வெளி 16 அதிகாரம் விளக்கம்

வெளி 16 அதிகாரம் விளக்கம்

அதிகார சுருக்கம்:-

தேவனுடைய கோபகலசங்களை பூமியின்மேல் ஊற்றுமாறு ஏழுதூதர்களுக்கும் கட்டளை கொடுக்கப்படுகிறது (வெளி 16:1). முதலாம் கலசம் (வெளி 16:2). இரண்டாம் கலசம் (வெளி 16:3). மூன்றாம் கலசம் (வெளி 16:4-7). நான்காம் கலசம் (வெளி 16:8,9). ஐந்தாம் கலசம் (வெளி 16:10,11). ஆறாம் கலசம் (வெளி 16:12-16). ஏழாம் கலசம் (வெளி 16:17-21).

தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் வெளி 16:1

வெளி 16:1. அப்பொழுது தேவாலயத்தி-ருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின் மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.

தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த ஏழுகலசங்களும் பூமியின்மேல் ஊற்றப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறது. இந்தக் கலசங்களை பூமியில் ஊற்றுவதற்கு ஏழுதூதர்களும் ஆயத்தமாயிருக்கிறார்கள். ஆனாலும் தேவனுடைய அனுமதியில்லாமல் ஒன்றும் நடைபெறவில்லை. தேவனுடைய உத்தரவு தேவாலயத்திலிருந்து வரவேண்டும்.

ஏழுதூதர்களும், ஏழுகலசங்களை பெற்றிருக்கிறார்கள். அப்பொழுது தேவாலயத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தம் உண்டாயிற்று. ""நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களை பூமியின்மேல் ஊற்றுங்கள்'' என்று அந்தப் பெருஞ்சத்தம் ஏழுதூதர்களுடனே சொல்லிற்று. கர்த்தருடைய உத்தரவு வந்தவுடன் ஏழுதூதர்களும் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறார்கள். கர்த்தர் உத்தரவு கொடுக்கும்போது, ""நீங்கள் போய்'' என்று தம்முடைய உத்தரவை ஆரம்பிக்கிறார். கர்த்தருடைய வார்த்தை ஆரம்பமானவுடன், தேவனுடைய வாதையும் ஆரம்பமாயிற்று.

தேவனுடைய கோபாக்கினை நிறைந்த ஏழுகலசங்களும் பூமியிலே ஊற்றப்பட்டபோது, பூமியில் வாதைகள் உண்டாயிற்று. எகிப்து தேசத்திலே மோசேயின் காலத்தில் இதுபோல வாதைகள் உண்டாயிற்று. இந்த வாதைகளும், எகிப்து தேசத்திலுண்டான வாதைகளும் ஓரளவு ஒத்திருக்கிறது. மனுஷருடைய பாவங்கள் ஒத்திருக்கும்போது, அவர்கள்மீது வருகிற வாதைகளும் ஒத்திருக்கும்.

ஏழு எக்காளங்கள் ஊதப்பட்டபோது அந்திக்கிறிஸ்து எழும்பினான். இப்போது ஏழுகசலகங்கள் பூமியின்மேல் ஊற்றப்படும்போது, பூமியில் வாதைகள் உண்டாயிற்று. அந்திக்கிறிஸ்து கொஞ்சம் கொஞ்சமாக விழுகிறான். அவன் ஒரே நேரத்தில் கீழே விழுந்துவிடுவதில்லை. அவன் சடுதியிலே கீழே தள்ளப்பட்டு விடுவதுமில்லை. அந்திக்கிறிஸ்துவின் தோல்வி கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. முடிவில் அவன் மொத்தமாகத் தோல்வியடைகிறான்.

ரோமப்பேரரசு ஒரே நாளில் கட்டியெழுப்பப்படவில்லை. அந்தப் பேரரசு ஒரே நாளில் அழிந்துபோகவும் செய்யாது. இது ஒரு பழமொழி. இது போலவே அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையும் ஒரே நாளில் அழிந்துபோகாது. ஏனெனில் அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யம் இந்தப் பூமியிலே கொஞ்சம் கொஞ்சமாக ஸ்தாபிக்கப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்தாபிக்கப்பட்டதுபோலவே, அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோகும்.

அந்திக்கிறிஸ்துவின் ஆளுகை முழுஉலகத்திலும் பரவியிருக்கிறது. அவனுடைய வழிகள் எல்லா தேசங்களிலும் சிதறியிருக்கிறது. அவனுடைய துர்உபதேசத்தை பின்பற்றுகிற ஜனங்கள் எல்லா ஜாதியாரிலும் இருக்கிறார்கள். இவையெல்லாம் அழிக்கப்படவேண்டும். ஜனங்களுடைய துன்மார்க்கம் மொத்தமாக நிர்மூலமாக்கப்படவேண்டும். அந்திக்கிறிஸ்துவின் கள்ளஉபதேசங்களெல்லாம் ஒழிந்துபோகவேண்டும். அந்திக்கிறிஸ்துவின் அழிவு தேவாலயத்திலிருந்து உண்டான கட்டளையினால் ஆரம்பமாயிற்று.

முதலாம் கலசம் வெளி 16:2

வெளி 16:2. முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.

முதலாம் தூதன் கர்த்தருடைய கட்டளையின் பிரகாரம், போய், தன் கலசத்திலுள்ளதை பூமியின்மேல் ஊற்றுகிறான். பூமியிலுள்ள எல்லா ஜனங்கள்மேலும் ஊற்றுகிறான். பூமியிலே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும், அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் உடனே பொல்லாத கொடிய புண் உண்டாயிற்று.

இவர்கள் தங்கள் பாவத்தினால் தங்களுக்கு முத்திரையைத் தரித்துக்கொள்கிறார்கள். தேவனோ தம்முடைய நியாயத்தீர்ப்பினால் இவர்கள்மீது வாதையின் முத்திரையைத் தரிக்கிறார். மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களுக்கு பொல்லாத கொடிய புண்ணின் முத்திரை உண்டாயிற்று. இது தேவனுடைய நியாயத்தீர்ப்பு. அவர் நீதியாய் நியாயந்தீர்க்கிறவர்.

இரண்டாம் கலசம் வெளி 16:3

வெளி 16:3. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.

இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை சமுத்திரத்திலே ஊற்றுகிறான். உடனே சமுத்திரத்திலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தம் போலாயிற்று. அதுவும் செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று. இதனால் சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயிற்று. கள்ளப்போதகர்களின் உபதேசத்தில் உண்மையுமில்லை. சத்தியமுமில்லை. அது மாய்மாலத்தினால் நிரம்பியிருக்கிறது.

அது மாத்திரமல்ல, கள்ளப்போதகர்களின் உபதேசம் செத்த உபதேசம். செத்த உபதேசத்தில் உயிர் இருக்காது. ஜனங்களுக்கு இது தெரியாமல் செத்த உபதேசத்தை இதுவரையிலும் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கள்ளப்போதகர்களின் உபதேசம் செத்துப்போன உபதேசம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, சமுத்திரத்தின்மேல் இரண்டாம் தூதன் தன் கலசத்தை ஊற்றினபோது, சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் செத்துப்போயிற்று.

மூன்றாம் கலசம் வெளி 16:4

வெளி 16:4. மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.

மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்றுகிறான். அதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றுகிறான். உடனே ஆறுகளும் நீரூற்றுகளும் இரத்தமாயிற்று. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை சமுத்திரத்திலே ஊற்றியபோது, அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று. அதுபோலவே இப்போது ஆறுகளும் நீரூற்றுகளும் இரத்தமாயிற்று. இந்த இரத்தம் செத்தவனுடைய இரத்தபோலாயிற்றா அல்லது உயிரோடிருக்கிறவர்களின் இரத்தம்போலாயிற்றா என்பதை வேதபண்டிதர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

தண்ணீர்களின் தூதன் வெளி 16 : 5,6

வெளி 16:5. அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

வெளி 16:6. அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

மூன்றாம் வாதை முடிந்த பின்பு தண்ணீர்களின் தூதன் கர்த்தரைத் துதித்துப் பாடுகிறான். ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் தன் கலசத்திலுள்ளதை ஊற்றினவன்தான் தண்ணீர்களின் தூதனா அல்லது இவன் வேறொரு தூதனா என்பது பற்றி வேதபண்டிதர்கள் வெவ்வேறு வியாக்கியானம் சொல்லுகிறார்கள். சமுத்திரத்தை செத்தவனுடைய இரத்தம் போலாக்குவதற்கும், ஆறுகளையும் நீரூற்றுகளையும் இரத்தமாக்குவதற்கும் கர்த்தர் தண்ணீர்களின் தூதனைப் பயன்படுத்துகிறார். இவனுக்கு தேவனுடைய நீதியும் தெரியும். ஜனங்களுடைய துன்மார்க்கமும் தெரியும்.

தண்ணீர்களின் தூதன் கர்த்தரைத் துதித்துப் பாடுகிறான். அவர் இருக்கிறவரும், இருந்தவரும், பரிசுத்தருமாகிய தேவனாயிருக்கிறார். இப்படி நியாயந்தீர்க்க அவர் நீதியுள்ளவராகவும் இருக்கிறார்.

துன்மார்க்கர்கள் இந்தப் பூமியிலே பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும், தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினார்கள். அவர்களைக் கொன்றுபோட்டார்கள். தாங்கள் சிந்திய இரத்தத்திற்குத் தண்டனையாக கர்த்தர் அவர்களுக்கு இரத்தத்தையே குடிக்கக் கொடுக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளின் இரத்தத்தைச் சிந்திய துன்மார்க்கர், இரத்தத்தைக் குடிப்பதற்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள். நம்முடைய தாகத்தைத் தீர்ப்பதற்கு கர்த்தர் ஜீவத்தண்ணீரைக் கொடுக்கிறார். துன்மார்க்கருக்கோ இரத்தத்தைக் குடிக்கக் கொடுக்கிறார்.

பலிபீடத்திலிருந்து வேறொருவன் வெளி 16:7

வெளி 16:7. ப-பீடத்தி-ருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.

தண்ணீர்களின் தூதன் கர்த்தரைத் துதித்துப் பாடுகிறான். அவர் நீதியுள்ளவரென்று சொல்லி அவரைப் போற்றிப் புகழுகிறான். துன்மார்க்கர் தண்டனையை அனுபவிக்க பாத்திரராயிருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறான். அப்போது பலிபீடத்திலிருந்து வேறொருவன், தண்ணீர்களின் தூதன் சொல்லுவதை அங்கீகரிக்கிறான். தண்ணீர்களின் தூதன் கர்த்தரைத் துதித்துப் பாடும்போது சொன்ன வார்த்தைகளை, பலிபீடத்திலிருந்த வேறொருவன், ""ஆம்'' என்று அங்கீகரிக்கிறான்.

மேலும், இவனும் கர்த்தரைத் துதிக்கிறான். கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது, அவரை சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் என்று துதித்துப் பாடுகிறான். கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகளென்று அங்கீகரிக்கிறான்.

இரண்டுபேருடைய சாட்சிகளினால் சத்தியம் உறுதிபண்ணப்படுகிறது. இவ்விரண்டு பேரும் வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், ஒரே சத்தியத்தையே உறுதிபண்ணுகிறார்கள். மெய்யாகவே கர்த்தர் இருக்கிறவரும், இருந்தவரும், பரிசுத்தருமாயிருக்கிறார். அவர் நீதியுள்ளவராயிருக்கிறார். அவர் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தராயிருக்கிறார். அவர் சத்தியமாயும் நீதியாயும் நியாயத்தீர்ப்பு செய்கிறவராயிருக்கிறார்.

நான்காம் கலசம் வெளி 16:8,9

வெளி 16:8. நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

வெளி 16:9. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.

நான்காம் •தூதன் தன் கலசத்திலுள்ளதை சூரியன்மேல் ஊற்றுகிறான். சூரியன் ஜனங்களுக்கு வெயிலையும் உஷ்ணத்தையும் கொடுத்து இதுவரையிலும் நன்மை செய்து வந்தது. இப்போது சூரியன் விக்கிரகாரதனைக்காரருக்கு விரோதமாக எழும்பியிருக்கிறது. இதுவரையிலும் வெயிலையும், இதமான உஷ்ணத்தையும் கொடுத்த சூரியன், இப்போது தீயைக் கொடுக்கிறது.

இதமான உஷ்ணத்தைக் கொடுத்து மனுஷரை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக, இப்போது சூரியன் தீயினால் மனுஷரைத் தகிக்கிறது. நான்காம் கலசம் சூரியன் மேல் ஊற்றப்பட்டபோது அதற்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாதை வரும்போது, நாம் அமர்ந்திருந்து கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். பாவமான காரியங்களை விட்டு விலகி கர்த்தரைப் பற்றிக்கொள்ளவேண்டும். விக்கிரகாராதனைக்காரருக்கு சூரியன் மூலமாய் வாதை வந்திருக்கிறது. அவர்கள் சூரியனையும் ஒரு தெய்வமாக வணங்குகிறார்கள். ஆனால் அந்தச் சூரியனோ அவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக தீயினால் தகித்து அவர்களை வாதிக்கிறது.

மனுஷர்கள் சூரியனிலிருந்து உண்டாகிற உஷ்ணத்தினால் தகிக்கப்படுகிறார்கள். தேவனாகிய கர்த்தரே இந்த வாதைகளைச்செய்ய அதிகாரமுள்ளவர். விக்கிரகாராதனைக்காரர் இதைப் புரிந்துகொண்டு, தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பவேண்டும். கர்த்தரைப் பற்றிக்கொள்ளவேண்டும்.

கர்த்தரே சர்வவல்லமையும், சர்வஅதிகாரமுமுள்ளவர் என்று அங்கீகரித்து அவரை மகிமைப்படுத்தவேண்டும். ஆனால் அவர்களோ மெய்யான தேவனை மகிமைப்படுத்தவில்லை. தங்கள் பாவங்களிலிருந்து அவர்கள் மனந்திரும்பவில்லை. தேவனை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக அவருடைய நாமத்தைத் தூஷிக்கிறார்கள். தங்களுடைய இருதயத்தை அழிவுக்கு நேராக கடினப்படுத்துகிறார்கள்.

ஐந்தாம் கலசம் வெளி 16:10,11

வெளி 16:10. ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துகொண்டு,

வெளி 16:11. தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.

ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசத்தின்மேல் ஊற்றுகிறான். இந்தச் சிங்காசனம் ரோமப்பேரரசையோ அல்லது ரோமாபுரி நகரத்தையோ குறிக்கலாமென்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல், ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்றியபோது, மிருகத்தினுடைய ராஜ்யம் இருளடைகிறது. தேசமுழுவதும் அந்தகாரத்திற்குள் வருகிறது.

வெளிச்சம் ஞானத்திற்கு அடையாளம். இருள் மதியீனத்திற்கு அடையாளம். இருளிலிருக்கிறவர்கள் குழப்பத்திலிருப்பார்கள். தாங்கள் போகுமிடம் இன்னதென்பது அவர்களுக்குத் தெரியாது. வெளிச்சத்தில் சந்தோஷம் இருக்கும். இருளில் துக்கமிருக்கும். ராஜ்யம் இருளடைந்ததினால் ராஜ்யத்திலுள்ளவர்கள் வருத்தப்படுகிறார்கள். வருத்தத்தோடு அவர்களுடைய சரீரத்தில் புண்களும் உண்டாயிற்று. புண்களினால் அதிக வேதனையும் வருத்தமும் உண்டாயிற்று.

நமக்கு வாதைகளும், வேதனைகளும், வருத்தங்களும், வியாதிகளும் வரும்போது, கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்திருந்து அவரை நோக்கிப் பார்க்கவேண்டும். நம்முடைய பாவங்களை விட்டு மனந்திரும்பவேண்டும். நம்மைச் சுத்திகரிக்க கர்த்தரை அனுமதிக்கவேண்டும். நாம் கர்த்தரைவிட்டு விலகிப்போயிருப்போமென்றால், அவரிடத்தில் திரும்பி வரவேண்டும்.

விக்கிரகாராதனைக்காரருக்கு, இருளும், வருத்தங்களும், புண்களும் உண்டாயிற்று. ஆனாலும் இவர்கள் தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை. பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தவில்லை. கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அவரைத் தூஷிக்கிறார்கள்.

துன்மார்க்கருக்குள் தெளிந்த சிந்தனையில்லை. அவர்களுக்குள் குழப்பமுண்டாயிற்று. நன்மை தீமை இன்னதென்று அவர்களால் பகுத்தறிய முடியவில்லை. தீமையைப் பின்பற்றுகிறார்கள். வருத்தத்தின் கனிகளைப் புசிக்கிறார்கள். அவர்களுக்கு சந்தோஷமுமில்லை. சமாதானமுமில்லை.

ஆறாம் கலசம் வெளி 16 : 12-14

வெளி 16:12. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையி-ருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

வெளி 16:13. அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.

வெளி 16:14. அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது.

ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றுகிறான். ஐபிராத் என்பது மெய்யாகவே பிரத்தியட்சமான ஐபிராத் நதிதான் என்று சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ இது தைபர் நதி என்று சொல்லுகிறார்கள். ஐபிராத் நதியின்மேல், ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்றியபோது, அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

தண்ணீர் வற்றிப்போனதினால், தண்ணீர்போன பாதையானது இப்போது ஒரு வழியைப்போலிருக்கிறது. சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசையிலிருந்து ராஜாக்கள் இந்த வழியாக வரலாம். இந்த வழி அந்த ராஜாக்களுக்கு ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.

வலுசர்ப்பம் கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாகவும் மறுபடியும் யுத்தம்பண்ண ஆயத்தமாகிறது. இதுவே வலுசர்ப்பத்தின் கடைசி யுத்தம். ஆகையினால் கர்த்தரோடு மூர்க்கமாக யுத்தம்பண்ணவேண்டுமென்று சதிசெய்து செயல்படுகிறது. கர்த்தரோடு யுத்தம்பண்ணுவதற்கு, தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்தஆவிகள் வருகிறது. இவை, இந்த யுத்தத்தில் வலுசர்ப்பத்தின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகிறது.

தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகளும் வலுசர்ப்பத்தின் வாயிலும், மிருகத்தின் வாயிலும், கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து புறப்பட்டு வருகிறது. கள்ளத்தீர்க்கதரிசி என்பது மற்றொரு மிருகத்தை குறிக்கிற வார்த்தையாக இருக்கலாம் என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள் (வெளி 13:11)

மூன்று அசுத்த ஆவிகளும் பிசாசுகளின் ஆவிகள். இவை மாய்மாலமான அற்புதங்களைச் செய்யும். தாங்கள் செய்கிற அற்புதங்களினால் ராஜாக்களையும் ஜனங்களையும் வஞ்சிக்கும். தங்களுக்கு அதிக வல்லமையிருப்பதுபோல மாய்மாலம் பண்ணும். பிசாசுகளுக்கு உண்மையில் வல்லமை எதுவுமில்லை. தங்களிடத்தில் வல்லமையிருப்பதுபோல அவை மாய்மாலம்பண்ணுகிறது.

சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் ஒரு யுத்தம் நடக்கப்போகிறது. அந்த யுத்தத்தில் வலுசர்ப்பமும் அவனுடைய பிசாசுக் கூட்டமும் கர்த்தரோடு யுத்தம்பண்ணும். தேவனோடு யுத்தம்பண்ணுவதற்கு வலுசர்ப்பத்திற்கு ராஜாக்கள் தேவை. இதற்காக மூன்று அசுத்த ஆவிகளும் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை யுத்தத்திற்கு கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. பிசாசுகளின் ஆவிகள் அவர்கள் மத்தியிலே அற்புதங்களைச் செய்து ராஜாக்களை வஞ்சிக்கும். வஞ்சிக்கப்பட்டவர்கள் வலுசர்ப்பத்தோடு சேர்ந்துகொண்டு, கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்.

இந்த யுத்தமே வலுசர்ப்பத்திற்கு கடைசி யுத்தம். ஆகையினால் தன்னால் முடிந்த வரையிலும் மூர்க்கமாக யுத்தம்பண்ணி, கர்த்தரை ஜெயித்துவிடவேண்டும் என்று வலுசர்ப்பம் சதிபண்ணுகிறது. பூமியின் ராஜாக்களைத் தன்பக்கமாக கூட்டிச் சேர்க்கிறது. சாத்தான் எவ்வளவுதான் முயற்சிபண்ணினாலும், கர்த்தரே ஜெயமுள்ளவர். ஜெயம் கர்த்தருக்கு மாத்திரமே உரியது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஜெயகிறிஸ்துவாகயிருக்கிறார்.

பாக்கியவான் வெளி 16:15

வெளி 16:15. இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

பிசாசுகளின் ஆவிகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை தங்கள் பக்கமாக கூட்டிச்சேர்க்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எச்சரிப்பாயிருக்கவேண்டும் என்று கர்த்தர் நமக்கு எச்சரிப்பின் வார்த்தையைச் சொல்லுகிறார். நாம் விழித்திருக்கிறவர்களாய் காணப்படவேண்டும். நம்முடைய நீதியின் வஸ்திரங்களையும், இரட்சிப்பின் வஸ்திரங்களையும் காத்துக்கொள்ளவேண்டும். கர்த்தர் திருடனைப்போல, நினையாத வேளையிலே வருவதாகச் சொல்லுகிறார்.

நீதியின் வஸ்திரங்களையும், இரட்சிப்பின் வஸ்திரங்களையும் காத்துக்கொள்ளதவர்கள் நிர்வாணமாயிருப்பார்கள். நிர்வாணமாய் நடப்பார்கள். தங்களுடைய மானத்தைப் பிறருக்குக் காண்பிப்பார்கள். கர்த்தர் இப்படிப்பட்ட நிர்வாணத்தை அறுவறுக்கிறார். பிசாசுகளின் ஆவிகள் தங்கள் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளாதவர்களை வஞ்சித்து, தங்கள் பக்கமாகச் சேர்த்துக்கொள்ளும். கர்த்தருடைய வருகையும் சமீபமாயிருக்கிறது. ஆகையினால் நாம் நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டிருக்கவேண்டும். நம்முடைய வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். தங்கள் வஸ்திரங்களைக் காத்துக்கொள்கிறவர்கள் பாக்கியவான்களாயிருப்பார்கள்.

அர்மகெதோன் வெளி 16:16

வெளி 16:16. அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.

சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே யுத்தம் நடைபெறும். இந்த இடம் மெகித்தோ பர்வதமாகயிருக்கலாம் என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். பிசாசுகளின் ஆவிகள் பூலோகமெங்குள்ள ராஜாக்களை அர்மகெதோன் என்னப்பட்ட இடத்தில் கூட்டிச் சேர்க்கிறார்கள். அர்மகெதோனில் கர்த்தருக்கும் வலுசர்ப்பத்திற்கும் யுத்தம் நடைபெறும். கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தரோடு சேர்ந்து வலுசர்ப்பத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்.

யுத்தம் கர்த்தருடையது. கர்த்தரே யுத்தம்பண்ணுகிறவர். யுத்தம் நடைபெற்றால்தான் ஜெயமுண்டாகும். கர்த்தருடைய பிள்ளைகள் யுத்தத்தைப் பார்த்து பயப்படக்கூடாது. நம்முடைய தேவன் ஜெயங்கொடுக்கிற தேவன். கர்த்தருடைய ஊழியத்தில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். கர்த்தருடைய யுத்தத்திலும், நாம் கர்த்தரோடு சேர்ந்து, சாத்தானுக்கு விரோதமாக, விசுவாசத்தோடும் பயமில்லாமலும் யுத்தம்பண்ணவேண்டும்.

அர்மகெதோன் என்னப்பட்ட இடத்தில் நடைபெறுகிற யுத்தத்தைப்பற்றி வெளி 19-ஆவது அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ""பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கட-லே உயிரோடே தள்ளப்பட்டார்கள்'' (வெளி 19:19,20).

ஏழாம் கலசம் வெளி 16 : 17-21

வெளி 16:17. ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்தி-ருந்து: ஆயிற்று என்று சொல்-ய பெருஞ்சத்தம் பிறந்தது.

வெளி 16:18. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

வெளி 16:19. அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.

வெளி 16:20. தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.

வெளி 16:21. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்தி-ருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.

ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றுகிறான். ஏழாம் வாதையே கடைசி வாதை. இதோடு தேவனுடைய உக்கிரமான வாதை முடிவுபெறுகிறது. ஏழாம் வாதை ஆகாயத்தில் ஆரம்பமாயிற்று. ஆகாயத்திலே அந்தகாரப்பிரபுக்களும், பிசாசுகளின் அந்தகார சக்திகளும் இருக்கிறது. பிசாசினுடைய ராஜ்யத்தின்மீது ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்றுகிறான். சாத்தானால் இந்த வாதையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தம் பிறக்கிறது. அந்தச் சத்தம், ""ஆயிற்று'' என்று சொல்லுகிறது. கர்த்தருடைய கிரியைக்கு வானத்திலே ஸ்தோத்திரபலி ஏறெடுக்கப்படுகிறது. கர்த்தர் தாம் ஆரம்பித்த கிரியையை இப்போது நிறைவுபெறச் செய்கிறார்.

அப்போது வானத்திலே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும் உண்டாயிற்று. பூமி மிகவும் அதிர்ந்தது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட பெரிய பூமியதிர்ச்சி உண்டானதில்லை. பூமியதிர்ச்சியோடு சேர்ந்து இடிமுழக்கமும் மின்னல்களும் உண்டாயிற்று.

பூமியிலே அதிர்ச்சி உண்டாகும்போது கர்த்தர் துன்மார்க்கமான மகாபாபிலோனை நினைத்துப் பார்க்கிறார். மகாபாபிலோனுக்கு, தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக நினைப்பூட்டப்படுகிறது. கர்த்தர் தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக மகாபாபிலோனுக்கு தம்முடைய கோபாக்கினையின் பாத்திரத்தைக் குடிக்கக் கொடுக்கிறார். தேவனுடைய கோபாக்கினை சாதாரண கோபாக்கினையாயிராமல், உக்கிரமான கோபாக்கினையாயிருக்கிறது.

தேவனுடைய கோபாக்கினை மகாபாபிலோன்மேல் வரும்போது, தீவுகள் யாவும் அகன்றுபோயிற்று. பர்வதங்கள் காணப்படாமற் போயிற்று. தீவுகளும் மலைகளும் இயற்கையில் பாதுகாப்புள்ளவை. கர்த்தருடைய கோபாக்கினைக்கு முன்பாக இயற்கையான பாதுகாப்புக்களெல்லாம் நிலைநிற்க முடியவில்லை. அசைக்கமுடியாத பர்வதங்கள் காணப்படாமற்போயிற்று. நிலைத்து நிற்கக்கூடிய தீவுகள் அகன்றுபோயிற்று. தேவனுடைய கோபாக்கினை உக்கிரமான கோபாக்கினையாகயிருப்பதினால், தீவுகளாலும் மலைகளாலும் தேவனுடைய கோபாக்கினையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறது.

மகாபாபிலோனிலே துன்மார்க்கர் நிரம்பியிருக்கிறார்கள். இவர்கள் வலுசர்ப்பத்தின் பிள்ளைகள். இவர்கள் அந்திக்கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள். மகாபாபிலோன் நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்படுகிறது. புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுகிறது. இந்தப் பட்டணங்களில் கள்ளப்போதகர்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும், அந்திக்கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களும், மிருகத்தின் சொரூபத்தை வணங்குகிறவர்களும், மிருகத்தின் முத்திரையைத் தரித்திருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த மனுஷர்மேல் பெரிய கல்மழை வானத்திலிருந்து விழுகிறது. ஒவ்வொரு கல்லும் தாலந்து நிறையான கனமான கல்லாகயிருக்கிறது. வானத்திலிருந்து மனுஷர்மேல் கல்மழை விழுகிறது. துன்மார்க்கருக்கு நியாயத்தீர்ப்பு உண்டாயிற்று. தேவனுடைய கோபாக்கினை அவர்கள்மேல் வருகிறது. இந்த வாதை மகா கொடிதாயிருக்கிறது.

இதையெல்லாம் பார்த்து, மகாபாபிலோன் ஜனங்கள் மனந்திரும்பவேண்டும். தங்கள் பாவங்களைவிட்டு விலகிவரவேண்டும். கர்த்தரைப் பின்பற்றவேண்டும். கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டும். ஆனால் அவர்களோ, கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் தேவனைத் தூஷிக்கிறார்கள். துணிகரமாகப் பாவம் செய்கிறார்கள். கர்த்தரைத் தூஷிக்கிறவர்களுக்கு நீதியான தண்டனை கிடைத்திருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.