15 அதிகாரம்
ஆபிராமுக்கும் கர்த்தருக்கும் இடையே உடன்படிக்கை உறுதிபண்ணப்படுகிறது. இதற்கு முந்தின அதிகாரத்தில், ஆபிராம் ராஜாக்களோடு யுத்தம்பண்ணினார். இந்த அதிகாரத்திலோ, அவர் கர்த்தரோடு கூடயிருக்கிறார். ராஜாக்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி ஜெயிப்பதைவிட, கர்த்தருடைய சமுகத்திலே நம்மைத் தாழ்த்தி, அவருடைய கிருபைகளைப் பெற்றுக்கொள்வதே, நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம்.
தேவனுக்கும் ஆபிராமுக்கும் இடையே உடன்படிக்கை உறுதிபண்ணப்படுகிறது. இது வாக்குத்தத்தங்களின் உடன்படிக்கையாகும். கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு உண்டாயிற்று. கர்த்தர் ஆபிராமை ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் அவருக்கு ஆதரவாகயிருக்கிறார் (ஆதி 15:1).
கர்த்தர் ஆபிராமின் சந்ததியை அதிகரிக்கப்பண்ணுகிறார் (ஆதி 15:2#6). கர்த்தர் ஆபிராமுக்கு கானான் தேசத்தை சுதந்தரமாகக் கொடுக்கிறார் (ஆதி 15:7#21). வாக்குத்தத்தத்தின் சந்ததியும், வாக்குத்தத்தத்தின் தேசமும் ஆபிராமுக்கு ஆறுதலாயிருக்கிறது. விசுவாசிகளாகிய நமக்கு, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் பரலோகமும் மேன்மையான ஆசீர்வாதங்களாகும்.
ஆபிராமுக்கு கர்த்தருடைய வார்த்தை
ஆதி 15:1
ஆதி 15:1. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
ஆபிராம் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்தார். ஆபிராம் லோத்தையும், அவருடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டு வந்தார். அதன் பின்பு ஆபிராமுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
ஆபிராம் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவித்திருக்கிறார். துன்பத்திலும், வேதனையிலும் இருந்தவர்களை விடுதலை செய்து, அவர்களுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறார். இதற்காக ஆபிராமுக்கு யாரும் வெகுமதி கொடுக்கவில்லை. அவர் யாரிடத்திலும் கிரயத்தைப் பெற்றுக்கொண்டு கெதர்லாகோமேருக்கு விரோதமாகவோ அல்லது அவனோடு கூடயிருந்த ராஜாக்களுக்கு விரோதமாகவோ யுத்தம்பண்ணப்போகவில்லை.
ஆபிராம் தானாகவே முன்வந்து, சிறைப்பட்டவர்களை திருப்பிக்கொண்டு வருகிறார். அதன்பின்பு ஆபிராமுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. ஆபிராம் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்து திரும்பி வந்த பின்பு, அவருக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
இந்தக் காரியங்கள் நடந்த பின்பு ஆபிராமுக்கு கர்த்தருடைய வார்த்தை தரிசனத்திலே உண்டாயிற்று. ஆபிராம் நித்திரை செய்யவில்லை. அவர் விழித்திருக்கிறார். அப்போது ஆபிராம் தேவனுடைய ஷேக்கைனா மகிமையை பிரத்தியட்சமாய்த் தரிசிக்கிறார். அவர் தேவனுடைய தெய்வீக மகிமையை தன்னுடைய கண்களால் பார்க்கிறார்.
கர்த்தர் ஆபிராமின்மீது அன்பாயிருக்கிறார். அவர் தம்முடைய கிருபையையும், ஆசீர்வாதத்தையும், சிலாக்கியங்களையும் ஆபிராமுக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தர் ஆபிராமைக் கூப்பிடும்போது, அவருடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிறார். ""ஆபிராமே, நீ பயப்படாதே'' என்று கர்த்தர் அன்போடும், ஆறுதலோடும் சொல்லுகிறார்.
கர்த்தருடைய ஆவியானவர் தம்முடைய நல்ல வார்த்தைகளை நமக்கு சொல்லும்போது, நமக்கு நன்மை உண்டாகும். கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""ஆபிராமே, நீ பயப்படாதே, நான் உனக்கு கேடகமும், உனக்கு மகாபெரிய பலனுமாயிருக்கிறேன்'' என்று சொல்லுகிறார்.
""ஒ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்'' (ஏசா 55:1).
ஆபிராம் ஏதோ ஒரு காரியத்தினிமித்தமாக பயப்படுகிறார். அவர் எதையோ நினைத்து தன்னுடைய மனதிலே கலங்கிக்கொண்டிருக்கிறார். கர்த்தர் ஆபிராமின் இருதயத்தை அறிந்திருக்கிறார். அவர் ஆபிராமை நோக்கி, ""ஆபிராமே, நீ பயப்படாதே'' என்று ஆறுதலாகச் சொல்லுகிறார். ஆபிராம் கர்த்தரை நம்புகிறார். அவர் ஒரு நீதிமான். அவர் பயப்படவேண்டியதில்லை. சீயோனிலிருக்கிற பாவிகள்தான் பயப்படவேண்டும். ஆபிராம் பயப்படவேண்டியதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் ஆபிராமுக்கு பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் வாக்குப்பண்ணுகிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் ஆபிராமின்மீது நித்திய காலமாக தங்கியிருக்கும். கர்த்தர் தாமே ஆபிராமை பாதுகாப்பார். கர்த்தர் ஆபிராமுக்கு கேடகமாயிருப்பார். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் தேவன் மாத்திரமல்ல, அவர் இஸ்ரவேலுக்கும் தேவனாயிருக்கிறார்.
கர்த்தர் ஆபிராமை ஆசீர்வதித்து, அவருடைய பயத்தைப் போக்குகிறார். கர்த்தரே ஆபிராமுக்கு மிகப்பெரிய வெகுமதியாயிருக்கிறார். ஆபிராமை ஆசீர்வதிக்கிறவர் கர்த்தர். அந்தக் கர்த்தரே ஆபிராமுக்கு ஆசீர்வாதமாகவும் இருக்கிறார்.
சோதோமின் ராஜா ஆபிராமுக்கு வெகுமதிகளைக் கொடுக்க முன்வந்தான். ஆனால் ஆபிராமோ அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆபிராமுக்கு கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதம் வரும். ஆபிராம் மனுஷர் மூலமாக வரும் ஆசீர்வாதங்களைவிட, கர்த்தர் மூலமாக வரும் ஆசீர்வாதத்தையே அதிகமாய் விரும்புகிறார். கர்த்தர் ஆபிராமின் மனதை அறிந்து, ""நான் உனக்கு கேடகமும், உனக்கு மகாபெரிய பெலனுமாயிருக்கிறேன்'' என்று சொல்லுகிறார். இந்த வாக்கியத்திற்கு, ""நானே உனக்கு ஆசீர்வாதமாயிருக்கிறேன்'' என்று பொருள்.
ஆபிராம் கர்த்தரிடத்திலிருந்து தரிசனத்தைப் பெற்றுக்கொண்டதுபோல, மேலும் அநேகர் அவரிடத்திலிருந்து தரிசனத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்று பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரம் வருமாறு :
1. ஆபிரகாம் (ஆதி 15:1)
2. யாக்கோபு (ஆதி 46:2)
3. பிலேயாம் (எண் 24:4,16)
4. சாமுவேல் (1சாமு 3:1,15)
5. நாத்தான் (2சாமு 7:17; 1நாளா 17:15)
6. ஏசாயா (ஏசா 1:1; 2நாளா 32:32)
7. மேசியா (சங் 89:19)
8. எசேக்கியேல் (எசே 7:13; எசே 8:1-4; எசே 11:24)
9. இத்தோ (2நாளா 9:29)
10. தானியேல் (தானி 2:19; தானி 8:1-27; தானி 9:21-24)
11. நேபுகாத்நேச்சார் (தானி 2)
12. ஒபதியா (ஒப 1)
13. நாகூம் (நாகூம் 1:1)
14. ஆபகூக் (ஆப 2:2-3)
15. பேதுரு (மத் 17:1; அப் 10:19; அப் 11:5)
16. யாக்கோபு (மத் 17:1)
17. யோவான் (மத் 17:1; வெளி 9:17)
18. சகரியா (லூக்கா 1:22)
19. அனனியா(அப் 9:10-12)
20. கொர்நேலியு (அப் 10:3,17)
21. பவுல் (அப் 16:9-10; அப் 18:9; 2கொரி 12)
ஆபிராமின் சந்ததி
ஆதி 15:2#6
ஆதி 15:2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எ-யேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
ஆதி 15:3. பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
ஆதி 15:4. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்-,
ஆதி 15:5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்-; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
ஆதி 15:6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
ஆபிராமின் சந்ததி திரளாய்ப் பெருகும் என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். ஆபிராம் கர்த்தரிடத்தில் தன் மனதிலுள்ள வேதனையை மறுபடியுமாய்ச் சொல்லுகிறார். இதன் தொடர்ச்சியாக கர்த்தர் ஆபிராமுக்கு இந்த வாக்குத்தத்தத்தை சொல்லுகிறார். ஆபிராம் இன்னும் பிள்ளையில்லாமலிருக்கிறார். இது அவருடைய மனதில் பாராமாகவும், அவருடைய இருதயத்தில் வேதனையாகவும் இருக்கிறது.
நாம் கர்த்தரைப்பற்றி ஒருபோதும் குறை சொல்லக்கூடாது. கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுக்கக்கூடாது. ஆனாலும் நம்முடைய மனதிலுள்ள வேதனைகளையும், இருதயத்தின் பாரங்களையும் கர்த்தரிடத்தில் சொல்லுவதினால் தவறு ஒன்றுமில்லை. நம்முடைய மனதின் பாரங்களை கர்த்தருடைய சமுகத்தில் சொல்லும்போது, நம்முடைய வேதனை குறையும். வருத்தம் நம்மைவிட்டு நீங்கும். கர்த்தர் நம்முடைய விண்ணப்பங்களுக்கு செவிகொடுக்கிற தேவன். அவர் கிருபையும் இரக்கமுமுள்ளவர். அவர் நமக்கு உண்மையும் கரிசனையுமுள்ள சிநேகிதராயிருக்கிறார்.
ஆபிராம் கர்த்தரிடத்தில் நான்குவிதமான காரியங்களை சொல்லுகிறார். அவையாவன : 1. ஆபிராம் இன்னும் பிள்ளையில்லாமலிருக்கிறார். 2. ஆபிராமுக்கு வயதாயிற்று. ஆகையினால் அவருக்கு பிள்ளை பெறுவதற்கு இனிமேல் வாய்ப்பு இல்லை. 3. ஆபிராமுக்கு பிள்ளையில்லாமலிருப்பதினால், அவருடைய வீட்டின் வேலைக்காரர்களே அவருக்கு சுதந்தரவாளிகளாயிருப்பார்கள். 4. கர்த்தர் ஆபிராமை திரளான ஐசுவரியத்தினால் ஆசீர்வதித்திருக்கிறார். ஆனாலும் ஆபிராமுக்கு பிள்ளையில்லாமலிருப்பதினால் அவரால் அந்த ஐசுவரியங்களை சந்தோஷமாய் அனுபவிக்க முடியவில்லை.
கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""ஆபிராமே, நீ பயப்படாதே, நான் உனக்கு கேடகமும் உனக்கு மகாபெரிய பலனுமாயிருக்கிறேன்'' என்று சொல்லுகிறார். ஆனாலும் ஆபிராமின் மனதில் பயமும், வேதனையும் வருத்தமும், கவலையும் நிரம்பியிருக்கிறது.
ஆபிராம் தனக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லும் கர்த்தரை நோக்கி, ""கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எ-யேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே'' (ஆதி 15:2) என்று சொல்லுகிறார்.
ஆபிராமுக்கு வயதாயிற்று. ஆபிராமின் மனைவியாகிய சாராளுக்கும் வயதாயிற்று. சாராள் இனிமேல் பிள்ளை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆபிராம் தன்னுடைய வருஷங்களை பிள்ளையில்லாமலேயே களித்துக்கொண்டு வருகிறார். காலம் வேகமாக கடந்து செல்கிறது. ஆனாலும் ஆபிராம் இன்னும் பிள்ளையில்லாமலிருக்கிறார்.
ஆபிராமின் வீட்டில் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். தமஸ்கு ஊரானாகிய எலியேசர் ஆபிராமின் வீட்டு விசாரணைக்கர்த்தனாயிருக்கிறான். ஆபிராமுக்கு பிள்ளையில்லாமலிருப்பதினால், அவருடைய வேலைக்காரரின் பிள்ளைகளே, ஆபிராமின் வீட்டிற்கு சுதந்தரவாளிகளாயிருப்பார்கள். ஆபிராமுக்கு பிள்ளை பிறந்தால், அந்தப் பிள்ளை அவருக்கு சுதந்தரவாளியாயிருப்பான். தனக்கு சுதந்தரவாளியில்லை என்னும் வேதனை ஆபிராமின் மனதை வருத்தமடையச்செய்கிறது.
ஆபிராம் கர்த்தரை நோக்கி, ""தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான்'' (ஆதி 15:3) என்று சொல்லுகிறார். ஆபிராமுக்கு ஐசுவரியம் இருந்தாலும், அவருக்கு பிள்ளையில்லாமலிருப்பதினால், அவரால் தன்னுடைய ஐசுவரியங்களை சந்தோஷமாய் அனுபவிக்க முடியவில்லை. தனக்கு எல்லாம் இருந்தும், பிள்ளையில்லாமலிருப்பதினால், தனக்கு ஒன்றுமில்லை என்று ஆபிராம் கர்த்தரிடத்தில் வேதனையோடு சொல்லுகிறார்.
""தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை'' என்று ஆபிராம் கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். இஸ்மவேல் (ஆதி 16:15), ஈசாக்கு (ஆதி 21:1-8), கெத்தூராள் மூலமாக மற்ற குமாரர்கள் (ஆதி 25:1-6) ஆகியோர் பிறப்பதற்கு முன்பாக ஆபிராம் இந்த வார்த்தையைச் சொல்லுகிறார்.
""என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான்'' என்று ஆபிராம் சொல்லுவது, ஆதி 15:2 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் எலியேசரைக் குறிக்கும்.
ஆபிராம் விசுவாசத்தினால், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஸ்திரீயின் வித்தை நோக்கிப் பார்க்கிறார். ஆபிரகாமின் சந்ததியில், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வித்து உருவாகும். அந்த வித்தைப் பார்க்கவேண்டும் என்று ஆபிராம் விசுவாசத்தோடும், ஆர்வத்தோடும் காத்திருக்கிறார். கர்த்தர் ஆபிராமுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். ஆனாலும் தன்னுடைய சந்ததியில் மேசியா பிறப்பார் என்பதே ஆபிராமுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாயிருக்கிறது.
கர்த்தரும் ஆபிராமை உற்சாகப்படுத்துகிறார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததிக்காக ஆபிராம் விசுவாசத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆபிராம் இப்போது பிள்ளையில்லாமலிருக்கிறார். அவருக்கு எவ்வளவுதான் ஐசுவரியம் இருந்தாலும், பிள்ளையில்லாவிட்டால், அவருக்கு ஒன்றுமே இல்லை.
கர்த்தர் விசுவாசிகளாகிய நம்மையும் அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார். நமக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும், நாம் எப்போதும் கர்த்தரையே நோக்கிப் பார்க்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் கிறிஸ்துவானவர் வாசம்பண்ணவேண்டும். நாம் இந்த உலகம் முழுவதையும் ஆதாயம்பண்ணிக்கொண்டாலும், கிறிஸ்துவானவர் நமக்குள்ளே உருவாகவில்லையென்றால், நமக்கு ஒன்றுமில்லை. நம்முடைய ஜீவியத்தில் கிறிஸ்து இல்லையென்றால் நாம் ஒன்றுமே இல்லை.
ஆபிராம் தன்னுடைய மனதின் வேதனையை கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். அவர் கர்த்தர்மீது குற்றம் சொல்லவில்லை. கர்த்தரைக்குறித்து குறையும் சொல்லவில்லை. ஆபிராம் தன் மனதிலுள்ள வேதனைகளையும், வருத்தங்களையும் கர்த்தருக்கு தெரியப்படுத்துகிறார். கர்த்தரும் ஆபிராமின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்கிறார்.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு மறுபடியும் உண்டாயிற்று. கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்'' (ஆதி 15:4) என்று சொல்லுகிறார்.
கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாயிருக்கிறது. தன்னுடைய வீட்டில் பிறந்த வேலைக்காரரின் பிள்ளை தனக்கு சுதந்தரவாளியாயிருக்கிறான் என்று ஆபிராம் கர்த்தரிடத்தில் வேதனையோடு சொன்னார். கர்த்தரோ ஆபிராமை நோக்கி, ""இவன் உனக்கு சுதந்தரவாளியல்ல'' என்று சொல்லிவிடுகிறார்.
கர்த்தர் ஆபிராமுக்கு தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக ஒரு சுதந்தரவாளியை நியமித்திருக்கிறார். அந்த சுதந்தரவாளி ஆபிராமுடைய வேலைக்காரனோ, அந்த வேலைக்காரனுடைய பிள்ளையோ அல்ல. கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்கு சுதந்தரவாளியாயிருப்பான்'' என்று சொல்லுகிறார்.
ஆபிராம் கர்த்தரிடத்தில், ""ஆண்டவரே அடியேனுக்கு என்ன தருவீர், நான் பிள்ளையில்லாமலிருக்கிறேனே. தேவரீர் எனக்கு புத்திரசந்தானம் அருளவில்லை'' என்று வேதனையோடு சொன்னார். இப்போதோ கர்த்தர் ஆபிராமுக்கு சுதந்தரவாளியை வாக்குப்பண்ணுகிறார். ஆபிராமின் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே அவருக்கு சுதந்தரவாளியாயிருப்பான்.
ஆபிராம் கர்த்தருடைய வார்த்தையை நம்பவேண்டும். ஆபிராமின் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதற்கு கர்த்தரும் அவருக்கு உதவிசெய்கிறார். கர்த்தர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, அவரை நோக்கி, ""நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்-; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்'' (ஆதி 15:5) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் ஆபிராமுக்கு வாக்குத்தத்த வார்த்தைகளை சொல்லுவதோடு, அவருக்கு வானத்தின் நட்சத்திரங்களையும் காண்பிக்கிறார். ""உன் சந்ததி இவ்வண்ணமாயிருக்கும்'' என்று கர்த்தர் சொல்லுகிறார்.
வானத்திலுள்ள நட்சத்திரங்கள் திரளான எண்ணிக்கையிலிருக்கிறது. அவற்றை எண்ண முடியாது. ஆபிராமோ தனக்கு பிள்ளையில்லை என்று வேதனையோடு சொல்லுகிறார். கர்த்தரோ அவருக்கு வானத்தின் நட்சத்திரங்களைக் காண்பித்து, அவருடைய சந்ததி, எண்ணக்கூடாத அளவுக்கு திரளாயிருக்கும் என்று சொல்லுகிறார்.
வானத்திலுள்ள நட்சத்திரங்கள் பிரகாசமாய் மின்னுகிறது. ஆபிராமின் திரளான சந்ததியார் நட்சத்திரங்களைப்போல பிரகாசமாயிருப்பார்கள். அவர்கள் மங்கிப்போகமாட்டார்கள். ஆபிராமுக்கு மாம்சப்பிரகாரமான சந்ததியும் பிறக்கும். அவருக்கு ஆவிக்குரிய சந்ததியும் உண்டாகும்.
ஆபிராமின் மாம்சப்பிரகாரமான சந்ததி இந்தப் பூமியின் தூளைப்போல இருக்கும். ""உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்'' (ஆதி 13:16).
ஆபிராமின் ஆவிக்குரிய சந்ததியோ வானத்து நட்சத்திரங்களைப் போல இருக்கும். அவை எண்ணக்கூடாத அளவுக்கு திரளாகவும் இருக்கும். அவை மகிமையுள்ளதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும்.
ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைகளை விசுவாசிக்கவேண்டும். அவர் கர்த்தரை விசுவாசிக்கிறார். ஆபிராமின் விசுவாசத்தை கர்த்தர் அவருக்கு நீதியாக எண்ணுகிறார் (ஆதி 15:6). அப்போஸ்தலர் பவுல் ஆபிராமின் விசுவாசத்தை நமக்கு எடுத்துக்காட்டாக சொல்லுகிறார்.
""அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது'' (ரோம 4:19#22).
கர்த்தர் ஆபிராமையும் அவருடைய விசுவாசத்தையும் அங்கீகரிக்கிறார். கர்த்தர் ஆபிராமை அங்கீகரித்ததுபோலவே, இஸ்ரவேல் ஜனத்தாருடைய முற்பிதாக்களையும் அங்கீகரிக்கிறார்.
""விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய ப-யிலும் மேன்மையான ப-யை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான், அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்'' (எபி 11:4).
ஆபிராமின் விசுவாசம், விசுவாசிகளாகிய நமக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆபிராமைப்போலவே நாமும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுகிறோம். நாம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமான்களாக்கப்படவில்லை.
""வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது'' (ரோம 4:3).
""அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக'' (கலா 3:6,7).
ஆபிராம் நீதிமானாக்கப்பட்டதுபோல, விசுவாசிகளாகிய நாம் எல்லோருமே நீதிமான்களாக்கப்படுகிறோம். கர்த்தர் ஆபிராமின் விசுவாசத்தை அவருக்கு நீதியாக எண்ணினார். அதுபோலவே கர்த்தர் நம்முடைய விசுவாசத்தையும் நமக்கு நீதியாக எண்ணுவார். நாம் நீதிமானாக்கப்படுவதற்கு, கர்த்தரை விசுவாசிக்கவேண்டும்.
சுதந்தர தேசம்
ஆதி 15:7#11
ஆதி 15:7. பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தி-ருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.
ஆதி 15:8. அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.
ஆதி 15:9. அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வொள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.
ஆதி 15:10. அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
ஆதி 15:11. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
கர்த்தர் ஆபிராமுக்கு கானான் தேசத்தை சுதந்தரமாகக் கொடுக்கிறார். கர்த்தர் ஆபிராமை நோக்கி, "" இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தி-ருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே'' (ஆதி 15:7) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் ஆபிராமுக்கு கானான் தேசத்தை வாக்குப்பண்ணும்போது, இந்த வாக்குத்தத்தத்தோடு தொடர்புடைய தம்முடைய சித்தத்தையும் வெளிப்படுத்துகிறார். ஆபிராம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சந்ததியையும் விசுவாசிக்கவேண்டும். அவர் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தையும் விசுவாசிக்கவேண்டும். கர்த்தர் ஆபிராமுக்கு சந்ததியைக் கொடுப்பாரென்றால், அவருக்கு கானான் தேசத்தையும் கொடுப்பார்.
கிறிஸ்துவானவர் நம்முடையவராகயிருப்பாரென்றால், பரலோகமும் நம்முடையதாகயிருக்கும். கர்த்தர் ஆபிராமுக்கு சொன்ன முதலாவது வாக்குத்தத்தத்தை அவர் விசுவாசித்தார். ஆபிராமின் விசுவாசம் அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. இப்போது கர்த்தர் ஆபிராமுக்கு இரண்டாவது வாக்குத்தத்தத்தை சொல்லுகிறார்.
கர்த்தர் கானான் தேசத்தைப்பற்றிச் சொல்லும்போது, அவர் ஆபிராமுக்கு மூன்று காரியங்களை நினைவுபடுத்துகிறார். அவையாவன : 1. நான் கர்த்தராகிய ஆண்டவர் 2. கர்த்தரே ஆபிராமை ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தவர். 3. கானான் தேசத்தை ஆபிராமுக்கு சுதந்தரமாக கொடுக்கும் பொருட்டு, கர்த்தர் அவரை ஊர் என்னும் பட்டணத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.
கர்த்தர் ஆபிராமுக்கு தம்முடைய வாக்குத்தத்தத்தை சொல்லும்போது, தம்முடைய தெய்வீக சுபாவத்தையும் அவருக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தர் ஆபிராமிடம், ""கர்த்தர் நானே'' என்று சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர். அவரால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை. கர்த்தரால் எல்லாம் கூடும்.
ஆபிராமுக்கு கானான் தேசத்தை சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தம். கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்கு எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், ஏனோக்கியரின் குமாரர்கள் மூலமாக அதற்கு எதிர்ப்புக்கள் வந்தாலும், கர்த்தர் எல்லா எதிர்ப்புக்களையும் முறியடித்து, தம்முடைய வார்த்தையின் பிரகாரம் கானான் தேசத்தை ஆபிராமுக்கு சுதந்தரமாகக் கொடுப்பார். தம்மால் செய்ய முடியாத எதையும் கர்த்தர் வாக்குப்பண்ணமாட்டார். கர்த்தரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை.
மனுஷர் பல சமயங்களில் பெரிய வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். தங்களால் செய்ய முடியாத காரியங்களையும், தாங்கள் செய்து கொடுப்பதாக சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள். அவர்களால் அதை செய்ய முடியாது. இது மனுஷருடைய பலவீனம். கர்த்தரோ சர்வவல்லவர். அவரால் எல்லாம் கூடும். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறது.
கர்த்தர் தாமே ஆபிராமை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். யூதருடைய பாரம்பரிய சரித்திர ஆகமங்களில் ஆபிராமைப்பற்றி அதிகமாய் எழுதப்பட்டிருக்கிறது. ஆபிராம் விக்கிரகங்களை ஆராதிக்க மறுத்ததற்காக, அக்காலத்து ஜனங்கள் அவரை எரிகிற அக்கினி சூளையிலே போட்டுவிட்டார்கள் என்றும், கர்த்தருடைய அற்புதமான வல்லமையினால் அவர் அக்கினி சூளையிலிருந்து தப்புவிக்கப்பட்டார் என்றும் யூதருடைய பாரம்பரிய சரித்திரம் சொல்லுகிறது.
கர்த்தர் பூர்வகாலம் முதலே ஆபிராமுக்கு தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆபிராம் கர்த்தருடைய கிருபையின் அஸ்திபாரத்தில் வளர்ந்தவர். கர்த்தர் ஆபிராமுக்கு காண்பித்த கிருபையும் இரக்கமும் மிகவும் விசேஷமானது. அவையெல்லாம் இனிமேல் வரப்போகிற கிருபைகளுக்கும் இரக்கங்களுக்கும் அடையாளங்களாகவும், அச்சாரங்களாகவும் இருக்கிறது.
""பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்'' (ஏசா 66:9)
கர்த்தர் ஆபிராமுக்கு இன்னும் அநேக நன்மைகளை செய்ய சித்தமுள்ளவராகயிருக்கிறார். கர்த்தர் அவரை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்ததற்கு ஒரு தெய்வீக நோக்கமுண்டு. கானான் தேசத்தை ஆபிராமுக்கு சுதந்தரமாகக் கொடுக்கும் பொருட்டே கர்த்தர் அவரை இங்கே அழைத்து வந்திருக்கிறார்.
ஆபிராம் கானான் தேசத்தை சாதாரணமாக பெற்றுக்கொள்ளமாட்டார். அதை சுதந்தரமாகப் பெற்றுக்கொள்வார். பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் சொத்துக்களை சுதந்தரிப்பதுபோல, ஆபிராம் கானான் தேசத்தை சுதந்தரமாகப் பெற்றுக்கொள்வார். கானான் தேசம் கர்த்தருக்குரியது. கர்த்தர் தமக்குரிய தேசத்தை ஆபிராமுக்கு சுதந்தரமாகக் கொடுக்கிறார். கர்த்தர் கொடுக்கும் சுதந்தரம் உறுதியானதாகவும், நிச்சயமானதாகவும் இருக்கும்.
கர்த்தர் ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும், தம்முடைய தெய்வீகதிட்டத்தின் பிரகாரமாகவே கிரியை செய்கிறார். கர்த்தர் ஆபிராமை ஊர் என்கிற கல்தேயருடைய தேசத்திலிருந்து அழைத்து வந்ததற்கு ஒரு நோக்கமுண்டு. அதுபோலவே கர்த்தர் விசுவாசிகளுடைய இருதயங்களில் தம்முடைய தெய்வீக கிரியைகளை நடப்பிப்பதற்கும் ஒரு நோக்கமுண்டு.
தம்முடைய ஜனங்கள் எல்லோரும் பரலோகத்திலே பாதுகாப்பாக பிரவேசிக்கவேண்டும் என்பதே கர்த்தருடைய திட்டம். இதற்காகவே கர்த்தர் தம்முடைய சித்தத்தின் பிரகாரமாகவும், திட்டத்தின் பிரகாரமாகவும் நம்மை வழிநடத்துகிறார்.
ஆபிராம் கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தைகளை கவனமாகக் கேட்கிறார். ஆனாலும் கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை அடையாளத்தினால் உறுதிபண்ணவேண்டும் என்று ஆபிராம் எதிர்பார்க்கிறார்.
ஆபிராம் கர்த்தரை நோக்கி, ""கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன்'' (ஆதி 15:8) என்று கேட்கிறார். ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைகளை சந்தேகப்படவில்லை. அவர் கர்த்தரை விசுவாசிக்கிறார் (ஆதி 15:6). ஆனாலும் ஆபிராம் தன்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும், உறுதிபண்ணிக்கொள்ளவும் விரும்புகிறார்.
ஆபிராம் கர்த்தரிடத்தில் அவிசுவாச வார்த்தைகளைப் பேசாமல், விசுவாச வார்த்தைகளை ஜெபத்தோடு பேசுகிறார். ஆபிராம் கர்த்தரை நோக்கி, ""கர்த்தராகிய ஆண்டவரே, என் அவிசுவாசம் என்னை விட்டு நீங்க எனக்கு உதவி செய்யும்'' என்று பொருள்படுமாறு ஜெபம்பண்ணுகிறார்.
ஆபிராம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தாலும், அது நிறைவேறும் என்பதற்கு ஒரு அடையாளத்தையும் எதிர்பார்க்கிறார். ஆபிராமுக்கும் சோதனைகள் வரும். கர்த்தர் தம்முடைய வார்த்தையை அடையாளத்தினால் உறுதிபண்ணும்போது, ஆபிராம் தனக்கு வரும் சோதனைகளை மேற்கொள்வதற்கு அது உதவியாயிருக்கும்.
கர்த்தர் கொடுக்கும் அடையாளம் ஆபிராமுக்கு மாத்திரமல்ல, அவருடைய பின்சந்ததியாரின் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதற்கும் உதவியாயிருக்கும். ஆபிராம் இதையெல்லாம் மனதில் நினைத்து, ""கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன்'' என்று கர்த்தரிடத்தில் கேட்கிறார்.
கர்த்தர் ஆபிராமிடம் தமக்கு ஒரு பலியை ஆயத்தம்பண்ணுமாறு சொல்லுகிறார். இதன் மூலமாக கர்த்தர் அவருக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிப்பார்.
கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வொள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா'' (ஆதி 15:9) என்று சொல்லுகிறார்.
ஆபிராமும் கர்த்தர் தனக்கு சொன்ன பிரகாரம் பலியை ஆயத்தம்பண்ணுகிறார். ஆபிராம் அவைகள் எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைக்கிறார்; ஆபிராம் பட்சிகளை துண்டிக்கவில்லை. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்குகிறது; ஆபிராம் அவைகளை துரத்துகிறார் (ஆதி 15:10,11).
கர்த்தருடைய நிச்சயமான வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொண்டவர்கள், தங்கள் விசுவாசத்தில் பலப்படவேண்டும். அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவேண்டும். கர்த்தர் ஏற்கெனவே ஏற்படுத்தியிருக்கிற நியமங்களின் பிரகாரம் அவரை சந்திப்பதற்கு தங்களை ஆயத்தம்பண்ணவேண்டும்.
தமக்கு பலியை ஆயத்தம்பண்ணுமாறு கர்த்தர் ஆபிராமுக்கு சொல்லுகிறார். கர்த்தர் சொன்ன எல்லாவற்றையும் ஆபிராம் அவரிடத்தில் கொண்டு வருகிறார். இந்தப் பலியின் மூலமாக கர்த்தர் தனக்கு எவ்வாறு அடையாளத்தை வெளிப்படுத்துவார் என்பது ஆபிராமுக்கு தெரியாது. ஆனாலும் அவர் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறார்.
என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமலேயே கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஆபிராமுக்கு புதியதல்ல. தான் போகும் தேசம் எது என்று தெரியாமலேயே, ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, ஊர் என்னும் கல்தேயருடைய பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனார். ஆபிராம் இதற்கு முன்பு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததுபோல, இப்போதும் கீழ்ப்படிகிறார்.
ஆபிராம் மூன்று வயது கிடாரியையும் மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும் நடுவாக துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைக்கிறார். உடன்படிக்கைகளை உறுதிபண்ணுவதற்கு இதுபோல செய்வது வழக்கம்.
""என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து, நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின்கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்'' (எரே 34:18#20).
ஆபிராம் பூர்வகாலத்தில் செய்யப்பட்டதுபோல, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைக்கிறார். ஆனாலும் கர்த்தருடைய வெளிப்பாடு எப்போதும் ஒன்றுபோலிருப்பதில்லை. அவர் தமக்கு சித்தமானவேளையிலே, தமக்கு சித்தமான பிரகாரம் தம்மை வெளிப்படுத்துகிறார்.
ஆபிராம் துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தவுடனேயே கர்த்தருடைய பிரசன்னம் அங்கு வெளிப்படவில்லை. அவர் கர்த்தருடைய பிரசன்னத்திற்காக காத்திருக்கிறார். காத்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது. ஆகையினால் ஆபிராமின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது. ஆபிராம் பட்சிகளை துண்டிக்கவில்லை. கிடாரியையும், வெள்ளாட்டையும், ஆட்டுக்கடாவையும் மாத்திரமே நடுவாக துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார்.
கர்த்தருடைய பிரசன்னம் வெளிப்படுவதற்கு தாமதமாயிற்று. அப்போது பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்குகிறது. ஆபிராம் அவைகளைத் துரத்துகிறார். நாம் கர்த்தருக்கு பலிசெலுத்தும்போது, அந்தப் பலியின்மீது பறவைகள் பறந்து வருவதுபோல, வீணான சிந்தனைகள் நம்முடைய மனதிலே ஏற்படலாம்.
ஆபிராம் அந்தப் பறவைகளை துரத்தினதுபோல, நாமும் வீணான சிந்தனைகளை நம்மைவிட்டுத் துரத்தவேண்டும். நாம் கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கும்போதும், கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போதும் வீணான சிந்தனைகள் நமக்குள் வராதவாறு, அவற்றை அகற்றவேண்டும். கர்த்தருடைய சமுகத்திலே எந்தவிதமான இடையூறுமில்லாமல், அவரோடு ஐக்கியமாயிருக்கவேண்டும்.
அந்நிய தேசத்தில் ஆபிராமின் சந்ததியார்
ஆதி 15:12#16
ஆதி 15:12. சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.
ஆதி 15:13. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
ஆதி 15:14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
ஆதி 15:15. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
ஆதி 15:16. நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
ஆபிராமின் சந்ததியைப்பற்றி கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்துகிறார். அவர்கள் மூலமாக கர்த்தருடைய சித்தம் நிறைவேறும். வருங்காலத்தில் ஆபிராமின் சந்ததியாருக்கு என்ன நேரிடும் என்பதையும் கர்த்தர் இப்போதே அவருக்கு தெளிவுபடுத்துகிறார்.
ஆபிராம் மிருகங்களை நடுவாக துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்து, அந்த உடல்களின்மேல் இறங்கின பறவைகளை துரத்திக்கொண்டிருக்கிறார். கர்த்தருடைய பிரசன்னம் வெளிப்படுவதற்கு தாமதமாயிற்று. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்துவிடுகிறது. அப்போது ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வருகிறது. திகிலும் காரிருளும் அவரை மூடிக்கொள்கிறது (ஆதி 15:12).
சூரியன் அஸ்தமிக்கும் நேரம் என்பது அந்திப்பலி செலுத்தப்படும் நேரமாகும். கர்த்தர் தம்முடைய ஆறுதலான திட்டங்களை, தம்முடைய ஜனத்திற்கு வெளிப்படுத்துவதற்கு முன்பாக, அவர்களை எதிர்பார்ப்போடு காத்திருக்கச் செய்கிறார். கர்த்தருடைய ஜனம் விசுவாசத்தில் பலப்படவேண்டும். அவர்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாய்க் கட்டியெழுப்பப்படவேண்டும்.
நம்முடைய ஜெபத்திற்கு கர்த்தர் உடனே பதில் தராமல், தாமதம்பண்ணலாம். கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நமக்கு உடனே நிறைவேறாமல், மெதுவாக நிறைவேறலாம். அவை தாமதமாக வந்தாலும், மெதுவாக வந்தாலும், அவை நிச்சயமாகவே வரும். கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும்.
சூரியன் அஸ்தமிக்கும்போது ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வருகிறது. இது சரீர களைப்பினால் வரும் சாதாரண நித்திரையல்ல. தேவனுடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்திருக்கிறது. ஆபிராமின் முழுசரீரமும் நித்திரையிலிருக்கிறது. அப்போது ஆபிராமின் ஆத்துமா விழிப்போடிருக்கிறது. அவருடைய ஆத்துமா கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கவும், அவரோடு சம்பாஷணை பண்ணவும் ஆயத்தமாயிருக்கிறது.
ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தபோது, அவருடைய மனது தனியாக வேறுபிரிக்கப்பட்டிருக்கிறது. ஆபிராம் தேவனுக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்த நிலையில் இருக்கிறார். ஆபிராமால் இப்போது கர்த்தரை மட்டுமே காணமுடியும். அவருடைய சப்தத்தை மட்டுமே கேட்க முடியும். தேவன் ஆபிராமோடு ஏற்படுத்திய உடன்படிக்கை மெய்யாய் இருக்கிறது.
ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தபோது, திகிலும் காரிருளும் அவரை மூடிக்கொள்கிறது. காரிருளோடு திகிலும் சேர்ந்து வருகிறது. இதனால் ஆபிராமின் ஆவியிலே பயமும், கலக்கமும், திகிலும் உண்டாயிற்று. ஆபிராம் கர்த்தருடைய சமுகத்திலே பயத்தோடும் பக்தியோடும் இருக்கிறார். இது பரிசுத்தமான பக்தி. கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். நம்முடைய ஆவியிலே, கர்த்தர்மீது பரிசுத்தமான பயம் ஏற்படவேண்டும். அந்த பயம் பரிசுத்தமான சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு நம்முடைய ஆத்துமாவை ஆயத்தம்பண்ணும்.
அடிமைத்தனத்தின் ஆவி, புத்திர சுவீகாரத்தின் ஆவியையும், விடுதலையின் ஆவியையும் பெற்றுக்கொள்வதற்கு நம்மை ஆயத்தம்பண்ணும். அடிமைகளாயிருக்கிறவர்கள், தாங்கள் விடுதலையாகப்போகும் நாளை ஆவலோடும், வாஞ்சையோடும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள்.
கர்த்தர் தம்முடைய ஜனத்தோடு கிரியை நடப்பித்துக்கொண்டேயிருப்பார். ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தபோது, திகிலும் காரிருளும் அவரை மூடிக்கொள்கிறது. இவை எகிப்தின் அடிமைத்தனத்திற்கு அடையாளம். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்தில் பாடுகளை அனுபவித்த பின்பு, அவர்கள் விடுவிக்கப்பட்டு, வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரிப்பார்கள். அங்கே அவர்களுக்கு சந்தோஷமுண்டாயிருக்கும். திகிலும் காரிருளும் நீங்கும்போது, சந்தோஷமும் வெளிச்சமும் உண்டாகும்.
கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்'' (ஆதி 15:13) என்று சொல்லுகிறார்.
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சந்ததி, உபத்திரவப்படுகிற சந்ததியாயும் இருக்கும். இதை ஆபிராம் புரிந்துகொள்ளவேண்டும். கர்த்தர் வாக்குப்பண்ணுகிற சந்ததிக்கு வரும் பாடுகளைப்பற்றி, இந்த வசனப்பகுதியில் ஆபிராமுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆபிராமின் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருப்பார்கள். பரலோகத்திற்கு சுதந்தரவாளிகளாகயிருக்கிற நாம், முதலாவதாக இந்தப் பூமியிலே பரதேசிகளாயிருப்போம். இந்தப் பூமி நமக்கு சொந்தமான தேசமல்ல. இது நாம் பரதேசியாய் தங்கியிருக்கிற தேசம். பரமதேசமே நமக்கு நிலையான தேசம்.
ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரை சேவிப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கானானியர்கள் சாபத்தை அனுபவிப்பார்கள். எபிரெயர்களோ கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்தாரால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள். ஆபிராமின் சந்ததியார் யாரை சேவிக்கிறார்களோ, அவர்கள் ஆபிராமின் சந்ததியாரை உபத்திரவப்படுத்துவார்கள்.
""அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுதுஅவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்'' (யாத் 1:11).
ஆபிராமின் சந்ததியார் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள். நானூறு வருஷம் என்பது நீண்டகாலம். ஆனாலும் ஆபிராமின் சந்ததியாருடைய உபத்திரவத்திற்கும், ஒரு முடிவு காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நானூறு வருஷம் மாத்திரமே உபத்திரவப்படுவார்கள்.
ஆபிராமின் சந்ததியார் உபத்திரவப்பட்டாலும், அவர்களை உபத்திரவப்படுத்துகிறவர்கள்மீது, கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வரும். ""இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்'' (ஆதி 15:14) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் அனுமதிக்கும் காலம் வரையிலும், சத்துருக்கள், கர்த்தருடைய ஜனத்தை உபத்திரவப்படுத்துவார்கள். ஆனாலும் கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் அவருடைய ஜனத்தார்மீது தங்கியிருக்கும். ஏற்ற வேளை வரும்போது, கர்த்தர் தம்முடைய ஜனத்தை உபத்திரவங்களுக்கும், பாடுகளுக்கும், வேதனைகளுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
""துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்'' (சங் 37:12,13).
ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்திலே, நானூறு வருஷம் உபத்திரவப்பட்டாலும், பின்பு அவர்கள் மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் முன்னறிவிக்கிறார்.
ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்திலே உபத்திரவப்படுத்தப்பட்டாலும், அந்த தேசத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியேறும் போது, அவர்கள் செழித்திருப்பார்கள். அவர்கள் மிகுந்த பொருள்களுடனே, அந்நிய தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள். கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஒடுக்குகிறவர்களை நியாயந்தீர்ப்பார். ஒடுக்குகிறவர்களுக்கு அழிவு வரும். ஒடுக்கப்படுகிறவர்கள் மீட்கப்படுவார்கள்.
ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்தில் ஒடுக்கப்பட்டாலும், கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அவர்களுக்கு திரளான ஐசுவரியத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் ஆபிராமின் சந்ததியாருக்கு நல்ல தேசத்தை வாக்குப்பண்ணுவது மாத்திரமல்ல, அவர்களுக்கு திரளான ஐசுவரியத்தையும் வாக்குப்பண்ணுகிறார். அவர்கள் மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்திலே நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் அதன் பின்பு அவர்கள் நாலாம் தலைமுறையிலே கானான் தேசத்திற்கு திரும்ப வருவார்கள் (ஆதி 15:16). அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து விடுவிக்கப்படுவது மாத்திரமல்ல, அவர்கள் கானான் தேசத்திற்கும் திரும்ப வருவார்கள். கர்த்தர் இந்த வார்த்தைகளை ஆபிராமுக்கு சொல்லும்போது, அவர் இப்போது கானான் தேசத்திலிருக்கிறார். ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்திற்கு சிறைப்பட்டுப்போனாலும், கானான் தேசத்திற்கு திரும்பவும் வருவார்கள்.
கர்த்தர் ஆபிராமையும், அவருடைய ஆயுசுகாலத்தையும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்'' (ஆதி 15:15) என்று சொல்லுகிறார்.
தன்னுடைய சந்ததியாருக்கு நடக்கப்போகிற சம்பவங்களை தன் கண்களால் பார்ப்பதற்கு முன்பாகவே, ஆபிராம் மரித்துப்போவார். அவர் சமாதானத்தோடே தன்னுடைய பிதாக்களிடத்தில் சேருவார். ஆபிராம் நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவார். தன்னுடைய சந்ததியார் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரை சேவிப்பதையும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவதையும் ஆபிராம் பார்க்கமாட்டார். தன்னுடைய சந்ததியாருக்கு தீங்கு வருவதற்கு முன்பாகவே ஆபிராம் இந்தப் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்.
""நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை'' (ஏசா 57:1).
ஆபிராம் சமாதானத்தோடே தன் பிதாக்களிடத்தில் சேருவார். எல்லோருக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருப்பதுபோல, ஆபிராமுக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது. பரலோகத்திற்கு பாத்திரவான்களாயிருக்கிறவர்களுக்கும், பரலோகத்தின் சிநேகிதர்களுக்கும், நியமிக்கப்பட்ட காலத்தில் மரணம் வரும். மரணத்திற்கு யாரும் தப்பிக்க முடியாது.
நீதிமான்கள் தங்கள் சரீர மரணத்தைப் பார்த்து பயப்படமாட்டார்கள். அவர்கள் தாங்களாகவே முன்வந்து, தங்களுடைய ஜீவனை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் மரிப்பதற்கு எப்போதும் ஆயத்தமாயிருப்பார்கள். மரித்துப்போகவேண்டும் என்று நீதிமான்களை யாரும் கட்டாயம்பண்ண வேண்டிய அவசியமில்லை. யாருடைய நிர்ப்பந்தமுமில்லாமல், நீதிமான்கள் சமாதானத்தோடே தங்கள் பிதாக்களிடத்தில் சேருவார்கள்.
நம்முடைய முற்பிதாக்கள் கர்த்தருக்கு பயந்து ஜீவித்தவர்களாகயிருந்தால், நாம் மரித்த பின்பு சமாதானத்தோடே அவர்களிடத்தில் சேருவோம். அவர்கள் நமக்கு முன்னால் போயிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு பின்னால் போய்ச்சேருவோம்.
""பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபே-னுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்'' (எபி 12:23,24).
கர்த்தர் ஆபிராமுக்கு சமாதானத்தை கட்டளையிடுகிறார். ஆபிராம் தன்னுடைய ஜீவியகாலமெல்லாம் சமாதானத்தோடிருப்பார். ஆபிராம் எங்குபோனாலும் சத்தியமும் சமாதானமும் அவரை பின்தொடரும். அவர் தேவனோடு சமாதானமாயிருப்பார். தேவனோடு சமாதானமாயிருப்பதே நமக்கு நித்திய சமாதானம். அதுவே நிச்சயமான சமாதானம். கர்த்தர் நித்திய சமாதானத்தை ஆபிராமுக்கும், அவருடைய சந்ததியாருக்கும் வாக்குப்பண்ணுகிறார்.
""அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்-, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்'' (2இராஜா 20:19).
ஆபிராம் நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவார். அவர் சமாதானத்தோடே மரிப்பது மாத்திரமல்ல, அவர் மதிப்போடும் மரியாதையோடும் மரித்துப்போவார். முதிர்வயது ஒரு ஆசீர்வாதமான வயது. முதிர்வயதில் மரிக்கிறவர்கள், தங்களுடைய ஆயுசுகாலத்தை பூரணமாய் அனுபவித்து, கர்த்தருக்கு முழுமையாய் ஊழியம் செய்கிறார்கள். இந்தப் பூமியில் நம்முடைய ஆயுசுகாலம் பூரணமாயிருக்கும்போது, கர்த்தரை நம்பி நன்மை செய்வதற்கு நமக்கு அநேக வாய்ப்புக்கள் கிடைக்கும். அந்த வாய்ப்புக்களையெல்லாம் கர்த்தருடைய நாமமகிமைக்காகவும், அவருடைய பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் நாம் பயன்படுத்தவேண்டும்.
""உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப் படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக் கடவாய்........'' (ஆதி 15:13-16) என்பது தீர்க்கதரிசன வாக்கியம்.
ஆபிரகாமின் சந்ததியார் அந்நிய தேசத்தில் இன்னும் நானூறு வருஷங்கள் தங்கியிருப்பார்கள். இஸ்ரவேலை ஒடுக்கியதற்காக எகிப்து தண்டிக்கப்படும். இஸ்ரவேலர் மிகுந்த ஐசுவரியங்களைப் பெற்றுக் கொள்வார்கள். ஆபிரகாம் நல்ல முதிர் வயதிலே அடக்கம் பண்ணப்படுவார். ஆபிரகாமின் சந்ததியார் நான்காம் தலைமுறையில் எகிப்தை விட்டு வெளியேறி எமோரியரை ஜெயிப்பார்கள்.
இந்தத் தீர்க்கதரிசனம் முழுவதும் மோசே, யோசுவா ஆகியோரின் தலைமையின்கீழ் இஸ்ரவேல் தேசத்தாருடைய வனாந்தர யாத்திரையின்போதும், கானான் தேசத்தில் குடியேறியபோதும் நிறைவேறிற்று. (யாத் 7:1-14:31; எண் 21:21-25; யோசு 12).
ஆபிரகாமின் சந்ததியார் எகிப்து தேசத்தில் 215 வருஷங்களுக்குப் பரதேசிகளாய்த் தங்கியிருப்பார்கள். (ஆதி 12:1-20; ஆதி 13:1-18; ஆதி 15:13-14; ஆதி 20:1-18; ஆதி 21:22-34; ஆதி 23:4; ஆதி 26:3-35; ஆதி 28:10; ஆதி 29:1; ஆதி 31:13-55; ஆதி 35:6; ஆதி 37:1; ஆதி 46:1-7; ஆதி 47:27; ஆதி 50:22-26 ; யாத் 1-12; எபி 11:8-10).
ஈசாக்கு பெரியவனாகி, ஆபிரகாமின் சுதந்தரவாளியாக உறுதிபண்ணப்படுகிறான். இஸ்மவேல் வெளியே அனுப்பப்படுகிறான். இக்காலத்தில் ஈசாக்கின் வயது ஐந்து. ஆதி 15:13, அப் 7:6 ஆகிய வசனங்களில் நானூறு வருஷம் என்று கூறப்பட்டிருப்பது ஈசாக்கு சுதந்தரவாளியாக உறுதிபண்ணப்பட்ட நாளிலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
வேறுசில வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 வருஷங்கள் பரதேசிகளாய்த் தங்கியிருப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. (யாத் 12:40; கலா 3:14-17) ஈசாக்கின் ஐந்து வயதும், அவனுடைய பிறப்பிற்கு முன்பு 25 வருஷங்களும் இதில் கூட்டி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பொழுது ஆபிரகாம் கானானில் தங்குவதற்காகப் புறப்பட்டுப் போனார் (ஆதி 47:9).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 வருஷங்கள் பரதேசிகளாய் தங்கியிருப்பார்கள் என்றும் சில வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான காலஅட்டவணையின் விவரம் வருமாறு:
1. ஆபிரகாமின் 75 ஆவது வயதிலிருந்து ஈசாக்கின் பிறப்பு வரையிலும் - 25 வருஷங்கள்
2. ஈசாக்கின் பிறப்பிலிருந்து யாக்கோபின் பிறப்பு வரையிலும் (ஆதி 25:26) - 60 வருஷங்கள்
3. யாக்கோபின் பிறப்பிலிருந்து அவருடைய மரணம் வரையிலும் (ஆதி 47:28) - 147 வருஷங்கள்
4. யாக்கோபின் மரணத்திலிருந்து யோசேப்பின் பிறப்பு வரையிலும் (ஆதி 37:2; ஆதி 41:46; ஆதி 47:28; ஆதி 50:22) # 54 வருஷங்கள்
5. யோசேப்பின் மரணத்திலிருந்து எகிப்திலிருந்து வெளியேறிய நாள் வரையிலும் (யாத் 12:40; கலா 3:14-17) # 144 வருஷங்கள்
மொத்தம் # 430 வருஷங்கள்
""நானூறு வருஷம்'' என்பது ஆபிரகாமின் சுதந்தரவாளிகளாகவும், வித்தாகவும் ஈசாக்கு உறுதிபண்ணப்பட்ட நாளிலிருந்து நானூறு வருஷம். அது வரையிலும் ஆபிரகாமிற்கு அதிகாரப்பூர்வமாகிய வித்து இல்லை. (அப் 7:6).
""இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த வாக்கியம் யாத் 7-14 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் வாதைகளைக் குறிக்கும்.
கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை'' (ஆதி 15:16) என்று சொல்லுகிறார்.
""எமோரியருடைய அக்கிரமம்'' என்பது கானானியருடைய பாவங்களைக் குறிக்கும். எமோரியர் அழிக்கப்படவேண்டியவர்கள். கானனியருடைய பாவங்களின் விவரம் வருமாறு:
1. ஓரினச்சேர்க்கை (ஆதி 13:13; ஆதி 19:1-29; லேவி 18:22-30; லேவி 20:13)
2. தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியோடு சேருதல் (லேவி 18:6-30; லேவி 20:12-23)
3. சூதகஸ்திரீயோடே சயனித்தல் (லேவி 18:19-30; லேவி 20:18-23)
4. விபசாரம் (லேவி 18:20-30; லேவி 20:10-23)
5. விக்கிரகாராதனை (லேவி 18:21-30; லேவி 20:2-5; உபா 12)
6. தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குதல். (லேவி 18:21-30)
7. மிருகத்தோடே புணருதல் (லேவி 18:23-30; லேவி 20:15-23)
8. சூனியம் (லேவி 20:6,23; உபா 18:9-14)
9. வேசித்தனம் பண்ணுதல் (லேவி 20:1-23)
10. பெற்றோரை அவமதித்தல் (லேவி 20:9-23)
11. கொலைபண்ணுதல் (உபா 12:31; உபா 18:9-10)
12. திருடுதல் (லேவி 19:11-13 = லேவி 20:23)
13. பொய்கூறுதல் (லேவி 19:11-16 = லேவி 20:23).
கர்த்தர் ஆபிராமோடு பண்ணின உடன்படிக்கை
ஆதி 15:17#21
ஆதி 15:17. சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.
ஆதி 15:18. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்,
ஆதி 15:19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
ஆதி 15:20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
ஆதி 15:21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
கர்த்தர் ஆபிராமுக்கு தம்முடைய வாக்குத்தத்தத்தை சொன்னார். ஆபிராமோ அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்பதை ""எதினால் அறிவேன்'' என்று கர்த்தரிடத்தில் கேட்டார். அவர் கர்த்தரிடத்திலிருந்து ஒரு அடையாளத்தை எதிர்பார்த்தார். ஆபிராம் எதிர்பார்த்த அடையாளத்தை கர்த்தர் இங்கு கொடுக்கிறார்.
சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றிற்று (ஆதி 15:17). இதுவே கர்த்தர் ஆபிராமுக்கு கொடுக்கிற அடையாளம்.
புகைகிற சூளை எகிப்தின் அடிமைத்தனத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ஆபிராமின் சந்ததியார் எகிப்து தேசத்திலே பரதேசிகளாயிருந்து அத்தேசத்தாரை சேவிப்பார்கள்.
அக்கினி ஜுவாலையானது கர்த்தர் கொடுக்கும் ஆறுதலுக்கு அடையாளமாயிருக்கிறது. ஆபிராமின் சந்ததியார் அந்நிய தேசத்திலே உபத்திரவப்படுத்தப்பட்டாலும், கர்த்தர் அவர்களுக்கு ஆறுதலைக் கட்டளையிடுவார். அவர்களை உபத்திரவப்படுத்தினவர்களை கர்த்தர் நியாயந்தீர்ப்பார்.
""அக்கினிஜுவாலை'' என்பது தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளம். கிழக்கு தேசத்தில் உடன்படிக்கை ஏற்படுத்தும் போதும், திருமணச் சடங்குகளின் போதும் ஒரு விளக்கை ஏற்றி எரிய வைப்பது வழக்கம். உடன்படிக்கை மீறப்பட்டால் அல்லது உடைக்கப்பட்டால் அக்கினியானது குற்றம் செய்தவர்களை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாக அவர்கள் இந்தப் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார்கள் (மத் 25:1-13).
கர்த்தர் ஆபிராமுக்கு புகைகிற சூளையைக் காண்பிக்கும்போது, அதோடு சேர்ந்து அக்கினி ஜுவாலையையும் காண்பிக்கிறார். ஒரே வேளையில் இவ்விரண்டு தரிசனங்களும் ஆபிராமுக்கு கொடுக்கப்படுகிறது.
ஆபிராமின் சந்ததியார் புகைகிற சூளையிலே வேதனைகளை அனுபவித்தாலும், அக்கினி ஜுவாலையானது, அவர்களை புகைகிற சூளையிலிருந்து விடுதலைபண்ணும்.
ஆபிராமின் சந்ததியார் புகைகிற சூளையிலிருக்கும்போது, அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும், எப்படி போகவேண்டும் என்றும் பாதை தெரியாது. புகை பாதையை மங்கச் செய்யும். அக்கினி ஜுவாலையோ மங்கியிருப்பதை தெளிவுபடுத்தும். ஆபிராமின் சந்ததியார் புகைகிற சூளையில் உபத்திரவப்படும்போது, அந்த உபத்திரவத்திலிருந்து விடுதலை பெற்று வெளியேறுவதற்கு, அக்கினி ஜுவாலை அவர்களுக்கு பாதை காண்பிக்கும். அது அவர்களை விடுதலையின் பாதையில் வழிநடத்தும்.
ஆபிராமின் சந்ததியாருக்கு கர்த்தருடைய வார்த்தையே அக்கினி ஜுவாலையாயிருக்கிறது. அக்கினி ஜுவாலை புகைகிற சூளையில் வெளிச்சத்தைக் கொடுக்கிறது. அது அவருக்கு காரிருளிலே வெளிச்சமாயிருக்கிறது.
ஆபிராமின் சந்ததியாரை சத்துருக்கள் புகைகிற சூளையிலே அநேக வருஷங்களாக உபத்திரவப்படுத்துவார்கள். அக்கினி ஜுவாலையானது ஆபிராமின் சந்ததியாரை உபத்திரவப்படுத்துகிற சத்துருக்களின் அழிவுக்கு அடையாளம்.
அக்கினி ஜுவாலை துண்டங்களின் நடுவே கடந்துபோகிறது. கர்த்தர் ஆபிராமோடு பண்ணின உடன்படிக்கையை இது உறுதிபண்ணுகிறது. துண்டங்களின் நடுவே புகைகிற சூளையும், அக்கினி ஜுவாலையும் கடந்துபோகிறது என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அக்கினி ஜுவாலை அந்த துண்டங்களை பட்சித்துப்போடுகிறது. கர்த்தர் ஆபிராம் செலுத்தின பலியை அங்கீகரிப்பதற்கு இது அடையாளம்.
கர்த்தர் கிதியோன் செலுத்தின பலியை அங்கீகரித்ததுபோல, இப்போது ஆபிராம் செலுத்தின பலியையும் அங்கீகரிக்கிறார்.
""அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையி-ருந்த கோ-ன் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையி-ருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்'' (நியா 6:21).
கர்த்தர் மனுஷரோடு உடன்படிக்கை பண்ணும்போது பலிகள் செலுத்தப்பட வேண்டும். ""ப-யினாலே என்னோகூட உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்'' (சங் 50:5).
கிறிஸ்துவானவரே மகாபிரதான பலியாகயிருக்கிறார். பாவநிவாரணமில்லாமல் உடன்படிக்கை ஏற்படாது. கர்த்தர் நம்முடைய ஆவிக்குரிய பலிகளை அங்கீகரிக்கும்போது, அவருடைய கிருபைகள் நமக்கு இன்னும் அதிகமாய்க் கொடுக்கப்படும் என்பதற்கு அது அடையாளமாயிருக்கிறது.
கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையை ஆபிராமுக்கு மறுபடியுமாய் உறுதிபண்ணுகிறார். ""இந்த தேசத்தை உன் சந்ததிக்கு கொடுத்தேன்'' (ஆதி 15:21) என்று கர்த்தர் ஆபிராமுக்கு சொல்லுகிறார்.
கர்த்தருடைய வாக்குத்தத்தங்களெல்லாமே, அவருடைய ஈவுகளாக நமக்கு கொடுக்கப்படுகிறது. கர்த்தருடைய கிருபைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் எவ்வளவேனும் பாத்திரவான்களல்ல. கர்த்தருடைய கிருபை நமக்கு கொடுக்கப்படும் ஈவு. ஈவு இலவசமாகக் கொடுக்கப்படும். கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள நமக்கு எந்தத் தகுதியுமில்லை. நம்மால் கிரயம் செலுத்தி கர்த்தருடைய கிருபையை வாங்கமுடியாது.
கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நமக்கு ஏற்ற காலத்தில் நிறைவேறும். அவருடைய வாக்குத்தத்தங்கள் நமக்கு சொல்லப்படும்போதே, அது நிச்சயமாய் நிறைவேறும் என்னும் நம்பிக்கையும் நமக்குள் ஏற்படவேண்டும். கர்த்தர் ஒன்றை சொன்னால், அதை நிச்சயமாய் நிறைவேற்றுவார். கர்த்தருடைய வார்த்தைகளெல்லாமே, ஏற்கெனவே நிறைவேறிய சம்பவங்கள்போல இருக்கிறது.
""குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை'' (யோவா 3:36). கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்கள் பரலோகத்திலே பிரவேசிப்பார்கள். அவர்கள் பூமியிலிருக்கும்போதே, பரலோகத்தில் இருப்பதுபோல கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பார்கள்.
கர்த்தர் கானான் தேசத்தைப்பற்றி விரிவாகச் சொல்லுகிறார். கானான் தேசம் எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதுமான தேசம் . இந்த தேசத்தில் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் இருக்கிறார்கள் (ஆதி 15:18#21).
கானான் தேசம் மகாவிஸ்தாரமான தேசமாயிருக்கிறது. ஆபிராமின் சந்ததியார் கானான் தேசத்தை சுதந்தரிப்பது, கர்த்தருடைய ஜனம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதற்கு அடையாளமாயிருக்கிறது. கானான் தேசத்தைப்போலவே, பரலோக ராஜ்யமும் மகாவிஸ்தாரமான தேசமாயிருக்கும். அங்கே கர்த்தருடைய ஜனம் எல்லோருக்கும் வாசஸ்தலங்கள் உள்ளது. நம்முடைய பிதாவின் வீட்டிலே அநேக வாசஸ்தலங்கள் இருக்கிறது.
கர்த்தர் ஆபிராமிடம், ""இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன்'' என்று சொல்லுகிறார். கானான் தேசத்தை இஸ்ரவேல் ஜனங்கள் முழுவதுமாகச் சுதந்தரித்துக் கொள்ளவில்லை. தாவீது, சாலொமோன் ஆகியோருடைய ஆட்சியில்கூட அவர்கள் கானானை முழுவதுமாகச் சுதந்தரிக்கவில்லை. ஆயிரம் வருஷ அரசாட்சியில் இஸ்ரவேலர்கள் கானானை முழுவதுமாகச் சுதந்தரித்துக் கொள்வார்கள். (எசே 47:13-48:29).
