சாஸ்திரிகள் இயேசுவை பணிந்து கொள்கிறார்கள் மத் 2 : 9-12
கிழக்கிலே கண்ட நட்சத்திரம்
ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது (மத் 2:9).
சாஸ்திரிகள் எருசலேமிலிருந்து புறப்பட்டு பெத்லகேமுக்கு பிரயாணமாக போனார்கள். இயேசுவை கண்டுபிடிக்கும்வரையிலும் தேட வேண்டும் என்னும் தீர்மானம் அவர்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்திருந்தது. அவர்களுக்கு உதவிபுரிய எருசலேம் நகரத்தார் யாரும் அவர்களோடுகூட செல்லவில்லை. ஏரோது ராஜாவும் தன்னுடைய போர்வீரர்கள் யாரையும் சாஸ்திரிகளோடு கூட அனுப்பவில்லை. சாஸ்திரிகள் மூன்றுபேரும் தனிமையாகவே பெத்லகேமுக்கு போனார்கள். அவர்கள் ஒரு தூர தேசத்திலிருந்து எருசலேமுக்கு வந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை பணிந்து கொள்ளவேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம். இதற்காகவே அவர்கள் பல மைல்கள் பிரயாணம் செய்து எருசலேமுக்கு வந்தார்கள்.
ஆனால் இயேசுகிறிஸ்துவின் உறவினர்களான யூதஜனங்களோ அவர்களில் யாரும் எருசலேமிலேயே இருந்தாலும் இயேசுகிறிஸ்துவை தேட வில்லை. அவரை பணிந்து கொள்ளவரவில்லை. அருகிலுள்ள பெத்லகேமுக்கு சென்று யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கும் இயேசுகிறிஸ்துவை பணிந்துகொள்ளவேண்டும் என்னும் எண்ணமோ ஆர்வமோ அவர்களுடைய உள்ளத்தில் இல்லை. இயேசுகிறிஸ்துவை தேடும்போது சில சமயங்களில் நாமும் தனிமையாக இருக்கலாம். நமக்கு பிறருடைய உதவி கிடைக்காமற் போகலாம். மற்றவர்கள் எப்படியிருந்தாலும் நாம் கர்த்தரை சேவிக்கவேண்டும்.
நட்சத்திரத்தைக் கண்டபோது
அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (மத் 2:10).
கிழக்கு தேசத்தில் சாஸ்திரிகள் கண்ட அதே நட்சத்திரம் இவர்களுக்கு மறுபடியும் உதவிபுரிகிறது. அந்த நட்சத்திரம் பிள்ளையிருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (மத் 2:9,10).
தேவன் தமது கிருபையினால் சாஸ்திரிகளை வழிநடத்துகிறார். முதலாவதாக கிழக்கில் நட்சத்திரம் தோன்றியபோது சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தை பின்பற்றி எருசலேமுக்கு வந்தார்கள். யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரை பற்றி எருசலேமில் விசாரிக்கலாம் என்னும் எண்ணம் சாஸ்திரிகளின் மனதில் உண்டாயிற்று. அதன்பின்பு நட்சத்திரம் மறைந்து விட்டது.
இயேசுவானவர் எங்கே பிறந்திருப்பார் என்று சாஸ்திரிகளுக்கு சரியாக தெரியவில்லை. நட்சத்திரமும் மறைந்துவிட்டது. ஆகையினால் சாஸ்திரிகள் தாங்களாகவே முயற்சி செய்து ஏரோதுவின் அரண்மனையில் போய் கிறிஸ்துவானவரின் பிறப்பை குறித்து விசாரிக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் கூட, நமக்கு சாதாரணமான உபாயங்கள் கிடைக்கும்போது, தெய்வீக அற்புதங்கள் நடைபெறாமல் போகலாம். அற்புதங்கள் நடைபெற்றாலும், நடைபெறாமல் போனாலும், கர்த்தரை பின்பற்றுவதை நாம் நிறுத்திவிடக்கூடாது. கர்த்தரை தேடுகிறவர்கள் அவரை கண்டடைவார்கள்.
சாஸ்திரிகள் தங்களால் முடிந்தவரையிலும் இயேசுகிறிஸ்து பிறந்திருக்கும் ஸ்தலத்தை குறித்து விசாரிக்கிறார்கள். அவர்கள் பெத்லகேமுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். அந்த ஊரில் ஏராளமான ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரிடத்தில் போய் இயேசுவை பற்றி விசாரிப்பது? இவர்களோ தூர தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இயேசுவை கண்டுபிடிப்பது நடைமுறையில் சாத்தியமில்லாத காரியம்போல தெரியலாம். அவர்களுடைய முயற்சி முடிவடைந்துவிடுவதுபோல தோன்றலாம். அவர்கள் முயற்சியில் சோர்ந்துபோனாலும் தங்கள் விசுவாசத்தில் சோர்ந்துபோகவில்லை. தேவன் தங்களை கைவிடமாட்டார் என்று தங்கள் உள்ளத்தில் ஆழமாக நம்பினார்கள். கர்த்தர் அவர்களுக்கு உதவிபுரிகிறார்.
அவர்களுக்கு உதவிபுரிய அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரத்தை கர்த்தர் மறுபடியும் அனுப்புகிறார். அந்த நட்சத்திரம் பிள்ளையிருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன்சென்றது. நமது முயற்சியில், நமது கடமையில் நம்மால் முடிந்தவரையிலும் உண்மையுள்ளவர்களாக செயல்படவேண்டும். நம்மால் முடியாத காரியங்களை செய்து முடிப்பதற்கு கர்த்தர் நமக்கு உதவிபுரிவார்.
கிழக்கிலே சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம் சிறிதுகாலம் அவர்களை விட்டு மறைந்து விட்டது. அதே நட்சத்திரம் இப்போது மறுபடியும் திரும்பிவருகிறது. கர்த்தரை பின்பற்றுகிறவர்கள் சிறிதுகாலம் இருளில் இருந்தாலும் அவர்கள் மறுபடியும் வெளிச்சத்தை காண்பார்கள். ஏனெனில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு வெளிச்சம் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது, அது நியமிக்கப்பட்டிருக்கிறது. சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம், தேவனுடைய பிரசன்னம் அவர்களோடு இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும். ஏனெனில் தேவன் ஒளியாக இருக்கிறார். தம்முடைய பிள்ளைகளை வழி நடத்துவதற்காக ஒளியானவர் நமக்கு முன்பாக செல்லுகிறார். நம்மை வழிநடத்தும் வழிகாட்டியாக இருக்கிறார். இயேசுகிறிஸ்துவை தேடுகிறவர்களுடைய இருதயங்களில் விடிவெள்ளி உதிக்கும் (2பேது 1:19).
சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தை கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். தாங்கள் வஞ்சிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தார்கள். தங்கள் பிரயாணம் வீணாய் போய்விடவில்லை என்பதையும் புரிந்து கொண்டார்கள். தேவன் தங்களோடிருக்கிறார் என்னும் நிச்சயம் அவர்களுடைய உள்ளத்தில் உண்டாயிற்று. தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளமான நட்சத்திரம் மறுபடியும் வானத்தில் தோன்றுகிறது. தேவனுடைய பிரசன்னம் உறுதி பண்ணப்படும்போது உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். மனுஷரிடத்தில் சிறிய காரியங்களை மாத்திரமே எதிர்பார்க்கமுடியும். தேவனிடத்திலோ பெரிய காரியங்களை எதிர்பார்க்கலாம். வானத்தில் மறுபடியும் நட்சத்திரம் உண்டானது தேவன் செய்த பெரிய காரியமாகும். ஆகையினால் அதை கண்டபோது சாஸ்திரிகள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சீக்கிரத்தில் தரிசித்து விடலாம் என்னும் நம்பிக்கை அவர்களுடைய உள்ளத்தில் உண்டாயிற்று. அவர்கள் விடிவெள்ளியை கண்டுவிட்டார்கள். ஆகையினால் நீதியின் சூரியனை விரைவில் கண்டுகொள்ளப் போகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வழியை காண்பிக்கும் எல்லா காரியங்களுக்காகவும் கர்த்தரை துதிக்கவேண்டும். சாஸ்திரிகளை சந்திப்பதற்கு தேவன் நட்சத்திரத்தை அனுப்பினார். இயேசுகிறிஸ்துவின் ஸ்தலத்தை கண்டுபிடிப்பதற்கு தேவன் நட்சத்திரத்தை பயன்படுத்தினார். தேவன் எப்போதுமே தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். மகிழ்சியாய் நீதியை செய்கிறவர்களையும் கர்த்தருடைய வழிகளில் அவரை நினைக்கிறவர்களையும் கர்த்தர் சந்திக்கிறார் (ஏசா 64:5).
புதிதாக இரட்சிக்கப்பட்டுள்ள விசுவாசிகளுக்கு கர்த்தர் சில சமயங்களில் அதிக சிலாக்கியங்களை காண்பிக்கிறார். தமது அன்பை அடையாளங்களால் வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துகிறார். புதிய விசுவாசிகளுக்கு உண்டாகும் பாடுகளினால் அவர்கள் சோர்ந்து போய் விடாமல் அவர்களை தாங்குகிறார். புதிய விசுவாசிகள் தேவனை கண்டுபிடித்து அவரில் நிலைத்திருக்க வேண்டும்.
சாஷ்டாங்கமாய் விழுந்து
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மாரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள் (மத் 2:11).
சாஸ்திரிகள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் அவர்களை வழிநடத்திற்று. பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது. அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டார்கள். சாஸ்திரிகளின் உள்ளத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரை தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் அவரோ ஒரு அரண்மனையில் பிறவாமல் ஒரு ஏழையின் குடிசை வீட்டில் இருக்கிறார். அவருடைய தாயாரும் செல்வ செழிப்போடு ஆடம்பரமாக இருப்பதற்கு பதிலாக எளிய கோலத்தில் இருக்கிறார்.
சாஸ்திரிகளின் மனக்கண்களை கர்த்தர் திறந்தார். அவர்கள் ஏழை வீட்டையும் இயேசுவின் ஏழை கோலத்தையும் காணாமல் யூதருடைய ராஜாவையே பார்த்தார்கள். உலகப்பிரகாரமான திரை அவர்களுடைய கண்களை விட்டு அகற்றப்பட்டது. இயேசுவை பார்த்தவுடனேயே அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டது. இவர்தான் இயேசுவா என்று அவர்கள் யாரிடமும் கேட்கவில்லை. பிள்ளையை கண்டவுடனேயே சாஷ்டாங்கமாய் விழுந்து அதை பணிந்துகொண்டார்கள். அந்த பிள்ளைக்கு பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
சாஸ்திரிகள் ஏரோது ராஜாவுக்கு இப்படி மரியாதை செலுத்தவில்லை. ஏரோது அதிகாரத்தில் உள்ளவன். யூதேயா தேசத்தை ஆளுகை செய்கிறவன். சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறவன். அவனை பார்த்தபோது சாஸ்திரிகள் அவன் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து அவனை பணிந்துகொள்ளவில்லை. ஆனால் இங்கோ இயேசுகிறிஸ்து ஒரு ஏழையின் குடிசையில் இருக்கிறார். அவரிடம் ராஜாவுக்குரிய ஆடம்பரம் எதுவுமில்லை. சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருக்கவில்லை. அவருடைய தாயாரின் மடியில் அமர்ந்திருக்கிறார்.
சாஸ்திரிகள் இந்த குழந்தைக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொண்டபோது, அவர்கள் யூதருடைய ராஜாவை மாத்திரம் பணிந்துகொள்ளாமல், தேவனையே பணிந்து கொண்டார்கள். முழங்கால்கள் யாவும் கர்த்தருக்கு முன்பாக முடங்கும். சர்வ சிருஷ்டிகளும் கர்த்தரை ஆராதிக்கும். அவரை துதிக்கும். இயேசுகிறிஸ்து நம்முடைய கர்த்தராகிய தேவனாக இருப்பதினால் நாம் எல்லோருமே அவரை சாஷ்டாங்கமாக பணிந்துகொண்டு ஆராதிக்கவேண்டும்.
சாஸ்திரிகள் இயேசுவை பணிந்துகொண்டு அவருக்கு காணிக்கையை செலுத்தினார்கள். கிழக்கு தேசங்களில் சாஸ்திரிகள் ராஜாக்களை சந்திக்க செல்லும்போது அவர்களுக்கு காணிக்கைகளை எடுத்து செல்வது வழக்கம். நாமும் நம்முடைய ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக வரும்போது நம்மையே காணிக்கையாக செலுத்தவேண்டும். நாம் கர்த்தருக்கு என்னதான் காணிக்கை செலுத்தினாலும் முதலாவதாக நம்மை அவரிடத்தில் ஜீவபலிகளாக சமர்ப்பிக்கவேண்டும்.
சாஸ்திரிகள் இயேசுவுக்கு பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள். இவை பணமும், எளிதில் பணமாக்கக்கூடிய பொருட்களும் ஆகும். யோசேப்பும் மரியாளும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். இந்த காணிக்கை அவர்களுடைய பொருளாதார வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். சாஸ்திரிகள் இந்த காணிக்கைகளை கிழக்கு தேசத்திலிருந்து கொண்டு வந்தார்கள். இந்தபொருட்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை. நாமும் கர்த்தருக்கு நமக்கு முக்கியமாக தோன்றுகிறவற்றை காணிக்கையாக செலுத்தவேண்டும்.
அவர்கள் இயேசுவுக்கு பொன்னை காணிக்கையாக செலுத்தினார்கள். இயேசுவை ராஜாவாக அங்கீகரித்தார்கள். ராஜாவுக்கு பொன்னை கப்பமாக செலுத்துவது வழக்கம். அதற்கு அடையாளமாக இவர்கள் பொன்னை செலுத்துகிறார்கள். அத்துடன் தூபவர்க்கத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள். அவர்கள் இயேசுவை தேவனாக அங்கீகரிக்கிறார்கள்.
கர்த்தருக்கு தூபபலிகளை செலுத்தவேண்டும். இயேசுவை தேவனாக அங்கீகரிக்கும் விதமாக அவர்கள் தூபவர்க்கத்தை செலுத்துகிறார்கள்.
அத்தோடு அவர்கள் இயேசுவுக்கு வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். வெள்ளைப்போளம் மரணத்திற்கும் மரித்த சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கும் அடையாளம். அவர்கள் இயேசுவை மனிதனாகவும் அங்கீகரிக்கிறார்கள். இந்த பூமியில் பிறந்த எந்த மனிதனும் ஒரு நாள் மரிக்கவேண்டும். மரித்த சரீரத்தை அடக்கம் பண்ணும்போது வெள்ளைப்போளத்தினால் அந்த சரீரத்தை பாடம்பண்ணுவது வழக்கம். அதற்கு அடையாளமாகவே சாஸ்திரிகள் வெள்ளைப்போளத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இவ்வாறாக சாஸ்திரிகள் இயேசுவை ராஜாவாகவும், தேவனாகவும், மனிதனாகவும் அங்கீகரிக்கிறார்கள்.
சாஸ்திரிகள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மாரியாளையும் கண்டார்கள். இயேசு கிறிஸ்து மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இது பெத்லகேமில் இருந்தது. ஆனால் சாஸ்திரிகளோ நாசரேத்திலுள்ள ஒரு வீட்டிற்கு வந்தார்கள். இயேசு கிறிஸ்து பிறந்து இரண்டு வருஷங்களுக்குப் பின்பு சாஸ்திரிகள் இயேசுவைப் பணிந்து கொள்ள வருகிறார்கள். இயேசு கிறிஸ்து பிறந்து 41 நாட்களுக்குப் பின்பு கர்த்தரிடத்தில் அவரை பிரதிஷ்டை பண்ணினார்கள். (லூக்கா 2:7,21-39) அதன்பின்பு இயேசு நாசரேத்தில் வளர்ந்து வந்தார்.
சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டார்கள். தேவனை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும். இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவின் தெய்வ தத்துவம் வலியுறுத்தப்படுகிறது. (வெளி 19:10; வெளி 22:8-9; லூக்கா 2:13)
வேறு வழியாய் திரும்பிப்போனார்கள்
பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள் ( மத் 2:12).
சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்த வேலை முடிந்து விட்டது. இவர்கள் ஏரோதுவை சந்தித்தபோது அவன் சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து நட்சத்திரம் காணப்பட்ட காலத்தை குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்தான். மேலும் பிள்ளையை குறித்து திட்டமாய் விசாரிக்குமாறு ஏரோது சாஸ்திரிகளிடம் கூறினான். பிள்ளையை போய் காணுமாறும், கண்டபின்பு தானும் வந்து அதை பணிந்துகொள்ளும்படி தனக்கு அறிவிக்க வேண்டுமென்றும் அவன் சாஸ்திரிகளிடம் கூறியிருந்தான். இப்படிச் சொல்லித்தான் அவன் சாஸ்திரிகளை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
சாஸ்திரிகள் ஏரோதுவின் வார்த்தையை நம்பினார்கள். கள்ளம் கபடமில்லாத மனமுள்ளவர்கள் யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவார்கள். சாஸ்திரிகள் இயேசுவை கண்டு பணிந்துகொண்டு, காணிக்கையை செலுத்தியபின்பு அவர்கள் ஏரோது ராஜாவிடம் திரும்பி செல்வதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். ஏரோது ராஜாவின் துர்க்குணம் சாஸ்திரிகளுக்கு தெரியாது. அவனுடைய வஞ்சகமான திட்டமும் இவர்களுக்கு தெரியாது. தன்னுடைய வஞ்சக வலையில் ஏரோது சாஸ்திரிகளையும் கருவிகளாக பயன்படுத்துகிறான் என்பதும் இவர்களுக்கு தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவன் சாஸ்திரிகளோடு பேசுகிறார்.
சாஸ்திரிகள் ஏரோதினிடத்திற்கு திரும்பி போக வேண்டாமென்று தேவன் அவர்களை சொப்பனத்தில் எச்சரித்தார். தேவனுடைய வார்த்தையின் பிரகாரமாக சாஸ்திரிகள் எருசலேமுக்கு திரும்பி செல்லாமல் வேறு வழியாய் தங்கள் கிழக்கு தேசத்திற்கு திரும்பி போனார்கள். இயேசுகிறிஸ்து பிறந்த நற்செய்தியை இவர்கள் ஏரோதுவின் அரண்மனையிலும் எருசலேமிலும் அறிவிக்கவில்லை. ஆனாலும் அந்த நற்செய்தியை தங்கள் உள்ளத்தில் சுமந்துகொண்டு தங்கள் தேசத்திற்கே திரும்பி செல்கிறார்கள். தங்கள் தேசத்திலுள்ள ஜனங்களுக்கு இந்த சாஸ்திரிகள் இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்பின் நற்செய்தியை அறிவித்திருப்பார்கள். ஆனால் வேதாகமத்தில் இந்த சாஸ்திரிகளை பற்றிய விவரம் வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை.
