36 அதிகாரம்

36 அதிகாரம்

ஏசாவின் வம்ச வரலாற்றைப்பற்றி இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏசாவின் சந்ததியார் ஏதோமியர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏசா ஈசாக்கின் குமாரன். அதனால் பரிசுத்த வேதாகமத்தில் ஏசாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏதோமியர் இஸ்ரவேல் தேசத்தாருக்கு அண்டை தேசத்தாராயிருக்கிறார்கள். ஆகையினால் இவர்களும் இஸ்ரவேலின் சரித்திரத்திலே இடம் பெற்றிருக்கிறார்கள்.

கர்த்தர் ஆபிரகாமுக்கு தம்முடைய வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார். ஆபிரகாம் ஜாதிகளுக்கும், தேசங்களுக்கும் தகப்பனாயிருப்பார்.

ஏசா ரெபெக்காளின் கர்ப்பத்திலிருந்தபோதே, கர்த்தர் ஏசாவைப்பற்றிய செய்தியைச் சொன்னார்.

""இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றி-ருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்'' (ஆதி 25:23).

ஏசாவின் மனைவிகள் (ஆதி 36:1#5). ஏசா சேயீர் மலையில் குடியேறுகிறார் (ஆதி 36:6#8). ஏசாவின் குமாரர்கள் (ஆதி 36:9#14).

ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்கள் (ஆதி 36:15#19). ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள் (ஆதி 36:20#30). ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்கள் (ஆதி 36:31#43).

இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற செய்திகள் 1நாளா 1:35#54 ஆகிய வசனங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏசாவின் வம்சவரலாறு

ஆதி 36:1#8

ஆதி 36:1. ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:

ஆதி 36:2. ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோ-பாமாளையும்,

ஆதி 36:3. இஸ்மலே-ன் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான்.

ஆதி 36:4. ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.

ஆதி 36:5. அகோ-பாமாள் எயூஷையும், யாலாமையும், கோராமையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர்.

ஆதி 36:6. ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.

ஆதி 36:7. அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது.

ஆதி 36:8. ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.

ஏசாவுக்கு ஏதோம் என்னும் மறுபெயருமுள்ளது. ஏசா ஏதோமியரின் தகப்பனாயிருக்கிறார். ஏசா தன்னுடைய சேஷ்டபுத்திரபாகத்தை அலட்சியம் செய்து, அதை தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபிடத்தில், சிவப்பு நிற கூழுக்காக விற்றுப்போட்டார். ஏசாவின் மதியீனத்தை நினைவுகூரும் வண்ணமாக, அவருக்கு ஏதோம் என்னும் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வசனப்பகுதியில் ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாற்றை பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது (ஆதி 36:1).

ஏசாவுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய விவரமும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏசாவின் மனைவிகள் அவருக்கு கானான் தேசத்திலே பிள்ளைகளைப் பெற்றார்கள்.

ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோ-பாமாளையும், இஸ்மலே-ன் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தார் (ஆதி 36:2,3).

ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள். அகோ-பாமாள் எயூஷையும், யாலாமையும், கோராமையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர் (ஆதி 36:4,5).

ஏசாவின் குமாரர்கள் கானான் தேசத்தில் பிறந்தார்கள். அவர்கள் கானான் தேசத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். (ஆதி 36:6). யாக்கோபின் குமாரர்கள் கானான் தேசத்திற்கு வெளியே பிறந்தார்கள். அவர்கள் கானான் தேசத்திற்குள் வந்து குடியேறினார்கள்.

ஏசா சேயீர் மலையில் குடியேறுகிறார். கர்த்தர் ஏசாவுக்கு சேயீர் மலை தேசத்தை சுதந்தரமாக கொடுத்திருக்கிறார். கானான் தேசம் யாக்கோபின் சந்ததியாருக்கு சுதந்தர தேசமாக வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. ஆகையினால் ஏசாவுக்கு கானான் தேசத்தில் பங்கும் சுதந்தரமுமில்லை. கர்த்தர் ஏசாவுக்கு சேயீர் மலைத்தேசத்தை கொடுத்து அவரை ஆசீர்வதிக்கிறார்.

""அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்'' (உபா 2:5).

""ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்'' (யோசு 24:4).

கர்த்தர் ஏசாவுக்கு சேயீர் மலைத்தேசத்தை சுதந்தரமாகக் கொடுத்திருப்பதினால், ஏதோமியர் அத்தேசத்தில் தங்கியிருக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் ஏதோமியருக்கு விரோதமாகப் போர் செய்யக்கூடாது.

ஏசா தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து, கானான் தேசத்தை விட்டு வேறே தேசத்திற்குப்போகிறார். ஏசாவுக்கு சொந்தமானது எதுவும் கானான் தேசத்தில் இல்லை. ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு கானான் தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகிறார் (ஆதி 36:6).

ஏசா சேயீருக்குப் போகிறார் (ஆதி 36:8). கானான் தேசத்தை விட்டு புறப்பட்ட ஏசாவின் இந்தப் பிரயாணம் இறுதி பிரயாணமாக இருக்கலாம். ஏசா ஏற்கெனவே ஓரியரை வென்று, சேயீரைக் கைப்பற்றியிருக்கிறார். கானானிலுள்ள தன் மந்தைகளை ஏசா இன்னும் மேய்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருக்கிறது. ஈசாக்கின் மரணத்திற்குப் பின்பு ஏசா இறுதியாக கானான் தேசத்தை விட்டு புறப்பட்டு போய் விடுகிறார். யாக்கோபின் சம்பத்து அதிகமாயிருப்பதுபோல, ஏசாவின் சம்பத்தும் அதிகமாயிருக்கிறது.

யாக்கோபும் ஏசாவும் ஒரே தேசத்திலிருந்தால், அந்த தேசம் அவர்களை தாங்காது. அவர்களால் வளர்ச்சி பெறவும் முடியாது. கர்த்தர் யாக்கோபுக்கு கானான் தேசத்தை சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறார். ஏசா தன்னுடைய சம்பத்துக்களெல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு கானான் தேசத்தைவிட்டு புறப்பட்டு சேயீர் மலைக்குப்போகிறார். ஏசா தன் குடும்பத்தார் எல்லேரோடும் சேயீர் மலையிலே குடியேறுகிறார் (ஆதி 36:8).

ஏசாவின் குமாரர்

ஆதி 36:9#19

ஆதி 36:9. சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,

ஆதி 36:10. ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.

ஆதி 36:11. எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.

ஆதி 36:12. திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.

ஆதி 36:13. ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.

ஆதி 36:14. சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோ-பாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள்.

ஆதி 36:15. ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு.

ஆதி 36:16. கோராகு பிரபு, கத்தாம் பிரபு,அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.

ஆதி 36:17. ஏசாவின் குமாரனாகிய ரெகுவே-ன் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவே-ன் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.

ஆதி 36:18. ஏசாவின் மனைவியாகிய அகோ-பாமாளின், குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோ-பாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

ஆதி 36:19. இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களி-ருந்த பிரபுக்கள்.

ஏசாவின் குமாரரைப்பற்றியும், அவருடைய குமாரரின் குமாரரைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய பெயர்கள் மாத்திரமே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய சரித்திரத்தைப்பற்றி இந்த வசனப்பகுதியில் ஒன்றும் சொல்லப்படவில்லை.

ஏசாவுக்கு அநேக குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வம்சவரலாற்றைப்பற்றிச் சொல்லும்போது, மூன்று அல்லது நான்கு சந்ததிகளைப்பற்றி மாத்திரமே இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வம்சவரலாற்றைப்பற்றி அதற்குமேல் ஒன்றும் சொல்லப்படவில்லை.

யாக்கோபின் சந்ததியார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தாகயிருக்கிறார்கள். கானான் தேசம் அவர்களுக்கு சுதந்தரதேசமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில், யாக்கோபின் வம்சவரலாற்றைப்பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் யாக்கோபின் சந்ததியில் வந்திருக்கிற எல்லா கோத்திரத்தாரைப்பற்றியும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஏசாவின் வம்சவரலாற்றில் ஒரு சில சந்ததிகளைப்பற்றி மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது. யாக்கோபின் வம்சவரலாற்றிலோ, இயேசுகிறிஸ்துவின் பிறப்பு வரையிலும் வரிசையாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஏசாவின் குமாரரும், அவருடைய குமாரரின் குமாரரும் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கீழே யுத்தவீரர்கள் இருந்தார்கள். ஏசா வேட்டையாடுவதில் வல்லவர். அவர் ஒரு வனசஞ்சாரி. ஏசாவும் அவருடைய குடும்பத்தாரும் பட்டயங்களை பயன்படுத்துகிறவர்கள்.

""உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து,உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியைமுறித்துப்போடுவாய் என்றான்'' (ஆதி 27:40).

ஏசாவின் புத்திரர் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் யுத்தவீரர்களாகவும் பராக்கிரமசாலிகளாகவும், படைத்தளபதிகளாகவும் இருக்கிறார்கள். யாக்கோபின் புத்திரரோ ஆடுகளை மேய்க்கிற மேய்ப்பராயிருக்கிறார்கள். யாக்கோபின் புத்திரர் மிகவும் சாதாரணமான உத்தியோகம் பார்க்கிறார்கள்.

""பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னான்'' (ஆதி 47:3).

யாக்கோபின் புத்திரர் மந்தை மேய்க்கிறவர்களாயிருந்தாலும், அவர்களே கர்த்தருடைய வாக்குத்தத்தின் ஜனமாயிருக்கிறார்கள். இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவு பெரிய பெயர்களும், பட்டங்களும், பதவிகளும் இருந்தாலும், நமக்கு கர்த்தருடைய கிருபையும், ஆசீர்வாதமும், அநுக்கிரகமும் இல்லையென்றால், நமக்கு ஒரு நன்மையுமில்லை.

ஆகையினால் கர்த்தருடைய ஜனமாகிய நாம் பதவிகளையும் பட்டங்களையும் தேடி அலையக்கூடாது. கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கவேண்டும். அவரே நம்மைப் புகழவேண்டும். நாம் புகழ்ச்சியை எதிர்பார்க்கக்கூடாது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, இந்த உலகத்திற்கு ஊழியம் கொள்ளவராமல், ஊழியம் செய்வதற்காகவே வந்தார்.

ஏசாவின் ஐசுவரியம் பலுகிப்பெருகுகிறது. யாக்கோபு விருத்தியடைவதற்கு முன்பாகவே ஏசா விருத்தியடைகிறார். கர்த்தர் யாக்கோபுக்கு ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களை சொல்லியிருக்கிறார். ஆனால் அவை அவருக்கு தாமதமாகவே நிறைவேறுகிறது. கர்த்தருடைய ஆசீர்வாதம் யாக்கோபுக்கு தாமதமாக கிடைத்தாலும், அது அவருக்கு நிலைத்திருக்கிறது.

நாம் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசரப்படக்கூடாது. கர்த்தர் தமக்கு சித்தமான வேளையில் நம்மை ஆசீர்வதிக்கவேண்டுமென்று, நாம் பொறுமையோடு காத்திருக்கவேண்டும். கர்த்தர் வாக்குமாறாதவர். அவர் தம்முடைய வாக்குத்தத்த வார்த்தைகளை மறந்துவிடுகிறவரல்ல.

ஏசாவின் புத்திரரைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும், ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர் (ஆதி 36:9,10).

சேயீர் பர்வதங்கள் சவக்கடலின் தென்கிழக்கு பகுதியிலிருந்து அரபிய வளைகுடா வரையிலும் பரவியிருக்கிறது. ஈசாக்கு ஏசாவைப் பார்த்து ""உன் பட்டயத்தினால் நீ பிழைப்பாய்'' என்று முன்னறிவித்தார். அது நிறைவேறிற்று. (ஆதி 27:39-40).

எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர் (ஆதி 36:11,12).

ஏதோமிலுள்ள ஒரு பட்டணத்திற்கும், ஒரு மாகாணத்திற்கும் தேமான் என்னும் பெயர் வழங்கப்படலாயிற்று. (ஆதி 36:15; ஒப 1:9; ஆமோ 1:12; எசே 25:13). எலிப்பாஸ் தேமானின் தந்தை. இவன் யோபுவைக் காண்பதற்காக தேமானிலிருந்து புறப்பட்டுச் சென்றான் (யோபு 2:11).

திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெறுகிறாள். ஆதி 14:7 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் அமலேக்கியரின் முற்பிதா இவனல்ல. அவர்கள் இராட்சத சந்ததியார். (எண் 13:29; எண் 14:39-45) (எண் 24:20). ஏதோமியரின் அமலேக்கியர் இராட்சதரிலிருந்து வேறுபட்டவர்கள். ஆனாலும் இவர்களும் இஸ்ரவேலரின் விரோதிகள். எனவே இவர்களும் கானான் தேசத்திலிருந்து துரத்தப்பட வேண்டியவர்களாக இருந்தார்கள்.

ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர். சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோ-பாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள் (ஆதி 36:13,14).

ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு. கோராகு பிரபு, கத்தாம் பிரபு,அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள் (ஆதி 36:15,16).

ஏசா அல்லது ஏதோமின் மூன்று மனைவிகள் மூலமாக 14 பிரபுக்கள் பிறக்கிறார்கள். ஆயிரம் பேருக்கு தலைவனாக இருக்கிறவனை பிரபு என்று அழைப்பது வழக்கம்.

ஏசாவின் குமாரனாகிய ரெகுவே-ன் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவே-ன் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள் (ஆதி 36:17).

ஏசாவின் மனைவியாகிய அகோ-பாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோ-பாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள். இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களி-ருந்த பிரபுக்கள் (ஆதி 36:18,19).

ஓரியர்

ஆதி 36:20#30

ஆதி 36:20. அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,

ஆதி 36:21. திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

ஆதி 36:22. லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.

ஆதி 36:23. சோபா-ன் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ,ஓனாம் என்பவர்கள்.

ஆதி 36:24. சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன் தான்.

ஆதி 36:25. ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோ-பாமாள் என்பவர்கள்; இந்த அகோ-பாமாள் ஆனாகின் குமாரத்தி.

ஆதி 36:26. திஷோனுடைய குமாரர், எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.

ஆதி 36:27. ஏத்சேருடைய குமாரர், பில்கான்,சகவான், அக்கான் என்பவர்கள்.

ஆதி 36:28. திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

ஆதி 36:29. ஓரியரின் சந்ததியிலே தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,

ஆதி 36:30. திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.

இந்த வசனப்பகுதியில் ஏதோமியரின் வம்சவரலாற்றைப்பற்றிச் சொல்லும்போது, இடையிலே ஓரியரின் வம்சவரலாற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓரியரும் கானானியர்கள். இவர்கள் சேயீர் மலையிலே வாசம்பண்ணுகிறவர்கள். ஓரியர் ஏத்தியர் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

ஜலப்பிரளயத்திற்குப் பின்பு மனுஷ குமாரத்திகளுக்கும், தேவபுத்திரருக்கும் இராட்சதர்கள் பிறந்தார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் ஓரியர் எனப்பட்டார்கள் (ஆதி 14:6) இவனுடைய தந்தை சேயீர். (ஆதி 36:20). இவர்களுடைய நிலம் சேயீர் மலை என்று அழைக்கப்பட்டது. (ஆதி 14:6) இதன்பின்பு அது ஏதோமின் தேசமாயிற்று. (ஆதி 32:3).

சேயீருக்கு ஏழு குமாரர்கள் இருந்தார்கள் (ஆதி 36:20-21). அவர்கள் ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள் என்று அழைக்கப்பட்டார்கள் (ஆதி 36:21,29-30). இந்த ஏழு பிரபுக்களுக்கு 19 குமாரர்களும், ஒரு குமாரத்தியும் இருந்தார்கள். இவர்களுடைய அட்டவணை ஆதி 36:22-28 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. சேயீரின் குமாரத்தியும் பிரபலமானவள். ஆகையினால் இவளுடைய பெயரும் அட்டவணையில் காணப்படுகிறது. (ஆதி 36:22).

ஆதி 36:20-21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் பிரதானிகள் ஏசா அந்த தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு முன்பாக ஆட்சி புரிந்தவர்களாக இருக்கலாம். இஸ்ரவேல் தேசத்தார் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ஏசா சேயீர் மலையைக் கைப்பற்றிவிட்டார். இதனால் ஆதி 27:39-40 ஆகிய வசனத்தில் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது.

ஏதோமின் பர்வதங்களில் ஏராளமான குகைகள் இருந்தன. ஓரியர்கள் இவற்றில் வசித்து வந்தார்கள். பெத்ரா, சேலா ஆகியவை பாறைகளுக்குள் செதுக்கிக் கட்டப்பட்ட பட்டணமாகும். இது பின்பு ஏதோமின் தலைநகரமாயிற்று. இது அவர்களுடைய வலுவான கோட்டை. மலைகளுக்கு நடுவில் செதுக்கப்பட்ட கோவில்களும், வீடுகளும் இன்றும் உள்ளன. பெத்ராவில் சுற்றிலுமுள்ள குகைக்கோயில்கள் இன்னும் அழியாமல் புதியவை போன்றுள்ளன. பழங்காலத்தில் பெயர் பெற்று விளங்கின இந்த இடம் கடைசி நாட்களில் மறுபடியும் முக்கியத்துவம் பெறும்.

""ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்'' (ஆதி 26:34).

ஏதோமியரும் ஓரியரும் பெண் கொடுத்து, பெண் எடுத்து, தங்களுக்குள்ளே திருமணம் செய்துகொள்கிறார்கள். இதன் மூலமாக ஏதோமியரின் சந்ததியில், ஓரியரும் கலந்திருக்கிறார்கள்.

ஏசா தன்னுடைய சேஷ்டபுத்திரபாகத்தை யாக்கோபுக்கு விற்றுப்போட்டார். ஏசா ஈசாக்கின் விசேஷித்த ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஏசா ஏத்தியரோடும், அவருடைய பின்சந்ததியாரோடும் உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஏசாவும் அவருடைய குடும்பத்தாரும் சேயீர் மலையில் குடியேறியபோது, அங்கே குடியிருக்கிற ஓரியரோடு சம்பந்தம் கலக்கிறார்கள். இதனால் ஒரியரும் ஏத்தியரும் கலப்பு இனமாக மாறுகிறார்கள்.

இந்த வசனப்பகுதியில் சேயீர் மலைத்தேசத்தில் குடியிருக்கிற ஓரியரின் வம்சவரலாற்றைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோமியரின் புத்திரர் பிரபுக்கள் என்று அழைக்கப்பட்டதுபோல, ஓரியரின் புத்திரரும் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சேயீர் மலைத்தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள் (ஆதி 36:20,21).

லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். சோபா-ன் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ,ஓனாம் என்பவர்கள் (ஆதி 36:22,23).

சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன் தான். ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோ-பாமாள் என்பவர்கள்; இந்த அகோ-பாமாள் ஆனாகின் குமாரத்தி (ஆதி 36:24,25).

கோவேறு கழுதைகள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூலபாஷை வார்த்தை ""எம்மிம்'' என்பதாகும். இதற்கு சில மொழிபெயர்ப்புக்களில் ""வெந்நீர் நீரூற்றுகள்'' என்றும், வேறுசில மொழிபெயர்ப்புக்களில் ""எமீம்'' அல்லது ""இராட்சதர்'' என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

கோவேறு கழுதை என்று பொருள்படும் எபிரெய வார்த்தை ""பேரத்'' என்பதாகும். ஆனாகு கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்தானா அல்லது வெந்நீர் நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தானா அல்லது இராட்சதரைக் கண்டுபிடித்தானா என்று தெளிவாகத் தெரியவில்லை. இந்த மூன்றில் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்து ஆனாகு பிரபலமானான்.

திஷோனுடைய குமாரர், எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். ஏத்சேருடைய குமாரர், பில்கான்,சகவான், அக்கான் என்பவர்கள். திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள் (ஆதி 36:26#28).

ஓரியரின் சந்ததியிலே தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு, திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள் (ஆதி 36:29,30).

ஏதோம் தேசத்து ராஜாக்கள்

ஆதி 36:31#39

ஆதி 36:31. இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன:

ஆதி 36:32. பெயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.

ஆதி 36:33. பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்.

ஆதி 36:34. யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.

ஆதி 36:35. உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.

ஆதி 36:36. ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

ஆதி 36:37. சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

ஆதி 36:38. சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

ஆதி 36:39. அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்றுபேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.

சேயீர் மலைத்தேசத்தில் ஏதோமியரும் ஓரியரும் கலந்து குடியிருக்கிறார்கள். ஆனாலும் ஏதோமியர் ஓரியரை மேற்கொண்டு, சேயீர் மலைத்தேசம் முழுவதையும் தங்களுடைய ஆளுகைக்கு கீழ்ப்படுத்துகிறார்கள். ஏதோம் தேசத்திலே ராஜாக்கள் இருக்கிறார்கள். ஏதோமியரின் ராஜாக்கள் சந்ததி பரம்பரையாக வருவதில்லை என்றும், அவர்கள் பிரபுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ராஜாக்கள் அரசாண்டார்கள் (ஆதி 36:31). யாக்கோபின் சந்ததியிலே ராஜாக்கள் தோன்றுவதற்கு முன்பே, ஏசாவின் சந்ததியிலே ராஜாக்கள் தோன்றுகிறார்கள்.

மோசே ஆதியாகமத்தை எழுதியபோது இஸ்ரவேல்மீது எந்த ராஜாவும் ஆளுகை செய்யவில்லை. எகிப்து தேசத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய ஜாதி கூட்டமாக வளர்ச்சி பெற்று ராஜாவின் கண்களில் பட்டார்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடைய சந்ததியில் ராஜாக்கள் தோன்றுவார்கள் என்று தேவன் அவர்களுக்குக் கூறியிருந்தார்.

இஸ்ரவேலில் ராஜாக்கள் இருப்பார்கள் என்பது தேவனுடைய மனதில் பூர்வகாலத்திலேயே இருக்கிறது (ஆதி 17:6,16; ஆதி 35:11). மோசே நியாயப் பிரமாணத்தை எழுதிய போது இஸ்ரவேல் தேசத்தில் ராஜாக்கள் இருப்பது போலப் பாவித்து, ராஜ்ஜியம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றி எழுதியிருக்கிறார். (உபா 17:14-20; உபா 28:36)

கானான் தேசத்தில் குடியிருக்கிற யாக்கோபின் சந்ததியார் ஏதோமியரைப்பற்றி கேள்விப்படுகிறார்கள். அவர்களுடைய செல்வத்திரட்சிகளைப் பற்றியும் அதிகாரங்களைப்பற்றியும், வல்லமைகளைப்பற்றியும், ராஜாக்களைப் பற்றியும் கேள்விப்படுகிறார்கள். ஏதோமியரைப்போல, யாக்கோபின் சந்ததியாராகிய இஸ்ரவேலருக்கு செல்வசெழிப்புமில்லை, பலமும் பராக்கிரமமுமில்லை, ராஜாக்களும் இல்லை. இஸ்ரவேல் ஜனத்தார் ஏதோமின் ராஜாக்களைப்பார்த்து சோர்ந்துபோகிறார்கள்.

ஏதோமியரின் ராஜாக்கள் சேயீர் மலைத்தேசத்தை ஆளுகை செய்யும்போது, இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே அடிமைகளாயிருக்கிறார்கள். கர்த்தருடைய வாக்குத்தத்தம் யாக்கோபின் சந்ததிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏசாவின் சந்ததியார் ராஜாக்களாகவும், யாக்கோபின் சந்ததியார் அந்நிய தேசத்திலே அடிமைகளாகவும் இருக்கிறார்கள்.

கர்த்தருடைய வாக்குத்தத்தம் அவருக்கு சித்தமான வேளையிலே நிறைவேறும். அந்தக்காலம் வரும் வரையிலும் கர்த்தருடைய ஜனம் பொறுமையோடு காத்திருக்கவேண்டும். கர்த்தருக்காக காத்திருக்கிறவர்கள் புதுப்பெலன் அடைவார்கள். கர்த்தருடைய வேளையே அவருடைய ஜனத்திற்கு ஏற்ற வேளை.

இந்த வசனப்பகுதியில் ஏதோமியரின் ராஜாக்களைப்பற்றியும் வரிசையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களைப்பற்றிய விவரம் வருமாறு:

பெயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர். பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான். யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான் (ஆதி 6:32#34).

""போஸ்றா'' என்னும் பட்டணம் ஏதோமின் பூர்வகாலத்து தலைநகரம். இது மலையின்மீது அமைந்துள்ள பட்டணம். போஸ்றா பட்டணம் சவக்கடலுக்கு தென் கிழக்காக 25 மைல் தூரத்தில் உள்ளது. மோவாபின் போஸ்றாவும் இந்தப் போஸ்றாவும் ஒன்றல்ல. வெவ்வேறானவை.

உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர் (ஆதி 36:35).

ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான். சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான் (ஆதி 36:36#38).

அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்றுபேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள் (ஆதி 36:39).

ஆதாரின் மறுபெயர் ஆதாத் என்பதாகும் (1நாளா 1:50-51). ஆதாத் மரித்து விட்டான் என்று மோசே கூறவில்லை. ஏதோம் வழியாக இஸ்ரவேல் பிரயாணம் பண்ணுவதற்கு ஏதோமியர் மறுத்தபோது ஆதாத் ஏதோமின் ராஜாவாக இருந்திருக்கலாம். நாளாகம ஆசிரியர் ஆதாத் மரித்து விட்டான் என்று எழுதியிருக்கிறார். மோசே பஞ்சாகமம் எழுதிய போது ஆதாத் உயிரோடு இருக்கிறார். நாளாகமம் எழுதப்பட்டபோது ஆதாத் மரித்து விட்டார்.

ஏதோமியரை ராஜாக்கள் சிறிதுகாலம் ஆட்சிசெய்கிறார்கள். அதன்பின்பு ஏதோமியரின் பிரபுக்கள் அவர்களை ஆளுகை செய்கிறார்கள்.

ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள்

ஆதி 36:40#43

ஆதி 36:40. தங்கள் பற்பல வம்சங்களின் படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு,

ஆதி 36:41. அகோ-பாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

ஆதி 36:42. கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிம்சார் பிரபு,

ஆதி 36:43. மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

ஏதோம் தேசத்திலே ராஜாக்கள் ஆட்சிசெய்யும்போது, அந்த தேசத்தின் ஒரு பகுதியை பிரபுக்களும் ஆட்சி செய்கிறார்கள். ஏதோமின் பிரபுக்களைப்பற்றி யாத்திராகமம் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

""ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசா-களை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள். பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்'' (யாத் 15:15,16).

சேயீர் மலைத்தேசம் ஏசாவின் சந்ததியாருக்கு சொந்தமான தேசம். ஏதோமியர் சேயீர் மலைத்தேசத்திலே குடியிருக்கிறார்கள். கர்த்தர் யாக்கோபின் புத்திரருக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்த தேசமாக கொடுத்திருக்கிறார். இக்காலத்தில் கானான் தேசம் இஸ்ரவேல் புத்திரருக்கு வாக்குத்தத்த தேசமாக மாத்திரமே இருக்கிறது. இப்போது கானான் தேசம் அவர்களுக்கு குடியிருப்பு தேசமாகயில்லை. இக்காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே அடிமைகளாய் குடியிருக்கிறார்கள். ஏதோமின் புத்திரரோ தங்களுக்கு சொந்த தேசமான சேயீர் மலைத்தேசத்தில் குடியிருக்கிறார்கள்.

இக்காலத்தில்கூட, உலகப்பிரகாரமான ஜனங்கள், ஏதோமியரைப்போல இந்த உலகத்தில் வசதியாய் ஜீவிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. விசுவாசிகளாகிய நாமோ, யாக்கோபின் சந்ததியாரைப்போல ஏழைகளாக ஜீவிக்கிறோம். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே, ஒரு வசதியுமில்லாமல் அடிமைகளாயிருந்ததுபோல, நாமும் இந்த உலகத்திலே எந்த வசதிகளும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.

விசுவாசிகளாகிய நமக்கு உலகப்பிரகாரமான வசதிகள் குறைவாகயிருந்தாலும், ஆவிக்குரிய நன்மைகளும், வாக்குத்தத்தங்களும், நம்பிக்கையும் அதிமாகயிருக்கிறது. உலகப்பிரகாரமான ஜனங்களுக்கோ ஆவிக்குரிய நன்மைகளும் இல்லை, வாக்குத்தத்தங்களும் இல்லை, நம்பிக்கையும் இல்லை.

""அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்'' (லூக் 16:25).

சேயீர் மலையை சொந்தமாகப் பெற்றிருப்பதைவிட கானான் தேசத்தை ஆசீர்வாதமாகப் பெற்றிருப்பதே மெய்யான ஆசீர்வாதம். இந்த வசனப்பகுதியில் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின் படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் (ஆதி 36:40).

ஏசாவின் சந்திதியில்தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு, அகோ-பாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிம்சார் பிரபு, மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு (ஆதி 36:40#43).

இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனத்தார் வெளியேறி வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணிய போது இந்தப் பிரபுக்கள் ஆட்சி புரிந்திருக்கலாம். பிரபுக்கள் ராஜாக்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள். இவர்கள் குறுநிலமன்னர்கள் போல சிறிய பிரதேசத்திற்கு அதிபதிகளாக இருந்தார்கள். இத்துடன் ஏசாவின் வரலாறு நிறைவு பெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.