வாக்குறுதி அல்ல விசுவாசம்
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே ரோமர் 8:17
புதியதோர் ஆண்டிற்குள் பிரவேசிக்க செய்த தேவனுக்கு நன்றி செலுத்துவோம். புதிய ஆண்டினை புதியதோர் இருதயத்தோடும், புதியதோர் சிந்தையோடும். புதியதோர் பார்வையுடனும் வரவேற்போம். நம்முடைய இருதயம் எப்படியோ அப்படியே நம்முடைய வாழ்வும். புதிய ஆண்டின் முதல் பகுதியில் நம்பிக்கையூட்டுகின்ற ஒரு தேவவாக்குறுதி கிடைத்தால் நலமாயிருக்குமே என்று நாம் எண்ணுவது இயற்கையானது.
ஆனால் தேவனுடைய அனைத்து வாக்குறுதிகளும் இயேசு கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றும் “ஆமென்” என்றும் இருக்கின்றது. இந்த இயேசு கிறிஸ்துவுக்குள் அல்லது இயேசு கிறிஸ்துவோடு வாழ்வதற்கே நாம் அழைக்கப்படுகின்றோம். இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை நாம் காண வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மைக் கொண்டு வருவது உண்மையாக நாம் மனந்திரும்பி பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் அனுபவமே. இந்த இரட்சிப்பின் அனுபவம் நமக்கு தேவனுடைய பிள்ளை என்று தெய்வீக அந்தஸ்தை பெற்றுத் தருகின்றது. இந்த தெய்வீக அந்தஸ்து தேவனை “அப்பா. பிதாவே” என்று கூப்பிடுகின்ற ஒப்பற்ற உயர்ந்த பாக்கியத்தை தருகின்றது.
இங்கேதான் நாம் இன்று எந்த நிலைமையில் உள்ளோம் என்று பார்க்க வேண்டும். நாம் கிறிஸ்துவோடிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் தேவனுடைய பிள்ளை என்ற ஆவிக்குரிய நிலைமையும் உறுதிப்படுகிறது. தேவனுடைய பிள்ளை என்றால் நமக்கு பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்களைப் போல இன்னொரு புதிய ஆசீர்வாதவாக்குறுதி தேவை இல்லை. நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால் தேவனுடைய சுதந்தரராமே என்று வேதம் சொல்லவில்லையா?
தேவன் நம்மைப் பார்தது "நீங்கள் என்னுடைய பிள்ளைகளாயிருந்தால், நீங்கள் என்னுடைய செல்வங்களுக்கு உரிமையுள்ள சுதந்திரவாளிகள்தானே என்று சொல்லுகின்றார். பின்னர் நாம் ஏன் அந்நியர்கள் போல ஒரு வாக்குறுதி தாரும் என்று கெஞ்ச வேண்டும். தகப்பனோடு சேர்ந்து வாழும் பிள்ளைகளுக்கு தகப்பன் வாக்குறுதி தர வேண்டிய தேவை என்ன? கர்த்தராகிய இயேசுவுக்குள் நமக்கு அமைதி, சந்தோஷம், நம்பிக்கை, ஆறுதல், வழிநடத்துதல், வாழ்க்கை சூழ்நிலைகளை சந்திக்க தேவையான இறை ஆற்றல் ஆகியவை எப்போதும் ஆயத்தமாக உள்ளன. நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் ஒரு சில கர்த்தருடைய பிள்ளைகள் தேவனோடு நடப்பதை விட வாக்குறுதி தேவை என்பதில் அதிக கவனமாக இருக்கிறார்கள். தேவனோடு ஐக்கியமாய் இருந்தால் எல்லா வாக்குறுதிகளும் நம்முடையதே தேவையானது வாக்குறுதி அல்ல அந்த வாக்குறுதியை தரும் தேவனே. இன்று அநேகர் தேவன் கொடுக்கும் வாக்குறுதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட தேவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது இந்த செயல் தவறானது. நாம் வாக்குறுதி பெறுவதற்கு போராடவில்லை என்றாலும் தேவனோடு இருப்பதற்கு போராட கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் வாக்குறுதிகளை பெறுவதற்கு வருடத்தின் கடைசியில் பல நாட்கள் உபவாசம் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்வில் அதற்கு முன்பு இப்படி இருப்பதில்லை. வாக்குறுதிகாக உபவாசம் இருப்பது பயனற்றதாகவே இருக்கும் தேவனோடு ஐக்கியமாய் இருப்பதற்கு எதை செய்தாலும் அது ஆசீர்வாதமாக இருக்கும். வாக்குறுதிகளுக்கு நான் எதிரானவன் அல்ல வாக்குறுதியை விட வாக்குறுதி கொடுக்கும் தேவன் பெரியவர் என்பதையே வலியுறுத்துகிறேன்.
இப்போது தேவை இன்னொரு வாக்குறுதி அல்ல. கர்த்தர் சொன்னதை அப்படியே நம்பி சார்ந்து முன்னோக்கி செல்லுகின்ற விசுவாசமே தேவை. புதிய தோர் ஆண்டைக் காணச் செய்த தேவன் நீச்சயமாய் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்திச் செல்வார். கர்த்தர் நம்மோடிருப்பார்.
தேவனுக்குரியவைகளைத் தேட இன்று நீ கவனமாயிகு உணக்
குரியவைகளை தேடித்தர என்றும் தேவன் கரிசனையாயிருப்பார்
