தானியேல் 3ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி
தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொன்னபோது, ராஜா தானியேல்மீதும், அவருடைய மூன்று சிநேகிதர்மீதும் அன்பாயிருந்தார். அவர்களுக்கு மாகாணத்திலே முக்கியமான பதவிகளைக் கொடுத்து அவர்களை உயர்த்தினார். இப்போது இந்த மூன்று எபிரெய வாலிபர்களும் ராஜாவின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
ராஜா இம்மூன்று வாலிபர்மீது கோபப்பட்டாலும், கர்த்தர் இவர்களை இன்னும் அதிகமாய்க் கனம்பண்ணுகிறார். ராஜா கனம்பண்ணியதைவிட, கர்த்தர் கனம்பண்ணுவது மிகவும் பெரியதாயிருக்கிறது. கர்த்தருடைய ஆசீர்வாதமே நமக்கு மெய்யான நன்மைகளைக் கொடுக்கும். பாவத்தில் விழுவதைவிட, கர்த்தருக்கு உண்மையாய் ஜீவிப்பதே நமக்கு மெய்யான ஆசீர்வாதம். உலகப்பிரகாரமான நன்மைகளை பெற்றுக்கொள்வதைவிட, கர்த்தருடைய கிருபைகளைப் பெற்றுக்கொள்வதே நமக்கு மேன்மை.
கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருக்குமே சோதனைகள் வருகிறது. இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிற சம்பவம் மிகவும் முக்கியமானது. நாம் சோதிக்கப்படும்போது, கர்த்தர் நமக்கு எப்படி உதவிபுரிகிறார் என்பதை இந்த சம்பவம் விவரிக்கிறது.
""அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்'' (எபி 11:34) என்று எபிரெயருக்கு நிருபம் எழுதின ஆசிரியரும், இந்த மூன்று எபிரெயரைப்பற்றி சாட்சியாய்ச் சொல்லுகிறார்.
நேபுகாத்நேச்சார் ஒரு பெரிய பொற்சிலையைப் பண்ணுவித்து, அதை சமபூமியிலே நிறுத்துகிறான். தான் நிறுத்தின பொற்சிலையை எல்லோரும் பணிந்துகொள்ளவேண்டுமென்று ராஜா கட்டளை கொடுக்கிறான் (தானி 3:1-7). ராஜா நிறுத்தின பொற்சிலையை மூன்று எபிரெய வாலிபர்களும் பணிந்துகொள்ளவில்லை (தானி 3:8-12).
நேபுகாத்நேச்சார் இதுபற்றி மூன்று எபிரெய வாலிபரிடம் விசாரிக்கும்போது, அவர்கள் ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்வதில்லை என்று உறுதியாய்ச் சொல்லுகிறார்கள் (தானி 3:13-18). நேபுகாத்நேச்சாருக்கு கடுங்கோபமுண்டாயிற்று. மூன்று எபிரெய வாலிபர்களையும் எரிகிற அக்கினி சூளையிலே போடுமாறு ராஜா கட்டளையிடுகிறான் (தானி 3:19-23).
எரிகிற அக்கினி சூளையிலே மூன்று எபிரெய வாலிபர்களுக்கும் ஒரு சேதமும் உண்டாகவில்லை. கர்த்தர் தம்முடைய தாசரை எரிகிற அக்கினியிலிருந்து விடுவிக்கிறார். எபிரெயரின் தேவனே மெய்யான தேவன் என்று ராஜா தீர்மானம்பண்ணுகிறான் (தானி 3:24-26). ராஜா இம்மூன்று எபிரெய வாலிபர்களையும் பாபிலோன் தேசத்திலே உயர்த்துகிறான் (தானி 3:28-30).
பொற்சிலை தானி 3:1-7
தானி 3:1. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்தி-ருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
தானி 3:2. பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புகாரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நோபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.
தானி 3:3. அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.
தானி 3:4. கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:
தானி 3:5. எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள்.
தானி 3:6. எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
தானி 3:7. ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.
பாபிலோன் தேசத்திலே ஏராளமான விக்கிரகங்கள் இருக்கிறது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மாத்திரமே மெய்யான தேவன். அவர் மாத்திரமே ஜீவனுள்ள தேவன். ஆனால் பாபிலோன் தேசத்தாரோ ஜீவனுள்ள தேவனை ஆராதியாமல், ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்கிறார்கள்.
பாபிலோன் தேசத்தில் ஏராளமான விக்கிரகங்கள் இருந்தாலும் அவர்களுக்கு அந்த விக்கிரகங்களில் திருப்தியில்லை. தங்களுக்கு இன்னும் புதிய விக்கிரகங்களை உண்டுபண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஏராளமான விக்கிரகங்கள் இருந்தால், தங்களுக்கு ஏராளமான தெய்வங்கள் இருக்கும் என்று நினைக்கிறார்கள். ""தேவன் ஒருவரே'' என்னும் சத்தியம் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய ராஜாவுக்கும் தெரியவில்லை.
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்தி-ருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்துகிறான் (தானி 3:1).
ராஜா பொற்சிலையைச் செய்கிறான். இதன் உயரம் அறுபது முழம். அகலம் ஆறுமுழம். இது பார்ப்பதற்கு பிரமாண்டமாயிருக்கிறது. இது எவ்வளவு பெரியதாகயிருந்தாலும், இது முழுவதும் பொன்னால் செய்யப்பட்டிருந்தாலும் இதற்கு ஜீவனில்லை.
ராஜா ஒருவேளை தன்னுடைய உருவத்தையே பொற்சிலையாகப் பண்ணுவித்திருக்கலாம். பாபிலோன் தேசத்திலுள்ளவர்களெல்லோரும் தன்னை தெய்வமாக ஆராதிக்கவேண்டுமென்று ராஜா ஆசைப்பட்டிருக்கலாம்.
இதற்கு முந்திய அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் கர்த்தரை துதித்தான். இஸ்ரவேலின் தேவனே தேவர்களுக்கு தேவன் என்றும், ராஜாக்களுக்கு ஆண்டவர் என்றும், மறைபொருளை வெளிப்படுத்துகிறவர் என்றும் நேபுகாத்நேச்சார் சொன்னான் (தானி 2:47). ஆனால் இப்போதோ தனக்கு ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, தன்னை தேவனுக்கு சமமாக பாவிக்கிறான்.
ராஜாவுக்கு தேவனுடைய பிரமாணம் தெரியவில்லை. சொப்பனத்தின் அர்த்தம் அவனுக்கு சொல்லப்பட்டாலும், அவனுடைய செயல்பாடுகள் கர்த்தருடைய திட்டத்திற்கு விரோதமாயிருக்கிறது. இப்போது ராஜா தேவனுக்கு போட்டியாக தன்னையே உயர்த்துகிறான்.
ராஜா ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, அந்த சிலையின் பிரதிஷ்டையை மிகவும் ஆடம்பரமாக செய்யவேண்டுமென்று தீர்மானிக்கிறான். அந்த பிரதிஷ்டைக்கு தன் தேசத்திலுள்ள எல்லோரையும் வந்து சேரும்படி அழைக்கிறான். ராஜாவின் அழைப்பை ஏற்று, பாபிலோன் தேசத்தார் எல்லோரும் சிலைக்கு எதிராக வந்து நிற்கிறார்கள்.
பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புகாரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் தான் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்புகிறான் (தானி 3:2).
அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, அந்த சிலைக்கு எதிராக நிற்கிறார்கள் (தானி 3:3).
பாபிலோன் தேசத்தார் நீண்ட தூரம் பிரயாணம் செய்து தூரா என்னும் சமபூமிக்கு வந்திருக்கிறார்கள். ராஜா நிறுவின பொற்சிலைக்கு ஜீவனில்லை. ஆனால் ராஜா அந்த சிலையை தெய்வமாக பிரதிஷ்டைபண்ணுகிறான். ஜனங்களும் வேறு வழியில்லாமல், ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து சிலைக்கு முன்பாக வருகிறார்கள். விக்கிரகங்களுக்கு உணர்வில்லை. விக்கிரகாராதனைக்காரருக்கும் உணர்வு இருக்காது.
தான் நிறுத்தின சிலைக்கு எதிராக தன் தேசத்து ஜனங்கள் எல்லோரும் வந்து நின்றபோது, ராஜா மேலும் ஒரு கட்டளை கொடுக்கிறான். ராஜாவின் கட்டளையை கட்டியக்காரன் உரத்த சத்தமாய் எல்லா ஜனங்களுக்கும் கேட்கும் வண்ணமாய்ச் சொல்லுகிறான்.
""சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான்'' (தானி 3:4-6) என்று கட்டியக்காரன் உரத்த சத்தமாய்ச் சொல்லுகிறான்.
இது கட்டியக்காரனின் கட்டளையல்ல. இது நேபுகாத்நேச்சார் ராஜாவின் கட்டளை. ராஜா தனக்கு சொன்னதை கட்டியக்காரன் உரத்த சத்தமாய்ச் சொல்லுகிறான். பாபிலோன் தேசத்து ஜனங்களெல்லோரும் ராஜா நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டும். இது ராஜாவின் கட்டளை.
அந்த சிலைக்கு முன்பாக தாழவிழுந்து, அதை எவனாகிலும் பணிந்து கொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினி சூளையின் நடுவிலே போடப்படுவான். தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் இருக்காது. அவன் அந்நேரமே அக்கினி சூளையில் போடப்படுவான். இதுவும் ராஜாவின் கட்டளை.
நேபுகாத்நேச்சாரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்கிறார்கள் (தானி 3:7).
பொற் சிலையின் அளவு அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமாகும். இந்தச் சிலையின் உயரம் 90 அடி. அகலம் 9 அடி.
""தூரா'' என்னும் இந்த இடம் எங்குள்ளது என்று தெரியவில்லை. இது பாபிலோனுக்குள் இருக்க வேண்டும்.
சிலையின் பிரதிஷ்டைக்கு வந்தவர்கள்
1. தேசாதிபதிகள் (தானி 3:2-3,27; தானி 6:1-7)
2. அதிகாரிகள் (தானி 2:48; தானி 3:2-3,27; தானி 6:7)
3. தலைவர் (தானி 3:2-3,27; தானி 6:7, 1இராஜா 20:24; எரே 51:23,28,57; எசே 23:6,12,23)
4. நியாயாதிபதிகள் (தானி 3:2)
5. பொக்கிஷக்காரர் (தானி 3:2-3)
6. நீதிசாஸ்திரிகள் (தானி 3:2-3)
7. விசாரிப்புக்காரர் (தானி 3:2-3)
8. நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் (தானி 3:2-3)
கட்டியக்காரன் உரத்த சத்தமாய்ப் பேசுகிறான் (தானி 3:4). ராஜாவின் ஆணைகளையும், ராஜா வருவதையும், போவதையும் அறிவிப்பதற்காகக் கட்டியக்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள் (மல் 3:1; ஏசா 40:3). விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது இவர்கள் போட்டிகளின் விவரங்களையும், அதற்குரிய சட்ட திட்டங்களையும் அறிவிப்பார்கள்.
யூதருடைய பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம் விக்கிரகாராதனைக்காரர்கள் ஆபிரகாமை எரிகிற அக்கினிச்சூளையின் நடுவில் போட்டு, கொன்றுபோட்டார்கள். ஆபிரகாம் அவர்களுடைய விக்கிரகங்களை ஆராதிக்க மறுத்ததற்காக அக்கினிச்சூளையில் எறியப்பட்டார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ தானி 3:8-18
தானி 3:8. அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி,
தானி 3:9. ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
தானி 3:10. எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்து கொள்ளவேண்டுமென்றும்,
தானி 3:11. எவனாகிலும் தாழ விழுந்து பணிந்து கொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட வேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.
தானி 3:12. பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
தானி 3:13. அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்து விட்டபோது,
தானி 3:14. நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா?
தானி 3:15. இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
தானி 3:16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
தானி 3:17. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
தானி 3:18. விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபர்களும், ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள். பாபிலோன் தேசத்து ஜனங்களைப்போல, இவர்களும் தூரா என்னும் சமபூமிக்கு வந்திருக்கிறார்கள். தேசத்து ஜனங்களெல்லோரும் ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள். இந்த மூன்று எபிரெய வாலிபர்களும், அவர்களைப்போலவே, அந்த சிலைக்கு எதிராக நிற்கிறார்கள்.
எபிரெய வாலிபர்கள் இந்த திரளான கூட்டத்தோடு ராஜா நிறுத்தின சிலைக்கு முன்பாக நிற்பது ஆச்சரியமாயும், விநோதமாயும் இருக்கிறது. இவர்கள் எபிரெய வாலிபர்கள். இவர்கள் இஸ்ரவேலின் தேவனை மாத்திரமே ஆராதிக்கிறவர்கள். ஆனாலும் இவர்கள் இப்போது ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள்.
நேபுகாத்நேச்சார், தான் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி, தன்னுடைய உத்தியோகஸ்தர் யாவரையும் அழைத்திருக்கிறான். ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து எல்லோரும் அங்கு வந்ததுபோல, இம்மூன்று எபிரெய வாலிபர்களும் அங்கு வந்திருக்கிறார்கள். இந்த எபிரெய வாலிபர்கள் விக்கிரகாராதனைக்காரர்களல்ல. விக்கிரகாராதனைக்கு விரோதமாக தாங்கள் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக சாட்சியாயிருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள்.
நேபுகாத்நேச்சார் இரண்டு கட்டளைகளைக் கொடுக்கிறான். அவையாவன: 1. தான் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு எல்லோரும் வந்து சேரவேண்டும். 2. தான் நிறுத்தின பொற்சிலையை எல்லோரும் பணிந்து கொள்ளவேண்டும். இம்மூன்று எபிரெய வாலிபர்களும் ராஜாவின் முதலாவது கட்டளைக்கு மாத்திரமே கீழ்ப்படிகிறார்கள். ராஜாவின் இரண்டாவது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்துவிடுகிறார்கள்.
சகல ஜனத்தாரும், ஜாதியாரும், பாஷைக்காரரும் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்கிறார்கள். ஆனால் இம்மூன்று எபிரெய வாலிபருமோ, ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்ளாமலிருக்கிறார்கள். இவர்கள் நேபுகாத்நேச்சாருடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், அவன் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருப்பதை கல்தேயரில் சிலர் பார்க்கிறார்கள். கல்தேயர்கள் ராஜாவினிடத்தில் இம்மூன்று எபிரெய வாலிபர் பெயரிலும் குற்றம் சுமத்துகிறார்கள்.
""அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றுகிறார்கள்'' (தானி 3:8). கல்தேயர்கள் என்னும் வார்த்தை பாபிலோன் தேசத்து ஜோசியக்காரரையோ அல்லது குறிசொல்லுகிறவர்களையோ குறிக்கலாம்.
""அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள். அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள்'' (தானி 2:2,4).
கர்த்தர் தானியேலையும், இம்மூன்று எபிரெய வாலிபரையும் பாபிலோன் தேசத்திலே உயர்த்தியிருக்கிறார். இவர்கள் பாபிலோன் மாகாணத்து காரியங்களை விசாரிக்கும்படி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட மேன்மையை, கல்தேயரின் ஜோசியக்காரரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இம்மூன்று எபிரெய வாலிபர்கள்மீதும் பொறாமைப்படுகிறார்கள்.
கல்தேயர்கள் எபிரெய வாலிபருக்கு விரோதமாய் சதிஆலோசனை பண்ணுகிறார்கள். அவர்களை அழிப்பதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த வேளை இப்போது அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இம்மூன்று எபிரெய வாலிபர்களும் ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்ளவில்லை. எவனாகிலும் அதைப் பணிந்துகொள்ளாமல்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினி சூளையின் நடுவிலே போடப்படுவான் என்பது ராஜாவின் கட்டளை.
கல்தேயரில் சிலர் இம்மூன்று எபிரெய வாலிபருக்கு விரோதமாக ராஜசமுகத்தில் வந்து குற்றம் சொல்லுகிறார்கள். அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி, ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: "" ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்து கொள்ளவேண்டுமென்றும், எவனாகிலும் தாழ விழுந்து பணிந்து கொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட வேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே'' (தானி 3:8-11) என்று ராஜாவின் கட்டளையை ராஜாவுக்கு நினைவுபடுத்துகிறார்கள்.
நேபுகாத்நேச்சாருக்கு ஞாபகமறதி அதிகம். அவன் ஏற்கெனவே தான் கண்ட சொப்பனத்தை மறந்தவன். அதுபோலவே இப்போது, தான் பிறப்பித்த கட்டளையையும் மறந்துவிடுவானோ என்று கல்தேயர்கள் நினைக்கிறார்கள். ஆகையினால் அவர்கள் ராஜசமுகத்தில் வந்து, முதலாவதாக, ராஜாவின் கட்டளையை அவனுக்கு நினைவுபடுத்துகிறார்கள். அதன் பின்பு அவர்கள் இம்மூன்று எபிரெய வாலிபருக்கு விரோதமாக குற்றம் சொல்லுகிறார்கள்.
""பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள்'' (தானி 3:12) என்று கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, இம்மூன்று எபிரெய வாலிபர் பேரிலும் குற்றம் சாற்றுகிறார்கள்.
ராஜாவின் கட்டளை தெளிவாகயிருக்கிறது. அது சகல ஜனங்களுக்கும், சகல ஜாதிகளுக்கும், சகல பாஷைக்காரருக்கும் பொதுவானது. எல்லோருமே ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும். இதில் எந்த மனுஷனுக்கும் விதிவிலக்கு கொடுக்கப்படவில்லை.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபரும் சிலையைப் பணிந்துகொள்ளவில்லை. கல்தேயர்களோ இவர்கள்மீது குற்றம் சொல்லும்போது, ""அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை'' (தானி 3:12) என்று சொல்லுகிறார்கள்.
எபிரெய வாலிபர்கள் ராஜாவை மதிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கிறார்கள். ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிவதைவிட, பரலோகத்தின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவது இம்மூன்று எபிரெய வாலிபருக்கும் மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது.
இவர்களுக்கு ராஜாவின்மீது மதிப்பு இருக்கிறது. நேபுகாத்நேச்சார் இம்மூன்று எபிரெய வாலிபர்களுக்கும் சத்துருவல்ல. ராஜா இவர்களுக்கு அநேக நன்மைகளை செய்திருக்கிறான். இவர்களும் ராஜாவுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆனாலும் இந்த மூன்று எபிரெய வாலிபர்களும், ராஜாவின் கட்டளையைவிட, கர்த்தருடைய கட்டளையே பெரிது என்று தீர்மானம்பண்ணியிருக்கிறார்கள்.
கல்தேயரில் சிலர் இம்மூன்று எபிரெய வாலிபருக்கு விரோதமாக, ராஜசமுகத்திலே வந்து குற்றம் சொல்லும்போது, நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொள்கிறான். சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக் கொண்டுவரும்படி கட்டளையிடுகிறான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்து விடுகிறார்கள் (தானி 3:13).
ராஜா இம்மூன்று வாலிபர்களுக்கு விரோதமாக கல்தேயர் சொன்ன குற்றச்சாட்டை உடனே நம்பவில்லை. அதை அவர்களிடத்திலே கேட்டு உறுதிபண்ண விரும்புகிறான்.
நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: ""சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா?'' (தானி 3:14) என்று கேட்கிறான்.
ராஜா எபிரெய வாலிபர்மீது பிரியமாயிருக்கிறான். அவர்கள் ஒருவேளை தன்னுடைய கட்டளைக்கு இதற்கு முன்பு கீழ்ப்படியவில்லையென்றாலும், அவர்கள் இனிமேல் கீழ்ப்படிவதற்கு ஒரு வாய்ப்பைக்கொடுக்கிறான். இம்மூன்று வாலிபர்களும் தங்களுடைய மனதை மாற்றி, தான் நிறுவின பொற்சிலையை வணங்குவார்கள் என்பது ராஜாவின் விருப்பம். இம்மூன்று எபிரெய வாலிபர்களையும் தண்டிக்கவேண்டும் என்பது ராஜாவின் விருப்பமல்ல. அவர்கள் தன்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தண்டனைக்கு தப்பவேண்டும் என்பதே ராஜாவின் விருப்பம்.
ராஜா இம்மூன்று எபிரெய வாலிபரிடமும், ""இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்'' (தானி 3:15) என்று கேட்கிறான்.
இம்மூன்று வாலிபர்களும் தன்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சிலையை வணங்கினால், அவர்கள் ஏற்கெனவே சிலையை வணங்காமலிருந்த குற்றத்தை மன்னித்துவிடலாம் என்று ராஜா தீர்மானிக்கிறான். அவர்கள் சிலையை பணிந்துகொள்ளாமல், பிடிவாதமாயிருந்தால், அவர்களை அக்கினி சூளையின் நடுவிலே போட்டுவிடலாம் என்றும் தீர்மானிக்கிறான்.
இம்மூன்று எபிரெய வாலிபர்களும் தங்கள் தேவனிடத்தில் உறுதியான பக்தியும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பது நேபுகாத்நேச்சாருக்குத் தெரியும். ஆனால் ராஜாவுக்கு தேவனுடைய வல்லமையைப்பற்றி ஒன்றும் தெரியாது. தானே சர்வவல்லமையுள்ளவன் என்று ராஜா நினைக்கிறான்.
தனக்கு விரோதமாக யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று ராஜா தன் இருதயத்தில் பெருமையோடும், ஆணவத்தோடும் இருக்கிறான். ""என் கைக்கு தப்புவிக்கப்போகிற தேவன் யார்'' என்று ராஜா இம்மூன்று எபிரெய வாலிபரிடமும் கேட்கிறான். தேவனால் அவர்களை விடுவிக்க முடியுமென்றால், அந்த தேவன் அவர்களை விடுவித்துக்கொள்ளட்டும் என்று பொருள்படுமாறு ராஜா பேசுகிறான்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தரிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ராஜா நிறுவின பொற்சிலையை பணிந்துகொள்ளக்கூடாது என்றும் உறுதியாயிருக்கிறார்கள். இம்மூவரும் வாலிபர்கள். ஆனாலும் கர்த்தருக்கு யுத்தவீரர்களாயிருக்கிறார்கள். மனுஷர் மத்தியிலே தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு, இம்மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தர் பயன்படுத்தும் பாத்திரங்களாயிருக்கிறார்கள். கர்த்தருடைய பார்வையில் பலவான்களாகவும், பராக்கிரமசாலிகளாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் இரத்தசாட்சியாக மரிப்பதற்கு தேடிப்போகவில்லை. கர்த்தருக்காக எப்படி சாட்சியாக மரிப்பது என்று சிந்தித்துப் பார்த்து, அதற்கான உபாயங்களைத் தேடவில்லை. ஆனாலும் எரிகிற அக்கினி சூளை அவர்களுக்கு முன்பாக இருக்கும்போது, இம்மூன்று எபிரெயர்களும் அக்கினி சூளையைப் பார்த்து பயப்படவில்லை. இவர்கள் மரணத்தின் வாசலிலும் கர்த்தருக்கு சாட்சியாயிருக்கிறார்கள்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: ""நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது'' (தானி 3:16-18) என்று சொல்லுகிறார்கள்.
எபிரெய வாலிபர்களின் வார்த்தையில் உறுதியும் நிச்சயமும் இருக்கிறது. இவர்கள் கர்த்தரை உறுதியாய் நம்புகிறார்கள். கர்த்தர் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்காமல், கர்த்தருடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவர்களுடைய மனதில் குழப்பமோ, பயமோ இல்லை. ""நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை'' (தானி 2:16) என்று தைரியமாய்ச் சொல்லுகிறார்கள்.
இம்மூவரும் ராஜாவினிடத்தில் இப்படி பேசினாலும், ராஜாவுக்கு பதில் சொல்ல மறுக்கவில்லை. அவர்கள் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ராஜாவின் பொற்சிலைக்கோ, அக்கினி சூளைக்கோ அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
கர்த்தர் தங்களை எரிகிற அக்கினி சூளைக்கு நீங்கலாக்கி விடுவிப்பாரா அல்லது விடுவிக்கமாட்டாரா என்பது இம்மூன்று வாலிபருக்கும் நிச்சயமாய்த் தெரியாது. ஆனாலும் இவர்களுக்கு கர்த்தருடைய வல்லமையைப்பற்றி நன்றாய்த் தெரிந்திருக்கிறது. ""நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லராயிருக்கிறார்'' என்று இம்மூன்று வாலிபரும் விசுவாசத்தோடு சொல்லுகிறார்கள்.
எபிரெய வாலிபர்கள் ஜீவனுள்ள தேவனை நம்புகிறார்கள். ராஜா நிறுவின பொற்சிலையை பணிந்து பாவம் செய்வதைவிட, அதைப் பணியாமல் கர்த்தருக்கு சாட்சியாகயிருந்து, பாடுகளை அனுபவிப்பதையே இம்மூவரும் விசுவாசத்தோடு தெரிந்துகொள்கிறார்கள்.
இம்மூன்று எபிரெய வாலிபரும் ராஜா நிறுவின சிலையை பணிந்துகொள்ள மறுக்கிறார்கள். இவர்கள் தெய்வ நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களல்ல. ஜீவனுள்ள தேவனை நம்புகிறவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை இவர்கள் தங்கள் தேவன் என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரையே இவர்கள் ஆராதிக்கிறார்கள். கர்த்தருடைய வல்லமையைப்பற்றி இவர்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், ""எங்களை எரிகிற அக்கினி சூளைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்கள்.
ஒருவேளை தாங்கள் ஆராதிக்கிற தேவன், தங்களை எரிகிற அக்கினி சூளைக்கு நீங்கலாக்கி விடுவிக்கவில்லையென்றால், அவர் நிச்சயமாய், ""ராஜாவாகிய உம்முடைய கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார்'' என்று முழுநிச்சயத்தோடு சொல்லுகிறார்கள்.
நேபுகாத்நேச்சாரால் இம்மூன்று வாலிபர்களையும் கொடுமைப்படுத்த முடியும். அவர்களை சித்திரவதை பண்ணமுடியும். அவர்களுடைய சரீரங்களைக் கொல்லவும் முடியும். அதன்பின்பு ராஜாவால் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. மனுஷர் மரித்த பின்பு, அவர்களுடைய சரீரத்தின்மீது, ராஜாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. மனுஷரால் நம்முடைய சரீரத்தை மாத்திரமே கொல்ல முடியும். நம்முடைய ஆவியைக் கொல்லுவதற்கு மனுஷருக்கு அதிகாரமில்லை. நாம் இந்த சரீரத்தில் மரித்தவுடன், கர்த்தருடைய சமுகத்திலிருப்போம். கர்த்தரே நம்மை மரணத்திலும், மரணத்திலிருந்தும் விடுவிக்கிறவர்.
தங்களுக்கு என்ன நடந்தாலும், ராஜா நிறுவின பொற்சிலையை பணியப்போவதில்லை என்று மூன்று எபிரெய வாலிபர்களும் தீர்மானம்பண்ணுகிறார்கள்.
""நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது'' (தானி 3:17,18) என்று மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தரை நம்பி, ராஜாவுக்கு முன்பாக தைரியமாய்ச் சொல்லுகிறார்கள்.
மூன்று எபிரெய வாலிபர்களும் இப்போது முக்கியமான தீர்மானத்தை எடுக்கவேண்டும். கர்த்தரை மறுதலித்து, சிலையை வணங்கி, எரிகிற அக்கினி சூளைக்கு தப்பித்துக்கொள்ளலாம். ஏராளமான ஜனங்கள் பொற்சிலையை பணிந்துகொள்ளும்போது, இந்த மூன்று வாலிபரும் கூட்டத்தோடு கூட்டமாக, பொற்சிலையை வணங்கி, தங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளலாம். அதன் பின்பு தாங்கள் செய்த பாவத்திற்கு, கர்த்தரிடத்தில் பாவமன்னிப்பைக் கேட்டுக்கொள்ளலாம். இப்படிப்பட்ட நினைவுகள் மனுஷருடைய மனதிலே பொதுவாக தோன்றும்.
எல்லோரும் தப்பு செய்யும்போது, தாங்களும் தப்பு செய்தால் கர்த்தர் தங்களை மன்னித்துவிடுவார் என்று சிலர் நினைக்கிறார்கள். தப்பு செய்கிறவர்களின் கூட்டம் அதிகமாயிருக்கும்போது, ஊரோடு ஒத்துப்போவதுதான் விவேகம் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.
நாம் கர்த்தருக்கு விசேஷமானவர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். கர்த்தரை நம்பி நன்மை செய்யவேண்டும். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமே நம்முடைய ஜீவியத்தில் ஒவ்வொரு காரியமும் நடைபெறும். கர்த்தருடைய அனுமதியில்லாமல் சத்துரு நம்மைத் தொடமுடியாது. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் மனுஷருக்கு பயப்படமாட்டார்கள். நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளை மாத்திரமே பின்பற்றவேண்டும். ஊரோடு ஒத்துப்போகவேண்டும் என்னும் விவாதம் நமக்கு ஒத்துவராது.
இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்திலே, சமஸ்த இஸ்ரவேலாயிருந்த தேசம், வடக்கு இஸ்ரவேல் தேசம் என்றும், தெற்கு யூதாதேசம் என்றும் இரண்டாய்ப் பிரிந்தது. வடக்கு இஸ்ரவேல் தேசத்திலே, இஸ்ரவேலின் பத்துக்கோத்திரத்தார் இருந்தார்கள். அவர்கள் தாணிலும், பெத்தேலிலும் பொன்னாலான விக்கிரகங்களுக்கு கோவில்களைக் கட்டினார்கள். கர்த்தரை ஆராதியாமல் விக்கிரகங்களை ஆராதித்தார்கள்.
வடக்கு இஸ்ரவேல் தேசத்தில் விக்கிரகாராதனை பிரபல்யமாயிருந்தது. எல்லோரோடும் ஒத்துப்போகவேண்டும் என்று இஸ்ரவேல் வம்சத்தார் தீர்மானித்தார்கள். கர்த்தரை விட்டு விலகி விக்கிரகங்களைப் பின்பற்றினார்கள். அந்நிய தெய்வங்களுக்கு தூபங்களைக் காட்டினார்கள். இது கர்த்தருடைய பார்வையில் அருவருப்பாயிருந்தது. ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாருடைய பார்வையிலோ, இதுவே பிரீதியாயிருந்தது.
மூன்று எபிரெய வாலிபர்களும் ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, பொற்சிலையைப் பணிந்துகொண்டால், அவர்களுக்கு மரணதண்டனை கிடைக்காது. அவர்களை எரிகிற அக்கினி சூளையிலே போடமாட்டார்கள். அவர்களும் மரித்துப்போகாமல் உயிரோடிருப்பார்கள். இம்மூன்று வாலிபரும் பாபிலோன் தேசத்திலே முக்கியமான உத்தியோகம் பார்க்கிறார்கள். இவர்கள் செத்துப்போகாமல், உயிரோடு பிழைத்திருந்தால், பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிற மற்ற யூதர்களுக்கு, இவர்களால் அநேக உதவிகளை செய்யமுடியும்.
ஆனால் இம்மூன்று வாலிபர்களும் கர்த்தரை மறுதலிக்க விரும்பவில்லை. கர்த்தரை மறுதலிப்பதற்கு உலகப்பிரகாரமான காரணங்களை ஆதாரமாகச் சொல்லக்கூடாது. நாம் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். ""நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்'' என்று யோசுவா சொன்ன பிரகாரமாக, நாமும் இந்த வாக்கியத்தை விசுவாசத்தோடு சொல்லவேண்டும்.
மூன்று எபிரெய வாலிபர்களும் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறார்கள். ஆனாலும் தாங்கள் கர்த்தருக்கு முன்பாக நிற்பதையும் இவர்கள் உணருகிறார்கள். இவர்கள் ராஜாவிடம் பேசினாலும், இவர்களுடைய வார்த்தைகளை கர்த்தரும் கேட்கிறார். கர்த்தர் அவர்களோடு கூடயிருக்கிறார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபரும், நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு முன்பாக, ""நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை'' (தானி 3:18) என்று விசுவாசத்தோடும், தைரியத்தோடும் சொல்லுகிறார்கள். இந்த வார்த்தைகளை சொல்லுவதினால், தங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கப்படும் என்பது இம்மூன்று வாலிபர்களுக்கும் நன்றாய்த் தெரியும்.
இம்மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்வதைவிட, கர்த்தருக்காக பாடுகளை அனுபவிப்பதையே தெரிந்துகொள்கிறார்கள். நன்மை வரும் என்பதற்காக தீமை செய்யக்கூடாது. ஒரு சிலர் உலகப்பிரகாரமான ஆதாயங்களை எதிர்பார்த்து பாவம் செய்கிறார்கள். இந்த ஆதாயங்கள் நமக்கு மெய்யான ஆசீர்வாதங்களாக இராது. கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதமே நமக்கு மெய்யான ஐசுவரியம்.
கர்த்தர் எரிகிற அக்கினி சூளையிலிருந்து இம்மூன்று எபிரெய வாலிபர்களையும் காப்பாற்றுகிறார். இது மிகப்பெரிய அற்புதம். இதுபோலவே, அவர்கள் பொற்சிலையை பணிந்து கொள்ள மறுத்தது அதைவிட பெரிய அற்புதம். கர்த்தரே அவர்களுடைய உள்ளத்தில் விசுவாசத்தையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறார். கர்த்தர் நம்மை தீங்குக்கும் விலக்கி பாதுகாக்கிறார். பாவத்திற்கும் விலக்கி பாதுகாக்கிறார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் பேரில் குற்றஞ்சாட்டப்படுகிறது. (தானி 3:12). தானியேலையும், மற்ற யூதர்களையும் பற்றி இங்கு ஒன்றும் குறிப்பிடவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை இந்தச் சிலையின் பிரதிஷ்டையின்போது அவர்கள் தூராவில் இல்லாமல் வேறு ஏதாவது இடத்தில் இருந்திருக்க வேண்டும்.
யூதருக்கு எதிராகக்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
1. அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை.
2. அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யவில்லை.
3. அவர்கள் நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளவில்லை.
"நேபுகாத்நேச்சார் உக்கிர கோபங்கொள்கிறான் (தானி 3:13). நேபுகாத்நேச்சாரும், யோனாவும் (யோனா 4:1-9) அவசரக்காரர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருந்தார்கள். வேதாகமத்தில் இவ்விரண்டு பழக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நேபுகாத்நேச்சார் இம்மூன்று வாலிபரையும் உடனடியாக அக்கினிச்சூளையின் நடுவில் போடுவதற்குப் பதிலாகத் தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறான். அவர்களிடம் உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்று ஆணவமாகப் பேசுகிறான். ராஜா கேட்ட கேள்வி தேவனுக்கும், யூதர் அனைவருக்கும் ஓர் அறைகூவலாகக் கேட்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலின் தேவன் அவர்களை எரியும் அக்கினிச்சூளையிலிருந்து தப்புவிக்க வல்லவராக இருக்கிறார் என்பதை தேவன்தாமே நிரூபிக்க வேண்டும்.
மூன்று எபிரெய வாலிபரும் மிகவும் கவனமாக ராஜாவிற்கு உத்தரவு கூறுகிறார்கள். அதே வேளையில் தங்களுடைய தேவன் ராஜாவின் கையிலிருந்து தங்களை நீங்கலாக்கி, விடுவிப்பார் என்பதிலும் விசுவாசத்தோடு இருக்கிறார்கள். கர்த்தர் தங்களைத் தப்புவித்தாலும், தப்புவிக்காதே போனாலும் ராஜா நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். (தானி 3:16-18).
அக்கினிச்சூளை தானி 3:19-27
தானி 3:19. அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுத்து,
தானி 3:20. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசா-களாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
தானி 3:21. அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
தானி 3:22. ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக் கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது.
தானி 3:23. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
தானி 3:24. அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
தானி 3:25. அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
தானி 3:26. அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவி-ருந்து வெளியே வந்தார்கள்.
தானி 3:27. தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
மூன்று எபிரெய வாலிபர்களும் சொல்லுகிற காரணங்களை நேபுகாத்நேச்சார் அங்கீகரிக்கவில்லை. அவர்களுக்கு விரோதமாக ராஜாவுக்கு கடுங்கோபம் மூழ்கிறது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபடுகிறது (தானி 3:19).
சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி ராஜா உத்தரவு கொடுக்கிறான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசா-களாகிய புருஷருக்குக் கட்டளையிடுகிறான் (தானி 3:19,20).
ராஜா எபிரெய வாலிபர்களுக்கு இரக்கம் காண்பிக்கவில்லை. அவர்களுடைய தண்டனையை குறைப்பதற்குப் பதிலாக, அதை அதிகரிக்கச் செய்கிறான். தேசத்திலே கொடிய குற்றம் செய்பவர்களுக்கு தண்டனைகளை அதிகரிப்பார்கள். இம்மூன்று வாலிபர்களும் ராஜாவுக்கு முன்பாக கொடிய குற்றம் செய்ததுபோல நிற்கிறார்கள்.
அப்பொழுது இம்மூன்று எபிரெய வாலிபர்களும், தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுகிறார்கள் (தானி 3:21).
ராஜாவின் கோபம் அதிகமாயிருக்கிறது. அக்கினியும் அதிகமாக சூடாக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கர்த்தருடைய கிருபையும், இரக்கமும் அதிகரிக்கிறது. கர்த்தருடைய அற்புதம் செய்யும் வல்லமையும் அதிகரிக்கிறது. ராஜாவின் கட்டளை கடினமாயிருக்கிறது. சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருக்கிறது. அக்கினி ஜுவாலையானது, மூன்று எபிரெய வாலிபர்களையும் தூக்கிக்கொண்டுபோன இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷரை கொன்றுபோடுகிறது.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுகிறார்கள் (தானி 3:22,23).
ராஜாவின் கட்டளை நிறைவேற்றப்படுகிறது. எபிரெய வாலிபர்களை தூக்கிக்கொண்டு போனவர்கள், ராஜா கொடுத்த தண்டனையை நிறைவேற்றும் கருவிகளாகயிருக்கிறார்கள். அவர்கள் ராஜாவின் பாவத்திற்கு பங்காளிகளாகயிருக்கிறார்கள். நேபுகாத்நேச்சார் இவர்களைவிட பெரிய பாவம் செய்கிறான். எபிரெய வாலிபர்களை எரிகிற அக்கினி சூளையில் போடுமாறு ராஜாவே கட்டளைகொடுத்தான். கர்த்தர் எபிரெய வாலிபர்களை அக்கினி சூளையில் தூக்கிப்போட்ட புருஷரைக் கொன்றுபோட்டார். இந்தப்பாவத்திற்கு மூலகாரணமாகயிருந்த நேபுகாத்நேச்சாருக்கு தண்டனையை நியமிக்கிறார். ஏற்றவேளை வரும்போது ராஜாவுக்கும் தண்டனை கிடைக்கும். அந்த தண்டனை பெரிதாயிருக்கும்.
மூன்று எபிரெய வாலிபரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினி சூளையின் நடுவிலே விழுகிறார்கள். ஆனால் அக்கினி அவர்களுடைய சரீரங்களின்மேல் பெலன் செய்யவில்லை. அவர்களுடைய தலைமயிர் கருகவில்லை. அவர்களுடைய சால்வைகள் சேதப்படவில்லை. அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசவில்லை. அவர்கள் மூன்று பேரும் எரிகிற அக்கினி சூளையிலே சாகவில்லை. அவர்கள் ஜீவனோடிருக்கிறார்கள்.
எரிகிற அக்கினி சூளையிலே மூன்றுபேரை போட்டார்கள். ஆனால் அந்த அக்கினி சூளையின் நடுவிலே நாலுபேர் விடுதலையோடு உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது. இதை நேபுகாத்நேச்சார் பார்த்து பிரமிக்கிறான். தீவிரமாய் எழுந்து தன்னுடைய மந்திரிகளிடம் புலம்புகிறான்.
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: ""மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம்'' என்று கேட்கிறான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ""ஆம், ராஜாவே'' என்று சொல்லுகிறார்கள். அதற்கு ராஜா: ""இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது'' என்று சொல்லுகிறான் (தானி 3:24,25).
மூன்று எபிரெய புருஷரையும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினி சூளையின் நடுவிலே போட்டார்கள். ஆனால் அவர்கள் இப்போது விடுதலையாய் அக்கினி நடுவிலே உலாவுகிறார்கள். அவர்களுடைய கட்டுக்கள் கழற்றப்பட்டிருக்கிறது. கட்டுகள் மாத்திரமே சேதப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களுடைய சால்வைகள் சேதப்படவில்லை.
இம்மூன்று எபிரெய புருஷரையும் அக்கினியிலே தூக்கிப்போட்டவர்கள் செத்துப்போனார்கள். சூளைக்கு அருகாமையில் போகும்போதே, அக்கினி அவர்களைக் கொன்றுபோட்டது. இம்மூன்று எபிரெய வாலிபரும் அக்கினி சூளையின் நடுவிலே விழுகிறார்கள். ஆனால் அக்கினி இந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் பெலன் செய்யவில்லை.
அக்கினி சூளை பெரிதாயும் அகலமாயும் இருக்கிறது. இவர்கள் அங்கே விடுதலையோடு, அக்கினி நடுவிலே உலாவுகிறார்கள். அவர்களுடைய கால்களுக்கு ஒரு சேதமும் உண்டாகவில்லை. அவர்களால் அக்கினிக்குள் நடந்து உலாவ முடிகிறது. அவர்களுடைய சிந்தையில் கலக்கமோ, பதட்டமோ, பயமோ இல்லை. அவர்கள் பயத்தில் அங்கும் இங்கும் வேகமாக ஓடவில்லை. அவர்கள் அக்கினியின் நடுவிலே உலாவுகிறார்கள். பரதேசின் தோட்டத்தில் உலாவுவதுபோல சந்தோஷமாய் உலாவுகிறார்கள்.
அக்கினி சூளையின் நடுவிலே, மூன்று எபிரெய வாலிபரோடு, மேலும் ஒருவர் இருக்கிறார். அந்த நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்று நேபுகாத்நேச்சார் சொல்லுகிறான். ராஜாவின் பார்வைக்கு, நாலாம் ஆள் ஒரு தெய்வீக புருஷனைப்போலவும், பரலோகத்திலிருந்து வந்திருக்கிற ஒரு தேவதூதனைப்போலவும் இருக்கிறார். அவர் ஒரு வேலைக்காரரைப்போல இராமல், குமாரனைப்போல் இருக்கிறார். ராஜா அவரைப் பார்த்து, அவருடைய சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்று சொல்லுகிறான்.
நேபுகாத்நேச்சார் நாலாம் ஆளைப்பற்றிச் சொல்லும்போது, ""தேவன் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்'' (தானி 3:28) என்று சொல்லுகிறான். நாலாம் ஆள் ராஜாவின் பார்வைக்கு, தேவபுத்திரனாகவும், தேவனுடைய தூதனாகவும் தெரிகிறார்.
தானியேலை சிங்கத்தின் கெபியிலே தூக்கிப்போட்டார்கள். அப்போது தேவதூதன் ஒருவர் சிங்கத்தின் வாய்களைக் கட்டிப்போட்டார். அதுபோலவே கர்த்தர், எரிகிற அக்கினி சூளைக்கு, தம்முடைய தூதரில் ஒருவரை அனுப்பியிருப்பார் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள்.
""சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்'' (தானி 6:22).
பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையே, எரிகிற அக்கினி சூளைக்கு அனுப்பினார் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். நாம் கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிக்கும்போது, கிறிஸ்துவானவர் நம்மோடு கூடவே இருப்பார். நாம் எரிகிற அக்கினி சூளையில் விழுந்தாலும், மரண பள்ளத்தாக்கை கடந்துபோனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மோடு கூடவே இருப்பார். கர்த்தர் நம்மோடு கூடயிருப்பதினால், நாம் தீங்குகளைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை.
நேபுகாத்நேச்சார் தன் சிங்காசனத்திலிருந்து எழுந்திருந்து, எரிகிற அக்கினி சூளையின் வாசலண்டைக்கு வருகிறான். அவனால் அவ்வளவு தூரம் மாத்திரமே வரமுடியும். அவனால் எரிகிற அக்கினி சூளைக்குள் பிரவேசிக்க முடியாது. கர்த்தருடைய பாதுகாப்பு அவருடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே கிடைக்கும். ராஜா அக்கினி சூளைக்குள் பிரவேசித்தால் செத்துப்போவான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை தூக்கிக்கொண்டு போன புருஷரை அக்கினி கொன்றுபோட்டது. அதுபோலவே, இப்போது, ராஜா எரிகிற அக்கினி சூளைக்குள் பிரவேசித்தால், அக்கினி அவனையும் கொன்றுபோடும்.
ராஜாவுக்கு அக்கினியின் உஷ்ணம் தெரிகிறது. ஆகையினால் அவன் எரிகிற அக்கினி சூளையின் வாசலண்டைக்கு வந்து, அக்கினி சூளைக்குள்ளே இருக்கிற மூன்று எபிரெய வாலிபரோடு பேசுகிறான். ""உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள்'' என்று ராஜா சொல்லுகிறான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவி-ருந்து வெளியே வருகிறார்கள் (தானி 3:26).
ராஜா மூன்று எபிரெய வாலிபர்களையும் எரிகிற அக்கினி சூளையில் போடச்சொன்னான். கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் மூன்று பேரையும் அக்கினியிலிருந்து பாதுகாக்கிறார். ராஜா இதைப் பார்த்து தன்னுடைய பாவத்தை உணருகிறான். கர்த்தர் தம்முடைய தாசரை அற்புதமாய்ப் பாதுகாத்ததையும் ராஜா புரிந்துகொள்கிறான்.
ராஜா மூன்று எபிரெய வாலிபரையும் வெளியே வருமாறு சொன்னபோது, அம்மூன்று வாலிபர்கள் மாத்திரம் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்கள் நடுவிலிருந்த நாலாம் ஆள், அங்கிருந்து கடந்துபோய்விடுகிறார். மூன்று எபிரெய வாலிபர்கள் மாத்திரம் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களுக்கு அக்கினியினால் ஒரு சேதமும் உண்டாகவில்லை.
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்கிறார்கள் (தானி 3:27).
கல்தேயர்கள் அக்கினியை தங்கள் தெய்வமாக வணங்குகிறார்கள். அக்கினியானது அவர்களுடைய சூரிய தேவனுக்கு அடையமாளமாயிருக்கிறது. அக்கினிக்கு யாரும் தப்பிக்க முடியாது என்பது கல்தேயருடைய நம்பிக்கை. கர்த்தர் அக்கினியை பலமிழக்கப்பண்ணுகிறார். மூன்று எபிரெய புருஷரும் அக்கினியின் நடுவிலே விழுகிறார்கள். ஆனாலும் அவர்களுடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யவில்லை.
கல்தேயர்கள் தெய்வமாக வணங்குகிற அக்கினி, மூன்று எபிரெய வாலிபருடைய தலைமயிரைக்கூட சேதப்படுத்தவில்லை. அதைக் கருகிப்போகச் செய்யவில்லை. அவர்களுடைய சால்வைகளையும் சேதப்படுத்தவில்லை. சால்வைகளின் நிறம் மாறிப்போகவில்லை. மூன்று வாலிபரும் எரிகிற அக்கினியின் நடுவிலே விழுந்தாலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசவில்லை. கர்த்தருடைய பிள்ளைகள்மீது அக்கினிக்கு ஒரு பெலனுமில்லை. கல்தேயருடைய தெய்வமாகிய அக்கினி, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு முன்பாக பெலமிழந்து காணப்படுகிறது.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் இருக்கிறார். ராஜா மூன்று எபிரெய வாலிபரிடமும், ""உங்களை என் கைக்கு தப்புவிக்கப்போகிற தேவன் யார்'' (தானி 3:15) என்று கேட்டான். ராஜாவின் கேள்விக்கு கர்த்தர் பதில் கொடுக்கிறார். கர்த்தரே தம்முடைய பிள்ளைகளை தீங்குகளுக்கு விலக்கி தப்புவிக்கிறார். விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய கரத்தில் பாதுகாப்பாகயிருக்கிறோம்.
நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூளுகிறது (தானி 3:19). ராஜாவுக்குக் கோபம் வந்தவுடன், அவனுடைய முகம் வேறுபட்டது. சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப் பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுத்தான். இதனால் கர்த்தருடைய நாமம் மேலும்மேலும் மகிமைப்படுகிறது. (தானி 3:19,25-28). சூளை மிகவும் சூடாக்கப்பட்டது. அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக் கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது. (தானி 3:22). சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் சால்வைகளும், நிசார்களும், பாகைகளும், மற்ற வஸ்திரங்களும் அக்கினியில் சேதப்படவில்லை. (தானி 3:27).
மூல எபிரெய பாஷையில் ""தேவபுத்திரன்'' என்னும் இந்த வார்த்தைக்கு முன்பு தனிஒருமை சுட்டுக்குறிப்பு பயன்படுத்தப்படவில்லை. ஆகையினால் இதை ""ஒரு தேவபுத்திரன்'' என்றே பொருள்கூற வேண்டுமென்று சிலர் கருத்துக் கூறுகிறார்கள். இவன் ஒரு தேவதூதன் என்பது இவர்களுடைய வியாக்கியானம். நேபுகாத்நேச்சாருக்கு தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு கிடைத்திருக்காது. (மத் 1:18-23; லூக்கா 1:35; எபி 1:5-7) நேபுகாத்நேச்சார் தானி 3:28 ஆவது வசனத்தில் அக்கினிச்சூளையில் மூன்று எபிரெய வாலிபரோடு இருந்த நபரைப் பற்றிக் குறிப்பிடும்போது ""அவர் தமது தூதனை அனுப்பி தம்முடைய தாசரை விடுவித்தார்'' என்று கூறுகிறார்.
மூன்று எபிரெய வாலிபரும் மெய்யான ஜீவனுள்ள தேவனை ஆராதிப்பதாகக் கூறினார்கள். (தானி 3:17) இப்போது நேபுகாத்நேச்சாரும் அவர்களுடைய தேவனை உன்னதமான தேவன் என்றும், இந்த மூன்று எபிரெய வாலிபரையும் அவருடைய தாசன் என்றும் அங்கிகரிக்கிறான்.
அற்புதங்கள்
1. அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யவில்லை.
2. அவர்களுடைய தலைமயிர் கருகவில்லை.
3. அவர்களுடைய சால்வைகள் சேதப்படவில்லை.
4. அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசவில்லை.
தேவனுக்கு ஸ்தோத்திரம் தானி 3:28-30
தானி 3:28. அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையேநம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர்தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
தானி 3:29. ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
தானி 3:30. பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்துகிறான். தம்மை ஆராதிக்கிறவர்களை கர்த்தரால் இரட்சிக்கமுடியும் என்றும், அவர் இரட்சிக்க ஆயத்தமாயிருக்கிறார் என்றும் ராஜா சொல்லுகிறான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி, ராஜா கர்த்தரைத் துதிக்கிறான் (தானி 3:28).
நேபுகாத்நேச்சார் கர்த்தருக்கும் அவருடைய தாசருக்கும் விரோதமாய்க் கிரியை செய்தான். கர்த்தரை சபித்தான். ""என் கைக்கு தப்புவிக்கிற தேவன் யார்'' (தானி 3:15) என்று ஆணவமாய்ப் பேசினான். கர்த்தரோ ராஜாவினுடைய வாயிலிருந்து தம்மைத் துதிக்கும் துதிகளைப் புறப்படப்பண்ணுகிறார்.
மூன்று எபிரெய வாலிபர்களும் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்து பணியவில்லை. அவர்கள் கர்த்தரையே நம்பி ராஜாவின் கட்டளையைத் தள்ளினார்கள். தங்கள் சரீரங்களை அக்கினிக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.
""கர்த்தரோ தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய தாசரை விடுவித்தார்'' என்று நேபுகாத்நேச்சார் சாட்சியாகச் சொல்லுகிறான். மேலும், ""இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவருமில்லை'' (தானி 3:29) என்றும் ராஜா சொல்லுகிறான்.
கர்த்தர் இரட்சிக்கிற பிரகாரமாக வேறு யாராலும் இரட்சிக்க முடியாது. ஆகையினால் மற்றவர்களுக்கு கீழ்ப்படிவதைவிட, தமக்கு பரிபூரணமாய்க் கீழ்ப்படியவேண்டுமென்று கர்த்தர் தம்முடைய ஜனத்திடம் எதிர்பார்க்கிறார்.
நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாக ஆரம்பத்தில் தூஷணவார்த்தைகளைச் சொன்னான். ஆனால் அவன் இப்போது கர்த்தரைத் துதிக்கும் துதியின் வார்த்தைகளைச் சொல்லுகிறான். இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாய் யாரும் தூஷண வார்த்தைகளைச் சொல்லக்கூடாது என்றும் கட்டளையிடுகிறான்.
""சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது'' (தானி 3:29) என்று நேபுகாத்நேச்சார் அறிவிக்கிறான்.
பேல் என்பது கல்தேயரின் தெய்வம். எரிகிற அக்கினி சூளையிலிருந்து பேல் தெய்வத்தால் யாரையும் இரட்சிக்க முடியாது. அது ஒருவரையும் இரட்சிக்க வராது. இஸ்ரவேலின் தேவனோ தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவிக்கிறார். கர்த்தர் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார். இரட்சிக்க சித்தமுள்ளவராகவும் இருக்கிறார். இரட்சிக்க ஆயத்தமுள்ளவராகவும் இருக்கிறார்.
மூன்று எபிரெய வாலிபர்களும் கர்த்தரை மாத்திரமே சேவித்து அவரைக் கனம்பண்ணுகிறார்கள். அவரையே நம்புகிறார்கள். ராஜாவின் கட்டளைக்கு பயப்படவில்லை. கர்த்தர் இவர்களுடைய விசுவாசத்தைப் பார்க்கிறார். தங்களுடைய சரீரங்களை இவர்கள் அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய தாசராகிய இவர்களை அக்கினியிலிருந்து விடுவிக்கிறார். மூன்று எபிரெய வாலிபர்களும் கர்த்தருடைய பார்வையில் விசேஷித்தவர்களாயிருக்கிறார்கள்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று வாலிபரும் கர்த்தரை மறுதலிக்கவில்லை. அக்கினி சூளை அவர்களுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது. அப்போதுகூட அவர்கள் கர்த்தரைத் துதிக்கிறார்கள். ""நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்'' (தானி 3:17) என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்கள்.
மூன்று எபிரெய வாலிபரின் விசுவாசம், நேபுகாத்நேச்சாரின் மனதை பாதிக்கிறது. அவனுக்குள் மனமாற்றமுண்டாயிற்று. ராஜா ஆரம்பத்தில் கர்த்தரைத் தூஷித்தான். இப்போதோ அவன் கர்த்தரைத் துதிக்கிறான். மூன்று வாலிபர்களும் கர்த்தரை நம்பி கிரியை செய்கிறார்கள்.
கர்த்தர் தங்களை எரிகிற அக்கினி சூளையிலிருந்து விடுவிப்பார் என்று மூன்று எபிரெய வாலிபரும் நம்புகிறார்கள். ஒருவேளை தங்களுக்கு அப்படிப்பட்ட விடுதலை கிடைக்காவிட்டாலும், கர்த்தர் தங்களை எரிகிற அக்கினி சூளையின் வழியாக, பரலோகத்திற்கு அழைத்துக்கொண்டு போவார் என்றும் விசுவாசிக்கிறார்கள்.
இந்த நம்பிக்கையில்தான் அவர்கள் தங்கள் சரீரங்களை அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு கலக்கமில்லை. அவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போகமாட்டார்கள்.
நோபுகாத்நேச்சார் இதுவரையிலும் தனிப்பட்ட முறையில், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதித்தான். இப்போது, பாபிலோன் தேசத்து ராஜா என்னும் அந்தஸ்தில், இஸ்ரவேலின் தேவனைத் துதித்து, ஒரு அரசாணையை வெளியிடுகிறான்.
""சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை'' (தானி 3:29) என்று பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஒரு அரசாணை பிறப்பிக்கிறான்.
இந்த அற்புதம் கர்த்தரால் உண்டாயிற்று. தேவனுடைய வல்லமை அற்புதங்களை நடப்பிக்கிறது. கர்த்தரை ஆராதிக்கிறவர்கள் அந்நிய தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அந்நிய தேசத்திலும் அவர்களைப் பாதுகாக்கிறார். கர்த்தர் தம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துகிறார். ராஜா கர்த்தரைப் புகழ்ந்து அரசாணை பிறப்பிக்கும்போது, அங்கே ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியிருக்கிறார்கள். பாபிலோன் தேசத்தாருக்கு முன்பாக கர்த்தருடைய நாமம் மகிமை பெறுகிறது.
புதிய ஏற்பாட்டுக்காலத்திலே, கர்த்தருடைய சபைக்கு விரோதமாக ஏராளமான சத்துருக்கள் இருக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய சபையை பாதுகாக்கிறார். சபையின் சத்துருக்கள் ஒருவேளை மனந்திரும்பாமல் போகலாம். அவர்களுடைய இருதயம் கடினமாகவே இருக்கலாம். ஆனாலும் கர்த்தர் அவர்களுடைய வாய்களை அடைத்துப்போடுகிறார். அவர்களுடைய நாவுகளைக் கட்டிப்போடுகிறார். அவர்களால் கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய சபைக்கு விரோதமாகவும் பேசமுடியாது.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபரும் ஆரம்பத்தில் அடிமைகளாகயிருந்தார்கள். அதன் பின்பு தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின் பேரில், ராஜா அவர்கள் மூவரையும் பாபிலோன் மாகாணத்தில் காரியங்களை விசாரிக்கும்படி வைக்கிறான் (தானி 2:49). இப்போதோ ராஜா அவர்கள் மூவரையும் பாபிலோன் தேசத்திலே மேலும் அதிகமாய் உயர்த்துகிறான். கர்த்தரை நம்பினவர்கள் வெட்கப்பட்டுப்போகமாட்டார்கள். அவர்கள் செழித்திருப்பார்கள்.
""சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்று சொல்லி நேபுகாத்நேச்சார் கர்த்தரைத் துதிக்கிறான். நேபுகாத்நேச்சார் இறுதியில் கர்த்தருடைய மகத்துவத்தை அங்கிகரிக்கிறான். கர்த்தருடைய வல்லமை வெளிப்பட்ட போதெல்லாம் அவன் தேவனை அங்கிகரித்தான். (தானி 2:47; தானி 3:28; தானி 4:34).
""அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்'' (தானி 3:28) என்று சொல்லி நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய வல்லமையை அங்கீகரிக்கிறான். நேபுகாத்நேச்சார் பல தெய்வங்களை வழிபடுகிறவன். இவனுடைய வாயிலிருந்து கர்த்தரைப் பற்றிய செய்தி வெளிவருகிறது.
நேபுகாத்நேச்சார் அறிக்கை செய்த வாக்கியங்கள்
1. தேவன் தமது தூதனை அனுப்பினார்.
2. தம்முடைய தாசரை விடுவித்தார்.
3. ராஜாவின் கட்டளையைத் தள்ளிவிட்டார்.
4. மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தரை நம்பி தங்கள் சரீரங்களை ஒப்புக் கொடுத்தார்கள்.
5. இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை. (தானி 3:29).
பாபிலோனிலும், மேதிய-பெர்சிய தேசத்திலும் சரீரத்தைத் துண்டித்துப் போட்டு மரண தண்டனை கொடுப்பது வழக்கம். (தானி2:5; தானி 3:29; எஸ்றா 6:11).
தானியேலின் நண்பர்களான மூன்று எபிரெய வாலிபரும் இரண்டாம் முறையாகப் பாபிலோன் தேசத்தில் உயர்த்தப்படுகிறார்கள். (தானி 2:49; தானி 3:30).
