25 அதிகாரம்
ஆபிரகாமின் மற்றொரு மனைவியாகிய கேத்தூராளும், அவர்களுக்கு பிறந்த குமாரரும் (ஆதி 25:1#4). ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்கு கொடுக்கிறார் (ஆதி 25:5,6). ஆபிரகாமின் ஆயுசுநாட்களும், மரணமும், அடக்க ஆராதனையும் (ஆதி 25:7#10).
இஸ்மவேலின் குமாரர்கள் (ஆதி 25:12#16). இஸ்மவேலின் வயதும் மரணமும் (ஆதி 25:17,18).
ஈசாக்குடைய வம்சவரலாறு (ஆதி 25:11). ரெபெக்காள் ஈசாக்குக்கு பெற்ற இரண்டு குமாரர்களும், அவர்களைப்பற்றிய விவரமும் (ஆதி 25:19#26). யாக்கோபு, ஏசா ஆகியோரின் சுபாவங்கள் (ஆதி 25:27,28). ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை யாக்கோபுக்கு விற்றுப்போடுகிறான் (ஆதி 25:29#34).
ஆபிரகாமின் வம்சவரலாறு
ஆதி 25:1#10
ஆதி 25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம் பண்ணியிருந்தான்.
ஆதி 25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும், பெற்றாள்.
ஆதி 25:3. யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
ஆதி 25:4. மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.
ஆதி 25:5. ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
ஆதி 25:6. ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கேபோகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
ஆதி 25:7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள்நூற்று எழுபத்தைந்து வருஷம்.
ஆதி 25:8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும் , முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
ஆதி 25:9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின்குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம் பண்ணினார்கள்.
ஆதி 25:10. அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
ஈசாக்கு ரெபெக்காளை தனக்கு மனைவியாக்கிக்கொள்கிறார். அதன்பின்பு ஆபிரகாம் முப்பத்தைந்து வருஷம் உயிரோடிருக்கிறார். ஆபிரகாமின் இந்த முப்பத்தைந்து வருஷ ஜீவியகாலம் முழுவதும் ஒரு சில வசனங்களில் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் காலத்தில் ஆபிரகாமின் ஜீவியத்தில் விசேஷமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. கர்த்தர் அவருக்கு விசேஷமான தரிசனங்களையோ, வெளிப்பாடுகளையோ கொடுக்கவில்லை. இக்காலத்தில், ஆபிரகாமுக்கு பெரிய சோதனைகளும் வரவில்லை. அவருடைய ஆயுசுகாலம் சாதாரணமாகவும், மிகவும் அமைதியாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கர்த்தருடைய பரிசுத்தவான்களில் அநேகர், தங்கள் ஆயுசுகாலத்தை, ஆபிரகாமைப்போல, எந்தவித ஆரவாரமும், பரபரப்புமில்லாமல், அமைதியாக களித்துக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஜீவியத்தில் அற்புதங்கள் நடைபெறாவிட்டால், விருவிருப்பான சம்பவங்கள் நடைபெறாவிட்டால், கர்த்தர் நம்மை கைவிட்டுவிட்டார் என்றோ, கர்த்தருடைய விசேஷித்த கிருபைகள் நமக்கு கிடைக்கவில்லை என்றோ பொருளல்ல. கர்த்தர் நம்மீது கண்ணோக்கமாகவே இருக்கிறார்.
ஆபிரகாமின் கடைசி ஆயுசுகாலம் அமைதியாக நடைபெறுவது கர்த்தருடைய விசேஷித்த கிருபை. ஆபிரகாம் இந்தக் காலத்தில் கேத்தூராள் என்னும் பெயர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருக்கிறார் (ஆதி 25:1). சாராள் மரித்த பின்பு, ஆபிரகாம் கேத்தூராளை விவாகம்பண்ணினார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
இது ஆபிரகாமின் இரண்டாம் திருமணம். கேத்தூராள் ஏற்கெனவே ஆபிரகாமின் மறுமனையாட்டியாக இருந்தாள். (1நாளா 1:32) இப்பொழுது அவள் ஆபிரகாமின் இரண்டாம் மனைவியாயிருக்கிறாள்.
கேத்தூராள் ஆபிரகாமுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும், பெறுகிறாள். இது ஆபிரகாமின் இரண்டாவது குடும்பத்தைப் பற்றிய வம்சவரலாறு. இந்தக் குடும்பத்தில் ஆபிரகாமிற்கும், கேத்தூராளுக்கும் ஆறு குமாரர்களும், ஏழு பேரப்பிள்ளைகளும், மூன்று பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளும் வருகிறார்கள். (ஆதி 25:1-4).
கேத்தூராளுக்கு பிள்ளைகள் பிறக்கிறார்கள். கேத்தூராள் ஆபிரகாமுக்கு சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும், பெறுகிறாள். யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெறுகிறான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள் (ஆதி 25:2#4).
ஆபிரகாமின் இரண்டாம் குடும்பத்தில் மீதியான் முக்கியமானவன். மீதியானும் அவனுடைய குடும்பத்தாரும் வேதாகமத்தில் 67 இடங்களில் கூறப்பட்டிருக்கிறார்கள். ஏசா மீதியானை வென்றான். (ஆதி 36:35). மோசே மீதியானுடைய தேசத்திற்குத் தப்பி ஓடிப்போய், அங்கு மீதியானிய ஸ்திரீ ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். (யாத் 2:15#16; யாத் 3:1; யாத் 4:19; யாத் 18:1).
மீதியானியர் இஸ்ரவேலுக்கு ஒரு கண்ணியாக இருந்தார்கள். (எண் 25:1#15) அவர்களோடு யுத்தம் பண்ணுமாறு தேவன் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார் (எண் 25:16-18; எண் 31: 1-20). பல நூற்றாண்டுகளாக, இஸ்ரவேலர்கள் மீதியானியரோடு அடிக்கடி யுத்தம் பண்ணினார்கள். (யோசு 13:21; நியா 6:1-2; நியா 7:8-25; நியா 8:3-28; நியா 9:17).
கிதியோன் மீதியானியரை முறியடித்தார். மீதியானியருடைய வீழ்ச்சி, ""மீதியானியரின் நாள்'' என்று அழைக்கப்படுகிறது. (ஏசா 9:4; ஏசா 10:26; சங் 83:9).
ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்கு கொடுக்கிறார். கர்த்தர் ஆபிரகாமை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், கொடுத்திருக்கிறார் (ஆதி 24:35).
ஆபிரகாம் இந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் ஈசாக்குக்கு கொடுக்கிறார். ஆபிரகாமுக்கு மறுமனையாட்டிகள் மூலமாகவும் பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஆனால் அவர் அந்தப் பிள்ளைகளுக்கு தன்னுடைய சொத்துக்களைக் கொடுக்கவில்லை. ஆபிரகாம் அவர்களுக்கு நன்கொடைகளை மாத்திரமே கொடுக்கிறார். ஆபிரகாம் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கேபோகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிடுகிறார் (ஆதி 25:6).
தன்னுடைய குமாரருக்குள் போட்டி பொறாமைகள், சண்டை சச்சரவுகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று ஆபிரகாம் மிகுந்த எச்சரிப்போடு இருக்கிறார். ஆகையினால் தனக்கு உண்டான யாவையும் மிகவும் ஞானமாக ஈசாக்கிற்குக் கொடுத்து விடுகிறார். இதன் மூலம் ஆபிரகாமின் மற்ற குமாரர்கள் மற்ற தேசங்களில் குடியேறி விடுகிறார்கள்.
கானான் தேசத்தை தேவன் ஆபிரகாமிற்கும், அவருடைய சந்ததிக்கும் வாக்கு பண்ணியிருக்கிறார். இந்த வாக்குத்தத்தம் ஈசாக்கின் வம்சவழியில் வரவேண்டும். ஆபிரகாமின் மற்ற குமாரர்கள் கானான் தேசத்தைக் குறித்து ஈசாக்கிடம் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுக்கிறார். (ஆதி 13:14-17; ஆதி 15:18-21; ஆதி 17:8).
எபிரெயருடைய வழக்கத்தின் பிரகாரம் குடும்பத்தின் பூர்வீக சொத்து, முதலாவது மனைவியின் மூலமாகப் பிறந்த மூத்த மகனுக்குக் கொடுக்கப்படும். மறுமனையாட்டிகள் மூலமாகப் பிறந்த குமாரருக்கு ஒன்றும் கொடுக்கப்படமாட்டாது. மூத்த மனைவிக்குப் பிள்ளை பிறக்காத பட்சத்தில் அவளுடைய அனுமதியோடு குடும்பச் சொத்து பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும்.
மேலும் மறுமனையாட்டிகளுக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும் வெகுமதிகள் கொடுக்கப் படுவது வழக்கம். இதன் அடிப்படையில் ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்கிற்குக் கொடுக்கிறார். தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி மற்றவர்களோடு சேராமல், வேறுபிரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு வேறுபிரிக்கப்பட்ட சந்ததியிலிருந்து மேசியா பிறப்பார். (ஆதி 12:1-3; ஆதி 13:14; ஆதி 24:3; ஆதி 28:1; யாத் 34:12-16; எண் 23:9; உபா 7:3-4; யோசு 23:12; எஸ்றா 9:1-10:44; நெகே 13).
ஆபிரகாம் தன்னுடைய மறுமனையாட்டியின் பிள்ளைகளை தன் குமாரனாகிய ஈசாக்கை விட்டுக் கிழக்கேபோகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிடுகிறார். கீழ்தேசம் என்பது கானானின் கிழக்குப் பகுதியைக் குறிக்கும். ஆபிரகாம் இங்கு குடியேறினார். மீதியானியர், இஸ்மவேலர், மோவாபியர், ஏதோமியர், ஆகியோர் கானானின் கீழ்த்திசையில் குடியேறினார்கள்.
ஜனங்கள், பிள்ளைகள், கீழ்த்திசையார் ஆகிய பெயர்கள் மொசொப்பொத்தொமியாவிலுள்ள ஆபிரகாமின் சொந்த ஜனங்களைக் குறிக்கும். (ஆதி 29:1).
பரிசுத்த வேதாகமத்தில் ""கீழ்த்திசையார்'' என்னும் பெயர் ஒரு சில ஜனங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. இஸ்ரவேலுக்கு எதிராக மீதியானியர் யுத்தம் பண்ணினார்கள். இந்த யுத்தத்தில் மீதியானியருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த பிற தேசத்தார் (நியா 6:3,33; நியா 7:12; நியா 8:10)
2. அரபியாவிற்கு கிழக்குப் பகுதியிலிருந்து யோபுவும் அவனுடைய இனத்தாரும். (யோபு 1:3)
3. பாபிலோனிலும், மற்ற கிழக்குத் தேசங்களிலும் இருந்தவர்கள். (2இராஜா 17:24; ஏசா 2:6; எசே 25:4,10; மத் 2:1)
4. பெர்சியர்கள். (ஏசா 41:2; ஏசா 46:11)
5. அந்திக்கிறிஸ்துவோடு யுத்தம் பண்ணும் சீரியாவிற்குக் கிழக்கிலுள்ள தேசங்களும், பாபிலோனியாவும், பெர்சியாவும். (தானி 11:44)
6. அர்மகெதோன் யுத்தத்தில் அந்திக் கிறிஸ்துவோடு இணைந்து யுத்தம் பண்ணும் சூரியன் உதிக்கும் திசையில் உள்ள ஜனங்கள். (வெளி 16:12).
ஆபிரகாம் இவ்வாறு செய்வது அவருடைய நீதிக்கும், ஞானத்திற்கும் அடையாளமாயிருக்கிறது. அவர் தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்துகிறார். ஆபிரகாமுக்கு ஈசாக்கு சுதந்தரவாளியாயிருக்கிறார். சாராளே ஆபிரகாமின் முதலாவது மனைவி. ஆபிரகாம் விவாகம்பண்ணின மற்ற ஸ்திரீகளெல்லாம், அவருக்கு மறுமனையாட்டிகளாயிருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு ஆபிரகாமின் சம்பத்தில் பங்கு பாகம் எதுவுமில்லை. ஈசாக்கு மாத்திரமே ஆபிரகாமுக்கு சேஷ்டபுத்திரனாயிருக்கிறார்.
ரெபெக்காள் ஈசாக்கை விவாகம்பண்ணும்போது, ஆபிரகாமின் சம்பத்துக்களெல்லாம் ஈசாக்குக்கு கொடுக்கப்படும் என்று, ஆபிரகாமின் ஊழியக்காரன் சொன்னான். இதன் பிரகாரம் ஆபிரகாமுக்கு உண்டானவையெல்லாம் ஈசாக்குக்கு கொடுக்கப்படவேண்டும்.
""என் எஜமானுடைய மனைவியாகிய சாராள்முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டானயாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்'' (ஆதி 24:36).
கர்த்தர் ஈசாக்கை தம்முடைய வார்த்தையினாலும், வாக்குத்தத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார். ஈசாக்கே ஆபிரகாமின் சுதந்தரவாளி. கர்த்தர் ஈசாக்கின் சந்ததியை ஆசீர்வதிப்பார். ஆகையினால் ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்கு கொடுக்கிறார்.
ஆபிரகாம் ஈசாக்குக்கு தன்னுடைய சம்பத்துக்களைக் கொடுத்தாலும், தன்னுடைய மற்ற பிள்ளைகளுக்கு அவர் ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக விட்டுவிடவில்லை. அடிமைப்பெண்ணாகிய ஆகாருக்கும் ஆபிரகாமுக்கும் பிறந்த இஸ்மவேலுக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஆபிரகாம் ஆகாருக்கு ஒரு துருத்தியில் தண்ணீர் மாத்திரமே கொடுத்தார். கேத்தூராள் பெற்ற பிள்ளைகளுக்கு ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுக்கிறார்.
மறுமனையாட்டியின் பிள்ளைகளுக்கும் பொருளாதார உதவிகளை செய்வது சமூகநீதியாயிருக்கிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சரியாகப் பராமரிக்கவில்லையென்றால், அந்தப் பிள்ளைகள் பிற்காலத்தில் துன்மார்க்கராய் வளருவார்கள்.
ஆபிரகாம் தன்னுடைய மறுமனையாட்டிகளின் பிள்ளைகளை, ஈசாக்கைவிட்டு தூரதேசத்திற்கு அனுப்பி வைத்துவிடுகிறார். அந்தப் பிள்ளைகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அருகாமையிலிருந்தால், அவர்கள் மத்தியிலே குழப்பங்கள் ஏற்படும். அவர்களுக்குள்ளே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் உண்டாகும்.
ஆபிரகாமுடைய மறுமனையாட்டியின் பிள்ளைகள், ஈசாக்கோடுகூட தங்கியிருந்தால், அவர்கள் பிற்காலத்தில் ஆபிரகாமுடைய சொத்திலே பங்கு கேட்பார்கள். சுதந்தரத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லுவார்கள். இதனால் ஆபிரகாமின் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும். ஆபிரகாம் இதையெல்லாம் ஞானமாக யோசித்துப் பார்த்து, தான் உயிரோடிருக்கும்போதே, அவர்களை தன் குமாரனாகிய ஈசாக்கை விட்டு கிழக்கே போக கீழ்தேசத்திற்கு அனுப்பிவிடுகிறார். ஆபிரகாம் இந்தக் காரியத்தை இப்போது செய்யவில்லையென்றால், இதை அவர் மரித்த பின்பு செய்வதற்கு வாய்ப்பில்லை.
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள்நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுகிறார் (ஆதி 25:7,8).
ஆபிரகாம் கானான் தேசத்திற்கு வந்தபோது அவருக்கு 75 வயது. அவர் நூறு வருஷமாக கானான் தேசத்திலே பரதேசியாக சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். 175 வருஷம் என்பது ஆபிரகாமுக்கு பூரண ஆயுசாகயிருக்கிறது. அந்த வயதில் அவர் தன் பிராணன் போய் மரிக்கிறார்.
ஆபிரகாம் மரிக்கும்போது யாக்கோபிற்கு பதினைந்து வயது. (ஆதி 25:7) ஆபிரகாம் சேமின் காலத்தில் 75 வருஷங்கள் வாழ்ந்தார். (ஆதி 11:11) ஆபிரகாமின் வம்சவரலாறும் அவருடைய மரணமும் வேதாகமத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆகையினால் வேதாகமத்தில் கூறப்பட்டிருப்பதைத் தவிர வேறு எதையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது.
ஆபிரகாம் பிராணன் போய் மரித்தார். பழைய ஏற்பாட்டில் இப்படிப்பட்ட வாக்கியம் 11 இடங்களிலும் (ஆதி 25:8,17; ஆதி 35:29; ஆதி 49:33;யோபு 3:11; யோபு 10:18; யோபு 11:20; யோபு 13:19; யோபு 14:10; எரே 15:9; புல 1:19), புதிய ஏற்பாட்டில் 8 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (மத் 27:50; மாற்கு 15:37-39; லூக்கா 23:46; யோவான் 19:30; அப் 5:5,10; அப் 12:23).
சரீர மரணத்தின்போது, உள்ளான மனுஷன் புறம்பான மனுஷனைக் கடந்து போகிறான். சரீரம் ஜீவனற்றதாகிறது. ஆவியும், ஆத்துமாவும் மரிப்பதில்லை. ஆவியும், ஆத்துமாவும் சரீரத்தை விட்டு பிரிந்து போய்விடுவது மரணமாகும். (யாக் 2:26).
ஆபிரகாம் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டார் என்பது ஒரு எபிரெய வழக்குச் சொல். ஆபிரகாம் மரித்துப் போன தன்னுடைய மூதாதையரோடு சேர்க்கப்பட்டார். மோசேயின் ஆகமங்களில் இந்த வாக்கியம் 11 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஆதி 15:8,17; ஆதி 35:29; ஆதி 49:29,33; எண் 20:24#26; எண் 27:13; எண் 31:2; உபா 32:50) நியாயாதிபதிகள் புஸ்தகத்தில் கூட இந்த வார்த்தை ஒரு தடவை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (நியா 2:10).
ஆபிரகாம் ""தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டார்'' என்பதற்கு இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்கள் என்பது பொருளல்ல.
ஆபிரகாம் மரிப்பதற்கு பயப்படவில்லை. தான் மரித்துப்போவதைக் குறித்து அவர் வேதனைப்படவோ அல்லது வருத்தப்படவோ இல்லை. அவர் சந்தோஷமாக மரித்துப்போக ஆயத்தமாயிருக்கிறார். ஆவிகளின் பிதாவாகிய தேவனிடத்தில், ஆபிரகாம் தன்னுடைய ஆவியை ஒப்புக்கொடுக்கிறார்.
ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்துப்போகிறார். கர்த்தர் அவருக்கு பூரண ஆயுசைக்கொடுப்பதாக வாக்குப்பண்ணினார். கர்த்தருடைய கிருபையினால் ஆபிரகாம் 175 வருஷம் உயிரோடிருந்தார். ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கும்போது, அவருடைய சரீரத்தில் பலவீனங்களும், பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கும். ஆபிரகாமின் மரணம், அவருடைய சரீர பலவீனத்திலிருந்து அவருக்கு விடுதலையைக் கொடுக்கிறது. முதிர்வயதிலிருக்கிறவர்களுக்கு அவர்களுடைய மரணமே அவர்களுக்கு மேன்மை.
ஆபிரகாம் மரிக்கும்போது அவர் முதிர்ந்த பூரணஆயுசிலிருக்கிறார். அவர் ஜீவனோடிருப்பதினால், இந்த உலகம் அவரைப் பார்த்து களைப்படையவில்லை. ஆபிரகாமே இந்த உலகத்தில் ஜீவித்து களைப்படைந்திருக்கிறார். அவர் இப்போது மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகள் நல்ல நரைவயதில் மரிக்காவிட்டாலும், அவர்கள் எப்போது மரிக்கிறார்களோ அதுவே அவர்களுடைய முதிர்ந்த பூரணஆயுசாகும். அவர்கள் ஜீவனோடிருந்த காலமெல்லாம் கர்த்தருக்குள் சந்தோஷமாயும், பரிபூரணமான திருப்தியாயும் ஜீவித்திருப்பார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிப்பதைவிட, பரலோகத்தில் ஜீவிக்கவேண்டும் என்னும் வாஞ்சையோடு, அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் மரணத்திற்காக காத்துக்கொண்டிருப்பார்கள். பரமதேசமே பரிசுத்தவான்களின் வாஞ்சை.
ஆபிரகாம் மரித்து தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுகிறார். மரித்தோரின் கூட்டத்தாரோடு, ஆபிரகாமின் சரீரம் சேர்க்கப்படுகிறது. அவருடைய ஆத்துமா ஆசீர்வதிக்கப்பட்டோரின் கூட்டத்தாரோடு சேர்க்கப்படுகிறது. நம்முடைய மரணம் நம்மை, நம்முடைய ஜனத்தாரோடே சேர்க்கும். நாம் ஜீவனோடிருக்கும்போது, நம்மோடு கூடயிருக்கிற ஜனங்கள் கர்த்தருடைய ஜனமாகவும் இருக்கலாம். அவர்கள் இந்த உலகத்தின் ஜனமாகவும் இருக்கலாம். அவர்கள் எப்படிப்பட்ட ஜனமாகயிருந்தாலும் நாம் மரிக்கும்போது நம்முடைய ஜனத்தாரோடே சேர்க்கப்படுவோம்.
ஆபிரகாமின் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின்குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவரை அடக்கம் பண்ணுகிறார்கள் (ஆதி 25:9).
ஈசாக்கும் இஸ்மவேலும் தங்கள் தகப்பனாரை அடக்கம்பண்ணி, அவருக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார்கள். இதற்கு முன்பு ஈசாக்கும் இஸ்மவேலும் வெவ்வேறு தேசத்திலிருந்தார்கள். ஆனாலும் ஆபிரகாம் மரித்துப்போன செய்தியைக் கேள்விப்பட்டு, அவர்கள் இருவரும் ஒன்றாய்க் கூடிவந்து, மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவரை அடக்கம்பண்ணுகிறார்கள்.
ஈசாக்கும், இஸ்மவேலும் சிநேகிதர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் அருகாமையிலே குடியிருந்திருக்கிறார்கள். சுபாவம், மார்க்கம் ஆகியவற்றைக் குறித்து ஆபிரகாமும், ஈசாக்கும் அவனிடத்தில் ஏற்கெனவே பகிர்ந்து பேசியிருக்க வேண்டும். அவர்களுக்குள் பல காரியங்கள் ஒற்றுமையாக இருந்திருக்க வேண்டும்.
ஆபிரகாம் உயிரோடிருந்தபோது ஈசாக்கும் இஸ்மவேலும் பிரிந்திருந்தார்கள். ஆபிரகாம் மரித்துப்போனபோதோ அவர்கள் இருவரும் ஒன்றுசேருகிறார்கள். ஆபிரகாமின் மரணத்தினால், அவருடைய குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் ஒப்புரவாகுகிறார்கள்.
ஈசாக்கும் இஸ்மவேலும் ஆபிரகாமின் சரீரத்தை மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின்குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அடக்கம்பண்ணுகிறார்கள்.
அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தார்; அங்கே ஆபிரகாமின் மனைவியாகிய சாராளும் ஏற்கெனவே அடக்கம்பண்ணப்பட்டிருக்கிறாள் (ஆதி 25:10).
இஸ்மவே-ன் வம்சவரலாறு
ஆதி 25:11#18
ஆதி 25:11. ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
ஆதி 25:12. சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவே-ன் வம்சவரலாறு:
ஆதி 25:13. பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவே-ன் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
ஆதி 25:14. மிஷ்மா, தூமா, மாசா,
ஆதி 25:15. ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.
ஆதி 25:16. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவே-ன் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
ஆதி 25:17. இஸ்மவே-ன் வயது நூற்றுமுப்பதேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
ஆதி 25:18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்கு போகிற வழியி-ருக்கும் சூர்மட்டும் வாசம் பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
மோசே ஆதியாகமம் புஸ்தகத்தை எழுதினார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அவர் ஆபிரகாமின் மரணத்தை எழுதி முடித்தபின்பு ஈசாக்கின் சரித்திரத்தை எழுத ஆரம்பிக்கிறார். ""ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்'' (ஆதி 25:11) என்று மோசே ஈசாக்கைப்பற்றிச் சொல்லுகிறார்.
ஆனாலும் மோசே ஈசாக்கின் சரித்திரத்தை தொடர்ச்சியாக எழுதாமல், அதற்கு இடையில், இஸ்மவேலின் சரித்திரத்தை எழுத ஆரம்பிக்கிறார். கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்திருக்கிறார். அவர் இஸ்மவேலையும் ஆசீர்வதித்திருக்கிறார். இஸ்மவேலின் சரித்திரத்தைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்மவேலும் ஆபிரகாமின் குமாரன். கர்த்தர் ஈசாக்குக்கு ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களை சொன்னதுபோல, அவர் இஸ்மவேலைக் குறித்தும் சில வாக்குத்தத்தங்களை சொல்லியிருக்கிறார்.
""சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவே-ன் வம்சவரலாறு'' (ஆதி 25:12) என்று இஸ்மவேலின் சரித்திரம் ஆரம்பிக்கப்படுகிறது.
இஸ்மவேலுக்கு பன்னிரண்டு குமாரர்கள் பிறக்கிறார்கள். இவர்கள் பன்னிரண்டு பிரபுக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரும் குடும்பத்தலைவர்கள். காலப்போக்கிலே இந்தப் பிரபுக்கள் பன்னிரண்டுபேரும் தேசங்களாகவும், கோத்திரங்களாகவும், திரளான எண்ணிக்கையுள்ள ஜனங்களாகவும் பலுகிப் பெருகுகிறார்கள். இவர்கள் அரபு தேசத்திலே வாசம்பண்ணுகிறார்கள்.
இஸ்மவேலுடைய பன்னிரண்டு புத்திரரின் பெயர்கள் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ""பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவே-ன் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவே-ன் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே'' (ஆதி 25:13#16).
பரிசுத்தவேதாகமத்தில் மீதியானியரைப்பற்றியும், கேதாரியரைப் பற்றியும் பல சம்பவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்மவேலின் குமாரரில், ""மிஷ்மா, தூமா, மாசா'' (ஆதி 25:14) ஆகிய மூன்று பேரின் பெயர்களும் ஒரே வசனத்தில் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மூன்று பெயர்களும் நமக்கு ஆவிக்குரிய நல்ல ஆலோசனையைக் கொடுக்கிறது.
மிஷ்மா, தூமா, மாசா என்னும் பெயர்களுக்கு, ""கேள், அமைதியாயிரு, தாங்கிக்கொள்'' என்று பொருள். யாக்கோபு இந்த சத்தியத்தை தன்னுடைய நிருபத்தில் எழுதியிருக்கிறார்.
""ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்'' (யாக் 1:19).
இஸ்மவேலின் புத்திரர் வயல்வெளிகளில் போடப்பட்ட கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் யுத்தமில்லாமல் சமாதான காலங்களில் செழிப்போடிருக்கிறார்கள். அப்போது அவர்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருக்கிறார்கள். இஸ்மவேலின் பிரபுக்கள் சமாதான காலங்களில் வெளிநிலங்களில் போடப்பட்ட கூடாரங்களில் தங்கியிருந்தாலும், யுத்தகாலங்களிலோ அரணான பட்டணங்களில் தங்கியிருக்கிறார்கள்.
இஸ்மவேலின் வயதைப்பற்றியும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ""இஸ்மவே-ன் வயது நூற்றுமுப்பதேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்'' (ஆதி 25:17).
இந்த வசனத்தில் ""மரித்தல்'' என்பதற்கான எபிரெய வார்த்தை ""நாபால்''என்பதாகும். சாதாரணமாக மரிப்பதற்கு ஆதி 25:8 ஆவது வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இங்கு பயன்படுத்தப்படவில்லை. நாபால் என்னும் எபிரெய வார்த்தைக்குச் சீட்டுப்போட்டு பிரிதல் என்று பொருள். ஆதி 16:12 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிற பிரகாரம் இஸ்மவேல் தன் சகோதரன் எல்லோருக்கும் எதிராகக் குடியிருந்தான். சகோதரரை விட்டு பிரிந்து ஜீவித்தான்.
கர்த்தர் இஸ்மவேலையும் ஆசீர்வதித்திருக்கிறார். ஆபிரகாம் இஸ்மவேலுக்காக தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணியபோது, ""இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக'' (ஆதி 17:18) என்று ஜெபம்பண்ணினார். கர்த்தர் ஆபிரகாமின் ஜெபத்தைக்கேட்டு இஸ்மவேலுக்கு நீடித்த ஆயுசைக் கொடுத்திருக்கிறார்.
இஸ்மவேலின் மரணத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""அவன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆபிரகாமின் மரணத்தைப்பற்றிச் சொல்லும்போது ""ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரணஆயுசிலும் பிராணன் போய் மரித்தார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோன்ற வார்த்தைகள் இஸ்மவேலின் மரணத்துக்கு சொல்லப்படவில்லை. இஸ்மவேலும் தன்னுடைய சிநேகிதரோடு சேர்க்கப்பட்டான். இதுவே அவனுக்கு ஆறுதல்.
இஸ்மவேலின் பிரபுக்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்கு போகிற வழியி-ருக்கும் சூர்மட்டும் வாசம் பண்ணுகிறார்கள். இதுவே இஸ்மவேல் தன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக குடியேறின பூமி (ஆதி 25:18).
ஈசாக்குடைய வம்சவரலாறு
ஆதி 25:19#28
ஆதி 25:19. ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
ஆதி 25:20. ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.
ஆதி 25:21. மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
ஆதி 25:22. அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்-, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிபோனாள்.
ஆதி 25:23. அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றி-ருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
ஆதி 25:24. பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.
ஆதி 25:25. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.
ஆதி 25:26. பின்பு, அவன் சசோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
ஆதி 25:27. இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசா-யும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
ஆதி 25:28. ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.
ஈசாக்குடைய வம்சவரலாற்றைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் யாக்கோபு, ஏசா ஆகிய இரண்டு குமாரர் பிறக்கிறார்கள். இந்தக் குமாரர்கள் இருவரும் இந்த உலகத்தில் பிரவேசிப்பதைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஈசாக்கு அமைதியான சுபாவமுள்ளவர். அவர் புதிய காரியங்கள் எதையும் முயற்சிபண்ணி செய்து முடித்ததாக பரிசுத்தவேதாகமத்தில் சொல்லப்படவில்லை. அவர் தன்னுடைய ஜீவியகாலம் முழுவதையும் அமைதியாக செலவு பண்ணுகிறார்.
ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாற்றைப்பற்றி சொல்லும்போது, ""ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்'' என்று அந்த வரலாறு ஆரம்பமாகிறது (ஆதி 25:19).
ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருக்கிறார்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள் (ஆதி 25:20).
ஈசாக்கின் மனைவியாகிய ரெபெக்காள் பல வருஷம் பிள்ளையில்லாமல் மலடியாயிருக்கிறாள். மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்கிறார்;கர்த்தர் ஈசாக்கின் வேண்டுதலைக் கேட்டருளுகிறார்; ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரிக்கிறாள் (ஆதி 25:21).
ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்துகொண்டபோது அவருக்கு நாற்பது வயதாயிற்று. ரெபெக்காள் யாக்கோபையும் ஏசாவையும் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருக்கிறார் (ஆதி 25:26). ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்தபின்பு, இருபது வருஷகாலமாக பிள்ளையில்லாதிருக்கிறார்.
ஈசாக்கு மலடியாயிருக்கிற தன் மனைவி ரெபெக்காளுக்காக கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்கிறார். அவர் தன் மனைவியோடுகூட கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்கிறார் என்றும் வேதபண்டிதர்கள் இந்த வாக்கியத்திற்கு விளக்கம் சொல்லுகிறார்கள். கணவனும் மனைவியும் கர்த்தரிடத்தில் கூடி ஜெபிக்கவேண்டும்.
யூதருடைய பாரம்பரிய சரித்திரத்தில் ஈசாக்கின் ஜெபத்தைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவர் தன் மனைவி ரெபெக்காளோடு மோரியா மலைக்கு போனார் என்றும், அங்கே அவர்கள் இருவரும் கர்த்தரிடத்தில் வேண்டுதல் பண்ணினார்கள் என்றும் யூதமார்க்கத்து ரபீமார்கள் சொல்லுகிறார்கள். ஆபிரகாமின் சந்ததி திரளாய்ப் பெருகும் என்று கர்த்தர் மோரியா மலையிலே வாக்குத்தத்தம்பண்ணினார்.
""நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரைமணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்'' (ஆதி 22:17).
கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின மோரியா மலைக்கு, ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளை அழைத்துக்கொண்டு போனார் என்றும், அங்கே அவர்கள் இருவரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேண்டும் என்று ஜெபம்பண்ணினார்கள் என்றும் யூதருடைய பாரம்பரிய சரித்திரம் சொல்லுகிறது.
கர்த்தர் ஈசாக்கின் வேண்டுதலைக் கேட்டருளுகிறார். அவருடைய மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரிக்கிறாள். ஈசாக்கின் கர்ப்பத்திலே இரண்டு பிள்ளைகள் உண்டாயிருக்கிறது. அந்தப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பாகவே, அந்தப் பிள்ளைகளைப்பற்றிய தீர்க்கதரிசனம் சொல்லப்படுகிறது. ரெபெக்காளின் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருகிறது (ஆதி 25:22).
தன்னுடைய கர்ப்பத்தில் இரண்டு பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருப்பதை அறிந்து, ரெபெக்காள் கலக்கமடைகிறாள். ரெபெக்காளின் கர்ப்பத்திலிருக்கிற யாக்கோபும் ஏசாவும், தங்கள் தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே, ஒருவரோடொருவர் மோதிக்கொள்கிறார்கள்.
இரண்டு பிள்ளைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, இரண்டு ராஜ்யங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதற்கு அடையாளமாயிருக்கிறது. இரண்டு ராஜ்யங்களில் ஒன்று தேவனுடைய ராஜ்யம். மற்றொன்று சாத்தானுடைய ராஜ்யம். சாத்தானுடைய அரண்மனையில் இருக்கும் சமாதானத்தைவிட, பரிசுத்தமான யுத்தமே மேன்மையானது.
தன்னுடைய கர்ப்பத்தில் இரண்டு பிள்ளைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன என்று ரெபெக்காளுக்கு தெரியவில்லை. ஆகையினால் அவள் இதுபற்றி விசாரிப்பதற்காக கர்த்தரிடத்தில் போகிறாள்.
தன்னுடைய கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருப்பதினால், ""எனக்கு எப்படியோ'' என்று சொல்-, ரெபெக்காள் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிபோகிறாள்.
ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்ததினால் ரெபெக்காள் கர்ப்பமடைந்தாள். ஆனால் அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருக்கிறது. இதனால் தனக்கு என்ன ஆகுமோ என்று நினைத்து கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போகிறாள். கர்த்தர் அவளுக்குக் கொடுத்த பதில் ஆதி 25:23 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது.
நம்முடைய மனதில் குழப்பம் இருக்கும்போது, அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கும், தெளிவு பெறுவதற்கும், நாம் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக போகவேண்டும். கர்த்தருடைய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ""நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தேன்'' (சங் 73:17).
ரெபெக்காள் தன்னுடைய மனதில் ஏற்பட்ட குழப்பத்தை விசாரிக்கும்படி கர்த்தரிடத்தில் போகிறாள். கர்த்தர் அவளுடைய குழப்பத்தை நீக்குகிறார். கர்த்தர் ரெபெக்காளை நோக்கி, ""இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றி-ருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்'' (ஆதி 25:23) என்று சொல்லுகிறார்.
இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. யாக்கோபிற்கும், ஏசாவிற்கும் இடையே நடைபெறும் சண்டைகளைக் குறித்து இந்தத் தீர்க்கதரிசனம் கூறுகிறது. அவர்களுடைய சந்ததிகளில் இந்தத் தீர்க்கதரிசனம் பலசந்தர்ப்பங்களில் ஓரளவு நிறைவேறிற்று.
ஆயிரம் வருஷ அரசாட்சியிலும், புதிய பூமியிலும் இந்தத் தீர்க்கதரிசனம் பூரணமாக நிறைவேறும். அப்போது மேசியாவின் தலைமையின்கீழ் இஸ்ரவேல் எல்லா தேசங்களுக்கும் தலையாக இருக்கும். (ஏசா 2:2-4; ஏசா 9:6-7; தானி 2:44-45; தானி 7:13-18; சக 14; செப் 3:14-17; வெளி 11:13).
ரெபெக்காளின் கர்ப்பத்தில் இரண்டு ஜாதிகள் உண்டாயிருக்கிறது. ஆதி 9:24-27; ஆதி 17:20; ஆதி 19:33-38; ஆதி 25:1-6; அப் 17:26 ஆகிய வசனங்களும், வேதாகமத்தில் மேலும் பல வசனங்களும் ஜலப்பிரளயத்திற்குப் பின்பு பூமியில் வெவ்வேறு ஜாதிகள் எவ்வாறு தோன்றிற்று என்பதை விளக்குகிறது.
மார்க்கம், பழக்கவழக்கம், சுபாவம் ஆகிய எல்லாவற்றிலும் ஏதோமியரும், இஸ்ரவேலரும் பூர்வ காலத்திலிருந்தே பிரிந்திருக்கிறார்கள். ஏதோமியர் விக்கிரகாராதனைக்காரர்கள். (2நாளா 25:20). அவர்களுடைய வரலாற்றில் பல காலங்களில் அவர்கள் யூதரோடு யுத்தம் பண்ணியிருக்கிறார்கள். (யாத் 15:15; எண் 20:14-21; 1சாமு 14:47; 2சாமு 8:14; 1இராஜா 11:15; 2இராஜா 8:20-22; 2இராஜா 14:7,10; எசே 25:12-14).
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் பலவற்றில் ஏதோமைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறப்பட்டிருக்கிறது. (யாத் 15:15; எண் 24:18; சங் 60:8-10; ஏசா 11:14; ஏசா 63:1; எரே 9:26; எரே 25:21; எரே 27:3; எரே 49:7-22; எசே 25:12-14; எசே 32:29; தானி 11:41; யோவே 3:19; ஆமோ 1:6-11; ஆமோ 2:1; ஆமோ 9:12; ஒப 1:1-10; மல் 1:4).
""அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாவின் குடும்பத்தார் (ஏதோமியர்) ஆரம்பத்தில் யாக்கோபின் குடும்பத்தாரைவிட (இஸ்ரவேலர்) பலத்திருக்கிறார்கள். இஸ்ரவேலுக்குப் பிரபுக்களும், ராஜாக்களும் வருவதற்கு முன்பாகவே ஏதோமியருக்கு பிரபுக்களும், ராஜாக்களும் இருந்தார்கள். (ஆதி 36).
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுவிக்கப்பட்டு, ஏதோமியரின் தேசத்தின் வழியாக இஸ்ரவேல் பிரயாணமான போது, அவர்களை எதிர்க்கும் அளவிற்கு ஏதோமியர் வலிமை பெற்றிருந்தார்கள் (எண் 20).
இதன் பின்பு, தாவீது ஏதோமியரை முழுவதுமாக முறியடித்தார். இஸ்ரவேலின் ஆட்சிக்குக்கீழ் அவர்கள் 150 வருஷங்கள் கட்டுப்பட்டிருந்தார்கள் (2சாமு 8:14). பாபிலோனிய சிறையிருப்பிற்குப் பின்பு, மக்கபேயர்கள் ஏதோமியரை யூதமார்க்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறும், இல்லையென்றால் அவர்களுடைய ஊரை விட்டு அவர்கள் வெளியேற வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.
இதன் பின்பு, ஏதோமியர்கள் இஸ்ரவேலின் ஆளுகைக்குக் கீழ் வந்தார்கள். ஆயிரம்வருஷ அரசாட்சியில் ஏதோமியர் மறுபடியும் இஸ்ரவேலின் ஆளுகைக்குக்கீழ் இருப்பார்கள். (சங் 60:8-10; ஏசா 11:14; ஏசா 63:1; ஆமோ 9:12).
யாக்கோபும் ஏசாவும் இரட்டைப் பிள்ளைகள் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சில இரட்டைப்பிள்ளைகளைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
1. யாக்கோபும், ஏசாவும் (ஆதி 25:24-28)
2. பாரேசும், சேராவும் (ஆதி 38:25-30)
3. திதிமு என்னப்பட்ட தோமோவும், அவனுடைய சகோதரன் அல்லது சகோதரியும் (யோவான் 11:16; யோவான் 20:24; யோவான் 21:2)
ரெபெக்காளுடைய கர்ப்பத்திலே இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. அவை இரண்டும் இரண்டு ஜனத்தாராயிருக்கிறது. ரெபெக்காள் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகயிருக்கிறாள். இதன் மூலமாக அவள் இரண்டு தேசங்களுக்கு தாயாகயிருக்கிறாள். அந்த தேசங்களின் ஜனத்தார் ஒத்த குணமுள்ளவர்களாகயிருக்கமாட்டார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வார்கள். ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள்.
ரெபெக்காளின் வயிற்றில் வளருகிற இரண்டு பிள்ளைகளின் சுபாவங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாயிருக்கும். ரெபெக்காளின் இரண்டு பிள்ளைகளில், மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் சொல்லுகிற இந்த வார்த்தை, தாவீது ராஜாவின் காலத்தில் நிறைவேறிற்று. ஏசா ஏதோமியருக்கு முற்பிதாவாகயிருக்கிறான். தாவீதின் வீட்டார், ஏதோமியரை அநேக வருஷங்களாக ஆளுகை செய்தார்கள். ஏதோமியர்கள் தாவீதின் வீட்டாருக்கு விரோதமாகக் கலகம்பண்ணும் வரையிலும், அவர்கள் தாவீதின் வீட்டாரை சேவித்தார்கள்.
""அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்'' (2நாளா 21:8).
ரெபெக்காளின் வயிற்றிலிருக்கிற இரண்டு பிள்ளைகளைப்பற்றி வேதபண்டிதர்கள் பல்வேறு விளக்கங்களை சொல்லுகிறார்கள். அவர்கள் இருவரும் தேவனுடைய கிருபைக்கும், மனுஷருடைய அக்கிரமத்திற்கும் அடையாளமாயிருக்கிறார்கள் என்பது ஒரு வியாக்கியானம்.
ரெபெக்காளின் கர்ப்பத்திலிருக்கிற இரண்டு பிள்ளைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதுபோல, மனுஷருடைய அக்கிரமத்திற்கு விரோதமாக தேவனுடைய கிருபை எப்போதும் போராடுகிறது. இந்தப் போராட்டத்தின் முடிவில் தேவனுடைய கிருபையே ஜெயம் பெறுகிறது.
ரெபெக்காளிள் கர்ப்பத்திலிருக்கிற இரண்டு பிள்ளைகளின் சுபாவங்களும் வித்தியாசமாயிருப்பதுபோல, அவர்களுடைய சரீரங்களின் தோற்றமும் வித்தியாசமாயிருக்கிறது. ஒருவன் சிவந்த நிறமுள்ளவனாகவும், அவனுடைய சரீரம் முழுவதும் ரோமம் அடர்ந்தவனாகவும் இருக்கிறான். மற்றவன் இவனைப்போல சிவப்பாகவும் இல்லை. ஏசாவுக்கு அடர்ந்த ரோமம் இருப்பதுபோல யாக்கோபுக்கு அடர்ந்த ரோமம் இல்லை.
பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருக்கிறது. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்படுகிறான்; அவனுக்கு ஏசா என்று பேரிடுகிறார்கள். பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்படுகிறான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிடுகிறார்கள் (ஆதி 25:24#26).
ரெபெக்காளின் கர்ப்பத்திலிருக்கிற இரண்டு பிள்ளைகளில் மூத்தவனாகிய ஏசா முதலாவதாக வெளிப்படுகிறான். இவன் பலமுள்ளவன். சுறுசுறுப்பான சுபாவமுள்ளவன். இரண்டாவதாக வெளிப்படுகிற யாக்கோபோ மிகவும் அமைதியானவன். இவன் சரீரத்தில் பலவீனமானவன்.
கர்த்தர் தம்முடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரமாக, இந்த உலகத்தில் பலமுள்ளவர்களை தமக்காக தெரிந்துகொள்ளாமல், பலவீனமானவர்களையே தமக்காக தெரிந்துகொள்கிறார். இதுவே தேவனுடைய தெய்வீக திட்டமாயிருக்கிறது.
""எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்'' (1கொரி 1:26,27).
ஏசாவும் யாக்கோபும் ரெபெக்காளின் கர்ப்பத்திலிருந்தபோதே, அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மற்றவனைப் பார்க்கிலும் பலத்தவனாயிருக்கிறான். அவர்கள் இருவருடைய சுபாவங்களும், உருவமும் வித்தியாசமாயிருப்பதுபோல, அவர்கள் செய்கிற தொழிலும், வாழ்க்கை முறையும் வித்தியாசமாயிருக்கிறது.
ரெபெக்காள் ஏசாவையும் யாக்கோபையும் பெற்றபோது, ஈசாக்கு அறுபது வயதாயிருக்கிறார். ஒரு குமாரனைப் பெற்றெடுப்பதற்கு ஆபிரகாம் 25 வருஷங்கள் காத்திருந்தார். (ஆதி 12:4; ஆதி 21:5) ஈசாக்கு 20 வருஷங்கள் காத்திருந்தார். (ஆதி 25:20,26) ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமின் வயது 100. (ஆதி 7:17; ஆதி 21:5). யாக்கோபும், அவனுடைய சகோதரனாகிய ஏசாவும் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது 60. (ஆதி 25:26).
இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருக்கிறான்; யாக்கோபு குணசா-யும் கூடாரவாசியுமாய் இருக்கிறான் (ஆதி 25:27).
ஏசா இந்தப் பிரபஞ்சத்து மனுஷன். அவன் வேட்டையில் பிரியமுள்ளவன். ஏசா நிம்ரோத்தைப்போலவும், இஸ்மவேலைப் போலவும் வனசஞ்சாரியாயிருக்கிறான். ஏசா மிருகங்களை வேட்டையாடுவதில் வல்லவனாயிருக்கிறான்.
யாக்கோபோ இப்பிரபஞ்சத்து மனுஷனாயிராமல், பரமராஜ்யத்தின் மனுஷனாயிருக்கிறான். அவனுக்கு இந்தப் பிரபஞ்சத்தில் பெரியவனாயிருக்கவேண்டும் என்றோ அல்லது வல்லவனாயிருக்கவேண்டும் என்றோ வாஞ்சையில்லை. யாக்கோபு கூடாரவாசியாயிருக்கிறான். மிருகங்களை வேட்டையாடுகிற ஏசா தந்திரகுணமுள்ளவன். கூடாரத்தில் வாசம்பண்ணுகிற யாக்கோபோ குணசாலியாயிருக்கிறான்.
யாக்கோபு தனிமையான இடங்களைத் தேடிச்சென்று, அங்கே கர்த்தரைப்பற்றித் தியானிப்பான். அவனுக்கு உலகப்பிரகாரமான காரியங்களில் ஆர்வம் இருக்காது. வனாந்தரத்தில் சுற்றி அலையவேண்டும் என்னும் விருப்பமும் அவனுக்கு இருக்காது. யாக்கோபு உலகப்பிரகாரமான சந்தடிகளையும், ஆரவாரங்களையும் விட்டுவிலகி, கூடாரங்களில் வாசம்பண்ண விரும்புகிறான்.
யாக்கோபு ஆடுகளை மேய்க்கிறவன். ஆடுகளை மேய்ப்பது அமைதியான தொழில். அவன் ஆடுகளைப் பராமரிப்பதுபோல தன்னுடைய பிள்ளைகளையும் பராமரிக்கிறான்.
""நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்'' (ஆதி 46:34).
யாக்கோபு ஒரு மாணவனைப்போல கூடாரவாசியாயிருக்கிறான். அவன் மெல்கிசேதேக்கின் கூடாரங்களுக்கு அடிக்கடி போவான் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் யாக்கோபுக்கு ஆவிக்குரிய சத்தியங்களை போதிக்கிறார்கள். இதனால் யாக்கோபு குணசாலியாயிருக்கிறான்.
ஈசாக்குக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தாலும், கர்த்தருடைய வாக்குத்தத்தம் யாக்கோபுக்கு மாத்திரமே கொடுக்கப்படுகிறது. கர்த்தர் ஈசாக்கின் சந்ததியை ஆசீர்வதிக்கிறார். அவர் யாக்கோபின் மூலமாய் வரும் ஈசாக்கின் சந்ததியை ஆசீர்வதிக்கிறார்.
ரெபெக்காளின் கர்ப்பத்தில் பிறக்கிற இரண்டு பிள்கைளும் சுபாவங்களிலும், ரூபங்களிலும் வித்தியாசமாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்மீது வைத்திருக்கிற அன்பும் வித்தியாசமாயிருக்கிறது.
ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே, அவர் ஏசாவின்மேல் பட்சமாயிருக்கிறார்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருக்கிறாள் (ஆதி 25:28). ஏசா ஈசாக்குக்குப் பிரியமானவன். யாக்கோபு ரெபெக்காளுக்கு பிரியமானவன்.
ஏசா வனசஞ்சாரியாயிருந்து, வேட்டையில் வல்லவனாயிருப்பது ஈசாக்குக்கு பிடித்திருக்கிறது. ஏசா சுறுசுறுப்பாயிருப்பதை ஈசாக்கு விரும்புகிறார். ஏசாவுக்கும் தன் தகப்பன் ஈசாக்கை எவ்வாறு பிரியப்படுத்துவதுஎன்று தெரிந்திருக்கிறது. ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிற மிருகங்கள் எல்லாம் ஈசாக்கின் வாய்க்கு ருசியாயிருக்கிறது. இதனால் ஈசாக்கு ஏசாவின் மீது பிரியமாயிருக்கிறார்.
ரெபெக்காளோ தன் கூடாரத்திலிருக்கிறவள். யாக்கோபும் கூடாரவாசியாயிருக்கிறான். அவன் தன் தாயாருக்கு வீட்டு வேலைகளில் உதவிசெய்கிறான். இதனால் ரெபெக்காள் யாக்கோபின்மீது பிரியமாயிருக்கிறாள்.
ரெபெக்காள் கர்த்தருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தியானித்துக்கொண்டிருக்கிறாள். மூத்தவன் இளைவனை சேவிப்பான் என்று கர்த்தர் சொன்னார். இந்த வாக்கியத்திற்கு, ஏசா யாக்கோபை சேவிப்பான் என்று பொருள். கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று ரெபெக்காள் நம்புகிறாள். ஆகையினால் அவள் யாக்கோபின்மேல் பட்சமாயும் பிரியமாயும் இருக்கிறாள்.
ஏசாவின் சேஷ்ட புத்திரபாகம்
ஆதி 25:29#34
ஆதி 25:29. ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
ஆதி 25:30. அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.
ஆதி 25:31. அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
ஆதி 25:32. அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
ஆதி 25:33. அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
ஆதி 25:34. அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.
ஏசா ஈசாக்கின் மூத்த குமாரன். இயற்கையான பிறப்பின் பிரகாரம் ஏசாவுக்கே சேஷ்டபுத்திர பாகம் செந்தமானது. ஆனாலும் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரமாக சேஷ்டபுத்திர பாகம் யாக்கோபுக்கு சொந்தமாயிருக்கிறது. இது யாக்கோபுக்கு கிடைத்திருக்கிற ஆவிக்குரிய சிலாக்கியம்.
பூர்வகாலத்தில் சேஷ்டபுத்திர பாகத்தோடு, விசேஷித்த ஆசீர்வாதங்கள் சேர்ந்து வருகிறது. ஆகையினால் சேஷ்டபுத்திரபாகத்திற்கு முக்கியத்துவம் உண்டு.
சேஷ்டபுத்திரபாகம் தனக்கு கிடைக்கவேண்டுமென்று யாக்கோபு விரும்புகிறான். ஆனால் அவன் அதை நேர்மையான வழியில் பெற்றுக்கொள்ளாமல், மறைமுகமான வழியில் பெற்றுக்கொள்கிறான். சேஷ்டபுத்திரபாகம் என்பது ஒரு விசேஷித்த ஆசீர்வாதம். இது ஒரு நல்ல ஈவு. யாக்கோபு நல்ல ஈவுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வாஞ்சிக்கிறான். யாக்கோபின் வாஞ்சையில் தப்பிதம் எதுவுமில்லை. ஆனால் அவன் சேஷ்டபுத்திர பாகத்தை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளும் முறை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அதை நியாயப்படுத்தவும் முடியாது.
யாக்கோபு தன்னுடைய சகோதரன் ஏசாவின் தேவையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அவனோடு பேரம்பேசி, சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக்கொள்கிறான்.
ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: ""அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்'' என்று சொல்லுகிறான். அப்பொழுது யாக்கோபு: ""உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு'' (ஆதி 25:29#31) என்று கேட்கிறான்.
சேஷ்டபுத்திரபாகம் மிகவும் ஆசீர்வாதமானது. பரிசுத்த வேதாகமத்தில் சேஷ்டபுத்திரபாகத்தின் ஆசீர்வாதங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
1. குடும்ப சுதந்தரவீதம். (ஆதி 25:5)
2. குடும்ப தலைமைஸ்தானம். (ஆதி 24:65; ஆதி 25:5; ஆதி 27:29,37)
3. தகப்பனின் ஆசீர்வாதம் (ஆதி 27:4, 27-38)
4. குடும்பத்தலைவரும், ஆசாரியரும் (ஆதி 26:25; ஆதி 35:3-7)
5. குடும்ப நிலங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்த சுதந்தரம் (ஆதி 25:5-6; ஆதி 27:28,37; ஆதி 28:4; ஆதி 35:12)
6. சந்ததி பலுகிப்பெருகுதல். (ஆதி 13:16; ஆதி 15:5; ஆதி 17:2,5; ஆதி 22:17; ஆதி 26:4,24; ஆதி 28:3,14; ஆதி 32:12; ஆதி 35:11)
7. விசேஷித்த பராமரிப்பு (ஆதி 12:2-3; ஆதி 26:3-4,24; ஆதி 27:28; ஆதி 28:15)
8. தனிப்பட்ட ஆசீர்வாதங்கள் (ஆதி 12:2; ஆதி 22:17; ஆதி 26:3)
9. பெரிய பெயர் (ஆதி 12:2; ஆதி 27:28-29,37)
10. எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதம். (ஆதி 12:2-3; ஆதி 18:18; ஆதி 22:18; ஆதி 26:4; ஆதி 28:14)
11. நித்திய சுதந்தரம் (ஆதி 13:15; ஆதி 17:7-8; ஆதி 28:13; ஆதி 35:12)
12. ஆபிரகாமின் உடன்படிக்கையில் விசேஷித்த நபர். (ஆதி 17:7,19; ஆதி 26:3-4; ஆதி 28:4,13-15)
13. மேசியாவின் ""தகப்பன்'' (ஆதி 12:3; ஆதி 21:12; ஆதி 22:17; ஆதி 26:5; ஆதி 28:14; ரோமர் 9:7; கலா 3:16)
14. பல தேசங்களுக்குத் தகப்பன். (ஆதி 17:5; ஆதி 18:18; ஆதி 35:11)
15. ராஜாக்களுக்கு தகப்பன் (ஆதி 17:6; ஆதி 35:11)
16. நித்திய இயற்கையான சந்ததி (ஆதி 17:7-8,19; 2சாமு 7; ஏசா 9:6-7; ஏசா 59:21; லூக்கா 1:31-32)
17. விசேஷித்த தேவனாக யெகோவாவைப் பெற்றிருப்பது. (ஆதி 17:7-8; ஆதி 28:15; ஆதி 32:9,12)
18. விரோதிகள்மீது அதிகாரம். (ஆதி 22:17; ஆதி 27:29)
19. தேசங்களின்மீது தலைமை (ஆதி 27:29)
20. பொருளாதார ஆசீர்வாதங்கள் (ஆதி 12:7; ஆதி 13:15; ஆதி 15:18; ஆதி 26:3-4; ஆதி 27:28-29,37; ஆதி 28:13; ஆதி 35:12)
21. ஆபிரகாமின் ஆவிக்குரிய ஆசீர்வாதம் # விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். (ஆதி 28:4; ரோமர் 4; கலா 3:14)
22. விரோதிகள்மீது சாபம். (ஆதி 12:3; ஆதி 27:29)
மூத்தவனுக்குச் சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுவதினால் அவனுடைய மற்ற சகோதரர்கள் அவன்மீது பொறாமைபடுவதற்கு வாய்ப்புள்ளது. மூத்தவனுக்கு இரட்டிப்பான சுதந்தரவீதம் கிடைக்கும். (உபா 21:15-17) சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போடலாம். (ஆதி 25:29-34; ஆதி 27:36; எபி 12:16; ரோமர் 9:12-13) மூத்தவனுடைய பாவத்தின்நிமித்தமாக சேஷ்டபுத்திரபாகம் மாற்றப்படும். (1நாளா 5:1-2) அல்லது தேவன் அதை நிறுத்தி வைப்பார். (ஆதி 25:23; ஆதி 48:15-20; 1இராஜா 2:15; 1நாளா 26:10).
ஆனால் ஏசாவோ, ""இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு'' (ஆதி 25:32) என்று சொல்லிவிடுகிறான். ஆவிக்குரிய காரியங்களில் ஏசா நம்பிக்கையில்லாதவன். இக்காலத்தில் மிகப்பெரிய பஞ்சம் இருந்ததாகவும், உணவு வகைகள் சரிவர கிடைக்காது எனவும் தெரியவருகிறது. ஆகையினால் ஒருவேளைப் போஜனம்கூட மனுஷருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
யாக்கோபு குணசாலியானவன். அவன் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாடுகிறவன். யாக்கோபுக்கு உலகப்பிரகாரமான ஞானமில்லை. அவன் கூடாரவாசியாயிருக்கிறான். யாக்கோபிடத்தில் உலகசிநேகமில்லை. அவன் பரமதேசத்தை வாஞ்சிக்கிறான். ஆனாலும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்காக, யாக்கோபு மிகவும் தந்திரமாக செயல்படுகிறான்.
உலகப்பிரகாரமான ஜனங்களைவிட, கர்த்தருடைய ஜனம், தங்கள் ஆத்துமாக்களைக் குறித்த காரியங்களில் அதிகஞானமுள்ளவர்களாயிருக்கிறார்கள். யாக்கோபு ஏசாவை நோக்கி, ""உன் சேஷ்டபுத்திர பாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு'' என்று சொல்லுகிறான். யாக்கோபு இந்த வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சொல்லுகிறான்.
சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போடுமாறு, யாக்கோபு ஏசாவினிடத்தில் கேட்பதற்கு, ஏற்ற வேளையைத் தெரிந்தெடுத்திருக்கிறான். ஏசா இப்போதுதான் வெளியிலிருந்து வந்திருக்கிறான். அவன் பசியாயிருக்கிறான். இளைத்திருக்கிறான். யாக்கோபோ கூழ் சமைத்துக்கொண்டிருக்கிறான். ஏசாவுக்கு அந்தக் கூழ் தேவைப்படுகிறது. யாக்கோபுக்கு ஏசாவின் சேஷ்டபுத்திர பாகம் தேவைப்படுகிறது. ஏசாவிடத்திலிருந்து அவனுடைய சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, இதுவே ஏற்ற வேளை என்று யாக்கோபு தீர்மானம்பண்ணுகிறான்.
யாக்கோபு ஏசாவிடம் பேரம் பேசுகிறான். யாக்கோபு முதலில், ""உன் சேஷ்டபுத்திர பாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு'' என்று மாத்திரமே கேட்டான். ஏசாவின் நிலமை மிகவும் பரிதாபமாயிருக்கிறது. ஏசா கூழுக்காக எதையும் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறான். ஏசா யாக்கோபை நோக்கி, ""இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு'' (ஆதி 25:32) என்று சொல்லுகிறான்.
ஏசாவின் வார்த்தைகள் யாக்கோபுக்கு சாதகமாயிருக்கிறது. ஆரம்பத்தில் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்டால் போதும் என்று கேட்ட யாக்கோபு, இப்போது ஏசாவிடத்தில், ""இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு'' (ஆதி 25:33) என்றும் சொல்லுகிறான். ஏசா தன் சேஷ்டபுத்திரபாகத்தை யாக்கோபுக்கு விற்றுப்போடவும் வேண்டும். தான் விற்றுப்போட்டதை அவனுக்கு ஆணையிட்டுக்கொடுக்கவும் வேண்டும். அப்போதுதான் இந்த விற்பனை உறுதிபண்ணப்படும்.
ஏசாவும் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்டபுத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போடுகிறான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுக்கிறான்; ஏசா புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விடுகிறான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணுகிறான் (ஆதி 25:34).
""ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்'' (எபி 12:16).
ஏதேன் தோட்டத்திலே, ஆதாமும் ஏவாளும் தடைபண்ணப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்து, தாங்கள் அதுவரையிலும் அனுபவித்த தெய்வீக ஆசீர்வாதங்களை இழந்துபோனார்கள். அதன்பின்பு இப்போது ஏசா அப்பத்தையும் பயற்றங்கூழையும் புசித்துக் குடித்து, தன் சேஷ்டபுத்திரபாகத்தை இழந்துபோகிறான்.
சேஷ்டபுத்திரபாகத்தை இழந்துபோனதற்காக ஏசா வருத்தப்படவில்லை. தன்னுடைய தப்பிதத்திற்காக அவன் மனம் வருந்தவில்லை. ஏசா அந்தக்கூழை குடித்து சாதாரணமாக எழுந்து போய்விடுகிறான். அவன் சாத்தானுடைய கண்ணியில் விழுகிறான். ஏசா வேட்டையில் வல்லவன். அவன் பெரிய மிருகங்களைக்கூட தந்திரமாக வேட்டையாடுவான். ஆனால் இப்போது சாதாரண பயற்றங்கூழுக்காக, ஏசா தன் சேஷ்டபுத்திரபாகத்தையே இழந்துபோகிறான்.
ஏசாவைப்போலவே, இக்காலத்தில் அநேகர் சிறிய காரியங்களில் ஞானமுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரிய காரியங்களில் மதியீனமாயிருக்கிறார்கள். அவர்கள் சாத்தானுடைய கண்ணிகளில் சிக்குண்டு, அழிந்துபோகிறார்கள்.
ஏசா மிகவும் இளைத்திருக்கிறான். அவனுக்கு அதிகமாய்ப் பசி உண்டாயிற்று. பசியினால் தான் சாகப்போகிற நிலமையிலிருப்பதாக ஏசா சொல்லுகிறான். அவன் இப்போதுதான் வெளியிலே வேட்டையாடிவிட்டு, யாக்கோபின் கூடாரத்திற்கு வந்திருக்கிறான். யாக்கோபு சமைத்துக்கொண்டிருக்கிற கூழ், ஏசாவின் பார்வைக்கு அருமையாயிருக்கிறது. ஏசா அந்தக் கூழைப்பற்றிச் சொல்லும்போது, ""அந்த சிவப்பான கூழிலே நான் சாப்பிட கொஞ்சம் தா'' என்று கேட்கிறான். ஏசாவுக்கு கூழின் நிறம் தெரிந்திருக்கிறது. ஆனால் அவனுக்கு தன் சேஷ்டபுத்திர பாகத்தின் அருமையும் மேன்மையும் தெரியவில்லை.
ஏசாவுக்கு மாம்சத்தின் தேவை பெரிதாய்த் தெரிகிறது. ஆனால் அவனுடைய ஆவிக்குரிய தேவைகள் அவனுக்கு பெரியதாய்த் தெரியவில்லை. ஏசா தன்னுடைய சேஷ்டபுத்திரபாகத்தையும், அதனால் வரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அசட்டைபண்ணுகிறான். ஏசாவைப்போலவே ஏராளனமான ஜனங்கள், உலகப்பிரகாரமான காரியங்களுக்கு ஆசைப்பட்டு, பரலோகத்தின் ஆசீர்வாதங்களை இழந்துபோகிறார்கள். அவர்கள் தங்கள் மாம்சத்தின் இச்சைகளுக்கு இடங்கொடுத்து, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறார்கள்.
ஏசா பசியாயும் களைப்பாயும் இருந்தாலும், ஒருவேளை போஜனத்திற்காக, தன்னுடைய சேஷ்டபுத்திரபாகத்தையே விற்றுப்போடவேண்டும் என்னும் அவசியம் எதுவுமில்லை. அவன் இதைவிட குறைவான கிரயம் செலுத்தி, போஜனம் செய்திருக்கலாம். சேஷ்டபுத்திர பாகம் என்பது மிகப்பெரிய கிரயம்.
ஏசா ஒருவேளை போஜனத்திற்காக, தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட ஆயத்தமாயிருக்கிறான். இதற்காக ஏசா சொல்லுகிற காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ""இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு'' (ஆதி 25:32) என்று ஏசா சொல்லுகிறான்.
ஏசா தன்னுடைய பெற்றோரிடத்தில் போஜனம் கேட்டிருந்தால், அவர்கள் அவனுக்கு போஜனத்தை தாராளமாய்க் கொடுத்திருப்பார்கள். ஏசா முயற்சி செய்திருந்தால், அவன் வேறு வழியில் தனக்கு போஜனம் பெற்றிருக்கலாம். ஆனால் ஏசாவோ மிகவும் எளிதான வழியைத் தேடுகிறான். ஆனால் அதற்காக பெரிய கிரயத்தை செலுத்துகிறான்.
ஏசா தன் சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணுகிறான். தன்னுடைய சரீர தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். ஏசாவைப்போலவே இக்காலத்திலும் அநேகர், உலகப்பிரகாரமான காரியங்களுக்கும், மாம்சப்பிரகாரமான காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஆவிக்குரிய காரியங்களை அலட்சியம் பண்ணுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பரலோகத்தின் காரியங்களைவிட, இந்தப் பூமிக்குரிய காரியங்களே பெரியதாய்த் தெரிகிறது.
ஏசா தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டாலும், அதற்காக அவன் மனம் வருந்தவில்லை. ஏசா புசித்து குடித்து எழுந்து போய்விடுகிறான். தன்னுடைய தப்பிதத்திற்கு மனந்திருந்த வேண்டும் என்னும் எண்ணம் ஏசாவினிடத்தில் சிறிதுமில்லை. இவ்வாறாக ஏசா தன் சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணுகிறான்.
