21 அதிகாரம்
கர்த்தர் வாக்குப்பண்ணின பிரகாரமாக, ஆபிரகாமின் குடும்பத்திலே ஈசாக்கு பிறக்கிறார் (ஆதி 21:1#8). அடிமைப்பெண்ணாகிய ஆகாரின் குமாரனான இஸ்மவேல், ஆபிரகாமின் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார் (ஆதி 21:9#21).
ஆபிரகாம் அபிமெலேக்கோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார் (ஆதி 21:22#32). ஆபிரகாம் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்கிறார் (ஆதி 21:33,34).
ஈசாக்கு
ஆதி 21:1#8
ஆதி 21:1. கர்த்தர் தாம் சொல்-யிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
ஆதி 21:2. ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
ஆதி 21:3. அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.
ஆதி 21:4. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
ஆதி 21:5. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.
ஆதி 21:6. அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.
ஆதி 21:7. சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றறேனே என்றாள்.
ஆதி 21:8. பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில், ஒரு சிலர் இந்த உலகத்தில் பிறக்கும்போதே மிகுந்த எதிர்பார்ப்போடும், அதிகமான வாக்குத்தத்தங்களோடும் பிறக்கிறார்கள். அவர்களில் ஈசாக்கும் ஒருவர். தங்களுக்கு பேரும் புகழும் உண்டாகவேண்டும் என்பதற்காக கர்த்தர் இவர்களுக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுக்கவில்லை. தம்முடைய சித்தம் இவர்கள் மூலமாக நிறைவேறவேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது.
ஈசாக்கு இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறார். மேசியாவைப்பற்றிய வாக்குத்தத்தம் பூர்வகாலம் முதலே சொல்லப்பட்டு வருகிறது. அக்காலத்திலிருந்தே கர்த்தருடைய ஜனத்தார் தங்களுடைய மேசியா வருவார் என்று எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவானவர் ஈசாக்கின் சந்ததியில் வருகிறார்.
ஈசாக்கின் பிறப்பைக் குறித்து கர்த்தர் ஏற்கெனவே வாக்குப்பண்ணியிருக்கிறார். கர்த்தர் தாம் சொல்-யிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமாகிறார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளுகிறார் (ஆதி 21:1).
கர்த்தர் சாராளுடைய இளமையைப் புதுப்பிக்கிறார். ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து, அதை வளர்ப்பதற்கு ஏற்ற சரீரத்தை கர்த்தர் சாராளுக்குப் புதுப்பித்துக் கொடுக்கிறார் (ஆதி 21:1-2).
ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெறுகிறாள். ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்றுபேரிடுகிறார் (ஆதி 21:2,3).
ஈசாக்கு என்னும் பெயருக்கு நகைப்பு என்று பொருள். (ஆதி 17:19,21; ஆதி 21:6-7). ஈசாக்கின் வம்சவரலாறு ஆதி 21:1-28:13; ஆதி 35:12-20 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஈசாக்கு கிறிஸ்துவுக்கும், (ஆதி 22) விசுவாசிகளுக்கும் (கலா 4:28-29) அடையாளமாக இருக்கிறார். (ரோமர் 9:7,10; எபி 11:9-20; யாக் 2:21)
ஈசாக்கு கர்த்தருடைய வாக்குத்தத்தின் பிரகாரமாக பிறக்கிறார். தேவன் குறித்திருந்த காலத்திலே ஈசாக்கு பிறக்கிறார். கர்த்தர் காலம் தவறாதவர். கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நாம் குறித்திருக்கும் காலத்தில் நிறைவேறுவதில்லை. அவை கர்த்தர் குறித்திருக்கும் காலத்தில் நிச்சயமாய் நிறைவேறும். கர்த்தருடைய காலமே ஏற்றகாலம்.
கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் பொதுவான பராமரிப்பின் வல்லமையினால் நிறைவேறுவதில்லை. அவை தேவனுடைய விசேஷித்த வாக்குத்தத்தங்களின் வல்லமையினால் நிறைவேறுகிறது. அதன் பிரகாரமாகவே தேவன் குறித்திருந்த காலத்திலே ஈசாக்கு பிறக்கிறார்.
கர்த்தருடைய வாக்குத்தத்தங்களின் வல்லமையினால், விசுவாசிகளும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பெரிய காரியங்களை செய்வார்கள். அவர்கள் இந்தக் காரியங்களை மனுஷருடைய வல்லமையினால் செய்யாமல், தேவனுடைய தெய்வீக வல்லமையினால் செய்வார்கள்.
""இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது'' (2பேது 1:4).
கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தைக் கொடுக்கிறார். ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறார். சாராள் ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றுக்கொடுகிறாள். அப்போது ஆபிரகாம் அந்தக் குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிடுகிறார். ஈசாக்கு என்னும் பெயருக்கு ""நகைப்பு'' என்று பொருள் (ஆதி 21:3).
ஆபிரகாம் தன்னுடைய குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. ஆபிரகாம் கர்த்தரிடத்திலிருந்து ஈசாக்கின் பிறப்பைப்பற்றிய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொண்டபோது, அவர் சந்தோஷத்தினால் களிகூர்ந்தார்.
""அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்-க்கொண்டார்'' (ஆதி 17:17).
சாராள் ஈசாக்கின் பிறப்பைக் குறித்த வாக்குத்தத்தத்தைக் கேட்டபோது, அவள் அவிசுவாசத்தினால் நகைத்தாள். தன்னுடைய முதிர்வயதிலே தனக்கு பிள்ளை பிறக்குமோ என்று சாராள் சந்தேகப்பட்டாள்.
பிற்காலத்தில் இஸ்மவேல் ஈசாக்கைப் பார்த்து நகைத்தார். ஒருவேளை ஈசாக்குக்கு ""நகைப்பு'' என்னும் பொருளில் பேரிடப்பட்டிருப்பதினால், இஸ்மவேல் அதை நினைத்து நகைத்திருக்கலாம். இஸ்மவேல் ஈசாக்கை பரியாசம்பண்ணினார் (ஆதி 21:9).
ஈசாக்கின் சந்ததியில் கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பிறப்பார்கள். இது கர்த்தருடைய வாக்குத்தத்தம். எல்லா காலங்களிலும் இருக்கிற பரிசுத்தவான்கள், இந்த வாக்குத்தத்தத்தை நினைத்து கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறார்கள். ஆகையினால் ஈசாக்குக்கு ""நகைப்பு'' என்று பொருள்படும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஈசாக்கு பிறந்தபோது, சாராள் தனக்குள்ளே மிகவும் சந்தோஷப்படுகிறாள். கர்த்தரே அவளுக்கு இந்த சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் சாராளுக்கு சந்தோஷப்படுவதற்கான காரணத்தையும் கொடுக்கிறார், அதோடு அவளுக்கு சந்தோஷப்படுவதற்கான இருதயத்தையும் கொடுக்கிறார்.
""தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்'' (ஆதி 21:6) என்று சாராள் சொல்லுகிறாள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தாயாராகிய மரியாளின் இருதயமும் தேவனுக்குள் களிகூர்ந்தது. •""அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது'' (லூக் 1:46,47) என்று சொன்னாள்.
நம்முடைய சந்தோஷம் எப்படிப்பட்டதாகயிருந்தாலும், நம்முடைய சந்தோஷத்திற்கு கர்த்தரே காரணம் என்று நாம் அங்கீகரிக்கவேண்டும். கர்த்தர் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லையென்றால், நம்முடைய நகைப்பு மதியீனருடைய நகைப்பாகவே இருக்கும்.
நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கும்போது, கர்த்தருடைய கிருபையினால், நம்மோடு கூடயிருக்கிறவர்களும் சந்தோஷமாயிருப்பார்கள். நம்முடைய சந்தோஷம் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்.
சாராள் தன்னுடைய சந்தோஷத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்'' என்று சொல்லுகிறாள். ஈசாக்கு பிறந்த நற்செய்தியைக் கேள்விப்படுகிற அனைவரும், சாராளின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களும் சாராளோடுகூட மகிழ்ந்து களிகூருவார்கள்.
""கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்'' (லூக் 1:58).
ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிகிறார். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி ஈசாக்குக்கு விருத்தசேதனம்பண்ணுகிறார். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறுவயதாயிருக்கிறார் (ஆதி 21:4,5).
தனக்கு ஒரு குமாரன் பிறந்தது சாராளுக்கு மிகுந்த ஆச்சரியமாயிருக்கிறது. தன்னுடைய சரீரத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு காரியம் சாராளுக்கு நடைபெற்றிருக்கிறது. சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்று கர்த்தர் சொன்னபோது, சாராளால் கர்த்தருடைய வார்த்தையை நம்பமுடியவில்லை.
""சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றறேனே'' (ஆதி 21:7) என்று சாராள் அவிசுவாசத்தோடும், அதே வேளையில் ஆச்சரியத்தோடும் சொல்லுகிறாள். கர்த்தருடைய வார்த்தை சாராளுக்கு நிறைவேறியிருக்கிறது. ஆகையினால் அவளால் அதை நம்பாமல் இருக்க முடியாது. அவளுடைய மாம்ச சிந்தையினால் அதை நம்பவும் முடியவில்லை. சாராளின் மனதில் ஆச்சரியமுண்டாயிற்று.
அதுபோலவே கர்த்தர் நமக்கும் சில வாக்குத்தத்தங்களை சொல்லும்போது, அது நிறைவேறுமா என்று நாம் சந்தேகப்படுகிறோம். ஆனாலும் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதையும், வாக்குத்தத்தங்களெல்லாம் கர்த்தருக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறது என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும்.
நாம் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனங்களாயிருக்கிறோம். கர்த்தருடைய உடன்படிக்கை நிறைவேறுவதற்கும், நம்முடைய சுயபலத்திற்கும், சுயபராக்கிரமத்திற்கும் சம்பந்தமே இல்லை. நாம் நினைப்பதற்கும், திட்டமிடுவதற்கும், எதிர்பார்ப்பதற்கும் மேலாக கர்த்தர் நமக்கு பெரிய காரியங்களை செய்கிறார்.
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்தப் பூமிக்கு அனுப்பினார். நம்முடைய பாவங்களுக்காக தேவன் தம்முடைய குமாரனை கல்வாரி சிலுவையிலே பலியாக ஒப்புக்கொடுத்தார். கர்த்தருடைய பரிசுத்தஆவியானவர் நம்மைச் சுத்திகரிக்கிறார். கர்த்தருடைய தூதர்கள் நமக்கு பணிவிடை செய்கிறார்கள். இரட்கராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். இவையெல்லாம் கர்த்தருடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக நடைபெறுகிற காரியங்கள். இவை நமக்கு நடைபெறவேண்டும் என்று நம்மால் கர்த்தருக்கு கட்டளை கொடுக்க முடியாது. கர்த்தர் தம்முடைய கிருபையினால் தம்முடைய வாக்குத்தத்தங்களையும், திட்டங்களையும் தம்முடைய சித்தத்தின் பிரகாரம் நிறைவேற்றுகிறார்.
ஈசாக்கு என்னும் பிள்ளை வளருகிறது. ஈசாக்கின் குழந்தைப்பருவத்தைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பிள்ளை பால் மறக்கிறது. வளர்ந்த பிள்ளைக்கு பால் தேவைப்படாது. அதற்கு திடமான போஜனம் கொடுக்கவேண்டும். பிள்ளையை பால் மறக்கப்பண்ணவேண்டும்.
""பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்'' (எபி 5:13,14).
ஈசாக்கு பால் மறந்த நாளிலே, ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணுகிறார் (ஆதி 21:8). கர்த்தருடைய ஆசீர்வாதம் ஈசாக்கின்மீது தங்கியிருக்கிறது. கர்த்தர் ஈசாக்கை பாதுகாப்பாக வளர்க்கிறார். ஈசாக்கு பிள்ளையாகயிருந்து, தாய்பால் பருகிய காலத்தில், கர்த்தர் ஈசாக்கை வியாதிகளுக்கும், தொற்றுநோய்களுக்கும் விலக்கி பாதுகாக்கிறார். இவையெல்லாம் கர்த்தருடைய தெய்வீக பராமரிப்புக்கள். ஆபிரகாம் தேவனுடைய நன்மையை நினைவுகூர்ந்து, கர்த்தரைத் துதித்து, ஒரு பெரிய விருந்துபண்ணுகிறார்.
""நீரே என்னைக் கர்ப்பத்தி-ருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். கர்ப்பத்தி-ருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன் நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்'' (சங் 22:9,10).
""இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்தி-ருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்'' (ஓசி 11:1).
இஸ்மவேல்
ஆதி 21:9#13
ஆதி 21:9. பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,
ஆதி 21:10. ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்.
ஆதி 21:11. தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது,
ஆதி 21:12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
ஆதி 21:13. அடிமைப்பெண்ணின் மகனும் உன்வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாகுக்குவேன் என்றார்.
இஸ்மவேல் ஈசாக்கின் மூத்த சகோதரன். அடிமைப்பெண்ணாகிய ஆகார் இஸ்மவேலை ஆபிரகாமுக்கு பெற்றாள். இஸ்மவேல் பிறந்தபோதே, சாராள் ஆகாரை கடினமாய் நடத்தினாள். இந்த வசனத்தில் ஆகாரைப்பற்றிச் சொல்லும்போது, ""எகிப்து தேசத்தாளாகிய ஆகார்'' (ஆதி 21:9) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆபிரகாமின் சந்ததியார் எகிப்து தேசத்திலே நானூறு வருஷங்கள் உபத்திரவங்களை அனுபவிப்பார்கள் என்றும், அந்த உபத்திரவக்காலம் இப்போது ஆரம்பமாயிற்று என்றும், வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.
""அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்'' (ஆதி 15:13).
இஸ்மவேல் ஈசாக்கைவிட பதினான்கு வருஷம் வயதில் மூத்தவர். ஆனாலும் இஸ்மவேல் தன் சகோதரன் ஈசாக்கை பரியாசம்பண்ணுகிறார். இரண்டுபேருக்கும் ஒரே வயதல்ல. எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் காண்கிறாள் (ஆதி 21:9).
தன்னுடைய குமாரன் ஈசாக்கை, இஸ்மவேல் பரியாசம்பண்ணுவதைப் பார்த்து, சாராள் கோபப்படுகிறாள். சாராள் ஆபிரகாமை நோக்கி: ""இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பேதள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை'' (ஆதி 21:10) என்று சொல்லுகிறாள்.
சாராள் கோபத்தில் பேசுகிறாள். ஆனாலும் சாராள் சொன்ன வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் மேற்கோளாக சொல்லப்பட்டிருக்கிறது. சாராள் தீர்க்கதரிசன ஆவியினால் பேசியதுபோல, அவளுடைய வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறது.
""அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது'' (கலா 4:30).
இஸ்மவேல் ஆபிரகாமின் வீட்டில் தங்கியிருந்தாலும், அவர் சுதந்தரவாளியாயிருக்கமாட்டார். இஸ்மவேலைப்பற்றிய வாக்கியம் அவிசுவாசிகளுக்கு எச்சரிப்பாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. அவிசுவாசிகளும், மாய்மாலக்காரரும், துன்மார்க்கரும் சபையிலே இருந்தாலும், அவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளிகளாயிருக்கமாட்டார்கள்.
தன் மகன் இஸ்மவேலைக் குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருக்கிறது (ஆதி 21:11). இஸ்மவேல் ஈசாக்கை அதிகமாய்ப் பரியாசம்பண்ணியிருக்கிறார். தன் மகன் ஈசாக்கைக் குறித்து, இஸ்மவேல் சொன்ன காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருக்கிறது என்று வேதபண்டிதர்கள் இந்த வாக்கியத்திற்கு விளக்கம் சொல்லுகிறார்கள்.
சாராள் இஸ்மவேலைக் குறித்து சொன்ன காரியம் ஆபிரகாமுக்கு துக்கமாயிருக்கிறது என்றும் வேதபண்டிதர்களில் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள். இஸ்மவேல் தண்டிக்கப்படவேண்டும் என்று சாராள் உறுதியாகச் சொல்லுகிறாள். இஸ்மவேலை வீட்டில் வைத்து தண்டிக்கக்கூடாது என்றும், இஸ்மவேலையும், அவருடைய தாயாராகிய ஆகாரையும் வீட்டைவிட்டு புறம்பே தள்ளவேண்டும் என்றும் சாராள் சொல்லுகிறாள்.
ஆபிரகாமின் வீட்டில் குடும்ப பிரச்சனை உண்டாயிற்று. ஆபிரகாம் துக்கமாயிருக்கிறார். கர்த்தர் ஆபிரகாமின் துக்கத்தை அறிந்திருக்கிறார்.
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: ""அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாகுக்குவேன்'' (ஆதி 21:12,13) என்று சொல்லுகிறார்.
ஆபிரகாமுடைய உடன்படிக்கையின் ஜனத்தார் விசேஷித்த ஜனமாயிருப்பார்கள். அவர்கள் மற்ற ஜாதியாரோடு கலக்காமல், பரிசுத்த வித்தாகயிருப்பார்கள். உடன்படிக்கையின் ஜனங்களுக்கும், உடன்படிக்கைக்குட்படாத ஜனங்களுக்கும் சம்பந்தமில்லை. ஆகையினால்தான் இஸ்மவேலையும், அவளுடைய தாயாராகிய ஆகாரையும் புறம்பே தள்ளவேண்டுமென்று சாராள் சொல்லுகிறாள். ஆகார் எகிப்து தேசத்தாள். அவள் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவள்.
இஸ்மவேல் ஆபிரகாமின் வீட்டைவிட்டு வெளியேற்றப்படும்போது, அவரும் அவருடைய சந்ததியும் அழிந்துபோகக்கூடாது. இஸ்மவேல் அடிமைப்பெண்ணின் குமாரனாகயிருந்தாலும், அவர் ஆபிரகாமின் வித்தாகவும் இருக்கிறார். ஆகையினால் கர்த்தர் இஸ்மவேலையும் ஒரு ஜாதியாக்குவதாக வாக்குப்பண்ணுகிறார் (ஆதி 21:13).
கர்த்தரே ஜாதியையும் தேசத்தையும் உருவாக்குகிறார். அவரே அவற்றை ஸ்தாபிக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில் அநேகர் தேவனுடைய தெய்வீக பராமரிப்புக்களை அதிகமாய் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கு அந்நியராயிருக்கிறார்கள்.
ஆவிக்குரிய ஆசீர்வாதம் வேறு. உலகப்பிரகாரமான ஆசீர்வாதம் வேறு. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் எல்லா ஜனங்களுக்கும் பொதுவானது.
ஆகார்
ஆதி 21:14#21
ஆதி 21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுபோய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
ஆதி 21:15. துருத்தியி-ருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,
ஆதி 21:16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
ஆதி 21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்தி-ருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
ஆதி 21:18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
ஆதி 21:19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
ஆதி 21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
ஆதி 21:21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
அடிமைப்பெண்ணாகிய ஆகாரும், அவளுடைய குமாரன் இஸ்மவேலும் ஆபிரகாமின் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். சாராள் ""இந்த அடிமைப்பெண்ணையும், அவள் மகனையும் புறம்பே தள்ளும்'' என்று சொன்ன காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருக்கிறது. கர்த்தரும் ஆபிரகாமிடம், ""சாராள் உனக்கு சொல்லுவது எல்லாவற்றையும் கேள்'' என்று சொல்லியிருக்கிறார்.
""ஈசாக்கிடத்தில் உன் சந்ததி விளங்கும்'' என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு சொல்லுகிறார் (ஆதி 21:12) # (ரோமர் 9:7; கலா 3:16; எபி 11:18) ஆதி 21:2 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நடைபெற்று ஐந்து வருஷங்கள் ஆயிற்று. ஆதி 12:4 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முப்பது வருஷங்களாயிற்று.
ஆபிரகாம் தேவனுடைய தெய்வீக கட்டளைக்கு காலதாமதம்பண்ணாமல் உடனே கீழ்ப்படிகிறார். ஆபிரகாம் காலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிடுகிறார்.
""துருத்தி'' விலங்குகளின் தோலினால் செய்யப்படுகிறது. (மத் 9:17). எகிப்து தேசத்தில் ஸ்திரீகள் சுமைகளைத் தங்கள் தோள்களின்மீதும், புருஷர்கள் சுமைகளைத் தங்கள் தலைகளின்மீதும் சுமப்பார்கள். (ஆதி 24:15).
பெயர்செபாவின் தென் பகுதியில் நீரூற்றுகள் இருந்ததாகத் தெரியவில்லை. அங்கு துரவுகளும் அதிகமில்லை. அந்தத் தேசத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களால் மட்டுமே துரவுகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அந்நியர்கள் துரவிலுள்ள தண்ணீரைத் திருடி விடாதபடி, துரவுகளை மூடி மறைப்பது அக்காலத்து வழக்கம். ஆகாரின் சொந்த ஜனங்கள் வனாந்தர தேசத்தில் இருக்கிறார்கள். ஆகையினால் அவளை ஆதரிப்பதற்கு அங்கே ஜனங்கள் இருப்பதாக ஆபிரகாம் நினைத்திருக்கலாம்.
ஆகாருக்கும், வனாந்தரத்தைப்பற்றி நன்றாகத் தெரியும். ஆயினும், தன்னுடைய வருத்தத்தினால் வனாந்தரத்தில் பாதை மாறி, அலைந்து திரிகிறாள். (ஆதி 21:16). மேசியாவின் வம்சவழியை வேறுபிரிக்க வேண்டுமென்பதற்காக தேவன் ஆகாரையும், இஸ்மவேலையும் தனியாகப் பிரித்துவிடுகிறார். மோசேயின் பிரமாணம் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பதை இது சித்தரிக்கிறது (2கொரி 3:5#18; கலா 4:21#31).
இஸ்மவேல் இங்கு பிள்ளை என்று அழைக்கப்பட்டாலும், அவனுக்கு இப்பொழுது குறைந்தது 19 வயதாயிருக்க வேண்டும். (ஆதி 17:1,25; ஆதி 21:5,8).
ஆபிரகாம் காலையில் எழுந்தவுடன் தன்னுடைய சொந்த வேலைகள் எதையும் பார்க்காமல், கர்த்தர் தனக்கு சொன்ன கட்டளைக்கு உடனே கீழ்ப்படிகிறார். ஆபிரகாம் கர்த்தரோடு விவாதம்பண்ணவில்லை. அவர் கர்த்தருடைய கட்டளைக்கு அமைதியாக கீழ்ப்படிகிறார்.
அடிமைப்பெண்ணாகிய ஆகாரும், அவளுடைய குமாரனாகிய இஸ்மவேலும் ஆபிரகாமின் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். ஆகார் தன் குமாரன் இஸ்மவேலைத் தூக்கிக்கொண்டு, ஆபிரகாமின் வீட்டைவிட்டு புறப்பட்டுபோய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிகிறாள் (ஆதி 21:14).
ஆகாருக்கு வனாந்தரத்தில் பாதை தெரியவில்லை. அவள் போகவேண்டிய பாதையும் அவளுக்கு தெரியவில்லை. ஆகார் தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு எங்கே போகவேண்டுமென்று, ஆபிரகாம் அவளுக்கு சொல்லியிருப்பார். ஆனால் ஆகாரோ வனாந்தரத்தில் பாதை தெரியாமல் அலைந்து திரிகிறாள். ஆகாரால் தனக்கு நியமிக்கப்பட்ட ஸ்தலத்தில் போய்ச் சேரமுடியவில்லை.
ஆகார் ஆபிரகாம் வீட்டைவிட்டு புறப்பட்டபோது, அவளுக்கு அப்பமும் ஒரு துருத்தி தண்ணீரும் மாத்திரமே கொடுக்கப்பட்டது. இஸ்மவேலும் ஆகாரோடு கூடயிருக்கிறான். ஆகார் இஸ்மவேலைத் தூக்கிக்கொண்டு பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிகிறாள். அப்போது துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்து போயிற்று. இஸ்மவேலும் சரீரத்திலே பலவீனமாயிருக்கிறான். ஒருவேளை அவன் வியாதியாயிருப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இஸ்மவேல் தன் வியாதியில் செத்துப்போவானோ என்னும் பயம் ஆகாருக்கு உண்டாயிற்று. இஸ்மவேலுக்கு கொடுக்க ஆகாரிடம் மருந்து எதுவுமில்லை. துருத்தியில் கொஞ்சம் தண்ணீர் மாத்திரமே இருக்கிறது. அந்தத் தண்ணீரும் செலவழிந்துபோயிற்று.
துருத்தியி-ருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, ஆகார் பிள்ளையை ஒரு செடியின்கீழே விடுகிறாள். அப்பொழுது அவள், ""பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன்'' என்று சொல்லி, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுகிறாள் (ஆதி 21:15,16).
ஆகார் சத்தமிட்டு அழும்போது, தேவன் பிள்ளளையின் சத்தத்தைக் கேட்கிறார் (ஆதி 21:17). ஆகார் அழும்போது, அவள் பிள்ளையாகிய இஸ்மவேலும் சேர்ந்து அழுகிறான். ஆகாருக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லுவதற்காக கர்த்தர் ஒரு தேவதூதனை அனுப்புகிறார். தேவதூதன் மூலமாக ஆகார் வனாந்தரத்திலே ஆறுதலான வார்த்தைகளைப் பெற்றுக்கொள்வது இது முதலாவது சம்பவமல்ல. தேவதூதன் அவளை வனாந்தரத்திலே ஏற்கெனவே ஆறுதல் செய்திருக்கிறார்.
""அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்-, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்'' (ஆதி 16:13).
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்கிறார். தேவதூதன் வானத்தி-ருந்து ஆகாரைக் கூப்பிட்டு, ""ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்'' (ஆதி 21:17) என்று சொல்லுகிறார்.
பிள்ளை எங்கே இருந்து கூப்பிடுகிறதோ, அங்கே கர்த்தர் அந்தப் பிள்ளையின் சத்தத்தைக் கேட்கிறார். அந்தப் பிள்ளை இப்போது வனாந்தரத்திலிருக்கிறது. நாம் எங்கே இருந்து கர்த்தரைக் கூப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எங்கே இருந்தாலும் பரலோகத்திலுள்ள தேவனை நோக்கி கூப்பிடவேண்டும். அப்போது கர்த்தர் நம்முடைய சத்தத்தையும் கேட்பார்.
கர்த்தர் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டு, ஆகாரை நோக்கி, ""நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்'' (ஆதி 21:18) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் இஸ்மவேலைக் குறித்து ஏற்கெனவே வாக்குப்பண்ணியிருக்கிறார். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, ""அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன்'' (ஆதி 21:13) என்று சொன்னார். தாம் ஏற்கெனவே சொன்ன வாக்குத்தத்தத்தை கர்த்தர் இங்கு மறுபடியுமாய்ச் சொல்லி, அதை உறுதிபண்ணுகிறார். ""அவனை பெரிய ஜாதியாக்குவேன்'' என்று கர்த்தர் இஸ்மவேலைக்குறித்து வாக்குப்பண்ணுகிறார்.
கர்த்தருடைய வாக்குத்தத்தம் இஸ்மவேலுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகையினால் இஸ்மவேல் செத்துப்போகாதபடிக்கு ஆகார் அவனைப் பராமரிக்கவேண்டும். அவள் அவனுக்கு ஆதரவான உதவிகளை செய்யவேண்டும். தேவன் ஆகாரின் கண்களைத் திறக்கிறார். அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் காண்கிறாள். ஆகார் போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுக்கிறாள் (ஆதி 21:19).
சற்று நேரத்திற்கு முன்பு ஆகார் வனாந்தரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். அவளுடைய அழுகைக்கு நியாயமான காரணமுண்டு. ஆகாரைப்போலவே கர்த்தருடைய பிள்ளைகளில் அநேகர், அநுதினமும் சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அழுகைக்கும் காரணமுண்டு. ஆனாலும் கர்த்தர் தம்முடைய ஜனத்தின் அழுகையை, தமது கிருபையினால் நிறுத்துகிறார்.
கர்த்தர் தம்முடைய கிருபையின் உடன்படிக்கையினால், ஆகாருடைய கண்களைத் திறக்கிறார். அப்போது அவள் ஒரு துரவைக் காண்கிறாள். அதுபோலவே விசுவாசிகளாகிய நாம் துக்கத்திலும் வேதனையிலும் அழுதுகொண்டிருந்தாலும், கர்த்தர் நம்முடைய கண்களையும் திறப்பார். அப்போது நம்முடைய காயங்கள் திறக்கப்படுவதையும், கர்த்தர் அந்தக் காயங்களுக்கு மருந்துபோடுவதையும், நம்முடைய காயங்கள் கர்த்தருடைய கிருபையினால் குணப்படுத்தப்படுவதையும் நாம் பார்ப்போம். நமக்கு வரும் ஆறுதலை நம்முடைய கண்கள் காணும்.
""ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்''(யோவா 16:6,7).
""ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே'' (கலா 4:22#24).
அப்போஸ்தலர் பவுல் இந்த சம்பவத்தை ஞானஅர்த்தமுள்ளதாக எழுதியிருக்கிறார். யூதர்கள் இயேசுகிறிஸ்துவை கர்த்தராகவும், தங்களுடைய இரட்சகராகவும் விசுவாசிப்பதில்லை. அவர்கள் நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைத் தேடுகிறார்கள். யூதர்கள் இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தை நம்பாமல், நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கட்டளைகளை நம்புகிறார்கள்.
நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியை நம்புகிறவர்கள், உலகத்தையும், உலகசந்தோஷத்தையும் விரும்புகிறார்கள். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையின் மூலமாக வரும் ஆறுதலையும், தேவனோடு ஐக்கியமாகயிருப்பதினால் வரும் ஆசீர்வாதங்களையும் புறக்கணித்துவிடுகிறார்கள்.
ஆகார் வனாந்தரத்திலே அலைந்து திரிந்ததுபோல, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காத யூதர்களும், தாகத்தோடும், விரக்தியோடும், வேதனையோடும், இந்த உலகத்திலே முடிவில்லாமல் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகார் வனாந்தரத்திலே உட்கார்ந்து சத்தமிட்டு அழுததுபோல, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காத யூதர்களும், தங்களுடைய ஜீவியத்தின் பாதையிலே இலக்கு தெரியாமல், காணாமல் போய், உட்கார்ந்து சத்தமிட்டு அழுகிறார்கள்.
ஆகார் இப்போது பெயர்செபாவின் வனாந்தரத்திலே இருக்கிறாள். தேவன் இஸ்மவேலின் சத்தத்தைக் கேட்கிறார். அவர் இஸ்மவேலுடனே இருக்கிறார். இஸ்மவேல் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனாகிறான் (ஆதி 21:20).
தேவன் பிள்ளையுடனே இருக்கிறார். தேவன் ஒருவரோடு இருக்கும்போது அவருக்குத் தேவனுடைய ஒத்தாசையும், ஆசீர்வாதமும், பாதுகாப்பும், பராமரிப்பும் உண்டு. (ஆதி 39:2,21; நியா 6:12; யோவான் 3:2; அப் 10:38).
இஸ்மவேல் சரீரப் பிரகாரமாக வளருகிறான் (ஆதி 1:8; லூக்கா 1:80; லூக்கா 2:40,52).
பரிசுத்த வேதாகமத்தில், தேவன் மனுஷரோடிருந்ததற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு :
1. இஸ்மவேல் (ஆதி 21:20)
2. ஆபிரகாம் (ஆதி 21:22)
3. யாக்கோபு (ஆதி 28:15,20)
4. யோசேப்பு (ஆதி 39:2,21; அப் 7:9)
5. மோசே (யோசு 1:5)
6. யோசுவா (யோசு 1:5,9)
7. சாமுவேல் (1சாமு 3:19)
8. தாவீது (2சாமு 5:10; 1நாளா 17:2)
9. சாலொமோன் (1நாளா 28:20; 2நாளா 1:1)
10. எரேமியா (எரே 20:11)
11. இயேசு (யோவான் 3:2; அப் 10:38)
12. பவுல் (2தீமோ 4:17)
பரிசுத்த வேதாகமத்தில் வனாந்தரம் என்னும் வார்த்தை 305 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது பாலைவனமல்ல. இது பயிர் செய்யப்படாத பூமி. இங்கு இயற்கையாக வளரும் பசுமையான செடி வகைகளும், புல்பூண்டுகளும் இருக்கும். இவை கால்நடைக்குத் தீவனமாக இருக்கும். இங்கு ஜனங்கள் குடியிருப்பார்கள். வனாந்தரத்தில் குடியிருப்பும், பட்டணங்களும் கட்டப்பட்டிருக்கும். (ஏசா 14:17; ஏசா 40:3; ஏசா 42:11; மத் 3:1; மத் 15:33; அப் 7:30; வெளி 12:6).
இஸ்மவேல் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவிக்கிறாள் (ஆதி 21:21). பாரான் வனாந்தரம் காட்டு மிருகங்கள் நிறைந்த பூமி. மிருகங்களை வேட்டையாடுகிறவர்களும் முரட்டுகுணமுள்ளவர்களும் இப்படிப்பட்ட வனாந்தரத்தில் தங்கியிருப்பார்கள்.
""இஸ்மவேல் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்'' (ஆதி 16:12) என்று கர்த்தர் சொன்னார்.
இஸ்மவேல் துஷ்டனாகயிருந்தாலும், அவன் வனாந்தரத்திலே சஞ்சரித்தாலும், கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னம் அவனோடு கூடயிருக்கிறது. ""தேவன் பிள்ளையுடனே இருந்தார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் இஸ்மவேலுக்கு சொல்லப்பட்ட உடன்படிக்கையை காத்துக்கொள்கிறார். அவர் இஸ்மவேலை ஒரு பெரிய ஜாதியாக்க சித்தமுள்ளவராயிருக்கிறார்.
இஸ்மவேல் வில்வித்தையிலே வல்லவனாயிருக்கிறான். காட்டு மிருகங்களை வேட்டையாடுவது அவனுடைய தொழில். அவன் ஒரு துஷ்டமனிதன். இஸ்மவேல் முரட்டு சுபாவமுள்ளவன். இஸ்மவேலுக்கு திருமணம் பண்ணுகிற வயது வருகிறது.
எகிப்து தேசத்தாளாகிய ஆகார் இஸ்மவேலோடு கூடயிருக்கிறாள். அவள் தன்னுடைய தாயாரின் துரவிலே இஸ்மவேலுக்கு பெண் பார்க்கிறாள். ஆகார் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை, இஸ்மவேலுக்கு விவாகம்பண்ணி வைக்கிறாள்.
இஸ்மவேல் வில்வித்தையிலே வல்லவனாயிருக்கிறான். அவன் மிருகங்களை குறிபார்த்து வேட்டையாடக்கூடியவன். ஆனாலும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை, தன்னால் குறிபார்த்து தெரிந்தெடுக்க முடியாது என்று நினைத்து, அவன் தன்னுடைய தாயாரை தனக்காக பெண் பார்க்குமாறு சொல்லியிருந்திருக்கலாம். ஆகார் இஸ்மவேலுக்கு எகிப்து தேசத்திலே பெண் பார்க்கிறாள். இஸ்மவேலும் தன் தாயார் சொன்ன எகிப்து தேசத்து பெண்ணை விவாகம்பண்ணுகிறான்.
பரிசுத்தவேதாகமத்தில் வில்வித்தையில் வல்லவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களைப்பற்றிய விவரம் வருமாறு :
1. இஸ்மவேல் (ஆதி 21:20)
2. ஏசா (ஆதி 27:3)
3. யோனத்தான் (1சாமு 20:20,36#37; 2சாமு 1:185#22)
4. தாவீது (2சாமு 22:35; சங் 18:34)
5. சீரியர்கள் (1இராஜா 22:34)
6. யெகூ (2இராஜா 9:24)
7. யோவாஸ் (2இராஜா 13:15#17)
8. பெலிஸ்தர்கள் (1சாமு 31:3; 1நாளா 10:3)
9. இஸ்ரவேலர்கள் (2சாமு 1:18; 1நாளா 5:18; 1நாளா 12:2; 2நாளா 14:8; 2நாளா 17:17; 2நாளா 26:14; நெகே. 4:13)
10. ஊலாமின் குமாரன் (1நாளா 8:40)
11. யோபு (யோபு 29:20)
12. மேதியரும், பெர்சியரும் (ஏசா 13:17#18)
13. கேதேரின் ஜனங்கள் (ஏசா 21:17)
14. லீதியரும், மற்றவர்களும் (ஏசா 66:19; எரே 6:23; எரே 46:9; எரே 49:35)
பாரான் சீனாய் மலைக்கு வடக்கில் உள்ளது. இது மலையையும், வனாந்தரத்தையும் குறிக்கும் பெயர். (ஆதி 21:21; எண் 10:12; எண் 12:16; எண் 13:3,26; உபா 1:1; உபா 33:2; 1சாமு 25:1; 1இராஜா 11:18; ஆப 3:3).
ஆகார் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். பார்வோன் அவளைச் சாராளுக்குக் கொடுத்தான். (ஆதி 12:16#20; ஆதி 16:3). இவ்வாறாக இஸ்மவேல் எகிப்தின் சந்ததியில் வருகிறான்.
அபிமெலேக்கும் ஆபிரகாமும்
ஆதி 21:22#32
ஆதி 21:22. அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
ஆதி 21:23. ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தக் தேசத்திற்கும், தயவுசெய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
ஆதி 21:24. அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.
ஆதி 21:25. ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின்நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
ஆதி 21:26. அதற்கு அபிமெலேக்கு: இந்த காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.
ஆதி 21:27. அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.
ஆதி 21:28. ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.
ஆதி 21:29. அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.
ஆதி 21:30. அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
ஆதி 21:31. அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக் கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்பட்டது.
ஆதி 21:32. அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாபதியாகிய பிகோலும் எழுந்து பெ-ஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
அபிமெலேக்குக்கும் ஆபிரகாமுக்கும் இடையே ஏற்படுகிற உடன்படிக்கையைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அபிமெலேக்கு இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவன். ஆனாலும் ஆபிரகாம் அவனோடு உடன்படிக்கை பண்ணிக்கொள்கிறார்.
தங்களோடு உடன்படிக்கை பண்ணுமாறு, அபிமெலேக்கும் அவனுடைய சேனாபதியும் ஆபிரகாமிடத்தில் கேட்கிறார்கள்.
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: ""நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தக் தேசத்திற்கும், தயவுசெய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு'' (ஆதி 21:21,22) என்று சொல்லுகிறார்கள்.
தேவன் மெய்யாகவே ஆபிரகாமோடு கூடயிருக்கிறார். அதை புறஜாதியாரும் அறிந்திருக்கிறார்கள். கர்த்தர் யாரோடு கூடயிருக்கிறாரோ, அவர்களோடு நாமும் ஐக்கியமாயிருக்கவேண்டும். கர்த்தருடைய பரிசுத்தவான்களோடு ஐக்கியமாயிருப்பது நமக்கு ஆசீர்வாதமாயிருக்கும்.
ஆபிரகாமுடைய ஐசுவரியம் அபிமெலேக்கைக் கவரவில்லை. ஆதி 20:17#18 ஆகிய வசனங்களில் ஆபிரகாமின் ஜெபத்திற்குப் பதில் கிடைத்த அற்புத நிகழ்ச்சி கூறப்பட்டிருக்கிறது. இதனால் அபிமெலேக்கு ஆபிரகாமைப் புகழ்ந்து கூறுகிறான். இந்த அற்புதத்தினால் அபிமெலேக்கும் ஆசீர்வதிக்கப்படுகிறான். (ஆதி 28:3#4,13#15; ஆதி 30:27#34; ஆதி 39:2#6,21#23).
கர்த்தர் ஆபிரகாமோடு கூடயிருப்பதினால், அபிமெலேக்கு அவரோடுகூட உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புகிறான். தேவனோடு ஐக்கியமாயிருக்கிறவர்களோடு, நாமும் ஐக்கியமாயிருக்கவேண்டும்.
""நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது'' (1யோவா 1:3).
ஆபிரகாம் தன்னோடு செய்து கொள்ளும் உடன்படிக்கை, தன்னுடைய சந்ததி பரம்பரையாக தொடரவேண்டும் என்று அபிமெலேக்கு விரும்புகிறான். ""நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யக்கூடாது'' என்று அபிமெலேக்கு ஆபிரகாமிடம் கேட்டுக்கொள்கிறான்.
ஆபிரகாமும் அபிமெலேக்கோடு உடன்படிக்கை பண்ண ஆயத்தமாயிருக்கிறார். ""நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன்'' (ஆதி 21:24) என்று ஆபிரகாம் அபிமெலேக்கோடு சொல்லுகிறார். அபிமெலேக்கு கர்த்தருக்கு பயந்தவன். அவன் தன்னுடைய மனச்சாட்சியின் சத்தத்திற்கு கீழ்ப்படிகிறவன். அபிமெலேக்கு ஜாதிகள் மத்தியிலே மதிப்பும், மரியாதையும், கனமும் கண்ணியமும் மிகுந்தவன்.
ஆபிரகாம் அபிமெலேக்கோடு உடன்படிக்கை பண்ணிக்கொள்ள விரும்பினாலும், அவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே ஒரு துரவு விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சனை ஆபிரகாமின் மனதை வேதனைப்படுத்துகிறது. ஆபிரகாம் தன்னுடைய வேதனையை தனக்குள்ளே அடக்கிக்கொள்ளாமல், அதை அபிமெலேக்கிடம் வெளிப்படையாகச் சொல்லுகிறார். அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின்நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொள்கிறார் (ஆதி 21:25).
ஆபிரகாமும் கண்ணியமுள்ளவர். அவருடைய வார்த்தையிலும் உண்மையிருக்கிறது. ஆபிரகாம் அபிமெலேக்கோடு உடன்படிக்கை பண்ணும்போது, தங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு எதுவும் இருக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். இதற்காக ஆபிரகாம் அபிமெலேக்குடைய வேலைக்காரர் செய்த தப்பிதத்தை, அவனுக்கு எடுத்து சொல்லி அவனைக் கடிந்துகொள்கிறார்.
ஆபிரகாம் சொல்லுகிற குற்றச்சாட்டை அபிமெலேக்கு இதுவரையிலும் கேள்விப்படவே இல்லை. அவனுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது. அபிமெலேக்குக்குத் தெரியாமலேயே அவனுடைய வேலைக்காரர், அந்தத் துரவை கைவசப்படுத்திக்கொண்டார்கள். அபிமெலேக்கு தன்னிடத்தில் குற்றம் இல்லை என்பதை ஆபிரகாமுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, ""இந்த காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை'' (ஆதி 21:25). என்று சொல்லுகிறான்.
ஆபிரகாமும் அபிமெலேக்கும் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும், சந்தேகங்களையும் பேசித்தீர்த்துக்கொள்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொள்கிறார்கள்.
அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுக்கிறார். ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்துகிறார் (ஆதி 21:27,28).
ஆபிரகாம் இந்தப் பெண்ணாட்டுக்குட்டிகளை ஏன் தனியே நிறுத்துகிறார் என்று அபிமெலேக்குக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்போது, ஆடுமாடுகள், பெண்ணாட்டுக்குட்டிகள் ஆகியவற்றை அன்பளிப்பாக கொடுக்கும்போது, அவர்கள் பண்ணுகிற உடன்படிக்கை இன்னும் அதிகமாக உறுதிப்படும். அவர்களுடைய சிநேகமும் அன்பும் அதிகரிக்கும்.
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: ""நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு'' என்று கேட்கிறான். அதற்கு ஆபிரகாம் ""நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும்'' (ஆதி 21:29,30) என்று அபிமெலேக்குக்கு சொல்லுகிறார்.
ஆபிரகாமும் அபிமெலேக்கும் உடன்படிக்கை பண்ணிக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த ஸ்தலத்திற்கு புதிய பெயரைக் கொடுத்து, தங்களுடைய உடன்டிபடிக்கையை உறுதிபண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக் கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்படுகிறது (ஆதி 21:31).
அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாபதியாகிய பிகோலும் எழுந்து பெ-ஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போகிறார்கள் (ஆதி 21:32).
பரிசுத்த வேதாகமத்தில் மனுஷர்கள் உடன்படிக்கை பண்ணிக்கொண்ட பல சம்பவங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றின் விவரம் வருமாறு :
1. அபிமெலேக்கோடு ஆபிரகாம் (ஆதி 21:27#34)
2. அபிமெலேக்கோடு ஈசாக்கு (ஆதி 26:26#31)
3. தேவனோடு யாக்கோபு. (ஆதி 28:20)
4. லாபானோடு யாக்கோபு (ஆதி 31:44#45)
5. கிபியோனியரோடு யோசுவா (யோசு 9:15)
6. இஸ்ரவேலோடு யோசுவா (யோசு 24:25#28)
7. தாவீதோடு யோனத்தான். (1சாமு 18:3; 1சாமு 20:8,16,42; 1சாமு 23:18; 2சாமு 21:7)
8. அப்னேரோடு தாவீது. (2சாமு 3:12#21)
9. இஸ்ரவேலோடு தாவீது. (2சாமு 5:3; 1நாளா 11:3)
10. ஈராமோடு சாலொமோன். (1இராஜா 5:12)
11. பெனாதாத்தோடு ஆசா. (1இராஜா 15:19#20)
12. யூதாவோடு ஆசா. (1நாளா 15:12)
13. பெனாதாத்தோடு ஆகாப். (1இராஜா 20:34)
14. யூதாவோடு யோய்தா (2இராஜா 11:4,17)
15. யூதாவோடு யோசியா (2இராஜா 23:3)
16. தேவனோடு ஆசா (2நாளா 15:8#15)
17. தேவனோடு எசேக்கியா (2நாளா 29:10)
18. இஸ்ரவேலோடு எஸ்றா (எஸ்றா 10:3; நெகே 10:29)
19. யூதாவோடு சிதேக்கியா (எரே 34:8)
20. யூதாவோடு நேபுகாத்நேச்சார் (எசே 17:13)
21. அசீரியரோடு இஸ்ரவேல். (ஓசி 12:1)
22. பரிசேயரோடு யூதாஸ். (மத் 26:15)
பெயெர்செபா
ஆதி 21:33,34
ஆதி 21:33. ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுது கொண்டான்.
ஆதி 21:34. ஆபிரகாம் பெ-ஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
ஆபிரகாம் என்னும் எபிரெய பெயருக்கு ""சஞ்சாரி'' என்றும் ஒரு பொருள் உள்ளது. ஆபிரகாம் தன்னுடைய பெயருக்கேற்ற பிரகாரம், அவர் பல நாட்களாக, ஒவ்வொரு இடமாக பிரயாணம்பண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் தேசாந்திரியாக சுற்றி அலைகிறார்.
பெயர்செபா என்னும் பெயருக்கு ""ஏழு மடங்கு ஆணையின் துரவு'' என்று பொருள். ஆபிரகாம் ஆணையிட்ட போது, ஏழு பெண்ணாடுகள் அவருடைய ஆணைக்குச் சாட்சியாக இருந்தது. (ஆதி 21:28#30). பெயர்செபா கானானுடைய தென் எல்லையின் அருகில் உள்ளது. (ஆதி 26: 31#33; யோசு 15:28; நியா 20:1; 2சாமு 17:11; 1இராஜா 4:25).
ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுது கொள்கிறார் (ஆதி 21:33).
இயேசுகிறிஸ்துவும் கெத்சமனே தோட்டத்தில் ஜெபம்பண்ணினார். இந்தத் தோட்டம் ஒரு பர்வதத்தின் மேல் அமைந்திருக்கிறது. நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தர் என்பதை நினைவுகூரவேண்டும். கர்த்தர் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னமே இருந்தவர். இப்போதும் இருக்கிறவர். இனிமேலும் என்றென்றைக்கும் இருக்கப்போகிறவர்.
""பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீகேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது'' (ஏசா 40:28).
""சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தர்'' என்பதற்கான எபிரெய வார்த்தை ""எல்#ஓலாம்'' என்பதாகும். ஓலாம் என்பதற்கு முடிவற்றவர், நித்தியமானவர் என்று பொருள். கர்த்தர் கிருபையில் முடிவற்றவர்.
இதன் பின்பு ஆபிரகாம் பெ-ஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருக்கிறார் (ஆதி 21:34). பெலிஸ்தர் மிஸ்ராயீம் சந்ததியிலிருந்து வந்தவர்கள். இவன் காமின் குமாரன். (ஆதி 10:6,13#14). பெலிஸ்தர் இஸ்ரவேலின் விரோதிகள். பெலிஸ்தர் கானானை ஜெயித்ததிலிருந்து பாபிலோனின் சிறையிருப்பு வரையிலும் அவர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகவே இருக்கிறார்கள்.
