41 அதிகாரம்
கர்த்தருடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரமாக யோசேப்பு எகிப்து தேசத்திலே உயர்த்தப்படுகிறார். கானான் தேசத்தில் பஞ்சமுண்டாயிற்று. யாக்கோபுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆகாரம் கிடைக்கிறது.
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் கண்ட சொப்பனங்கள் (ஆதி 41:1#8). பார்வோனின் சொப்பனத்திற்கு அர்த்தம் கூற யோசேப்பு அழைக்கப்படுகிறார் (ஆதி 41:9#13). யோசேப்பு பார்வோனுடைய சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார். எகிப்து தேசத்தில் ஏழு வருஷம் பரிபூரணமும், ஏழுவருஷமும் பஞ்சமும் உண்டாகும் என்பது அந்த சொப்பனத்தின் அர்த்தமாகும். இந்தப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்றும் யோசேப்பு புத்தியுள்ள ஆலோசனை சொல்லுகிறார் (ஆதி 41:14#36).
பார்வோன் யோசேப்பை எகிப்து தேசத்திலே உயர்ந்த அதிகாரியாக நியமிக்கிறான் (ஆதி 41:37#45). யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்ன பிரகாரமாக எகிப்து தேசத்திலே காரியங்கள் சம்பவிக்கிறது (ஆதி 41:46#57).
பார்வோன் கண்ட சொப்பனங்கள்
ஆதி 41:1#8
ஆதி 41:1. இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்று கொண்டிருந்தான்.
ஆதி 41:2. அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியி-ருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.
ஆதி 41:3. அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியி-ருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையில் நின்றது.
ஆதி 41:4. அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
ஆதி 41:5. மறுபடியும் அவன் நித்திரை செய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளி-ருந்த ஓங்கி வளர்ந்தது.
ஆதி 41:6. பின்பு, சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
ஆதி 41:7. சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக் கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.
ஆதி 41:8. காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும், சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக்கூடாமற்போயிற்று.
கர்த்தர் எகிப்து தேசத்திலே யோசேப்பை உயர்த்துகிறார். ஆனாலும் யோசேப்பு கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இரண்டு வருஷங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இரண்டு வருஷம் சென்ற பின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் காண்கிறான் (ஆதி 41:1).
கர்த்தர் தம்முடைய ஜனங்களை இரட்சிக்க ஒரு வேளையை நியமித்திருக்கிறார். அந்த வேளை வரும்போதுதான் கர்த்தருடைய ஜனத்திற்கு விடுதலையும் ஆசீர்வாதமும் கிடைக்கும். கர்த்தர் நியமித்த காலம் வரும் வரையிலும் நாம் காத்திருக்கவேண்டும். காத்திருப்பது நமக்கு கஷ்டமாகயிருந்தாலும், நமக்கு வேறு வழி இல்லை. கர்த்தருடைய வேளையே, அவருக்கும் ஏற்ற வேளை, அதுவே நமக்கும் ஏற்ற வேளை.
யோசேப்பு அடிமையாக விற்கப்பட்ட நாளிலிருந்து பானபாத்திரக்காரனுடைய சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்ன நாள்வரையிலும் பதினொறு வருஷமாயிற்று. யோசேப்பு சிறைச்சாலையில் மேலும் இரண்டு வருஷம் இருக்கிறார். அவருடைய விசுவாசம் சோதிக்கப்படுகிறது. (சங் 105:17-20). ஒரு மனுஷன் பதிமூன்று வருஷங்களாகச் சோதிக்கப்பட்டால், அவன் சோர்ந்து போய்விடுவான். (ஆதி 37:2; ஆதி 41:1,46).
பார்வோன் நைல் நதியண்டையில் நின்று கொண்டிருக்கிறான். நைல் நதி எகிப்து தேசத்தை விளைச்சல் நிலமாக்கிக் கொண்டிருக்கிறது. எகிப்தில் சிறிதளவே மழை பெய்தாலும் மத்திய ஆப்பிரிக்காவில் பெய்யும் மழையினால் நைல் நதி நிரம்பி ஓடும்.
கர்த்தர் யோசேப்பை உயர்த்துவதற்கு, பார்வோன் கண்ட சொப்பனங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார். அந்த சொப்பனங்கள் மிகவும் சாதாரணமானவை. இதை மேலோட்டமாகப் பார்த்தால், இது மதியீனமான சொப்பனம் போல தெரியும். அவலட்சணமும் கேவலமுமான பசுக்களை சொப்பனத்தில் பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள். அது பற்றி பேசவும் மாட்டார்கள்.
பார்வோன் சாவியான கதிர்களை சொப்பனத்தில் காண்கிறான். இதைப்பற்றியும் யாரும் யோசித்துப் பார்க்கமாட்டார்கள். இந்த சொப்பனத்திற்கு என்ன அர்த்தம் என்று ஒருவரும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள். இவையெல்லாம் மனுஷர் விரும்பாத சாதாரணமான சொப்பனங்கள். இந்த சொப்பனங்களை பார்ப்பவருக்கு மனதில் சந்தோஷமோ இன்பமோ உண்டாகாது.
பார்வோன் தன் சொப்பனத்தில் அவலட்சணமான ஏழு பசுக்களை பார்த்தது, அவருக்கு ஒரு இன்பக்கனவு அல்ல. அது அவருடைய மனதை வேதனைப்படுத்துகிற சோகக்கனவு. யாராவது ஒருவர் இப்படிப்பட்ட சொப்பனத்தைக் கண்டு, அதற்கு அர்த்தம் கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லுவார்கள். அதற்கு முடிவே இருக்காது. அவையெல்லாம் மதியீனமான சம்பாஷணைகளாயிருக்கும்.
இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் காண்கிறான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியி-ருந்து ஏறிவந்து புல் மேய்கிறது. அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியி-ருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையில் நிற்கிறது. அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போடுகிறது (ஆதி 41:1#4).
பார்வோன் இரண்டு சொப்பனங்களைக் காண்கிறான். அதில் இது அவன் கண்ட முதலாவது சொப்பனம். பார்வோன் இந்த சொப்பனத்தைக் கண்டு விழித்துக்கொள்கிறான். அதன் பின்பு அவன் மறுபடியும் நித்திரை செய்கிறான். அப்போது பார்வோன் இரண்டாம் விசை ஒரு சொப்பனம் காண்கிறான்.
""நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளி-ருந்து ஓங்கி வளருகிறது. பின்பு, சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைக்கிறது. சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போடுகிறது'' (ஆதி 41:5#7).
பார்வோன் முதலாவது சொப்பனத்தைக் கண்டபோது விழித்துக்கொள்வதுபோல இரண்டாவது சொப்பனத்தையும் கண்டு விழித்துக்கொள்கிறான். அப்பொழுது தான் கண்டது சொப்பனம் என்பதை பார்வோன் அறிந்துகொள்கிறான்.
சொப்பனத்தைக் கண்ட பார்வோனால், அதற்குமேல் அமைதியாக தூங்கமுடியவில்லை. காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருக்கிறது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும், சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொல்லுகிறான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக்கூடாமற்போயிற்று (ஆதி 41:8).
பார்வோனுடைய மனம் கலங்கியதற்குத் தேவனே காரணம். யோசேப்பிற்கு தேவன் இது குறித்து வெளிப்படுத்துகிறார். நேபுகாத்நேச்சாரைக் குறித்து தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்தினார் (தானி 2).
எகிப்து தேசத்திலும் மந்திரவாதிகள் இருந்தார்கள். அவர்களுக்கு சில மாயதந்திரங்கள் தெரியும். சாத்தானின் தந்திரங்களைக் குறித்து பில்லிசூனியங்கள், அஞ்சனம்பார்ப்பது, குறிசொல்லுவது ஆகிய காரியங்களை இவர்கள் செய்து வந்தார்கள். (யாத் 7:11,22; யாத் 8:7,18).
பார்வோன் கண்ட சொப்பனங்கள் மிகவும் விசேஷமானது. கர்த்தரே இந்த சொப்பனங்களை தம்முடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரமாக, பார்வோனை காணச் செய்திருக்கிறார். ஆகையினால் பார்வோன் நித்திரை தெளிந்து எழுந்தபோது, அவனுடைய மனம் கலங்கிக்கொண்டிருக்கிறது.
பார்வோன் தான் கண்ட சொப்பனங்களை, எகிப்து தேசத்திலுள்ள மந்திரவாதிகளிடத்திலும், சாஸ்திரிகளிடத்திலும் சொல்லுகிறான். அவர்கள் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவர்கள். ஆனால் அவர்களால் பார்வோன் கண்ட சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை. பார்வோன் கண்ட இரண்டு சொப்பனங்களுக்கும் அர்த்தம் சொல்லுவதற்கு கர்த்தர் யோசேப்பை நியமித்திருக்கிறார்.
யோசேப்பு ஒரு சொப்பனக்காரர். அவர் ஏற்கெனவே சொப்பனம் கண்டதினால் அநேக வேதனைகளை அனுபவித்திருக்கிறார். அதனால் அவர் பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தை தன்னுடைய சகோதரருக்கு சொன்னதினால், அவர்கள் அவரை பகைத்து, அடிமையாக விற்றுப்போட்டார்கள். யோசேப்பின் சொப்பனம் அவருடைய கஷ்டத்திற்கும், வேதனைக்கும் காரணமாயிற்று. பார்வோனுடைய சொப்பனங்களோ யோசேப்பின் ஆசீர்வாதத்திற்காக, கர்த்தரால் நியமிக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தருடைய ஆவியானவர் பார்வோனின் மனதிலே கிரியை செய்கிறார். பார்வோன் சொப்பனம் காண்கிறான். அதே ஆவியானவர் யோசேப்பின் மனதிலும் கிரியை செய்கிறார். யோசேப்பு பார்வோன் கண்ட சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார்.
எகிப்து தேசத்திலுள்ள சகல மந்திரவாதிகளாலும், சகல சாஸ்திரிகளாலும் பார்வோன் கண்ட சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை. சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுவது கர்த்தருக்குரியது. ஆகையினால் மந்திரவாதிகளாலும், சாஸ்திரிகளாலும் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை. தானியேல் தீர்க்கதரிசியின் காலத்திலும், நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனங்களுக்கு, கல்தேயருடைய மந்திரவாதிகளாலும், சாஸ்திரிகளாலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை.
""தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது'' (தானி 2:27) என்று சொன்னார்.
""அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்'' (தானி 4:7).
""அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது'' (தானி 5:8).
யோசேப்பு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார். அவர் யோசேப்பை ஆளுகை செய்கிறார். யோசேப்பு பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால், பார்வோன் கண்ட சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார்.
பார்வோனுக்கு முன்பாக யோசேப்பு
ஆதி 41:9#16
ஆதி 41:9. அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி; நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது.
ஆதி 41:10. பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,
ஆதி 41:11. நானும் அவனும் ஒரே ராத்தியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம்.
ஆதி 41:12. அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோட இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான்.
ஆதி 41:13. அவன் எங்களுக்குச் சொல்-ய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத்திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்.
ஆதி 41:14. அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கி-ருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக் கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.
ஆதி 41:15. பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன், அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக் குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
ஆதி 41:16. அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார் என்றான்.
சிறைச்சாலையில் இருக்கும் யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுவார் என்று பார்வோனுக்கு அறிவிக்கப்படுகிறது. யோசேப்பை பற்றிய செய்தியை பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனுக்கு சொல்லுகிறான். யோசேப்பு பானபாத்திரக்காரனிடம் ஏற்கெனவே, ""என் காரியத்தை பார்வோனுக்கு அறிவி'' (ஆதி 40:14) என்று சொல்லியிருந்தார். ஆனால் பானபாத்திரக்காராரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவரை மறந்துவிட்டான்.
இப்போது பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பை பற்றி நினைவு வருகிறது. இந்த நினைவு யோசேப்புக்கு உதவி செய்யவேண்டும் என்பதினாலோ அல்லது யோசேப்பின் மீதுள்ள பிரியத்தினாலோ ஏற்படவில்லை. பானபாத்திரக்காரன் பார்வோனின் கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும். அவன் பார்வோனுக்கு நன்மை செய்து, பார்வோனிடத்திலிருந்து நல்ல பெயரை பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்காகவே பானபாத்திரக்காரன் பார்வோனிடத்தில் யோசேப்பை பற்றி சொல்லுகிறான்.
யோசேப்பைப்பற்றி பார்வோனிடத்தில் இதுவரையிலும் சொல்லாதது தான் செய்த குற்றம் என்பதையும் பானபாத்திரக்காரன் அங்கீகரிக்கிறான். ""நான் செய்த குற்றம் இன்று தான் என் நினைவில் வந்தது'' என்று பானபாத்திரக்காரன் பார்வோனுக்கு சொல்லுகிறான். பார்வோன் பானபாத்திரக்காரரின் தலைவன்மேலும், சுயம்பாகிகளின் தலைவன் மேலும் கடுங்கோபங்கொண்டு, அவர்கள் இருவரையும் தலையாரிகளின் அதிபதிகளின் வீடாகிய சிறைச்சாலையில் வைத்திருந்தான் (ஆதி 41:9,10).
யோசேப்பை மறந்தது பானபாத்திரக்காரரின் தலைவனுடைய குற்றம். (ஆதி 40:14-15,23). தேவனுடைய வேளையில் அவன் அதை நினைவுகூருகிறான். அவன் மறந்ததும், அவன் நினைவுகூருவதும் தேவனுடைய தெய்வீக பராமரிப்பாயிருக்கிறது. (ஆதி 40:23).
அப்போது அதே சிறைச்சாலையில் யோசேப்பும் வைக்கப்பட்டிருந்தார். அவர்கள் சிறைச்சாலையிலிருந்த காலத்தில், பார்வோனின் பிரதானிகள் இருவரும் ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டார்கள். சிறைச்சாலையிலே தாங்கள் கண்ட சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுவதற்கு ஒருவருமில்லை என்று நினைத்து அவர்கள் இருவரும் கலக்கத்தோடிருந்தார்கள். அப்போது யோசேப்பு அவர்களை விசாரித்து, அவர்கள் கண்ட சொப்பனங்களுக்கு அர்த்தத்தைச் சொன்னார்.
பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனுக்கு சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூர்ந்து சொல்லுகிறான். அவன் பார்வோனை நோக்கி, ""அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோட இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். அவன் எங்களுக்குச் சொல்-ய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார்'' (ஆதி 41:12,13) என்று சொல்லுகிறான்.
அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பிக்கிறார் (ஆதி 41:14). இந்த வேளையே பார்வோனும் யோசேப்பும் சந்திப்பதற்கு கர்த்தருக்கு ஏற்ற வேளையாயிருக்கிறது. கர்த்தருடைய வேளை எப்போதுமே அவருடைய ஜனத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் வேளையாயிருக்கும். அதுவே அவர்களுக்கு நன்மை உண்டாகும் வேளையாயிருக்கும்.
பாலஸ்தீன தேசத்திலும், மேலும் சில கிழக்கு தேசங்களிலும் சவரம் பண்ணிக் கொள்ளுதல் தவறான பழக்கமாகும். ஆனால் எகிப்தியர் நீளமான தாடி வளர்ப்பதில்லை. யோசேப்பு எந்தச் சூழ்நிலையில் இருக்கிறாரோ அதற்குத் தகுந்தபடி அவர் தன்னை மாற்றிக் கொள்கிறார். பார்வோன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவை எல்லாவற்றையும் யோசேப்பு செய்கிறார். எபிரெயர்கள் துக்கம் அனுசரிக்கும்போது சவரம் பண்ணிக் கொள்வார்கள். ஆனால் எகிப்தியரோ துக்க காலத்தில் சவரம் பண்ணாமல் தாடி வளர்ப்பார்கள்.
பானபாத்திரக்காரரின் தலைவன் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்றே, யோசேப்பை பற்றி பார்வோனிடத்தில் சொல்லவில்லை. அவன் யோசேப்பை மறந்துவிட்டான். ஒருவேளை பானபாத்திரக்காரன் யோசேப்பை மறக்காமல், அப்போதே அவரைப்பற்றி பார்வோனிடத்தில் சொல்லியிருந்தால், பார்வோன் பானபாத்திரக்காரரின் வார்த்தைகளைக் கேட்டு, யோசேப்பை விடுதலை செய்திருப்பான்.
யோசேப்பு அப்போது சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமல்ல. யோசேப்பு அப்போது தன்னைப்பற்றிச் சொன்னபோது ""நான் எபிரெய தேசத்திலிருந்து களவாய் கொண்டு வரப்பட்டேன்'' (ஆதி 40:15) என்று வேதனையோடு சொன்னார். அப்போது தன் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போகவேண்டும் என்னும் விருப்பம் யோசேப்புக்கு இருந்தது. பார்வோன் யோசேப்பை அப்போது விடுதலை செய்திருந்தால், யோசேப்பு தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்பிப் போயிருந்திருப்பார். ஆனால் யோசேப்பு சிறைச்சாலையில் மேலும் இரண்டு வருஷம் இருக்கவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாயிற்று.
யோசேப்பைப்பற்றிய செய்தியை பானபாத்திரக்காரரின் தலைவன், கர்த்தருடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரம், இப்போது பார்வோனுக்கு அறிவிக்கிறான். பார்வோனும் யோசேப்பை தன்னிடத்தில் அழைத்து வருமாறு உடனே கட்டளையிடுகிறான். யோசேப்பு இப்போது சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்படுவதினால், அவருக்கும், யாக்கோபின் குடும்பத்தாருக்கும் ஏராளமான நன்மைகள் உண்டாயிற்று. அவர் இரண்டு வருஷங்களுக்கு முன்பு சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், யோசேப்பு இந்த அளவுக்கு அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கமாட்டார்.
யோசேப்பு சிறைச்சாலையில் மேலும் இரண்டு வருஷங்கள் அடைக்கப்பட்டிருந்தது. அவருக்கு வேதனையான காலமாக இருந்திருக்கலாம். ஆனாலும் கர்த்தருக்கு சித்தமான வேளை வரும் வரையிலும், விசுவாசிகளாகிய நாம் காத்திருப்பது, நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. கர்த்தருக்காகவும், அவருக்கு சித்தமான வேளைக்காகவும், காத்திருக்கிறவர்கள் புதுபெலனடைவார்கள்.
பார்வோனுடைய கட்டளைப் பிரகாரம், அவனுடைய வேலைக்காரர்கள் யோசேப்பை தீவிரமாய்க் காவல்கிடங்கி-ருந்து கொண்டுவருகிறார்கள். யோசேப்பு சவரம் பண்ணிக் கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வருகிறார் (ஆதி 41:14).
யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்பது, அவருக்கு மிகவும் ஆச்சரியமாகயிருந்திருக்கும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிசயமான காரியங்களையும், ஆச்சரியமான காரியங்களையும் நடப்பிக்கிறவர். புதிய ஏற்பாட்டுக்காலத்தில், கர்த்தர் பேதுருவையும் இதுபோல ஆச்சரியமாய் வழிநடத்தினார்.
""அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தார்'' (அப் 12:9).
யோசேப்பு சிறைச்சாலையில் இரண்டு வருஷம் இருந்தபோது, அவருக்கு சகலமும் காலதாமதமாவதுபோல இருந்தது. ஆனால் இப்போதோ சகலமும் தீவிரமாய் நடைபெறுகிறது. காவல் கிடங்கிலிருந்த யோசேப்பை பார்வோனுடைய காவலாளர்கள் தீவிரமாய் அழைத்துக்கொண்டு வருகிறார்கள். பார்வோனும் காலதாமதம் பண்ணாமல், தேவையில்லாத காரியங்களை பேசாமல், யோசேப்பை பார்த்தவுடனே, தான் கண்ட சொப்பனங்களைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறான்.
பார்வோன் யோசேப்பை நோக்கி, ""ஒரு சொப்பனம் கண்டேன், அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக் குறித்து நான் கேள்விப்பட்டேன்'' (ஆதி 41:15) என்று சொல்லுகிறான்.
பார்வோன் யோசேப்பை தன்னுடைய அரண்மனைக்கு அழைப்பது யோசேப்புக்கு பெருமையான விஷயம். காவல் கிடங்கிலிருந்த யோசேப்பு இப்போது, எகிப்து தேசத்தின் ராஜாவாகிய பார்வோனுடைய அரண்மனையில், அவனுக்கு முன்பாக நிற்கிறார். ஆனாலும் யோசேப்பு தன்னைக் கனம்பண்ணாமல், பெருமைப்படுத்தாமல் தேவனைக் கனம்பண்ணுகிறார்.
யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக, ""நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார்'' (ஆதி 41:16) என்று சொல்லுகிறார்.
யோசேப்பு துதி கன மகிமை அனைத்தையும் கர்த்தருக்கே செலுத்துகிறார். தேவனே பார்வோனுக்கு உத்தரவு அருளிச்செய்வார் என்று சொல்லி யோசேப்பு தேவனைக் கனம்பண்ணுகிறார். அது மாத்திரமல்ல, தேவன் பார்வோனுக்கு அருளிச்செய்யும் உத்தரவைப்பற்றிச் சொல்லும்போது, அதை ""மங்களமான உத்தரவு'' என்றும் சொல்லுகிறார். பார்வோனுக்கு கர்த்தருடைய சமுகத்திலிருந்து சமாதானமான உத்தரவு வரும் என்று யோசேப்பு ஆசீர்வாதமான வார்த்தைகளை சொல்லுகிறார்.
சொப்பனத்திற்கு அர்த்தம்
ஆதி 41:17#32
ஆதி 41:17. பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன்.
ஆதி 41:18. அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியி-ருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.
ஆதி 41:19. அவைகளின் பின் இளைத்ததும் மகாஅவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்துதேசமெங்கும் நான் கண்டதில்லை.
ஆதி 41:20. கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது.
ஆதி 41:21. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக் கொண்டேன்.
ஆதி 41:22. பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளி-ருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
ஆதி 41:23. பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
ஆதி 41:24. சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப் போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.
ஆதி 41:25. அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.
ஆதி 41:26. அந்த ஏழு நல்ல பசுக்களும் எழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே.
ஆதி 41:27. அவைகளின் பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்க்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.
ஆதி 41:28. பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.
ஆதி 41:29. எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்.
ஆதி 41:30. அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்ட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.
ஆதி 41:31. வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.
ஆதி 41:32. இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.
பார்வோன் ஒரே நாள் ராத்திரியிலே இரண்டு சொப்பனங்களைக் கண்டிருக்கிறான். அவன் தான் கண்ட சொப்பனங்களை ஒவ்வொன்றாக யோசேப்புக்கு சொல்லுகிறான்.
பார்வோன் யோசேப்பை நோக்கி, ""என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியி-ருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. அவைகளின் பின் இளைத்ததும் மகாஅவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்துதேசமெங்கும் நான் கண்டதில்லை'' என்றும்,
""கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக் கொண்டேன்'' (ஆதி 41:17#21) என்றும் சொல்லுகிறான். இது பார்வோன் கண்ட முதலாவது சொப்பனத்தின் விவரமாகும்.
பார்வோன் தன்னுடைய முதலாவது சொப்பனத்தை யோசேப்பினிடத்தில் சொன்ன பின்பு, தன்னுடைய இரண்டாவது சொப்பனத்தையும் அவரிடத்தில் சொல்லுகிறான்.
பார்வோன் யோசேப்பை நோக்கி, ""பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளி-ருந்து ஓங்கி வளரக்கண்டேன். பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப் போட்டது'' (ஆதி 41:22#24) என்று சொல்லுகிறான்.
பார்வோன் தான் கண்ட இரண்டு சொப்பனங்களையும், எகிப்து தேசத்திலுள்ள சாஸ்திரிகளிடத்திலும், மந்திரவாதிகளிடத்திலும் சொன்னான். ஆனாலும், ""இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை'' என்று பார்வோன் யோசேப்பினிடத்தில் இப்போது கலக்கத்தோடு சொல்லுகிறான்.
யோசேப்பு பார்வோன் கண்ட இரண்டு சொப்பனங்களுக்கும் அர்த்தம் சொல்லுகிறார். யோசேப்பு பார்வோனை நோக்கி, ""பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். அந்த ஏழு நல்ல பசுக்களும் எழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே. அவைகளின் பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்க்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்'' (ஆதி 41:25#27) என்று சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார்.
பார்வோன் இரண்டு சொப்பனங்களைக் கண்டாலும், அந்த சொப்பனங்கள் இரண்டும் ஒன்றுதான் என்றும், அவற்றிற்கு ஒரே அர்த்தமே உள்ளது என்றும் யோசேப்பு பார்வோனுக்கு சொல்லுகிறார். பார்வோன் இரண்டு சொப்பனங்களைக் கண்டதற்கு ஒரு தெய்வீக நோக்கமுண்டு. யோசேப்பு நோக்கத்தையும் பார்வோனுக்கு தெளிவுபடுத்துகிறார்.
யோசேப்பு பார்வோனை நோக்கி, ""இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது'' (ஆதி 41:32) என்று சொல்லுகிறார்.
பார்வோன் முதலாவது சொப்பனத்தில் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும், இளைத்ததும் மகாஅவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்களையும் கண்டான். அவன் இரண்டாவது சொப்பனத்தில் நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்களையும், சாவியானவைகளும் கீழ்க்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்களையும் கண்டான்.
முதலாவது சொப்பனத்தில் கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. இரண்டாவது சொப்பனத்தில் சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது.
அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களும், நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்களும் எகிப்து தேசமெங்கும் ஏழு வருஷங்களுக்கு பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் என்பதற்கு அடையாளம்.
இளைத்ததும் மகாஅவலட்சணமும் கேவலமுமான ஏழுபசுக்களும், சாவியானவைகளும் கீழ்க்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழுகதிர்களும் ஏழு வருஷ மகாபஞ்சத்திற்கு அடையாளம்.
பார்வோன் தான் கண்ட சொப்பனங்களை யோசேப்புக்கு சொல்லுகிறான். யோசேப்பு அந்த சொப்பனங்களுக்கு அர்த்தத்தை சொல்லும்போது, ""பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்'' (ஆதி 41:28) என்று சொல்லுகிறார்.
இரண்டு சொப்பனங்களுக்கும் அர்த்தம் ஒன்று தான். தேவன் தாம் செய்யப்போகிறதை சீக்கிரத்தில் செய்வார் என்பதை குறிக்கும் பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது. (2கொரி 13:1).
யோசேப்பு பார்வோனை தேவனிடம் வழிநடத்துகிறார். எல்லாக் காரியங்களுக்கும் கர்த்தரே காரணகர்த்தா. வரப்போகிற இந்தப் பஞ்சம் இயற்கையினால் வருவதல்ல. இது தேவனுடைய தெய்வீகக் கிரியை. தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவே நைல் நதியில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. தம்முடைய சித்தத்தைத் தேவன் பூமியில் நிறைவேற்றுவதற்கு சில நிபந்தனைகளை மனுஷருக்குத் தருகிறார்.
தேவனால் தெரிந்தெடுக்கப்படும் ஜனம் தேவசித்தத்திற்கு எப்போதும் கீழ்ப்படிந்து ஜீவிக்க வேண்டும். இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்துக்குப் போவதற்கு முன்பாகவே தேவன் ஆபிரகாமிடம் இஸ்ரவேலர் எகிப்துக்குப் போவது பற்றியும், அங்கிருந்து திரளான செல்வத்தோடு திரும்பி வருவது பற்றியும் கூறியிருக்கிறார். (ஆதி 15:12-16) தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகப் புறஜாதி ராஜாக்கள் தம்முடைய ஜனங்களை ஆளுகை செய்வதற்கு அனுமதித்திருக்கிறார்.
எகிப்து தேசத்திலே ஏழு வருஷ பரிபூரணமும், ஏழு வருஷ பஞ்சமும் உண்டாகும். இவ்விரண்டையும் தேவன் தாமே செய்யப்போகிறார். தேவன் தாம் செய்யப்போகிற காரியத்தை, சொப்பனங்கள் மூலமாக பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். பார்வோனுக்கு சொப்பனங்களை பார்க்க மாத்திரமே முடிகிறது. அவற்றின் அர்த்தம் பார்வோனுக்கு தெரியவில்லை. எகிப்து தேசத்திலுள்ள மந்திரவாதிகளாலும், சாஸ்திரிகளாலும் பார்வோன் கண்ட சொப்பனங்களுக்கு, அர்த்தம் சொல்ல முடியவில்லை. சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுவது தேவனுக்குரியது. யோசேப்பு இது சம்பந்தமாக பார்வோனிடத்தில் சொன்னபோது, ""நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார்'' என்று சொன்னார்.
யோசேப்பு இப்போது பார்வோனுக்கு சொப்பனத்தின் அர்த்தத்தை சொல்லுகிறார். யோசேப்பு பார்வோனை நோக்கி, ""எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்'' (ஆதி 41:29#31) என்று சொல்லுகிறார்.
பார்வோன் கண்ட இரண்டு சொப்பனங்களும் ஒன்றாயிருந்தாலும், அவற்றின் அர்த்தம் வெவ்வேறாயிருக்கிறது. பார்வோன் எகிப்து தேசத்திலே சம்பவிக்கப்போகிற இரண்டு வெவ்வேறு காரியங்களை, ஒரே அர்த்தமுள்ள, இரண்டு சொப்பனங்களில் பார்த்திருக்கிறான். எகிப்து தேசத்தாருக்கு இரண்டு வெவ்வேறு அனுபவங்கள் வரும். ஒன்று எகிப்து தேசம் எங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும். இந்த விளைவு ஏழு வருஷங்களுக்கு உண்டாகும். அதன் பின்பு எகிப்து தேசமெங்கும் கொடிய பஞ்சமுண்டாகும். இந்த பஞ்சமும் ஏழு வருஷங்களுக்கு இருக்கும். வரப்போகிற பஞ்சம் மகாகொடுமையான பஞ்சமாயிருக்கும். இதனால் எகிப்து தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோகும்.
எகிப்து தேசத்தில் நடைபெறுகிற சம்பவம் போலவே மனுஷருடைய ஜீவியத்திலும் நடைபெறுகிறது. நமக்கும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருகிறது. சில சமயங்களில் நமக்கு ஆறுதல் பெருகியிருக்கிறது. வேறு சில சமயங்களில் நமக்கு வேதனைகள் பெருகியிருக்கிறது.
தேவனாகிய கர்த்தர் சர்வசிருஷ்டிகராயிருக்கிறார். அவர் தம்முடைய சிருஷ்டிகள் எல்லாவற்றையும் போஷித்து பராமரிக்கிறார். தேவன் எகிப்து தேசத்திலே கொடுமையான பஞ்சத்தை அனுப்புவதற்கு முன்பாக, பரிபூரணமான விளைச்சலை அனுப்புகிறார். இதன் மூலமாக எகிப்து தேசத்தார், பரிபூரணமான விளைச்சலை பஞ்சகாலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். பரிபூரண காலத்தில் நாம் விளைச்சலை மீதியாக வைத்திருந்தால் தான், அதை பஞ்சகாலத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு ஞானமும் புத்தியும் வேண்டும்.
கர்த்தர் தம்முடைய தெய்வீக ஞானத்தினாலும், தம்முடைய சிருஷ்டிகளுக்கு, தம்முடைய பராமரிப்புக்களை பகிர்ந்து கொடுக்கிறார். குடும்பத்தின் தலைவர்கள் தங்கள் வீட்டுக்காரியங்களை நிர்வாகம்பண்ண வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் ஞானத்தோடும் புத்தியோடும் செய்தால், நமக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.
கர்த்தர் வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்கும்போது, இந்தப் பூமிக்கு ஆசீர்வாதமாக வெவ்வேறு காலங்களையும் சிருஷ்டித்திருக்கிறார். மழை காலமும், வெயில் காலமும், பனிகாலமும், வசந்தகாலமும் மாறி மாறி வருகிறது. இந்தக் காலங்கள் எல்லாமே நமக்கு தேவையானவை. நாம் அந்தந்த காலங்களில், என்னென்ன வேலைகளை செய்யவேண்டுமோ, அந்த வேலைகளை நேர்த்தியாய்ச் செய்து முடிக்கவேண்டும்.
இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணியபோது, கர்த்தர் அவர்களுக்கு மன்னாவை போஜனமாகக் கொடுத்தார். அவர்கள் அன்றன்று தங்களுக்கு தேவையான மன்னாவை சேகரித்துக்கொள்ளவேண்டும். மன்னாவை சேகரியாமல் சோம்பேறியாக சும்மாயிருந்தால், அவர்கள் பட்டினியாயிருக்கவேண்டும். பேராசைப்பட்டு அதிகமாய்ச் சேர்த்தால், மன்னா பாழாய்ப்போகும்.
""இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள். பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்'' (யாத் 16:17,18).
நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஏராளமான நன்மைகளையும் தீமைகளையும் அனுபவிக்கிறோம். பஞ்சம் பரிபூரணத்தை விழுங்குவதுபோல, பல சமயங்களில் நம்முடைய துக்கம் சந்தோஷத்தை விழுங்கிவிடுகிறது. நாம் அனுபவிக்கிற தீமைகள், நம்முடைய நன்மைகளை விழுங்கிவிடுகிறது. ஆனாலும் கர்த்தருடைய பிள்ளைகள் விசுவாசத்தில் திடன்கொள்ளவேண்டும். நம்முடைய நன்மைகள் தீமையினால் வெல்லப்படுவதற்கு இடங்கொடுக்கக்கூடாது நாம் தீமையை நன்மையினால் வெல்லவேண்டும்.
பார்வோன் இஸ்ரவேல் தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறான். அவன் அந்த தேசத்தார் எல்லோருக்கும் குடும்பத்தலைவனைப் போன்றவன். பார்வோன் எகிப்து தேசத்தார் எல்லோரையும் போஷிக்கவேண்டியவன். ஆகையினால் தேவன் தாம் செய்யப்போகிறதை பார்வோனுக்கு சொப்பனங்கள் மூலமாக காண்பித்திருக்கிறார். பார்வோன் தான் கண்ட சொப்பனங்களின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டு, தன்னுடைய தேசத்து ஜனங்களுக்கு, கொடுமையான பஞ்சகாலத்திலும், போஜனம் கிடைக்குமாறு நிர்வாகம்பண்ணவேண்டும்.
யோசேப்பு எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரி
ஆதி 41:33#45
ஆதி 41:33. ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.
ஆதி 41:34. இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்ச-ல் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக.
ஆதி 41:35. அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக.
ஆதி 41:36. தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.
ஆதி 41:37. இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது.
ஆதி 41:38. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
ஆதி 41:39. பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
ஆதி 41:40. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.
ஆதி 41:41. பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்-,
ஆதி 41:42. பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்-ய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,
ஆதி 41:43. தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்;
ஆதி 41:44. பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.
ஆதி 41:45. மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.
யோசேப்பு பார்வோன் கண்ட சொப்பனங்களுக்கு அர்த்தம் சொன்னதோடு, வரப்போகிற ஏழு வருஷ கொடுமையான பஞ்சகாலத்திற்கு எப்படி தப்பித்துக்கொள்வது என்பதற்கு ஆலோசனையும் சொல்லுகிறார். எகிப்து தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகக்கூடாது. மகாபரிபூரணமான ஏழுவருஷத்தில் கிடைக்கும் தானியம், இனிமேல் உண்டாகப்போகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்கு, எகிப்து தேசத்தாருக்கு ஒரு வைப்பாயிருக்கவேண்டும் என்று யோசேப்பு ஆலோசனை சொல்லுகிறார் (ஆதி 41:36).
எகிப்து தேசத்திலே வரப்போகிற பஞ்சத்திற்கு தப்பிப்தற்கு, என்ன செய்யவேண்டும் என்று யோசேப்பு இரண்டு ஆலோசனைகளை சொல்லுகிறார். அதன் விவரம் வருமாறு:
1. பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்ச-ல் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்யவேண்டும். அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைக்கவேண்டும்(ஆதி 41:34,35).
2. விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்தவேண்டும். இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைக்கவேண்டும் (ஆதி 41:33,34).
விளைச்சல் அதிகமாயிருக்கும் பரிபூரண காலத்திலே, தானியத்தின் விலை குறைவாகயிருக்கும். தானியமும் தாராளமாய் கிடைக்கும். பரிபூரணமுள்ள விளைச்சல் ஏழு வருஷங்களுக்கு இருக்கும். பார்வோன் இந்த ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கவேண்டும் என்பது யோசேப்பின் ஆலோசனை. இக்காலத்தில் தானியத்தை குறைந்த விலைக்கு வாங்கலாம். அதன் பின்பு பஞ்சகாலத்திலே இவற்றை விற்பனை செய்யலாம். இதனால் பார்வோனுக்கு வருமானம் கிடைக்கும். ஜனங்களுக்கு தானியம் கிடைக்கும்.
யோசேப்பு சொல்லுகிற ஆலோசனை பார்வோனுடைய பார்வைக்கும், அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் காணப்படுகிறது. யோசேப்பு சொன்ன பிரகாரமாக, விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனை தேடுகிறார்கள். அவர்களுடைய பார்வையிலே யோசேப்பை விட அதிக விவேகமும் ஞானமுமுள்ள மனுஷன் ஒருவரும் கிடைக்கவில்லை.
யோசேப்பு தெய்வீக ஏவுதலினாலும், தேவனிடத்தில் தான் வைத்திருக்கும் விசுவாசத்தினாலும் பேசுகிறார். தன்னுடைய சகோதரரிடத்தில் தான் கூறிய சொப்பனங்களை நினைவுகூருகிறார். தேவன் தனக்கு நியமித்து வைத்திருக்கும் வருங்காலத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். தேசத்தை இரட்சிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசேப்பு பார்வோனிடம் பயமில்லாமலும், அதிகாரத்துடனும் பேசுகிறார்.
தேவனுடைய வெளிப்பாட்டைக் கேட்பதற்கு பார்வோனுடைய இருதயம் பக்குவமடைந்திருக்கிறது. பார்வோன் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறான்.
யோசேப்பிடத்தில் தேவஆவி இருப்பதை பார்வோனும், அவனுடைய ஊழியக்காரரும் அறிந்து கொள்கிறார்கள் (ஆதி 41:37-39). அவர்கள் தங்களுடைய விக்கிரகாராதனையை ஒழித்து விடவில்லை. ஆனாலும் அவர்கள் இஸ்ரவேலின் தேவனை அங்கீகரிக்கிறார்கள்.
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி, ""தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ'' (ஆதி 41:38) என்று சொல்லுகிறான்.
பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: ""தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன்'' (ஆதி 41:39,40) என்று சொல்லுகிறான்.
எகிப்து தேசத்தின் அதிபதியாகிய பார்வோன் யோசேப்பைக் குறித்து நற்சாட்சி கொடுக்கிறான். யோசேப்பைப்போல தேவஆவியைப்பெற்ற மனுஷன் வேறு ஒருவனுமில்லை என்று பார்வோன் சாட்சியாக சொல்லுகிறான். யோசேப்பைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனுமில்லை என்றும் பார்வோன் சாட்சியாகச் சொல்லுகிறான். தேவன் தாமே தம்முடைய இரகசியங்கள் எல்லாவற்றையும் யோசேப்புக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை பார்வோன் அறிந்திருக்கிறான்.
யோசேப்பினிடத்தில் காணப்படுகிற விவேகத்தையும், ஞானத்தையும் போத்திபார் பார்க்கவில்லை. யோசேப்பின் நல்ல சுபாவங்களை அவருடைய சகோதரர்கள் பார்க்கவில்லை. யோசேப்பு தன் சகோதரர் மூலமாகவும், போத்திபார் மூலமாகவும் பல கஷ்டங்களை அனுபவித்தவர். பொய்யான காரணங்களுக்காக யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கர்த்தரோ இப்போது யோசேப்பை உயர்த்துகிறார். எகிப்து தேசத்தின் அதிபதியாகிய பார்வோனே யோசேப்பைக் குறித்து நற்சாட்சி கொடுக்கிறான்.
போத்திபார் யோசேப்பை காவல் கிடங்கிலே போட்டான். பார்வோனோ யோசேப்பை தன் அரண்மனைக்கு அதிகாரியாக்குகிறான். யோசேப்புடைய வாக்கின்படியே எகிப்து தேசத்து ஜனங்கள் யாவரும் அடங்கி நடக்கவேண்டுமென்று பார்வோன் சொல்லுகிறான்.
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி, ""பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன்'' (ஆதி 41:41) என்று சொல்லுகிறான்.
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போடுகிறான். பார்வோன் மெல்-ய வஸ்திரங்களை யோசேப்புக்கு உடுத்தி, பொன் சரப்பணியை யோசேப்பின் கழுத்திலே தரிக்கிறான் (ஆதி 41:42).
வரலாற்றின் பிரகாரம் இக்காலத்தில் அபேபி என்பவன் எகிப்தின் ராஜாவாக இருக்கிறான். இவன் தன்னுடைய தந்தையோடும், தாத்தாவோடும் ராஜ்யபாரத்தை சிறிது காலம் ஏற்றுக் கொண்டிருந்தான்.
ராஜாவின் முத்திரை மோதிரம் அந்தத் தேசத்தில் சர்வ வல்லமையுள்ளது. பார்வோனின் பிரதிநிதியாகச் செயல்படும் எல்லா அதிகாரத்தையும் இந்த முத்திரை மோதிரம் தரும். (ஆதி 41:42).
எகிப்தியரின் ஆசாரியர்கள் மெல்லிய வஸ்திரங்களைத் தரித்துக் கொள்வார்கள். எகிப்தின் பார்வோன் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்தவன். கழுத்தில் பொன்சரப்பணியை அணிந்து கொள்வது ஜனங்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தைத் தரும். ராஜாவுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து ஜனங்கள் தங்கள் ராஜமரியாதையை வெளிப்படுத்துவது வழக்கம். எகிப்து தேசம் முழுவதிலும் யோசேப்பிற்கு எல்லாக் காரியங்களிலும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது.
பார்வோன் தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் யோசேப்பை ஏற்றி, ""தெண்டனிட்டுப் பணியுங்கள்'' என்று யோசேப்புக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவரை அதிகாரியாக்குகிறான் (ஆதி 41:43).
யோசேப்பு எகிப்து தேசத்திலே அதிகமாய் உயர்த்தப்படுகிறார். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக பார்வோன் யோசேப்பை உயர்த்துகிறான். பார்வோன் யோசேப்பை நோக்கி, ""நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது'' (ஆதி 41:42) என்று சொல்லுகிறான்.
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே புதிய பெயர் கொடுக்கப்படுகிறது. பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிடுகிறான். பார்வோன் எகிப்து தேசத்திலே ஒரு ஸ்திரீயைக் கண்டுபிடித்து, அவளை யோசேப்புக்கு மனைவியாகக் கொடுக்கிறான். பார்வோன் ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கிறான்.
யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டு போகிறார் (ஆதி 41:45). யோசேப்பு எகிப்து தேசத்திலே அதிகமாக உயர்த்தப்பட்டாலும், அவர் தன்னுடைய கடமையை செய்வதற்காக எகிப்து தேசமெங்கும் சுற்றிப் பார்ப்பதற்கு புறப்பட்டுப்போகிறார்.
""சாப்நாத்பன்னேயா'' என்பது எகிப்திய வார்த்தை. பரிபூரண ஜீவன் என்பது இதன் பொருள். யோரோம் இதை மொழிபெயர்க்கும் பொழுது இதற்கு ""உலக இரட்சகர்'' என்று பொருள்கூறுகிறார்.
""ஆஸ்நாத்'' என்பதும் எகிப்திய வார்த்தை. இதற்கு ""நேயீத்திற்கு உரியவள்'' என்று பொருள். நேயீத் எகிப்து தேசத்தில் கைவினைகளின் தேவதையாகவும், மினர்வாவாகவும் போற்றப்படுகிறவள்.
""போத்திபிரா'' என்பதும் எகிப்திய வார்த்தை. இதற்கு ""சூரியனுக்கு உரியவன்'' என்று பொருள். சீரியருக்கு பாகாலைப் போன்று எகிப்தியருக்கு சூரிய தெய்வம் முக்கியமான வழிபாட்டுத் தெய்வமாகும்.
யோசேப்பு எகிப்திலுள்ள செல்வந்த குடும்பத்தில் பெண் கொள்கிறார். ஓன் பட்டணம் சூரிய தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. போத்திபிரா இந்தத் தெய்வத்தின் வம்சத்தில் வரும் பிரதான ஆசாரியன். யோசேப்பு இவனுடைய மருமகனாகிறார். மிகுந்த செல்வாக்கோடு இருக்கிறார்.
மனாசே, எப்பிராயீம்
ஆதி 41:46#52
ஆதி 41:46. யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியி-ருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.
ஆதி 41:47. பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
ஆதி 41:48. அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.
ஆதி 41:49. இப்படி யோசேப்பு அளவிறந்த தாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
ஆதி 41:50. பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள்.
ஆதி 41:51. யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்-, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
ஆதி 41:52. நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்-, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.
யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருக்கிறார்; யோசேப்பு எகிப்து தேசத்திற்கு வந்து பதிமூன்று வருஷமாயிற்று (ஆதி 37:2). யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியி-ருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்க்கிறார். பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுக்கிறது. யோசேப்பு அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைக்கிறார்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைக்கிறார் (ஆதி 41:46#48).
இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்துவைக்கிறார்; அது அளவுக்கு அடங்காததாயிருக்கிறது (ஆதி 41:49).
யோசேப்பின் குடும்பம் எகிப்து தேசத்திலே கட்டியெழுப்பப்படுகிறது. யோசேப்பு போத்திபாரின் குமாரத்தியாகிய அஸ்நாத்தை விவாகம் செய்துகொள்கிறார். யோசேப்புக்கும் அஸ்நாத்திற்கும் இரண்டு குமாரர்கள் பிறக்கிறார்கள். யோசேப்பு தன்னுடைய மூத்த குமாரனுக்கு மனாசே என்றும், இளையகுமாரனுக்கு எப்பிராயீம் என்றும் பேரிடுகிறார்.
பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறக்கிறார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து யோசேப்புக்குப் பெறுகிறாள் (ஆதி 41:50).
யோசேப்பு தன் தகப்பன் யாக்கோபை விட்டுப் பிரிந்திருக்கிறார். அந்த வருத்தம் அவருடைய மனதில் இன்னும் இருக்கிறது. யோசேப்புக்கு மூத்த குமாரர் பிறந்தபோது தேவன் அவருடைய வருத்தம் யாவையும், யோசேப்பின் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் மறக்கும்படி பண்ணினார். அதனால் யோசேப்பு தன் மூத்த குமாரனுக்கு மனாசே என்று பேரிடுகிறார். இந்தப் பெயருக்கு மறப்பது என்று பொருள்.
யோசேப்பு ஆரம்பத்தில், எகிப்து தேசத்தில் சிறுமைப்பட்டிருந்தார். தேவன் அந்த தேசத்திலே யோசேப்பை பலுகப்பண்ணியிருக்கிறார். ஆகையினால் யோசேப்பு தன் இளையகுமாரனுக்கு எப்பிராயீம் என்று பேரிடுகிறார். எப்பிராயீம் என்னும் பெயருக்கு ""பலுகிப்பெருகுதல்'' என்று பொருள். பரிசுத்த வேதாகமத்தில் மனாசே, எப்பிராயீம் ஆகிய இரண்டு பேர்களும் சேர்ந்தே சொல்லப்படுகிறார்கள்.
பரிபூரணமும் பஞ்சமும்
ஆதி 41:53#57
ஆதி 41:53. எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின்,
ஆதி 41:54. யோசேப்பு சொல்-யபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
ஆதி 41:55. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான்.
ஆதி 41:56. தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக் கொடியதாயிற்று.
ஆதி 41:57. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
பார்வோன் கண்ட சொப்பனத்திற்கு யோசேப்பு அர்த்தம் சொன்னார். யோசேப்பு சொன்ன பிரகாரமாக எகிப்து தேசத்தில் ஒவ்வொரு காரியமும் சம்பவிக்கிறது.
எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிவு பெறுகிறது. அதன்பின்பு யோசேப்பு சொல்-யபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்குகிறது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருக்கிறது (ஆதி 41:53,54).
யோசேப்பு பரிபூரணமான அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தார்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தார். இப்படி யோசேப்பு அளவிறந்த தாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்துவைத்தார்; அது அளவுக்கு அடங்காததாயிருக்கிறது (ஆதி 41:48,49).
யோசேப்பு சொன்ன பிரகாரம் ஏழுவருஷ பரிபூரணம் முடிவுபெறுகிறது. அதன்பின்பு ஏழுவருஷம் கொடிய பஞ்சம் தொடங்குகிறது. இந்த பஞ்சம் எகிப்து தேசத்தில் மாத்திரமல்லாமல், மற்ற தேசங்களிலும் உண்டாயிருக்கிறது. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வருகிறார்கள் (ஆதி 41:57).
யோசேப்பு பார்வோனுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் பரிபூரணமான வருஷங்களில், எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம், கடற்கரை மணலைப்போல மிகுதியாய்ச் சேர்த்து வைத்திருக்கிறார். பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கி, யோசேப்பு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிடுகிறார்கள்; அதற்குப் பார்வோன்: அவர்களை நோக்கி, ""நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்'' (ஆதி 41:55) என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு தானியத்தை விற்கிறார்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக் கொடியதாயிற்று (ஆதி 41:56).
யோசேப்பு விவேகமும் ஞானமுமுள்ளவர். எகிப்து தேசத்திலுள்ள தானியங்களுக்கு யோசேப்பு கிரயம் நிர்ணயம் பண்ணுகிறார். பஞ்சம் வர வர கொடியதாயிருப்பதினால், அவர் தானியங்களுக்கு அதிகமான விலை நிர்ணயம்பண்ணி கொள்ளை லாபம் அடிக்கவில்லை. அவர் ஜனங்களை அதிகமாய் வேதனைப்படுத்தவுமில்லை.
அதே வேளையில் எகிப்திலுள்ள ஜனங்கள் தங்களுக்கு தேவையான தானியத்திற்கு நியாயமான விலை கொடுக்கவேண்டுமென்று யோசேப்பு எதிர்பார்க்கிறார். யோசேப்பு சேர்த்து வைத்திருக்கிற தானியத்தை ஜனங்களுக்கு இலவசமாகவும் கொடுக்கவில்லை. யோசேப்பு பஞ்சகாலத்திலே களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு தானியத்தை நியாயமான விலையிலே விற்கிறார்.
