20 அதிகாரம்
இந்த அதிகாரத்தில் ஆபிரகாமைப்பற்றி மறுபடியுமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவருக்கு மேன்மையும் கனமும் உண்டாகும் வண்ணமாக ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. கர்த்தரிடத்தில் பட்சபாதமில்லை. பரிசுத்த வேதாகமமும், எந்தவித பட்சபாதமுமில்லாமல் மனுஷருடைய சுபாவங்களைப்பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லுகிறது. ஆபிரகாம் நீதிமானாகயிருந்தாலும், அவருடைய ஜீவியத்திலும் ஒரு சில தப்பிதங்கள் காணப்படுகிறது. அதுபற்றி இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆபிரகாம் தன்னுடைய மனைவி சாராளை, தனக்கு சகோதரி என்று சொல்லுகிறார். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு சாராளை தன்னிடத்தில் அழைப்பிக்கிறான் (ஆதி 20:1,2).
தேவன் இரவிலே அபிமெலேக்குக்கு, சாராளைக் குறித்து எச்சரிப்பின் வார்த்கைளை சொல்லுகிறார். கர்த்தர் அவனுடைய தப்பிதத்தை அவனுக்கு எடுத்து சொல்லுகிறார் (ஆதி 20:3). அபிமெலேக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறான் (ஆதி 20:4#7).
அபிமெலேக்கு சாராளைக் குறித்து ஆபிரகாமோடு பேசுகிறான் (ஆதி 20:8#10). ஆபிரகாம் தான் செய்த தப்பிதத்தை மூடி மறைப்பதற்கு சாக்குபோக்கான காரணங்களை சொல்லுகிறார் (ஆதி 20:11#13). அபிமெலேக்கு சாராளை ஆபிரகாமினிடத்தில் திரும்ப ஒப்புவிக்கிறான் (ஆதி 20:14#16).
ஆபிரகாம் அபிமெலேக்குக்காக தேவனை நோக்கி வேண்டிக்கொள்கிறார். கர்த்தர் அபிமெலேக்கின் குடும்பத்தில் பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணுகிறார்.
அபிமெலேக்கு
ஆதி 20:1,2
ஆதி 20:1. ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்கு பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
ஆதி 20:2. அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகியசாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
ஆபிரகாம் இதுவரையிலும் மம்ரேயில் குடியிருக்கிறார். இப்பொழுது அவர் அவ்விடம் விட்டு தென்தேசத்திற்கு பிரயாணம்பண்ணுகிறார். ஆபிரகாம் மம்ரேயைவிட்டு ஏன் புறப்பட்டுப்போகிறார் என்பதற்கான காரணம் இந்த வசனப்பகுதியில் சொல்லப்படவில்லை. ஆபிரகாம் காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்குகிறார் (ஆதி 20:1).
ஆபிரகாம் இரண்டாம் முறையாக வடக்கிலிருந்து தென் தேசத்திற்குப் பிரயாணம் பண்ணுகிறார். (ஆதி 20:1; ஆதி 12:9). அவர் இரண்டுமுறை தென்தேசத்திலிருந்து வடக்கு நோக்கி பிரயாணம் பண்ணினார் (ஆதி 13:1,3).
கேராரிலே அபிமெலேக்கு என்பவன் ராஜாவாயிருக்கிறான். ஆபிரகாம் கேராரிலே தன் மனைவியாகிய சாராளை, தன் சகோதரி என்று சொல்லுகிறார். ஆபிரகாம் பொய்சொல்லுவது கர்த்தருடைய பார்வையில் பாவமாயிருக்கிறது. ஆபிரகாம் இதுபோன்ற பாவத்தை, எகிப்து தேசத்திலிருந்தபோது, பார்வோனுக்கு முன்பாக ஏற்கெனவே செய்திருக்கிறார்.
ஆபிரகாம் எகிப்து தேசத்தில் ஏற்கெனவே செய்த பாவத்தை, இப்போது கேராரிலும் செய்கிறார். ஆபிரகாமைப் போன்ற நீதிமான்களும், ஒரு தரம் பாவத்தில் விழுந்த பின்பு, மறுபடியும் அதே பாவத்தை செய்வதற்கு வாய்ப்புள்ளது.
சோதனை நாம் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத விதமாக வரும். மாம்சம் பலவீனமானது. சோதனை பலமுள்ளது. ஆபிரகாம் கேராரிலிருக்கும்போது மறுபடியுமாய் சோதிக்கப்படுகிறார். அவர் தன் மனைவி சாராளை, தன் சகோதரி என்று சொல்லி மறுபடியும் பாவம் செய்கிறார்.
கேராரில் ஆபிரகாம் தன் மனைவியாகியசாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பிக்கிறான் (ஆதி 20:2).
எகிப்தின் ராஜாவுக்கு பார்வோன் என்று பெயர். அதுபோல கேராரின் ராஜாக்களுக்கு அபிமெலேக்கு என்று பெயர். இவன் நீதியுள்ளவன், மெய்யான தேவனை ஆராதிக்கிறவன். (ஆதி 21:22-32; ஆதி 26:1-31). கிதியோனுடைய ஒரு குமாரனின் பெயர் அபிமெலேக்கு. (நியா 8:31; 2சாமு 11:21).
அபிமெலேக்கின் பாவம்
ஆதி 20:3#7
ஆதி 20:3. தேவன் இரவிலே அபிமெலேக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
ஆதி 204. அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
ஆதி 20:5. இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
ஆதி 20:6. அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
ஆதி 20:7. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காகவேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.
அபிமெலேக்கு கர்த்தருடைய உடன்படிக்கைக்கு அந்நியன். அவன் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவன். ஆனாலும் கர்த்தர் அவனுக்கு தம்மை சொப்பனத்திலே வெளிப்படுத்துகிறார். அவனுக்கு வரப்போகிற ஆபத்தைக் குறித்து அவனை எச்சரிக்கிறார்.
சாராள் ஆபிரகாமினுடைய மனைவி. ஆனால் ஆபிரகாமோ சாராளை தன்னுடைய சகோதரி என்று சொல்லியிருக்கிறார். சாராளும் ஆபிரகாமை தன்னுடைய சகோதரன் என்று சொல்லியிருக்கிறாள். ஆகையினால் கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி, சாராளை தன்னிடத்திலே சேர்த்து வைத்திருக்கிறான்.
சாராள் மற்றொருவருடைய மனைவி. அவளை அபிமெலேக்கு சேர்த்து வைத்துக்கொள்ளக்கூடாது. அது மிகப்பெரிய பாவம். அபிமெலேக்கு சாராளை சேர்த்துக்கொண்டதினால், சாராளின் புருஷனாகிய ஆபிரகாமுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறான். பாவத்தின் சம்பளம் மரணம்.
தேவன் இரவிலே அபிமெலேக்குக்கு சொப்பனத்திலே தோன்றி, ""நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே'' (ஆதி 20:3) என்று சொல்லுகிறார். அபிமெலேக்கு சாராளை தன்னிடத்தில் அழைப்பித்திருந்தாலும், அவன் இன்னும் அவளை சேராதிருக்கிறான்.
சொப்பனத்திற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. சரீரத்தின் பலவீனங்கள்கூட சொப்பனத்திற்குக் காரணமாக இருக்கலாம். (யோபு 20:8; பிர 5:3; சங் 126:1; உபா 13:1-5; யூதா 1:8). தேவன் சொப்பனத்தின் மூலமாக பலதடவை தமது காரியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். (தானி 4:5)
கர்த்தர் அபிமெலேக்குக்கு சொப்பனத்திலே தோன்றினார். பரிசுத்தவேதாகமத்தில் சொப்பனங்கண்ட அநேகரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரம் வருமாறு:
1. அபிமெலேக்கு (ஆதி 20:3,6)
2. யாக்கோபு (ஆதி 28:12;ஆதி 31:10-11)
3. லாபான் (ஆதி 31:24)
4. யோசேப்பு (ஆதி 37:5-10)
5. பானபாத்திரக்காரரின் தலைவன் (ஆதி 40:9-15)
6. சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:16-23)
7. பார்வோன் (ஆதி 41:1-32)
8. மீதியானியரில் ஒருவன்(நியா 7:13-15)
9. சாலொமோன் (1இராஜா 3:5-15)
10. நேபுகாத்நேச்சார் (தானி 2,4)
11. தானியேல் (தானி 2, தானி 7)
12. யோசேப்பு (மத் 1:20; மத் 2:13-22)
13. சாஸ்திரிகள் (மத் 2:12)
14. பிலாத்துவின் மனைவி (மத் 27:19)
அபிமெலேக்கு மோசமான மனுஷனாகயிருந்தால், அவனுக்கு நிச்சயமாய் மரணம் வரும். அவன் பாவியாயிருந்தால் செத்தவனாயிருப்பான். ஆனால் அபிமெலேக்குக்கு சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே உள்ள உறவைப்பற்றின உண்மை தெரியாது. சாராள் ஆபிரகாமின் மனைவி என்பதை அபிமெலேக்குக்கு யாரும் சொல்லவில்லை.
அபிமெலேக்கும் இன்னும் சாராளை சேரவில்லை. ஆகையினால் அவன் கர்த்தரிடத்தில், ""ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?'' (ஆதி 20:4) என்று கேட்கிறான். தன்னிடத்தில் குற்றம் எதுவும் இல்லை என்று அபிமெலேக்கு சொல்லுகிறான். அபிமெலேக்கு வேண்டுமென்றே சாராளை துணிகரமாக அழைப்பிக்கவில்லை.
சாராள் தன்னுடைய சகோதரி என்று ஆபிரகாம் சொன்னார். ஆபிரகாம் தன்னுடைய சகோதரன் என்று சாராளும் சொன்னாள். சாராள் ஆபிரகாமின் மனைவி என்பது அபிமெலேக்குக்குத் தெரியாது. ஆகையினால் அபிமெலேக்கு உத்தம இருதயத்தோடும், சுத்தமான கைகளோடும் சாராளைத் தன்னிடத்தில் அழைப்பித்திருக்கிறான்.
அபிமெலேக்கின் இருதயமும், மனச்சாட்சியும் அவனைக் குற்றப்படுத்தவில்லை.
""பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்'' (1யோவா 3:21,22).
நம்முடைய இருதயம் சுத்தமாயிருக்கவேண்டும். நம்முடைய மனச்சாட்சி நம்முடைய பரிசுத்தத்திற்கு சாட்சி சொல்லவேண்டும். நாம் பாவிகள் என்று நம்முடைய மனச்சாட்சியே நம்மை குற்றப்படுத்தக்கூடாது. நம்முடைய இருதயம் சுத்தமானதாயிருக்கும்போது, நாம் ஏமாற்றப்பட்டு கண்ணியிலே அகப்பட்டுக்கொண்டாலும், நம்மால் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்க முடியும்.
நாம் கர்த்தருக்கு விரோதமாக ஒரு பாவமும் செய்யக்கூடாது. துணிகரமாய்ப் பாவம் செய்கிறவர்களுக்கு சந்தோஷமில்லை. அவர்கள் சாதாரண நாட்களிலும் வேதனைப்படுவார்கள். தீங்கு நாளிலும் வேதனைப்படுவார்கள். நீதிமான்களோ, தீங்கு நாளிலும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பார்கள்.
கர்த்தர் அபிமெலேக்கின் விண்ணப்பத்தை செவிகொடுத்து கேட்கிறார். அபிமெலேக்கு கர்த்தரிடத்தில், தன்னுடைய இருதயம் உத்தமமாயிருக்கிறது என்றும், தம்முடைய கைகள் சுத்தமானதாகயிருக்கிறது என்றும் சாட்சியாய்ச் சொல்லுகிறான். கர்த்தரும் அபிமெலேக்கின் வார்த்தைகளை அங்கீகரிக்கிறார், ""உத்தம இருதயத்தோடே நீ இதை செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்'' (ஆதி 20:6) என்று கர்த்தர் அபிமெலேக்கினிடத்தில் சொல்லுகிறார்.
கர்த்தர் நம்மைக் குறித்து நற்சாட்சி கொடுப்பதே நமக்கு மெய்யான ஆறுதல். கர்த்தர் நம்முடைய உத்தமத்தைக் குறித்தும், பரிசுத்தத்தைக் குறித்தும், உண்மையைக் குறித்தும் சாட்சியாய்ச் சொல்லும்போது, நம்முடைய மனதிலே மிகுந்த ஆறுதல் உண்டாகும். கர்த்தர் நம்முடைய இருதயங்களை அறிந்து வைத்திருக்கிறார்.
மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். அவனுக்கு நம்மைப்பற்றிய உண்மை தெரியவில்லையென்றால், அவன் சுயமாய்க் கற்பனை செய்து உண்மைக்குப் புறம்பாக ஏதாவது சொல்லுவான். மனுஷர் நமக்கு விரோதமாக தூஷண வார்த்தைகளையும், பொய்யான குற்றச்சாட்டுக்களையும் சொல்லுவதற்கு வாய்ப்புள்ளது. கர்த்தரோ நம்முடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். நாம் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கும் போது, அவர் நம்மைக் குறித்து நற்சாட்சி கொடுப்பார்.
கர்த்தர் அபிமெலேக்கை நோக்கி, ""நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை'' (ஆதி 20:6) என்று சொல்லுகிறார். அபிமெலேக்கு தமக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு, கர்த்தர் அவனைத் தடுக்கிறார். அபிமெலேக்கு பாவம் செய்யாமல் தப்பிப்பதற்கு, அவன் என்ன செய்யவேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.
அபிமெலேக்கு ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை தன்னிடத்தில் அழைத்துக்கொண்டான். இதை தான் உத்தம இருதயத்தோடு செய்தததாக, அவன் கர்த்தரிடத்தில் சொல்லுகிறான். கர்த்தரும் அவன் செய்தததை அறிந்திருக்கிறார்.
துன்மார்க்கருடைய சிந்தனையும், பக்திமான்களுடைய சிந்தனையும் வித்தியாசமாக இருக்கும். தேவன் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார். அவர் இருதயத்தின் நினைவுகளையெல்லாம் அறிந்திருக்கிறார். (1சாமு 16:7; 1நாளா 28:9; எரே 17:9-10; எசே 11:5; லூக்கா 16:15; ரோமர் 8:27; எபி 4:12).
பரிசுத்தவேதாகமத்தில் பலவிதமான இருதயங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. நொருங்குண்டது (சங் 34:18; சங் 51:17; சங் 69:20)
2. நருங்குண்டது (சங் 51:17)
3. மனம் கசந்தது (ஆதி 6:6; சங் 73:21)
4. மனப்பூர்வமானது (யாத் 25:2; யாத் 35:5,29)
5. திடனற்றுப்போனது. (எண் 32:7-9; உபா 1:28)
6. கடினமானது (உபா 2:30)
7. பெருமையானது (உபா 8:14; சங் 101:5; எசே 28:5,17)
8. பொல்லாதது (உபா 15:9; நீதி 6:14,18; எரே 4:14-18)
9. தத்தளிக்கிறது (உபா 28:65; ஏசா 66:2)
10. உத்தமமானது (1இராஜா 8:61; 1நாளா 29:9)
11. வஞ்சனையானது (1நாளா 12:33; யாக் 4:8)
12. இளகியது. (2இராஜா 22:19; 2நாளா 34:27; எபே 4:32)
13. மென்மையானது (1சாமு 24:5; யோபு 23:16)
14. சுத்தமானது (சங் 24:4; மத் 5:8; 1பேதுரு 1:22)
15. நேர்மையானது (சங் 32:11; சங் 36:10; சங் 64:10; சங் 97:11)
16. சுத்தமானது (சங் 51:10; சங் 73:1; நீதி 20:9)
17. ஆயத்தமானது (சங் 57:7; சங் 112:7)
18. தந்திரமானது (நீதி 7:10)
19. மாறுபாடுள்ளது (நீதி 11:20; நீதி 12:8)
20. ஞானமுள்ளது (யாத் 28:3; யாத் 35:25; நீதி 10:8; நீதி 11:29)
21. மனமகிழ்ச்சியானது (2நாளா 7:10; நீதி 15:13-15; நீதி 17:22)
22. துக்கமானது நீதி 14:13; நீதி 15:13)
23. இறுமாப்புள்ளது (நீதி 18:12; எரே 48:29)
24. தாங்கலானது(நீதி 19:3; நீதி 24:19; சங் 37:1-8)
25. மனதுக்கமுள்ளது (நீதி 25:20; நீதி 31:6)
26. ஆராயமுடியாதது (நீதி 25:3; சங் 64:6)
27. கேடுள்ளது (எசே 25:15; ரோமர் 1:30)
28. மனக்கசப்பானது (எசே 27:31; எபி 12:15; யாக் 3:14)
29. புதியது (எசே 18:31; எசே 36:26; 2கொரி 5:17-18)
30. கல்லானது (எசே 11:19; எசே 36:26)
31. மாம்சமானது (எசே 11:19; எசே 36:26)
32. விருத்தசேதனமில்லாதது (எசே 44:7; எரே 9:26; அப் 7:51)
33. சாந்தமும், மனத்தாழ்மையுமானது. (மத் 11:29)
34. உண்மையும், நன்மையுமானது. (லூக்கா 8:15)
35. பாரமடைந்தது (லூக்கா 21:34)
36. கலங்கினது (யோவான் 14:1-3,27)
37. ஒருமனப்பட்டது (அப் 2:46; எபே 6:5)
38. மதியீனமானது, இருளானது (ரோமர் 1:21)
39. குணப்படாதது (ரோமர் 1:21; ரோமர் 2:5)
40. விருத்தசேதனமானது (ரோமர் 2:29; பிலி 3:3)
41. பொல்லாதது (எரே 3:17; எரே7:24; எரே 11:8; எரே 16:12; எபி 3:12)
42. உண்மையுள்ளது (எபி 10:22; மத் 22:16)
43. கரையக்கூடியது. (யோசு 2:11; யோசு 5:1; யோசு 7:5; யோசு 14:8)
44. கபடமுள்ளது (எரே 14:14; எரே 17:9; மாற்கு 7:21-23)
45. கடினமானது (உபா 15:7; சங் 95:8; எபி 3:8)
46. சோரமானது (எசே 6:9; ஓசி 4:12; ஓசி 9:1)
47. தீங்கானது (நீதி 28:14; நீதி 22:15; ரோமர் 1:21)
48. வஞ்சிக்கக்கூடியது (யோவான் 13:2; அப் 5:3)
49. பேராசையுடையது (எரே 22:17; 2பேதுரு 2:14)
50. வியாகுலமானது (சங் 55:4; எரே 4:19)
கர்த்தர் அபிமெலேக்கை நோக்கி, ""நீ அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காகவேண்டுதல் செய்வான்'' (ஆதி 20:7) என்று சொல்லுகிறார்.
அபிமெலேக்கு மரணத்திற்கு தப்பிக்கவேண்டுமென்றால், அவன் ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை தன்னிடத்தில் வைத்திருக்கக்கூடாது. அவளை, அவளுடைய புருஷனாகிய ஆபிரகாமினிடத்திற்கு அனுப்பிவிடவேண்டும். அபிமெலேக்கு சாராளை சேராவிட்டாலும், அவளை தன்னோடு சேர்த்து வைத்திருப்பது பாவம்.
அபிமெலேக்கு சாராளை ஆபிரகாமினிடத்தில் அனுப்பவில்லையென்றால், அவனுக்கு என்ன சம்பவிக்கும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் அவனை நோக்கி, ""நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்தயாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக'' (ஆதி 20:7) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் அபிமெலேக்குக்கு தம்முடைய வார்த்தைகளை அவனுக்கு சொப்பனத்திலே சொல்லுகிறார். அபிமெலேக்கு அறியாமல் பாவம் செய்திருக்கிறான். ஆனாலும் அவன் தன்னுடைய பாவத்தில் தொடர்ந்து இருக்கக்கூடாது. அறியாமல் பாவம் செய்தாலும், அந்தப் பாவத்தை தொடர்ந்து செய்வது, துணிகரமாய்ப் பாவம் செய்வதற்கு சமமாயிருக்கும்.
""எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான். மனிதர் பதறி ஆணையிடும் எந்தக் காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக் குறித்துக் குற்றமுள்ளவனாவான்'' (லேவி 5:3,4).
இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு, தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணப-யாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண ப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன் (லேவி 5:5,6).
அபிமெலேக்கின் குற்றவுணர்வு
ஆதி 20:8#10
ஆதி 20:8. அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து,தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்க திகளையெல்லாம் அவர்கள்கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.
ஆதி 20:9. அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைபித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
ஆதி 20:10. பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
கர்த்தர் அபிமெலேக்கை அவனுடைய சொப்பனத்திலே எச்சரிக்கிறார். அவனுடைய பாவத்தை அவனுக்கு விளக்கமாகச் சொல்லுகிறார். அபிமெலேக்கு தன்னுடைய பாவத்திற்கு தப்பிக்கவேண்டுமென்றால், அவன் என்ன செய்யவேண்டும் என்றும், கர்த்தர் அவனுக்கு ஆலோசனை சொல்லுகிறார். தம்முடைய ஆலோசனைக்கு அபிமெலேக்கு செவிகொடுத்து கீழ்ப்படியவில்லையென்றால், அவனுக்கு அழிவு வரும் என்றும் கர்த்தர் அவனை எச்சரிக்கிறார்.
அபிமெலேக்கு நித்திரை தெளிந்து காலையிலே எழும்புகிறான். அவனுடைய மனதிலே, கர்த்தர் அவனுக்கு சொப்பனத்தில் சொன்ன எச்சரிப்பின் வார்த்தைகள் நிரம்பியிருக்கிறது. அபிமெலேக்கு தன்னுடைய பாவத்தைக் குறித்தும், பாவத்தினால் தனக்கு வரப்போகும் தீங்குகளைக் குறித்தும் நினைத்து பயப்படுகிறான். கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதற்காக, அபிமெலேக்கு அதிகாலையிலேயே நித்திரையைவிட்டு எழும்பிவிடுகிறான்.
அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் தன்னிடத்தில் அழைப்பிக்கிறான். அவன் அவர்களிடத்தில் இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொல்லுகிறான்; கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அபிமெலேக்கு பயப்படுவதுபோல, அந்த மனுஷரும் மிகவும் பயப்படுகிறார்கள் (ஆதி 20:8).
அபிமெலேக்கு சாராளை ஆபிரகாமினிடத்தில் அனுப்பிவிடாதிருந்தால், அபிமெலேக்கும் அவனை சார்ந்த யாவரும் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் எச்சரிப்பாய் சொல்லியிருக்கிறார். அபிமெலேக்கு பாவம் செய்தவன். சாவு அவனுக்கும் வரும். அவனைச் சேர்ந்த யாவருக்கும் சாவுவரும். அபிமெலேக்கின் ஊழியக்காரர்தான் சாராளை அவனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்தவர்கள். அபிமெலேக்கின் பாவத்தில் அவர்களுக்கும் பங்கு இருக்கிறது. பாவத்தில் பங்காளிகளாயிருக்கிறவர்கள், தாங்கள் அனுபவிக்கும் தண்டனைகளிலும் பங்காளிகளாயிருப்பார்கள்.
அபிமெலேக்கு ஆபிரகாமை அழைக்கிறான். ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளை, தன் சகோதரி என்று அபிமெலேக்கினிடத்தில் சொன்னான். இப்போது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து, அவனை நோக்கி, ""நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே'' (ஆதி 20:9) என்று சொல்லுகிறான்.
அபிமெலேக்கின் வார்த்தைகள் உறுதியாகவும், அதே வேளையில் மென்மையாகவும் இருக்கிறது. அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு புரியும் வண்ணமாகப் பேசுகிறான். அவனைக் கடிந்துகொள்கிறான். இதைவிட தெளிவாக யாராலும் பேசமுடியாது. அபிமெலேக்கு ஆபிரகாமின்மீது மொத்த குற்றத்தையும் சுமத்தவில்லை.
அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, ""நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய்'' என்று மாத்திரமே கேட்கிறான். அவன் ஆபிரகாமை நோக்கி, ""இதுதான் உன் தொழிலா'' என்றோ, அல்லது ""நீ ஆணையிட்டுக்கொடுத்தாலும், பொய்சொல்லுகிறாயே'' என்றோ குற்றப்படுத்தவில்லை.
கர்த்தர் அபிமெலேக்கினிடத்தில் ஆபிரகாமைப்பற்றிச் சொன்னபோது, ""அவன் ஒரு தீர்க்கதரிசி, நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்'' என்று சொல்லியிருக்கிறார். அபிமெலேக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்புகிறான். அவனுக்கு ஆபிரகாமின் ஜெபம் தேவைப்படுகிறது.
ஆனாலும் ஆபிரகாம் அபிமெலேக்கினிடத்தில் பொய்சொல்லியிருக்கிறார். அபிமெலேக்கு தன்னைப்பற்றி ஆபிரகாமிடத்தில் சொல்லும்போது, ""நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு நான் உனக்கு என்ன குற்றம் செய்தேன்'' என்று கேட்கிறான்.
அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு ஒரு குற்றமும் செய்யவில்லை. ஆனால் ஆபிரகாம் அபிமெலேக்கினிடத்தில் தகாத காரியங்களை செய்திருக்கிறார். ஆகையினால் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, ""என்னத்தைக்கண்டு நீ இந்தக் காரியத்தை செய்தாய்'' (ஆதி 20:10) என்று கேட்கிறார்.
அபிமெலேக்கின் வார்த்தைகளில் உண்மையிருக்கிறது. அவன் சொல்லுகிற எல்லா வார்த்தைகளையும் ஆபிரகாம் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆபிரகாம் சொன்ன பொய்யின் நிமித்தமாக அபிமெலேக்கின்மீது பாவம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது கொடிய பாவமாயிருக்கிறது.
அபிமெலேக்குதான் ஆபிரகாமின் மனைவி சாராளை தன்னிடத்தில் சேர்த்துக்கொண்டான். இது அபிமெலேக்கின் பாவம். ஆனால் அபிமெலேக்கு இந்தப் பாவத்தை தன்னுடைய பாவமாகவும், தன்னுடைய ராஜ்யத்தின் பாவமாகவும் பாவிக்கிறான். இது கொடிய பாவம். இந்தப் பாவத்திற்கு விரோதமாக கர்த்தருடைய தண்டனை வரும்போது, அது அபிமெலேக்கின்மேலும் வரும், அவனுடைய ராஜ்யத்தின்மேலும் வரும். அபிமெலேக்கு இந்தப் பாவத்தை அறியாமல் செய்திருந்தாலும், அவனால் தண்டனைக்கு தப்பிக்க முடியாது. அவனுடைய மனச்சாட்சி அவனைக் குற்றப்படுத்தும்.
ஒரு மனுஷனுடைய பாவம் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கும். ஒரு ராஜாவின் பாவமோ, அவனையும் அவனுடைய ராஜ்யத்தையும் பாதிக்கும். ஆகையினால் ராஜாக்கள் தங்கள் தேசத்தின் நிமித்தமாகவும், தேசத்து ஜனங்கள் நிமித்தமாகவும், பாவத்தை விட்டு விலகி பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டும்.
ஆபிரகாம் தன்னுடைய மனைவி சாராளை, தன்னுடைய சகோதரி என்று அபிமெலேக்கினிடத்தில் சொல்லியிருக்கிறார். ஆபிரகாம் செய்யத்தகாத காரியத்தை அபிமெலேக்கினிடத்தில் செய்திருக்கிறார். அபிமெலேக்கு ஆபிரகாமின் சத்துரு அல்ல. ஒருவர் தன்னுடைய சத்துருவைப் பழிவாங்குவதற்காக, அவர்களுக்கு விரோதமாய் செய்யத்தாகாத காரியங்களை செய்வார்கள். அவர்கள்மீது பாவமும் பழியும் சுமத்துவார்கள். அதற்காக, அவர்களை வஞ்சிப்பார்கள்.
அபிமெலேக்கு ஆபிரகாமின் சத்துரு அல்ல. அவர் இதுவரையிலும் ஆபிரகாமுக்கு விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை. அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, ""நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?'' என்று கேட்கிறார். ""நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய்'' என்றும் அபிமெலேக்கு ஆபிரகாமிடத்தில் கேட்கிறார். ஆபிரகாம் தன்னுடைய பொய்யான வார்த்தைகளினால், தங்களை பழிவாங்குவதாகவும், தங்களை வஞ்சகம் தீர்ப்பதாகவும் அபிமெலேக்கு நினைக்கிறான்.
அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, ""என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தை செய்தாய்'' என்று கேட்கிறான். தானும், தன்னுடைய ராஜ்யத்து ஜனங்களும் ஆபிரகாமுக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும் போது, அவர் ஏன் தங்களைப் பழிவாங்குவதற்காக, இப்படிப்பட்ட பொய்யை சொல்லவேண்டுமென்று அபிமெலேக்கு விவாதம்பண்ணுகிறான்.
ஆபிரகாம் அபிமெலேக்கினிடத்தில் சாராளை தன்னுடைய மனைவி என்று ஏற்கெனவே சொல்லியிருந்தால், அவன் இந்த கொடிய பாவத்தை செய்திருக்கமாட்டான். அபிமெலேக்கு பாவம் செய்ய பயப்படுகிறவன். அவன் தீங்குகளுக்கு விலகி ஜீவிக்க விரும்புகிறவன்.
நாம் எவ்வளவுதான் நல்லவர்களாகயிருந்தாலும், நாம் நீதிமான்களாகயிருந்தாலும், நம்முடைய நற்குணத்தைக் குறித்து சந்தேகம் ஏற்படும்போது, அந்த சந்தேகத்தை நீக்குவதற்கு உடனே முயற்சி பண்ணவேண்டும். நம்முடைய சுத்தமனச்சாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டும். அபிமெலேக்கு ஆபிரகாமினிடத்தில் பேசும்போது, தன்னிடத்தில் ஒரு குற்றமுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறான். ""உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்'' என்று அபிமெலேக்கு ஆபிரகாமிடத்தில் தெளிவாக கேட்கிறான்.
ஆபிரகாமின் சாக்குபோக்கு
ஆதி 20:11#13
ஆதி 20:11. அதற்கு ஆபிரகாம்: இப்பிடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
ஆதி 20:12. அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
ஆதி 20:13. என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச்செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்-யிருந்தேன் என்றான்.
ஆபிரகாமும் தன்னிடத்தில் குற்றமில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கு ஒரு சில சாக்குபோக்கான காரணங்களை சொல்லுகிறார். அபிமெலேக்கு ஆபிரகாமினிடத்தில், ""என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தை செய்தாய்'' என்று கேட்கிறான். அதற்கு ஆபிரகாம், அபிமெலேக்கை நோக்கி, ""இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்'' (ஆதி 20:11) என்று சொல்லுகிறார்.
ஆனால் மெய்யாகவே இவ்விடத்தில் தெய்வபயம் இருக்கிறது. ஆபிரகாமிடத்தில்தான் தெய்வபயம் இல்லை. ஆகையினால்தான் அவர் தன் மனைவி சாராளை, தன்னுடைய சகோதரி என்று பொய் சொன்னார். ஆனாலும் ஆபிரகாம் தன்னுடைய மனதில் கேராரைப்பற்றி நினைக்கும்போது, இவ்விடத்தில் தெய்வபயம் இல்லை என்று நினைக்கிறார்.
தேவனுடைய பாதுகாப்பையும், ஆசீர்வாதத்தையும் ஆபிரகாம் வாக்குத்தத்தமாகப் பெற்றிருக்கிறார். ஆனாலும் அவருடைய விசுவாசம் வலுவாக இல்லை. உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும், ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கும்போது குறைவில்லாமல் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆபிரகாமைப்போலவே நாமும் பல சமயங்களில், ஒரு சில தனிநபர்களைப்பற்றியும், ஒரு சில ஊழியங்களைப்பற்றியும், ஒரு சில இடங்களைப்பற்றியும் தவறாக நினைத்துவிடுகிறோம். அவர்களை மோசமானவர்கள் என்று நினைப்போம். ஆனால் அவர்களோ நாம் நினைப்பதைவிட அதிக நல்லவர்களாயிருப்பார்கள்.
நாம் ஒரு சிலரை ஏளனமாக நினைப்போம். அவர்களிடத்தில் தெய்வபயம் இல்லை என்று சொல்லி அவர்களைத் தூஷிப்போம். ஆனால் அவர்களிடத்தில் தெய்வபயம் அதிகமாயிருக்கும். ஒருவேளை அவர்கள் தங்களை கர்த்தருடைய ஜனம் என்று சொல்லிக்கொள்ளமாட்டார்கள். நாம் ஒவ்வொரு வாக்கியத்தையும் கர்த்தருடைய நாமத்தினால் பேசுவதுபோல, அவர்கள் கர்த்தருடைய நாமத்தை அதிகமாய்ப் பயன்படுத்தமாட்டார்கள். ஆனாலும் அவர்களுடைய வார்த்தைகளில் உண்மையிருக்கும்.
தெய்வபயம் மனுஷருடைய இருதயங்களில் ஏற்படுகிறது. மனுஷனால் மற்ற மனுஷருடைய முகத்தை மாத்திரமே பார்க்க முடியும். அவர்களுடைய இருதயங்களை பார்க்க முடியாது. நாம் முகபாவனைகளையும், வெளித்தோற்றங்களையும் வைத்து மனுஷரை நிதானிக்கிறோம். நம்முடைய நிதானிப்பில் தப்பிதங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. கர்த்தரோ நம்முடைய இருதயங்களையும் எண்ணங்களையும் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்.
""நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்'' (மத் 7:1).
நாம் மற்றவர்கள்மீது அன்புகூர்ந்தால், அவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்கமாட்டோம். மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பதுகூட நமக்கு பாவமாகவே இருக்கும். நம்முடைய தப்பிதமான தீர்மானங்கள், நம்மை மேலும் பல பாவங்களை செய்வதற்கு வழிநடத்தும் . ஒரு மனுஷன் தப்பு செய்வதற்கு முன்பாக, அவனுடைய மனதிலே தப்பிதமான யோசனைகள் வரும். முதலில் சிந்தனையும் அதை தொடர்ந்து செயலும் ஏற்படும். ஆகையினால் நாம் மற்றவர்களைப்பற்றி நினைக்கும்போது, முதலாவதாக அவர்களைப்பற்றி நல்ல காரியங்களை நினைக்கவேண்டும்.
ஆபிரகாம் கேராரூர் ஜனங்களைப்பற்றி நினைக்கும்போது, இரண்டு காரியங்களை தப்பிதமாக நினைக்கிறார். அவையாவன : 1. கேராரூர் ஜனங்களுக்கு தெய்வபயமில்லை. 2. அவர்கள் தன் மனைவியின் நிமித்தம் தன்னைக் கொன்றுபோடுவார்கள்.
ஆபிரகாம் தன் மனைவி சாராளை, அபிமெலேக்கினிடத்தில் தன்னுடைய சகோதரி என்று சொன்னார். ஆபிரகாம் தான் சொன்ன வாக்கியம் பொய்யல்ல என்று சொல்லுகிறார். அவர் பொய் சொன்னாலும், தான் சொன்னது பொய்யல்ல என்றும், அது வேறொரு விதத்தில் உண்மையாகவே இருக்கிறது என்றும் சாக்குபோக்கு சொல்லி விவாதம்பண்ணுகிறார்.
ஆபிரகாம் அபிமெலேக்கை நோக்கி, ""சாராள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்'' (ஆதி 20:12) என்று சொல்லுகிறார். ஆனால் ஆபிரகாம் சொல்லுகிற அர்த்தத்தில், யாரும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
ஆபிரகாம் சாராளை தன்னுடைய சகோதரி என்று சொல்லும்போது, அவள் ஆபிகாமுக்கு மனைவியாகயிருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆபிரகாமின் வார்த்தை வஞ்சக வார்த்தையாகயிருக்கிறது. அவர் சாதுரிய வார்த்தைகளைப் பேசி அபிமெலேக்கையும், கேராரூர் ஜனங்களையும் வஞ்சித்திருக்கிறார்.
ஆபிரகாம் இந்த தப்பிதத்தை ஏற்கெனவே செய்திருக்கிறார். ஆபிரகாம் அபிமெலேக்கை இந்த விஷயத்தில் வஞ்சித்ததுபோல, அவர் ஏற்கெனவே எகிப்து தேசத்தின் அதிபதியாகிய பார்வோனையும் வஞ்சித்திருக்கிறார். ஆபிரகாம் சாராளை தன்னுடைய சகோதரி என்று சொல்லவேண்டும் என்றும், அவள் ஆபிரகாமை தன்னுடைய சகோதரன் என்று சொல்லவேண்டும் என்றும், அவர்கள் இருவரும் ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருக்கிறார்கள்.
ஆபிரகாம் அபிமெலேக்கினிடத்தில், தான் சாராளை தன்னுடைய சகோதரி என்று சொன்னதற்கான காரணத்தையும் சொல்லுகிறார். ""என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச்செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்-யிருந்தேன்'' (ஆதி 20:13) என்று ஆபிரகாம் அபிமெலேக்குக்கு சொல்லுகிறார்.
அபிமெலேக்கினிடத்தில் ஆபிரகாமும் பொய்சொல்லுகிறார். சாராளும் பொய்சொல்லுகிறாள். அவர்கள் இருவரும் இந்தப் பொய்யை, ஏற்கெனவே கூடிப்பேசி, தீர்மானம்பண்ணியிருக்கிறார்கள். தாங்கள் ஏற்கெனவே பேசி முடிவு பண்ணின பிரகாரம் இப்போது பொய்சொல்லுகிறார்கள். இந்தப் பொய்யின் மூலமாக, சாராள் தனக்கு தயை செய்கிறாள் என்று ஆபிரகாம் சொல்லுகிறார்.
ஆபிரகாமும் சாராளும் தேசாந்திரியாய் திரியும் இடங்களிலெல்லாம், இந்தப் பொய்யை சொல்லவேண்டும் என்பது அவர்களுடைய தீர்மானம். இந்தப் பொய்யை அவர்கள் எகிப்திலே ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். இப்போது இதே பொய்யை கேராரூரிலே சொல்லுகிறார்கள். ஒருவேளை கர்த்தர் அவர்களை வேறு தேசத்திற்கு தேசாந்திரியாய் திரியும்படி செய்தாலும், அவர்கள் அந்த தேசத்திலும் இந்தப் பொய்யை சொல்லுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்கள். ஆபிரகாமைப் பொருத்தவரையிலும், சாராள் தன்னை சகோதரன் என்று அழைப்பது அவருக்கு பொய்யாக தெரியவில்லை. ஆபிரகாம் அதை சாராள் தனக்கு செய்யும் தயவாக காண்கிறார்.
அபிமெலேக்கின் உபகாரம்
ஆதி 20:14#16
ஆதி 20:14. அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
ஆதி 20:15. பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான்.
ஆதி 20:16. பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு உபகாரம்பண்ணுகிறான். ஆபிரகாமோ தன்னுடைய மனைவி சாராளைக் குறித்து அபிமெலேக்கினிடத்தில் பொய்சொன்னார். ஆனாலும் அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு உபகாரம்பண்ணுகிறார்.
அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுக்கிறான். மேலும் ஆபிரகாமின் மனைவியாகிய சாராளையும் அவரிடத்தில் அபிமெலேக்கு திரும்ப ஒப்புவிக்கிறான் (ஆதி 20:14).
ஆடுமாடுகளும் வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு கொடுக்கும் ராஜரீக வெகுமதிகளாகும். அபிமெலேக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் விரோதமாக தீங்கு செய்திருக்கிறார். தன்னுடைய தப்பிதத்தை நிவிர்த்தி பண்ணுவதற்காக, அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு இந்த வெகுமதிகளைக் கொடுக்கிறார்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில், ஒருவர் பிறருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தீங்கு செய்தால், தன்னுடைய தப்பிதத்தை நிவிர்த்தி பண்ணுவதற்கு, அவர் தான் ஏற்படுத்தின நஷ்டத்தைவிட அதிகமான கிரயத்தை செலுத்தவேண்டும்.
""பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணப-யை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, தன் குற்றநிவாரணப-யாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரண ப-யாகக் கொண்டுவருவானாக'' (லேவி 6:5,6).
ஆபிரகாம் கேராரிலே பரதேசியாய்த் தங்குவதற்கு வந்தார். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கோ, தன்னுடைய தேசத்தில் ஆபிரகாமுக்கு குடியிருக்கும் ஸ்தலத்தை கொடுக்கிறார். அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, ""இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு'' (ஆதி 20:15) என்று சொல்லுகிறார்.
ஆபிரகாமுக்கு ராஜரீக வெகுமதிகளும், கேராரிலே தங்கியிருப்பதற்கு ராஜரீக அனுமதியும் கிடைத்திருக்கிறது. அபிமெலேக்கு சாராளைக் கடிந்துகொள்கிறான்.
அபிமெலேக்கு சாராளை நோக்கி, ""உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக'' (ஆதி 20:16) என்று சொல்லுகிறான். இந்த வாக்கியம் சாராளை கடிந்துகொள்ளும் வாக்கியமாகும்.
ஆபிரகாம் தேவனை விசுவாசிக்காவிட்டாலும், தேவன் ஆபிரகாமிற்கு உதவி புரிகிறார். கேராரியரைப் பற்றி ஆபிரகாம் தவறாக நினைத்தாலும், அவர்களை நம்பாமல் போனாலும், அவர்கள் ஆபிரகாமிற்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்து, உதவி செய்திருக்கிறார்கள். (ஆதி 20:13)
சாராளின் அழகை மற்றவர்கள் பார்த்து அவளை இச்சிக்காதபடி அவளுடைய முகம் முக்காட்டினால் மூடப்பட வேண்டும். இதற்காக அபிமெலேக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தான். சாராள் பிறனுடைய மனைவி. இனிமேல் அவள் மெய்யைப் பூரணமாக பேச வேண்டும். உண்மையைத் திரித்துக் கூறக்கூடாது. ஆகையினால் அபிமெலேக்கு சாராளிடம் இதுபற்றிச் சொல்லும்போது, ""இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக'' என்று சொல்லுகிறான். சாராள் இனிமேல் பொய் பேசக்கூடாது. அவள் தன்னுடைய முகத்தை முக்காட்டினால் மூடிக்கொள்ளவேண்டும்.
ஆபிரகாமின் ஜெபம்
ஆதி 20:17,18
ஆதி 20:17. ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைந்திருந்தபடியால்,
ஆதி 20:18. ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.
ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி. ""நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்'' (ஆதி 20:7) என்று கர்த்தர் ஆபிரகாமைக் குறித்து அபிமெலேக்குக்கு சொன்னார்.
அபிமெலேக்கின் வீட்டாருக்கு கர்த்தருடைய கிருபை தேவைப்படுகிறது. ஆபிகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களைளெயல்லாம் அடைந்திருக்கிறார் (ஆதி 20:17).
ஆபிரகாம் அபிமெலேக்கின் வீட்டாருக்காக, தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணினால் கர்த்தர் அவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார். அபிமெலேக்குடைய வீட்டாரின் அடைக்கப்பட்ட கர்ப்பங்களை, கர்த்தர் தமது கிருபையினால் திறப்பார்.
அபிமெலேக்கின் மனைவியும், அவனுடைய வேலைக்காரிகளும் பிள்ளை பெற முடியாதவாறு அவர்களுடைய கர்ப்பங்கள் அடைக்கப்பட்டிருக்கிறது. தேவன் ஆபிரகாமின் ஜெபத்தைக் கேட்டு அவர்களைக் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணுகிறார்.
மோசே தன் சகோதரி மிரியாமுக்காக ஜெபம்பண்ணினார். கர்த்தர் அவளுடைய குஷ்டரோகத்தை நீக்கி அவளை சொஸ்தமாக்கினார். ""அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்'' (எண் 12:13).
யோபு தன்னுடைய சிநேகிதருக்காக ஜெபம்பண்ணினார். அப்பொழுது கர்த்தர் யோபுவை ஆசீர்வதித்தார். பரிசுத்தவான்கள் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, அவர்கள் யாருக்காக ஜெபம்பண்ணுகிறார்களோ அவர்களுக்கும் ஆசீர்வாதம் வருகிறது. ஜெபம்பண்ணுகிற பரிசுத்தவான்களுக்கும் ஆசீர்வாதம் வருகிறது.
""யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்'' (யோபு 42:10).
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொள்கிறார்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணுகிறார் (ஆதி 20:18). பரிசுத்தவான்களின் ஜெபம் கர்த்தருடைய பார்வையில் பிரியமானதாயிருக்கிறது.
