33 அதிகாரம்

33 அதிகாரம்

இஸ்ரவேல் என்னும் பெயருக்கு தேவனோடு ஆளுகை செய்கிறவர் என்று பொருள். யாக்கோபு தேவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டு, தூதனானவரை மேற்கொள்கிறார். யாக்கோபு தேவனுடைய வல்லமையினால் மனுஷரையும் மேற்கொள்கிறார்.

ஏசாவும் யாக்கோபும் ஒப்புரவாகிறார்கள். அவர்கள் அன்போடும் பாசத்தோடும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்கிறார்கள் (ஆதி 33:1#4). ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் இடையே நடைபெற்ற சம்பாஷணையின் விவரம் (ஆதி 33:5#7).

யாக்கோபு ஏசாவுக்கு வெகுமதி கொடுக்கிறார் (ஆதி 33:8#11). அவர்கள் தங்கள் பிரயாணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள் (ஆதி 33:12#15). யாக்கோபு கானானிலே வாசம்பண்ணுகிறார். அவர் தனக்கு ஒரு வீடுகட்டி, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும் கட்டுகிறார் (ஆதி 33:16#20).

யாக்கோபும் ஏசாவும்

ஆதி 33:1#4

ஆதி 33:1. யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகே-டத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

ஆதி 33:2. பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முத-லும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும் ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:

ஆதி 33:3. தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.

ஆதி 33:4. அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

ஏசாவும் அவரோடேகூட நானூறு மனிதரும் யாக்கோபை எதிர்கொள்ள வருகிறார்கள். யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து அவர்கள் வருவதைக் காண்கிறார். ""கண்களை ஏறெடுப்பது'' என்னும் வாக்கியத்திற்கு, அவிசுவாசத்தினாலும், பயத்தினாலும் பார்ப்பதல்ல என்றும், சந்தோஷத்தோடும், நம்பிக்கையோடும் பார்ப்பது என்றும் வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

ஏசா நானூறு மனிதரோடு வருகிறார். ஒருவேளை யாக்கோபை பழிதீர்ப்பதற்காகவோ (ஆதி 27:41) அல்லது யாக்கோபை கனப்படுத்துவதற்காகவோ அல்லது தன்னுடைய வல்லமையை வெளிப் படுத்துவதற்காகவோ ஏசா இத்தனை பேரை தன்னோடு அழைத்துக் கொண்டு வரலாம். பழிவாங்குதல் அவருடைய நோக்கமாக இருந்தால் தேவன் அவர் மனதை இப்போது மாற்றி விடுவார்.

யாக்கோபைக் கனப் படுத்துவதற்காகவோ அல்லது தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்காகவோ வந்திருந்தால் ஏசா பூரண திருப்தியடைந்திருப்பார். ஏனெனில் யாக்கோபு ஏசாவுக்கு முன்பாகத் தன்னை அதிகமாகத் தாழ்த்துகிறார். (ஆதி 33:3).

ஆபிரகாம் கிழக்கு தேசத்து ராஜாக்களோடு யுத்தம் பண்ணும்போது அவரோடு 318 கைபடிந்த ஆட்கள் இருந்தார்கள். (ஆதி 14:14). ஆபிரகாமிடம் இருந்த ஆட்களைவிட ஏசாவிடம் 82 பேர் அதிகமாக இருக்கிறார்கள்.

யாக்கோபு கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணி, தன்னுடைய பிரச்சனைகளையெல்லாம் அவருடைய சமுகத்திலே ஒப்புக்கொடுத்துவிட்டார். ஆகையினால் இப்போது யாக்கோபின் உள்ளத்திலே ஏசாவைக் குறித்து பயமோ வியாகுலமோ இல்லை. யாக்கோபு கர்த்தரை நம்பி, தன்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். யாக்கோபின் முகம் இப்போது துக்கமாயில்லை.

யாக்கோபைப்போலவே நம்முடைய கவலைகளையும் பாரங்களையும், கர்த்தர்மீது வைத்துவிட்டால், நமக்கும் துக்கம் இருக்காது. ""அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை'' (1சாமு 1:18).

யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவை சந்திக்கவும், வரவேற்கவும் தன்னை ஆயத்தம்பண்ணுகிறார். தன்னுடைய சகோதரனை, தன்னுடைய மனைவிகளும், வேலைக்காரிகளும், பிள்ளைகளும் வரவேற்கும் வண்ணமாக அவர்களையும், வெவ்வேறாகப் பிரித்து வைக்கிறார். இரண்டு சகோதரர்களும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளப்போகிறார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் வேறுபாடு இருக்கிறது.

ஏசா நானூறு மனுஷரோடே யாக்கோபை சந்திக்க வருகிறார். ஏசாவோடு கூட வருகிறவர்களைப் பார்க்கும்போது, அவர் பலத்த சேனையோடு வருவதுபோல இருக்கிறது. ஏசா யுத்தத்திற்குப்போவதுபோல புறப்பட்டு வருகிறார். யாக்கோபோ ஏசாவை சந்திக்க, தன் குடும்பத்தாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு போகிறார். யாக்கோபோடுகூட, அவருடைய மனைவிகளும், வேலைக்காரிகளும், பிள்ளைகளும் மாத்திரமே இருக்கிறார்கள்.

யாக்கோபோடு இருக்கிறவர்கள் சாதாரணமானவர்கள். அவர்கள் சொற்ப எண்ணிக்கையுள்ளவர்கள். ஏசாவோடுகூட நானூறு மனிதர்கள் இருப்பதுபோல, யாக்கோபோடுகூட திரளான மனிதர் இல்லை. யாக்கோபோடு கூடயிருக்கிறவர்கள் ஸ்திரீகளாகவும், சிறுபிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு தங்களைக் காத்துக்கொள்ளும் பெலமில்லை. இவர்கள் பலவீனராயிருக்கிறார்கள்.

யாக்கோபிடத்தில் சேஷ்டபுத்திரபாக ஆசீர்வாதம் இருக்கிறது. மூத்தவன் இளைவனை சேவிப்பான் என்னும் வாக்குத்தத்தம் யாக்கோபுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையின் பிரகாரம், ஏசா யாக்கோபை சேவிக்கவேண்டும். யாக்கோபு ஏசாவை ஆளுகை செய்யவேண்டும். யாக்கோபு நற்குணசாலி. அவர் தன்னை உண்மையுள்ளவராகவும், உத்தம குணமுள்ளவராகவும் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்.

யாக்கோபு ஒரு குடும்பத்தலைவராக தன்னைக் காண்பிக்கிறார். ஏசாவோ ஒரு சேனைத்தலைவனாக தன்னைக் காண்பித்து, நானூறு பேரோடு கெம்பீரமாய் வருகிறார். யாக்கோபு தன்னுடைய குடும்பத்தாரை மூன்று பிரிவாகப் பிரிக்கிறார். தன்னுடைய பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகே-டத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைக்கிறார் (ஆதி 33:1).

ஏசா யாக்கோபை சந்திக்க வரும்போது நானூறு மனிதரோடுகூட மொத்தமாக வருகிறார். ஆனால் யாக்கோபோ தன்னுடைய குடும்பத்தாரை மூன்று பிரிவாகப் பிரித்து, அவர்களோடுகூட ஏசாவை சந்திக்கிறார்.

யாக்கோபு பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முத-லும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும் ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்துகிறார். யாக்கோபு அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேருகிறார் (ஆதி 33:2,3).

யாக்கோபு ராகேலையும் யோசேப்பையும் கடையிலே நிறுத்துகிறார். ஆபத்து வந்தால் இவ்விரண்டு பேரும் எப்படியும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது யாக்கோபின் எண்ணமாக இருக்கலாம். அல்லது ஏசாவின் அன்பைப் பெறுவதற்கு தன்னுடைய அழகான மனைவி ராகேலும் அவளுடைய குமாரன் யோசேப்பும் உதவி புரிவார்கள் என்று யாக்கோபு நினைத்திருக்கலாம்.

யாக்கோபும் ஏசாவும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறார்கள். யாக்கோபு ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, ஏசாவுக்கு மரியாதை செலுத்துகிறார். யாக்கோபு ஏசாவுக்கு பயந்தாலும், அவர் தன்னுடைய மூத்த சகோதரனாகயிருப்பதினால், அவருக்குரிய மரியாதையைக் காண்பிக்கிறார்.

ஏசா இதுவரையிலும் யாக்கோபுக்கு சத்துருவாகயிருந்தவர். இப்போது அவர் தனக்கு சத்துருவாயிருக்கிறாரா அல்லது சிநேகமுள்ள சகோதரராயிருக்கிறாரா என்பது யாக்கோபுக்கு தெரியாது. ஆனாலும் யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்குகிறார். மற்றவர்களுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தவேண்டும். தாழ்மையின் மூலமாக பகை நீங்கும். நாம் பிறருக்கு முன்பாக பணிந்துபோகும்போது, அவர்களுடைய கோபம் குறையும்.

யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கும்போது, ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, யாக்கோபைத் தழுவி, அவருடைய கழுத்தைக்கட்டிக்கொண்டு, முத்தஞ்செய்கிறார்; யாக்கோபும் ஏசாவும் அழுகிறார்கள் (ஆதி 33:4).

ஏசா யாக்கோபை தாக்குவதற்காக ஓடி வரவில்லை. அவர் கோபத்தோடு வராமல், யாக்கோபை நோக்கி அன்போடு வருகிறார். ஏசாவின் மனதில் இப்போது யாக்கோபின்மீது கோபமில்லை. ஏசா பழைய பகையை மன்னித்து மறந்துவிடுகிறார். அவர் யாக்கோபோடு மெய்யாகவே ஒப்புரவாகியிருக்கிறார்.

ஏசாவின் இருதயத்தில் உண்மையான மனந்திரும்புதல் ஏற்பட்டிருக்கவில்லையென்றால், அவரால் யாக்கோபை கட்டித்தழுவி, அவருடைய கழுத்தைக் கட்டிகொண்டு, முத்தம் செய்திருக்க முடியாது. ஏசாவின் கண்களில் யாக்கோபைப் பார்க்கும்போது கண்ணீரும் வந்திருக்காது. ஏசா யாக்கோபோடு சண்டை போடவரவில்லை. அவரோடுகூட சமாதானமாயிருக்கவே வந்திருக்கிறார்.

யாக்கோபு தூதனானவரோடே போராடி அவரை மேற்கொண்டவர். யாக்கோபால் மனுஷரையும் மேற்கொள்ள முடியும். யாக்கோபு இப்போது இஸ்ரவேலாயிருக்கிறார். அவர் தேவனோடுகூட ஆளுகை செய்கிறவர். யாக்கோபு தேவனையும், மனுஷரையும் மேற்கொண்டவர் என்று அவரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் யாக்கோபு இப்போது, ஏசாவோடுகூட போராடாமல், கண்ணீர் விட்டு அழுகிறார்.

மனுஷனுடைய இருதயங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. கர்த்தர் தமக்கு சித்தமான பிரகாரம் மனுஷருடைய இருதயங்களை மாற்றுகிறார். கர்த்தருடைய கிரியைகள் அற்புதமானது. மனுஷனுடைய இருதயங்களில் மாற்றம் ஏற்படும்போது ஆரவாரமில்லாமல் அமைதியாக மாற்றம் ஏற்படும். ஆனாலும் அந்த மாற்றம் ஆழமான மாற்றமாயிருக்கும். கர்த்தர் தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக சத்துருக்களை சிநேகிதர்களாக மாற்றுகிறார்.

பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு சவுல்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்து சவுல், தேவனுடைய இரட்சிக்கும் கிருபையினால் மாற்றப்பட்டார்.

""அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்'' (1சாமு 26:21).

""அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்'' (1சாமு 26:25).

புதிய ஏற்பாட்டுக்காலத்து சவுல், தேவனுடைய புதிதாக்கும் கிருபையினால் மாற்றப்பட்டார்.

""கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றான். சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைப் கலங்கப்பண்ணினான்'' (அப் 9:21,22).

ஏசாவும் யாக்கோபும் அழுகிறார்கள். யாக்கோபு சந்தோஷத்தினால் அழுகிறார். தன்னுடைய சகோதரன் ஏசா, தன்மீது கோபப்படாமல், தன்னைக் கட்டிக்கொண்டு முத்தம் செய்வதைப் பார்த்து, யாக்கோபு அழுகிறார். ஏசா ஒருவேளை துக்கத்தினாலும், அவமானத்தினாலும் அழுதிருக்கலாம். தான் இதுவரையிலும் யாக்கோபின்மீது கோபப்பட்டதற்காகவும், பொறாமைப்பட்டதற்காகவும் ஏசா மனது வேதனைப்பட்டு, துக்கப்பட்டு, அவமானப்பட்டு அழுதிருக்கலாம்.

ஏசாவுக்கு வெகுமதிகள்

ஆதி 33:5#15

ஆதி 33:5. அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.

ஆதி 33:6. அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

ஆதி 33:7. லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

ஆதி 33:8. அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு எனறான்.

ஆதி 33:9. அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு: உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.

ஆதி 33:10. அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையி-ருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

ஆதி 33:11. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டு வரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்-, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

ஆதி 33:12. பின்பு அவன்: நாம் புறப்பட்டுப் போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.

ஆதி 33:13. அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

ஆதி 33:14. என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.

ஆதி 33:15. அப்பொழுது ஏசா: என்னிடத்தி-ருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான் அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

ஏசா தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கிறார். யாக்கோபோடுகூட ஸ்திரீகளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் யார் என்பது ஏசாவுக்கு தெரியாது. யாக்கோபின் மூத்த குமாரனுக்கு ஒருவேளை பதினொரு வயது ஆயிருக்கலாம். யாக்கோபின் பிள்ளைகள் எல்லோரும் சிறுபிள்ளைகளாகயிருக்கிறார்கள்.

ஏசா யாக்கோபை நோக்கி, ""இவர்கள் யார்'' என்று கேட்கிறார். அதற்கு யாக்கோபு, ""இவர்கள் தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்'' என்று சொல்லுகிறார் (ஆதி 33:5). பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்த்தர் நம்முடைய பிள்ளைகளை நமக்கு ஈவாகக் கொடுக்கிறார்.

""உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒ-வமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்'' (சங் 128:3).

""எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்'' (சங் 107:41).

யாக்கோபு தன்னுடைய மனைவிகளையும், வேலைக்காரிகளையும், அவர்களுடைய பிள்ளைகளையும் ஏற்கெனவே வெவ்வேறாகப் பிரித்து வைத்திருக்கிறார். இப்போது அவர்கள் எல்லோரும் வரிசையாக வந்து ஏசாவை வணங்குகிறார்கள்.

முதலாவதாக பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்குகிறார்கள். பின்பு லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்குகிறார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்குகிறார்கள் (ஆதி 33:6,7).

யாக்கோபு தன் சகோதரன் ஈசாவுக்கு வெகுமதி கொடுப்பதற்காக, தன்னுடைய மந்தையிலுள்ளவற்றை ஏற்கெனவே பிரித்து எடுத்து வைத்திருக்கிறார். அவர் தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து வைத்திருக்கிறார் (ஆதி 32:13#15). யாக்கோபு அவற்றை வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்திருக்கிறார்.

யாக்கோபு சாக்குபோக்கு சொல்லி சேயீருக்குப் போவதைத் தவிர்க்கிறார். யாக்கோபு சேயீருக்குப் போகவிரும்பவில்லை. உடன்படிக்கையின் பிரகாரம் கானான் ஆபிரகாமிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிற தேசம். யாக்கோபு அதன்பின்பு சேயீருக்குப் போகவேயில்லை.

""என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால் மாத்திரம் போதும்'' என்று யாக்கோபு ஏசாவிடம் சொல்லுகிறார். யாக்கோபு இன்னும் ஏசாவைப் பூரணமாக நம்பவில்லை. யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரர். தந்திரசாலி. இப்பொழுது யாக்கோபு அதிகமாகப் பயந்து கொண்டிருக்கிறார். ஏசாவை பின்பு சந்திக்க வேண்டுமென்று யாக்கோபு திட்டமிட்டார். ஆனால் சூழ்நிலைகளின் நிமித்தமாக யாக்கோபால் ஏசாவைச் சந்திக்க முடியவில்லை. ஏசா திரும்பி தான் வந்த வழியே சேயீருக்குப் போனார். யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டினார். சுக்கோத்து யோர்தானின் கிழக்குப் பகுதியில் உள்ளது. கானானுக்குள் நுழைவதற்கு முன்பாக யாப்போக்கிற்கு அருகிலுள்ளது.

இந்த மந்தைகளெல்லாம் யாக்கோபோடு கூடயிருக்கிறது. ஏசா தன்னுடைய கண்களை ஏறெடுத்து அந்த மந்தைகளையும் பார்க்கிறார். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி, ""எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு'' என்று கேட்கிறார். அதற்கு யாக்கோபு, ""என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு'' (ஆதி 33:8) என்று சொல்லுகிறார்.

ஏசா மிகவும் கண்ணியமாக அந்த வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். தனக்கு போதுமானது உண்டு என்றும், யாக்கோபுடையது அவருக்கு இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார் (ஆதி 33:9). நம்மிடத்தில் மற்றவர்களுக்கு இருப்பதுபோல திரளான சம்பத்து இல்லையென்றாலும், நம்மிடத்தில் போதுமானது உண்டு என்று நினைக்கும் பக்குவம் நமக்குள் இருக்கவேண்டும். போதும் என்கிற பக்தியே மிகுந்த ஆதாயம். ஏசாவிடத்தில் பேராசையில்லை. தனக்கு போதுமானது உண்டு என்று ஏசா சொல்லிவிடுகிறார்.

ஆனால் யாக்கோபோ தான் கொண்டு வந்த வெகுமானங்களை ஏசா பெற்றுக்கொள்ளவேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார். யாக்கோபு ஏசாவுக்கு பயந்ததினால், ஆரம்பத்தில் இந்த வெகுமானங்களை ஆயத்தம்பண்ணினார்.

""இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக் கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்'' (ஆதி 32:20).

ஆனால் இப்போது யாக்கோபுக்கு ஏசாவின்மேல் பயமில்லை. அவர் மீது அன்பு மாத்திரமே இருக்கிறது. தான் கொண்டு வரும் வெகுமானங்களை, ஏசா பெற்றுக்கொள்ளவேண்டுமென்று அன்போடு வேண்டிக்கொள்கிறார். இப்போது யாக்கோபின் மனதிலே பயத்திற்கு பதிலாக, சகோதர சிநேகம் நிரம்பியிருக்கிறது.

யாக்கோபு ஏசாவைப்பற்றிச் சொல்லும்போது, ""நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது'' (ஆதி 33:10) என்று சொல்லுகிறார். யாக்கோபு ஏசாவின் முகத்தைப் பார்க்கும்போது, அந்த முகத்திலே தேவனுடைய கிருபையும், அவருடைய அநுக்கிரகமும் யாக்கோபுக்கு தெரிகிறது. தேவன் யாக்கோபின் ஜெபத்திற்கு பதில் கொடுத்திருக்கிறார். அவர் யாக்கோபின்மீது பிரியமாயிருக்கிறார்.

ஏசா தன்னுடைய சம்பத்துக்களைப்பற்றிச் சொல்லும்போது, ""எனக்குப் போதுமானது உண்டு'' என்று சொன்னார். யாக்கோபு தன்னுடைய சம்பத்துக்களைப்பற்றிச் சொல்லும்போது, ""வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு'' (ஆதி 33:11) என்று சொல்லுகிறார். யாக்கோபு தன்னுடைய சம்பத்துக்களைப்பற்றிச் சொல்லும்போது, ""தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்'' என்று சொல்லி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார்.

யாக்கோபு தனக்கு கொடுக்கும் வெகுமானங்களை ஏசா பெற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆனால் யாக்கோபோ அதைப் பெற்றுக்கொள்ளுமாறு அவரைக் கட்டாயப்படுத்துகிறார். யாக்கோபு ஏசாவை நோக்கி, ""அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையி-ருந்து ஏற்றுக்கொள்ளும்'' (ஆதி 33:10) என்றும், ""ஆகையால் உமக்குக் கொண்டு வரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்'' (ஆதி 33:11) என்றும் சொல்லி, அவரை வருந்திக்கேட்டுக்கொள்கிறார். அப்போது யாக்கோபு கொண்டு வந்திருக்கிற வெகுமதியை ஏசா ஏற்றுக்கொள்கிறார்.

யாக்கோபு பாதான் அராமிலிருந்து கானான் தேசத்திற்கு புறப்பட்டுப்போகிறார். யாக்கோபின் பிரயாணத்திலே ஏசா உதவி செய்ய விரும்புகிறார். யாக்கோபுக்கு வனாந்தர பாதையைப்பற்றித் தெரியாது. ஏசா வனாந்தரத்தின் பாதையை நன்றாய் அறிந்தவர். ஆகையினால் ஏசா யாக்கோபை நோக்கி, ""நாம் புறப்பட்டுப் போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன்'' (ஆதி 33:12) என்று சொல்லுகிறார். ஏசாவின் வார்த்தைகள், அவர் உண்மையிலேயே யாக்கோபோடு ஒப்புரவாகியிருக்கிறார் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது.

ஏசா யாக்கோபோடுகூட இருக்கவேண்டுமென்று விரும்புகிறார். அவருடைய சகோதர சிநேகத்தை நேசிக்கிறார். ஏசா யாக்கோபுக்கு உதவிசெய்ய முன்வந்தாலும், யாக்கோபோ ஏசாவின் உதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். யாக்கோபு கர்த்தரை நம்பி புறப்பட்டு வந்திருக்கிறார். கர்த்தரே யாக்கோபை வழிநடத்துகிறார். யாக்கோபின் காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. கர்த்தர் யாக்கோபை கானான் தேசத்திலே மறுபடியும் கொண்டு வந்த சேர்ப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். யாக்கோபு கர்த்தருடைய வார்த்தையை நம்புகிறார். கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர்.

ஏசா யாக்கோபை பார்க்க நானூறு மனுஷரோடு வந்திருக்கிறார். அவர்கள் வேகமாக பிரயாணம்பண்ணக்கூடியவர்கள். யாக்கோபோ, தன் குடும்பத்தாரோடும், கறவையான ஆடு மாடுகளோடும் வந்திருக்கிறார். இவர்களால் ஏசாவைப்போல துரிதமாய்ப் பிரயாணம்பண்ண முடியாது.

யாக்கோபு ஏசாவை நோக்கி, ""பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்'' (ஆதி 33:13) என்று சொல்லி, ஏசாவின் உதவியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

யாக்கோபால் தன் பிள்ளைகளையும், கறவை மாடுகளையும் மெதுவாகத்தான் நடத்திக்கொண்டு போகமுடியும். யாக்கோபு தன்னுடைய நிலமையை ஏசாவுக்கு எடுத்துச் சொல்லுகிறார். அவர் ஏசாவை நோக்கி, ""என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன்'' (ஆதி 33:14) என்று சொல்லுகிறார்.

யாக்கோபு தன் குடும்பத்தார்மீது கரிசனையுள்ளவர். அவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாராயிருக்கிறார். அது மாத்திரமல்ல, யாக்கோபு தன்னுடைய மந்தைகளுக்கு நல்ல மேய்ப்பராகவும் இருக்கிறார். தன்னுடைய பிள்ளைகளால் எவ்வளவு வேகமாக நடக்க முடியும் என்பது யாக்கோபுக்கு தெரியும். தன்னுடைய மந்தைகளை வேகமாக ஓட்ட முடியாது என்பதும் யாக்கோபுக்கு நன்றாய்த் தெரியும்.

யாக்கோபின் நல்ல சுபாவம் ஊழியக்காரர்களாகிய நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய ஊழியத்திலே புதிய விசுவாசிகள் நம்மோடுகூட சேர்ந்திருப்பார்கள். நாம் அவர்கள்மீது கடினமான ஊழியப்பொறுப்புக்களை சுமத்தக்கூடாது. அவர்களால் எவ்வளவு ஊழியபாரத்தைத் தாங்க முடியுமோ, அவ்வளவு பாரத்தை மாத்திரமே, அவர்கள்மீது சுமத்தவேண்டும். கிறிஸ்து நல்ல மேய்ப்பராயிருக்கிறார். நாம் கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றவேண்டும்.

""மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்'' (ஏசா 40:11).

யாக்கோபை பாதுகாப்பதற்கு ஏசா தன்னுடைய மனுஷரில் சிலரை அவருக்கு கொடுக்க விரும்புகிறார். ஆனால் யாக்கோபோ அந்த உதவியையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். ஏசா யாக்கோபை நோக்கி, ""என்னிடத்தி-ருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா'' என்று கேட்கிறார். அதற்கு யாக்கோபு, ""அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும்'' (ஆதி 3:15) என்று பிரதியுத்தரம் சொல்லுகிறார்.

யாக்கோபு தேவனுடைய தெய்வீக பாதுகாப்பை நம்புகிறார். கர்த்தருடைய பாதுகாப்பே யாக்கோபுக்கு போதுமானது. தனக்கு மனுஷருடைய பாதுகாப்பு தேவையில்லை என்று யாக்கோபு நினைக்கிறார். கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் மனுஷருக்கு பயப்படமாட்டார்கள்.

ஏல்எல்லோகே இஸ்ரவேல்

ஆதி 33:16#20

ஆதி 33:16. அன்றையத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப் போனான்.

ஆதி 33:17. யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

ஆதி 33:18. யாக்கோபு பதான் அராமி-ருந்து வந்தபின் கானான்தேசத்தி-ருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான்.

ஆதி 33:19. தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு,

ஆதி 33:20. அங்கே ஒரு ப-பீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

ஏசாவும் யாக்கோபும் சகோதர சிநேகத்தோடு ஒருவரையொருவர் சந்தித்துவிட்டு, இப்போது சமாதானத்தோடே பிரிகிறார்கள். அன்றையத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப் போகிறார் (ஆதி 33:16).

யாக்கோபு யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள சுக்கோத்திற்கு பிரயாணம்பண்ணுகிறார். அவர் அங்கே தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருக ஜீவன்களுக்கு கொட்டாரங்களைப் போடுகிறார் (ஆதி 33:17). யாக்கோபு அந்த ஸ்தலத்திற்கு சுக்கோத் என்று பேரிடுகிறார். சுக்கோத் என்னும் பெயருக்கு கூடாரங்கள் அல்லது, கொட்டாரங்கள் என்று பொருள்.

யாக்கோபு யோர்தான் நதியின் கிழக்கில் சுக்கோத்தைக் கட்டுகிறார். இது யாப்போக்கு ஆற்றின் அருகில் உள்ளது. கிழக்கிலிருந்து இந்த ஆறு யோர்தான் நதிக்குப் பாய்ந்து வருகிறது.

யாக்கோபின் சந்ததியார் பிற்காலத்தில் மச்சுப்பாவப்பட்ட வீடுகளில் குடியிருக்கிறார்கள். ஆனாலும் தங்கள் முற்பிதாக்கள் கூடாரங்களிலும், கொட்டாரங்களிலும் குடியிருந்ததை அவர்கள் மறந்துவிடாமல் நினைவுகூரவேண்டும்.

""அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப் போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்'' (உபா 26:5).

யாக்கோபு சீகேமுக்கு வருகிறார். சாலேம் சீகேமுடைய பட்டணம் என்று அழைக்கப்படுகிறது. இது கானான் தேசத்திலிருக்கிறது. யாக்கோபு பதான் அராமிலிருந்த சாலேமுக்கு வந்திருக்கிறார். யாக்கோபு நீண்ட பிரயாணம் செய்து, பல துன்பங்களை அனுபவித்து, முடிவிலே கானான் தேசத்திற்கு வந்திருக்கிறார்.

யாக்கோபு சாலேம் என்னும் பட்டணத்திற்கு எதிராக வந்து கூடாரம் போடுகிறார். இங்கு யாக்கோபு தன்னுடைய முதலாவது சொத்தை வாங்குகிறார். யாக்கோபு இங்கே கர்த்தருக்கு முதலாவது பலிபீடத்தைக் கட்டுகிறார் (ஆதி 33:17-20).

யாக்கோபு சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று, அதற்கு எதிரே கூடாரம் போடுகிறார். தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தை கிரயத்திற்கு வாங்குகிறார். யாக்கோபு இந்த நிலத்தை சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்கு வாங்குகிறார்.

கானான் தேசம் யாக்கோபுக்கு சுதந்தர தேசமாக வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. ஆனாலும் யாக்கோபு இன்னும் கானான் தேசத்தை சுதந்தரிக்கவில்லை. கானான் தேசம் யாக்கோபுக்கு சொந்த தேசமாகயிருந்தாலும், அவர் இப்போது அந்த தேசத்திலுள்ள ஒரு நிலத்தை நூறு வெள்ளிக்காசுக்கு கிரயத்திற்கு வாங்குகிறார்.

யாக்கோபு தான் கிரயத்திற்கு வாங்கின நிலத்திலே, கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டுகிறார். யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் அங்கே கர்த்தரை ஆராதிக்கிறார்கள். யாக்கோபு தன்னுடைய வீட்டாருக்கு கூடாரம்போட்ட நிலத்திலே, கர்த்தருக்கு பலிபீடம் கட்டுகிறார். நாம் எந்த ஊரிலே நமக்கு வீடு கட்டுகிறோமோ, அந்த ஊரிலே கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும் கட்டவேண்டும். நம்முடைய ஊரிலே கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்கு நாம் உதவி செய்யவேண்டும்.

யாக்கோபு கர்த்தருக்கு ஒரு ப-பீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிடுகிறார் (ஆதி 33:20). ""ஏல்எல்லோகே இஸ்ரவேல்'' என்னும் எபிரெய வார்த்தைக்கு ""தேவன்'' அல்லது ""இஸ்ரவேலின் தேவன்'' என்று பொருள்.

கர்த்தர் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று புதிய பெயரைக் கொடுத்தார். யாக்கோபு இப்போது கர்த்தரை, ""இஸ்ரவேலின் தேவன்'' என்று அழைக்கிறார். யாக்கோபு கர்த்தரோடுகூட ஆளுகை செய்கிறவர். ஆனாலும் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்கு தேவனாகவும், கர்த்தராகவும் இருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.