2. இறைநட்பும் அமைதியும்_

இறைநட்பும் அமைதியும்

உடனே மிகுந்த அமைதல் உண்டாயிற்று... மத்தேயு – 8:26

தேவன் மட்டுமே அமைதியைத் தரமுடியும். தேவன் மட்டுமே சந்தோஷம். தரமுடியும். தேவன் மட்டுமே சவால்களைச் சந்திக்கும் மனபலத்தைத் தரமுடியும் என்பது போன்ற கருத்துக்களை பல தேவ ஊழியர்கள் சொல்வதுண்டு, ஆனால் அதையும் சற்று யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் இறைபக்தி இல்லாத அநேகர் கூட அமைதி, ஆனந்தம், மனதைரியம் ஆகியவற்றை தங்களின் சுயவழிகளிலும் பெறுவதை பார்க்க முடிகின்றது.

மனிதன் அமைதியைப் பெற இயன்றவன்தான். சந்தோஷத்தைப் பலவழிகளில் பெற இயன்றவன்தான். தன்னைத் தானே சவால்களை எதிர்கொள்ளும்படி பலப்படுத்திக் கொள்ள இயன்றவன்தான். ஆனால் அவற்றிற்கு ஒரு உத்தரவாதம் இல்லை. அவற்றில் ஒரு நிறைவு இல்லை. சில வேளை அமைதியைப் பெறுவது என்பது மனிதனுடைய சக்திக்கும், முயற்சிக்கும் அப்பாற்பட்டதாகிவிடுகிறது. சில வேளைகளில் தன்னைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்பது அவனுடைய ஆற்றலுக்கு மிஞ்சினதாக உள்ளது. சில நேரங்களில் அவன் தன்னை தைரியப்படுத் திக் கொள்வது என்பது அவனுக்கு இயலாத விஷயமாகப் போய்விடுகிறது.

இங்குதான் இறைநம்பிக்கையின் அவசியமும், இறைத் தொடர்பின் தேவையும் வலிமையாக வற்புறுத்தப்படுகின்றன. இறைத்தொடர்பும், இறைநம்பிக்கையும். இறை ஐக்கியமும் உடைய மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் தனக்குத் தேவையான மனஅமைதியைப் பெற்றுக்கொள்ள இயன்றவன். ஏனென்றால் அமைதிக்கு வாய்ப்பே இல்லாத வேளைகளிலும் தேவன் நமக்கு அமைதியை அளிக்க வல்ல வராயிருக்கின்றார். எனென்றால் அமைதிக்கு எதிராக எழும்பும் எந்த ஒரு காற்றையும், புயலையும் கொந்தளிப்பையும் அவரால் அடக்கி அமைதியை ஏற்படுத்த முடியும்.

இங்கேதான் மனித முயற்சிகளின் விளைவான அமைதியின் வித்தியாசம் விளங்குகின்றது. சந்தோஷத்திற்கு வாய்ப்பில்லாத வேளைகளை வாழ்வில் நாம் சந்திக்க நேரிடும். மலைபோல் அசையாமலிருந்த இருதயம் கூட சில சூழல்களில் நாணலைப்போல அங்குமிங்குமாய் அலசடிப்பட நேரிடும். ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளிலும் அமைதியையும், ஆனந்தத்தையும், இறைநட்பும், இறை ஆளுகையும் நமக்கு கொண்டுதரும். அது பலத்தினாலோ, பராக்கிரமத்தாலோ அல்ல, தேவ ஆவியின் ஆற்றலால் வந்தது.

தேவனுக்கு முற்றிலுமாக உன்னை இழந்துவிட்டால் சாத்தான் உன் சமாதானத்தைத் திருட முடியாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.