37 அதிகாரம்
யாக்கோபின் சந்ததியைப்பற்றி இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரத்திலிருந்து, ஆதியாகமம் புஸ்தகம் கடைசி அதிகாரம் வரையிலும் யோசேப்பைப்பற்றிய சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.
யோசேப்பின் சரித்திரத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதலாவது பிரிவில் யோசேப்பு தாழ்ந்திருப்பது பற்றியும், இரண்டாவது பிரிவில் அவர் உயர்த்தப்படுவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. யோசேப்பு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறார். கிறிஸ்துவானவர் முதலாவதாக தம்மைத் தாழ்த்தினார். அதன்பின்பு அவர் உயர்த்தப்பட்டார்.
யோசேப்பின் சரித்திரம் விசுவாசிகளாகிய நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டிருக்கிறது. நாம் பல உபத்திரவங்களின் வழியாக கடந்துவந்து தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவேண்டும். யோசேப்பின் சகோதரர் அவருக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.
யோசேப்பு தன் சகோதரருடைய துன்மார்க்கத்தை யாக்கோபுக்கு சொல்லுகிறார் (ஆதி 37:1,2). யாக்கோபு தன் குமாரர் எல்லோரையும்விட யோசேப்பை அதிகமாய் நேசிக்கிறார் (ஆதி 37:3,4). யோசேப்பு தன் சகோதரர் எல்லோரையும்விட தான் உயர்ந்திருப்பதாக சொப்பனம் காண்கிறார் (ஆதி 37:5#11).
யோசேப்பின் சகோதரர் அவருக்கு விரோதமாக சதிஆலோசனைபண்ணி அவருக்கு தீங்கு செய்கிறார்கள். யோசேப்பு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற தன் சகோதரரைப் பார்க்க வருகிறார் (ஆதி 37:12#17).
யோசேப்பின் சகோதரர் அவரை கொலைசெய்யும்படி சதிஆலோசனைபண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் அவரைக் கொலைசெய்யாமல் வனாந்தரத்திலே உள்ள ஒரு குழியிலே போட்டு விடுகிறார்கள் (ஆதி 37:18#24). அவர்கள் யோசேப்பை எகிப்து தேசத்திற்குப்போகிற இஸ்மவேலரிடத்திலே அடிமையாக விற்றுப்போடுகிறார்கள் (ஆதி 37:25#28).
யோசேப்பை ஒரு துஷ்டமிருகம் பட்சித்துப்போட்டது என்று, யாக்கோபு சொல்லுகிறார் (ஆதி 37:29#35). யாக்கோபு யோசேப்புக்காக அழுதுகொண்டிருக்கிறார். மீதியானியர் யோசேப்பை போத்திபார் என்பவனிடத்தில் விற்றுப்போடுகிறார்கள் (ஆதி 37:36).
யாக்கோபுடைய சந்ததி
ஆதி 37:1#4
ஆதி 37:1. யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
ஆதி 37:2. யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்-வருவான்.
ஆதி 37:3. இஸ்ரவே-ன் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
ஆதி 37:4. அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
யாக்கோபுடைய சந்ததியின் வரலாற்றைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கு தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருக்கிறார் (ஆதி 37:1).
மோசே ஆதி 35:27-36:43 ஆகிய வசனங்களில் ஈசாக்கு, ஏசா ஆகியோரின் வரலாற்றை எழுதி முடிக்கிறார் ஆதி 35:27-29 ஆகிய வசனங்களில் யாக்கோபு அவருடைய குடும்பத்தார் ஆகியோரின் வரலாற்றை நிறுத்தி வைத்திருந்த மோசே இப்பொழுது அதை மறுபடியும் தொடர்ந்து எழுதுகிறார்.
பரிசுத்தவேதாகமத்தில், ஏசாவின் சந்ததியைவிட, யாக்கோபின் சந்ததிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. யாக்கோபின் சந்ததியைச் சேர்ந்தவர்கள் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் ஜனத்தார். ஏசாவின் சந்ததியைப்பற்றிச் சொல்லும்போது, ""ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு'' (ஆதி 36:1) என்று சொல்லி, அவருடைய குமாரரின் பெயர்கள் மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது.
யாக்கோபின் சந்ததியைப்பற்றிச் சொல்லும்போதோ, அவரைப்பற்றியும், அவருடைய குமாரர்களைப்பற்றியும், அவர்களுடைய சந்ததிகளைப்பற்றியும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. யாக்கோபு கானான் தேசத்திலே பரதேசியாய்த் தங்கியிருக்கிறார்.
யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்-வருவார் (ஆதி 37:2).
யோசேப்பின் வரலாறு ஆரம்பமாகிறது. அதன் பின்பு யாக்கோபின் வரலாறு இடையில் வருகிறது. மறுபடியும் ஆதி 46 ஆவது அதிகாரத்தில் யோசேப்பின் வரலாறு வருகிறது. யோசேப்பிற்கு இப்பொழுது வயது பதினேழு. யாக்கோபிற்கு 107 வயதாகிறது. யாக்கோபு 10 வருஷங்களாக கானானில் தங்கியிருக்கிறார். மூத்தகுமாரன் ரூபனுக்கு 29 வயது இருக்கலாம். இளைய குமாரன் பென்யமீனுக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம். யோசேப்பை விற்று போட்ட அவருடைய சகோதரருக்கு 18 முதல் 29 வயதாகிறது.
யோசேப்பு தன் தகப்பனாராகிய யாக்கோபுக்கு மிகவும் பிரியமானவர். ஆனாலும் யோசேப்பு ஒரு வேலையும் செய்யாமல், தன்னுடைய தகப்பனின் கூடாரத்திலே, சோம்பேறியாக சும்மாயிருக்கவில்லை. யாக்கோபின் மற்ற குமாரரைப்போல, யோசேப்பும் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தொழிலைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்கள் அந்தத் தொழிலை நேர்த்தியாய்ச் செய்வதற்கு பயிற்சி கொடுக்கவேண்டும். ஒரு வேலையிலும் பயிற்சி பெறாத பிள்ளைகள், ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவர்களாயிருப்பார்கள். அவர்கள் சோம்பேறிகளாயிருந்து தங்கள் பொழுதை வீணாய்க் களிப்பார்கள்.
யோசேப்பு இஸ்ரவே-ன் முதிர்வயதிலே அவருக்கு பிறந்திருக்கிறார். ஆகையினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாய் நேசித்து, அவருக்குப் பலவருணமான அங்கியைச் செய்விக்கிறார் (ஆதி 37:3).
யோசேப்பு பிறந்த போது யாக்கோபிற்கு 91 வயது ஆனது. யோசேப்பு யாக்கோபின் கடைசி குமாரன் அல்ல. இவருக்குப் பிறகு 9 வருஷம் கழித்து பென்யமீன் பிறக்கிறான். ராகேல் மரித்த பின்பு, யோசேப்பு தன் தகப்பனுக்கு விசேஷித்த வழிகளில் உதவி செய்து கொண்டிருக்கிறார் (ஆதி 37:2, 13-14).
பலவருணமான அங்கி என்பது மரியாதையையும், அந்தஸ்தையும் குறிக்கிறது. குடும்பத்தலைவர்களும், குடும்ப வாரிசுகளும் மட்டுமே பலவருண அங்கியை அணிவார்கள். யோசேப்பு தன்னுடைய சுதந்தரவீதத்தைச் சுதந்தரித்துக் கொண்டார் (1நாளா 5:1-2). அங்கி பலவருணமுடையது. இது பல துணிகளைச் சேர்த்துத் தைக்கப்பட்டதல்ல. ஆசாரியருடைய அங்கி போன்றது. இதைப் பல்வேறு வருண துணிகளில் அகலமான கோடுகள் போட்ட அங்கி என்று ஒருசிலர் கருதுகிறார்கள். ஒருவேளை இது சித்திரத்தையல் நிறைந்ததாகவும் இருக்கலாம்.
யாக்கோபு இப்போது முதிர்வயதிலிருக்கிறார். யோசேப்பு அவருக்கு மிகவும் ஆறுதலாயிருக்கிறார். யாக்கோபு யோசேப்பை அதிகமாய் நேசிப்பது, அவருடைய மற்ற குமாரருக்கு பிடிக்கவில்லை.
யாக்கோபு, தன்னுடைய குமாரர் எல்லோரையும் விட, யோசேப்பை அதிகமாய் நேசிக்கிறதை, யோசேப்பின் சகோதரர் காண்கிறார்கள். அவர்கள் யோசேப்போடே பட்சமாய்ப் பேசாமல், அவரைப் பகைக்கிறார்கள் (ஆதி 37:4).
தங்கள் தகப்பன் யோசேப்பை அதிகமாய் நேசிக்கிறதை அவர் சகோதரர் காண்கிறார்கள். இதனால் யோசேப்பின்மீது அவர்களுக்குப் பொறாமை உண்டாயிற்று. யாக்கோபு தன் பிள்ளைகளிடத்தில் பட்சபாதமாய் நடந்துகொள்கிறார். இது ஞானமுள்ள செயலல்ல. இதனால் பிள்ளைகளுக்கும் தங்கள் தந்தையின்மீது மரியாதை குறைவாகவே இருக்கிறது (ஆதி 37:31-34).
குடும்பத்தில் பிள்ளைகள்மீது பெற்றோர் பட்சபாதம் காண்பிக்கும்போது குழப்பம் உண்டாகும். (ஆதி 37:4-11,18-34) ஈசாக்கு, ரெபெக்காள் ஆகியோருடைய குடும்பத்தில் இதனால் குழப்பம் உண்டாயிற்று. (ஆதி 25:28; ஆதி 27:1-13, 35-38,41-46, யாக் 2:1-10)
யாக்கோபு யோசேப்பை அதிகமாய் நேசித்து அவருக்கு பல வருணமான அங்கியை செய்வித்துக்கொடுக்கிறார். ஆனாலும் அவர் இதுபோன்ற அங்கியை தன்னுடைய மற்ற குமாரருக்கு கொடுக்கவில்லை. இதனால் யாக்கோபின் குமாரருக்கு, யோசேப்பின்மீது கோபமும் பொறாமையும் உண்டாயிற்று.
யாக்கோபுக்கு பன்னிரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். அவர் யோசேப்பை தங்களைவிட அதிகமாய் நேசிப்பதை அந்த சகோதரர்கள் காண்கிறார்கள். இதனால் யாக்கோபின் குடும்பத்திலே குழப்பங்களும், பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் உண்டாயிற்று.
யாக்கோபு யோசேப்பை அதிகமாய் நேசிப்பதுபோல, யோசேப்பும் தன் தகப்பனாகிய யாக்கோபை அதிகமாய் நேசிக்கிறார். பில்காள், சில்பாள் ஆகியோர் யாக்கோபின் மறுமனையாட்டிகள். அவர்களுடைய குமாரர்கள் துன்மார்க்கராயிருக்கிறார்கள். அவர்கள் யாக்கோபுக்கு தெரியாமல் துன்மார்க்கம் பண்ணினாலும், யோசேப்பு அவர்களுடைய துன்மார்க்கத்தை யாக்கோபுக்கு சொல்லி வருகிறார். இதனால் அவர்களுக்கு யோசேப்பை பிடிக்கவில்லை. அவர்கள் யோசேப்பின்மேல் கோபமாயிருக்கிறார்கள்.
யோசேப்பின் சகோதரருக்கு அவர்மீது கோபம் இருந்தாலும், அவர்களால் யோசேப்புக்கு விரோதமாக ஒன்றும் செய்யமுடியவில்லை. யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபின் கூடாரத்திலே, அவரோடு கூடயிருக்கிறார். யோசேப்பு யாக்கோபோடு கூடயிருக்கும் வரையிலும் அவருடைய சகோதரர்களால் அவருக்கு விரோதமாக ஒன்றும் செய்யமுடியாது.
யோசேப்பு கண்ட சொப்பனங்கள்
ஆதி 37:5#11
ஆதி 37:5. யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
ஆதி 37:6. அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்.
ஆதி 37:7. நாம் வய-ல் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
ஆதி 37:8. அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்-, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
ஆதி 37:9. அவன் வேறொரு சொப்பனம் கண்டு தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
ஆதி 37:10. இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து; நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.
ஆதி 37:11. அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
யோசேப்பு சொப்பனம் காண்கிறார். இவை தீர்க்கதரிசனமான சொப்பனங்கள். யோசேப்பு கண்ட சொப்பனங்களைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. யோசேப்பு தான் கண்ட சொப்பனங்களை, தன்னுடைய சகோதரரிடத்தில் சொல்லுகிறார்.
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, ""நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள். நாம் வய-ல் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது'' (ஆதி 37:6,7) என்று சொல்லுகிறார்.
யோசேப்பின் சகோதரர் அவரை வணங்குவார்கள் என்பதே இந்த சொப்பனத்திற்கு அர்த்தம். யோசேப்பு சொப்பனம் கண்டதுபோலவே, அவருடைய சகோதரர்கள் அவரை வணங்கினார்கள். யோசேப்பு எகிப்து தேசத்திலிருந்தபோது, அவருடைய சகோதரர்கள் அங்கே தானியம் வாங்குவதற்காக வந்தார்கள். அப்போது அவர்கள் யோசேப்பை வணங்கினார்கள்.
யோசேப்பு மற்றொரு சொப்பனம் காண்கிறார். அவர் அந்த சொப்பனத்தை தன் சகோதரருக்கும், அதன் பின்பு அதை தன் தகப்பனுக்கும் சொல்லுகிறார். யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, ""நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது'' (ஆதி 37:9) என்று சொல்லுகிறார்.
யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி. அவர் ஒரு ராஜதந்திரியல்ல. எதை சொல்லவேண்டும், எதை சொல்லாமல் மறைக்கவேண்டும் என்பது யோசேப்புக்கு தெரியவில்லை. கர்த்தர் தனக்கு காண்பித்த சொப்பனங்களை, யோசேப்பு தன் சகோதரரிடத்தில் மறைக்காமல் சொல்லிவிடுகிறார்.
யோசேப்புக்கு ராஜதந்திரம் தெரிந்திருந்தால், தான் கண்ட சொப்பனங்களை, அவர் தன் சகோதரருக்கு இப்போது சொல்லியிருக்கமாட்டார். ஏற்ற காலம் வரும் வரையிலும் இந்த சொப்பனங்களை தன்னுடைய மனதிற்குள்ளே மறைத்து வைத்திருப்பார். யோசேப்பின் சகோதரர் ஏற்கெனவே அவரோடே பட்சமாய்ப் பேசாமல், அவரைப் பகைக்கிறார்கள்.
யோசேப்பு தான் கண்ட முதலாவது சொப்பனத்தை, தன் சகோதரருக்கு சொன்னபோது, அவர்கள் யோசேப்பைப் பார்த்து, ""நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ?'' (ஆதி 37:8) என்று சொல்லுகிறார்கள். அவர்கள் யோசேப்பை அவருடைய சொப்பனங்களின் நிமித்தமும், அவருடைய வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைக்கிறார்கள்.
யோசேப்பு தன்னுடைய இரண்டாவது சொப்பனத்தை தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, யோசேப்பின் தகப்பன் அவரைப் பார்த்து, ""நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ?'' (ஆதி 37:10) என்று சொல்லி யோசேப்பை கடிந்துகொள்கிறார்.
யோசேப்புக்கு இப்போது பதினேழு வயதுதான் ஆகிறது. அவருடைய சகோதரர்களோ யோசேப்பை விட வயதில் மூத்தவர்கள். ஆகையினால் அவர்கள் யோசேப்பின் சொப்பனத்தைக் கேட்டு, ""நீ எங்கள் மேல் துரைத்தனம்பண்ணுவாயோ, நீ எங்களை ஆளப்போகிறாயோ'' என்று கோபத்தோடு கேட்கிறார்கள். யோசேப்பு தனி மனிதனாயிருக்கிறார். அவருடைய சகோதரர்களோ அநேகராயிருக்கிறார்கள்.
யோசேப்பின் சகோதரர், அவர் கண்ட சொப்பனத்தினிமித்தம், அவரைக் கடிந்துகொண்டதுபோல, அவருடைய தகப்பனாகிய யாக்கோபும் அவரைக் கடிந்துகொள்கிறார். யோசேப்பின் சொப்பனம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா என்பது யாக்கோபுக்கு தெரியவில்லை. ஆனாலும் அவர் யோசேப்பு சொன்ன சொப்பனத்தை, தன் மனதிலே வைத்துக்கொள்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் தாயார், அவர் சொன்ன வார்த்தைகளை தன்னுடைய மனதிலே வைத்துக்கொண்டதுபோல, யாக்கோபும் யோசேப்பு சொன்ன வார்த்தைகளை தன் மனதிலே வைத்துக்கொள்கிறார். ""அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்'' (லூக் 2:51).
யாக்கோபு யோசேப்பின் வார்த்தைகளை மறக்கவில்லை. சமயம் வாய்க்கும்போதெல்லாம் யாக்கோபு அந்த வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறார். யோசேப்பு சொன்னது தீர்க்கதரிசன வார்த்தைகள். ஏற்ற வேளை வரும்போது அவர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறுகிறது. யோசேப்பின் சகோதரரோ, அவர் சொன்ன வார்த்தைகளின் நிமித்தம் அவர்மேல் பொறாமைப்படுகிறார்கள்.
""சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும்'' என்பது இங்கு அடையாளமாக சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன் யாக்கோபையும், சந்திரன் அவருடைய மனைவிகளையும், பதினொரு நட்சத்திரங்கள் அவருடைய பதினொரு குமாரர்களையும் குறிக்கும். (வெளி 12:1).
யாக்கோபு யோசேப்பைக் கடிந்துகொள்கிறார். யாக்கோபு ஞானமாகவோ அல்லது அறியாமையினாலோ கடிந்து கொள்கிறார். தன்னுடைய குமாரர் யோசேப்பின்மீது கொண்டிருக்கும் கோபம் தணிய வேண்டுமென்பதற்காக யாக்கோபு கோபப்பட்டிருக்கலாம்.
ராகேல் மரித்து விட்டாள். மனைவி மரித்த பின்பு அந்த மனைவியின் ஸ்தானம் யூதருடைய வழக்கத்தின் பிரகாரம் புருஷனுடைய மனைவிகளில் ஒருத்திக்கு வந்து சேரும். இங்கு தாயார் ஸ்தானம் லேயாளுக்கு வருகிறது.
யோசேப்பின் சகோதரர் அவர்மேல் பொறாமை கொள்கிறார்கள். பொறாமை கோபத்தை வளர்க்கும். விரோதம், கோபம், பகை, பொறாமை, பாவம் ஆகியவை சேர்ந்தே வரும். யோசேப்பின் சொப்பனத்தினால் அவருடைய சகோதரர் அவர்மீது பொறாமை கொண்டாலும் அவர் தெய்வீக வெளிப்பாட்டை உள்ளபடியே கூறிவிட்டார். எகிப்தில் வரப்போகிற பாடுகளைச் சந்திப்பதற்கு ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
யாக்கோபும் அவருடைய சகோதரரும்
ஆதி 37:12#22
ஆதி 37:12. பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப்போனார்கள்.
ஆதி 37:13. அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
ஆதி 37:14. அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்-, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
ஆதி 37:15. அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
ஆதி 37:16. அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
ஆதி 37:17. அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்தி-ருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
ஆதி 37:18. அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
ஆதி 37:19. ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்.
ஆதி 37:20. நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.
ஆதி 37:21. ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,
ஆதி 37:22. அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்-, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
யோசேப்பின் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப்போகிறார்கள் (ஆதி 37:12). யாக்கோபின் குடும்பத்தாருக்கு சீகேமியரின் தேசம் மிகவும் ஆபத்தான தேசம். சீகேம் தீனாளை தீட்டுப்படுத்தினதின் நிமித்தமாக சிமியோனும் லேவியும், ஏமோரின் பட்டணத்தின்மேல் பாய்ந்து, அங்கே இருந்த ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். அவர்களுடைய ஆடுமாடுகளையும் கொள்ளையிட்டார்கள். அவர்களுடைய ஸ்திரீகளையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்தார்கள் (ஆதி 34#ஆவது அதிகாரம்).
யாக்கோபின் குடும்பத்திற்கும், சீகேமியருக்கும் பழைய பகை இருக்கிறது. யாக்கோபு சீகேமியரோடு தங்கியிருக்க மனதில்லாமல், அந்த தேசத்திலிருந்து பெத்தேலுக்கு வந்திருக்கிறார். தேவனால் பயங்கரமுண்டானதினால், சீகேமியர் யாக்கோபின் குமாரரை பின்தொடரவில்லை (ஆதி 35:5).
இப்போது யாக்கோபின் குமாரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப்போயிருக்கிறார்கள். யாக்கோபு தன் குமாரரைக் குறித்து கரிசனையோடிருக்கிறார். அவர்கள் போயிருக்கிற ஊர் தங்களுக்கு பகைவராய் இருக்கிறவர்களுடைய ஊர். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதை யாக்கோபு அறிந்துகொள்ள விரும்புகிறார்.
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி, ""உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப்போகிறேன், வா'' (ஆதி 37:13) என்று சொல்லுகிறார். யோசேப்பு ""இதோ, போகிறேன்'' என்று சொல்லுகிறார்.
யாக்கோபு இப்போதிருக்கிற எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து சீகேம் வெகுதூரத்திலிருக்கிறது. யோசேப்பு பல மைல்கள் பிரயாணம்பண்ணி, தன்னுடைய சகோதரரைப் பார்க்கப்போகவேண்டும். யோசேப்பு தன் தகப்பனாருடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறார். அவர் யாக்கோபுக்கு மிகவும் பிரியமானவராகயிருந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேலையை செய்வதற்கு உடனே கீழ்ப்படிகிறார். யாக்கோபு யோசேப்பை அதிகமாய் நேசித்தாலும், யோசேப்பு யாக்கோபுக்கு உண்மையுள்ள வேலைக்காரராயிருக்கிறார். தன்னுடைய தகப்பனாருடைய கட்டளைக்கு யோசேப்பு உடனே கீழ்ப்படிகிறார்.
யோசேப்பின் சகோதரர் அவரோடே பட்சமாய்ப் பேசாமல் அவரைப் பகைக்கிறார்கள். அவர்கள் யோசேப்பின்மேல் பொறாமை கொள்கிறார்கள். ஆனாலும் யோசேப்பு அவர்கள்மீது அன்பாகயிருக்கிறார்.
யாக்கோபு யோசேப்பை நோக்கி, ""நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா'' என்று அவருக்குச் சொல்-, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து யோசேப்பை அனுப்புகிறார்; யோசேப்பு அந்தப்படியே சீகேமுக்குப் போகிறார் (ஆதி 37:14).
யாக்கோபு தன் குமாரருடைய úக்ஷமத்தில் அக்கரையுள்ளவராயிருக்கிறார். அந்த அக்கரை யோசேப்புக்கும் இருக்கிறது. தன் சகோதரர் தன்னைப் பகைக்கிறார்கள் என்பதற்காக, யோசேப்பு அவர்களைப் பகைக்கவில்லை. தன்னுடைய சகோதரருடைய úக்ஷமம் எப்படி என்பதை அறியும்படி, யோசேப்பு எபிரொன் பள்ளத்தாக்கிலிருந்து சீகேமுக்கு புறப்பட்டுப்போகிறார்.
சீகேமியர்கள் தன்னுடைய குடும்பத்தாரை பழிவாங்கும் வண்ணமாக, தன்னுடைய புத்திரரை அழித்துப் போட்டார்களா அல்லது அவர்கள் úக்ஷமமாக இருக்கிறார்களா என்பதை அறியும் ஆவல் யாக்கோபின் மனதிலிருக்கிறது. யாக்கோபின் புத்திரர் சீகேமியருக்கு தீங்கு செய்திருக்கிறார்கள். அவர்கள் பழைய பகையை மறந்துவிட்டார்களா அல்லது அதை இன்னும் நினைவில் வைத்திருந்து, தன்னுடைய குடும்பத்திற்கு விரோதமாக பகையோடிருக்கிறார்களா என்பது யாக்கோபுக்கு தெரியவில்லை.
யோசேப்பு தன்னுடைய தகப்பனாரின் கட்டளை பிரகாரம் எபிரொன் பள்ளத்தாக்கிலிருந்து சீகேமுக்குப்போகிறார். தன்னுடைய சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது மாத்திரமே யோசேப்புக்கு தெரியும். ஆனால் அவர்கள் சீகேமிலே எந்த ஊரிலிருக்கிறார்கள் என்பது யோசேப்புக்கு தெரியாது. யோசேப்பு அவர்களைத் தேடிப்போகிறார். யோசேப்புக்கு பாதை தெரியவில்லை. அவர் வழிதப்பி திரிகிறார்.
அப்பொழுது ஒரு மனிதன், யோசேப்பு வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, ""என்ன தேடுகிறாய்?'' என்று யோசேப்பைக் கேட்கிறான். அதற்கு யோசேப்பு, ""என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும்'' (ஆதி 37:15,16) என்று சொல்லுகிறார்.
அந்த மனுஷனுக்கு யோசேப்பின் சகோதரரைப்பற்றித் தெரிந்திருக்கிறது. கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலின் பிரகாரம், அந்த மனிதன் யோசேப்பை சந்திக்கிறான். யோசேப்போ பாதை தெரியாமல் வெளியிலே வழிதப்பி திரிகிறார். யோசேப்பை சரியான பாதையில் வழிநடத்துவதற்காக, கர்த்தர் அந்த மனிதனை யோசேப்பினிடத்திற்கு அனுப்புகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் சில சமயங்களிலே வழிதப்பி திரிகிறவர்கள் போல இருப்போம். நம்முடைய வாழ்க்கை பிரயாணத்தில் எங்கே போகவேண்டும் என்பதும், எப்படி போகவேண்டும் என்பதும் நமக்கு தெரியாது. அப்போது கர்த்தர் தம்முடைய தெய்வீக ஆலோசனைகளை நமக்கு சொல்லுவார். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துவார்.
அந்த மனிதன் யோசேப்பை நோக்கி, ""அவர்கள் இவ்விடத்தி-ருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன்'' (ஆதி 37:17) என்று சொல்லுகிறான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடிக்கிறார்.
தோத்தான் எகிப்துக்குப் போகும் பெருவழிப் பாதையிலுள்ளது. கிழக்கிலிருந்து பயணம் செய்கிறவர்கள் இந்த ஊரின் வழியாகச் செல்வார்கள் (ஆதி 37:17,28).
யோசேப்பு தன் சகோதரரை தேடிக்கண்டுபிடித்து, அவருடைய úக்ஷமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படியிருக்கிறது என்றும் பார்ப்பதற்கு வந்திருக்கிறார். ஆனால் யோசேப்பின் சகோதரர்களோ அவர்மீது இன்னும் கோபமாயும், பொறாமையாயும் இருக்கிறார்கள்.
யோசேப்பு தூரத்தில் வரும்போதே, அவருடைய சகோதரர்கள் அவரைக் காண்கிறார்கள். யோசேப்பு தங்களுக்கு சமீபமாய் வரும் முன்னே, அவரைக் கொலைசெய்யும்படி அவர்கள் சதியோசனைபண்ணுகிறார்கள். யோசேப்பின் சகோதரர் நன்மைக்கு தீமை செய்கிறார்கள். யோசேப்புக்கு தன் சகோதரர்மேல் கோபமோ பொறாமையோ இல்லை. ஆனால் அவர்கள் யோசேப்பை கொலைசெய்யும்படி சதிஆலோசனைபண்ணுகிறார்கள்.
யோசேப்பின் சகோதரர் ஒருவரை ஒருவர் நோக்கி, ""இதோ, சொப்பனக்காரன் வருகிறான். நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள் அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம்'' (ஆதி 37:19,20) என்று சொல்லுகிறார்கள்.
யோசேப்பின் பலவருண அங்கியை வைத்து, யோசேப்பின் சகோதரர் அவரை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
""சொப்பனக்காரன்'' என்னும் வார்த்தையில் இரண்டு எபிரெய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்று பாகால் மற்றொன்று கலோமே என்பதாகும். இதற்கு ""சொப்பனங்களுக்குச் சொந்தக்காரன்'' என்று பொருள். யோசேப்பிடம் சொப்பனங்களும், சொப்பனங்களுக்கு அர்த்தம் கூறும் தெய்வீக வரமும் இருக்கிறது. (ஆதி 37; ஆதி 40-41) யோசேப்பைப் போன்று தானியேலும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொன்னார். (தானி 1:17).
யோசேப்பிற்கு எதிராக அவருடைய சகோதரர்கள் தீமையான காரியங்களைச் செய்வதற்குச் சதி பண்ணுகிறார்கள் (ஆதி 37:20-21) அவர்கள் யோசேப்பின்மீது மிகுந்த பொறாமையும், கோபமும் கொண்டிருக்கிறார்கள்.
யோசேப்பு சொப்பனங்களைப் பற்றி கூறியது அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்திருக்கிறது. பொறாமை, சுயஇச்சை, பெருமை ஆகியவை துன்மார்க்கத்திற்கு வேராக இருக்கிறது.
யோசேப்பின் சகோதரருக்கு, தங்களைப் பார்க்க வந்திருக்கும் தங்கள் சகோதரன் யோசேப்பை வரவேற்க வேண்டும் என்னும் எண்ணமில்லை. தங்களுடைய அன்பையும், பாசத்தையும் அவரோடு பரிமாறிக்கொள்ளவேண்டும் என்னும் ஆர்வமுமில்லை. அவர்கள் யோசேப்பைக் கொன்றுபோடவேண்டும் என்றும், தங்களுடைய கொலைப்பழியை மறைக்கவேண்டும் என்றும் யோசனை பண்ணுகிறார்கள். துன்மார்க்கருடைய யோசனை எப்போதும் மோசமானதாகவே இருக்கும்.
யோசேப்பின் சகோதரரில் ரூபன் எல்லோருக்கும் மூத்தவனாயிருக்கிறான். யோசேப்பின்மீது கோபம் வரவேண்டுமென்றால், அந்தக்கோபம் ரூபனுக்குத்தான் அதிகமாய் வரவேண்டும். யாக்கோபின் புத்திரரில் ரூபனே சேஷ்டபுத்திரன்.
ரூபன் தன் தந்தையின் மறுமனையாட்டியுடன் சயனித்து விபசாரம் பண்ணினான். (ஆதி 35:22). தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடுவதற்காகவும், தன் தந்தையிடம் ஏற்கெனவே கெட்டுப்போன தன்னுடைய பெயரை மறுபடியும் நல்ல பெயராக மாற்றுவதற்காகவும் ரூபன் யோசேப்பை இந்தப் பிரச்சனையிலிருந்து விடுவிக்க முயற்சி செய்கிறான். ரூபன் தன்னால் முடிந்ததை செய்கிறான்.
ரூபன் யோசேப்பை தகப்பனிடத்திற்கு திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாக இருக்கிறான். (ஆதி 37:22) ஆனால் அவன் சகோதரர்களோ ரூபனைப் பற்றி தெரிந்து கொண்டு, ரூபனையும் ஏமாற்றி விடுகிறார்கள். (ஆதி 42:22) ரூபன் யாக்கோபின் மூத்த குமாரன். குடும்பத்தில் இவனுக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. தன் சகோதரர் தவறு செய்யும்போது மூத்த சகோதரன் அவர்களைக் கண்டித்து திருத்தவேண்டும்.
ரூபன் யோசேப்பைத் தன் சகோதரர் கையிலிருந்து உறுதியுடன் போராடி மீட்டிருக்க வேண்டும். ஆனால் ரூபன் இதில் எதையும் சரியாகச் செய்யவில்லை. யாக்கோபு தன் இறுதி காலத்தில் ரூபன்மீது பழி சுமத்துகிறார் (ஆதி 49:4).
யாக்கோபின் புத்திரர் யோசேப்பை கொலைசெய்யும்படி சதிஆலோசனை பண்ணும்போது, ரூபன் அந்த யோசனைக்கு எதிர்த்து நிற்கிறான். யோசேப்பை தன் சகோதரனுடைய கைக்கு தப்புவித்து, அவரைத் திரும்பவும் யாக்கோபிடத்திற்கு கொண்டுபோகவேண்டும் என்பது ரூபனுடைய விருப்பமாயிருக்கிறது.
ரூபன் தன் சகோதரரை நோக்கி, ""அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்'' (ஆதி 37:22) என்று சொல்லுகிறான். ரூபன் இவ்விதமாய் யோசேப்பை தன் சகோதரர்கள் கைக்குத் தப்புவிக்கிறான்.
யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பை கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணினாலும், அவர்களால் யோசேப்பை கொலைசெய்ய முடியவில்லை. யோசேப்பு இப்போது உயிரோடிருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது. கர்த்தருடைய சித்தத்திற்கு விரோதமாக யாராலும் கிரியை செய்ய முடியாது. யோசேப்பின் சகோதரர் அவரைக் கொலைசெய்யும்படி சதியோசனை பண்ணுகிறார்கள். கர்த்தரோ யோசேப்பின் மூலமாக, ஏராளமான ஜனங்கள் பஞ்சகாலத்திலே உயிர்பிழைக்க வேண்டுமென்று சித்தமுள்ளவராயிருக்கிறார்.
யோசேப்புக்கு ஆபத்து
ஆதி 37:23#30
ஆதி 37:23. யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
ஆதி 37:24. அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
ஆதி 37:25. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்தி-ருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப் போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.
ஆதி 37:26. அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
ஆதி 37:27. அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.
ஆதி 37:28. அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியி-ருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
ஆதி 37:29. பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
ஆதி 37:30. தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து; இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
யோசேப்பை வனாந்தரத்திலுள்ள ஒரு குழியிலே போட்டுவிடவேண்டுமென்று, அவருடைய சகோதரர்கள் சதியோசனை பண்ணுகிறார்கள். யோசேப்புக்கு அவர்களுடைய சதியோசனையைப்பற்றி ஒன்றும் தெரியாது. யோசேப்பு தன் சகோதரருடைய úக்ஷமத்தை விசாரிப்பதற்காக அவர்களிடத்தில் வருகிறார்.
அப்பொழுது யோசேப்பின் சகோதரர்கள், அவர் உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை கழற்றி, யோசேப்பை எடுத்து, அந்தக் குழியிலே போடுகிறார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருக்கிறது. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்காருகிறார்கள் (ஆதி 37:23#24).
யாக்கோபு தன் குமாரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாய் நேசித்து, அவருக்கு பல வருணமான அங்கியை செய்வித்திருக்கிறார். இதனால் யோசேப்பின் சகோதரர் அவரோடே பட்சமாய்ப் பேசாமல், அவரைப் பகைக்கிறார்கள். யாக்கோபு யோசேப்புக்கு கொடுத்த பல வருண அங்கியை, அவருடைய சகோதரர்கள், கழற்றிப்போடுகிறார்கள்.
யாக்கோபின் குமாரரில் யோசேப்பும் ஒருவர். ஆனால் யோசேப்பின் சகோதரரோ அவருடைய பல வருண அங்கியை கழற்றி, அவரை யாக்கோபின் குடும்பத்திலிருந்து கழற்றிப்போடுவதுபோல, அவரை அவமானப்படுத்துகிறார்கள். யோசேப்பின் பல வருண அங்கி அவருடைய புத்திரபாகத்திற்கும், யாக்கோபு அவர்மீது வைத்திருக்கிற அதிகமான அன்புக்கும் அடையாளமாயிருக்கிறது. யோசேப்பின் சகோதரரோ, அந்தப் பல வருண அங்கியை கழற்றிப்போட்டு, யோசேப்பை அவமானப்படுத்துகிறார்கள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை கல்வாரி சிலுவையிலே அறையும்போது, அவருடைய அங்கியையும் கழற்றினார்கள். ஒருவருடைய அங்கியை கழற்றுவது, அவருடைய கனத்தையும், சிலாக்கியங்களையும், மதிப்பையும், மரியாதையையும் அவரை விட்டு கழற்றிப்போடுவதற்கு அடையாளம்.
யோசேப்பின் சகோதரர், அவர் உடுத்திக்கொண்டிருந்த பல வருண அங்கியை கழற்றி, அவரை வனாந்தரத்திலுள்ள ஒரு குழியிலே போடுகிறார்கள். அவருக்கு அங்கே போஜனம் கிடையாது. யோசேப்பு அந்தக் குழியிலே கிடந்தால், பசியினாலும் பட்டினியாலும் மரித்துப்போவார். யோசேப்பின் சகோதரரை பொறாமை ஆளுகை செய்கிறது. அன்பும் கரிசனையும் அவர்களை விட்டு நீங்கிப்போகிறது. யோசேப்பின் சகோதரர் மனிதாபிமானமில்லாமல், அவரை குழியிலே தூக்கிப்போடுகிறார்கள்.
இந்தக்குழி தண்ணீரில்லாத வெறுங்குழி. பாலஸ்தீன தேசத்தில் இதுபோன்ற குழிகள் ஏராளமாக உள்ளன. இந்தக் குழிக்குள் விழுந்தவர்களால் தாங்களாக எழும்பி மேலே வரமுடியாது. பிறர் உதவி செய்து தூக்கிவிட்டால் மட்டுமே இவர்களால் வெளியே வரமுடியும். கைதிகளை அடைத்து வைப்பதற்கு அக்காலத்தில் இக்குழிகளைப் பயன்படுத்தினார்கள். (எரே 38:6, எரே 2:13; எரே 14:3; சக 9:11;சங் 28:1)
""உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?'' (நீதி 27:4).
யோசேப்பின் சகோதரர் அவருக்கு தீங்குசெய்தாலும், யோசேப்போ அவர்களுடைய úக்ஷமத்தை விசாரிப்பதற்காக வந்திருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், இந்த உலகத்திற்கு நன்மை செய்கிறவராகவே வந்தார். ஆனால் யூதர்களோ கிறிஸ்துவானவரை ஏற்றுக்கொள்ளாமல், அவரை கல்வாரி சிலுவையிலே அறைந்தார்கள்.
யோசேப்பு தன் சகோதரரைப் பார்ப்பதற்கு வந்த நோக்கம் வேறு. யோசேப்பின் சகோதரர் அவருக்கு செய்கிற காரியம் வேறு. இதுபோலவே நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும், நமக்கு நடைபெறும் காரியங்களும், தேவனுடைய நோக்கமும் ஒன்றுகொன்று வேறுபட்டு இருப்பதுபோல தெரியலாம். நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்தாலும், கர்த்தருடைய சித்தம் நம்முடைய ஜீவியத்தில் நிறைவேறாததுபோல தோன்றலாம். ஆனாலும் கர்த்தருடைய சித்தமே முடிவில் நிறைவேறும்.
யோசேப்பின் சகோதரர் அவரைக் குழியில்போட்டு, அவருக்காக வருத்தப்படவில்லை. தங்கள் சொந்த சகோதரனை குழியில் தூக்கிப்போட்டதற்காக அவர்கள் துக்கப்படவில்லை. அந்த சகோதரர்கள் எல்லோரும் யோசேப்பை தண்ணீரில்லாத வெறும் குழியிலே தூக்கிப்போட்டு, சிறிதும் வருத்தமில்லாமல், போஜனம் செய்யும்படி உட்காருகிறார்கள் (ஆதி 37:25).
யோசேப்பின் சகோதரருடைய மனதிலே பாவத்தைக் குறித்த குற்றவுணர்வு காணப்படவில்லை. அவர்களுடைய மனச்சாட்சி அவர்களைக் குற்றப்படுத்தவில்லை. அவர்கள் தங்கள் சகோதரனுக்காக வருத்தப்படாமல், தங்கள் போஜனத்தை ருசித்து புசிக்கிறார்கள். யோசேப்பு குழியிலே விழுந்து கிடப்பது, அவர்களுக்கு சந்தோஷமாயிருக்கிறது. அவர்கள் தங்கள் போஜனத்தை சந்தோஷமாய்ப் புசிக்கிறார்கள். பெரிய பாவம் செய்து விட்டு இறுமாப்பாய் இருக்கிறார்கள். அவர்கள் இருதயம் பாவம் செய்யுமாறு கடினப்பட்டிருக்கிறது.
யோசேப்பின் சகோதரர் தன்னை வணங்குவார்கள் என்று யோசேப்பு சொப்பனம் கண்டார். யோசேப்பு தங்களை ஆளுகை செய்வார் என்று அவருடைய சகோதரர்கள் நினைத்தார்கள். இப்போதோ அவர்கள் யோசேப்பை குழியிலே தூக்கிப்போட்டிருக்கிறார்கள். ஆகையினால் தாங்கள் எல்லோரும் யோசேப்பின் ஆளுகையிலிருந்து விடுதலை பெற்றிருப்பதாக நினைத்து, சந்தோஷமாய் போஜனம்பண்ணுகிறார்கள்.
யோசேப்பின் சகோதரர் போஜனஞ்செய்யும்படி உட்காருகிறார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ,கீலேயாத்தி-ருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் காண்கிறார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப் போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள் (ஆதி 37:25).
யோசேப்பின் சகோதரருக்கு, யோசேப்பை குழியிலே தூக்கிப்போட்டதினால் ஒரு லாபமும் கிடைக்கப்போவதில்லை. தங்களுடைய சகோதரனின் மரணத்தின் மூலமாக தங்களுக்கு ஏதாவது லாபம் கிடைக்கவேண்டுமென்று, அவர்களில் ஒருவனாகிய யூதா நினைக்கிறான்.
அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி, ""நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே'' (ஆதி 37:26,27) என்று சொல்லுகிறான். யோசேப்பின் சகோதரர் யூதாவின் சொல்லுக்கு இணங்குகிறார்கள்.
யூதா சொல்லுகிற பிரகாரமாக, யோசேப்பு மெய்யாகவே, அவர்களுடைய சகோதரனாகவும், அவர்களுடைய மாம்சமாகவும் இருக்கிறார். யோசேப்பை கொன்று, அவருடைய மாம்சத்தை மறைப்பதினால், அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை. யோசேப்பை இஸ்ரவேலருக்கு அடிமையாக விற்றுப்போட்டால், அவர்களுக்கு பணம் கிடைக்கும். இஸ்மவேலரும் யோசேப்பை அந்நிய தேசத்திற்கு அடிமையாக கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள்.
இஸ்மவேலரும், மீதியானியரும் (ஆதி 37:25-28) ஆபிரகாமிற்கு ஆகார், கெத்தூராள் ஆகியோர் மூலமாக வந்த சந்ததியார் ஆவார்கள். (ஆதி 16:11-12; ஆதி 25:2). சில பதிப்புக்களில் இஸ்மவேலர்கள் அரபியர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இதற்கான எபிரெய வார்த்தை ""அராப்'' என்பதாகும். இதற்கு பிணைப்படுதல் என்று பொருள். பல பிரிவினர்கள் சேர்ந்து பிணைக்கப் பட்டிருப்பதினால் இவர்களுக்கு இப்பெயர் வழங்கப்படலாயிற்று. மேலும் பாலைவனங்களில் பிரயாணம் பண்ணும்போது பாதுகாப்பின் நிமித்தமாக அவர்கள் சேர்ந்தே பிரயாணம் பண்ணுவது வழக்கம்.
பூர்வகாலத்தில் எகிப்து தேசத்திற்கும், பிற தேசங்களுக்கும் அதிகளவில் வியாபாரங்கள் நடைபெற்றன. எகிப்தியருக்குத் தேவைப்படும் பொருட்களை அரபியர்களே பல தேசங்களிலிருந்து கொண்டு வந்து விநியோகம் பண்ணுவது வழக்கம்.
எகிப்தில் அடிமைகள் வியாபாரம் நல்லமுறையில் நடைபெற்று வந்தது. அடிமைகளை நல்ல விலைக்கு எளிதில் விற்கமுடிந்தது. யோசேப்பின் சகோதரர்கள் தங்களுடைய மனச்சாட்சியைக் களங்கப்படுத்த விரும்பவில்லை. ஆகையினால் யோசேப்பை கொன்றுபோடாமல் விற்றுபோடலாம் என்று தீர்மானம் பண்ணுகிறார்கள். தேவன் இவர்கள் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இவர்களுடைய பாவங்களுக்கு தக்க தண்டனையைத் தருகிறார். தாங்கள் விதைத்ததை இவர்கள் அறுக்கிறார்கள் (ஆதி 42:1-45:15; ஆதி 50:15-21).
யோசேப்பை அடிமையாக விற்றுப்போட்டால், இனிமேல் அவரால் தன்னுடைய சகோதரரை ஆளுகை செய்ய முடியாது. தங்கள் எல்லோருக்கும் லாபம் கிடைக்கும் வண்ணமாக, யோசேப்பை இஸ்மவேலருக்கு விற்றுப்போடலாம் என்று யூதா சொல்லுகிறான். அவனுடைய ஆலோசனை மற்ற சகோதரருக்கு இணக்கமாகயிருக்கிறது. யோசேப்பின் சகோதரர் இவ்வாறு ஆலோசனை பண்ணும்போது ரூபன் அவ்விடத்தில் இல்லை.
அந்த வர்த்தகரான மீதியானியர் யோசேப்பின் சகோதரரை கடந்துபோகிறார்கள். அப்போது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியி-ருந்து தூக்கியெடுத்து, அவரை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போடுகிறார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போகிறார்கள் (ஆதி 37:28). யூதாவின் ஆலோசனை, அவருடைய சகோதரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
யோசேப்பு சுயநலமில்லாதவர். அவருடைய சகோதரர்களோ பேராசை பிடித்தவர்கள் (ஆதி 42:25-35). அவர்கள் காசுக்கு ஆசைப்பட்டு யோசேப்பை இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போடுகிறார்கள். இவர்களைப் போலவே யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போடுகிறான்.
யோசேப்பின் சகோதரரில் ரூபன் வயதில் மூத்தவனாயிருக்கிறான். யாக்கோபு தன்னுடைய குமாரரைக்குறித்து ரூபனிடத்தில்தான் விசாரிப்பார். ரூபன் யாக்கோபின் சேஷ்டபுத்திரன்.
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று காண்கிறான். ரூபன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வருகிறான்; ""இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன்'' (ஆதி 37:29,30) என்று ரூபன் தன் சகோதரரிடத்தில் கேட்கிறான்.
யோசேப்பை அவன் சகோதரர்கள் விற்று போட்டபோது, ரூபன் அங்கு இல்லை. ஆகையினால் இந்தப் பழியில் அவனுக்குப் பங்கில்லை. குழியில் யோசேப்பைத் தேடிபார்க்கிறான். அவனை அங்கு காணவில்லை. தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொள்கிறான். யோசேப்பை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமென்று ரூபன் முயற்சிபண்ணுகிறான் (ஆதி 37:34).
யாக்கோபு யோசேப்பைக் குறித்து ரூபனிடத்திலும் கேட்பார். யோசேப்பின் மற்ற சகோதரரிடத்திலும் கேட்பார். தங்கள் தகப்பனாருக்கு யோசேப்பைக் குறித்து என்ன சொல்லுவது என்று அவர்கள் எல்லோரும் ஒருமித்து யோசனைபண்ணி, முடிவுபண்ணுகிறார்கள்.
யாக்கோபின் துக்கம்
ஆதி 37:31#36
ஆதி 37:31. அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
ஆதி 37:32. பல வருணமான அந்த அங்கியை தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
ஆதி 37:33. யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி,
ஆதி 37:34. தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
ஆதி 37:35. அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
ஆதி 37:36. அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்க்கிறார்கள். அவர்கள் பல வருணமான அந்த அங்கியை தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்புகிறார்கள். ""இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும்'' என்று அவர்கள் யாக்கோபுக்கு சொல்லச்சொல்லுகிறார்கள் (ஆதி 37:31,32).
யோசேப்பின் சகோதரர் அவரை கொலைசெய்யும்படி சதிஆலோசனை பண்ணினார்கள். ஆனால் யோசேப்பு தங்களுடைய சகோதரனாகவும் தங்களுடைய மாம்சமாகவும் இருப்பதினாலும், யோசேப்பை கொலைசெய்வதினால் தங்களுக்கு லாபம் ஒன்றும் கிடைக்காது என்பதினாலும், அவர்கள் யோசேப்பை கொலைசெய்யவில்லை. யோசேப்பின் சகோதரர் அவரை இஸ்மவேலர் கையிலே இருபது வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்றுப்போடுகிறார்கள்.
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்க்கிறார்கள். இந்த பாவகாரியத்தில் ரூபனுக்கு எந்த அளவுக்குப் பங்குள்ளது என்று தெரியவில்லை. குற்றத்தை மறைப்பதற்கு யோசேப்பின் சகோதரர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ரூபன் எப்படி பங்குபெற்றான் என்பதும் விளக்கப்படவில்லை.
யோசேப்பின் சகோதரர் பல வருணமான அந்த அங்கியை தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்புகிறார்கள். யோசேப்பின் சகோதரர்கள் அங்கியை நேரடியாகக் கொண்டு வராமல் வேலைக்காரர்கள் மூலமாக அனுப்புகிறார்கள். அதன் பின்பு யோசேப்பின் சகோதரர்கள் வந்து தங்கள் தகப்பனுக்கு ஆறுதல் கூறுகிறார்கள் (ஆதி 37:35).
யோசேப்பின் சகோதரர் வேலைக்காரரிடம் ""தங்கள் சகோதரரின் அங்கியா'' என்று சொல்லி அனுப்புவதற்குப் பதிலாக ""இது உம்முடைய குமாரன் அங்கியோ'' என்று சொல்லச் சொன்னார்கள். பாவம் செய்கிறவன் தன் மனச்சாட்சியை மூடி மறைக்கிறான்.
""ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது'' என்று யாக்கோபு சொல்லுகிறார். யோசேப்பின் சகோதரர்கள் துஷ்டமிருகத்தைப் பற்றிப் பேசவில்லை. யாக்கோபே இப்படியொரு முடிவுக்கு வந்து விடுகிறார். யாக்கோபு துக்கத்தோடு ஜீவிப்பதை அவருடைய பிள்ளைகளும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விடுகிறார்கள்.
யோசேப்பின் சகோதரர் இந்தப் பாவத்தை மறைப்பதற்காக, தங்கள் தகப்பனாராகிய யாக்கோபிடத்தில் பொய்சொல்லுகிறார்கள். யோசேப்பை ஒரு துஷ்டமிருகம் பட்சித்துப்போட்டது என்றும், அதனால் அவர் பீறுண்டுபோனார் என்றும் அவர்கள் யாக்கோபை நம்ப வைக்கிறார்கள். ஒரு பாவத்தை மறைப்பதற்கு அவர்கள் மற்றொரு பாவத்தை செய்கிறார்கள். யாக்கோபு தங்களை சந்தேகப்படக்கூடாது என்பதில், யோசேப்பின் சகோதரர் மிகவும் கவனமாய் செயல்படுகிறார்கள்.
நாம் பாவம் செய்யும்போது, கர்த்தருடைய சமுகத்திலே நம்முடைய பாவத்தை அறிக்கை செய்தால், நமக்கு கர்த்தருடைய இரக்கம் கிடைக்கும். சாத்தானோ நம்முடைய பாவத்தை அறிக்கை செய்வதற்கு தடையாயிருப்பான். நம்முடைய பாவத்தை மறைப்பதற்கு சாத்தான் நம்மைத் தூண்டுவான். பாவத்தை மறைக்கிறவர்கள் வாழ்வடையமாட்டார்கள்.
யோசேப்பின் சகோதரர் அவருடைய அங்கியை, யாக்கோபிடத்தில் கொடுக்கிறார்கள். யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருக்கிறார் (ஆதி 36:33,34).
யாக்கோபு தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டிருக்கிறார். கிழக்குத் தேசத்தில் வஸ்திரங்களைக் கிழித்துக் கொள்வது துக்கத்திற்கு அடையாளம். பொன்னாபரணங்களையும், உயர்ந்த வஸ்திரங்களையும் களைந்து விடுவதும் இரட்டு உடுத்திக்கொள்வதும் துக்கத்திற்கு அடையாளமாகும்.
வஸ்திரங்களைக் கிழித்துக் கொள்வதற்கு கத்திகளைப் பயன்படுத்தினார்கள். வஸ்திரத்தின் வலது பக்கத்தில் கிழித்தால் அது சகோதரர், சகோதரி, மகன், மகள், மனைவி ஆகியோருக்காக ஏறெடுக்கும் துக்கமாகும். வஸ்திரத்தின் இடது பக்கமாக கிழித்தால் அது தந்தை, தாய், ஆகியோருக்காக ஏறெடுக்கும் துக்கமாகும்.
துக்க காலத்தில் அரையில் இரட்டு கட்டிக் கொள்ளும் வழக்கமும் இருந்தது. ஆடு அல்லது ஒட்டகத்தின் முடியினால் இரட்டு செய்தார்கள். தங்கள் வஸ்திரத்திற்கு மேலோ அல்லது உள்ளேயோ அல்லது வஸ்திரங்களுக்குப் பதிலாகவோ இரட்டு உடுத்திக் கொள்வது வழக்கம்.
பரிசுத்தவேதாகமத்தில், தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்ட ஒரு சிலரைப்பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. ரூபன் # யோசேப்பு காணாமல் போனதற்காக (ஆதி 37)
2. யாக்கோபு # யோசேப்பிற்காக (ஆதி 37:34)
3. யோசுவா # வேவுகாரரின் அறிக்கைக்காக (எண் 14:6)
4. யோசுவா # பாவத்திற்காக (யோசு 7:6)
5. யெப்தா # ஆணைக்காக (நியா 11:35)
6. போர்வீரன் # தோல்விக்காக (1சாமு 4:12)
7. சாமுவேல் # சவுலுக்காக (1சாமு 15:27)
8. போர்வீரன் # தோல்விக்காக (2சாமு 1:2)
9. தாவீதும், அவன் மனுஷரும் # தோல்வியைக் கேள்விப்பட்டபோது (2சாமு 1:11-12)
10. தாமார் # தான் கெடுக்கப்பட்டதற்காக (2சாமு 13:19)
11. தாவீது # அம்னோனின் மரணத்திற்காக (2சாமு 13:31)
12. ஊசாய் # அப்சலோமுக்காக (2சாமு 15:32)
13. ஆகாப் # தன் அழிவிற்காக (1இராஜா 21:17-27)
14. எலிசா # எலியா எடுத்துக்கொள்ளப் பட்டதற்காக (2இராஜா 2:12)
15. யோராம் # துர்ச்செய்திகளுக்காக (2இராஜா 5:7-8)
16. யோராம் # தாயார் தன் பிள்ளையைத் தின்றதற்காக (2இராஜா 6:28-30)
17. அத்தாலியாள் # அவள் அழிவிற்காக (2இராஜா 11:14)
18. எலியாக்கீம், சேப்னா # எசேக்கியாவிற்கு துர்ச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக (2இராஜா 18:37)
19. எசேக்கியா # துர்ச்செய்தியைக் கேட்டதற்காக (2இராஜா 19:1)
20. யோசியா # நியாயப்பிரமாணத்தை கேட்டதற்காக (2இராஜா 22:11,19)
21. எஸ்றா # இஸ்ரேல் பாழாய்போனதற்காக (எஸ்றா 9:3-5)
22. மொர்தெகாய் # யூதருடைய அழிவிற்காக (எஸ் 4:1)
23. யோபு # தன் பிள்ளைகளின் மரணத்திற்காகவும், தன் ஆஸ்திகளின் அழிவிற்காகவும் (மத் 26:65; மாற்கு 14:63)
24. யோபுவின் மூன்று நண்பர்கள் # பரிதாபத்தின் நிமித்தமாக (யோபு 2:12)
25. இஸ்ரவேலர்கள் # நியாயத்தீர்ப்பிற்காக (எரே 41:5)
26. பிரதான ஆசாரியர்கள் # இயேசு கிறிஸ்து தேவதூஷணம் சொன்னார் என்று நினைத்ததற்காக (மத் 26:65; மாற்கு 14:63)
27. அப்போஸ்தலர் # தங்களுக்கு பலிகளைச் செலுத்தியதற்காக (அப் 14:14)
28. அதிகாரிகள் # பிலிப்பியில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பிரசங்கம் பண்ணியதற்காக (அப் 16:22)
யாக்கோபு துக்கித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய குமாரர் குமாரத்திகள் எல்லோரும், அவருக்கு ஆறுதல் சொல்ல வந்து நிற்கிறார்கள். யாக்கோபின் துக்கத்திற்கு அவர்களுடைய குமாரர்களே காரணம். ஆனால் அவர்களோ உண்மையை மறைத்து யாக்கோபுக்கு முன்பாக மாய்மாலம் பண்ணுகிறார்கள்.
அவர்கள் மெய்யாகவே யாக்கோபுக்கு ஆறுதல் சொல்ல விரும்பினால், அவர்கள் யோசேப்பைபற்றிய உண்மையைச் சொல்லவேண்டும். அப்போது யாக்கோபு அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை, கிரயம் செலுத்தி மறுபடியும் மீட்டுக்கொள்வார். ஆனால் யாக்கோபின் குமாரரோ உண்மையைச் சொல்லாமல், அவருக்கு ஆறுதல் சொல்ல வந்து நிற்கிறார்கள்.
யாக்கோபு தன் குமாரனுக்காக அநேகநாள் துக்கித்துக் கொண்டிருக்கிறார். (ஆதி 37:34) அவருடைய குமாரர்கள் யாக்கோபோடு சேர்ந்து மாய்மாலமாக அநேகநாள் துக்கித்துக் கொண்டிருக்கிறார்கள். யாக்கோபிற்கு ஒரு குமாரத்தி மட்டுமே உண்டு. இந்த வசனத்தில் குமாரத்திகள் என்று கூறப்பட்டிருப்பது தன் குமாரரின் மனைவிகளைக் குறிக்கும். யாக்கோபு தன் தந்தையை ஆட்டுத்தோலைப் பயன்படுத்தி வஞ்சித்தார் (ஆதி 27:16) இப்பொழுது யாக்கோபு ஆட்டு ரத்தத்தினால் வஞ்சிக்கப்படுகிறார்.
ஆனாலும் யாக்கோபு ஆறுதலடையவில்லை. அவர் ஆறுதலுக்கு இடங்கொடாமல், துக்கத்தோடே இருக்கிறார். யாக்கோபு தன்னுடைய குமாரரையும் குமாரத்திகளையும் நோக்கி, ""நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன்'' (ஆதி 37:35) என்று சொல்லுகிறார். இவ்விதமாய் யோசேப்பினுடைய தகப்பன் யோசேப்புக்காக அழுதுகொண்டிருக்கிறார்.
இஸ்மவேலரும் மீதியானியரும் யோசேப்பை இருபது வெள்ளிக்காசுக்கு கிரயத்திற்கு வாங்கியிருக்கிறார்கள். அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றுப்போடுகிறார்கள் (ஆதி 37:36). யாக்கோபின் வீட்டிற்கு எகிப்து தேசம் அடிமைத்தன வீடாயிற்று.
இந்த வசனப்பகுதிகளில் மீதியானியர், இஸ்மவேலர் ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் ஒரே இனத்தவர்கள். அல்லது ஒரே தேசத்தில் குடியிருக்கிறவர்கள். இணைந்து வியாபாரம் செய்கிறவர்கள். (ஆதி 37:25,27,28,36; ஆதி 39:1).
மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றுப்போடுகிறார்கள். பிரதானி என்பதற்கான எபிரெய வார்த்தை ""சாரேக்'' என்பதாகும். இதற்கு அலி அல்லது காயடிக்கப்பட்டவன் என்று பொருள். இவன் அரண்மனையிலுள்ள பெண்கள் தங்கியிருக்கும் அந்தப்புரத்தைப் பாதுகாக்கிறவன்.
போத்திபார் ஒரு அலியாக அல்லது காயடிக்கப்பட்டவனாக இருந்த படியினால் அவனுடைய மனைவி அவனுக்கு விசுவாசமாக இல்லை. (ஆதி 39:10-13). கிழக்கு தேசத்தில் அலிகள்கூட பல மனைவிகளை விவாகம் செய்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குப் புத்திரபாக்கியம் எதுவும் இருக்காது.
போத்திபார் தலையாரிகளுக்கு அதிபதியாக இருந்தார். இவன் மரண தண்டனை கொடுக்கிறவர்களுக்குத் தலைவன். சண்டாளர்களின் தலைவன். போத்திபார் ராஜாவின் பிரியத்தை நிறைவேற்றுகிறவன். ராஜாவுக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால், அந்த ஆளைக் கொன்றுபோடும் பொறுப்பு போத்திபாருக்கு உள்ளது.
