இருந்தது. அவனுடைய அரசசபையின் கொலுமண்டபத்தில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு, அது அதிக நேர்த்தியாய்க் காணப்பட்டது.

நேபுகாத்நேச்சார் தன் சொப்பனத்தில் கண்ட விருட்சம் மிகவும் விசேஷமானது. அது மற்றவர்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியது. அதோடு அது தன்னிடத்தில் தாபரிக்கிறவர்களுக்கு அடைக்கலமும் போஜனமும் கொடுக்கக்கூடியது.

அந்த விருட்சத்தின் நிழலிலே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கின. அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தன. ராஜாக்கள் தங்கள் தேசத்து குடிமக்களைப் பாதுகாக்கவேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டும். நல்ல ராஜாவின் ஆட்சி வெயிலுக்கு ஒதுங்கும் நிழலைப்போல இருக்கும். நேபுகாத்நேச்சாரின் ஆட்சியில் பாபிலோன் தேசத்தாருக்கு பாதுகாப்பு இருந்தது.

நேபுகாத்நேச்சார் தன் ஜனங்களை குறைவில்லாமல் போஷிக்கிறான். அவன் கண்ட விருட்சத்தில் எல்லா ஜீவனுக்கும் ஆகாரமுண்டாயிருந்தது. சகலபிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.

அசீரியர்கள் கேதுரு மரத்திற்கு ஒப்பாயிருக்கிறார்கள். ""அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்ளெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகல ஜாதிகளும் அதின் நிழ-லே குடியிருந்தார்கள்'' (எசே 31:6).

கேதுரு மரம் நிழலை மாத்திரமே கொடுக்கும். இந்த மரங்களின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கலாம். ஆனால் இந்த விருட்சத்திலிருந்து நிழலைத் தவிர வேறு ஒரு பயனும் உண்டாகாது. பாபிலோன் ராஜா கண்ட விருட்சம், நிழலும் தருகிறது. போஜனமும் தருகிறது. சகலபிராணிகளும் அந்த விருட்சத்தினால் போஷிக்கப்படுகிறது. அந்த விருட்சத்தில் எல்லா ஜீவனுக்கும் ஆகாரமுண்டாயிருக்கிறது.

நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சம் மிகவும் உயரமாகவும் இருந்தது, அது வளர்ந்து பலத்ததாகவும் இருந்தது. அதன் மகிமை வானபரியந்தம் உயரமாகவும் இருந்தது. அதே வேளையில் அந்த விருட்சத்தில் எல்லா ஜீவனுக்கும் ஆகாரமுண்டாயிருந்தது. அது பிரயோஜனமுள்ள மரமாகயிருந்தது. அந்த விருட்சம் எல்லா பிராணிகளையும் போஷித்து நன்மை செய்தது.

நேபுகாத்நேச்சார் படுத்திருக்கையில், அவன் இந்த விருட்சத்தைப்பற்றிய தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கி வருவதைக் காண்கிறான். ராஜா கண்ட விருட்சத்திற்கு அழிவு வரப்போகிறது. இந்த காவலாளனாகிய பரிசுத்தவான் அந்த விருட்சத்தை சபிக்கிறான். வானத்திலிருந்து இறங்கி வந்தவன் ஒரு காவலாளன் என்றும், அவன் ஒரு பரிசுத்தவான் என்றும் ராஜா சொல்லுகிறான். தேவனுடைய தூதர்கள் பரிசுத்தமானவர்கள். அவர்கள் பரலோகத்தின் தேவனிடத்திலிருந்து அவருடைய செய்தியை இந்தப் பூமியிலுள்ளவர்களுக்கு அறிவிக்க வரும் தூதர்களாயிருக்கிறார்கள்.

வானத்திலிருந்து இறங்கி வந்தவன், உரத்த சத்தமிட்டு: ""இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்'' (தானி 4:14) என்று சொல்லுகிறான்.

வானத்திலிருந்து இறங்கி வந்தவன், ராஜா தரிசனத்தில் கண்ட விருட்சத்தை வெட்டிவிடுமாறு கட்டளையிடுகிறான். ஆனாலும் அந்த விருட்சத்தின் வேர்களாகிய அடிமரத்தை சேதப்படுத்தாமல், அது பூமியில் இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறான்.

வெட்டப்படாமல் விடப்படும் அடிமரம் மழையில் நனையும். வெயிலில் காயும். அது எல்லா சீதோஷ்ண நிலையையும் தாங்கிக்கொள்ளவேண்டும். வானத்திலிருந்து இறங்கி வந்தவன், இதுவரையிலும் அந்த விருட்சத்தை ஒரு மரத்தைப்போலவே பாவித்து பேசினான். ஆனால் இப்போதோ அதை ஒரு மனுஷனாக பாவித்து, தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறான்.

""ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்-லே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது. அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்'' (தானி 4:15,16) என்று வானத்திலிருந்து இறங்கி வந்த தூதன் சொல்லுகிறான்.

கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்தும்போது, தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நினைவுகூருகிறார். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. நாம் இப்போது வேதனைகளையும், சஞ்சலங்களையும். நெருக்கங்களையும் உபத்திரவங்களையும் அனுபவித்தாலும், இந்தப் பாடுகள் எல்லாம் முடிவுக்கு வரும். கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்முடைய துக்கங்களை சந்தோஷமாக மாற்றுவார்.

நேபுகாத்நேச்சார் தரிசனத்தில் கண்ட விருட்சம் வெட்டப்படுகிறது. அதன் கொப்புகள் தறிக்கப்படுகிறது. அதன் இலைகள் உதிர்க்கப்படுகிறது. அதின் கனிகளும் சிதறடிக்கப்படுகிறது. ஆனால் அந்த விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் வெட்டப்படாமல், பூமியிலேயே இருந்துவிடுகிறது. அடிமரம் மறுபடியும் துளிர்க்கும்.

""ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்'' (யோபு 14:7-9).

நேபுகாத்நேச்சார் கண்ட தரிசனத்திற்கு அந்த தூதனே விளக்கத்தை சொல்லுகிறார். இந்த விருட்சம் யாரைக் குறிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த மனுஷனுக்கு இரும்பும் வெண்கலமுமான விலங்குகள் இடப்படும். அவன் மிருகங்களைப்போல இருப்பான். அவனால் மனுஷனைப்போல சிந்திக்க முடியாது. அவன் மிருகத்தைப்போல வெளியின் பசும்புல்லிலே தங்கியிருப்பான். ஆகாயத்து பனியிலே நனைவான். அவனுடைய இருதயம் மனுஷஇருதயமாயிராமல் மாறிவிடும். அவனுக்கு மிருகஇருதயம் கொடுக்கப்படும். ""அவன் மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்'' (தானி 4:16) என்று தேவதூதன் சொல்லுகிறார். அந்த மனுஷன் ஏழுகாலங்கள் மிருகத்தைப்போல ஜீவிப்பான்.

இது ஒரு மனுஷனுக்குக் கொடுக்கப்படும் கடுமையான தண்டனை. இந்த தண்டனையை அவன் ஏழுகாலங்கள் அனுபவிக்கவேண்டும். தண்டிக்கப்படுகிறவன் மனுஷனாயிராமல் மிருகமாயிருப்பான்.

""மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்-, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல'' (எசே 28:2).

தீருவின் அதிபதி தன்னுடைய இருதயத்தை தேவனின் இருதயத்திற்கு ஒப்பாக்கினான். அவன் மனுஷனாயிருந்தாலும், அவன் தன்னை தேவனுக்கு சமமாக நினைத்தான். தன்னைத்தானே உயர்த்துகிறவனை கர்த்தர் தாழ்த்துகிறார். இருதயத்தில் பெருமையும் அகந்தையுமுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்.

தேவதூதன் நேபுகாத்நேச்சார் ராஜாவின் சொப்பனத்தில் வந்து தரிசனத்திற்கு விளக்கம் சொல்லுகிறான். ஒரு மனுஷனுடைய இருதயத்தில் பெருமை வரும்போது, கர்த்தர் அந்த இருதயத்தைத் தண்டிக்கிறார். அந்த இருதயம் மனுஷஇருதயமாயிராமல், அதை மிருகஇருதயமாய் மாற்றிப்போடுகிறார்.

""உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது'' (தானி 4:17) என்று தேவதூதன் சொல்லுகிறார்.

நேபுகாத்நேச்சாரைப்பற்றிய விசாரணை பரலோகத்தில் நடந்திருக்கிறது. பரலோகத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு பூமியில் அறிவிக்கப்படுகிறது. கர்த்தருடைய தீர்ப்பை பூமியிலுள்ள நரஜீவன்கள் அறியவேண்டும். இந்தத் தீர்ப்பு காவலாளரின் தீர்ப்பாகயிருக்கிறது. காவலாளரின் தீர்ப்பினால் நேபுகாத்நேச்சாருக்கு அழிவு வருகிறது.

பூமியிலுள்ள பரிசுத்தவான்கள், இந்த வழக்கை கர்த்தருடைய சமுகத்தில் எடுத்துச் சொல்லுகிறார்கள். பூமியிலுள்ள பரிசுத்தவான்களோடு சேர்ந்து, பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் இந்த வழக்கைப்பற்றி கர்த்தருடைய சமுகத்தில் அறிவிக்கிறார்கள். ""பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணை தீர்மானிக்கப்பட்டது'' என்று தேவதூதன் சொல்லுகிறார்.

இந்தப் பூமியிலுள்ள பரிசுத்தவான்கள், வேதனைகளையும் பாடுகளையும் அனுபவிக்கும்போது, தங்களுடைய பிரச்சனைகளை கர்த்தருடைய சமுகத்தில் சொல்லி ஜெபிக்கிறார்கள். தாங்கள் அனுபவிக்கிற பாடுகளையும், வேதனைகளையும் தாங்கமுடியாமல் கர்த்தருக்கு முன்பாக பெருமூச்சுவிடுகிறார்கள்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய தேசத்தில் இஸ்ரவேல் வம்சத்தாரை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான். அவர்களைக் கொடுமைப்படுத்துகிறான். கர்த்தருடைய ஜனத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை. ராஜா அவர்கள்மீது பாரமான நுகத்தை சுமத்தியிருக்கிறான். அந்த நுகத்தை தாங்கமுடியாமல், இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரிடத்தில் அழுது ஜெபிக்கிறார்கள். பெருமூச்சுவிட்டு முறையிடுகிறார்கள். கர்த்தர் அவர்களுடைய பெருமூச்சுக்களைக் கேட்கிறார். நேபுகாத்நேச்சார்மீது, பரலோகத்திலே, உன்னதமான தேவனுடைய சமுகத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. நேபுகாத்நேச்சார்மீது நியாயத்தீர்ப்பு பரலோகத்திலே தீர்மானிக்கப்படுகிறது. நாம் கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம்பண்ணும்போது, கர்த்தர் பரலோகத்திலிருந்து நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார்.

நேபுகாத்நேச்சார் தரிசனத்தில் கண்ட விருட்சம் மிகவும் உயரமாயிருந்தது. அது வளர்ந்து பலத்திருந்தது. அது தன்னைப்பற்றி பெருமையோடு நினைத்தது. அந்த விருட்சம் ஒரு சிலருக்கு அடைக்கலமும், போஜனமும் கொடுத்தது. ஆனாலும் அந்த விருட்சம் கர்த்தருடைய ஜனத்திற்கு தீங்கு செய்தது.

நேபுகாத்நேச்சார் பாபிலோன் தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறான். அவன் தன்னை பெருமையாக நினைத்தான். அவனுடைய இருதயத்தில் பெருமை உண்டாயிற்று. இந்தப் பூமியிலே தன்னைத் தவிர வேறு ராஜா இல்லையென்று அவன் ஆணவமாய் நினைத்தான்.

கர்த்தரே சர்வஆளுகையுள்ளவர். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார். அவர் தமக்கு சித்தமானவனுக்கு ராஜ்யத்தில் ஆளுகையைக் கொடுக்கிறார். மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார். கர்த்தரே ராஜாதி ராஜாவாயிருக்கிறார். இந்த சத்தியத்தை பூமியிலுள்ள நரஜீவன்கள் அறியவேண்டும். இதற்காக பரலோகத்திலே, நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாய் வழக்கு விசாரணை நடைபெற்று, அவனுக்கு விரோதமாக தீர்ப்பு தீர்மானிக்கப்பட்டது. காவலாளரின் தீர்ப்பை அறிவிப்பதற்காக, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கி, நேபுகாத்நேச்சாருக்கு, அந்த தீர்ப்பை அறிவிக்கிறான். உயரமாயிருந்த விருட்சம் வெட்டப்படவேண்டும் என்னும் கட்டளை உண்டாயிற்று.

நேபுகாத்நேச்சார் தான் கண்ட சொப்பனத்தை தானியேலிடம் முழுவதுமாய்ச் சொல்லிவிடுகிறான். தான் கண்டதையும், கேட்டதையும் தானியேலுக்கு அறிவிக்கிறான். இதன் வியாக்கியானம் என்னவாயிருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ராஜாவுக்கு விருப்பம். ஆனால் ராஜாவின் சொப்பனத்தை கல்தேயராலோ, சாஸ்திரிகளாலோ, ஜோசியராலோ, குறிசொல்லுகிறவர்களாலோ வியாக்கியானம் பண்ண முடியவில்லை. ஆகையினால் ராஜா தானியேலை அழைத்து தன்னுடைய சொப்பனத்தைச் சொல்லுகிறான்.

""நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக்கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே'' (தானி 4:18) என்று ராஜா தானியேலிடம் சொல்லுகிறான்.

ராஜா மேலும் ஒரு சொப்பனம் காண்கிறான். இது தீர்க்கதரிசன செய்தியை அறிவிக்கும் இரண்டாம் சொப்பனமாகும். இரண்டு முறையும் ராஜா திகிலடைந்தான். தன்னுடைய தேசத்தின் ஞானிகள் இதன் வியாக்கியானத்தைக் கூறவேண்டுமென்று ராஜா கட்டளையிட்டான். (தானி 2:2-16; தானி 4:5-7). இரண்டு முறையும் தானியேலைத் தவிர வேறு யாராலும் ராஜாவின் சொப்பனத்திற்கு வியாக்கியானம் கூறமுடியவில்லை.

வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் சொப்பனங்கள்

1. அபிமெலேக்கு - சாராளைப் பற்றி (ஆதி 20:3)

2. யாக்கோபு - ஏணியைப் பற்றி (ஆதி 28:12)

3. யாக்கோபு - கலப்பு நிறமும், புள்ளியுமுள்ள ஆடுகள் (ஆதி 31:10-13)

4. யாக்கோபு - எகிப்தைப் பற்றி (ஆதி46:2)

5. லாபான் - யாக்கோபைப் பற்றி (ஆதி 31:24)

6. யோசேப்பு - தன் சகோதரரைப் பற்றி (ஆதி 37:5)

7. யோசேப்பு - தன் சகோதரரைப் பற்றி (ஆதி 37:9)

8. பானபாத்திரக்காரனின் தலைவன் - தன்னைப் பற்றி (ஆதி 40:9)

9. சுயம்பாகிகளின் தலைவன் - தன்னைப் பற்றி (ஆதி 40:16)

10. பார்வோன் - பஞ்சத்தைப் பற்றி (ஆதி 41:1-4)

11. பார்வோன் - பஞ்சத்தைப் பற்றி (ஆதி 41:5-8)

12. மீதியானியன் - கிதியோனைப் பற்றி (நியா 7:13)

13. சாலொமோன் - ஞானத்தைப் பற்றி (1இராஜா 3:3-15)

14. எலிப்பாஸ் - ஒரு ஆவியைப் பற்றி (யோபு 4:12-21)

15. யோபு - பயங்கரத்தைப் பற்றி (யோபு 7:14)

16. நேபுகாத்நேச்சார் - ராஜ்யங்களைப் பற்றி (தானி 2)

17. நேபுகாத்நேச்சார் - தன்னைப் பற்றி (தானி 4)

18. தானியேல் - ராஜ்யங்களைப் பற்றி (தானி 7)

19. தானியேல் - ராஜ்யங்களைப் பற்றி (தானி 8)

20. தானியேல் - தேவனைப் பற்றி (தானி 10:5-9)

21. கள்ளத்தீர்க்கதரிசிகள் - பொய்களைப் பற்றி (எரே 23:27-32; எரே 29:8)

22. குறிசொல்லுகிறவர்கள் - வீணான காரியங்களைப் பற்றி (சக 10:2)

23. யோசேப்பு - மரியாளைப் பற்றி (மத் 1:20)

24. யோசேப்பு - எகிப்திற்குப் போவதைப் பற்றி ( மத் 2:13)

25. யோசேப்பு - வீட்டுக்குத் திரும்பி வருவதைப் பற்றி (மத் 2:19)

26. யோசேப்பு - ஏரோதுவைப் பற்றி (மத் 2:22)

27. சாஸ்திரிகள் - எச்சரிப்பைப் பற்றி (மத் 2:12)

28. பிலாத்துவின் மனைவி - இயேசுவைப் பற்றி ( மத் 27:19)

29. கொர்நேலியு - தேவதூதனைப் பற்றி (அப் 10:3-6)

30. பேதுரு - விலங்குகளைப் பற்றி (அப் 10:10-16)

31. பவுல் - ஒரு மனுஷரைப் பற்றி (அப் 16:9)

32. பவுல் - ரோமாபுரிக்குப் போவதைப் பற்றி (அப்23:11)

33. பவுல் - பாதுகாப்பைப் பற்றி (அப் 28:23-24)

34. யோவான் - கிறிஸ்துவைப் பற்றி (வெளி 1:12-18)

ராஜா கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை அறிவிக்க கல்தேயராலும் கூடாமற்போயிற்று (தானி 4:7). நேபுகாத்நேச்சார் முதல் முறையாகச் சொப்பனம் கண்டபோது, அவனுடைய சாஸ்திரிகள், ராஜா தன் சொப்பனத்தை அறிவித்தால் அதன் அர்த்தத்தைக் கூறுவதாகக் கூறினார்கள். இப்போது நேபுகாத்நேச்சார் சொப்பனத்தை அறிவித்த பின்பும், அதன் அர்த்தத்தை அவனுடைய சாஸ்திரிகளால் அறிவிக்க முடியவில்லை.

சாஸ்திரிகள், ஜோசியர்கள், ஆகியோரால் ராஜாவின் சொப்பனத்திற்கு அர்த்தம் கூறமுடியவில்லை. தானியேலோ ராஜாவின் சொப்பனத்திற்குச் சரியான அர்த்தத்தை ஒரு நாழிகையில் கூறினார். (தானி 4:6,19).

தானியேல் பரிசுத்த தேவர்களின் ஆவியை உடையவர். பரிசுத்த ஆவியானவர் தானியேலினிடத்தில் இருக்கிறார். புறஜாதி ராஜா இந்தச் சத்தியத்தைக் கூறுகிறார் (தானி 4:8,9,18; தானி 5:11,14).

""தேவர்கள்'' என்பதற்கு ராஜா பயன்படுத்திய அரமாயிக் வார்த்தை ""எலாஹீன்'' என்பதாகும். இது எபிரெய வார்த்தையான எலோஹிம் என்னும் வார்த்தைக்கு இணையானது.

தானியேல் தன்னுடைய நாட்களில் இருந்த எல்லா சாஸ்திரிகளுக்கும் அதிபதியாகக் கருதப்பட்டார் (தானி 4:9). ஆயினும் இவர் சாஸ்திரிகளில் ஒருவரல்ல. தானியேலினிடத்தில் அறிவை உணர்த்தும் வசனமும், ஞானத்தை உணர்த்தும் வரமும் வியாக்கியானம் பண்ணும் வரமும் இருந்தது. (தானி 2)

விருட்சத்தைப் பற்றிய தரிசனம்

1. தேசத்தின் மத்தியில் ஒரு விருட்சத்தைக் கண்டேன்.

2. அது மிகவும் உயரமாக இருந்தது. (தானி 4:10).

3. அது வளர்ந்தது. (தானி 4:11)

4. அது பலத்தது.

5. அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

6. தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்பட்டது.

7. அதின் இலைகள் நேர்த்தியாக இருந்தது. (தானி 4:12)

8. அதின்கனி மிகுதியுமாயிருந்தது.

9. எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது.

10. அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது.

11. அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.

12. காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்தி-ருந்து இறங்கினான். (தானி 4:13)

பரிசுத்தவான்கள் உரத்த சத்தமிட்டுக் கூறிய வார்த்தைகள் (தானி 4:14)

1. இந்த விருட்சத்தை வெட்டுங்கள்.

2. இதின் கொப்புகளைத் தறித்துப் போடுங்கள்.

3. இதின் இலைகளை உதிர்த்து போடுங்கள்.

4. இதின் கனிகளைச் சிதறடியுங்கள்.

5. இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய் விடட்டும்.

6. இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்.

7. இது ஆகாயத்துப் பனியிலே நனைவதாக.

8. மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.

9. அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறக்கடவது. (தானி 4:16).

10. அவன்மேல் ஏழு காலங்கள் கடந்து போகவேண்டும்.

11. காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியம் தீர்மானிக்கப்பட்டது. (தானி 4:17)

12. பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணை தீர்மானிக்கப்பட்டது

13. உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்கிறார் என்பதை நரஜீவன்கள் அறியக்கடவது.

14. தேவன் தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுக்கிறார்.

15. மனுஷரில் தாழ்ந்தவனையும் தேவன் அதின்மேல் அதிகாரியாக்குகிறார்.

நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்தி-ருந்து இறங்கக்காண்கிறான். வானத்திலிருந்து ஒரு பரிசுத்த தூதன் உன்னதமானவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக இறங்கிவருகிறான். இவன் காவலாளனாகிய பரிசுத்தவான் (தானி 4:13,17) இந்தக் காவலாளர்கள் மனுஷருடைய காரியங்களை மேற்பார்வையிடுகிறார்கள். பூமியில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு இவர்கள் மனுஷரை ஆயத்தப்படுத்துகிறார்கள்.

பெரிய மனுஷர்கள் விருட்சங்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறார்கள். (சங் 1:3; சங் 37:35) ""மனுஷரில் தாழ்ந்தவன்'' என்னும் வாக்கியம் ஒரு வேளை ராஜாவின் சத்துருக்களைக் குறிக்கலாம். (தானி 4:19)

சொப்பனத்தின் அர்த்தம் தானி 4:19-27

தானி 4:19. அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகை மட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் ப-க்கக்கடவது.

தானி 4:20. நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

தானி 4:21. அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில்ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது.

தானி 4:22. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.

தானி 4:23. இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின்வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்-லே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்தி-ருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.

தானி 4:24. ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.

தானி 4:25. உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

தானி 4:26. ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.

தானி 4:27. ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இறங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய சொப்பனத்தில் ஒரு விருட்சத்தைக் காண்கிறான். தன்னுடைய சொப்பனத்திற்கு அர்த்தத்தைச் சொல்லுமாறு, ராஜா தானியேலினிடத்தில் கேட்கிறான். அந்த விருட்சம், ""பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர் தாமே'' (தானி 4:22) என்று தானியேல் ராஜாவுக்கு சொல்லுகிறார்.

ராஜா கண்ட சொப்பனத்தை விவரிப்பதற்கு, அதிகமான விளக்கமோ, வியாக்கியானமோ தேவைப்படவில்லை. வானத்திலிருந்து இறங்கின பரிசுத்த காவலாளன் ஏற்கெனவே ராஜாவுக்கு சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த விருட்சம் தான் தான் என்பது நேபுகாத்நேச்சாருக்கு தெரியவில்லை.

சொப்பனமும் அதன் அர்த்தமும் தானியேலுக்கு தெளிவாகத் தெரிகிறது. அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகை மட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்குகிறார் (தானி 4:19). தானியேலுக்கு பயமும், அதிர்ச்சியும், ஆச்சரியமும் உண்டாயிற்று. நேபுகாத்நேச்சார் பெரியவரும் பலத்தவருமாயிருக்கிறான். அவன் பாபிலோன் தேசத்திற்கு ராஜா. அப்படிப்பட்டவன்மீது, இவ்வளவு பயங்கரமான நியாயத்தீர்ப்பு வரப்போவதைப் பார்த்து, தானியேல் அதிர்ச்சியடைகிறார். திகைத்து கலங்குகிறார்.

ராஜா கண்ட சொப்பனத்திற்கு, தானியேல் அர்த்தம் சொல்லவேண்டும். இது ராஜாவுக்கு நன்மையான சொப்பனமல்ல. ராஜாவின்மீது வரப்போகிற நியாயத்தீர்ப்பை தானியேல் அவனுக்குச் சொல்லவேண்டும். ராஜா அனுபவிக்கப்போகிற கஷ்டங்களைப்பற்றி அவனுக்கு அறிவிக்கவேண்டும். இதை நினைத்து தானியேலுக்கு திகைப்பும் கலக்கமும் உண்டாயிற்று.

தானியேல் திகைத்து சிந்தித்து, கலங்கி நிற்பதை நேபுகாத்நேச்சார் பார்க்கிறான். தானியேல் பேசுவதற்கு பயப்படுகிறான் என்று ராஜா நினைக்கிறான். தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தம் தன்னுடைய மனதை வேதனைப்படுத்துமோ என்று தானியேல் யோசிப்பதாகவும் ராஜா நினைக்கிறான். தானியேல் எதற்கும் கலங்கவேண்டாம் என்றும், சொப்பனத்தின் அர்த்தத்தை தாராளமாய்ச் சொல்லலாம் என்றும், ராஜா தானியேலை உற்சாகப்படுத்துகிறான்.

""பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை'' (தானி 4:19) என்று சொல்லி ராஜா தானியேலை சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுமாறு உற்சாகப்படுத்துகிறான்.

சொப்பனத்தின் அர்த்தத்தையும், சத்தியத்தையும் அறிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் ராஜாவுக்கு உண்மையிலேயே இருப்பதுபோல தெரிகிறது. ஒருவேளை சொப்பனத்தின் அர்த்தம் எதுவாகயிருந்தாலும், அது தன்னை பாதிக்காது என்று ராஜா இறுமாப்பாயிருக்கலாம். நேபுகாத்நேச்சார் இருதயத்தில் பெருமையுள்ளவன். அவன் தேவனுக்கு நிகராக தன்னை உயர்த்துகிறவன். தனக்கு விரோதமாக யாரும் தீங்கு செய்யமுடியாது என்று ராஜா தீர்மானமாய் நினைத்திருக்கலாம். ஆகையினால், தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தம் எதுவாகயிருந்தாலும், தானியேல் அதை, தயங்காமல் கலங்காமல், தைரியமாக தன்னிடத்தில் சொல்லலாம் என்று ராஜா சொல்லுகிறான்.

தானியேலோ சொப்பனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு திகைத்து நிற்கிறான். அதை ராஜாவுக்கு சொல்லவேண்டுமே என்று சிந்தித்து வேதனையோடு கலங்கி நிற்கிறான். தானியேல் ராஜாவிடம் ""என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் ப-க்கக்கடவது'' (தானி 4:19) என்று பிரதியுத்தரமாகச் சொல்லுகிறார்.

நேபுகாத்நேச்சார் பாபிலோன் தேசத்து ராஜா. அவன் தானியேலுக்கு அதிபதி. தன்னுடைய ராஜா நன்றாயிருக்க வேண்டுமென்று தானியேல் விரும்புகிறான். ஆகையினால் ராஜா கண்ட சொப்பனம் அவனுக்கு பலிக்கக்கூடாது என்றும், அந்த சொப்பனம் ராஜாவின் பகைவருக்கும், அவனுடைய சத்துருக்களுக்கும் பலிக்கவேண்டுமென்று விரும்புகிறார்.

ராஜா கண்ட சொப்பனத்திற்கு தானியேல் அர்த்தம் சொல்லுகிறார். ராஜா தன்னுடைய சொப்பனத்தில் கண்ட, கேட்ட அதே செய்தியே, இங்கு மறுபடியுமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. வானத்திலிருந்து இறங்கின பரிசுத்தமான காவலாளன், ஒரு விருட்சத்தையும், ஒரு மனுஷனையும் பொதுவாக சொன்னார். அந்த விருட்சமும், அந்த மனுஷனும், ""ராஜாவாகிய நீர்தாமே'' என்று தானியேல் சொல்லுகிறார்.

""நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில்ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது'' (தானி 4:20-22) என்று ராஜாவுக்கு அவருடைய சொப்பனத்தைப்பற்றி தானியேல் சொல்லுகிறார்.

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இப்போது பெரியவராகவும், பலத்தவராகவும் இருக்கிறான். அவனுடைய ராஜ்யமும் செழிப்பாயிருக்கிறது. ராஜா தன் சொப்பனத்தில் ஒரு விருட்சத்தைக் கண்டான். அந்த விருட்சம் செழிப்பாயிருந்ததுபோல, இப்போது ராஜாவும் செழிப்பாயிருக்கிறான்.

""ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே'' (தானி 2:37,38).

அந்த விருட்சம் அழிந்துபோகும் என்று பரிசுத்தவானாகிய காவலாளன் சொன்னார். ""இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்-லே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவது'' (தானி 4:23) என்று வானத்தி-ருந்து இறங்கின காவலாளன் சொன்னார்.

நேபுகாத்நேச்சார் அந்தக் காவலாளனையும் கண்டான். அவர் சொன்ன வார்த்தைகளையும் கேட்டான். இந்த வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகள். இது நேபுகாத்நேச்சார் பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானம். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நேபுகாத்நேச்சார்மீது வந்திருக்கிறது.

""மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்'' (தானி 4:24) என்று நேபுகாத்நேச்சார் பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்ப்பை தானியேல் சொல்லுகிறார்.

நேபுகாத்நேச்சார் பாபிலோன் ராஜாவினுடைய சிங்காசனத்திலிருந்தும் தள்ளிவிடப்படுவான். அவன் இனிமேல் ராஜாவாயிருக்கமாட்டான். அது மாத்திரமல்ல அவன் இனிமேல் மனுஷனாகவும் இருக்கமாட்டான். அவன் மனுஷரினின்று தள்ளிவிடப்படுவான். ராஜாவால் இனிமேல் மனுஷனைப்போல சிந்திக்க முடியாது. அவனுக்கு மனுஷனுடைய இருதயம் இருக்காது. கர்த்தர் அவனுக்கு மிருகத்தின் இருதயத்தைக் கொடுத்திருப்பார்.

நேபுகாத்நேச்சார் மிருகத்தின் இருதயத்தோடு இருப்பான். அவன் வெளியின் மிருகங்களோடு சஞ்சரிப்பான். அவன் பாபிலோன் தேசத்து அரமனையிலிருக்கமாட்டான். அவனுடைய அரண்மனையில் ஏராளமான ஊழியக்காரர்கள் இருந்தாலும், அந்த அரண்மனையில் நேபுகாத்நேச்சாருக்கு இடமில்லை. அரண்மனைக்குள்ளே ராஜாவுக்கு ஏராளமான வசதிகள் இருந்தாலும், அவனால் அந்த வசதிகளை அனுபவிக்க முடியாது. அவன் மனுஷரோடு சஞ்சரிக்காமல் மிருகங்களோடு சஞ்சரிப்பான்.

நேபுகாத்நேச்சாரின் அரண்மனையிலே ராஜாவுக்கு நேர்த்தியான போஜனம் இருந்தாலும், அவன் ராஜபோஜனத்தைப் புசிக்கமாட்டான். மாடுகளைப்போல புல்லை மேய்வான். ஏராளமான ஜனங்களுக்கு போஜனத்தைக் கொடுத்தவன், இனிமேல் ஆகாயத்து பனியிலே நனைந்துகொண்டு, மாடுகளைப்போல புல்லை மேய்ந்துகொண்டிருப்பான். இதுவே அவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானம்.

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் (தானி 4:25) இந்த சத்தியத்தை நேபுகாத்நேச்சார் அறிந்துகொள்ளவேண்டும். தன்னுடைய பலத்தினாலோ, தன்னுடைய பராக்கிரமத்தினாலோ ஒன்றும் ஆகாது என்பதை ராஜாƒ புரிந்துகொள்ளவேண்டும். அது வரையிலும் அவன் மிருகத்தின் இருதயத்தோடு, மிருகங்களோடே சஞ்சரிப்பான்.

கர்த்தர் நேபுகாத்நேச்சார்மீது தம்முடைய தீர்மானத்தைச் சொன்னாலும், தம்முடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்தும்போது, தம்முடைய கிருபைகளையும், இரக்கத்தையும் அவனுக்கு வெளிப்படுத்துகிறார். அவன் கர்த்தருடைய சர்வஆளுகையை அறிந்துகொள்ளவேண்டும். அதுவரையிலும், அவன் ஏழுகாலங்கள் மிருகங்களோடே சஞ்சரிக்கவேண்டும். அதுவரையிலும் அவனுடைய இருதயம் மிருகத்தின் இருதயமாகவே இருக்கும். அவனுக்கு மனுஷனுடைய இருதயம் ஏழுகாலங்களுக்கு திரும்பக் கொடுக்கப்படாது.

""உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்'' (தானி 4:25) என்று ராஜா கண்ட சொப்பனத்திற்கு தானியேல் விளக்கம் சொல்லுகிறார்.

நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய சர்வஆளுகையை அறிந்துகொண்ட பின்பு, அவனுடைய ராஜ்யம் அவனுக்கு திரும்பக் கொடுக்கப்படும். அவனுக்கு மறுபடியுமாய் மனுஷஇருதயம் கொடுக்கப்படும்.

விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது . நேபுகாத்நேச்சார் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் அவனுக்கு நிலைநிற்கும் (தானி 4:26).

கர்த்தருடைய அதிகாரம் இங்கு பரமஅதிகாரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு வானங்களின் அதிகாரம் என்று பொருள். ""வானங்கள்'' என்பது கர்த்தரைக் குறிக்கிற வார்த்தை. வானம் அவருடைய சிங்காசனம். நாம் பூமியிலிருந்து வானங்களைப் பார்க்கிறோம். கர்த்தருடைய மகிமைக்கு அடையாளமாக, பூமியிலிருக்கிற நமக்கு, ""வானங்கள்'' பிரத்தியட்சமாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கெட்ட குமாரன் புத்தி தெளிந்தபோது, ""பரத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்'' (லூக் 15:18) என்று சொன்னான். பரத்திற்கு விரோதமாக செய்த பாவம் என்பது, கர்த்தருக்கு விரோதமாக செய்த பாவமாகும்.

தானியேல் பாபிலோன் தேசத்திலே ஒரு அதிகாரியாக வேலை செய்கிறார். அதே சமயத்தில் அவர் கர்த்தருடைய தீர்க்கதரிசியாகவும் ஊழியம் செய்கிறார். ராஜா கண்ட சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தானியேல் சொன்ன பின்பு, ராஜாவுக்கு தீர்க்கதரிசன வார்த்தைகளையும் சொல்லுகிறார்.

தானியேல் சொல்லும் ஆலோசனையை ராஜா அங்கீகரிக்கவேண்டும். ராஜா நீதியைச் செய்யவேண்டும். தன்னுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் அகற்றிவிடவேண்டும். சிறுமையானவர்களுக்கு இரக்கம் காண்பிக்கவேண்டும். அப்பொழுது நேபுகாத்நேச்சாருடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்று தானியேல் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார் (தானி 4:27).

ராஜாவுக்கு முன்பாக மிகுந்த மனத்தாழ்மையோடு, தானியேல் தன்னுடைய ஆலோசனைகளைச் சொல்லுகிறார். ""ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு'' என்று தானியேல் தன்னுடைய வார்த்தையில் மரியாதையையும், மென்மையையும் காண்பிக்கிறார்.

ராஜாவுக்கு தானியேல் மருத்துவ ஆலோசனைகளையோ, மருத்துவ சிகிச்சை முறைகளையோ சொல்லவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம். ராஜாவுக்கு, அவனுடைய பாவங்களினால், அவனுக்கு சாபம் வரப்போகிறது. அவனுக்கு வேதனைகளும், வியாதியும், கஷ்டங்களும் வரப்போகிறது. இந்த பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால், ராஜா தன்னுடைய பாவங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டும். அவன் பாவங்களையும் அக்கிரமங்களையும் தன்னைவிட்டு அகற்றவேண்டும்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய தேசத்தில் குடியிருக்கிற ஜனங்களுக்கு தீங்கு செய்கிறான். அவர்களுக்கு இரக்கம் காண்பியாமல், அவர்களுக்கு அக்கிரமம் செய்கிறான். தன்னுடைய தேசத்தில் அடிமைகளாகயிருக்கும் அந்நிய தேசத்தாரை கொடுமைப்படுத்துகிறான். ராஜாவின் அக்கிரமம் பெரிதாயிருக்கிறது. ராஜா தன்னுடைய அக்கிரமங்களை நீக்கிப்போட்டால் மாத்திரம் போதாது, அவன் நீதியையும் செய்யவேண்டும். அப்பொழுது ராஜா தனக்கு வரப்போகும் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வான்.

தானியேலின் ஆலோசனை மிகவும் சுருக்கமாயிருக்கிறது. அவர் ஞானமுள்ள புத்திமதியைச் சொல்லுகிறார். தன்னுடைய ஆலோசனைகளை அங்கீரித்து செயல்பட்டால், ராஜாவுக்கு என்ன அநுகூலம் உண்டாகும் என்பதையும் தானியேல் சொல்லுகிறார். ""உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம்'' என்பதே ராஜாவுக்கு தானியேல் சொல்லுகிற மெய்யான ஆலோசனை.

தானியேல் ஒரு நாழிகை மட்டும் திகைத்தான். கலங்கினார் (தானி 4:19). தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தானியேல் கலங்கவில்லை. ராஜாவிற்காகவும் தேசத்திற்காகவும் தன்னுடைய சொந்த ஜனங்களின் நன்மையை நினைத்தும் தானியேல் திகைத்தார். கலங்கினார்.

விருட்சத்தைப் பற்றிய தரிசனத்தின் வியாக்கியானம்

1. நேபுகாத்நேச்சார் - விருட்சம் (தானி 4:20-22; தானி 2:38)

2. காவலாளன் - இவன் பரிசுத்தவான். வானத்திலிருந்து இறங்கிவந்தான். இவன் உன்னதமானவரின் ஆணையை அறிவிக்கிறான். (தானி 4:23-24).

3. ஆணை (தானி 4:25) ""மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்து போகவேண்டும்.''

4. தரையில் இருக்கும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம். இராஜா பரம அதிகாரத்தை அறிந்த பின்பு இராஜியம் அவருக்கு திரும்பக்கொடுக்கப்படும். (தானி 4:26)

ஏழு காலங்கள் என்பது ஏழு வருஷங்களைக் குறிக்கும். லேவி 26:18 ஆவது வசனத்தில் இது தண்டனையின் உக்கிரத்தைக் குறிப்பிடுகிறது. 2இராஜா 5:10 ஆவது வசனத்தில் ஏழுதரம் என்பது யோர்தான் நதியில் ஏழுதரம் முங்குவதைக் குறிக்கும். ஒரு சிலர் ஏழு காலங்கள் என்பதற்கு 2,520 வருஷங்கள் என்று வியாக்கியானம் பண்ணுகிறார்கள் (தானி 4:23).

""மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்.......'' - (தானி 4:25-26) என்று தானியேல் ராஜாவுக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. நேபுகாத்நேச்சாரை யார் தள்ளிவிடுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அவருடைய சத்துருக்கள் அவரைத் தள்ளமாட்டார்கள். நேபுகாத்நேச்சார் சத்துருக்களின் கையில் சிக்கியிருந்தால் அவருடைய சத்துருக்கள் அவரைக் கொன்று போடுவார்கள்.

நேபுகாத் நேச்சார் தன்னுடைய சிம்மாசனத்தில் இருந்து தள்ளிவிடப்படுவது அவருடைய சத்துருக்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். இனிமேல் இராஜாவால் மற்ற தேசங்கள் மீது யுத்தம் பண்ண முடியாது. ஆயினும் நேபுகாத்நேச்சாரின் நண்பர்கள் அவருக்கு உதவி செய்திருப்பார்கள். அவர் மிருகங்கள் மத்தியில் தங்கியிருந்த காலங்களில் அவர்கள் இராஜாவை பாதுகாத்திருந்திருப்பார்கள்.

நேபுகாத் நேச்சாருக்குப் பதிலாக புதிய இராஜா யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவருடைய இராஜ்யம் பாதுகாப்பாக இருக்கிறது. அவர் குணமடைந்து திரும்பி வருவதற்காக அவருடைய தேசத்தார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இராஜா நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அவருடைய குமாரன் இளவரசனாகப் பொறுப்பேற்றுக்கொண்டான். தன் தந்தைக்காக அவன் இராஜ்யத்தை பாதுகாத்தான். இதனால் தானி 4:26ஆவது வசனம் நிறைவேறிற்று.

தானியேல் நேபுகாத்நேச்சாருக்குக் கூறும் ஆலோசனை

1. நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொள்ளும்.

2. நீதியைச் செய்து உமது பாவங்களை அகற்றிவிடும்.

3. சிறுமையானவர்களுக்கு இறங்கி உமது அக்கிரமங்களை அகற்றிவிடும்.

ராஜாவுக்கு புத்திமாறிற்று தானி 4:28-33

தானி 4:28. இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.

தானி 4:29. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:

தானி 4:30. இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

தானி 4:31. இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்தி-ருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.

தானி 4:32. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.

தானி 4:33. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனம் அவனுக்கு பலித்தது. ராஜாவின் சொப்பனத்திற்கு தானியேல் விளக்கம் சொன்னார். அவர் சொன்ன பிரகாரமாகவே ராஜாவின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வந்தது. தானியேல் சொன்ன வியாக்கியானம் உறுதிபண்ணப்பட்டது.

கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை நேபுகாத்நேச்சாருக்கு வெளிப்படுத்துகிறார். ஆனாலும் கர்த்தர் அதை உடனே நிறைவேற்றாமல் பொறுமையோடிருக்கிறார். பன்னிரண்டு மாதங்களாக கர்த்தர் பொறுமையோடு காத்திருக்கிறார். நேபுகாத்நேச்சார் தன்னுடைய அக்கிரமத்தையும் தன்னுடைய பாவத்தையும் விட்டு விலகினால் கர்த்தர் ஒருவேளை அவனுக்கு இரக்கம் காண்பித்திருப்பார். ஆனால் நேபுகாத்நேச்சாரோ தன்னுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் அகற்றவில்லை. அவன் சிறுமையானவர்களுக்கு இரக்கம் காண்பிக்கவில்லை. கர்த்தருடைய தீர்ப்பு, அவர் சொன்ன பிரகாரமாக நேபுகாத்நேச்சார்மீது வருகிறது.

பாபிலோன் தேசத்தில் அந்நிய தேசத்தார் அநேகர் சிறையிருப்பிலிருக்கிறார்கள். நேபுகாத்நேச்சார் அவர்களைத் துன்பப்படுத்துகிறான். வேதனைப்படுத்துகிறான். அவர்கள்மீது பாரமான நுகங்களை சுமத்துகிறான். பாபிலோன் சிறையிருப்பில் இஸ்ரவேல் வம்சத்தாரும் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரைநோக்கி ஏறெடுத்த ஜெபங்களும், விண்ணப்பங்களும், அவர்களுடைய கூக்குரல்களும், பெருமூச்சுக்களும் கர்த்தருடைய சமுகத்தில் வந்து எட்டுகிறது. ஆனால் அவர்களுடைய வேதனை நேபுகாத்நேச்சாருக்கு புரியவில்லை. அவன் சிறுமையான அடிமைகளுக்கு இரக்கம் காண்பிக்கவில்லை.

பன்னிரண்டு மாதங்களாக ராஜா தன் இஷ்டப்பிரகாரம் நடந்துகொண்டான். ஒருவேளை அவன் இந்தக்காலத்தில் தான் கண்ட சொப்பனத்தைக்கூட மறந்திருக்கலாம். அந்த சொப்பனம் தனக்கு சித்திக்காது என்று அவன் ஏளனமாய் நினைத்து, இறுமாப்பாயிருக்கிறான். தொடர்ந்து அக்கிரமங்களையும் பாவங்களையும் செய்கிறான். நேபுகாத்நேச்சார் தான் கண்ட சொப்பனங்களை மறந்தாலும், கர்த்தர் அவனுக்கு வெளிப்படுத்தின சொப்பனங்களையும், அதன் அர்த்தங்களையும் மறக்கவில்லை.

கர்த்தர் பொறுமையாயிருக்கிறார் என்பதற்காக, அவர் நாம் செய்த பாவங்களை மறந்துவிட்டார் என்பது பொருளல்ல. நம்முடைய பாவங்களுக்கு நாம் மனந்திரும்பவேண்டுமென்று, கர்த்தர் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறார். நாம் மனந்திரும்பாத பட்சத்தில், தொடர்ந்து நம்முடைய பாவங்களில் நாம் நிலைத்திருப்போமென்றால், தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு, நம்மீது நிச்சயமாகவே வரும்.

நேபுகாத்நேச்சார் சொப்பனம் கண்ட பிரகாரம் அவன்மீது வந்தது. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருந்தான். அப்போது, ""இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா'' என்று ராஜா சொன்னான் (தானி 4:29,30).

பாபிலோன் ராஜ்யத்தின் அரண்மனை ராஜாவினுடைய ஐசுவரியத்திற்கும், ஆடம்பரத்திற்கும், பெருமைக்கும் அடையாளம். பாபிலோன் தேசத்திலே ஐசுவரியம் மிகுந்திருக்கிறது. அங்கு எல்லாவிதமான ஆடம்பரங்களும் அதிகமாய்க் காணப்படுகிறது. பாபிலோன் தேசத்தில் காணப்படுகிற எல்லாமே ராஜாவின் மகிமைப் பிரதாபத்திற்கு அடையாளமாயிருக்கிறது. பாபிலோன் ராஜ்யத்தின் அரண்மனையைக்கூட ராஜா தன்னுடைய மகிமைப்பிரதாபத்திற்கென்றே கட்டினான்.

பாபிலோன் தேசம் நேபுகாத்நேச்சார் பிறப்பதற்கு முன்பாகவே ஸ்தாபிக்கப்பட்டது. நேபுகாத்நேச்சார் சாதாரண பாபிலோனாகயிருந்த தேசத்தை மகாபாபிலோனாக கட்டியெழுப்பினான். தான் கட்டியதை நினைத்து பெருமைப்பட்டான்.

அகஸ்துராயன் ரோமப்பேரரசை கட்டியெழுப்பினான். அவன் ஆட்சிக்கு வந்தபோது ரோமப்பேரரசில் செங்கல்கள் மாத்திரமே இருந்தது. அகஸ்துராயனோ ரோமப்பேரரசு முழுவதையும் பளிங்கு கற்களினால் நிரப்பினான். தான் கட்டியெழுப்பிய ரோமாபுரியைப் பார்த்து அகஸ்துராயன் பெருமைப்பட்டான்.

மனுஷருடைய இருதயங்களில் பொதுவாகவே பெருமையும், உயர்வான எண்ணங்களும் நிரம்பியிருக்கிறது. மனுஷர் தங்கள் கைகளின் கிரியைகளை பெருமைப்படுத்துகிறார்கள். சகலமும் தங்கள் பலத்தினாலும், பராமக்கிரமத்தினாலும் உண்டாயிற்று என்று நினைக்கிறார்கள்.

கர்த்தருடைய கிருபையும், அநுக்கிரகமும் இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. கர்த்தரே ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து, இந்த வானத்தையும், பூமியையும் உண்டாக்கினார். கர்த்தர் உண்டாக்கின பூமியில், கர்த்தர் உண்டுபண்ணின பொருட்களை வைத்து, நாம் ஒரு சில காரியங்களைச் செய்கிறோம். இவையெல்லாவற்றிற்கும் மூலஆதாரம் கர்த்தரே. கர்த்தருடைய உதவியில்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

பாபிலோன் ராஜா தன்னுடைய நகரத்தைப் பார்த்து, ""என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா'' என்று பெருமையோடு சொல்லுகிறான்.

நேபுகாத்நேச்சாரின் பெருமையும், அவனுடைய ஆணவமும் கர்த்தருடைய பொறுமையை சோதித்துப் பார்க்கிறது. ராஜா கர்த்தருடைய நீடிய பொறுமையை அலட்சியம் பண்ணுகிறான். கர்த்தரால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று ஆணவமாயிருக்கிறான். கர்த்தரோ நீடியபொறுமையாயிருக்கிறார். அதே வேளையில் அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. அவருடைய செவிகள் மனுஷருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. கர்த்தர் கேட்பார். கர்த்தர் பார்ப்பார்.

நேபுகாத்நேச்சார் தான் கட்டின மகாபாபிலோனைப்பற்றி பெருமையாகப் பேசுகிறான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்தி-ருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

""ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது'' (தானி 4:31,32) என்று அந்த சத்தம் விளம்பிற்று.

பாபிலோன் ராஜாவின் மகிமை அவனை விட்டு நீங்கிப்போயிற்று. அவனுடைய ராஜ்யபாரம் அவனை விட்டு நீங்கிற்று. நேபுகாத்நேச்சார் பாபிலோன் தேசத்திற்கு ராஜாவாகயிருப்பதினால்தான், அவனுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாயிற்று. கர்த்தரோ அவனுடைய ராஜ்யபாரத்தை அவனை விட்டு நீக்கிப்போடுகிறார். இப்போது நேபுகாத்நேச்சார் ராஜாவாயில்லை.

நேபுகாத்நேச்சார் ராஜாவாகயில்லாவிட்டாலும், சாதாரண மனுஷனாகயிருந்திருப்பான். ஆனால் கர்த்தரோ, அவனை மனுஷரினின்றும் தள்ளிவிடுகிறார். ராஜா இப்போது மனுஷனுமல்ல. மற்ற மனுஷரைப்போல ராஜாவால் சிந்திக்கவோ, செயல்படவோ முடியாது. நேபுகாத்நேச்சார்மீது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வருகிறது. அவன் இப்போது ராஜாவுமல்லாமல், மனுஷனுமல்லாமல் இருக்கிறான். அவனுக்கு மனுஷக்குரிய மரியாதைகூட கிடைக்கவில்லை. ""மனுஷரினின்று தள்ளப்படுவாய்'' என்று கர்த்தர் நேபுகாத்நேச்சாரைப் பார்த்து சொல்லுகிறார்.

அந்நேரமே கர்த்தர் சொன்ன நியாயத்தீர்ப்பின் வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது (தானி 4:33).

கர்த்தர் நேபுகாத்நேச்சாருக்கு சொப்பனத்திலே தரிசனத்தையும் காண்பித்து, தானியேல் மூலமாக அந்த சொப்பனத்திற்கு வியாக்கியானமும் கொடுத்து, அதை உடனே நிறைவேற்றாமல், பன்னிரண்டு மாதங்களாக பொறுமையோடு காத்திருக்கிறார். இப்போதோ கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நேபுகாத்நேச்சாரிடத்தில் உடனே நிறைவேறிற்று.

ராஜா மனுஷரினின்று தள்ளப்படுகிறான். அவனுடைய புத்திமாறிற்று. அவனால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்கு ஞாபகசக்தியுமில்லை. அவனால் மற்ற மனுஷரைப்போல சிந்திக்கவோ, செயல்படவோ முடியவில்லை. அவன் மாடுகளைப்போல புல்லை மேய்கிறான். பாபிலோன் தேசத்தின் அரண்மனையில் உலாவியவன் இப்போது பனியில் நனைகிறான். ராஜபோஜனத்தைப் புசித்தவன் மாடுகளைப்போல புல்லை மேய்கிறான். ராஜவஸ்திரங்களை அணிந்து கொலுமண்டபத்தில் வீற்றிருந்தவன் இப்போது நிர்வாணமாக புல்வெளியில் அலைந்து திரிகிறான். இவையெல்லாமே நேபுகாத்நேச்சாரிடத்தில் சடுதியில் நிறைவேறிற்று.

நேபுகாத்நேச்சார் தன்னை எல்லா மனுஷரைவிட உயர்த்தினான். தேவனுக்கு சமமாக தன்னை நினைத்தான். கர்த்தரோ தம்முடைய நீதியினால் அவனை மனுஷரினின்று தள்ளிவிடுகிறார். அவன் இப்போது ஒரு சாதாரண மனுஷனாகயிராமல் ஒரு மிருகத்தைப்போல இருக்கிறான். நேபுகாத்நேச்சார் தன்னை உண்டாக்கின கர்த்தருக்கு விரோதமாக பெருமை பாராட்டினான். கர்த்தரோ அவனை மிருகங்கள் மத்தியிலே, ஒரு மிருகத்தைப்போல தள்ளிவிட்டார்.

""நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு, பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு. நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு'' (யோபு 40:11-13).

கர்த்தர் நேபுகாத் நேச்சாரின் மீதும் கிருபையோடிருக்கிறார். பன்னிரண்டு மாதங்களாக கர்த்தர் இராஜாவைக் கவனித்துச் சோதித்துப்பார்க்கிறார். (தானி 4:27)

""நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா'' (தானி 4:30) என்று நேபுகாத்நேச்சார் பெருமையோடு சொல்லுகிறான். பாபிலோன் மிகப்பெரிய பட்டணம். சதுர வடிவில் இந்தப் பட்டணம் அமைந்துள்ளது. ஒவ்வொரு பக்கமும் 14 மைல் நீளமுள்ளது. ஐபிராத்து நதியின் இரு கரைகளிலும் பாபிலோன் நகரம் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு கிழக்கு மாகாணம், மேற்கு மாகாணம் என்று பெயர். இவ்விரண்டு மாகாணங்களையும் 3,240 அடி நீளமுள்ள பாலம் இணைக்கிறது. இந்த ஆற்றுக்கு அடியில் சுரங்க வழிகள் இருந்ததாகக் கூறுகிறார்கள். பாபிலோனின் தொங்கு தோட்டம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இங்கு பேலுக்கு ஒரு கோவிலும், மேலும் பல பெரிய கட்டிடங்களும் இருந்தன. இதனால் பாபிலோன் நகரம் உலகத்திலுள்ள மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.

நேபுகாத்நேச்சார் தன் வல்லமையின் பராக்கிரமத்தினால், தன் மகிமைப் பிரதாபத்துக்கென்று பாபிலோனை கட்டினான் (தானி 4:30). பாபிலோன் பெரிய பட்டணம். இதற்காக நேபுகாத்நேச்சார் தேவனுக்கு மகிமை செலுத்த வேண்டும். ஆனால் அவனோ தன்னையே உயர்த்தி தனக்கு மகிமையை தேடிக்கொண்டான். இந்தப் பெருமை நேபுகாத்நேச்சாரின் அழிவுக்குக் காரணமாயிற்று. கர்த்தரே நேபுகாத்நேச்சாரைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு இந்தப் பெரிய இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார் (தானி 2:19,38). கர்த்தர் நேபுகாத்நேச்சாரை 12 மாதங்களுக்கு முன்பாகவே எச்சரித்தார் (தானி 4:17,26-27).

ராஜா தன்னைத்தானே உயர்த்தினான். இதனால் அவனுடைய புத்தி தடுமாறிற்று. ஏழு வருஷங்களாக ராஜா பித்தம் பிடித்தவனைப் போல இருந்தான்.

கர்த்தரே உன்னதமானவர் என்பதையும் வானத்திற்கும் பூமிக்கும் அவரே சர்வ அதிகாரம் படைத்த ஆளுநர் என்பதையும் எல்லா ஜனங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். (1கொரி 15:24-28; எபே 1:10; பிலி 2:8-11; வெளி 11:15; வெளி 22:4-5). இந்தச் சத்தியம் இங்கு ஐந்து தடவை வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. (தானி 2:21-22; தானி 4:3,25,32,34-35).

நேபுகாத்நேச்சார் தன்னுடைய கிரியையையும் தன்னுடைய இராஜ்யத்தையும் எந்த நேரத்தில் உயர்த்தினானோ அந்த நேரத்தில் கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் நிறைவேறிற்று. (தானி 4:28-30,33).

நேபுகாத்நேச்சார் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான் (தானி 4:33). நேபுகாத்நேச்சாருக்கு பித்தம் பிடித்திருக்கிறது. கிரேக்க மொழியில் இந்த வியாதிக்கு ""லிகன்த்ரோபி'' என்றுபெயர். இதில் இரண்டு வார்த்தைகள் அடங்கியுள்ளன. ஒன்று ஓநாயையும், மற்றொன்று மனுஷனையும் குறிக்கும். நேபுகாத்நேச்சார் ஓநாயின் குணமுடைய மனுஷனாக இருக்கிறான்.

ராஜாவுக்கு புத்தி திரும்பி வந்தது தானி 4:34-37

தானி 4:34. அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

தானி 4:35. பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

தானி 4:36. அவ்வேளையிலே என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.

தானி 4:37. ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு புத்தி திரும்பி வருகிறது. அது உடனே திரும்பி வராமல் ""அந்த நாட்கள்'' சென்ற பின்பு திரும்பி வருகிறது. ""ஏழு காலங்கள்'' (தானி 4:25) சென்ற பின்பு ராஜாவுக்கு புத்தி திரும்பி வருகிறது. நேபுகாத்நேச்சார் ஏழுவருஷங்களாக மாடுகளைப்போல புல்லை மேய்ந்தான். அவனுடைய சரீரம் ஆகாயத்து பனியிலே நனைந்தது. அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டவனாயிருந்தான்.

ஏழு வருஷங்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தான்; அவனுக்கு புத்தி திரும்பிவந்தது; அப்பொழுது அவன் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினான்; ""அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்'' என்று சொல்லி நேபுகாத்நேச்சார் கர்த்தரை துதித்தான்.

ஏழுவருஷம் வரையிலும் நேபுகாத்நேச்சார், ஒரு மிருகத்தைப்போல தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு நியமிக்கப்பட்ட தண்டனை காலம் முடிந்த பின்பு, இப்போது தன் கண்களை வானத்திற்கு நேராக ஏறெடுக்கிறான். ஏழு வருஷங்களாக மிருகத்தைப்போலிருந்தவன், இப்போது மனுஷனாக மாறுகிறான். தன்னுடைய கண்களை வானத்திற்கு ஏறெடுக்கிறான்.

ஏழுவருஷத்திற்கு முன்பு, நேபுகாத்நேச்சார் தன்னுடைய கண்களை பல தடவை வானத்திற்கு நேராக ஏறெடுத்திருக்கிறான். ஆனாலும் அவன் அப்போது வானத்தைப் பார்த்ததற்கும், இப்போது வானத்தைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அப்போது மனமேட்டிமையோடு, பெருமையோடு, தன்னை தேவனுக்கு நேராக உயர்த்தி, இருதயத்தில் பெருமையோடு வானத்தை நோக்கிப் பார்த்தான்.

இப்போதோ நேபுகாத்நேச்சார் தன்னுடைய பாவங்களுக்கு மனந்திரும்பியிருக்கிறான். அவனுடைய இருதயத்தில் மனத்தாழ்மை உண்டாயிருக்கிறது. பணிந்த இருதயத்தோடு, வானத்தை நோக்கிப் பார்க்க துணியாமல், கர்த்தருடைய இரக்கங்களுக்காக, அவருடைய சமுகத்தை நோக்கிப் பார்க்கிறான்.

நேபுகாத்நேச்சார் தன்னைத் தாழ்த்தும்போது, அவனுடைய மனக்கண்கள் திறக்கப்படுகிறது. உன்னதமானவரை ஸ்தோத்திரிக்கிறான். என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரை புகழ்ந்து மகிமைப்படுத்துகிறான். கர்த்தருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம் என்றும், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும் என்றும் தெளிந்த புத்தியோடு கர்த்தரை புகழ்ந்து மகிமைப்படுத்துகிறான்.

மனுஷர் கர்த்தரை புகழ்ந்து மகிமைப்படுத்தும்போதுதான், அவர்களுடைய புத்தி தெளிவாயிருக்கும். கர்த்தரை துதிக்கிறவர்களால் மாத்திரமே தெளிவாக சிந்திக்க முடியும். கர்த்தரை புகழ்ந்து மகிமைப்படுத்துகிறவர்கள் மாத்திரமே மனுஷராக ஜீவிப்பார்கள்.

நேபுகாத்நேச்சார் ஆரம்பத்தில் மதியீனமாயிருந்தான். கர்த்தர் அவனைத் தண்டித்து, அவனுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். இப்போது ராஜா தெளிந்த புத்தியுள்ளவனாயிருக்கிறான். அவன் தன்னைப் புரிந்துகொள்கிறான். தான் கர்த்தருக்கு சமமானவனல்ல என்பதை ராஜா உணர்ந்துகொள்கிறான். தன்னுடைய பாபிலோன் ராஜ்யம் நித்திய காலத்திற்கும் நிலைத்து நிற்காது என்பதை நேபுகாத்நேச்சார் அறிந்துகொள்கிறான். தன்னுடைய ஆளுகை தற்காலிகமானது என்பதையும் பாபிலோன் ராஜா புரிந்துகொள்கிறான்.

நேபுகாத்நேச்சார் தன்னையும், தன்னுடைய ஆளுகையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது, கர்த்தருடைய கர்த்தத்துவத்தையும், அவருடைய ராஜரீகத்தையும் பார்க்கும் சிலாக்கியம் அவனுக்கு கிடைக்கிறது. கர்த்தருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம். இந்த உலகத்தில் கர்த்தருடைய ஆளுகையைப்போல நித்தியமான ஆளுகை வேறு யாருக்கும் இல்லை. கர்த்தருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். இந்தப் பூமியிலுள்ள எந்த மனுஷருடைய ராஜ்யமும் தலைமுறை தலைமுறையாக, நித்திய காலத்திற்கும் நிலைத்து நிற்கப்போவதில்லை. கர்த்தர் மாத்திரமே நித்தியமானவர்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய அரண்மனையின் கொலுமண்டபத்தில் வீற்றிருக்கும்போது ஏராளமான மந்திரிகளும், பிரபுக்களும், அந்நிய தேசத்து ராஜாக்களும் அவனுடைய உதவியை நாடி வருவார்கள். ராஜாவை தாராளமான வார்த்தைகளினால் போற்றிப் புகழுவார்கள். ""ராஜா என்றென்றும் வாழ்க'' என்று சொல்லி, ராஜாவை போற்றிப்புகழுவார்கள். தன்னைப் புகழ்ந்து பேசும் இந்த வார்த்தைகளை ராஜா அடிக்கடி கேட்டு, தான் நித்தியமானவன் என்று நேபுகாத்நேச்சார் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டான். இப்போதோ அவனுக்கு புத்தி தெளிகிறது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மாத்திரமே நித்தியமானவர் என்னும் சத்தியத்தை ராஜா புரிந்துகொள்கிறான்.

கர்த்தருடைய ராஜ்யம் தன்னுடைய ராஜ்யத்தைப்போலவே இருக்குமென்று நேபுகாத்நேச்சார் நினைத்தான். கர்த்தருடைய ராஜ்யம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். கர்த்தருடைய ராஜ்யம் நித்தியமானது. கர்த்தருக்கு வாரிசுகள் யாருமில்லை. கர்த்தருடைய ராஜ்யத்தில் புரட்சி எதுவும் உண்டாகாது. கர்த்தருக்கு முன்பாக யாரும் எதிர்த்து நிற்க முடியாது. கர்த்தர் சர்வவல்மையும், சர்வஅதிகாரமுமுள்ளவர். அவருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமையும் அதிகாரமும் யாருக்குமே இல்லை. கர்த்தர் தம்முடைய சித்தத்தின் பிரகாரம் கிரியை செய்கிறார். கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் ஒருபோதும் தடைப்பட்டுப்போகாது. கர்த்தர் சகலவற்றையும் நேர்த்தியாகச் செய்கிறவர்.

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்று மில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; கர்த்தர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; கர்த்தருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: ""என்ன செய்கிறீர்'' என்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. இந்த வாக்கியங்களை நேபுகாத்நேச்சார் பேசுகிறான் (தானி 4:35).

கர்த்தருடைய கிரியைகளெல்லாம் அவருடைய வார்த்தையோடு ஒத்துப்போகும். கர்த்தர் தாம் சொல்லுகிறதை செய்கிறவர். தாம் செய்கிறதை சொல்லுகிறவர். கர்த்தருடைய வழிகளெல்லாம் நீதியும் சத்தியமுமானவை. அவர் ஞானமுள்ள கிரியைகளை நீதியாய்ச் செய்கிறார். கர்த்தருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகளெல்லாம் நித்தியமுமானவைகள்.

நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தபோது, அவனுக்கு புத்தி திரும்பி வருகிறது. அவன் கர்த்தரை புகழ்ந்து மகிமைப்படுத்துகிறான். அவ்வேளையில் அவனுடைய புத்தி அவனுக்கு முழுமையாய்த் திரும்பி வருகிறது.

நேபுகாத்நேச்சாருடைய ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக அவனுடைய மகிமையும் அவனுடைய முகக்களையும் அவனுக்குத் திரும்பி வந்தது; அவனுடைய மந்திரிமாரும் அவனுடைய பிரபுக்களும் அவனைத் தேடிவந்தார்கள்; அவனுடைய ராஜ்யத்திலே அவன் ஸ்திரப்படுத்தப்படுத்தப்பட்டான்; அதிக மகத்துவமும் அவனுக்குக் கிடைத்தது (தானி 4:36).

இப்போது நேபுகாத்நேச்சாருடைய ராஜ்யபாரம் ஸ்திரப்படுத்தப்படுகிறது. தேசத்தில் ஒரு பிரச்சனையுமில்லை. ராஜாவுக்கும் ஒரு எதிர்ப்பும் இல்லை. நேபுகாத்நேச்சாருக்கு பாடுகள் வந்தது. ஆனாலும் அந்தப் பாடுகள் அவனிடத்தில் நிரந்தரமாய்த் தங்கியிருக்கவில்லை. எந்த நோக்கத்திற்காக ராஜாவுக்கு பாடுகள் வந்ததோ, அந்த நோக்கம் நிறைவேறின பின்பு, அந்தப் பாடுகளும் அவனைவிட்டு நீங்கிப்போகிறது.

நேபுகாத்நேச்சார் மறுபடியும் தன்னுடைய ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொள்கிறான். அவன் இழந்துபோன மகிமையையும் முகக்களையையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். மிருகத்தின் இருதயத்திற்குப் பதிலாக இப்போது, அவனுக்கு மறுபடியுமாய் மனுஷனுடைய இருதயம் கொடுக்கப்படுகிறது. தன்னுடைய ராஜ்யத்தில் அவன் ஸ்திரப்படுத்தப்படுகிறான். இப்போது அவனுக்கு முந்தியிருந்த மகத்துவத்தைவிட, அதிக மகத்துவம் கிடைத்திருக்கிறது.

நேபுகாத்நேச்சாரை கர்த்தர் அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார். அவன் பாபிலோன் தேசத்தின் ராஜா. கர்த்தரோ பரலோகத்தின் ராஜா. நேபுகாத்நேச்சார் பரலோகத்தின் ராஜாவாகிய கர்த்தரைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறான்.

""கர்த்தருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்'' (தானி 4:37) என்று நேபுகாத்நேச்சார் கர்த்தரைப் புகழ்ந்து எழுதுகிறான்.

நேபுகாத்நேச்சார் ஏழுவருஷங்களாக பித்தம் பிடித்தவனாக இருக்கிறான். ஏழு வருஷங்களுக்குப் பின்பு அவனுடைய புத்தி அவனுக்குத் திரும்பி வந்தது. அப்போது அவன் கர்த்தருடைய இரக்கத்திற்காக அவரைத் துதிக்கிறான்.

கர்த்தர் ""வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்'' (தானி 4:35) பரலோகத்திலும் சமுதாய அமைப்பு உள்ளது என்பதை இந்த வாக்கியம் உறுதிபண்ணுகிறது.

நேபுகாத்நேச்சார் திரும்பவும் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்கள்

1. அவன் புத்தி அவனுக்குத் திரும்பிவந்தது (தானி 4:34).

2. அவன் புத்தி அவனுக்குத் திரும்பிவந்தது (தானி 4:36).

3. அவன் ராஜ்யபாரத்தின் மேன்மை திரும்பி வந்தது.

4. அவன் மகிமையும் அவன் முகக்களையும் அவனுக்குத் திரும்பி வந்தது

5. அவன் மந்திரிமாரும் அவன் பிரபுக்களும் அவனைத் தேடிவந்தார்கள்.

6. தன் ராஜ்யத்திலே அவன் ஸ்திரப்படுத்தப்பட்டான். (தானி 4:36).

7. அதிக மகத்துவமும் அவனுக்குக் கிடைத்தது.

நேபுகாத்நேச்சார் கற்றுக் கொண்ட காரியங்கள்

1. கர்த்தர் பரலோகத்தின் ராஜாவாக இருக்கிறார்.

2. அவரைப் புகழவேண்டும்.

3. அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமானவை.

4. அவருடைய வழிகள் நியாயமானவைகள்

5. அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் (தானி 4:37).

6. தேவனே தேவர்களுக்குத் தேவனாயிருக்கிறார். (தானி 2:47).

7. அவரே மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறார். (தானி 2:47).

8. அவரையே நம்பியிருக்கிறவர்களுக்கு அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவிக்கிறார். (தானி 3:28).

9. மனுஷனுடைய வார்த்தையைத் தேவனால் மாற்றமுடியும். (தானி 3:28).

10. தேவனுடைய மெய்யான தாசர்கள் மற்றத் தேவர்களை ஆராதிக்கமாட்டார்கள். (தானி 3:16-18,28).

11. இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை (தானி 3:29).

12. மெய்யான தேவனைப்போல வேறு எந்த தெய்வங்களாலும் அற்புதங்களைச் செய்ய முடியாது. (தானி 3:25-29; தானி 4:3).

13. அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம் (தானி 4:3,34).

14. அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும். (தானி 4:3).

15. தேவனுடைய ஆவியானவர் மனுஷரில் வாசம்பண்ணுகிறார். (தானி 4:8,9,18).

16. பூமியில் தேவனே பிரதானமானவர். (தானி 4:17,34).

17. உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுக்கிறார். (தானி 4:17,32).

18. பூமியிலுள்ள ஞானிகளால் மனுஷருடைய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடியாது. (தானி 2:2-13; தானி 4:4-8).

19. பாவத்திற்குத் தண்டனை உண்டு. (தானி 4:27-33).

20. பெருமை வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும். (தானி 4:28-37).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.