26 அதிகாரம்

26 அதிகாரம்

ஈசாக்கின் நாட்களில் தேசத்தில் பஞ்சமுண்டாகிறது. ஈசாக்கு கேராருக்குப் போகிறார் (ஆதி 26:1). கர்த்தர் ஈசாக்குக்கு தரிசனமாகி, அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லுகிறார் (ஆதி 26:2#5).

ஈசாக்கு கேராரிலே குடியிருக்கும்போது, தன் மனைவி ரெபெக்காளை, தன் சகோதரி என்று சொல்லுகிறார் (ஆதி 26:6#11). கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதிக்கிறார் (ஆதி 26:12#14).

பெலிஸ்தியர் ஈசாக்கின்மீது பொறாமைப்படுகிறார்கள் (ஆதி 26:14#17). ஈசாக்கு தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்கிறார் (ஆதி 26:18#23). கர்த்தர் ஈசாக்கை உற்சாகப்படுத்துகிறார் (ஆதி 26:24,25).

பெலிஸ்தர்கள் ஈசாக்கோடு உடன்படிக்கை பண்ணுகிறார்கள் (ஆதி 26:26#33). ஏசா ஏத்தியருடைய குடும்பத்தில் விவாகம்பண்ணுகிறான் (ஆதி 26:34,35).

கானானில் பஞ்சம்

ஆதி 26:1#5

ஆதி 26:1. ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெ-ஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

ஆதி 26:2. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.

ஆதி 26:3. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடே கூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

ஆதி 26:4. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,

ஆதி 26:5. நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

கானான் தேசத்திலே ஆபிரகாமின் நாட்களில் ஒரு பஞ்சமுண்டாயிற்று. இப்போது அந்த தேசத்தில், ஈசாக்கின் நாட்களிலும் ஒரு பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான தேசம். கர்த்தர் அந்த தேசத்தை ஆபிரகாமின் சந்ததிக்கு சுதந்தரதேசமாக வாக்குப்பண்ணியிருக்கிறார். ஆனால் வாக்குத்தத்ததம்பண்ணப்பட்ட கானான் தேசத்தில் அப்பம் இல்லை. பஞ்சம் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் கர்த்தர் ஈசாக்கை சோதிக்கிறார். ஈசாக்கு வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்வாரா என்று கர்த்தர் அவரை சோதித்தறிய விரும்புகிறார். கர்த்தர் வாக்குமாறாதவர். அவர் தம்முடைய உடன்படிக்கையில் உண்மையுள்ளவர். நமக்கு உலகப்பிரகாரமான நன்மைகள் குறைவாக கிடைத்தாலும், நம்முடைய ஜீவியத்தில் பிரச்சனைகளும் போராட்டங்களும் அதிகமாயிருந்தாலும், கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தைகள் மாறாமல் அப்படியே இருக்கும். நமக்குஉலகப் பிரகாரமான நன்மைகள் குறைந்துபோனாலும், கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒருபோதும் குறைந்து போவதில்லை.

அப்பொழுது ஈசாக்கு பெ-ஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போகிறார் (ஆதி 26:1). ஈசாக்கு எகிப்து தேசத்திற்குப்போக ஆயத்தமாயிருக்கிறார். கானான் தேசத்தில் பஞ்சம் வந்தபோது, ஆபிரகாம் எகிப்து தேசத்திற்குப்போனார். அதுபோலவே ஈசாக்கும் எகிப்து தேசத்திற்குப்போக தன்னை ஆயத்தம்பண்ணுகிறார். எகிப்திற்கு போகும் வழியிலே, ஈசாக்கு கேராரிலே தங்குகிறார்.

அப்பொழுது கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி, ""நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடே கூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்'' (ஆதி 26:2,3) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாம் எகிப்துக்குப்போகும் வழியில் (ஆதி 12:10; சங் 37:3) கேரார் இருக்கிறது. ஈசாக்கு எகிப்துக்குப் பிரயாணம் பண்ணுகிறார். ஆனால் தேவன் அவரைத் தடுத்து நிறுத்தி விடுகிறார்.

""நான் உன்னோடே கூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்'' என்று கர்த்தர் ஈசாக்குக்கு சொல்லுகிறார். ஈசாக்கு தன் ஜீவியகாலத்தில் ஒரு அடி நிலம்கூட சுதந்தரிக்கவில்லை. ஆகையினால் இந்த ஆசீர்வாதம் ஈசாக்கின் உயிர்த்தெழுதலைக் குறிக்கலாம் என்று வேதபண்டிதர்களில் சிலர் கருத்து கூறுகிறார்கள். (ஆதி 13:15; ஆதி 28:13; ஆதி 50:24; அப் 7:5).

ஈசாக்கு எகிப்து தேசத்திற்குப் போகாமல், கேராரிலே தங்கியிருக்கவேண்டும் என்பது கர்த்தருடைய கட்டளை. ஈசாக்கின் நாட்களில் பஞ்சம் உண்டானதுபோல, யாக்கோபின் நாட்களிலும் பஞ்சமுண்டாயிற்று. அப்போது கர்த்தர் யாக்கோபை எகிப்து தேசத்திற்குப்போகுமாறு சொன்னார்.

""அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன், நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்'' (ஆதி 46:3,6).

இப்போது ஈசாக்கின் நாட்களில், கானான் தேசத்திலே பஞ்சமுண்டாயிற்று. கர்த்தரோ ஈசாக்கிடம், எகிப்து தேசத்திற்குப் போகக்கூடாது என்று கட்டளையிடுகிறார். ஆபிரகாமின் நாட்களிலும், கானான் தேசத்தில் பஞ்சமுண்டாயிற்று. அப்போது கர்த்தர், ஆபிரகாமின் விருப்பத்தின் பிரகாரம் செய்வதற்கு, அவருக்கு அனுமதி கொடுத்தார்.

கர்த்தருடைய சித்தமும் வழிநடத்துதலும் எல்லோருடைய ஜீவியத்திலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. கானான் தேசத்தில் பஞ்சம் உண்டானபோது, கர்த்தருடைய சித்தம் மூன்று முற்பிதாக்கள்மீதும் வெவ்வேறு விதமாக இருந்தது. கர்த்தர் அவர்களை வித்தியாசமான வழிகளில் வழிநடத்தினார்.

ஆபிரகாம் கர்த்தருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருந்தவர். ஆபிரகாமுக்கு எல்லா சூழ்நிலைகளும், இடங்களும் ஒன்றுபோலவே இருந்தது. ஆபிரகாம் கர்த்தரோடு எல்லா இடங்களிலும், எல்லா வேளைகளிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கூடவே இருந்தார்.

ஈசாக்கு நற்குணமுள்ளவர். ஆனால் அவர் ஆபிரகாமைப்போல கடினமான சூழ்நிலைகளில் வாழ கற்றுக்கொள்ளவில்லை. ஈசாக்கு கஷ்டங்களை அனுபவிக்காதவர். அவர் தன் ஜீவியத்தில் அதிகமான பிரச்சனைகளை சந்திக்கவில்லை. ஆகையினால் கர்த்தர் ஈசாக்கை எகிப்து தேசத்திற்குப்போக அனுமதிக்கவில்லை.

யாக்கோபு குணசாலியாயும், கூடாரவாசியாயும் இருக்கிறார். அவர் பொறுமையும் பெலமுமுள்ளவர். யாக்கோபு கஷ்டங்களை தாங்கிக்கொள்ளக்கூடியவர். அவர் ஒரு பராக்கிரமசாலி. ஆகையினால் கர்த்தர் அவரை எகிப்து தேசத்திற்குப்போகுமாறு சொன்னார்.

கர்த்தர் நம்மைச் சோதிக்கும்போது, அந்த சோதனையை நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று முதலாவதாக ஆராய்ந்து பார்க்கிறார். நம்முடைய சோதனையில் நாம் •மூழ்கி அழிந்துபோகவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமல்ல. நாம் சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்பதும், அதனால் நம்முடைய விசுவாசத்திலும் ஆவிக்குரிய ஜீவியத்திலும் நாம் பெலப்படவேண்டும் என்பதுமே கர்த்தருடைய சித்தம்.

கர்த்தர் ஈசாக்கிடம் ஆபிரகாமைப்பற்றிச் சொல்லும்போது, ""ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டார்'' (ஆதி 26:4) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாம் தேவனுக்கு எல்லா வழிகளிலும் கீழ்ப்படிந்தபடியால், அவருடைய சந்ததியைத் தேவன் ஆசீர்வதித்தார். ஆபிரகாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டார் என்று கூறப்பட்டிருக்கிற படியினால், ஆபிரகாமிற்கும், ஆதாமிற்கும் பத்து கற்பனைகளைப் பற்றி தெரியும் என்பது பொருளல்ல. தேவன் ஆபிரகாமிற்கு பதினான்கு கற்பனைகளைக் கொடுத்தார். (ஆதி 12:1) தேவனுடைய பத்து கற்பனைகளை மோசே சீனாய் மலையில் பெற்றுக்கொண்டார்.

ஆபிரகாம் கர்த்தருடைய சொல்லுக்கு கீழ்ப்படிந்ததுபோல, ஈசாக்கும் கீழ்ப்படியவேண்டும். அப்போது கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தம், ஈசாக்குக்கும் சித்திக்கும்.

கர்த்தர் ஈசாக்கை நோக்கி, ""நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்'' (ஆதி 26:5) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் ஆபிரகாமின் கீழ்ப்படிதலை புகழ்ந்துபேசுகிறார். ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தார். அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. அதனால் ஆபிரகாமுக்கு மேன்மை உண்டாயிற்று. ஆபிரகாமைப்போல, விசுவாசிகளாகிய நாமும் கர்த்தருடைய சொல்லுக்கு கீழ்ப்படியவேண்டும். ஆபிரகாம் கர்த்தரிடத்தில் நற்சாட்சி பெற்றதுபோல, நாமும் கர்த்தரிடத்தில் நற்சாட்சி பெறவேண்டும். அப்போது கர்த்தருடைய கண்களிலும், மனுஷருடைய கண்களிலும் நமக்கு தயவு கிடைக்கும்.

கேராரிலே ஈசாக்கு

ஆதி 26:6#11

ஆதி 26:6. ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.

ஆதி 26:7. அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக் குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

ஆதி 26:8. அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெ-ஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.

ஆதி 26:9. அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.

ஆதி 26:10. அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.

ஆதி 26:11. பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான்.

கேரார் பெலிஸ்தருடைய தேசம். அபிமெலேக்கு என்பவன் பெலிஸ்தருக்கு ராஜாவாயிருக்கிறான். ஈசாக்கு கேராரிலே குடியிருக்கிறார். இந்த தேசத்தில் ஈசாக்குக்கு ஒரு சோதனை உண்டாயிற்று. கேராரின் மனிதர்கள், ஈசாக்கின் மனைவியாகிய ரெபெக்காளைக் குறித்து விசாரிக்கிறார்கள். அப்பொழுது ஈசாக்கு, தன் மனைவியாகிய ரெபெக்காளை, ""தன் சகோதரி'' என்று அவர்களிடத்தில் சொல்லுகிறார்.

ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளாயிருக்கிறாள். இதன் நிமித்தம் கேராரிலுள்ள மனிதர்கள், ரெபெக்காளின் நிமித்தம், தன்னைக் கொன்றுபோடுவார்கள் என்று ஈசாக்கு நினைக்கிறார். ஆகையினால் ஈசாக்கு ரெபெக்காளை தன் மனைவி என்று அவர்களிடத்தில் சொல்ல பயப்படுகிறார் (ஆதி 26:6,7).

ஆபிரகாமைப் போல ஈசாக்கும் தன்னுடைய மனைவியைத் தன் சகோதரி என்று கூறுகிறார். (ஆதி 12:10-20; ஆதி 20:1-17). இருவரும் தேவனை விசுவாசிக்கவில்லை. இவர்கள் மரித்துப் போனால், இவர்கள் மூலமாக இவர்களுடைய சந்ததி பெருகும் என்னும் வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. ஆகையினால் தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் வரையில் இவர்கள் மரித்துப்போக அனுமதிக்கவே மாட்டார்.

ஆபிரகாம் தனக்கு வந்த சோதனையை ஈசாக்கிடம் சொன்னாரா என்று தெரியவில்லை. ஒருவேளை சொல்லியிருந்தால், இப்படிப்பட்ட சோதனையான வேளையில் ஈசாக்கு தேவன் மீது விசுவாசம் வைத்திருப்பார்.

பொய்சொல்லுவது பாவம். ஈசாக்கின் மனைவியாகிய ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளாயிருக்கிறாள். பெலிஸ்தர்கள் ரெபெக்காளை நேசிக்கிறார்கள். அவர்கள் ரெபெக்காளை தங்களுடைய மனைவியாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் தன்னைக் கொன்றுபோடுவார்களோ என்று ஈசாக்கு பயப்படுகிறார். ஆகையினால், ஈசாக்கு தன்னுடைய ஜீவனை தப்புவிப்பதற்காக, தன்னுடைய மனைவியை, தன்னுடைய சகோதரி என்று சொல்லுகிறார்.

ஈசாக்கு சொன்ன பொய்யை கேராரின் ஜனங்களும் நம்புகிறார்கள். ஈசாக்கு கேராரிலே நெடுநாள் தங்கியிருக்கிறார். ஒருநாள் ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். அதை பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்த்துவிடுகிறான் (ஆதி 26:8).

ஆபிரகாமின் காலத்திலும் ஒரு அபிமெலேக்கு இருந்தான் (ஆதி 20#ஆவது அதிகாரம்). அந்த அபிமெலேக்கும் இவனும் ஒரே நபரல்ல. ஆபிரகாமின் காலத்திற்கு நூறு வருஷங்களுக்கு பின்பு, ஈசாக்கின் காலத்தில் இந்த அபிமெலேக்கு வருகிறான். அபிமெலேக்கு என்பது பெலிஸ்தருடைய ராஜாக்களின் பொதுவான பெயராகும்.

ஈசாக்கு ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறார். அந்த விளையாட்டு ஒரு சகோதரனும், அவனுடைய சகோதரியும் விளையாடுகிற விளையாட்டைப்போல் இல்லை. அவர்கள் இருவரும் ƒபுருஷன் மனைவிபோல மிகவும் நெருக்கமாக விளையாடுகிறார்கள்.

ஈசாக்கும் ரெபெக்காளும் விளையாடுவது ஒரு சகோதரன் தன் சகோதரியிடம் விளையாடும் விளையாட்டல்ல. இது கணவனும், மனைவியும் விளையாடும் விளையாட்டு. இதற்கான எபிரெய வார்த்தை ""ட்ஸôகாக்'' என்பதாகும். ஈசாக்கு ரெபெக்காளோடு சரசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதைப் பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்த்து விடுகிறான். ஆபிரகாமும், ஈசாக்கும் தங்களுடைய மனைவிகளைச் சகோதரிகள் என்று பொய்சொல்லுகிறார்கள். (சங் 31:5; எண் 32:23)

ஈசாக்கு ரெபெக்காளோடே விளையாடுவதற்கு, ""சந்தோஷமாயிருப்பது'' என்று பொருள்படும்படியான வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஈசாக்கு என்னும் பெயருக்கு ""நகைப்பு, சந்தோஷம், மகிழ்ந்து களிகூருவது'' என்று பொருள். ஈசாக்கு தன் பெயருக்கேற்ற பிரகாரமாக, தன் மனைவி ரெபெக்காளோடே சந்தோஷமாய் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கு, ஈசாக்கு ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தவுடனே, அவர்கள் இருவரும் சகோதர சகோதரிகள் அல்ல என்பதையும், அவர்கள் புருஷனும் மனைவியுமாயிருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொள்கிறான். ஈசாக்கு அபிமெலேக்கினிடத்தில் பொய் சொல்லியிருக்கிறார். இதற்காக அபிமெலேக்கு ஈசாக்கைக் கடிந்துகொள்கிறான்.

அபிமெலேக்கு ஈசாக்கை தன்னிடத்தில் அழைக்கிறான். அவன் ஈசாக்கை நோக்கி, ""அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய்'' என்று கேட்கிறான். அதற்கு ஈசாக்கு: ""அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன்'' (ஆதி 26:9) என்று சொல்லுகிறார்.

அதற்கு அபிமெலேக்கு, ஈசாக்கை நோக்கி, ""எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே'' (ஆதி 26:10) என்று சொல்லுகிறான்.

அபிமெலேக்கும், அவனுடைய மனுஷரும் தெய்வ பயமுள்ளவர்கள். மோசேயின் காலத்திற்கு முன்பாகவே இஸ்ரவேலிலும், அதன் அருகிலுள்ள சில தேசங்களிலும் வேசித்தனத்தையும், விபச்சாரத்தையும் மிகப்பெரிய பாவமாகக் கருதினார்கள். இதில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடுத்தார்கள் (ஆதி 38:24).

ரெபெக்காள் ஈசாக்கின் சகோதரி என்று நினைத்து, பெலிஸ்தரில் யாராவது ஒருவர், அவளை தனக்கு மனைவியாக்கி, அவளோடே சயனித்திருந்தால், பெலிஸ்தர்மீது பழிசுமரும். அது பெலிஸ்தர் செய்கிற மிகப்பெரிய பாவமாயும், அநியாயமாயும் இருக்கும். பாவத்தின் சம்பளம் மரணம். ஈசாக்கு பொய்சொன்னதினால், பெலிஸ்தரை பாவம் செய்யத் தூண்டிவிடுகிறார்.

அபிமெலேக்குக்கு ஈசாக்கும் ரெபெக்காளும் புருஷன் மனைவி என்பது தெரியவருகிறது. அப்போது அவன் பெலிஸ்தரை நோக்கி, ""இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான்'' (ஆதி 26:11) என்று எல்லா ஜனங்களும் அறியச் சொல்லுகிறான்.

பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கு, ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறான். அவர்களுக்கு விரோதமாக யாரும் தீங்கு செய்யாதவாறு, அவர்களை பாதுகாக்கிறான். அவர்களைத் தொடுகிறவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறான்.

ஈசாக்கின் ஐசுவரியம்

ஆதி 26:12#25

ஆதி 26:12. ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

ஆதி 26:13. அவன் ஐசுவரியனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

ஆதி 26:14. அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெ-ஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,

ஆதி 26:15. அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

ஆதி 26:16. அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

ஆதி 26:17. அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,

ஆதி 26:18. தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெ-ஸ்தர் தூர்த்துப் போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

ஆதி 26:19. ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீருற்றைக் கண்டார்கள்.

ஆதி 26:20. கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்-, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.

ஆதி 26:21. வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம் பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.

ஆதி 26:22. பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்-, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

ஆதி 26:23. அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.

ஆதி 26:24. அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடே கூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

ஆதி 26:25. அங்கே அவன் ஒரு ப-பீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.

கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதிக்கிறார். ஈசாக்கு கேராரிலே தங்கியிருக்கிறார். அது அவருக்கு அந்நிய தேசம். ஈசாக்கு அந்த தேசத்தில் விதை விதைக்கிறார். கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்ததினால், அந்த வருஷத்தில் ஈசாக்கு நூறுமடங்கு பலன் அடைகிறார்.

ஈசாக்குக்கு கேராரிலே சொந்தமான நிலம் இல்லை. அவர் பெலிஸ்தரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அவர்களுடைய நிலத்தில் விதை விதைக்கிறார். நமக்கு சொந்த நிலம் இல்லாவிட்டால், நாம் விதை விதைக்காமல் சும்மாயிருக்கக்கூடாது. ஈசாக்கைப்போல, நாமும் பிறருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதிலே விதை விதைக்கவேண்டும். நாம் செய்கிற வேலையில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்போது கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்ததுபோல, நம்மையும் ஆசீர்வதிப்பார்.

ஈசாக்கின் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிருக்கிறது. ஈசாக்கு இந்தப் பஞ்சகாலத்தில்தான் விதை விதைக்கிறார். அந்த பஞ்சவருஷத்தில், ஈசாக்கு நூறுமடங்கு பலன் அடைகிறார். இந்த ஆசீர்வாதம் ஈசாக்கின் சொந்த முயற்சியினால் கிடைத்த ஆசீர்வாதமல்ல. இது கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்தினால் கிடைத்த ஆசீர்வாதம்.

ஈசாக்கு கேராரிலே ஐசுவரியவானாகிறார். அவர் வர வர விருத்தியடைந்து மகாபெரியவனாகிறார். ஈசாக்குக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருக்கிறார்கள். ஈசாக்கு அநேகருக்கு வேலை கொடுக்கிறார். ஈசாக்கின் தொழில் விருத்தியடைந்திருக்கிறது (ஆதி 26:13,14).

ஈசாக்கு விருத்தியடைந்ததைப் பார்த்து, கேராரிலுள்ள பெலிஸ்தர்கள் அவர் பேரில் பொறாமைகொள்கிறார்கள். மற்றவர்கள் செழிப்படைவதைப் பார்த்து நாம் பொறாமைப்படக்கூடாது. பொறாமை எலும்புருக்கி. நம்முடைய உற்றார் உறவினர்கள் எல்லோரும் விருத்தியடைவதைப் பார்த்து, அவர்கள்மீது நாம் பொறாமைப்பட்டால், நம்முடைய மனதின் அமைதி கெட்டுப்போகும். நம்முடைய சரீரத்தின் ஆரோக்கியமும் சீர்குலைந்துபோகும்.

ஈசாக்கு கேராரிலே தங்கியிருக்கிறார். பெலிஸ்தர்கள் கேராரை சேர்ந்தவர்கள். ஈசாக்கு பெலிஸ்தரின் நிலத்தில்தான் விதை விதைத்திருக்கிறார். ஈசாக்குக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருக்கிறது. பெலிஸ்தருக்கு ஆட்டுமந்தையும் மாட்டுமந்தையும் இல்லை. அவர்களுக்கு சொந்தமாக துரவுகள் இல்லை.

ஈசாக்கின் ஆட்டுமந்தையும் மாட்டுமந்தைகளும் விருத்தியடைந்து பெருகுவதற்கு, அவருடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில், அவருடைய வேலைக்காரர் வெட்டின துரவுகள் மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது.

கேராரிலுள்ள பெலிஸ்தருக்கு ஆடுமாடுகள் இல்லை. அவர்களுக்கு துரவுகளும் இல்லை. ஈசாக்குக்கு துரவுகள் இருக்கிறது. பெலிஸ்தர்கள் ஈசாக்கின் துரவுகளை பொறாமை கண்களோடு பார்க்கிறார்கள். அவர்கள் அந்த துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போடுகிறார்கள் (ஆதி 26:15).

ஈசாக்கின் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் இவை வெட்டப்பட்டிருக்கிறது. கிழக்கு தேசத்தில் துரவுகளை வெட்டுவதன் மூலம் அந்த இடம் வெட்டியவருக்குச் சொந்தமாகும். ஆபிரகாம் துரவு வெட்டிய இடங்களை ஈசாக்கு சுதந்தரித்துக் கொள்கிறார். துரவுகளைத் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போடுவது ஒரு அநியாயமான செயல். இது யுத்தம் பண்ண அழைப்பு விடுவதற்கு அடையாளம். (2இராஜா 3:19,25). ஈசாக்கு யுத்தம் பண்ண விரும்பாமல், துரவுகளை விட்டுக் கொடுக்கிறார்.

பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கும் ஈசாக்கின் மீது பொறாமைப்படுகிறான். அபிமெலேக்கு சிறிதுகாலத்திற்கு முன்பு, ""இந்த புருஷனையாகிலும், இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான்'' (ஆதி 26:11) என்று ஈசாக்கைக் குறித்தும், ரெபெக்காளைக் குறித்தும் ஆறுதலாகச் சொன்னான்.

ஆனால் இப்போதோ அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி, ""நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய்'' (ஆதி 26:16) என்று பொறாமையோடும், கோபத்தோடும் சொல்லுகிறான்.

ஈசாக்கு அபிமெலேக்கோடு வாக்குவாதம்பண்ணவுமில்லை, சண்டைபோடவுமில்லை. ஈசாக்கு பொறாமைக்காரர்களோடு கேராரிலே தங்கியிருப்பதற்கு பதிலாக, வேறு இடத்தில் போய் தங்கலாம் என்று நினைக்கிறார். அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருக்கிறார் (ஆதி 26:17).

ஈசாக்கு தன் தகப்பன் ஆபிரகாமைப் போலவே யுத்தத்தை விரும்பாமல் சமாதானத்தை விரும்புகிறார். தன்னை விரும்பாத இடத்தில் குடியிராமல், அவ்விடம்விட்டு வேறு இடத்திற்குப் போய்விடுகிறார் (ஆதி 13:5#13).

உயரமான ஸ்தலத்திலே சண்டைபோட்டுக்கொண்டிருப்பதைவிட, பள்ளத்தாக்கிலே சமாதானமாய்க் குடியிருப்பது மிகுந்த ஆசீர்வாதமாயிருக்கும். பொறாமைக்காரரோடு பட்டணங்களிலே குடியிருப்பதைவிட, சமாதானமாயிருக்கிறவர்களோடு, சாதாரண ஊர்களில் குடியிருப்பது நமக்கு நல்லது.

ஈசாக்கு பள்ளத்தாக்கிலே கூடாரம்போட்டு, அங்கே தங்கியிருந்தாலும் அவர் தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்கிறார். ஈசாக்கு அங்கே தன்னுடைய ஆடுகளையும் மாடுகளையும் மேய்க்கிறார். அதற்கு தேவையான தண்ணீரைப் பெறுவதற்கு ஈசாக்கு அங்கே துரவுகளைத் தோண்டுகிறார்.

ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெ-ஸ்தர் தூர்த்துப் போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டுகிறார். தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே ஈசாக்கு அவைகளுக்குப் பேரிடுகிறார் (ஆதி 26:18).

ஈசாக்கு இப்போது பள்ளத்தாக்குக்கு வந்திருந்தாலும், அந்த இடத்தில் என்னென்ன வசதிகள் இருக்கிறதோ, அந்த வசதிகளை அவர் தன்னுடைய தொழிலுக்கு பயன்படுத்துகிறார். ஞானமுள்ள மனுஷன், தான் இருக்கும் இடத்தில், தனக்கு கிடைக்கும் வசதிகளை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவான். அதனால் தனக்கு நன்மை உண்டுபண்ணுவான்.

ஈசாக்கு பள்ளத்தாக்கிலே தோண்டுகிற துரவுகள், அவருடைய தகப்பன் ஆபிரகாம் அங்கே ஏற்கெனவே வெட்டின துரவுகளாகும். இந்த துரவுகளை பெலிஸ்தர்கள் தூர்த்துப்போட்டார்கள். அவர்கள் மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். ஈசாக்கோ அந்தத் துரவுகளைத் தேடிப்பார்த்து, அவற்றை மறுபடியுமாய்த் தோண்டுகிறார்.

விசுவாசிகளாகிய நாம் சத்தியத்தைத் தேடுவது, ஜீவத்தண்ணீரின் ஊற்றுக்கண்களைத் தேடுவதற்கு அடையாளம். பூர்வகாலத்தில் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த சத்தியங்கள் ஒருவேளை காலத்தால் மூடிமறைக்கப்பட்டிருக்கலாம். அல்லது பிற்காலத்தில் ஏற்பட்ட நூதன உபதேசங்களால் அந்த சத்தியம் மங்கிப்போயிருக்கலாம். ஆனாலும், நாம் சத்தியத்தைத் தேடும்போது, பூர்வகாலங்களில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை தேடிப்பார்ப்பது நல்லது.

நம்முடைய ஆவிக்குரிய பிரயாணத்தில், நாம் பூர்வபாதைகளை விசாரித்து, அவற்றைக் கண்டுபிடித்து, அந்தப் பாதைகளில் பிரயாணம்பண்ணவேண்டும். நம்முடைய முன்னோர்கள் தோண்டின துரவுகள், இப்போது மூடப்பட்டதாகயிருந்தாலும், நாம் அவற்றை மறுபடியுமாய்த் தோண்டி, அந்தத் துரவுகளிலிருந்து தண்ணீரைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீருற்றைக் காண்கிறார்கள் (ஆதி 26:19). ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டின துரவுகளை, மறுபடியும் தோண்டி தண்ணீர் பெற்றுக்கொள்கிறார். அதே வேளையில் ஈசாக்கும் அவருடைய வேலைக்காரரும் பள்ளத்தாக்கிலே புதிய துரவுகளையும் வெட்டுகிறார்கள்.

நமக்கு பூர்வகாலங்களில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் கிடைத்திருந்தாலும், நாம் அந்த சத்தியமே போதுமென்று நினைத்து சும்மா இருந்துவிடக்கூடாது. நாம் ஆவிக்குரிய காரியங்களில் தொடர்ந்து முன்னேற வேண்டும். சத்தியத்தை தொடர்ந்து தேடவேண்டும். அப்போதுதான் கர்த்தர் நமக்கு புதிய வெளிப்பாடுகளைக் கொடுப்பார். பூர்வகாலங்களில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நாம் அஸ்திபாரமாக பயன்படுத்தி, அதன்மீது நம்முடைய காலத்தில் நமக்கு வெளிப்படுத்தப்படும் சத்தியங்களை கட்டியெழுப்பவேண்டும்.

ஈசாக்கு துரவுகளைத் தோண்டும்போது, அவருக்கு எதிர்ப்பு வருகிறது. கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்-, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணுகிறார்கள் (ஆதி 26:20).

அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினபடியால், ஈசாக்கு அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிடுகிறார். ஈசாக்கின் வேலைக்காரர் வேறொரு துரவை வெட்டுகிறார்கள்; கேராரூர் மேய்ப்பர் அதைக்குறித்தும் வாக்குவாதம் பண்ணுகிறார்கள்; ஆகையால் ஈசாக்கு அதற்கு சித்னா என்று பேரிடுகிறார் (ஆதி 26:20,21).

நாம் சத்தியத்தின் ஊற்றுக்கண்களைத் திறக்கும்போது, அதற்கு எதிர்ப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. கர்த்தர் நமக்கு புதிய சத்தியத்தை வெளிப்படுத்தும்போது, அந்த சத்தியத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சத்தியத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்கிறவர்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள்.

ஆபிரகாமின் வேலைக்காரர் வெட்டின முதல் இரண்டு துரவுகளுக்கும், ஈசாக்கு ஏசேக்கு, சித்னா என்று பேரிடுகிறார். இந்தப் பெயர்களுக்கு வாக்குவாதம், வெறுப்பு என்று பொருள்.

ஈசாக்கு கேராரூர் மேய்ப்பரோடே வாக்குவாதம்பண்ணவில்லை. அவர்களோடு சண்டை போடவுமில்லை. அமைதியாகயிருப்பதே வெற்றிபெறுவதற்கு சிறந்த வழி என்று ஈசாக்கு நினைக்கிறார். சமாதானத்தைப் பின்பற்றுகிறவர்கள் சீக்கிரத்தில் சமாதானம் பெறுவார்கள். சமாதானத்தைத் தேடுகிறவர்கள் சீக்கிரத்தில் சமாதானத்தைக் கண்டுபிடிப்பார்கள். தேடுகிறவர்கள் கண்டடைவார்கள்.

ஈசாக்கு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டுகிறார்; கேராரூர் மேய்ப்பர் அந்தத் துரவைக் குறித்து வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது ஈசாக்கு ""நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்'' என்று சொல்-, அதற்கு ரெகொபோத் என்று பேரிடுகிறார் (ஆதி 26:22).

ரெகொபோத் என்னும் பெயருக்கு விஸ்தாரம் என்று பொருள். இந்தத் துரவில் போதுமான இடவசதியுள்ளது. ஈசாக்கு முதலில் வெட்டின இரண்டு துரவுகளும் நெருக்கமாகவும், போராட்டமாகவும் இருந்தது. ஆனால் இந்தத் துரவோ அவருக்கு விஸ்தாரமாயிருக்கிறது.

ரெகொபோத் என்னும் துரவு பரலோகத்திற்கு அடையாளமாயிருக்கிறது. பரலோகத்தில் சமாதானமுள்ளது. அங்கே நெருக்கமோ, போராட்டமோ, சண்டை சச்சரவுகளோ இல்லை. அங்கே நம் எல்லோருக்கும் போதுமான இடவசதியுள்ளது.

ஈசாக்கு அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போகிறார் (ஆதி 26:23). ஈசாக்கு எங்கே போனாலும், அவர் அங்கே கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்கிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கிறார். ஈசாக்கு கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கிறார். ஈசாக்கு களைப்படைந்தவராக, மிகவும் சோர்ந்துபோய் பெயர்செபாவுக்கு வந்து சேருகிறார்.

அன்று ராத்திரியிலே கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி, ""நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடே கூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்'' (ஆதி 26:24) என்று சொல்லுகிறார்.

ஈசாக்கு கேராரிலிருந்து பெயர்செபாவுக்கு வந்திருக்கிறார். அவர் போகும் இடங்களிலெல்லாம் கர்த்தருடைய பிரசன்னம் அவரோடு கூடயிருக்கிறது. ஈசாக்கு ஆறுதலைத் தேடிப்போகிறார். கர்த்தர் அவருக்கு ஆறுதலின் தேவனாயிருக்கிறார். அவர் ஈசாக்கைப் பார்த்து ""பயப்படாதே'' என்று ஆறுதலாகச் சொல்லுகிறார்.

ஈசாக்கு சோர்ந்து போயிருக்கிறார். ஆபிரகாம் வெட்டின துரவுகளைப் பெலிஸ்தர்கள் தூர்த்துப் போட்டு, அதை மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள். இதனால் ஈசாக்கு, அந்த ஊரை விட்டு போய்விடுகிறார். (ஆதி 26:15,16). இதன் பின்பு ஈசாக்கு வெட்டிய துரவுகளைக் கேராரூர் மேய்ப்பர்கள் தங்களுடையது என்று வாக்குவாதம் பண்ணினார்கள். (ஆதி 26:17#22). ஈசாக்கு இப்படிப்பட்ட பிரச்சனையான வேளையில் அவர்களோடு யுத்தம் பண்ணாமல் சமாதானத்தை நாடுகிறார்.

ஈசாக்கு பெயர்செபாவிலே ஒரு ப-பீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போடுகிறார். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டுகிறார்கள் (ஆதி 26:25).

ஈசாக்கும் அபிமெலேக்கும்

ஆதி 26:26#33

ஆதி 26:26. அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரி-ருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.

ஆதி 26:27. அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.

ஆதி 26:28. அதற்கு அவர்கள்: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடே கூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.

ஆதி 26:29. நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.

ஆதி 26:30. அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.

ஆதி 26:31. அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக் கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்தி-ருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.

ஆதி 26:32. அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.

ஆதி 26:33. அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள் வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது.

கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்தார். அவர் ஐசுவரியவனாகி வர வர விருத்தியடைந்து, மகாபெரியவனாகிறார். இதனால் அபிமெலேக்கு ஈசாக்கின்மீது பொறாமைப்பட்டு, ஈசாக்கை நோக்கி, ""நீ எங்களைவிட்டு போய்விடு'' (ஆதி 26:16) என்று சொன்னான். ஈசாக்கு தன்னைவிட்டுப்போய்விட்டால், அவர் விருத்தியடையமாட்டார் என்றும், அவர் தரித்திரனாவார் என்றும், சிறுமைப்படுவார் என்றும் அபிமெலேக்கு நினைத்தான்.

ஈசாக்கு விருத்தியடைவதற்கு, அபிமலேக்கு அவரோடுகூட இருப்பது காரணமல்ல. கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்தினால் மாத்திரமே, அவர் வர வர விருத்தியடைந்தார். அவர் ஐசுவரியவானானார். கர்த்தர் நம்மோடு கூடயிருக்கும்போது, கர்த்தருடைய ஆசீர்வாதமும் நம்மிடத்தில் தங்கியிருக்கும். கர்த்தர் ஈசாக்கோடு கூடயிருப்பதை பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கு, புரிந்துகொள்கிறான்.

அபிமெலேக்கு ஈசாக்கோடு ஒப்புரவாகி, அவரோடு சமாதானம் பண்ண விரும்புகிறான். அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும், அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரி-ருந்து ஈசாக்கினிடத்துக்கு வருகிறார்கள் (ஆதி 26:26). ஈசாக்கு இப்போது பெயர்செபாவிலே தங்கியிருக்கிறார்.

சில மூலபாஷை சுவடிகளில் அபிமெலேக்கும், பிகோலும் வந்தார்கள் என்றிருக்கிறது. அகுசாத்தின்பெயர் காணப்பட வில்லை. அகுசாத் ஒரு நபரின் பெயரல்ல. பிகோல் என்னும் பெயரும் பெலிஸ்தருடைய சேனைத்தலைவனைக் குறிக்கும் பொதுவான பட்டப்பெயராகும் என்று வேதபண்டிதர்களில் சிலர் கருத்து கூறுகிறார்கள். அபிமெலேக்கு என்பது பெலிஸ்தரின் ராஜாவைக் குறிக்கும் பொதுவான பட்டப்பெயர்.

ஈசாக்கு அபிமெலேக்கை உடனே வரவேற்கவில்லை. அவர் பெலிஸ்தரைக் குறித்து மிகவும் எச்சரிப்பாயிருக்கிறார். பெலிஸ்தர் தன்மீது பொறாமைப்பட்டதையும், அவர்கள் தனக்கு விரோதமாக ஏற்கெனவே தீங்கு செய்ததையும், அவர்கள் தன்னுடைய துரவுகளை மூடிப்போட்டதையும் ஈசாக்கு இன்னும் மறக்கவில்லை.

ஈசாக்கு அவர்களை நோக்கி: ""ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே'' (ஆதி 26:27) என்று சொல்லுகிறார்.

அபிமெலேக்கும், அவனோடு கூட வந்திருக்கிற அகுசாத்தும், சேனாபதியாகிய பிகோலும் ஈசாக்கோடு சமாதான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அவர்கள் ஈசாக்கை நோக்கி, ""நிச்சயமாய் கர்த்தர் உம்மோடே கூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே'' (ஆதி 26:28,29) என்று சொல்லுகிறார்கள்.

அபிமெலேக்கு ஈசாக்கை தன்னிடத்தில் இராதபடிக்கு துரத்திவிட்டது மெய்தான். ஆனாலும் பெலிஸ்தர்கள் ஈசாக்குக்கு தீங்கு செய்யாமல், அவரை தொடாமல், அவருக்கு நன்மை செய்து, அவரை சமாதானத்தோடே அனுப்பிவிட்டதாக அபிமெலேக்கு சொல்லுகிறான். ஈசாக்கோடு கர்த்தர் இருக்கிறார் என்பதையும் அபிமெலேக்கு அங்கீகரிக்கிறான். ஈசாக்கு கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதையும் அபிமெலேக்கு புரிந்துகொள்கிறான். அப்படிப்பட்ட ஈசாக்கோடு உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டுமென்று அபிமெலேக்கும் பெலிஸ்தரும் விரும்புகிறார்கள்.

ஈசாக்கு அபிமெலேக்கின் வார்த்தைகளை நம்புகிறார். அபிமெலேக்கு தான் செய்த தப்பிதங்களை மறந்துவிட்டு, இப்போது ஈசாக்கிடத்தில் சிநேகத்தைக் காண்பிக்கிறான். அவனுடைய வார்த்தையில் உண்மையிருப்பதை ஈசாக்கு புரிந்துகொள்கிறார். பெலிஸ்தர்கள் தன்னோடு மெய்யாகவே சமாதான உடன்படிக்கை பண்ண விரும்புகிறார்கள் என்பதையும் ஈசாக்கு அங்கீகரிக்கிறார். அதன்பின்பு ஈசாக்கு அவர்களுக்கு விருந்துபண்ணுகிறார். அவர்கள் புசித்து குடிக்கிறார்கள் (ஆதி 26:30).

நாம் எல்லோரோடும் முடிந்த வரையிலும் சமாதானமாயிருக்கவேண்டும். நம்முடைய குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், அயலகத்தார், நம்முடைய ஊரார் ஆகிய எல்லோரோடும் நாம் சமாதானமாயிருக்க வேண்டும். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். பெலிஸ்தர்கள் தனக்கு காண்பித்த பழைய பொறாமையை ஈசாக்கு மறந்துவிட்டு, அவர்களோடு சமாதானமாயும் சிநேகமாயும் இருக்கிறார்.

ஈசாக்கும் அபிமெலேக்கும் காலதாமதம்பண்ணாமல் உடன்படிக்கை பண்ணுகிறார்கள். அவர்கள் அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக் கொள்கிறார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிடுகிறார்; அபிமெலேக்கும், அவனோடு கூட வந்த பெலிஸ்தரும் ஈசாக்கினிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விடுகிறார்கள் (ஆதி 26:31).

ஈசாக்கு சமாதான உடன்படிக்கை பண்ணினதை கர்த்தர் அங்கீகரிக்கிறார். ஈசாக்கு அபிமெலேக்கோடு எந்த நாளிலே சமாதான உடன்படிக்கை பண்ணினாரோ, அந்நாளிலே தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவருக்கு அறிவித்து, ""தண்ணீர் கண்டோம்'' என்று சொல்லுறார்கள் (ஆதி 26:32). சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய கிருபையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஈசாக்கு அபிமெலேக்கோடு சமாதான உடன்படிக்கை பண்ணியதினால் அவருக்கு ஒரு குறைவும் உண்டாகவில்லை. கர்த்தர் ஈசாக்குக்கு நிறைவான ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார்.

ஈசாக்கு அந்தத் துரவுக்கு சேபா என்று பேரிடுகிறார்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள் வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது (ஆதி 26:33).

ஏசாவின் விவாகம்

ஆதி 26:34,35

ஆதி 26:34. ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான்.

ஆதி 26:35. அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.

கானானியர்கள் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள். அவர்கள் ஆபிரகாமின் ஆசீர்வாதங்களுக்கு அந்நியர்கள். ஏசா கானானிய ஸ்திரீகளை விவாகம்பண்ணுகிறான். ஏசா தேவனுடைய ஆசீர்வாதத்தை விரும்பவுமில்லை. அவன் தேவனுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் பயப்படவுமில்லை.

ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணுகிறான் (ஆதி 26:34).

ஈசாக்கும் ரெபெக்காளும் யாக்கோபின்மீது அன்பாயிருப்பதுபோல ஏசாவின்மீதும் அன்பாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள். பெற்றோர் இரக்க சுபாவமுள்ளவர்கள். ஆனால் ஏசாவின் மனைவிகளோ பெரியவர்களை மதிக்கவில்லை. ஏசா ஏத்தியருடைய குமாரத்திகளை விவாகம்பண்ணியதினால், ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மிகுந்த வருத்தமுண்டாகிறது.

அவர்களுடைய மருமக்கள் கர்த்தரை ஆராதிக்காதவர்கள். அவர்கள் விக்கிரகாராதனைக்காரர்கள். ஏசாவின் மனைவிமார்கள் இருவரும் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருக்கிறார்கள் (ஆதி 26:35).

""மனநோவு'' என்பதற்கு தங்களுடைய ஆவியில் விசனமடைந்திருந்தார்கள் என்று பொருள். (ஆதி 27:46; ஆதி 28:2-9). எபிரெயரின் மூலபாஷை சுவடிகள் இதைப் பற்றிக் கூறும்போது யூதீத்தும், பஸ்மாத்தும் ஈசாக்கோடும், ரெபெக்காளோடும் எப்போதும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள் என்றும், ஈசாக்கு, ரெபெக்காள் ஆகியோரின் மார்க்கக் காரியங்களை மருமக்கள்மார் பின்பற்றவில்லையென்றும் கூறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.