3. குடும்ப வாழ்வு_

குடும்ப வாழ்வு

ஒருவரையொருவர் ஏற்றுக்

கொள்ளுங்கள்... ரோமர் – 15:7

குடும்ப வாழ்வை நன்றாக வாழ்வது தொடர்பாகவும், குடும்ப வாழ்வில் உள்ள பிரச்சினைகளை களைதல் தொடர்பாகவும் ஆன்மீகம் சாராத புத்தகங்கள் பல நல்ல நல்ல ஆலோசனைகளைத் தருவது உண்மை. அறிவுசார்ந்த பல நல்ல கட்டுரைகள் குடும்ப வாழ்வைக் குறித்த மிகநல்ல கருத்துக்களைத் தருகின்றன. ஆனால் பிரச்சினை என்னவென்றால், குடும்ப வாழ்வு தொடர்பான ஆலோசனைகள் நன்றாயிருக்கின்றன. ஆனால் குடும்பத்தில் அவரவர்களின் மன உணர்வுகள் மேலோங்கியிருக்கும் சூழ்நிலைகளில் நல்ல அறிவுரைகளையும், யோசனைகளையும் ஏற்றுச் செயல்பட இயலவில்லை. நல்ல ஆலோசனைகளுக்கேற்றபடி மனதை மாற்றியும் திருத்தியும் செயல்பட முடியவில்லை.

குடும்ப வாழ்க்கையில் உறவுகளைக் கட்டிக்காக்கவும், அவற்றால் மகிழ்ச்சியடை யவும் பக்குவமான இருதயம் தேவை. சில மன இயல்புகள் மாற வேண்டும். சில மன உணர்வுகளின் கடினம் கரைய வேண்டும். மனதில் திருத்தங்கள் ஏற்படவேண்டும். உண்மையை ஏற்றுக் கொள்ளுதல், தவறை உணருதல், சிலவற்றை சகித்தல், சிலவற்றை விட்டுக்கொடுத்தல், போன்றவை அவசியம். இவற்றைச் செயல்படுத்த நல்ல ஆலோசனைகளும், புத்திமதிகளும் போதாது. இதற்கு அனுசரித்துச் செயல் படும் தன்மையுள்ள ஒரு இருதயம் தேவை.

எனவே கடவுளின் ஆளுகையை இருதயத்தில் ஏற்று. கடவுளின் மேலாண் மைக்கு இசைந்து போகும்படி பழக்குவிக்கப்பட்ட இருதயம் தேவை. இவ்விதமான இருதயம் இல்லாத நிலையில், எத்தனை அறிவுசார்ந்த அறிவுரைகளையும், அனுபவம் சார்ந்த ஆலோசனைகளையும், மனவியல் சார்ந்த விளக்கங்களையும், தத்துவ ரீதியான கருத்துக்களையும் கொடுத்தாலும் நல்ல விளைவுகள் ஏற்படாது.

ஏனென்றால் இயற்கையான மனிதனுடைய இருதயம் அவன் விரும்பினாலும் நன்றாக சரியாகச் செயல்பட்டு ஒத்துழைக்காது. கடவுள் மட்டுமே இருதயத்தை இசைந்து போகச் செய்யமுடியும். கர்த்தருக்கு நம்மை அர்ப்பணித்து, அவருடைய ஆவியின் ஆளுகைக்கு நம்மை உட்படுத்தினால்தான், நம்மை அவர் பக்குவப்படுத்த முடியும். நம்மையும் நம்முடைய மனநிலையையும் அவர் ஆளுகை செலுத்தி பக்குவப்படுத்தும் போதுதான் குடும்ப வாழ்வின் சந்தோஷத்திற்குத் தேவைப்படும் நற்குணங்களும், அனுசரிக்கும் ஆற்றல்களும் கிடைக்கும்.

இறை உறவை இழந்துவிட்டு மனித உறவில் மயங்காதே. மனித உறவை இழிவு செய்வோர் இறை உறவை அடைவதில்லை. ஏற்கத் தயங்காதே.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.